"ஆயிரத்தில் ஒருவன்" (2)
4) 'ஆடாமல் ஆடுகிறேன்'
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டயடி சத்தம், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
"ஆடாமல் ஆடுகிறேன்... பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா...வா...வா....
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா...வா...வா.... வா....வா...வா......"
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, 'ஆண்டவனைத் தேடுகிறேன்' என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக த்பேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
"விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்"
'கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்' என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5) 'நாணமோ... இன்னும் நாணமோ..'
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன..?. காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா?. அதுதான் இந்தப்பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்துகொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
"தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது.. அது இது"
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்னைக்கவரும் வண்ணம் இருக்கும்.
6) 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
"கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை"
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் "என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?"
நாகேஷ்: "அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து 'ஈ'ன்னு சிரிச்சா. 'கொன்னுடுவேன்' அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்".
'ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
'ஆயிரத்தில் ஒருவன்' பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.