-
1 Attachment(s)
சிவாஜி ஜெயந்தி 10/01/2021 இன்று வள்ளலின் 93 வது ஜெனன தினம். தனக்கு பெயரோ புகழோ கிடைக்கவேண்டுமென்றோ , அல்லது மக்கள் தன்னை வாழ்த்தவேண்டுமென்றோ, புகழவேண்டுமென்றோ என எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் ,தன் நாட்டின் மீது மிகவும் பற்றுடனும், நாட்டு மக்களின் தேவை அறிந்தும் , சுயநலம் இல்லாமல் இக்கட்டான நேரங்களில் வாரி வாரி அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல் செவாலியே சிவாஜி கணேசனின் 93 வது ஜெனன தினத்தில் நினைவில் கொள்வோம்.
Attachment 5813
-
3 Attachment(s)
நடிகர் திலகத்தின் 93 வது பிறந்த தினத்தையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு
கௌரவப்படுத்தியது.
Attachment 5815
Attachment 5816
Attachment 5814
-
1 Attachment(s)
தொய்வுடன் தொங்கி கொண்டிருந்த தமிழ்த் திரையுலகமானது, சிவாஜியின் வருகைக்கு பிறகே கர்ஜித்து எழுந்து மிரட்டலுடன் ஓடத் தொடங்கியது... சிவாஜிக்கு முன்பு - சிவாஜிக்கு பின்பு - என திரையுலக கோட்டை கிழித்தும், பிரித்தும், வகுத்தும் காட்டியவர்..!!
நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - ஏன் உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன்., ஆனால், இதையெல்லாம் திரையுலகம் இன்று மறந்து போன கொடுமை நடந்துள்ளது.
பக்கத்தில் இருப்பதாலேயே சில அற்புதங்கள் நம் அறிவுக்கு எட்டாமல் போய்விடும்.. பக்கத்தில் இருப்பதாலேயே சில பரவசங்கள் நம் பார்வைக்கு வராமலேயே போய்விடும்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அப்படித்தான்..
இந்தியாவிற்குள்ளேயே போதுமான வெளிச்சமின்றி அஸ்தமனம் ஆகிவிட்டார். இதுவே ஹாலிவுட்டில் மட்டும் சிவாஜி பிறந்திருந்தால், இந்த உலகமே அவரை ஆராதித்திருக்கும்... தமிழன் என்று பிறந்துவிட்டதுதான் அவர் செய்த ஒரே தவறு.. திறமையாக நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, நிஜ வாழ்வில் நடிக்க தெரியாததுதான் அடுத்த தவறாக போய்விட்டது.
நடிப்பாற்றலின் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருதை வழங்காமல் இந்திய அரசு புறக்கணித்தது. ஆனால் பிரான்ஸ் நாடு செவாலியே விருது தந்தது.. அமெரிக்கா தன் மாநகரத்தின் கௌரவ மேயர் ஆக்கியது.. சிங்கப்பூர் நாடு தனது பாராளுமன்றத்தில் அவரது நடிப்பைப் புகழ்ந்து தீர்மானமே போட்டது... ஆசியா ஆப்ரிக்கா இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் இவரே என்று எகிப்து அவரை கொண்டாடியது. ஆனால் இந்தியா சிவாஜியை ஏறெடுத்தும் பார்க்காமலேயே போய்விட்டது.
சிவாஜி இறந்ததில் இருந்தே இந்த வருத்தம் இருந்தாலும், இன்றைய தினம் நம் தமிழகத்திலேயே ஒரு புறக்கணிப்பு நடந்துள்ளது.. அதுவும் திரையுலக புறக்கணிப்பு நடந்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.. நேற்று நடிகர் திலகத்தின் 94-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய தலைவர்கள் அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தினர்..
ஆனால் தமிழக திரையுலகைச் சேர்ந்தவர்கள், இன்றைய இளைய நடிகர்கள், இயக்குநர்கள் யாருமே செல்லவில்லை.. வைரமுத்து மட்டும் சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.. இது வருந்தத்தக்கது என்பதுடன், கண்டனத்துக்குரியதும் என்றும் கருத்துக்கள் வெடித்து கிளம்பி உள்ளன..
குறிப்பாக, நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், இதை ஒரு அறிக்கையாகவே பதிவு செய்துள்ளார்..
அந்த அறிக்கையில், "தமிழ் சினிமாவின் முகவரியாக, தமிழ்க் கலையின் அடையாளமாகத் திகழ்ந்து மறைந்த நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தக்கூட நேரமில்லாமல் தமிழக திரையுலகினர் இருக்கிறார்களா? கொரோனாவைக் காரணமாகக் கூறினாலும்கூட, தனிப்பட்ட முறையிலாவது தங்கள் வீட்டில் புகைப்படம் வைத்து மரியாதை செய்திருக்கலாம்.
கூகுள் தனது முகப்பில் நடிகர்திலகம் புகைப்படத்தை வைத்து கெளரவப்படுத்திய நிலையில், தங்கள் வீட்டு நாய் குட்டிபோட்டதைக்கூட ட்விட்டரில் பதிவிட்டு பெருமை கொள்ளும் பலகலைஞர்கள், நடிகர்திலகம் பிறந்தநாளுக்காக ஒரு வாழ்த்துப் பதிவைக்கூட போடாமல் அமைதிகாத்தது ஏனோ? மொத்தத்தில் நன்றி மறந்துவிட்டதா தமிழ்த்திரையுலகம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேசமயம், சிவாஜிக்கு, முதல்முறையான அவமானம் நேற்றுதான் நடந்தது என்று சொல்ல முடியாது.. ஏற்கனவே இதுபோல 2, 3 முறை இதே தமிழகத்தில் நடந்துள்ளது.. அன்று, அவரது சிலையை மெரினாவில் இருந்து அகற்றியதே பெருத்த அவமானம்தான்.. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு மட்டும் நேர்ந்த அவமானமில்லை.. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம்.
போக்குவரத்து இடையூறு என்று சிலையை அகற்ற அரசு சொன்ன காரணத்தில் துளியும் உண்மையில்லை என்பது அப்போது எல்லாருக்குமே தெரியும்.. காரணம், 2006-ல் இதே போல ஒரு காரணத்தை சொல்லி, சிலைதிறப்புக்குத் தடைபோட முயன்றபோது நீதிமன்றமே அந்த காரணத்தை நிராகரித்திருந்தது.. 2013-ல் அதிமுக ஆட்சி காலத்தில் இதே வழக்கு வந்தது.. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிலையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது நினைவிருக்கலாம்.
திரையுகிலேயே ஆகப்பெரும் சகாப்த நடிகர்களை புறக்கணிக்கும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய இளம் நடிகர்களுக்கு சிவாஜி என்ற டிக்*ஷனரியின் அர்த்தம் புரியாமல் இருக்கலாம்.. ஆனால், மூத்த கலைஞர்களுக்கும், சீனியர்களுக்கும் பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் இல்லாமல் இருப்பது வேதனைதான்..
எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், மனித உயிருக்கான மதிப்பு இவ்வளவுதான் என்பதை இன்றைய திரையுலகம் நிரூபித்துவிட்டது.. ஆனால் ஒன்று, சின்ன - பெரிய என்ற பாகுபாடின்றி, தலைசிறந்த கலைஞர்களுக்கு மரியாதை செய்யாத எந்த தேசமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை... தன் போக்கை திரையுலகம் இனியாவது மாற்றி கொள்ள வேண்டி உள்ளது..!
