Page 174 of 210 FirstFirst ... 74124164172173174175176184 ... LastLast
Results 1,731 to 1,740 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1731
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
    மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #ஆசியோடு_நண்பர்கள்
    #அனைவருக்கும்_இனிய_சனிக்கிழமை
    #காலை_வணக்கம்_மற்றும்_காணும் #பொங்கல்_திருநாள்_வாழ்த்துக்கள்...

    கவிஞர் கண்ணதாசன் வரிகளில் நம் புரட்சி தலைவர் கூறும் கருத்துக்களை பகிர்ந்து வரும் இந்த தொடர் பதிவில் இன்றைய பதிவு பற்றி காண்போம் சற்று நீண்ட பதிவு ...

    1968 ஆம் ஆண்டில், புரட்சி தலைவர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாயின. இவற்றுள் கவியரசர் எழுதிய பாடல்கள் ‘ரகசிய போலீஸ் 115, புதிய பூமி ஆகிய இரண்டு படங்களில் இடம் பெற்றன.

    ரகசிய போலீஸ் 115 திரைப்படம், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில், எம்.எஸ். விசுவநாதன் இசையமைப்பில், கண்ணதாசனின் இனிமையான பாடல்களோடு, 11.1.1968 ஆன்று வெளியானது.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.என். நம்பியார், நாகேஷ் ஆகியோர் நடித்த இப்படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.

    இப்படத்தில் கவிஞர் எழுதிய ஆறு பாடல்களும் தேனாற்று வெள்ளத்தைப் பெருகச் செய்த பாடல்களே!

    “கண்ணே! கனியே! முத்தே! மணியே!
    அருகே வா!..”

    என்று தொடங்கி, பி.சுசீலா, டி.எம்.எஸ். குரலில் மாறி மாறி ஒலிக்கும் கவிஞரின் பாடலில்;

    “கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா!
    கனிதரும் வாழையின் கால்கள் பின்ன வா!
    செம்மா துளையோ பனியோ மழையோ உன்
    சிரித்த முகமென்ன?
    சிறு தென்னம்பாளை மின்னல் காற்று வடித்த
    சுகமென்ன?
    ஒருகோடி முல்லைப்பூ விளையாடும் கலை
    என்ன?”

    என்றே தொடரும் வரிகளில் வந்து நிற்கும் வளமான சொற்கள் கூடி எழுப்பும் சுவையை என்னவென்று நாம் புகழ்வது….?

    இனி…..!

    “உன்னை எண்ணி
    என்னை மறந்தேன்!….”

    என்றே பி. சுசீலாவின் குரலில் எழுந்து வந்த பாடலும் சுவையானதே!

    “பால் தமிழ்ப்பால் எனும்
    நினைப்பால் இதழ் துடிப்பால்
    அதன் தித்திப்பால்
    சுவை அறிந்தேன்!”

    என்று, டி.எம்.எஸ். பி. சுசீலாவின் குரல்களில் வலம் வரும் பாடல், நம்பால் வந்து, நம் இதயத்தின்பால் இடம் பெறவில்லையா?

    இப்படி, மக்கள் திலகத்தின் மனமறிந்து பாடல் வரிகளை வாரி வாரி, வழங்கி, இன்றும் அப்பாடல்களை நம் மனதின்பால் நிற்க வைத்த, தமிழ்ப்பாற்கடலன்றோ கண்ணதாசன்.

    இதே படத்தில் புரட்சி தலைவரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திட்ட பாடல் காட்சிக்காகக் கவிஞர். எழுதி, டி.எம்.எஸ். ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடிய இணையற்ற பாடலொன்றைப் பாருங்களேன்!

    “கண்ணில் தெரிகின்ற வானம்
    கைகளில் வாராதோ?
    துள்ளித் திரிகின்ற மேகம்
    தொட்டுத் தழுவாதோ?
    கட்டியணைக்கின்ற மேனி
    பட்டொளி கொள்ளாதோ?

    பொன்னழகுப் பெண்முகத்தில்
    கண் விழுந்தால் என்னாகும்?
    பொன்னாகும்! பூவாகும்! தள்ளாடும்!
    செங்கனி மங்கையின் மீது
    செவ்வரி வண்டாடும்!….”

    பார்தீர்களா?

    இப்பாடலை முழுவதும் பாடிப் பாருங்களேன்! பாட முடியாவிட்டால், பாடலைக் கேட்டாவது பாருங்களேன்! இதயங்களை மகிழ்விக்கும் இனிய மெல்லிசையில் மலர்ந்த இதுபோன்ற மேன்மையான பாடல்களை, இன்றைய திரையுலகம் மறந்ததை எண்ணி நம் மனங்களே வேதனை கொள்ளும்.

    காவிய வள்ளல்
    “சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
    தேனுண்ட போதையில் திண்டாடுது…..”

    என்று தொடங்கும் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த பாடல்….பாடல் காட்சியில் நடித்தவரோ கலைச்செல்வி ஜெயலலிதா.

    தொடரும் பாடலில், தவழ்ந்து வரும் கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளைப் பாருங்களேன்!

    “பட்டுக் கன்னம் தத்தித் தத்தி தவிக்கின்றது!
    பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது!”

    சரிதானா?

    எதிர்பார்த்த உள்ளம்…..

    காவிய வள்ளலாம் எம்.ஜி.ஆரைக் கண்டுவிட்டதாம்! உள்ளம் மகிழ்ச்சியில் மகிழ்ந்தாடுதாம்.

    இப்படி ஆடும் மங்கைக்கும் காவிய வள்ளலுக்கும் உள்ள பொருத்தம் எப்படியாம்?

    கவியரசர் பாடலே சொல்லட்டுமே?

    “என்ன பொருத்தம் நமக்குள்
    இந்தப் பொருத்தம்!”

    சரியான பொருத்தமா?

    “என்ன பொருத்தம்?
    ஆகா! என்ன பொருத்தம்!
    ஆகா! என்ன பொருத்தம்!”

    இவ்வாறு, திரும்பத் திரும்பக் கவியரஞர் சொன்ன பொருத்தமே….! புரட்சித்தலைவருக்கும், புரட்சித்தலைவிக்கும் அரசியல் பொருத்தத்தை ஏற்படுத்தி, உறுதிப்படுத்தியது எனலாம்.

    சும்மாவா சொல்கிறார்கள்?

    ‘நல்லவர் நாவில் எழும் வார்த்தை!
    நாட்டு நடப்பினில் நடக்கும் வார்த்தை!’

    என்றே.

    அதுவும் கவியரசர் வாக்கு, புவிமீது பொய்க்குமா? பொய்க்காது!….

    இவற்றைச் சொல்லும்போது, சிலர் பத்தாம்சலித்தனம் என்பர்; இன்னும் சிலர் வலிந்து சொல்வது என்பர். எது எப்படியோ? கவியரசர் வாக்கு… புவியரசரால் பலிக்கும்… பலித்தது என்பது என் போன்றோர் நம்பிக்கை...

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

    அன்புடன்
    Shenthilbabu Manoharan.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1732
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!

    உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

    அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

    பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.

    ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

    கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

    ‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’

    அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

    ‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’

    amp

    எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

    ‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

    இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

    ‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

    முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

    ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன?............

  4. #1733
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    SWEET MEMORIES....

    #அன்பே_வா...
    #மக்கள்_திலகத்தின்_பிறந்தநாள்_சிறப்புப்பதிவு.. !!!

    ஐம்பத்து ஐந்து வருடங்கள் ((14-01-1966...பொங்கலன்று வெளியானது)) கடந்தும் மக்கள் மனதில இளமையாய் நிற்கிறது "அன்பே வா".

    ஏழைப்பங்காளன், புரட்சி வீரன், மக்கள் தலைவன் இந்த வேடங்களுக்குத்தான் மக்கள் திலகம் நன்றாக பொருந்துவார் என்ற 60 களின் நிலமையை அப்படியே மாற்றி, மக்கள் திலகத்தால் "சாக்லட் ஹீரோ" போன்ற வேடங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்தபடம்.படத்தில் இடம் பெற்ற அத்துணை நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை கொடுத்த படம்..

    அசோகன் அவர்களை கொடூரமான-நையாண்டி செய்யும் வில்லன் வேடத்தில் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்த படத்தில் ஒரு விமானப்படை அதிகாரியாக, மிக மென்மையான-காதலை தன் நண்பனுக்காக தியாகம் செய்கின்ற பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.

    மக்கள் திலகத்தின் நடன திறமையை அப்படியே வெளிக்கொணர்ந்த படம்." புலியைப்பார் நடையிலே" பாட்டு ஒன்று போதுமே...!!!

    இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கண்டிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இந்த படத்தின் பாடல்களை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதெப்படி மெல்லிசை மன்னர் வெளிநாட்டில்-வெளி மாநிலங்களில் எடுக்கப்படும் படங்களுக்கென்று தனித்தனியாக இசையை கொடுக்கிறாரோ...!!! அற்புதம்...!!!

    அன்பே வா படத்தின் புகழ்-மக்கள் திலகத்தின் புகழைப்போலவே என்றென்றும் நிலைத்திருக்கும்.........Sr.Babu...

  5. #1734
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு உ...த்தமன் 13
    ----------------------------------------------
    "உ...த்தமன்" வெளியான அன்று காரனேஷன் திரையரங்கின் முன்னே ஒரு தட்டுப் பந்தலும், தியேட்டரின் வாசலில் ஆர்ச்சும் போட்டு அமர்க்களப் படுத்தினர். மேலும் இரண்டு பெரிய ஒலிபெருக்கி பெட்டிகளை வைத்து
    ஒரு பெரிய தட்டி போர்டும் வைத்தனர். தட்டி போர்டு எதற்கென்றால் தொடர் hf காட்சிகளை உடனுக்குடன் ரசிகர்களுக்கு தெரிவிக்கத்தான்
    இந்த ஏற்பாடு.

    ஏதோ சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் போல கூட்டம் கூட்டமாக கைஸ்கள் நின்றிருப்பதை பார்த்தவுடன் கைபிள்ளைகள் பெரிய சாதனைக்காக காத்திருப்பவர்கள் போல தோற்றமளித்தது. படம் எப்படியிருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று கொக்கரித்தனர். 101 நாட்கள் ரத்தம் சிந்தி உழைத்து ஓட்டிய "சிவந்தமண்" தான் நினைவுக்கு வந்தது.

