1963-வாக்கில் நார்த் அவென்யூ கார் ப்ரோக்கர் ஸ்வாமி மூலம் பரிச்சயமான அறிஞர் அண்ணாவும், C.L. காந்தன் மூலமாக அறிமுகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும். அண்ணா அவர்கள் தில்லியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இரவு பத்துமணிக்காட்சிகளுக்கு ரிவோலி, ஓடியனில் நான் டிக்கெட் வாங்கிவைத்துக் காத்திருப்பேன். எப்போதுமே லேட்டாக, படம் ஆரம்பித்தபின் , ‘பட்பட்டி’யில் அவசரமாக வந்திறங்கும் அண்ணாவுடன், அவர் மூக்குப்பொடி வாசனையை இரண்டுமணிநேரம் பொறுத்துக்கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த ஆங்கிலப்படங்களில் சில: To Sir, with Love, Solomon and Sheba, School for Scoundrels, Ten Commandments, Ben Hur etc. அப்போது, வருங்கால முதலமைச்சருடன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே வந்ததில்லை.
http://i49.tinypic.com/2ivk5rq.jpg
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெய்ப்பூர் போயிருக்கிறேன், சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். மற்ற நடிகர்களைப் போலல்லாமல், அவருக்காக நான் செலவழித்த பணத்தை கணக்கு வைத்து, சென்னைக்கு திரும்புமுன் இருமடங்காக தன் உதவியாளர் மூலம் என் பாக்கெட்டில் திணிப்பதைப் பார்த்தபிறகே, வண்டியை எடுக்கச்சொல்லும் எம்.ஜி.ஆர். தனியாக இருக்கும்போது என்னிடம் மலையாளத்திலேயே பேசும் எம்.ஜி.ஆர்.! ஷேக் ஹஸீனா, அண்ணா, எம்.ஜி.ஆர். இம்மூவரும் தங்கள் நாட்டுக்குத் தலைவர்களாக வருவார்கள் என் எண்ணிப்பார்க்கும் விவேகம் அல்லது தீர்க்க தரிசனம் என்னிடம் இருந்ததில்லை! அதேபோல இம்மூவரையும், அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! அப்படி அவர்களை பதவியிலிருக்கும்போது, நேரில் பார்க்கப் போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா? எனக்குத் தெரியவில்லை!
COURTESY
பாரதி மணி (Bharati Mani)