Originally Posted by
s.vasudevan
'இளைய தலைமுறை' - 2
மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")
கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். (பட்டிக்காடா பட்டணமா போல) டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் மற்ற சக மாணவர்களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.
நடிகர்திலகம், வாணிஷ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)
இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணியை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
"சிங்கார தேர்கூட திரைமூடி போகும்
அதுகூட உனக்கில்லையே
செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண்முல்லையே"
என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).
படத்தில் ஏராளமான நட்சத்திரக்கூட்டம்... நடிகர்திலகம், வாணிஷ்ரீ, சங்கீதா (பொம்மை), கே.விஜயன், வி.கே ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் என்று ஏகப்பட்ட முகங்கள்.
படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.
'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு என் நன்றி.