*
அப்பர் என அழைக்கப் பெற்ற திரு நாவுக்கரசரைப் பற்றி நிறையச் சொல்லலாம்..அவர் வரிகளில் முதலில் சொல்வோம்..

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசி வாயமே..

*
அப்பர் எப்படிப் பட்டவர்

ஒப்பிலா மனத்தவர் உளத்துள் ளீசனை
வெப்பமே விட்டுதான் குளிர அமர்த்தியே
செப்பினார் பதிகமும் நாமும் பயனுற
அப்பரும் தந்தது அன்றே அருள்களே..
*
அப்பரும் ஞான சம்பந்தரும் திருமறைக்காட்டில் சென்று – அந்த ஈசன் கோவில் கொண்ட தலத்தின் கதவுகளை தாளிட அப்பர் கதறிப் பலவண்ணம் பாட பின் தான் அந்தக் கோவில் கதவு திறந்தது..

பின் ஞானசம்பந்தப் பிள்ளை சின்னதாய் முறுவலித்து ஒரே ஒரு பாடல் பாட படக்கென கதவும் மூடியது..

ஆனபடிப் பாடல்கள் பாடி னாலும்
. ஐயாவுன் நெஞ்சகத்தில் ஈரம் இல்லை
கானம்பல இயற்றியே கதறினாலும்
..கண்ணோரம் வழிந்தநீரும் காயும் வண்ணம்
வானத்திலே பார்த்திருந்தே சிரித்த மாயம்
…வண்ணமென நானறியேன் பித்தா கொஞ்சம்
பானகமாய் ஒருவார்த்தை சொல்லி டப்பா
…பாவிநானும் செய்தபிழை என்ன வென்றே..

என்றே அப்பர் தன்னுள் உருகினார்.. கண்மூடிக் கதறினார்.. இறையோ சிரித்தான்.. என்னுடன் வாய்மூர் என்னும் இடத்திற்கு வா.. எனக் கூட்டிச் சென்று அருள் பாலித்தான்..பின்னர் ஞானசம்பந்தப் பிள்ளையும் அங்கு சென்று அப்பருடன் இறைவனருள் பெற்றது ஒருகதை..

ஆனால் பத்துப் பாடல்கள் பாடிய பின் இறைவன் தாழ் திறந்த காரணமென்ன..அப்பரின் குரலினிமை கேட்க விரும்பினான் என்பர்..இதுவே ஒரு திரைப்படத்திலும் வந்திருக்கும். வெகு அழகாக..

அதன் பின் தான் பாண்டி நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது..