தாஸேட்டனின் தங்கமான பாடல்
***************************
'தொட்டதெல்லாம் பொன்னாகும்' படத்தின் மறக்கவொண்ணா பாடல்.
'ஆடும் வரைக்கும் ஐந்தடி உயரம்
அந்திம நாளில் ஒருபிடி சாம்பல்
என்னடா உன் சமஸ்தானம்?
இன்பம் ஒன்றே வருமானம்
இன்பம் ஒன்றே வருமானம்'
விஜயபாஸ்கரின் வித்தியாசமான இசையில்.
ஷேக் முகமதுவின் 'கணீரெ'ன்ற அழுத்தமான குரலில் தொகையறா ஆரம்பம். ஆஹா... என்ன குரல்...என்ன குரல்..
'பொழுது விடிந்தால் ஏன் விடியுதென்பார் ஒரு கோடி
பொழுது போனால் ஏன் போகுதென்பார் ஒரு கோடி
பலகோடி மனிதர்களில் பலகோடி கவலை உண்டு
அத்தனையும் மறந்திருக்க அவன் போட்ட பிச்சை இது
மனது மயங்கும் வரை கஞ்சா அடிப்போம்
அதிலும் மயங்கலன்னா மதுவைக் குடிப்போம்'
(அப்படியே 'சிரித்து வாழ வேண்டும்' படத்தில் இவர் T.M.S உடன் இணைந்து பாடிய 'காலக் கணக்கனவன்'....'மேரா நாம் அப்துல் ரஹ்மான்' பாடல் நினைவுக்கு வரும்)
பல்லவி ஆரம்பிக்குமுன் அராபியன் மியூசிக் அசத்தல்.
காட்டுவாசிகளின் இருப்பிடத்தில் நாயகன், நாயகி ஜெய், ஜெயசித்ரா மாட்டிக் கொள்ள, அவர்களுடன் வி.கே.ஆர், மனோரமா, தேங்காய், ஸ்ரீப்ரியாவும் சேர்ந்திருக்க, அப்போது காட்டுவாசிகள் தந்த போதை பானங்களை அருந்திவிட்டு, செய்வதறியாது திகைக்கும் சூழ்நிலைப் பாடல்.
'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற இயக்கத்தின் தத்துவம் போல பாடல். இன்ப வாழ்க்கையை அனுபவிக்க போதையை நாடு என்ற அர்த்தத்தில் ஒலிக்கும்... ஆனந்த, அதே சமயம் அவர்களுக்கேற்ற தத்துவப் பாடல். 'இன்பம் ஒன்றே வருமானம்...அதுவே பிரதானம்' என்ற கோஷமே நோக்கம்.
'வாழ்க்கையை வாழ்ந்து பார்' என்ற தத்துவத்தை 'கஞ்சாவின் மேல் சத்தியம்' அடித்து கூறும் பாடல்.
நம்மை திடுக்கிட வைக்கும் வரிகளும் உண்டு.
'ஜனகன் மகளை ராமன் மணக்க வில்லை ஒடித்தானே
அனுமார் அந்த வில்லை ஒடித்தால் அவளுக்கு அவன்தானே
ராமனுடன் ஜானகிதன்னை சேர்த்தது விதிதானே
அது நமக்கும் இருந்தால் கிடைப்பதெல்லாம் ஜானகி போல்தானே'
'என்னடா உன் சமஸ்தானம்' வார்த்தைகளைப் பாட ஜேசுதாஸை விட்டால் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு அற்புதமாகப் பாடி இருப்பார். அவர் குரலில் 'இன்பம்' ஒன்றே நமக்கு வருமானம்.
விஜயபாஸ்கர் மிக அற்புதமாக, தனக்கே உரிய தனித்துவத்தோடு இப்பாடலுக்கு மெட்டு போட்டிருப்பார். இசையோ பாடலின் தன்மை அறிந்து அற்புதமாக அளிக்கப்பட்டிருக்கும்.
கண்ணதாசனைத் தவிர வேறு யார் இத்தனை தைரியமாக வரிகளை வடிக்க முடியும்?