Originally Posted by
abkhlabhi
கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி). கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை. சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.