    முதல் காட்சி ஆரம்பமாவதற்கு முன் "உ...த்தமன்" பாடலை போட்டு அந்த இடத்தையே கலவர பூமியாக மாற்றினர். 'நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன்' என்ற "உத்தமன்" பாடலை முதல் பாடலாக போட்டு தொடர்ச்சியாக அதே படத்தின் மற்ற பாடல்களை போட்டு கைஸ் ரசிகர்களை உற்சாகப் படுத்தினர். முதல் காட்சி முடிந்தவுடன் வெளியே வரும் முரட்டு கைஸ்களிடம் படம் எப்படியிருக்கு? என்று ஆவலோடு கேட்டதும் வெளியே வந்த முரட்டு கைஸ்கள் படம் பிரமாதம் என்றும் சாதா கைஸ்கள் நல்லா இருக்கு! என்றும் ஒரு சில பார்வையாளர்கள் படம் 'ரொம்ப சுமார்' என்றும் கூறியதை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக அடுத்த காட்சிக்கு 'நாளை நாளை' பாடலை போட்டு சித்து விளையாட்டை தொடங்கினர்.

    இரண்டாவது காட்சியே, எதிர்பார்த்த கூட்டம் இல்லாததை சப்பை கட்டு கட்டி சமாளித்து கைஸ்களை உற்சாகப்படுத்தி தொடர்ந்து hf தட்டி போர்டை இறக்கி அதில் 2 என்று எழுதி ஒட்டியவுடன் கைஸ்கள் படபடவென கைதட்டி சரவெடி ஒன்றைப் போட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு காட்சிக்கும் இதைப்போலவே நடந்தது. மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற அச்சம் நாணம் ஏதுமின்றி கைஸ்கள் பெருமையாக நடமாடினர்.

    சில பணக்கார கைஸ்கள் காரிலே வந்து சிகரெட்டை பற்ற வைத்தபடி நிலமையை தெரிந்து கொண்டு சென்றனர்.
    ஒரு ஷோ முடிந்து அடுத்த ஷோவுக்குள் இல்லம் சென்று திரும்பி விடுவார்கள். அவர்களுக்கு மாற்றாக வேறு சில கைஸ்கள் அங்கேயே இருந்து கொண்டு மதுரையிலிருந்து வந்த செய்தி என்று அங்கு செமையா போகுது என்று சொல்லி திருப்தி பட்டுக் கொள்வார்கள்.

    நாங்கள் யாராவது போய் எட்டிப் பார்த்தால் போதும் அவர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு எங்களிடம் வந்து வம்பளப்பார்கள். கைஸ்களில் மீனவர் இனத்தை சேர்ந்த ஒருவர் பெயரிலே சாமியை வைத்துக்கொண்டு தீவிரவாதி போல நடந்து கொள்வார். அவர் திருமணத்துக்கு கூட அய்யன் கலந்து கொண்டதாக சொல்வார்கள்.
    அவர் தலைமையில் தான் இந்த வடக்கயிறு மேட்டர் அனைத்தும் நடக்கும். அதே நேரத்தில் பாலகிருஷ்ணாவில் மே 23 ல் வெளியான "உழைக்கும் கரங்கள்" வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் அடுத்த பதிவில்.............ksr...

  6. #1735
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அவதார புருஷர் அவதரித்த தினம்..!.........
    சைதை சா. துரைசாமி
    சென்னை பெருநகர முன்னாள் மேயர்
    -
    ’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம்தனிலே நிற்கின்றார்’ – என்று ’மன்னாதி மன்னன்’ படத்தில் பாடியபடியே, புரட்சித்தலைவர், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார். இன்றும் சமாதியில் காதுவைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச்சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார். இன்றுவரை தியேட்டர்களில் புரட்சித்தலைவரின் பழைய படங்கள் வெளியாகும்போது, எந்த எதிர்பார்ப்புமின்றி ஃப்ளக்ஸ், பேனர் வைத்துக் கொண்டாடும் தொண்டர்களைப் பெற்றிருக்கிறார்.

    எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை அவரது பிறந்த தினத்தில் அறிந்துகொள்வோம். திரையரங்குகளில் எல்லோரும் வணிகரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், புரட்சித்தலைவர் மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    புரட்சியாளர்
    எம்.ஜி.ஆர். நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர், அதாவது, சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்டது போன்று சமூக முன்னேற்றத்துக்கும் பாடல்கள் பயன்படும் என்று நம்பினார். தன்னுடைய படத்தின் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்கறை செலுத்தினார். 1954ம் ஆண்டு வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து, தன்னுடைய படத்தின் பாடல்களை தி.மு.க.வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் – என்று அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினார்கள். அடுத்து, ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்து, அருந்ததி இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள் வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.

    1958-ல் வெளியான, ‘நாடோடி மன்னன்’ படத்தில் திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால் கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க. கொடியை எம்.ஜி.ஆர். கொடியாகவே பார்த்தார்கள். புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தன்னுடைய கட்சியாகவே நினைத்து வளர்த்தார்.

    ஏழைகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் புரட்சித்தலைவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது. உழைக்கும் மக்கள் மீதான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
    தரை மேல் பிறக்க வைத்தான்
    எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் – என்று ’படகோட்டி’ படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார். பாடல் மட்டுமின்றி, வசனம், காட்சி அமைப்புகளிலும் மக்களின் மனதை தொட்டார். இந்த உலகிலேயே ஒரு தனி மனிதரின் கொள்கைக்காக திரைப்படம் எடுக்கப்பட்டு, அது வெற்றியும் அடைந்தது என்றால், அது புரட்சித்தலைவரின் படங்கள் மட்டும்தான்.
    தெய்வப்பிறவி
    தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    வெற்றிகரமான சினிமா நடிகராக இருந்தாலும், நாடகக்கலையிலும் தொடர்ந்து அக்கறை காட்டினார் புரட்சித்தலைவர். சீர்காழியில் நடைபெற்ற, ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்த நேரத்தில், மிகப்பருமனான நடிகர் குண்டுமணியை அலேக்காக தூக்கினார். அந்த நேரத்தில் சற்றே சரிந்ததால் கால் எலும்பு முறிந்துவிட்டது. இதையடுத்து, இனிமேல் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடிக்கவே முடியாது என்று வதந்தி பரவியது. ஆனால், அடுத்தடுத்து வந்த ராஜா தேசிங்கு, மன்னாதி மன்னன் படங்களில் முன்னிலும் வேகமாக சண்டையிட்டு வதந்தியை பொய்யாக்கினார்.

    அதேபோன்று எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். பிழைக்கவே மாட்டார்’ என்றும், ‘பிழைத்தாலும் அவரால் பேசவே முடியாது’ என்று எதிரிகள் பேசினார்கள். ஆனால், அந்த சோதனையையும் எம்.ஜி.ஆர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கட்டுப்போட்டபடி எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுவதும் 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன. அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாவை அரியணையில் ஏற்றினார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரக்காரணம் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்பதை அண்ணா உணர்ந்திருந்த காரணத்தால்தான், அவரை இதயக்கனியாக கடைசி வரை போற்றி பாதுகாத்தார்.

    1984ம் ஆண்டு புரட்சித்தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை’, ‘அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார். இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர். வீழ்ந்துவிட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து சாதனை படைத்தார்,

    வெற்றி மேல் வெற்றி
    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவரும் புரட்சித்தலைவர்தான். சொத்துக்கணக்கு கேட்டதற்காக தி.மு.க.வில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும் மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பக்கம் நின்றனர்.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த நேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெறமுடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். ஆனால், மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல் முதல் அமைச்சராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும்தான் இன்றுவரை அ.தி.மு.க. என்ற மாளிகையின் கடகாலாகத் திகழ்கிறார்கள்.
    நாடோடி மன்னன் படத்தில், ‘நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் திட்டம்… நாடு நலம் பெறும் திட்டம்’ என்று பாடியதை நிஜமாக்கிக் காட்டும் ஆட்சி புரிந்த தீர்க்கதரிசி ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘நமது தேவையே பிறருடைய நன்மைதான். மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நமக்கு என சேமித்து வைக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டால் பிறருக்காக நாம் எதையுமே சாதிக்க முடியாது’ என்று சுயநலமற்ற மனிதநேய சிந்தனையை மக்கள் மனதில் பதியவைத்தார்.
    ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு புரட்சித்தலைவர் தயாராக இருந்தார். ரேசன் அரிசி விலையை புரட்சித்தலைவரின் அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி தருவதை மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து அண்ணா சமாதியில் புரட்சித்தலைவர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடிவந்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தது வரலாறு.
    ஒருமுறை எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே, கைக்குழந்தைகளுடன் சில பெண்களை சந்தித்தார். 'காலையில் சாப்பிட்டீர்களா' என்றார். இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம் என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளை பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது

    சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டிவர் புரட்சித்தலைவர். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டிடத் தொழிலாளர், கை வண்டி இழுப்போர், மாட்டுவண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே முதன்முதலாக நல வாரியங்கள் அமைத்து, குறைந்தபட்ச ஊதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிவாரணம்,சேமிப்பு பலன் போன்ற நல உதவிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் புரட்சித்தலைவர். முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும், முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் புரட்சித்தலைவர்தான்.

    ஜாதி, மதத்தின் பெயரால் மக்களுக்குக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார். ‘உரிமைக்குரல்’ படத்தில், ’தாழ்த்தப்பட்ட ஜாதி உயர்த்தப்பட்ட ஜாதிங்கிறது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்து வைத்த கொடுமை, என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒரே ஜாதிதான், அது மனித ஜாதி’ என்று வசனம் பேசுவார். மேலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவிகிதம் என உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டியதும், புரட்சித்தலைவர்தான்.

    திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புரட்சித்தலைவர் தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார். அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’ என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.

    புரட்சித்தலைவர் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கட்சி பேதமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    ‘இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளி விளக்கு’ - என்ற பாடல் தமிழகம் முழுக்க எதிரொலித்தது. மக்களின் நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் நோயில் இருந்து புரட்சித்தலைவர் எழுந்துவந்த காரணத்தால், தமிழகத்தில் ஆன்மிகம் மீண்டும் புதிய எழுச்சி கண்டது.

    ’நாடோடி மன்னன்’ படத்தில், ’வேலை செய்ய முடியாத வயோதிகர்கள், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைக்கவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன் என்று சொன்னதுபோலவே தன்னுடைய சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் உயில் எழுதி வைத்தார்.

    கொடுத்து சிவந்த கரம்
    நடிகர், முதல்வர் என்பதைவிட, புரட்சித்தலைவர் என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மைதான்.
    ’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ – என்று ‘பணம் படைத்தவன்’ படத்தில் பாடியது போலவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.

    இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால்தான், ‘அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்’ என்று பேசினார்கள். அது உண்மையும்தான்.

    புரட்சித்தலைவரின் வள்ளல்தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்லமுடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவர் மழைக்கோட்டு வழங்கும் விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது மட்டுமே போதுமானது.

    ‘புயல் மழையால் – சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியினைக் காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். தன்னைத் தேடி வருகிறவரின் துன்பத்தைப் போக்குகிறவன் வள்ளல். ஆனால், புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். அப்படியல்ல, சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர். வள்ளலுக்கெல்லாம் வள்ளல்’ என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா.

    இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால்தான், புரட்சித்தலைவரை அவதார புருஷர் என்கிறேன்.

    காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று காலத்தை வென்ற கலியுக வள்ளல் புரட்சித்தலைவர் எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று. திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நூலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று புரட்சித்தலைவரின் புகழ் எக்காலமும் இம்மண்ணில் வாழும்..........

  7. #1736
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பழைய குப்பை # 10.
    *****************

    என் நண்பர் என்ற தலைப்பில் 1960 ல் வெளியான இந்தக் கட்டுரை குப்பையல்ல. கோமேதகம்.தூக்கிப்போட்ட பழைய குப்பையிலிருந்து கிடைத்தது என்ற அர்த்தத்தில் விளைந்த தலைப்பிது.நமக்கு முக்கியம் இந்த உலகம் குப்பையில் போட்ட கட்டுரை தானே தவிர குப்பையல்ல.மீண்டும் சொல்கிறேன் வந்த வழியைக் குறிப்பிடவே இந்தத் தலைப்பு.இன்று மக்கள் திலகத்தின் பிறந்த தினம்.அவரைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரருமான வி.பி.ராமன் தன் நட்சத்திர நடிகரைப் பற்றி எழுதிய கட்டுரை உங்களது பார்வைக்காக.இதோ ராமன் அந்த ராமச்சந்திரன் பற்றி...

    திரு எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதும்போது எனது நண்பர் என குறிப்பிட்டு என்னால் எழுத முடியவில்லை.அவரை எனது நண்பரென சொல்ல முடியாது.காரணம்?. அவர் எனக்கு அண்ணனைப் போன்றவர்.இருந்தாலும் நண்பர் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டதால் அண்ணன் எம்.ஜி.ஆரைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.

    ஏறத்தாழ பத்தாண்டுகளாக எனக்கு அவரோடு பழகும் நல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த நட்பு பக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் ஏற்பட்டது.லாயிட்ஸ் ரோடு 160 ம் நம்பர் வீடு எங்களுக்குச் சொந்தமாக இருந்தது.ஒரு நாள் காலை எனது தந்தையார் காலஞ் சென்ற திரு ஏ.வி.ராமனும் நானும் எங்களது வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒரு பச்சை வாக்ஸால் வண்டி வந்து எங்களது வீட்டு வாசலில் நின்றது.அதிலிருந்து இருவர் இறங்கினார்கள்.இருவரும் சகோதரர்கள் என்று தெரிந்தது.அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.அண்ணன் சக்கரபாணியும் எம்.ஜி.ஆரும் தான் அது.

    திரு சக்கரபாணி தந்தையிடம் வந்து அறிமுகமாக எம்.ஜி.ஆர். தான் தந்தையிடம் பேசினார்.தங்களது வீடு காலியாக இருக்கிறது என கேள்விப்பட்டோம்.எங்களுக்கு வாடகைக்கு தர முடியுமா?. சினிமாத் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்க பலர் அஞ்சுவதுண்டு.காரணம் வாடகை ஒழுங்காக வருவது சிரமம் என்ற எண்ணம் அப்போது பரவியிருந்தது.எனது தந்தையார் யாரைப் பார்த்தாலும் உடனே ஒரு முடிவிற்கு வரும் சுபாவம் படைத்தவர்.அவர் சற்றும் தயங்காமல் அதற்கென்ன தாராளமாக எடுத்துக்கொள்ளுங்க என்று கூறினார்.எம்.ஜி.ஆர். சந்தோஷத்தோடு நாங்க வாடகையை ஒழுங்காக கட்டிவிடுவோம்.நடிகர்கள் ஆயிற்றே என்று நீங்க பயப்பட வேண்டாம் என்றார்.உடனே எனது தந்தையார் இதை நீங்க சொல்லத் தேவையேயில்லை உங்கள் இருவரைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துவிட்டது.நன்றி சொல்லி அவர்கள் விடைபெற்றார்கள்.

    அவர்கள் சென்றதும் எனது தந்தை என்னிடம் சொன்னது இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.எம்.ஜி.ஆரின் முகத்தில் சத்தியத்தின் ஒளியைப் பார்க்கிறேன் என்றார்.தூய்மையான உள்ளம் முகத்தில் தெரிகிறது என்றார்.அவர் உன் வாழ்வில் முக்கியமான இடத்தைப் பெறுவார் அது உன் பாக்கியம் என்றார்.இந்த வாசகத்தை எனது தந்தை சொன்னபோது எனக்கு வயது இருபது கூட ஆகியிருக்கவில்லை.எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று பத்து வருடங்களுக்குப் பிறகு யோசிக்கிறேன்.

    ஒரு மாதம் கூட தவறாமல் வாடகை செலுத்திவிடுவார் எம்.ஜி.ஆர்.ஒரு நேரத்தில் அந்த வீட்டை விற்றுவிட தந்தை தீர்மானித்தார்.ஆனால் அதை எம்.ஜி.ஆர்.தான் வாங்க வேண்டுமென ஆசைப்பட்டார்.அவரும் முழு மனதோடு ஒப்புக்கொள்ள வீடு கைமாறியது.சர்க்கார் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற என் தந்தைக்கு தன் வாழ்க்கையின் கடைசி காலங்களில் உதவிய பணம் அந்த வீட்டின் கிரயம் தான்.எனது படிப்பை முடித்து நானும் வக்கீல் தொழிலில் சேர்ந்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள பயன்பட்டதும் அந்தப் பணம் தான்.

    எம்.ஜி.ஆரின் சிறப்பு பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.அவரது குணங்களில் நான் நெருங்கிப் பார்த்தது அடுத்தவருக்கு தீங்கு நினைக்க அவர் எப்போதும் எண்ணியதே இல்லை.பிறர் துயரை சகித்துக்கொள்ளவும் அவரால் இயலாது.இளகிய மனது என்று கேள்விப்பட்டிருக்கிறோமே அதை அவரிடம் தான் கண்டிருக்கிறேன்.மற்றவருக்கு உதவும்போது அதில் எந்தவித பிரதிபலனும் இருக்காது.அவரிடமிருந்து பொருளுதவி பெற்றுக்கொண்ட பிறகு வெளியே போய் அவரையே தூற்றி எழுதும் பண்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அப்படிப்பட்டவர்களிடம் கூட எம்.ஜி.ஆர்.அன்பாக பழகக் கூடியவர்.

    அவருக்கு புத்தர் ஏசுநாதர் போதனைகள் பிடிக்கும்.அவர்கள் சொல்லிய தூய்மையான வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களை தனது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர்.Love thy enemies என்ற போதனையை முற்றிலும் பின்பற்றுபவர்.துவேஷம் அவரது அருகில் கூட வந்தது கிடையாது.தனது வாழ்க்கையில் சில லட்சியங்களை குறிக்கோள்களை அவர் இளமையிலேயே கடைபிடித்தவர்.அரசியல் சமூக பொருளாதார துறைகளில் ஆர்வத்துடன் தான் கடைபிடித்த கொள்கைகளை பரப்ப முயன்றவர்.நான் நடிகன் தானே எனக்கென்ன?. என்று இருந்துவிடுவது சுலபம்.ஆனால் தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு எத்தனையோ எதிர்ப்புகளையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு அவற்றை கடைபிடிப்பது மிகவும் சிரமம்.

    எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒரு அரசியல் பிராணி தான்.எல்லோரிடத்திலும் அரசியல் உண்டு.எம்.ஜி.ஆர் அரசியலைப் பயன்படுத்தி புகழேணியில் ஏறியவர் இல்லை.அதற்கு மாறாக ஒரு சிறந்த நடிப்புக் கலைஞர் என்ற பெயரை புகழை நாட்டிய பிறகு தான் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டார்.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏற்றங்களும் இறக்கங்களும் ஏற்படுவது இயற்கை.பக்குவமான மனிதனின் அறிகுறி இரண்டையும் ஒன்றாக பாவித்து ஏழ்மையிலும் எளிமையிலும் உதவியவரை மறவாமல் வசதியிலும் நட்புறவை கொள்வது சாதாரண விஷயமல்ல.அந்த பரீட்சையில் பலர் தேர்வு பெறமாட்டார்கள்.ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளுவதும் உதவியவர்களை உதாசீனம் செய்வதும் வளமானவர்களின் குணாதியங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.ஆனால் எம்.ஜி.ஆர் இந்த விஷயத்தில் தன்னுடைய மேலான மனதைக் காட்டுகிறார்.தான் எளியவனாக இருந்தபோது உதவிய ஒருவரையும் அவர் மறக்கவில்லை.நன்றி மறவாமை ஒரு சிறந்த பண்பு.அது எம்.ஜி.ஆரிடம் நிறையவே இருக்கிறது.

    எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர ஆராய்ந்த பிறகே ஒரு முடிவை எடுப்பார்.பல முறை அவருடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறேன்.அப்போதெல்லாம் அவரது கேள்விகளும் சந்தேகங்களும் அவரது கூர்மையான அறிவுத் திறனையே காட்டியிருக்கிறது.பேசும் பட வாசகர்களுக்குப் போய் அவரது நடிப்புத் திறனை பேச வேண்டிய தேவையில்லை.தமிழ்த் திரையின் ஏர்ரால் ஃப்ளின் அவர்.பல்வேறு பாத்திரங்களில் ரசிகர்களை பரவசப்படுத்தியவர்.அவரது நடிப்பின் சிறப்பை நான் கூறாமல் இருக்க முடியாது.தான் ஏற்கும் பாத்திரம் ஒவ்வொன்றின் வாயிலாகவும் நல்ல கருத்து அதாவது நல்ல மாரல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்.

    எம்.ஜி.ஆரின் நண்பன் என்பதால் பலரும் அவரிடம் சிபாரிசு செய்ய என்னை அணுகுவது வழக்கம்.அப்படி வரும் நூறு பேரில் ஒன்றையோ இரண்டையோ தான் அவரிடம் தெரிவிப்பது வழக்கம்.உலகத்திலுள்ள எல்லா கஷ்டங்களையும் தனிப்பட்ட ஒருவரால் எப்படி நீக்க முடியும்?. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும் வசதிகள் படைத்த அரசாங்கமே விழித்துக்கொண்டிருக்கும்போது தனி நபர் எவ்வளவு தான் செய்ய முடியும்?. எம்.ஜி.ஆரின் இளகிய மனதை பயன்படுத்திக்கொண்டு எப்போது பார்த்தாலும் பொருளுதவி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவரும் இயன்றதற்கும் மேலாகவே உதவிக்கொண்டிருக்கிறார்.ஆனால் எனக்குத் தெரிந்து அவரிடம் உள்ள குறை பாத்திரம் அறிந்து பிச்சையிடுவது கிடையாது.தமிழ் இலக்கியத்தில் படித்த குமணனும் பாரியும் தான் எனது நினைவிற்கு வருகிறார்கள்.

    இக் கட்டுரையை முடிப்பதற்கு முன்பு ஒரு சிறு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு முடிக்க விரும்புகிறேன்.எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு நெடு நாட்களாக உள்ள தொழில் துறை அரசியல் துறை போன்ற பழக்கங்களால் மட்டும் ஏற்பட்ட உறவல்ல.இருவரின் மன ஒற்றுமையில் ஏற்பட்ட சகோதர பாசம்.ஒருவரை நண்பர் என ஏற்றால் அவரை முழு மனதுடன் நேசிப்பார்.பெரும் அறிவாளிகள் பெரும் செல்வந்தர்கள் திறமை படைத்தவர்கள் நாட்டில் தோன்றலாம்.ஆனால் நல்லவர்கள் மிகக் குறைவு.அகத்தில் அப்பழுக்கில்லாத ஆத்மாக்கள் அரிது.எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட அதிசயப் பிறவி.தங்கமான இதயம்.தங்கம் போன்ற அவரது உடல் தங்கமாக ஜொலிக்க அவரது உயர்ந்த குணங்கள் தான் காரணம்.வாழ்க எம்.ஜி.ஆர். பல்லாண்டு.

    ராமனின் இந்தக் கட்டுரை வெளியாகி அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டது.இப்போதும் இம்மி மாறாமல் இதே இவரது கருத்தை யாரும் ஒத்துக்கொள்வார்கள்.எல்லோருக்கும் மனிதப் பிறவி ஒரு முறை தான்.மரணம் இங்கே தவிர்க்க முடியாத ஒன்று.ஆனால் அதற்குப் பிறகும் சிலரால் இங்கே வாழ முடிகிறது என்றால் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த மக்கள் திலகத்தின் வாழ்க்கை மகத்தானது.இந்த நாளில் அவரை நினைவு கூறுவோம். .அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது இந்தக் குழு.மீண்டும் கிளறுகிறேன் குப்பையை எந்தப் பொக்கிஷம் கிடைக்கப்போகிறது என்பதை காணலாம் நாளை.அது வரை குப்பைகளை கிளறிக்கொண்டே இருப்பேன்.நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்............

    வளரும்............ Abdul Samad Fayaz.........

  8. #1737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஃபயஸ் ஸார். அந்த மாமனிதரைப் பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் படித்தாலும் அலுக்காது. உலகம் சுற்றும் வாலிபன் தொடர் எழுதிக் கொண்டிருந்தீர்களே அப்போதுதான் உங்கள் கட்டுரைகள் படிக்கத் தொடங்கினேன் அது ஒரு அற்புதமான தொடராக வந்து கொண்டிருந்தது. கடைசியில் அவசரமாகப் போட்டு மூடியது போல் ஆகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. அப்போதே அவரது குணங்கள் பற்றி நன்றாக விளக்கியிருந்தீர்கள். எதிர்பாராமல் இன்று இரண்டாவது பதிவு வந்தது. சர்ப்ரைஸ்.நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்த நாட்கள் பெரிய நடிகராக இருந்த நாட்கள் ஒரு மாநில முதல்வராக இருந்த நாட்கள். எல்லாமே அவரது பெருமைக்கு சான்று கூறுபவை. மக்கள் மனதில் என்றைன்றும் வாழும் மக்கள் திலகம். வாழ்க புகழ்...Gomathy S...

  9. #1738
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனி யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. கிட்னி ஆபரேசனுக்கு பயந்து அரசியலுக்கு வராம ஓடியவர்கள், மக்கள் பணின்னு வந்துட்டு தோத்துப்போனால் அரசியலுக்கே முழுக்கு போட்டவர்கள் மத்தியில் , கால் முறிஞ்சு மீண்டு எழுந்து, சினிமாவிலும் அரசியல்லயும் நிலைச்சு நின்று, தொண்டையில் குண்டு பாய்ஞ்சு பேச முடியாட்டியும் பயிற்சி செய்து பேசி, சினிமாவில் யாரும் நெருங்க முடியாதபடி ஜெயிச்சு, கிட்னி ஆபரேசன் பண்ணினாலும், வாதநோய் வந்தாலும் அதையும் தாங்கி மீண்டு நோயை விரட்டி மூணாவது பிறவி எடுத்து அரசியல்லயும் எவரும் நினச்சுபார்க்க முடியாதபடி படுத்தபடியே ஜெயித்து சாதனை செய்து, உடல் துன்பத்தையும் தீய சக்திகளின் நெருக்கடியையும் சமாளிச்சு வெற்றி பெற்று ஏழைங்கள பத்தியே சிந்திச்சு பொற்கால ஆட்சி தந்து ஏழைங்களை வாழவைத்த தங்கத் தலைவனே.. உனக்கு நிகர் நீயேதான். உன்னைப் போல சாதனை செய்ய நீயே திருப்பி பிறந்தால்தான் முடியும் அய்யா. உன் பக்தர்கள் என்பதில் தலை நிமிர்த்தி பெருமைப் படுகின்றோம்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... தலைவா....rrn...

  10. #1739
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன் ஆசான் அண்ணாவை அரியணையில் ஏற்றிய சீடன். இந்தியாவில் தனி நபர் ஒருவரின் பெயரில் (அண்ணா) ஏற்படுத்தப்பட்டு தற்போதுவரை இயங்கும் ஒரு பெரிய கட்சியை தோற்றுவித்தவர். தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியின் அடித்தளமாக இருப்பவர்.

    49% இருந்த இட ஒதுக்கீட்டை 68% என உயர்த்திக்கொடுத்தவர்.

    பரம்பரை பரம்பரையாக ஆண்டைகளிடமிருந்த மணியக்காரர் பதவிகளை பிடுங்கி அனைத்து சாதியினரும் அரசு பணியுடன் கிராம நிர்வாக அதிகாரிகளாகலாம் (VAO) என்ற புரட்சியை செய்த தலைவர்.

    தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை பிடுங்கி அரசுடமையாக்கியவர்.

    இந்தியாவில் முதன்முதலில் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தவர்.

    'ஒரு குடிசை, ஒரு விளக்கு' திட்டத்தின் மூலம் ஏழை குடிசைகளுக்கெல்லாம் ஒளியூட்டிய ஒரிஜினல் சூரியன்.

    தன் ஆசானின் ஆசான் பெரியாரின் நூற்றாண்டு விழாவை தன் ஆட்சிக்காலத்திலும், தன்னுடைய நூற்றாண்டு விழாவை தன் கட்சி ஆட்சியிலும் கொண்டாடும் அளவிற்கு புகழோடு இன்றும் திகழ்பவர்.

    தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கும் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் ஆட்சியை நாங்கள் தருவோம் என சொல்லும் அளவிற்கு இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர்.

    தன் தொழிலான திரைத்துறையிலும், பிறகு அரசியலிலும் கடைசிவரை ' நம்பர் 1 ' இடத்திலேயே இருந்த ஒரு மக்கள் தலைவன் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றிய தினம் இன்று.

    #MGR104
    #hbd_mgr_104... Selva Bharath...

  11. #1740
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #இன் #தமிழ்நதி #மக்கள் #சங்கம்!!!

    பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவதரித்த இந்நன்னாளில், அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களுக்காக தோன்றியிருக்கும் ஒரு சங்கம்...

    எம்ஜிஆர் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிசெய்ய துடிப்புடன் செயல்படுத்த இருக்கும் ஒரு சங்கம்...

    எந்தவித சுயலாபநோக்கின்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கம்...

    அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை மக்களோடு மக்களாக நின்று, தோள்கொடுத்து மீண்டும் அந்த நல்லாட்சியை நிறுவ முனைப்புடன் இருக்கும் ஒரு சங்கம்...

    எம்ஜிஆர் இன் தமிழ்நதி மக்கள் சங்கம்!!!

    புரட்சித்தலைவரின் புகழ் போல தழைத்தோங்க எல்லாம் வல்ல நம் குலதெய்வம் பொன்மனச்செம்மல் அருளாசி புரிவாராக!!!

    அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் நல்லாதரவை சிரமேற்கொண்டு வரவேற்கிறோம்!!!

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க!!!........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •