-
மனதுக்கு சிறிதும் பிடிக்காதது
பலவும் சுற்றிலும் நடக்குது
பருவத்தில் மொட்டு மலரவில்லை
செந்நீராய் மழை மாறவில்லை
பேற்றின் பெருமை புரியவில்லை
அடங்கி ஆளும் கலை காணவில்லை
கரையும் இளமை கவலையில்லை
கணக்குப் போடத் தெரியவில்லை
அரிய எளிய இன்ப நேரங்களில்லை
ஆக மக்கள்தொகை பெருகவில்லை
-
பெருகவில்லை
பாலும் தேனும் சர்க்கரையும்
ஆறாக சாலைகளில்...
பெருகவில்லை
இன்பங்கள் எல்லா இடங்களிலும்..
பெருகவில்லை
உற்பத்தி விவசாயம் முன்னேற்றம்..
ஆனாலும்
சுதந்திரம் பெற்ற
உணர்வு மட்டும் இருக்கிறது மிஞ்சி..
-
மிஞ்சி நின்றது எத்தனை
ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
-
அனுபவம் என்று
ஆரம்பித்து எழுதப் பார்க்கையில்
ஏதோ காரியமாய்
சமையலறையில் இருந்த அவள்
எதிர்பாராமல் வந்து முத்தமிட
ம்ம்
கிடைத்தது இன்னொன்று!
-
இன்னொன்று இன்னொன்று இன்னொன்று
ஈன்று ஈன்று ஈன்று
முயன்று முயன்று முயன்று
வென்று வென்று வென்று
வாகை சூடும் வனிதாமணி
ஆண் வாரிசு ஆசையெனும் பிணி
-
பிணிக்கு மருந்தெனவே பக்குவமாய் வாயில்
இனிக்கா தொருபொருளை இட்டவரைத் தான்நோக்கிக்
கண்சுருங்கிக் கத்தும் குழந்தைக் குரலதுவும்
பண்ணில் ஒருவகை தான்
-
ஒரு வகைதான் ஆணினம்
அவ்வினம் அறியாத இலக்கணம்
பெருங்கடலான பெண்ணினம்
வர்ணிக்கத்தான் மானினம்
கற்பனைக்கெட்டா வல்லினம்
அடக்க முடியாததோர் இனம்
ஆதிக்க வெறி கொண்ட மேலினம்
வெல்ல முடியாத அற்புத தனம்
-
தனத்தை இன்னும் காணாமல்
...தவியாய்த் தவிக்குது அவள்மனது
கணக்காய் வருவாள் நேரத்தில்
..காரியம் தன்னை முடித்திடுவாள்
சுணக்கம் ஏதும் கொள்ளாமல்
..செய்வாள் சொன்ன வேலைகளை
பணத்தை முன்பாய் வாங்காமல்
..பார்ப்பாள் வேலை அவள்போல்யார்..
அக்கா ஸாரி லேட்டாச்சு..
..அஞ்சு மணிபஸ் போயாச்சு
பக்கா வாகச் செய்வேன்நான்
...பார்ப்பீர் நீங்கள் இப்பொழுது
விக்கல் தீர்க்கும் தண்ணீர்போல்
...விரைந்தே வந்த தனத்தாலே
அக்கா மனமும் நேராச்சு..
..அஞ்சரை சீரியல் பார்த்தாச்சு..!
-
பார்த்தாச்சு பல நூறு வேசம்
பாவிக்குப் பசியெடுத்தால் பாசம்
திமிரெடுத்தால் பறக்கும் சாட்டை
மனம் போல் ஆடுவான் வேட்டை
உபகாரத்துக்குப் எடுத்த அவதாரம்
யந்திரமாய் இயங்கவே ஒரு தாரம்
சிந்திக்கத் தெரியாத, கூடாத ஒருத்தி
கல்லை புல்லை பக்தியில் இருத்தி...
செக்கு மாட்டுத் தடத்தில் உழலும் மனிதா
அக்கினிக்குஞ்சு காட்டை எரிப்பது புதிதா
-
புதிதாகப் பார்ப்பதுபோல் இருக்கும் தன்மை
…புவனத்தில் உன்னுடைய அழகின் வன்மை
கதியென்றே இருந்திடுவர் கவிஞர் எல்லாம்
..கனிவான புன்னகையில் பூக்கும் பூவில்
விதியெல்லாம் மாற்றாது உந்தன் தோற்றம்
..விரந்தேதன் தோல்வியதை ஒப்புக் கொள்ளும்
பதியானேன் அதுஎந்தன் அதிர்ஷ்ட மன்றோ…
…பாவைநீயும் சிரிக்காதே உண்மை சொன்னேன்..
அழகாகப் பேசுகிறீர் ஆனால் நீரும்
…அன்பாலே மறந்துவிட்டீர் ஒன்றை ,மட்டும்
சலசலக்கும் அருவியெனத் தழுவிச் சென்றீர்
…சந்தர்ப்பம் பலநேரம் என்னை வென்றீர்
கலகலப்பாய்ப் பேசினீரே கால ந் தோறும்
..கதிகலக்கும் துன்பமது வந்த போதும்..
வளமாக இருக்கின்ற் எந்தன் தோற்றம்
..வந்ததற்கே காரணம்தான் நீரே அன்றோ