'Kalai Nilavu' RAVICHANDRAN
'கலை நிலவு' ரவிச்சந்திரன்
இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.
முதல் படத்திலேயே கதாநாயகன்
முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்
முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்
முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்
1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).
காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.