Attachment 5817
Thanks Sibbiah (f. book)
-
69 YEARS OF 'பராசக்தி'
தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் அறிமுகமான படம் பராசக்தி. இது 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் அடைந்த மாபெரும் வெற்றியால் சிவாஜி கணேசன் தமிழ் உலகம் போற்றும் மாபெரும் நடிகர் ஆனார். தான் ஏற்று நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்கள் நெஞ்சிலும், மக்கள் மனதிலும் வேரூன்றி அவர்கள் புகழ்ந்து போற்றும் 'நடிகர் திலகம்' ஆனார். அவர் திரையுலகில் அறிமுகமான 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் அறுபத்து ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் தொகுக்கப்பட்டதுதான் இந்தச் சிறிய காணொளி !
https//youtu.be/9tzD8DchjsQ
Thanks Nilaas Thiraikkoodam
-
நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய "பாரத்விருது" மக்கள் திலகத்துக்கு சென்றது எப்படி .?
வசந்தம் (பல்சுவைக் குழு)
sheik Ali · 31tp8n1idh ·
அன்றைய திரை நினைவுகள்-6
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய "பாரத்விருது" மக்கள் திலகத்துக்கு சென்றது எப்படி .?
பிலிம் நியூஸ் ஆனந்தன் சொன்ன உண்மைச் செய்தி. !!
தமிழ்மகன் கூறுகிறார்…..
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.
கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.
“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?
நன்றி Rajendran Rajendran (Sivaji Rasikar Mandram)
-
நடிகர் திலகத்தின் 100 வது காவியமான "நவராத்திரி " வெளியான நாள் இன்று,
கடந்த காலங்களில் எல்லாம் வருடத்திற்கு 200 படங்களுக்கும் மேலாக வெளியான போதிலும் கூட தீபாவளி திருநாள் முன்னிட்டு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் நிலை இருந்து வருகிறது,
கடந்த தீபாவளிக்கு பிகில், கைதி ஆகியன மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கிறது,
கொஞ்சம் பின்னோக்கி நவராத்திரி வெளியான 1964 ஆம் ஆண்டின் தீபாவளி திருநாள் சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என அலசும் போது அந்த ஆண்டின் தீபாவளிக்கு மட்டுமே நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கிறது,
அந்த ஆண்டில் வெளியான மொத்த தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 34 மட்டுமே,
அந்த 34 படங்களில் நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமே 7 படங்கள் அவை
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) ஆண்டவன் கட்டளை
4) கை கொடுத்த தெய்வம்
5) புதிய பறவை
6) முரடன் முத்து
7) நவராத்திரி
அதாவது மொத்த படங்களில் 5 ல் ஒரு பங்கு நடிகர் திலகம் திரைப்படங்கள் ஆகும்,
1964 ல் வெளியான 34 படங்களில் 100 நாள்களுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்டவை மொத்தம் 12 படங்கள் ஆகும்
நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் -5
1) கர்ணன்
2) பச்சை விளக்கு
3) கை கொடுத்த தெய்வம்
4) புதிய பறவை
5) நவராத்திரி
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் -3
1) பணக்கார குடும்பம்
2) வேட்டைக்காரன்
3) படகோட்டி
இதர படங்கள் காதலிக்க நேரமில்லை, கருப்புப் பணம், பூம்புகார், சர்வர் சுந்தரம் ஆகியன வெற்றிப் படங்கள்,
03-11-1964 அன்று தீபாவளி முன்னிட்டு நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் நவராத்திரி, முரடன் முத்து ஆகியன ரிலீஸாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீபாவளி எனக் கொண்டாடச் செய்தது, இது போல நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் இரண்டு படங்கள் என 18 முறை ரிலீஸாகி சாதனை நிகழ்த்தி இருக்கிறது அதிலும் தீபாவளி நாளில் மட்டுமே 8 முறை இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகி அசத்தி இருக்கிறது, அதில் 80% படங்கள் வெற்றிப் படங்கள் ஆகும்,
குறிப்பாக 1967 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரு மலர்கள், ஊட்டி வரை உறவு
1970 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி அனைத்தும் 100 நாட்களைக் கொண்டாடி சாதனை செய்து இருக்கிறது,
நவராத்திரி சென்னையின் நான்கு தியேட்டர்களிலும் முரடன் முத்து நான்கு தியேட்டர்களிலும் என 8 தியேட்டர்களில் வெளியான போது ஏற்கனவே புதிய பறவை பாரகன் தியேட்டரில் 100 நாட்களை நெருங்கி ஓடிய படி இருந்தது, இதுவும் இல்லாமல் நடிகர் திலகத்தின் வெவ்வேறான பழைய படங்கள் 3 தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்ததால் அன்றைய நாளில் சென்னையில் அமைந்திருந்த 25 க்கும் குறைவாக இருந்த முக்கிய திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே 12 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது, "இங்கு கவனிக்க வேண்டியது நடிகர் திலகத்தின் சொந்த திரையரங்கான சாந்தி தியேட்டரில் நடிகர் திலகம் படம் ஓடவில்லை"
சிலர் சாந்தி தியேட்டரில் மட்டுமே சிவாஜி படங்கள் ஓடியன என எதிர்மறை கருத்தை சமூக வலைத்தளத்தில் சொல்லி வருவதை பார்க்க முடிகிறது,
நவராத்திரி சென்னையில் திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது
தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு ஹீரோவின் 100 வது படம் சென்னையில் ரிலீஸான 4 திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கொண்டாடியது என்றால் அது நடிகர் திலகத்தின் நவராத்திரி மட்டுமே,
முரடன் முத்துவும் 50 நாட்களைக் கடந்து குறிப்பிட்ட வெற்றியை பெற்றது,
எம்ஜிஆர் இன் படகோட்டி சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ப்ளாஸா தியேட்டரில் மட்டுமே 100 நாளைக் கொண்டாடியது,
1964 ஆம் ஆண்டின் தீபாவளி சிவாஜி ரசிகர்களுக்கு இனிப்பான தீபாவளியாக அமைந்தது.
Thanks Sekar Parasuram
-
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 71
என் மகன் முதல் நாள் பார்த்தது, அதன் ஓட்டம், அது பெற்ற வெற்றி, மதுரை நியூ சினிமாவில் 100 நாள் ஓடியது அனைத்தும் பேசினோம். பயணத்தை தொடர்வோம்.
முதல் நாள் இரவு படம் பார்த்துவிட்டு மறுநாள் காலை விடிந்து பத்திரிக்கை பார்த்தால் அதிர்ச்சி மற்றும் சோகம் தாக்குகிறது. ஆம், முதல் நாள் மாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தேசிய நடிகர் சசிகுமாரும், அவரது மனைவியும் சிக்கி ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது.
மந்தவெளி ராமகிருஷ்ணா மட் ரோட்டில் ஒரு இடைதெருவாக அமைத்திருக்கக்கூடிய ராணி அண்ணாதுரை தெருவில்தான் அவர் வீடு இருந்தது. ஆகஸ்ட் 21ந் தேதி மாலை 5 மணி அளவில் சசிகுமார் வெளியே போவதற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார், அன்றைய தினம் மாலையில் ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டம். அதில் பேசுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த சசிகுமார் கூட்டத்திற்கு போவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுப்பட்டிருக்க, அவருக்கு காபி போடுவதற்கு ஸ்டவ் அடுப்பை மூட்டியிருக்கிறார் அவரது மனைவி திருமதி சசிகலா. பம்பிங் ஸ்டவ் அதாவது பிஸ்டன் போல் இருக்கக்கூடிய அமைப்பு. அதில் காற்று அடிப்பது போல பம்ப் செய்ய வேண்டும். அப்படி செய்தபோது பட்டென்று பற்றிக்கொண்ட நெருப்பு அருகில் நின்றிருந்த அவர் புடவையில் பற்றிக் கொண்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான் வகை துணியாலான புடவை என்பதால் தீ மளமளவென்று பரவியதாக சொல்கிறார்கள். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சசிகுமார் தீயை அணைக்க முற்பட அவர் அணிந்திருந்த உடைகளிலும் தீ பற்றி பரவியதாக சொல்கிறார்கள். தீயை அணைப்பதற்க்காக இருவரும் தரையில் உருள அப்படியும் தீ அணைய நேரம் எடுத்திருக்கிறது. சசிகுமாரின் சகலை அந்நேரம் வீட்டிற்கு வந்தவர் இருவரையும் காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 70 முதல் 80% தீக்காயம் என்பதால் டாக்டர்கள் அப்போதே அபாயக்கட்டம் என்று சொல்லி விட்டார்கள். இந்த செய்தியை படித்தவுடன் மனசுக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது.
அன்று மாலை தினசரிகளில் வந்த செய்தியை பார்க்கும்போது நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் என்பது புரிந்தது. 80% தீக்காயம் என்பதால் வாழை இலையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் டாக்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வந்திருந்தன. அனைத்து திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்கள் என்று செய்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உடனே பெருந்தலைவரை பார்க்க வேண்டும் என்று சசிகுமார் சொல்ல அதை கேள்விப்பட்டவுடன் பெருந்தலைவரும் பா.ராமச்சந்திரன் அவர்களும் உடனே வந்து விட்டனர். தலைவரை பார்த்தவுடன் அந்த நிலையிலும் எழ முற்பட்டிருக்கிறார் சசிகுமார். நீங்கள் வரும்போது எழுந்து நிற்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள் என்றாராம். பெருந்தலைவருக்கு துக்கம் தாள முடியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கே நின்றால் சசிகுமார் மேலும் உணர்ச்சிவசப்படுவார் என்று அறைக்கு வெளியே வந்து விட்டாராம். நடிகர் சங்க செயலாளர் மேஜர், ஸ்ரீகாந்த், ஏவிஎம் ராஜன் போன்றோர் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
நடிகர் திலகம் அந்த நேரம் சென்னையில் இல்லை. ஆகஸ்ட் 15 முதல் அரசாங்கம் கொண்டு வந்த புதிய வரி விதிப்பை எதிர்த்து திரையுலகம் போராட்டத்தில் இறங்கியதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன என்பதை பார்த்தோம். 18ந் ஞாயிறு வரை அரசாங்கத்துடன் பேசிச்சு வார்த்தை நடக்கவில்லை. 19ந் தேதி அன்று நடிகர் சங்க தலைவர் நடிகர் திலகம், பிலிம் சேம்பர் தலைவர் ,திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விவாதிக்க புதிய சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்தது. அதன்படி மறுநாள் ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்த செய்திகளெல்லாம் இந்த தொடரில் முன்பே பார்த்தோம். இதெல்லாம் முடிந்து படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டதால் சில நாட்கள் ஓய்வு எடுத்து வரலாம் என்று நினைத்து நடிகர் திலகம் கமலா அம்மாளுடன் சூரக்கோட்டை சென்று விட்டார். விபத்து நடந்த அன்றே அவருக்கு தகவல் சொல்லப்பட அவர் உடனே தனது செயலாளர் குருமூர்த்தியையும் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸையும் அனுப்பி வைக்க அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர சொல்லியிருந்தார். மறுநாள் காலை வி சி சண்முகம் அவர்களும் நேரில் சென்று பார்த்திருக்கிறார்.
தீவிபத்து சசிகுமார் உடலை மட்டுமல்ல அவரது மனதையும் பாதித்த விட்டது. இனிமேல் தன்னால் சினிமாவில் நடிக்க முடியுமா என்று மேஜரிடம் மற்றும் ஏவிஎம் ராஜனிடம் கேட்டிருக்கிறார். நிச்சயமாக முடியும் என்று அவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் திலகத்தின் டாக்டர் ஒருவரின் நண்பரான பிளாஸ்டிக் சர்ஜன் வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் சென்னை வந்து ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார். விபத்திற்கு முதல்நாள்தான் தமிழகத்தின் மற்ற ஊர்களை காண்பதற்காக கிளம்பி போயிருக்கிறார். அவரை எங்கேயிருந்தாலும் தேடி கண்டு பிடிக்க நடிகர் திலகம் சொல்ல அந்த டாக்டரும் முயற்சித்திருக்கிறார். இன்றைய நாட்கள் போல் தொடர்பு கொள்ளும் வசதிகள் அன்றைய நாட்களில் வெகு குறைவு என்பதால் அவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்ற செய்தியும் வந்தது. அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என்றபோது பலரும் முன் வந்து ரத்தம் கொடுத்திருக்கிறார்கள். மாலையில் கோவில் பிரசாதங்களை கொண்டு கொடுத்த ஏவிஎம் ராஜனிடம் அய்யப்ப கானங்கள் பாடும்படி சசிகுமார் கேட்டிருக்கிறார். வருடந்தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை போகும் வழக்கம் உடையவர் சசிகுமார். ராஜன் பாட சற்று ஆசுவாசம் அடைந்தாராம். சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்ல அனைவரும் சந்தோஷப்பட இந்த தகவல் நடிகர் திலகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை மோசமானது. அதை அவரே உணர்ந்தார் என தோன்றுகிறது. காரணம் சாமி பாடல்களை பாடிக் கொண்டிருந்த குடும்பத்தினரிடம் தேசிய கீதம் பாட சொல்லியிருக்கிறார். அவர்களும் பாட கூடவே தானும் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடி முடிக்கையில் ஜெய்ஹிந் என்ற முழக்கத்தோடு அந்த கடமை தவறாத தாய் நாட்டு பற்றுடைய அந்த ராணுவ வீரனின் உயிர் பிரிந்திருக்கிறது. கணவர் இறந்த சில மணி நேரங்களிலேயே அந்த தகவல் தெரியாமலேயே அவரது மனைவி திருமதி சசிகலாவின் உயிரும் பிரிந்தது. செய்தி கேட்டு திரையுலகமே மொத்தம் திரண்டு வந்தது. அஞ்சலி செலுத்தியது. இருவரின் உடல்களும் நடிகர் சங்க வளாகத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது.
காலையில் செய்தி கேள்விப்பட்டு 9 மணி சுமார் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்ட நடிகர் திலகம் 1 மணிக்கு சென்னை வந்து சேர்ந்து விட்டார். நடிகர் சங்க வளாகத்திற்கு சென்றவர் நிலை குலைந்து கண்ணீர் விட்டு அழுதார். தான் சசிகுமார் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததை சொல்லி சொல்லி அழுதிருக்கிறார். சசிகுமாரும் அவரை குருவாகவே எண்ணி வாழ்ந்தவர். அவர் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தவர். மறைவதற்கு ஒரு மாதம் முன்பு சசிகுமார் நடித்த ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்கிய நடிகர் திலகம் அவரை மனந்திறந்து பாராட்டியதை தனது வாழ்நாள் பரிசாக கருதினார் சசிகுமார். அந்த சம்பவத்தை சொல்லி சொல்லி மகிழ்ந்ததாக அவரது தனிப்பட்ட ஒப்பனையாளர் சொல்லியிருந்தார். நடிகர் சங்கத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது சசிகுமார் உடலை தோளில் தாங்கி வண்டியில் ஏற்றினார் நடிகர் திலகம். அனைத்து நடிகை நடிகையரும் (ஒருவரை தவிர) கலந்து கொண்டனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்தது.
சசிகுமார் தம்பதியினரின் முழு மருத்துவ செலவுகளையும் இறுதி சடங்கிற்கிற்கான அனைத்து செலவுகளையும் நடிகர் திலகமே ஏற்றுக் கொண்டார். நடிகர் சங்கம் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை சசிகுமாரின் மகள் நந்தினி மற்றும் மகன் விஜயசாரதி ஆகியோர் பெயரில் வங்கியில் வைப்பு தொகையாக (FD) போடப்பட்டு அவர்கள் மைனர் என்பதால் கார்டியன் பொறுப்பை நடிகர் திலகமும் மேஜரும் ஏற்றுக் கொண்டனர். சசிகுமாரின் மனைவியின் நகைகளும் அந்த வங்கியில் வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டிற்கு சசிகுமாரின் பெற்றோரும் அவர் மனைவியின் தாயாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒரு வாரத்திற்கு பின் அகில இந்திய சிகர மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரு இரங்கற்கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தியது. பலரும் தங்களது குடும்பம் பிள்ளைகள் அவர்கள் நலன் என்றே நினைக்கும் காலத்தில் நாட்டையும் மண்ணையும் தான் ஏற்றுக் கொண்ட தலைவனையும் இறுதி மூச்சில் கூட எண்ணி வாழ்ந்த ஒரு கடமை வீரனை தேச தொண்டனை இழந்து வாடுகிறோம் என்று நடிகர் திலகம் பேசினார். அவர் அதோடு நிறுத்தவில்லை. ஒரு மாதத்திற்குள்ளாகவே செப்டம்பர் மாதத்தில் செங்கல்பட்டு மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற கூட்டமைப்பின் ஒரு நாள் மாநாட்டை நடத்தி கூட்ட அரங்கிற்கு சசிகுமார் பெயரையும் வைத்தார். அதில் பேசும்போது சசிகுமாரை தனது கலையுலக வாரிசாகவே நினைத்திருந்ததாக நடிகர் திலகம் பேசினார்.
ஒரு நல்ல நடிகனை, அதை விட ஒரு நல்ல மனிதனை, ஒரு தேசியவாதியை பெருந்தலைவரின் தொண்டனை நடிகர் திலகத்தின் அன்பு தம்பியை இழந்தது காங்கிரஸ் இயக்கத்திற்கும் சிவாஜி ரசிகர் மன்றத்திற்கும் பேரிழப்பானது. ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் காமராஜ் தொண்டனுக்கும் ஏற்பட்ட வேதனையை அதே போன்ற ரசிகன் மானசீக தொண்டன் என்ற முறையில் தான் இங்கே இதை தொடரில் பகிர்ந்து கொண்டேன்.
நடிகர் திலகம் நாம் இப்போது பயணப்பட்டு வரும் காலகட்டத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். சென்னையிலும் சரி வெளியூர் காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழம் பெரும் காங்கிரஸ் தியாகி கோமதி சங்கர தீட்சிதர் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி உதவி வழங்கினார். அப்படியே நெல்லை மற்றும் தூத்துக்குடி நகரங்களில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இத்தனைக்கும் சென்னை சினிமா ரசிகர் சங்கம் 1973ல் சிறந்த படங்களுக்கான பரிசளிப்பு விழாவை நடத்தியது பம்பாயிலிருந்து நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ராஜ்கபூர் தலைமை தாங்கி பரிசளித்தார். கெளரவம் படத்திற்காக சிறந்த நடிகர் பரிசை பெற்றிருந்தார். இயக்க கூட்டங்களுக்காக சுற்றுப்பயணம் போய்விட்டதால் அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதே போல் அதே காலகட்டத்தில் நடிகர் ஜெய்சங்கர் 100 படங்களை நடித்து முடித்ததற்காக ஒரு விழா நடைபெற்றபோது அப்போதும் வெளியூரில் இருந்ததால் நடிகர் திலகம் தனது மகன் பிரபுவை விழாவில் கலந்து கொள்ள சொல்லி அனுப்பினார். நடிகர் திலகம் சார்பாக பிரபு ஜெய்சங்கருக்கு மரியாதை செய்தார். தென் தமிழகம் மட்டுமல்லாமல் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களிலும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இதை தவிர கோவை நகராட்சியின் சார்பாக ஒரு கலையரங்கம் (ஆடிட்டோரியம்) கட்டப்பட்டு அதையும் நடிகர் திலகம்தான் திறந்து வைத்தார்.
அன்றைய நாட்களில் நடிகர் திலகம் அவர்களுக்கும் அதிமுக பொது செயலாளர் அவர்களுக்கும் அறிக்கை மற்றும் மேடை பேச்சில் நிறைய விவாதங்கள் நடந்தது. திரையுலக போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர இறுதியாக கருணாநிதியை வீட்டில் சந்தித்து பேசியது பற்றி (தனியாக சந்திக்கவில்லை. அனைத்து சங்க பிரதிநிதிகளோடுதான் சந்தித்தார்) அதிமுக பொது செயலாளர் விமர்சனம் செய்தது இந்த விவாதங்களுக்கு ஆரம்ப புள்ளியானது. அதுவும் தவிர பெருந்தலைவரை சுயநலவாதி என்று அதிமுக பொது செயலாளர் குறிப்பிட அது நடிகர் திலகத்தையும் ரசிகர்களையும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களையும் மிகுந்த கோபமுற்ற செய்தது. அனைத்து கூட்டங்களிலும் தமிழகம் மீண்டும் தன் பெருமையை திரும்ப பெற இரண்டு கழகங்களையும் புறக்கணித்து மீண்டும் பெருந்தலைவர் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். நான் இந்த தொடரில் முன்பே குறிப்பிட்டது போல் பல தேர்தல் தோல்விகள் தந்த பாடத்தினால் திமுக அரசு மதுக்கடைகளை 1974 செப்டம்பர் 1 முதல் மூடியது. மதுவிலக்கை ரத்து செய்வதை ஆரம்பம் முதல் எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் இதை தார்மீக வெற்றியாக கொண்டாடியது.
செப்டம்பர் முடிந்து அக்டோபர் ஆரம்பிக்க நமது பாட்டுடை தலைவனின் பிறந்த நாள் அக்டோபர் 1 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் அன்றைய தெற்கு போக் ரோடை ஸ்தம்பிக்க வைத்தது. மாலைகளும் சால்வைகளும் துண்டுகளும் மலை போல் குவிந்து விட்டதாக பத்திரிக்கை செய்தி கூறியது. திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நடிகர் திலகத்திற்கு வாழ்த்து சொல்ல குவிந்து விட்டனர். நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல பெருந்தலைவர் அன்னை இல்லம் வந்தார். 1975ல் அவர் மறைவதற்கு முதல் நாள் நடந்த நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் மட்டுமே அவர் கலந்து கொண்டார் என்று சிலர் சொல்வது தவறான தகவல். நாம் இப்போது கடந்து வந்து கொண்டிருக்கும் 1974லிலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளன்று நேரில் அன்னை இல்லம் வந்தவர் கூடவே பா.ரா அவர்களையும் அழைத்து வந்தார். இன்னும் சொல்ல போனால் அன்னை இல்லத்தில் ஒரே சோபாவில் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் அமர்ந்திருக்கும் புகைப்படம் 1974ல் எடுக்கப்பட்டதுதான்.
நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவை எங்கே கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தபோது இந்த முறை சேலம் நகரில் நடத்துவது என முடிவானது. இது அகில இந்திய சிகர மன்றத்தின் நான்காவது மாநில மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. (1970ல் தொடங்கி இடையில் 1973ல் மட்டும் விட்டு போனது) முதலில் அக்டோபர் 12,13 என்று முடிவு செய்யப்பட்டு வழக்கம் போல் முதல் நாள் அரசியல் மாநாடு அடுத்த நாள் கலையுலக திருவிழா என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் பெருந்தலைவர் தொடங்கி ஸ்தாபன காங்கிரஸின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அதற்கு முந்தைய ஞாயிறு அக்டோபர் 6 அன்று பாண்டிச்சேரியில் பெருந்தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட அதற்கும் நடிகர் திலகம் தலைமையேற்றார். அது கிட்டத்தட்ட புதுவை மாநில மாநாடு போல நடந்தது. மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடிகர் திலகம் தொடங்கி வைத்து ஊர்வலத்தை ராஜா தியேட்டர் அருகே ஒரு மேடையி இருந்து பார்வையிட்டார். மிக பிரம்மாண்டமான அந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் பரபரப்பான செய்தியாயிற்று. அந்த கூட்டத்தில் பேசும்போது நடிகர் திலகம் சென்ற முறை செய்த தவறை செய்து விடாதீர்கள். அந்த கட்சியினரால் ஒரு மாதம் கூட ஆட்சி நடத்த முடியாமல் கவிழ்ந்து போனது. ஆகவே இணைந்து தேர்தல் களம் காணப்போகும் காங்கிரஸ் அணிகளை வெற்றி பெற செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார்.
சேலம் மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களினால் 12,13 தேதிக்களுக்கு பதிலாக 19,20 தேதிகளை மாற்றப்பட்டது. அப்போதும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அங்கே அமைக்கப்பட்ட பந்தலுக்கு சசிகுமார் பேர்தான் சூட்டப்பட்டது. இன்றைய நாட்களில் நாம் நடிகர் திலகத்தின் முடிவுற்ற வயதை குறிப்பிட்டு சொல்கிறோம். உதாரணமாக கடந்து போன அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 93வது பிறந்த நாள் என அறிவிக்கப்பட்டது (1928 - 2021). ஆனால் அன்றைய நாட்களில் அக்டோபர் 1 அன்று துவங்கும் பிறந்த நாளே எண்ணிக்கையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 1974 அக்டோபரில் நடிகர் திலகத்தின் 47வது பிறந்த தின விழா என்றே அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டது. அதன்படி 47 புறாக்கள் பறக்க விடப்பட்டு 47 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கோடி ஏற்றப்பட்டது. 47 தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதில் முதலாவதாக சிறப்பு செய்யப்பட்டது சசிகுமார் அவர்களின் தந்தையார். சேலத்திலும் மிக பெரிய ஊர்வலம். தாரை தப்பட்டை மேளம் முழங்க ஏராளமான வாகனங்களில் மற்றும் நடந்தும் அணி அணியாக ரசிகர்கள் வந்து கொண்டேயிருந்தனர் என பத்திரிக்கை செய்திகள் கூறின. சேலம் மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு நடிகர் திலகம் அங்கேயிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டார். அவருடன் பிரபல இந்தி நடிகர் சஞ்சீவ் குமார் அவர்களும் கூட நின்று ஊர்வலத்தை பார்வையிட்டார். கூட்டத்தையும் அவர்களின் ஆவேசத்தையும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட அன்பையும் கண்டு சஞ்சீவ் குமார் பிரமித்து விட்டார். மாநாட்டு மேடையில் பேசும்போது அவரே இதை குறிப்பிட்டார். நடிகர் திலகத்துடன் ,தமிழக ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பா.ரா அவர்களும் ஊர்வலத்தை பார்வையிட்டார்.
மாலையில் அரசியல் மாநாட்டு மேடை. முதலில் 12ந் தேதி விழா என்றபோது பெருந்தலைவர் ஒப்புக் கொண்டு தேதி கொடுத்திருந்தார். பின்னர் அது சட்டென்று மாற்றப்பட்டு 19ந் தேதி மாநாடு என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே வேறு ஒரு நிகழ்வுக்கு தேதி கொடுத்திருந்த காரணத்தினால் அவரால் வர இயலவில்லை. இதை போனில் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் மாநாட்டு அமைப்பாளர் அகில இந்திய சிகர மன்ற தலைவர் சின்ன அண்ணாமலைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி தனது வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறார். பெருந்தலைவர் நடிகர் திலகத்தை எந்தளவு நேசித்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவர் மட்டும்தான் வரவில்லையே தவிர, பா.ரா, குமரி அனந்தன், நெல்லை ஜெபமணி, மணி வர்மா, ரமணிபாய், குடந்தை ராமலிங்கம், தண்டாயுதபாணி, நேதாஜி, அப்பன்ராஜ் போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பா.ரா. பேசும்போது சிவாஜி மன்றமும் காங்கிரஸும் வேறு வேறு அல்ல. அதே போல் சிவாஜி வாழ்க என்றாலும் காமராஜ் வாழ்க என்றாலும் இரண்டும் ஒன்றே என்றார். மிக பெரிய போராட்டத்திற்கு இந்த தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். எதிர்க்கட்சியினர் காங்கிரஸை காமராஜர் சிவாஜி மன்றமாக ஆக்கி விட்டார் என்று பழி சொன்னதை ரமணிபாய் போன்றவர்கள் கடுமையாக விமரிசித்து நடிகர் திலகத்தின் தொண்டை அவரது ரசிகர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார். இறுதியில் நடிகர் திலகம் நிறைவுரை நிகழ்த்தும்போது தானும் தனது பிள்ளைகளும் தமிழகத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் தலைமையிலே ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்தார். பா.ராவிடம் நீங்கள் இடும் கட்டளையை எங்களது மன்றத்தினர் சிரமேற்கொண்டு செயல்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார். நடிகர் திலகத்தை ஏனைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் மதிக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தவரை உண்மையில்லை என்றே கூறுவேன்.
மறுநாள் காலை கலை நிகழ்ச்சிகள். குன்னக்குடி அவர்களின் வயலின் கச்சேரி. காலையிலே கட்டுக்கடங்காத கூட்டம். காவல் துறையினராலும் தொண்டர் படையினாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் இடமெல்லாம் நடிகர் திலகத்திற்கு திருவிழா போல் கூட்டம் கூடுவதை கண்டு ஆத்திரத்தில் பொருமிக் கொண்டிருந்தவர்கள் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே நுழைந்து கல் வீசி தாக்கி ஒரு குழப்பத்தை உருவாக்க அதில் நிறைய ரசிகர்களும் தொண்டர்களும் காயம் அடைந்து அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல். தொடர் சுற்றுப்பயணத்தினாலும்[/B]இடைவிடாத படப்பிடிப்பினாலும் முதல் நாள் நடந்த ஊரவலத்தை பல மணி நின்று பார்வையிட்டது, அதன் பிறகு சேலம் நகரில் பல இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தது என்று ஓய்வில்லாமல் சுழன்ற நடிகர் திலகத்திற்கு இரவில் காய்ச்சல். ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தவர் விஷயம் கேள்விப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி பேசினார். மருத்துவமனைக்கும் சென்று காயம் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மாலை வழக்கம் போல் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவாக நடந்தது. அதில் முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த், மனோகர், விகேஆர், சுருளிராஜன், விஜயகுமார், மனோரமா, விஜயகுமாரி, பாலமுருகன், பி மாதவன், ஏஸிடி, இயக்குனர் மகேந்திரன் முதலியோர் கலந்து கொண்டு நடிகர் திலகத்தை வாழ்த்தி பேசினார்கள்.
மிக சிறப்பாக அந்த நான்காவது மாநாடு நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிவதற்கு முன்பாகவே சின்ன அண்ணாமலையையும் மற்ற சிகர மன்ற நிர்வாகிகளையும் எங்கள் மதுரை ரசிகர்கள் முற்றுகை இட்டுவிட்டனர். சென்னை, திருச்சி, கோவை, சேலம் என்று எல்லா ஊர்களிலும் சிகர மன்றத்தின் சார்பாக விழா நடத்தி விட்டீர்கள். ஆனால் அனைத்து ஊர்களையும் விட நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கோட்டையான மதுரையில் இதுவரை ஒரு விழா கூட நடத்தவில்லை. உடனே அதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று வற்புறுத்த அடுத்த வருடம் பிறந்த நாள் விழா மதுரையில் நடத்தப்படும் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்று ரசிகர்கள் விடாப்பிடியாக வற்புறுத்த வி சி சண்முகம் அவர்களிடமும் பேசிவிட்டு சரி, நடிகர் திலகத்தின் 175வது படமாக அவன்தான் மனிதன் வெளியாக இருக்கிறது. அந்த 175வது பட விழா மதுரையில் நடத்துவோம் என உறுதி கூறினார்கள் 173வது படமாக அன்பை தேடி தீபாவளிக்கு வெளியாகிறது. ஆகவே 175 விரைவில் வந்து விடும் என்றும் சொல்கிறார்கள். மதுரை ரசிகர்களோ 175வது பட விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும். அடுத்த அக்டோபர் 1 பிறந்த நாள் விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும் என்று நிர்பந்திக்க இந்த இரண்டு அறிவிப்புகளும் மேடையில் வைத்து மேஜரால் அறிவிக்கப்பட்டது. (ஆனால் அதில் ஒன்றை கூட நடத்த காலம் அனுமதிக்கவில்லை என்பது மதுரை ரசிகர்களின் தீராத வருத்தங்களில் ஒன்றாக ஆகிப்போனது. அதனால்தான் சிறிது கால இடைவெளிக்கு பிறகு அகில இந்திய சிகர மன்றம் 200வது பட விழாவை நடத்த முடிவெடுத்தவுடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மதுரை முடிவு செய்யப்பட்டது). மாநாட்டு நிகழ்வுகள் வழக்கம் போல் படமாக்கப்பட்டன. அந்த விழா சுருள், தான் தயாரித்து பொங்கலுக்கு வெளி வர இருக்கும் மனிதனும் தெய்வமாகலாம் படத்துடன் காண்பிக்கப்படும் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். (ஆனால் அது காட்டப்பட்டதா என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் பார்த்ததில்லை).
தொடரின் இந்த பதிவில் படங்களை தாண்டிய பல்வேறு நிகழ்வுகளை பார்த்தோம். அதில் மேலும் ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1974 ஆகஸ்ட் மாதம் இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. 1969ல் எவ்வளவுக்கு எவ்வளவு பரபரப்பாக நடைபெற்றதோ அதற்கு நேர்மாறாக இந்த முறை அமைதியாக நடைபெற்று மத்திய அமைச்சராக இருந்த பக்ருதீன் அலி அஹமத் ஜனாதிபதியாக தேர்வானார். கர்நாடகத்தின் முன்னாள் முதல் முதல்வர் ஜாட்டி துணை ஜனாபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு காங்கிரஸ் இணைப்பு தமிழகத்தில் நடைபெறுமா என்ற விவாதம் தொடர்ந்தது. ஆனால் தமிழகம் வந்தபோதெல்லாம் இந்திரா அம்மையார் பெருந்தலைவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.
அந்த 1974 ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் முதல் வாரங்களில் அதுவரை பார்க்க வாய்ப்பில்லாதிருந்த மனோகரா படத்தை பார்த்தேன். மதுரை ஸ்ரீதேவியில் மீண்டும் திரையிடப்பட்ட படத்தை ஒரு ஞாயிறு மாலை காட்சியில் செம அலப்பறையோடு நானும் என் கஸினும் பார்த்தோம். படம் ஆரம்பம் தொட்டு முடிவு வரை ரசிகர்கள் ஆரவாரத்தோடு பார்த்தது இப்போதும் நினைவில். அதே ஸ்ரீதேவியில் தொடர்ந்து சுமதி என் சுந்தரி திரையிடப்பட அதற்கும் போயிருந்தோம். ஆனால் அதற்கு ஞாயிறு ஈவினிங் போக முடியவில்லை. வேறொரு நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். என் மகன் படத்தில் நடிகர் திலகத்தின் உடைகள் மற்றும் அதன் கலர் பற்றி சரியாக அமையவில்லை என்று சொல்லியிருந்தேன். என் மகன் படம் வெளியான இரண்டு மூன்று வாரங்களிலேயே சுமதி என் சுந்தரி படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்தது அந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடைகளை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கூட என் மகன் பட உடைகளை ரசிக்க முடியாதபடி செய்துவிட்டது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட புதிய படங்கள் என்று பார்த்தால் அருணபிரசாத் மூவிஸின் பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு ஆரம்பமானது (பாட்டும் பாரதமும்). அது தவிர ஏஎல்எஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கிக் கொண்டிருந்த சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சி நாதன் வேடத்தில் சிறப்பு தோற்றமாக நடிகர் திலகம் தோன்றுகிறார் என்ற செய்தியும் வந்தது.
அடுத்த படமாக தீபாவளிக்கு அன்பை தேடி வெளியாகிறது என்ற செய்தி வந்து விட்டது. சிறிது நாட்களில் முக்தா பிலிம்ஸ் சார்பில் விளம்பரமும் வந்துவிட்டது. முக்தா பிலிம்ஸின் முதல் கலர் படம். பாமிலி சப்ஜெக்ட் என்று செய்திகள். கலைஞானம் கதை. முக்தா பிலிம்சில் ஆஸ்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான தூயவன் வசனம் என்று தெரியும். படத்தில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் கௌதம புத்தர் வேடம் போட்டிருக்கிறார் என்ற செய்தியும் அந்த ஸ்டில்லும் வெளிவந்து ஆவலை தூண்டியிருந்தது. பாடல்கள் தாமதமாகவே வெளியானது. அந்த வருடம் நவம்பர் 13 புதனன்று தீபாவளி மதுரை சிந்தாமணியில் படம் ரிலீஸ். மன்ற டோக்கன்தான் வாங்க வேண்டும் என்று இருக்கையில் வேறொரு சிக்கல் வந்தது. என் கஸின் அந்நேரம் டிகிரி முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் என சொல்லியிருந்தேன் அல்லவா, அவர் சில நேர்முக தேர்வுகளுக்காக சென்னை சென்றிருந்தார். முதல் வாரமே வந்துவிடுவேன் என்று சொல்லி சென்றவர் வர முடியவில்லை. எப்போது வருகிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நான் தனியே போய் மன்ற டோக்கன் வாங்குவது என்பது நடக்காது. ஆஹா! இதன் காரணமாக படத்தின் ஓபனிங் ஷோவை மிஸ் பண்ண போகிறோமோ என்று கவலை.
ஸ்கூலில் சக வகுப்பு மாணவன் ஒருவனிடம் இதை பற்றி பேசிக் கொண்டிருக்க சிந்தாமணிதானே, நான் வாங்கி தருகிறேன் என்றான். எப்படிடா என்று கேட்டால் அவன் தந்தை அங்கம் வகிக்கும் யூனியன் கிளப் (தமுக்கம் மைதானத்திற்கும் காந்தி மியூசியத்திற்கும் நடுவில் அமைந்திருக்கும்) அங்கே சிந்தாமணி டாக்கீஸ் ஓனர் வருவார். அப்பாவின் நண்பர், எனக்கும் நல்லா தெரியும். நான் கேட்கிறேன் என்று சொன்னான். (அவன் அங்கே டேபிள் டென்னிஸ் விளையாட போவான்). அது நடக்குமா என்பதை விட எப்படியாவது டிக்கெட் கிடைத்து படம் பார்த்தால் போதும் என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். சரி வாங்கு என்று சொல்லி விட்டேன். அவன் அவரை கிளப்பில் பார்த்ததாகவும் சரி என்று சொல்லி விட்டதாகவும், ஒரு பேப்பரில் எழுதி தந்து விடுகிறேன்.அதை கொண்டு போய் தியேட்டரில் கொடுத்தால் டிக்கெட் கொடுத்து விடுவார்கள் என சொன்னதாகவும் சொன்னான். படம் புதன் ரிலீஸ். சனிக்கிழமை மேற்கண்ட தகவலை சொல்கிறான். திங்கள் ஸ்கூலில் முதலில் அவனை பார்த்தவுடன் கேட்டது இது பற்றித்தான். நேற்று அவர் வரவில்லை என்கிறான். இன்று எப்படியும் வாங்கி விடுவேன் என்று சொல்ல மறுநாள் செவ்வாய் காலையிலும் அதே பதில் வருகிறது. இல்லை. இன்னிக்கு எப்படியும் வாங்கி விடுகிறேன் என்று சொல்ல அவர் வரவில்லை என்றால் என்று நான் கேட்க, வரலைன்னா அவர் வீட்டிற்கே போன் பண்ணி பேசி விடுகிறேன் என்றான். வேறு வழியில்லை. மறுநாள் காலையில் தீபாவளி. நான் உன் வீட்டிற்கு வந்துறேன். அங்கிருந்து சேர்ந்து போயிரலாம் என்கிறான். முதல் நாள் தீபாவளியன்று 5 ஷோ. ஓபனிங் ஷோ காலையிலே 9 மணிக்கு. நான் ஒரு எட்டு மணிக்கு வந்துறேன் அப்படின்னு சொல்கிறான். எங்க ரெண்டு பேருக்குமே டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை. அதுக்குள்ளே டிக்கெட் இருக்கு நீ வரியா நீ வரியான்னு இன்னும் மூணு பேரை வேற சேர்த்துட்டோம். மொத்தம் அஞ்சு பேர். அஞ்சு பேரும் தீபாவளி காலையில் 8 மணிக்கு எங்க வீட்டிற்கு வந்து அங்கேயிருந்து சிந்தாமணி போவதாக பிளான் .
ஐந்து பேர்களும் வந்தார்களா? அதை விட முக்கியமா நண்பனால் சிந்தாமணி டாக்கீஸ் அதிபரை பார்த்து லெட்டர் வாங்க முடிந்ததா? ஓபனிங் ஷோ அனுபவம் எப்படி இருந்தது? அடுத்த வாரம் பேசுவோம்.
(தொடரும்)
அன்புடன்
Thanks Murali Srinivasan ( நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள். ( One and Only Sivaji)
-
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "
இந்தக் குறளுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் இருக்கும் நெருக்கம் என்னவாக இருக்கும்?
முதலில் குறளுக்கான தெளிவுரையைத் தெரிந்து கொள்வோம்,
1) திரு.மு.வரதராசனார் அவர்களது உரை:-
"எப்பொருள் எத்தன்மைதாய்த் தோன்றினாலும் ( அத்தோற்றத்தை மட்டும் கண்டு மங்காமல்)
அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு "
2) கலைஞர் கருணாநிதி உரை:-
" வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அது பற்றிய தெளிவான உண்மையை அறிவதே மெய்யுணர்வு "
3) திரு.சாலமன் பாப்பையா உரை:-
" எந்தப் பொருளானாலும் அது எப்படிக் காட்சி தந்தாலும் அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல் உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளை காண்பதே மெய்யுணர்தல் "
இப்போது சொல்லவந்த செய்திக்கு வருவோம்,
1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக அவரது தலைமையில் திமுக ஆட்சி நடந்த போது சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான சீரிய பணிகள் நடைப் பெறத் தொடங்கியது,
விழா சிறப்பாக நடைபெற பெருமளவு நிதியும் தேவைப்பட்டது,
நிதி வேண்டி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்,
அறிஞர் அண்ணா அவர்களது வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் எதிரணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் கூட உடனடியாக ரூபாய் ஐந்து லட்சத்தை அளித்ததோடு
( ஐந்து லட்சம் என்பது இன்று 50 கோடி ரூபாயாகும் இதில் மாற்றுக் கருத்து கொள்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் எனில் அந்தத் தொகை அன்றைய நடிகர் திலகத்தின் ஏறக்குறைய இரு படத்தின் சம்பளமாகும் இன்று முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோரின் ஒரு படத்திற்கான சம்பளம் 20-25 கோடியாகும்)
மாநாட்டின் முக்கிய பணிகளையும் ஏற்றுக் கொள்வதாக கேட்டுக் கொண்டார்,
வழக்கம் போல நடிகர் திலகம் சிவாஜிக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என எதிரணியினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வாதிட்டு புளம்பினர், ஆனால் நடிகர் திலகம் அளித்த பெருந்தொகை எதிரணியினரின் புளம்பலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது,
மாநாட்டில் பெருமைப் படுத்தும் விதமாக தமிழறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு தமிழுக்கான சிறப்பு செய்தனர்,
தமிழறிஞர்கள், தமிழக அமைச்சரவை என ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு தான் உலகப்புகழ்பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் திரு உருவச்சிலைகள் அமைக்கபடுவதென, அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவிற்கான முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடிகர் திலகம் திருவள்ளுவர் திரு உருவச்சிலையை தனது சொந்த செலவிலேயே அமைத்து கொடுக்க முடிவு செய்தார், அறிஞர் அண்ணா அவர்களது யோசனைப்படி திருவள்ளுவருக்கான சிலை உருவத்தை நடிகர் திலகமே மாடலாக நின்று திருவள்ளுவர் சிலை அமைய காரணமாகவும் அமைந்தார்
(நடிகர் திலகத்தின் சிலையை மெரினாவிலிருந்து அகற்றி விட்டார்கள் என நினைத்தாலுமே திருவள்ளுவராக அதே மெரினாவில் அதே கம்பீரத்துடனேயே இருக்கிறார்)
தத்ரூபமாகவும் கம்பீர தோற்றத்துடன் எழில் வடிவிலான திருவள்ளுவர் சிலை அமைந்ததைக் கண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்ந்தார், நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் தான் மேலேக் குறிப்பிட்ட திருக்குறள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு,
சிலை அமைந்திருக்கும் பீடத்தின் கல்வெட்டில் குறள் பொறிக்கப்பட்டுள்ளது,
நடிகர் திலகம் எதிரணியில் இருந்தாலுமே தமிழுக்கென்று வரும்போது அவர்தான் முன்னாடி நின்றார்
இதே ஆண்டில் தான் நடிகர் திலகம் நடிப்பில் வெற்றி வாகை சூடிய 125 வது திரைப்படமான "உயர்ந்த மனிதன்" வெற்றி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என நடிகர் திலகத்தை குறிப்பிட்டு வாழ்த்தினார்,
Thanks Sekar Parasuram
-
ஆலய மணி- 23/11/1962
By Gopal
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.
By Gopal
Thanks Gopal
-
மாற்றுக் கூடார நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதை சுட்டிக் காட்டி சிறந்த திரைப்படங்களைக் கூட சிறுமை படுத்தும் பதிவுகளைப் பார்க்கும் போது உண்மையில் அப்படி இருக்கிறதா? என அலசும் போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது நடிகர் திலகம் நூற்றுக்கும் மேற்பட்ட தனது திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை என்பது
அதன் பட்டியல் தான் பின் வருவது,
1) பணம் 2) பூங்கோதை 3) கண்கள் 4) மனோகரா 5) துளிவிஷம் 6)தூக்கு தூக்கி 7) காவேரி முதல் தேதி 9) நான் பெற்ற செல்வம் 10)நல்ல வீடு
11) நானே ராஜா 12) தெனாலிராமன் 13) ரங்கோன் ராதா 14) மக்களை பெற்ற மகராசி 15) வணங்காமுடி 16) தங்க மலை ரகசியம் 17) ராணி லலிதாங்கி 18) அம்பிகாபதி 19) உத்தம புத்திரன் ( மது அருந்துதல் மட்டும்) 20) சம்பூர்ண ராமாயணம்
21) சாரங்கதாரா 22) காத்தவராயன் 23) தங்கப்பதுமை 24) நான் சொல்லும் ரகசியம் 25) வீரபாண்டிய கட்டபொம்மன் 26) மரகதம் 27) பாகப்பிரிவினை. 28) இரும்புத்திரை 29) குறவஞ்சி 30) ராஜபக்தி
31) படிக்காத மேதை 32) பாவை விளக்கு 33) பெற்ற மனம் 34) பாவமன்னிப்பு 35) ஸ்ரீ வள்ளி 36) கப்பலோட்டிய தமிழன் 37) வளர்பிறை 38)வடிவுக்கு வளைகாப்பு 39) செந்தாமரை 40) சித்தூர் ராணி பத்மினி
41) கர்ணன் 42) பச்சை விளக்கு 43) ஆண்டவன் கட்டளை 44) முரடன் முத்து 45) பழனி. 46) அன்புக்கரங்கள் 47) திருவிளையாடல் 48) மகா கவி காளிதாஸ் 49) சரஸ்வதி சபதம் 50) கந்தன் கருணை
51) திருவருட்ச் செல்வர் 52) திருமால் பெருமை 53) ஹரிச்சந்திரா 54) தில்லானா மோகனாம்பாள் 55) காவல் தெய்வம் 56) குருதட்சனை 57) வியட்நாம் வீடு 58) எங்கிருந்தோ வந்தாள். 59) இரு துருவம் 60) குலமா குணமா
61) ப்ராப்தம் 62) சவாளே சமாளி. 63) மூன்று தெய்வங்கள் 64) பாபு 65) ராஜ ராஜ சோழன் 66) பொன்னூஞ்சல் 67) ராஜபார்ட் ரங்கதுரை 68) மனிதனும் தெய்வமாகலாம் 69) கிரஹப்பிரவேசம் 70) சத்யம்
71) சித்ரா பௌர்ணமி 72) அவன் ஒரு சரித்திரம் 73) நாம் பிறந்த மண் 74) புண்ணிய பூமி 75) தச்சோளி அம்பு 76) திரிசூலம் 77) சத்திய சுந்தரம் 78) கல்தூன். 79) ஊருக்கு ஒரு பிள்ளை 80) வா கண்ணா வா
81) துணை. 82) பரீட்சைக்கு நேரமாச்சு. 83) ஊரும் உறவும். 84) இமைகள் 85) மிருதங்க சக்கரவர்த்தி 86) தராசு 87) எழுதாத சட்டங்கள் 88) நாம் இருவர் 89) படிக்காத பண்ணையார் 90) முதல் மரியாதை
91) ராஜரிஷி 92) மருமகள் 93) ஆனந்தக் கண்ணீர் 94) லட்சுமி வந்தாச்சு 95) மண்ணுக்குள் வைரம். 96) குடும்பம் ஒரு கோயில். 97)முத்துக்கள் மூன்று 98) வீரபாண்டியன். 99) விஸ்வநாத நாய்க்கடு 100) அன்புள்ள அப்பா
101) கிருஷ்ணன் வந்தான். 102) என் தமிழ் என் மக்கள் 103) ஞானப்பறவை 104) சின்ன மருமகள். 105) முதல் குரல் 106) தேவர் மகன் 107) பாரம்பரியயம். 108) பசும்பொன் 109) ஒரு யாத்ரா மொழி. 110) ஒன்ஸ்மோர்.
111) என் ஆசை ராசாவே 112) மன்னவரு சின்னவரு 113) படையப்பா 114) பூப்பறிக்க வருகிறோம்
கௌரவ வேடங்களில்
115) மர்ம வீரன். 116) தாயைப் போல பிள்ளை 117) குழந்தைகள் கண்ட குடியரசு 118) தாயே உனக்காக. 119) உருவங்கள் மாறலாம். 120) பிள்ளலு தெச்சின சொல்லனி ராஜ்யம் - தெலுங்கு
121) ராமதாசு. 122) பக்த துக்காராம் 123) சாணக்யா சந்திர குப்தா 124) ஸ்கூல் மாஸ்டர் - கன்னடா 125) மங்கள ராஜ்யா 126) ஸ்கூல் மாஸ்டர் - இந்தி 127) ஸ்கூல் மாஸ்டர் - மலையாளம்
நடிகர் திலகம் நடிப்பில்
பிற மொழி படங்கள் உட்பட கௌரவ வேடங்களையும் சேர்த்து மொத்தம் 127 படங்களில் புகைப் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை,( இந்த பட்டியலில் 5% முன் பின் முரன் இருக்கலாம் இருப்பின் நண்பர்கள் சுட்டிக் காட்டவும்)
மேலும் இந்த 127 படங்களில் ஏறக்குறைய 80 படங்கள் வரை 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றியைக் கொண்டாடி இருக்கிறது,
இந்திய திரை உலகில் வேறு எந்த நடிகரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்காமல் 80 நூறு நாள் வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை என்பது சாதனையின் உச்சம் என்றே சொல்லலாம்,
நன்றி :- சேகர் பரசுராம்,
(இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பதிவிட்டது, மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்)
Thanks Sekar Parasuram