வினோதினி..

**********************
(முன்பு மரத்தடி.காமில் எழுதியது..2004 இன்று அகப்பட்டது)
********

*********************
கமலா ராமச்சந்திரன்:
*********************

பிறந்த போது கண்கள் மட்டும்
உருட்டி உருட்டி விழித்துப் பார்க்க
உடலோ பூஞ்சை ஒருகை அகலம்
எடுத்துக் காட்டிய நர்ஸோ சொன்னாள்
கவலைப் படாதே கூடிய சீக்கிரம்
நல்ல உணவில் உடம்பு தேறும்

***

பார்த்துக் கொள்ள ஊரில் இருந்து
வந்த அம்மா அவளைப் பார்த்து
என்னடீ இப்படி தவளைக் குட்டியை
பெத்துப் போட்டு இருக்கே' சொல்லி
எடுத்துக் கொண்டே கொஞ்சினாள் நன்றாய்

***

வேலை பாதி நிறுத்தியே வந்த
ராமுவின் முகத்தில் திமிறும் சிரிப்பு
என்னோட ஏஞ்சல் எவ்ளோ அழகு
தாங்க்ஸ்டீ கமலா' கன்னந் தட்ட
வெளிறிய முகத்தில் வெளிறிச் சிரித்து
'என்ன கொஞ்சம் கருப்புதான் இல்ல'
'வாயை மூடு நீமட்டும் அழகோ..
குழந்தை எப்படி முழிக்குது பாரு'
சீறிய வாறே அடக்கினர் என்னை..
என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ
கண்கள் மூடி சிரித்தது அதுவும்

***

திருமண மாகிப் பத்து வருடம்
தவமாய்க் கிடந்து கோவில் டாக்டர்
சாமியார் ஜோஸ்யம் விரதம் எதையும்
விட்டு வைக்காமல் இருந்ததில் வந்த
அத்திப் பூவிற்கு அழகுக் குட்டிக்கு
என்ன பேரை வைக்கலாம் என்று
பலப்பல யோசனை செய்த பின்னால்
அவரும் சொன்னார் வினோதினி என்று
எனக்கும் பெயரது பிடித்து விட்டது..

***

குட்டி ராட்சசி அப்பா செல்லம்
கொஞ்சம் கூட மதிக்கலை என்னை
வளர வளர பிடிவாதம் கோபம்
மிஞ்சினால் அழுகை கண்மட்டும் சிரிக்கும்
வாயும் நீளம் நாக்கும் நீளம்
காரம் வேண்டும் உப்பும் வேண்டும்
இனிப்பா வேண்டாம் என்ன அம்மாநீ
எனக்குப் பிடிச்சதைப் பண்ணித் தாயேன்..

***

இன்றும் கூட எங்களுக் குள்ளே
குடுமிப் பிடியாய் அடிதடி சண்டை
அழகாய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து
ஒருதுளி மோரை விட்டுப் பின்னர்
நல்ல மாவடு இரண்டை வைத்தால்
சாதமா வேண்டாம் போர்ம்மா நீதான்

***

இருப்பது என்னவோ கால்ஜாண் வயிறு
இதிலே பாதியும் வைத்து விடுவாய்
சும்மா சும்மா தோசை வருமா
இன்னிக்கு மட்டும் சாப்பிடு கண்ணே
கொஞ்சி குழைந்து பாக்ஸில் வைத்து
புத்தகம் எல்லாம் பையில் வைத்து
டாட்டா பைபை செல்லக் குட்டி
என்றே சொல்ல குட்டியும் திரும்பி
அதிசய மாக கன்னத்தில் ஒன்று
கொடுத்து விட்டு ஓடி விட்டாள்..
மிச்சம் மட்டும் கொண்டு வந்தால்
மாலை அவளுக்கு அடிதான் தருவேன்..

***************
ராமச் சந்திரன்
***************

பக்கத்தில் உள்ள மில்லில் எனக்கு
இயந்திரம் இயக்கும் அறுவை வேலை
ஏதோ வாழ்க்கை ஓடுது தன்னால்
என்று இருந்த வாழ்வில் அழகாய்
வசந்தம் போலே வானவில் போலே
பளிச்சென மின்னும் நட்சத் திரமாய்
வினோதினி பிறந்தாள் வண்ணக் கலவையாய்

***

சின்னக் குட்டி செல்லக் குட்டி
என்னை மாற்றிய வெல்லக் கட்டி
ஒருகணம் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம்
கொடுத்துக் கொஞ்சுவாள் பின்னர் நன்றாய்க்
கிள்ளியும் விட்டு சாரிப்பா என்பாள்..
போடி போடி கறுப்பி என்று
சமயத்தில் இவளும் சீண்டி விட்டால்
நீதான் கறுப்பு பாட்டி கறுப்பு
அப்பா நானா அட்டைக் கறுப்பு
என்றே கேட்டால் இல்லை கண்ணே
நீகொஞ்சம் சிவப்பில் சற்றே கம்மி
போப்பா என்றே கோபம் கொண்டு
பெரிய மனுஷியாய் முகத்தைத் தூக்கிப்
பேச மாட்டாள் பின்னர் அவளைத்
தூக்கிக் கொஞ்சி பலப்பல விதமாய்
சமாதான வார்த்தை சொல்ல வேண்டும்..

***

அன்றொரு நாளில் எனக்கோ தலைவலி
வேலை சீக்கிரம் முடித்து வந்தால்
இவளைக் காணோம் வினுமட்டும் வீட்டில்
அப்பா அப்பா என்னப்பா ஆச்சு
முகமே னப்பா வாடி இருக்கு
அம்மா எங்கே செல்லக் குட்டி
பக்கத்து வீட்டு மாமி கூட
எங்கோ போனாள் அப்பா உனக்கு
தலைவலி யாப்பா இந்தா தைலம்
தலையைக் கொஞ்சம் பிடிச்சு விடட்டுமா
படபட வார்த்தைகள் துள்ளி வந்திட
முகமோ உம்மென மாறி நின்றிட
எனது தலைவலி போயே போச்சு..

***

நேற்றுக் கூட ஆசைப் பட்டு
பென்சில் பாக்ஸ்தான் வேண்டும் என்றாள்
அழகாய் யானை வரைந்த பெட்டி
வாங்கிக் கொடுத்து அவளிடம் மெல்ல
பத்திர மாக வச்சிரு செல்லம்
எப்படி யும்இதை தொலைக்கக் கூடாது
என்றே சும்மா சொல்லி வைத்தேன்
குட்டியும் தீவிர முகத்துடன் என்னிடம்
சரியெனச் சொல்லி முத்தமும் கொடுத்தாள்..


(..தொடரும்..)