Page 89 of 113 FirstFirst ... 3979878889909199 ... LastLast
Results 881 to 890 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #881
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 50
    அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் மூடப்பட, நான் படித்த பள்ளி மட்டும் டிசம்பர் 4 திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பித்து விட்டன. பள்ளி விடுமுறையாக இருக்கும், ஆகவே நீதி ஓபனிங் ஷோ போகலாம் என்று நினைத்திருந்த வேளையில் அது நடக்காமல் போனது. அதே நேரத்தில் என் கஸின் படித்த கல்லூரியும் மூடப்பட்டிருக்க அவர் எந்த சிக்கலுமில்லாமல் (அதுவும் தங்கம் என்பதனால் டிக்கெட் பற்றிகவலைப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை) ஓபனிங் ஷோ சென்று விட்டார். ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 7 வியாழன் அன்று படம் ரிலீஸானது எப்போதும் தனது படம் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் அதற்குண்டான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடிக்கும் பாலாஜி இந்த நீதி படத்தின் அனைத்து வேலைகளை முடித்து நவம்பர் 30 அன்று சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டுக்காட்டி தணிக்கை சான்றிதழ் பெற்று விட்டார். 1972ல் முதன் முறையாக வியாழக்கிழமை படம் வெளியானது மட்டுமல்லாமல் முதல் நாள் காலைக்காட்சி இல்லாமல் மாட்னி ஓபனிங் ஷோவாக ஆரம்பித்தது.
    மாட்னிதான் ஓபனிங் ஷோ என்பதால் அவர் படம் முடிந்து வருவதற்குள் நான் ஸ்கூலிலிருந்து வந்து விட்டேன். கஸின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தார். என் ஆவல் அவருக்கு தெரியும் என்றாலும் அனைவருக்கும் முன்பாக வைத்து படம் பார்த்துவிட்டு வந்ததை சொல்ல முடியாது என்பதால் என்னை தனியே அழைத்து போய் படம் நன்றாக இருக்கிறது. நாம் ஹிந்தி துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு படம் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் திலகம் இறங்கி அடித்திருக்கிறார் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வியாழன் படம் ரிலீஸ். வெள்ளி சனி இரண்டு நாட்களும் ஸ்கூல் இருந்ததால் சனிக்கிழமை ஈவினிங் ஷோதான் போக முடிந்தது. தங்கம் தியேட்டரில் நல்ல கூட்டம். இந்த முறை பால்கனி டிக்கெட் வாங்கி படம் பார்க்க உள்ளே நுழைகிறோம்.
    வழக்கம் போல் சுஜாதா சினி ஆர்ட்ஸின் லோகோ அந்த பரபரப்பான பின்னணி இசையுடன் பல வண்ணங்களில் பளிச்சிட தியேட்டரில் ஆரவாரம். அன்றைய நாட்களின் வழக்கப்படி இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்டு முதலில் வருகிறது. படத்தின் கதையை பற்றிய ஒரு முன்னோட்ட வரிகள் மேஜர் குரலில் ஒலிக்க அடுத்த காட்சி ஹைவேஸில் வரும் லாரியை காண்பித்து உள்ளே காமிராவை காண்பிக்க நடிகர் திலகம் கருநீல ஷர்ட் அணிந்து லாரி ஓட்டிக் கொண்டிருக்க செம கைதட்டல்கள். சுஜாதா சினி ஆர்ட்ஸ் அளிக்கும் நீதி என்று காண்பித்து விட்டு அடுத்த கார்டு திரைக்கதை வசனம் ஏ எல் நாராயணன் என்று வர தியேட்டரில் ஒரு சின்ன சலசலப்பு. எந்த நடிகர் நடிகை பெயரையும் போடவில்லை என்பதை கஸின் என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால் எனக்கு அது ஏமாற்றமாக தெரியவில்லை. சௌகாருக்கும் ஜெயலலிதாவுக்கும் பல வருடங்களாக இருந்த ஒரு கோல்ட் வார் காரணமாகத்தான் யார் பெயரும் போடாமல் டைட்டில்ஸ் காட்டப்பட்டது ஏற்கனவே திருடன் படத்தில் பெயர் போடுவதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் (சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர் கோபித்துக் கொண்டு இனிமேல் உன் படங்களுக்கு பைனான்ஸ் பண்ண முடியாது என்று சொன்னதை இந்த தொடரில் நாம் பார்த்திருக்கிறோம்) பாலாஜிக்கு நினைவிருந்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்து வி சி சண்முகத்திடம் அனுமதி வாங்கி செய்தார் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள் (படம் வெளியான பிறகு தெரிய வந்த விஷயம்). டைட்டில் போடும்போதே நடிகர் திலகம் பாட்டிலில் இருப்பதை போட்டுக் கொண்டே வருவார். அவரை வேண்டாம் வேண்டாம் என்று கிளீனர் ஐ எஸ் ஆர்,கெஞ்சுவதும் (வாத்யாரே வண்டி புல் லோடிலே இருக்கு., வண்டி மட்டும் இல்லைடா. உன் வாத்தியாரும் புல் லோடுதான்) நடிகர் திலகம் கொடுக்கும் பதிலும் படத்தை ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக்கிறது. வண்டியை நிறுத்தி விட்டு இது உளுந்தூர்பேட்டைதானே என்று நடிகர் திலகம் கேட்க ஆம் என்ற பதில் வந்ததவுடன் நான் அந்த ராணியை பார்த்து விட்டு வந்திறேன் என்று நடிகர் திலகம் இறங்கி செல்ல அங்கே ஒரு வீடு. பலர் படுக்கை திண்டில் சாய்ந்திருக்க ஏ சகுந்தலா ஆட தயாராக நிற்க நடிகர் திலகம் என்ட்ரி. அந்த கருநீல பான்ட் அதே கலரில் புல் ஸ்லீவ் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் அந்த தூணில் சாய்ந்து நிற்க கைதட்டல் அள்ளுகிறது.
    நடிகர் திலகம் எல்லோரையும் போக சொல்லு என்று சொன்னவுடன் அனைவரும் சென்று விட கே கண்ணன் மட்டும் போகாமல் முரண்டு பிடிக்க நடிகர் திலகம் கிண்டல் மரியாதையாக போங்க சார் என்று சொல்ல கண்ணன் நடிகர் திலகத்தை தாக்க அத்தேரி கழுத, என்கிட்டே அடிவாங்கிறதுக்குன்னே இவன் பிறந்திருக்கான் என்று கண்ணனை அடி பின்ன சண்டைக்காட்சியை சிவிஆர் நன்றாக எடுத்திருப்பார். அடி வாங்கி தபலா வாசிப்பவரின் மேல் கண்ணன் விழ ஸ்வரம் சொல்லி அடிப்பது, ஆர்மேனிய பெட்டிக்கருகில் ஆலாபனை போல் பாடி அடிப்பது என்று நடிகர் திலகம் அமர்க்களம் செய்வார். படம் ஆரம்பித்தவுடனே சண்டை அதுவும் கண்ணனை வெளுக்கிறார் என்றதும் தியேட்டரில் அதிலும் குறிப்பாக கீழே செம கைதட்டல் விசில். அந்த 1972ல் மட்டும் ராஜா தவப்புதல்வன் அப்புறம் நீதி என்று மூன்று படங்களில் கண்ணன் சண்டைக்காட்சியில் அடி வாங்குவதை ரசிகர்கள் ஓஹோவென்று ரசிக்கிறார்கள். சண்டை முடிந்தவுடன் மாப்பிளையை பார்த்துக்கடி மைனாக்குட்டி பாடல். சண்டை ஒரு ட்ரீட் என்றால் இந்த பாடலும் ஆடலும் வேறு வகை விருந்து. அதை ஒரு கிளப் டான்ஸ் பாடலாக மட்டுமல்லாமல் ஒரு கஸல் பாணியில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்க தனது பங்கிற்கு டிஎம்எஸ் ஆலாபனையில் அசத்த நடிகர் திலகம் திரையில் அனைவரையும் தூக்கி சாப்பிடுவார். பாட்டு முடியும்போது செம கிளாப்ஸ். காலையில் தூக்கம் விழிக்கும் நடிகர் திலகத்தை எழ விடாமல் சகுந்தலா தடுக்க அத்தேரி கழுத காலங்கார்த்தாலே என்ன லவ்வு என்று நடிகர் திலகம் எழுந்து போக மூன்றாவது காட்சியிலேயே கதைக்குள் வந்து விடுவார்கள்.
    வண்டி கொஞ்சம் ஆட ரொம்ப பனியா இருக்கு, ரோடே சரியாக தெரியலை, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்திட்டு அப்புறம் போகலாம் என்று நடிகர் திலகத்திடம், ஐ எஸ் ஆர் கெஞ்ச, அத்தேரி கழுத பேசாம வாடா என்று நடிகர் திலகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோட்டின் ஓரத்திலிருந்து மாடுகளை ஒட்டி வரும் ஒரு மனிதன் தெரிய ஐயோ என்று பிரேக் அடிப்பதற்குள் மோதி விட கீழே இறங்கி பார்த்தால் முதலில் ஒரு மாடும் சக்கரத்திற்கு அடியில் ஒரு மனிதனும் சிக்கிக்கொண்டு இறந்திருப்பார்கள். மனிதனை வெளியிலே இழுத்து பரிசோதிக்கும்போது அவன் குடும்பத்தினர் வந்து விட நடிகர் திலகம் கைது செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்க மேஜர் நீதிபதியாக இருப்பார். குடிச்சிருந்தேன், ஆனா நிதானத்தை இழக்கலே பனி அதிகமாக இருந்ததாலே ரோடு சரியா தெரியலே என்று வாதிடுவார் நடிகர் திலகம். இல்லை இவரின் அஜாக்கிரதையினாலும் அலட்சியத்தினாலும் இந்த விபத்து நடந்தது என்று அரசாங்க வக்கீல் வாதிட, நான் வேணுமின்னே செய்யல. எனக்கும் அவருக்கும் என்ன பகை? நான் வேணுமினே செஞ்சிருந்தா அங்கே ஏன் நிக்க போறேன்? வண்டி எடுத்து போயிருக்க மாட்டேன்? அத்தேரி கழுத நான் போற ஸ்பீடுக்கு எந்த பய என்னை பிடிக்க முடியும் என்று சத்தம் போட்டு பேச மேஜர் கண்டித்தவுடன் அதே வசனத்தை லோ வாய்ஸில் சொல்லுவார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். வழக்கை ஒத்தி வைத்துவிட்டு மேஜர் போக அடுத்த காட்சியில் சௌகார் கால் இல்லாமல் கட்டை வைத்து நடக்கும் அவரின் மாமனார் எஸ் வி சுப்பையாவை கூட்டிக் கொண்டு மேஜர் வீட்டிற்கு வர இங்கே நீங்க வரக்கூடாது. ஏதாவது சொல்லனுமுன்னா கோர்ட்டில சொல்லுங்க என்பார். சௌகார் தங்கள் நிலைமையை விளக்குவார். கால் இல்லாத மாமனார், கண் தெரியாத மாமியார், கல்யாணத்திற்கு நிற்கும் நாத்தனார் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகள் இவர்களை எப்படி காப்பாற்றுவது? கொலைக்கு காரணமாக இருந்தவனை தண்டித்து விட்டால் என் கணவர் திரும்பி வருவாரா? உங்கள் தீர்ப்பு எங்கள் வாழ்விற்கு வழி செய்யுமா என்று கேட்டு விட்டு போக மேஜர் மனதில் சிந்தனைகள்.
    அடுத்து constituional bench போல அதாவது முக்கியமான ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு 5 அங்க அமர்வாக நீதிபதிகள் இருக்க அவர்களுக்கு முன்னால் மேஜர் காலத்திற்கேற்ப தீர்ப்பில் சில மாற்றங்களை கொடு வர அனுமதி வேண்டி நிற்க அந்த அமர்வு அதற்கு அனுமதி கொடுக்க இங்கே கீழமை நீதிமன்றத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு ஆண்டு தணடனை விதித்து அந்த இரண்டு ஆண்டுகளும் இறந்து போன குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என மேஜர் தீர்ப்பு சொல்ல நடிகர் திலகம் வேண்டாம் வேண்டாம் என்பார். ஆனால் அந்த தீர்ப்பின்படி அந்த கிராமத்திற்கு அவர் கொண்டு வரப்பட ஊர்க்காரர்கள் அவரை தடுக்க முயற்சிக்க கான்ஸ்டபிள் சந்திரபாபு அனைவரையும் விரட்டி அவரை இறந்து போனவரின் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே அவருக்கு கடுமையான எதிர்ப்பு. சுப்பையா கட்டையால் தலையிலே அடித்து விடுவார். அந்த வீட்டின் கடைக்குட்டி பெண் மட்டும் வந்து ரத்தம் வழிய உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகத்திடம் பேச சௌகார் பெண்ணை மிரட்டி கூட்டி செல்வார். அவன் கொலைகாரன் என்று அந்த பெண்ணிடம் சொல்லப்பட கொலைகார மாமாவா என்று அந்த குட்டி பெண் அப்பாவியாக கேட்கும். கடைசி வரை அந்த பெண்ணிற்கும் அவள் அண்ணனுக்கும் நடிகர் திலகம் கொலைகார மாமாவாகவே இருப்பார். வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் குடுமபத்தில் பெண் குழந்தை கஞ்சி சாப்பிடாமல் சோறு வேணும் என்று அழும். கிளீனர் ஐ எஸ் ஆர், ராத்திரி வந்து தப்பித்து போய்விடலாம் என கூட்டிக் கொண்டு போக ஊர் எல்லையில் காவல் நிற்கும் சந்திரபாபு தடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் கூட்டி செல்வார்.
    பாலாஜி சத்தம் போட தண்ணி குடிக்கிறியான்னு கூட ஒருத்தனும் கேட்க மாட்டேங்கிறான். பசியால நான் துடிக்கிறேன் என்று நடிகர் திலகம் சொல்ல பாலாஜி ஒரு டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு கொடுக்க அவசர அவசரமாக ஒரு கவளம் சோறு எடுத்து சாப்பிட போகும்போது குழந்தை பசியால் அழுதது ஞாபகம் வர கையை உதறி விட்டு எழுந்து போய் விடுவார். இதற்கிடையில் ஊரில் பண்ணையார் மனோகர். பணக்காரர். சில பல தொழில்களை செய்து கொண்டிருப்பவர் கிராமத்து மக்களுக்கு கடனை கொடுத்து அவர்களின் நிலத்தை அபகரிக்கும் டிபிக்கல் தமிழ் சினிமா வில்லன். அவரது கணக்கு பிள்ளையாக எம் ஆர் ஆர் வாசு. சௌகாருக்கும் ஜெயகௌசல்யாவிற்கும் வேலை கொடுக்கிறேன் வர சொல் என்று சொல்ல சௌகார் மட்டுமே வேலைக்கு செல்வார்.அங்கே மனோரமா அறிமுகம். ட்ராக்டர் பொன்னம்மா என்ற பாத்திரத்தை (சற்றே பிசகினாலும் விரசமாகி விடக்கூடிய ஆபத்து) ஆச்சி நன்றாகவே செய்திருப்பார்.(உண்மையை சொல்ல போனால் படத்தில் நாயகி ஜெயா வரும் நேரத்தை விட மனோரமாவுக்கு ஸ்கிரீன் டைம் அதிகம்) மனோரமாவின் டிராக்டரை நடிகர் திலகம் ரிப்பேரை சரி செய்து தர அவருக்கு கூலியாக மனோரமா 30 ரூபாய் கொடுப்பார். குழந்தைகளுக்கு ஜாங்கிரியும் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பும் நடிகர் திலகம் வாங்கி கொண்டு வர ஆசையோடு சாப்பிடும் குழந்தையின் கையிலிருந்து பறித்து கீழே வீசும் சௌகார், ஜெயகௌசல்யாவிடம் அரிசி பருப்பையும் தூக்கி எறிய சொல்ல அவர் அப்படியே செய்வார். நடிகர் திலகம் ஏதும் பேசாமல் விலகி நடக்க கீழே விழுந்த ஜாங்கிரியை குழந்தை பொறுக்கி எடுத்து சாப்பிட முயற்சிக்க சௌகார் அந்த பெண்ணை அடித்து எங்கியாவது போய் செத்து தொலை என ஆத்திரத்தில் கத்த அந்த குழந்தை அழுது கொண்டே ஆற்று பக்கம் போவதை பார்த்து நடிகர் திலகம் நிறுத்தி அந்த பொண்ணை கூட்டிக் கொண்டு போய் சாப்பிட வாங்கி கொடுப்பார். அவளின் அண்ணனையும் வரவழைத்து சாப்பிட கொடுக்க முதலில் மறுக்கும் அந்த சிறுவனிடம் தனது மனதில் இருப்பதை நடிகர் திலகம் ஆற்றாமையோடு வெளிப்படுத்த (நான் படிக்காதவன்ப்பா, எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலே. லாரியில் பாரத்தை ஏத்தினா அது தாங்கும். ஆனா பாவத்தை மனசில் ஏத்தின்னா என்னாலே தாங்க முடியாதுப்பா - ஏ எல் நாராயணன்) அந்த பையனும் சாப்பிடுவான்.
    இப்படி இருக்க ஒரு நாள் காலையில் தனது இரு குழந்தைகளை காணவில்லை என்று சௌகார் பதற அனைவரும் சென்று பார்த்தால் வயலில் ஏரில் ஒரு மாட்டை பூட்டி மற்றொரு பக்கம் தான் நின்று நடிகர் திலகம் அந்த குழந்தைகளின் உதவியோடு நிலத்தை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பார். அது சரியாக வராது. சுப்பையா நடிகர் திலகத்தை கண்டபடி திட்டுவார். குடிகார பயலே என்று இரண்டு முறை சொல்ல நடிகர் திலகம் வெகுவாக கோபப்படுவார். (உன் காசிலேயே குடிச்சேன்? நான் சம்பாதிக்கிறேன் குடிப்பேன். ஆடுவேன் பாடுவேன். அந்த கோபத்தை அருமையாக வெளிப்படுத்துவார்). கிராமத்தில் ஒரு சாராய கடைக்கு முன்னால் நடிகர் திலகம் நின்று கொண்டிருக்க ஒரு பெண் தனது கணவனிடம் குடிக்காதே என்று கெஞ்ச நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்னிக்கு மட்டும் என்று பதில் சொல்ல நடிகர் திலகம் ஒரு பஞ்ச் அடிப்பார். தெருவுக்கு நாலு சாராய கடையை திறந்து வச்சிட்டு குடிக்காதே குடிக்காதேன்னா எவன் குடிக்காமா இருப்பான்? செம கைதட்டல் வாங்கிய வசனம் அது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல். கவியரசர் தனது அனுபவம், தத்துவ விசாரம் இவற்றின் துணையோடு அவரது கைவண்ணம் அனைத்தையும் காட்டியிருப்பார்.
    முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
    மறு வாழ்வு வாழ மறு வீடு
    இடைக்கால பாதை மணல் மேடு
    எது வந்தபோதும் அவனோடு
    கடைசி வரி வரும்போது நடிகர் திலகம் கையை மேலே தூக்கி காண்பிக்க கிளாப்ஸ். இந்த பாடலிலும் எம் எஸ் வி மற்றும் டி எம் எஸ் அருமையாக பங்களித்திருப்பார்கள். சரணம் முடிந்து மீண்டும் அனுபல்லவியான போதை வந்தபோது புத்தி இல்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே என்ற வரிகளை டி எம் எஸ் அவ்வளவு உருக்கமாக பாடியிருப்பார். இரண்டாவது சரணத்தில் ஏழைகளின் வாழ்வு இப்படியே இருக்கிறதே நீயும் அதில் விளையாடுகிறாயே என்ற தார்மீக கோபத்தை கவியரசர் காண்பித்திருப்பார்.
    பாடல் முடிந்து அவர் கோவிலில் இருக்கும் தெய்வத்தின் சிலை முன் நின்று பேசுவது படத்தின் ஹைலைட்டான காட்சிகளில் ஒன்று. உன்னை ஏன் ஆத்தங்கரையிலும் குளத்தங்கரையிலும் வச்சிருக்காங்க தெரியுமா என்ற அந்த கிண்டல், உலகத்திலே இந்த மாதிரியெல்லாம் நடக்குதுங்கிற விரக்தி, என் லைசென்ஸை பறிச்சே , என் லாரியை பறிச்சே உன்னால நான் குடிக்கறதை மட்டும் தடுக்க முடியாது. ஏன் தெரியுமா? உனக்கு இருக்கிறதை விட இதுக்கு இங்கே கடை ஜாஸ்தி என்ற அரசியல் நக்கல் பிரமாதப்படுத்தியிருப்பார். அந்த நேரத்தில்தான் கீழே ஜெயகௌசல்யாவும் அவரை காதலிக்கும் ஒரு இளைஞனும் பேசுவதை கேட்பார். வரதட்சணை கொடுக்க முடியாததை பற்றி பேச்சு வரும். வயல் விளைஞ்சு அறுவடை நடந்து நெல்லு வித்துதான் பணம் தரேன் என்று எங்க அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் இப்போ அவரே போன பிறகு எங்கே வயல் விளைஞ்சு அறுவடை செய்து பணத்தை கொடுக்கிறது என்று ஜெயகௌஸல்யா வருத்தத்துடன் சொல்லிவிட்டு போக பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு நடிகர் திலகம் கடைசியிலே என் பாட்டிலையும் பறிச்சுட்டியே என்பார்.
    அடுத்து டிராக்டரை வைத்து நடிகர் திலகம் நிலத்தை உழுது கொண்டிருக்க மனோரமா இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் ஊர் ஜனங்களை கூட்டி ஓடி வருவார். என்னை கேட்காம எப்படி என் டிராக்டரை எடுக்க போச்சு என்று கேட்க பாலாஜியும் ராஜா, நீ செஞ்சது தப்பு என்று சொல்ல மனோரமா ட்ராக்டர் பயன்பாட்டிற்கு கூலி கேட்க பணம் இல்லையே என்று நடிகர் திலகம் சொல்ல நான் தருகிறேன் என்று பாலாஜி பணம் கொடுப்பார். உன் உழைப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணம்தான் இது என்று சொல்லிவிட்டு செல்வார். ஏற்கனவே நிலத்தின் மூலையில் இருக்கும் புளிய மரம் பற்றியும் அதில் பேய் இருப்பதாகவும் மனோரமா பேச்சு வாக்கில் சொல்லியிருக்க மீண்டும் அதை பற்றி பேச்சு வந்ததும் நடிகர் திலகம் விவரம் கேட்க அந்த புளிய மரத்தில் ஒரு மோகினி பேய் குடியிருப்பதாகவும் ராத்திரி நேரத்தில் நடமாடும் என மனோரமா சொல்ல சரி நான் பார்க்கிறேன் என்பார். நிலத்தை உழுத பின்னர் சுப்பையா நடிகர் திலகத்தின் மனதை புரிந்து கொண்டிருப்பார் தனது மனைவி காந்திமதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம்ம நிலம். அவன் இப்போ உழுறான். நாம ஆள் வச்சு வேலை வாங்கினா கூலி கொடுக்கிறதில்லையா அது மாதிரிதான் இதுவும். நாமா வளர்கிற நாய்க்கு சோறு வைகோறோமில்லே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நடிகர் திலகம் வர பேச்சை நிறுத்தி விடுவார். ஏன் நிறுத்திடீங்க என்று காந்திமதி கேட்க நாய் வந்திருக்குமா என்று நடிகர் திலகம் பதில் சொல்லுவார். அரங்கில் குறிப்பாக பெண்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அவருக்கு கொடுக்கும் சாப்பாடை அவர்கள் வீடு நாய் கவ்வி எடுத்து கவிழ்த்து விடும். விரக்தியோடு சிரிக்கும் நடிகர் திலகம் சுப்பையாவிடம் சென்று புளிய மரத்தை வெட்ட போறேன் என்று சொல்ல அவரும் தடுப்பார். அதை புறக்கணித்து இரவு நேரத்தில் நடிகர் திலகம் அங்கு வர ஜல் ஜல் என்ற சதங்கை சத்தமும் வெள்ளை உடை அணிந்த கால்களும் நடந்து வருவதை பார்த்து நடிகர் திலகம் பதுங்கி பக்கத்தில் வரும்போது பாய்ந்து பிடித்தால் ஜெயலலிதா. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர்தான் நாயகி வருகை. தனது குடிகார தாத்தாவிற்கு பயந்துதான் பணத்தை இங்கே மரத்தின் பொந்தில் வைப்பதாகவும் அதை யாரும் எடுத்து கொண்டு போய்விட கூடாது என்பதற்காகவே மோகினி பேய் என்று கதை கட்டியதையும் ஜெயா ஒப்புக் கொள்ள பணத்தை எடுத்து கொண்டு ஓடி விடுமாறு நடிகர் திலகம் சொல்ல அதே போல் அவர் செய்ய நடிகர் திலகம் மரத்தை வெட்டுவார். [இந்த காட்சியில் நடிகர் திலகம் ஜெயா interaction ரசகரமாக இருக்கும். உன் பேர் என்ன என்று ஜெயா கேட்க வேதாளம் என்று நடிகர் திலகம் பதில் சொல்வதும் தெருவில் வித்தை காட்டும் ஆட்கள் பேசுவது போல் வா இந்த பக்கம், வந்தேன் என்பதெல்லாம் ரசிக்கும்படியாக சிவிஆர் எடுத்திருப்பார்]
    மறுநாள் காலையில் ஊர் பொது மக்கள் வந்து பார்க்கும்போது மரம் வெட்டுப்பட்டு கிடைக்க அதன் அடியில் நடிகர் திலகம் படுத்து தூங்கி கொண்டிரு[ப்பார். அதை பார்த்துவிட்டு ஊர் மக்கள் தவறாக புரிந்து கொள்ள சௌகாரின் சின்ன பெண் மட்டும் தைரியமாக அவர் பக்கத்தில் சென்று கூப்பிட நடிகர் திலகம் கண் விழித்து பார்ப்பதை பார்த்தவுடன் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். வீட்டிற்கு குழந்தையை தோளில் தூக்கி செல்ல சௌகார் பார்த்துவிட்டு குழந்தையை சத்தம் போட அது அழுது கொண்டே போகும். தண்ணி எடுத்து குடிக்கும் நடிகர் திலகத்திடம் ஏன்ப்பா தண்ணி குடிக்கிறே? சாப்பிடலியா என்று கேட்கும் சுப்பையாவிடம் நெஞ்சு எரியுது அதான் என்று சொல்லிவிட்டு பேசுவார் நடிகர் திலகம். உங்க குடுமபத்தை காப்பாத்தத்தான் அரசாங்கம் என்னை அனுப்பிச்சிருக்கு உங்க மருமக வேலைக்கு போறது நியாயமா என்று கேட்கும்போது காந்திமதி இவன் யாருங்க நம்ம குடும்பத்திலே தலையிட என்று பேச அம்மா உங்களுக்கு கண்ணுதான் இவ்ல்லைன்னு வருத்தப்பட்டேன். ஆனா இதயமும் இல்லைன்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன் என்று போவார். தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
    சலூனில் ஷேவ் செய்து கொண்டிருக்கும்போது மோகினி பேய் பற்றி முடி திருத்துபவர் கேட்க நடிகர் திலகம் அவரை மிரட்டுவதற்காக அள்ளி விட பயத்தில் அவர் நடிகர் திலகத்தின் ஒரு பக்க மீசையை வழித்துவிட வேறு வழியில்லாமல் மீசை முழுவதையும் எடுத்துவிட்டு வெளியே வர, சௌகாரின் சின்ன பெண் அவரை அடையாளம் தெரியாமல் எங்க கொலைகார மாமா எங்கே என்று கேட்க, நாந்தாம்மா என்று சொல்ல தியேட்டரில் சிரிப்பு. பயாஸ்கோப் பார்க்க காசு கேட்கிறாங்க என்று சொல்ல உன்கிட்டே யார் கேட்டாங்க, வா என்னோட என்று நடிகர் திலகம் அழைத்து போக அங்கே பயாஸ்கோப்பில் ஜெயா பாட்டு பாடி கொண்டே ஆடுவார். ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்ன பொண்ணு என்ற பிரபலமான பாடல். நடுவில் நடிகர் திலகம் வந்து சேர அவரின் மீசை இல்லாத முகத்தை பார்த்து ஜெயா கிண்டல் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் திலகம் பஞ்ச் அடிக்க (அடக்கம் இல்லாத பொண்ணுக்கு பேரென்ன? பிசாசு) மீண்டும் பாடல் தொடரும்.
    வங்காளத்தில் முன்னே போகும் சேனை பாருங்க
    இந்திரா காந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
    வங்க தேசப்போரில் நமது படைகள் செல்வதையும் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் இந்திரா பேசுவதையும் ஸ்டில் போட்டோக்களாக திரையில் தோன்ற இதற்கு அமைதியாக இருந்த அரங்கம் அடுத்த வரியான
    காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க (பெருந்தலைவர் பேசுவதையும் நடிகர் திலகத்தின் கோவை மாநாட்டு பிறந்தநாள் கூட்டத்தையும் காட்டுவார்கள்) அப்படியே ஆர்ப்பரித்தது என்றால் அதற்கு அடுத்த வரியில் கர்ம வீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க என்ற வரியின்போது கோவை மாநாட்டு மேடையில் பெருந்தலைவர் அமர்ந்திருக்க அவரை திரும்பி பார்த்து நடிகர் திலகம் மைக்கில் பேசும் ஸ்டில் காட்டப்பட்டபோது அந்த ஆர்ப்பரிப்பு அலையாக மாறியது. அந்த இரண்டு வரிகளும் மீண்டும் ஒலிக்க ஜெயா இரண்டாவது வரியில் சிவாஜி பாருங்க என்று வரும்போது நடிகர் திலகத்தின் பக்கத்தில் வந்து அவரை கையால் விலாவில் இடிக்க மீண்டும் ஆரவாரம். அடுத்த சரணத்தில் எம் எல் ஏ பற்றியம் அவர்கள் அடிக்கடி கட்சி மாறுவது பற்றியும் கிண்டல் வரிகள் வர நடிகர் திலகம் கண்ணடிப்பார். அதற்கும் அலப்பறை. மொத்தத்தில் அந்த பாடல் செம மாஸ் என்று இப்போது அடிபடும் வழக்கு மொழிக்கு அன்றே உதாரணமாக இருந்தது.
    மனோரமாவிடம் ஜெயா வந்து நடிகர் திலகம் பற்றி கேட்பது ( அந்த ஆளுடைய உண்மையான பேர் என்ன?) மனோரமா ஜெயா பற்றி தெரிந்து கொண்டதை சொல்வது, என்கிட்டே எல்லா விஷயமும் சொல்லிடும் என்பது, அதை கேட்டு முதலில் ஜெயா அதிர்ச்சி அடைவது, தொடர்ந்து நடிகர் திலகம் மனோரமாவை காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் சந்தோஷப்படுவது என போகும் அந்த காட்சியின் தொடர்ச்சியாக ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் என்னை பற்றி அடிக்கடி விசாரிக்கிறியாமே என்ன விஷயம் என்று சீண்டுவது. குளித்து முடித்து தாவணி அணிந்து வரும் ஜெயாவிடம் புது மாடல் பென்ஸ் லாரி மாதிரி இருக்கியே என்பது, என்னை பார்த்துட்டு வீட்டிற்கு போனியே தூக்கம் வந்துச்சா என்று கேட்பது, இவை படத்தின் சில ரிலாக்ஸான நிமிடங்கள்.
    ஜெயகௌசல்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் பேசி வைத்திருந்த இடத்திலிருந்து ஆட்கள் வர கல்யாணத்திற்கு தரேன்னு சொன்ன பணம் எங்கே என்று கேட்க 15 நாட்கள் டைம் கேட்பார் சௌகார். மனோகரிடம் வாசு கூட்டி போக சௌகார் தங்கள் நிலத்தை அடமானமாக தருவதாக ஒப்பு கொள்வார். இதை பற்றி மனோரமாவிடம் பேசும் நடிகர் திலகத்திடம், மனோகர் இது போன்ற நிலங்களை அடமானம் வாங்கும்போது பாத்திரத்தில் அடமானம் என்ற வார்த்தைக்கு பதிலாக கிரயம் என்று எழுதி கைநாட்டு வாங்கி விடுவார் என்றும், படிக்க தெரியாத பெரும்பாலானோர் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலே கைநாட்டு வைத்து மாட்டிக் கொள்வார்கள் என்று சொல்ல மறுநாள் சௌகார் வீட்டிற்கு வரும் மனோகரும் வாசுவும் சுப்பையாவிடம் கைநாட்டு வாங்கும் நேரத்தில் நடிகர் திலகம் அதை தடுத்து கிழித்து போட்டுவிட சௌகாரும் சுப்பையாவும் கோபப்படுவார்கள். வாசு அந்த நேரம் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் பற்றி தப்பாக பேச நடிகர் திலகம் வாசுவை அடி வெளுப்பார். ஜெயகௌசல்யாவின் கல்யாணத்திற்கு நான் பொறுப்பு என்பார். தியேட்டரில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
    மணமகன் வீட்டிற்கு நடிகர் திலகம் போக அங்கே மனோகரும் வாசுவும் இருப்பதை பார்த்து மறைந்து நின்று கவனிக்க அந்த பையனுக்கு மனோகர் வீட்டில் சம்பந்தம் பேசி முடிவு செய்வது தெரிய வரும். அவர்கள் போன பிறகு மணமகன் அப்பாவோடு வாக்குவாதம் செய்வார் நடிகர் திலகம் ஆனால் அவர் ஒப்பு கொள்ள மாட்டார். வேதனையோடு திரும்பும் நேரம் மணமகன் நடிகர் திலகத்திடம் கமலாவிடம் என்ன மன்னிக்க சொல்லுங்க என்று கேட்க பளார் என்று ஒரு அறை விடுவார் நடிகர் திலகம். போன காரியம் என்ன ஆச்சு என்று கேட்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் நடந்ததை சொல்ல ஜெயாவும் மனோரமாவும் கல்யாண வீட்டிற்கு செல்வார்கள். பயாஸ்கோப் காட்டுவது போல் பாடல் (ஓடுது பார் நல்ல படம் பாடலே மீண்டும் வேறு வரிகளில்) அதில் மணமகனையும் அவர் தந்தையையும் செமையாக கிண்டல் செய்து பாட மணமகனின் தந்தை கோபப்பட்டு இவர்களை வெளியே போக சொல்லி விடுவார். அன்றைய இரவே மணமகன் இவர்கள் வீடு தேடி வர ஜெயகௌசல்யாவையும் மணமகனையும் இரவோடு இரவாக கோவிலுக்கு கூட்டி சென்று கல்யாணத்தை நடத்துவார் நடிகர் திலகம்.
    விஷயம் தெரிந்து மணமகன் தந்தை ஆட்களோடு வந்து விட கோவில் கதவை அடைத்து யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி நடிகர் திலகம் தடுக்க அவர்கள் நடிகர் திலகத்தை சரமாரியாக தாக்க அவர் அத்தனையும் தாங்கி கொண்டு நிற்பார். அங்கே வரும் பாலாஜி அனைவரையும் தடுத்து நிறுத்த கல்யாணம் முடிந்து தம்பதியர் இருவரும் கதவை திறந்து வெளியே வந்து மணமகன் என்னை யாரும் கடத்தவில்லை, என் சுய விருப்பத்தின் பேரில்தான் நான் கமலாவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வருவார் நடிகர் திலகம். ஆட்கள் தாக்கியதில் தலையில் ரத்தம் வர அதற்கு கட்டு போட்டிருப்பார் நடிகர் திலகம். முதன் முறையாக காந்திமதி நடிகர் திலகத்திடம் அன்பாக பேசி மன்னிப்பு கேட்பார். அப்போதும் சௌகாரின் மனம் இளகாது.
    இடையில் மனோரமா ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்க நடிகர் திலகம் வருவார். அவரை பார்த்து மனோரமா பெருமூச்சு விட்டு விட்டு போக ஏன் இவ இப்படி இருக்கா என்று நடிகர் திலகம் கேட்க இது புரியலையா என்பார் ஜெயா. உனக்கு தெரியுமா என்று கேட்க எங்க ஊர் கொட்டகையில நான் பாத்திருக்கேனே இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் நாம் இருவர் நமக்கு இருவர் என்று ஜெயா சொல்ல அது குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம். நீ இங்கிலீஸ் படம் பார்த்திருக்கியா என்று அருகில் அமரும் நடிகர் திலகம் அது கிளப் படம். அதாவது கிளப்புற படம். அதில் நாயகனும் நாயகியும் என்று பேசியவாறே ஜெயாவை அணைத்து முன்னேறி செல்ல முயற்சிக்க சில சிறுவர்கள் கூடி நின்று சிரிக்க அவர்களை விரட்டுவார் நடிகர் திலகம். மீண்டும் பக்கத்தில் வந்து இங்கிலீஸ் படம் மறுபடியும் பார்க்கலாமா என்று கேட்பதும் ஜெயா ம்ம்ம் என்று சொல்வதும் இளமை குறும்பு. ஒரு டூயட் வரும் என்று எதிர்பார்க்க அது கடைசி வரை வராது. இதை தொடர்ந்து ஜெயாவின் வீடு, அவரின் தாத்தா ஆகியோர் காட்டப்பட்டு அவர் குடிக்கு அடிமையாக இருப்பதும் வரும்.
    இதற்கிடையில் ஊரிலிருக்கும் நிலங்களையெல்லாம் மனோகர் தந்திரமாக பறிப்பது பற்றி மனோரமா ஊர் ஆட்களை கூட்டி வந்து நடிகர் திலகத்திடம் முறையிட கலெக்டரை போய் பார்க்கலாம் என்று அனைவரும் கிளம்ப அங்கே கலெக்ட்ராக மேஜர் (நீதிபதி எப்படி மாவட்ட ஆட்சி தலைவராக முடியும் என்ற கேள்வி எழும்) அவரிடம் முறையிட ஆவண செய்வதாக மேஜர் உறுதியளிப்பார். இந்த காட்சியில் difficulty என்ற வார்த்தையையும் என் friend என்று நடிகர் திலகம் சொல்வதும் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். தாத்தாவின் குடிப்பழக்கத்தை பற்றி ஜெயா வருத்தப்பட்டு பேச நடிகர் திலகம் ஆறுதல் சொல்லுவார். நானும் குடிச்சிட்டிருந்தேன். இப்போ முழுசா நிறுத்திட்டேன் என்று பேசிக்கொண்டிருக்க திருமணத்திற்கு பிறகு ஜெயகௌசல்யாவும் அவரது கணவரும் ஊருக்கு குதிரை வண்டியில் வர நடிகர் திலகத்தை பார்த்து வண்டியை நிறுத்தி பேசுவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு புதிய சட்டையை ஜெயகௌஸல்யா கொடுக்க அவர் மறுப்பார். அவர் அணிந்திருக்கும் சட்டை தோள்பட்டை அருகே கிழிந்திருப்பதை காட்டி புது சட்டையை கொடுக்க அங்கே வைத்தே சட்டையை மாற்றிக்கொண்டு (வெள்ளை கலர் ஜிப்பா) அவர்களையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வர அனைவரும் சந்தோஷப்படுவார்கள். கொஞ்சம் இரும்மா இதோ வந்துடறேன் என்று நடிகர் திலகம் நேராக பாலாஜியிடம் போவார். கல்யாணத்திற்கு அப்புறம் முதல் தடவையா வந்திருக்காங்க. கல்யாணத்திற்கே நானும் ஒண்ணும் பண்ணலை, என் சம்பளத்திலிருந்து கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா என்று கேட்க பாலாஜி 100 ரூபாய் எடுத்து கொடுப்பார். என் சம்பளத்தை விட அதிகமா கொடுக்கிறீங்களே என கேட்கும் நடிகர் திலகத்திடம் பரவாயில்லை. அறுவடை முடிஞ்சவுடன் பணத்தை கொடு என்பார் பாலாஜி. அது என் நிலம் இல்லையே அய்யா என சொல்ல நீ உழைச்சிருக்கேல, அதுக்கு கூலி கிடைக்கணுமில்லே என்று பாலாஜி வழி சொல்ல உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கி வார்த்தை வராமல் சல்யூட் அடிப்பார் நடிகர் திலகம். பயங்கரமான கைதட்டல் விழுந்தது அந்த காட்சிக்கு. புடவையும் மணமகனுக்கு வேட்டியும் வாங்கி கொண்டு கொடுப்பார்.
    மறுநாள் அறுவடைக்கு தயாராகி விட்டார்கள் என்று வாசு சொல்ல அறுவடை நடந்தால்தானே என்று மனோகர் சிரிக்க அடுத்த காட்சி எங்களது பூமி காக்க வந்த சாமி பாடல் .வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி, சிவப்பு துப்பட்டாவில் தூள் கிளம்புவார் நடிகர் திலகம். முதன் முதலாக கோவை சௌந்தரராஜன் நடிகர் திலகத்திற்க்காக பின்னணி பாடிய பாடல். நடிகர் திலகத்தை வாழ்த்தி பாடும் வரிகளுக்கெல்லாம் தியேட்டரில் செம அலப்பறை. பாடல் முடிவில் வயலுக்கு தீ வைத்து விட்டதாக ஒருவர் வந்து சொல்ல அனைவரும் அங்கு ஓட பயிர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாக யாராலும் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார்கள். நடிகர் திலகம் பாலாஜியிடம் சென்று மனோகரை கைது செய்ய சொல்ல எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்வது என அவர் கேட்க நடிகர் திலகம் கோபப்படுவார். அவ்வளவு உழைப்பும் வீணாகி விட்டதே என்று கலங்குவார்.மறுபடியும் எப்போ நிலத்தை உழுது பயிரிட்டு செய்ய முடியும் என்று திகைப்பாக பேசுவார். வருத்தத்தில் இருக்கும் அவரை ஜெயா வீட்டிற்கு சாப்பிட கூப்பிட அங்கே அவரை ஜெயாவின் தாத்தா அவமானப்படுத்திவிடுவார். கோபித்து கொண்டு நடிகர் திலகம் வெளியேற ஜெயா தாத்தாவை கண்டபடி திட்டி விடுவார். வயல் தீயினால் எரிந்து போனது நடிகர் திலகத்தினால்தான் இனிமேலும் அவர் அந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்று சௌகார் சத்தம் போட வேண்டாம் நானே போகிறேன் என்று நடிகர் திலகம் வெளியேறுவார். அந்நேரம் நடிகர் திலகத்திடம் வந்து மன்னிப்பு கேட்கும் ஜெயாவின் தாத்தா அவரை வீட்டிற்கு வரும்படி கெஞ்சுவார். சரி வரேன் என்பார்.
    மனோகர் வாசுவை ஜெயாவின் தாத்தாவிடம் அனுப்பி தனது வீட்டில் நடனம் ஆட சொல்ல தாத்தா சத்தம் போட்டு வாசுவை அடிக்க மனோகரின் ஆட்கள் தாத்தாவை கொன்று விடுவார்கள். அந்நேரம் ஜெயா வர அவரையும் மயக்கப்படுத்தி தூக்கி செல்வதை சௌகார் பார்த்து விடுவார். சிறிது நேரம் சென்று அங்கே வரும் நடிகர் திலகம் தாத்தா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகி நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்று சொல்ல, பாலாஜி அவரையே சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைப்பர். ஜெயா கோடௌனில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளும் சௌகார் அங்கே செல்ல மனோகரின் ஆட்கள் தடுப்பார்கள். மனோகர்தான் அனுப்பினார் என்று சௌகார் சொல்லி உள்ளே சென்று தனது உடைகளை ஜெயாவிற்கு தந்து அவர் உடைகளை தான் அணிந்து தப்பிக்க வைப்பார். வெளியில் ஓடி வரும் ஜெயாவை வழியில் பார்க்கும் மனோகர் சௌகார் என நினைத்து தனது ஆட்களை அவரை பிடிக்க அனுப்பி விட்டு கோடௌனில் வந்து பார்க்கும்போது சௌகார் அங்கு இருக்க அவரை பலவந்தப்படுத்தும் முயற்சியில் இறங்குவார். மனோகரின் ஆட்களிடமிருந்து தப்பித்து வரும் ஜெயாவும் போலிஸிடமிருந்து மறைந்து ஓடி வரும் நடிகர் திலகமும் வழியில் பார்த்து கொள்ள விஷயம் புரிந்து நடிகர் திலகம் கோடௌனிற்கு வர பூட்டியிருக்கும் கதவை லாரியை வைத்து மோதி உடைத்து உள்ளே நுழைந்து சண்டையிடுவார். அதுவும் இறைச்சி பதனிடும் கோடௌனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் பார்களின் மீது ஏறி உருண்டு வழுக்கி அருமையாக படமாக்கியிருப்பார்கள். தியேட்டரில் ரசிகர்களுக்கு செம விருந்து. மனோகரை கொல்ல நடிகர் திலகம் முயற்சிக்க தம்பி வேண்டாம் என்று சௌகார் சொல்ல என்னை ஏற்றுக் கொண்டீர்களா என்று நடிகர் திலகம் நெகிழ அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை தாக்க வரும் மனோகரை துப்பாக்கியினால் சுட்டு பாலாஜி கைது செய்வார்.
    கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என நினைத்திருக்கையில் ஒரு tail end வரும். சௌகார் வீட்டில் முதன் முறையாக நடிகர் திலகத்திற்கு சாப்பிட கொடுக்க அந்நேரம் அங்கே வரும் பாலாஜி உன்னுடைய நன்னடத்தையினாலே உன்னை தண்டனை காலம் முடியறத்துக்குள்ளே ரிலீஸ் பண்ணிட்டாங்க என்று கூறி அவரின் லைசென்ஸை திருப்பி கொடுப்பார். இனிமே இங்கே இருக்க வேண்டாம், உன்னை கொண்டு போய் டவுனிலே விட்ருறேன் என்பார். அனைவரும் போக வேண்டாம் என்று சொல்ல நடிகர் திலகம் நேரே மேஜர் வீட்டிற்கு சென்று இது என் வீடு, என் குடும்பம். நான் எங்கேயும் வர மாட்டேன், இங்கேதான் இருக்க போறேன் என்று சொல்ல மேஜர் புன்னைகையிலே சம்மதம் சொல்ல ஊர் திரும்பும் நடிகர் திலகத்திற்கு ஊர்க்காரர்கள் வரவேற்பு கொடுப்பது, சௌகாரின் குழந்தைகள் இருவரும் கொலைகார மாமாவை அன்போடு அணைப்பது, சுப்பையா காந்திமதி சௌகார் மனோரமா நடிகர் திலகத்தை வரவேற்பது, ஜெயாவும் நடிகர் திலகமும் அத்தேரி கழுத என மாறி மாறி சொல்லி அணைத்து கொள்வது இப்படி நான்கு விதமான காட்சிகளும் ஒரே பிரேமில் வர வணக்கம்.
    படத்தின் ரிப்போர்ட், வரவேற்பு, வெற்றி சாதனைகள் அது அடுத்த வாரம்.
    (தொடரும்)
    அன்புடன்

    siva-496.jpg

    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #882
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒரு குரலின் அரை நூற்றாண்டு வரலாறு...
    அவர் குரலில் எப்போதும் கம்பீரம் மிளிரும்.ஒவ்வொரு கால கட்டமாக
    அந்தக் குரலில் என்னவெல்லாம் மாற்றங்கள் உருவாகின.
    நாடக வேஷங்களும் அதற்கேற்ற குரல்களையும் சிறு வயதில் இருந்தே தீவிரமாக செய்து வரும் நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்பத்தில் தடுமாற்றங்கள் வரலாம்.அதையெல்லாம் கவனமாக விலக்கி பெற்ற வெற்றிகள் தான் என்ன என்ன? பெரும் அதிசயமாகவே மாற்றிக் காட்டியவரின் நிகழ்வுகளில் இருந்து .....
    பராசக்தியில் இளமையும் இல்லாத முதிர்வும் இல்லாத குரல்.அடுத்து வந்த
    மனோகரா, அந்தநாள், தூக்குதூக்கியில் கொஞ்சம் இளமை கூடியது போல் குரல்கள்.உத்த புத்திரன் வரை இது தொடர்ந்தன.பதிபக்தியில் உடல்வாகில் சிறிது மாற்றம்.சிறிது பூசியது போன்று உடலமைப்பு.குரலிலும் சிறிது மாற்றம்.
    இந்த வகையிலே நான் சொல்லும் ரகசியம் வரை அமைந்திருந்தன.ஆனால் அடுத்தபடத்திற்குள் என்ன மாயம் செய்தாரோ?
    வீரபாண்டிய கட்ட பொம்மனில் இருந்து சிம்மக்குரல் புறப்பட்டு விட்டது.ஆச்சர்யம் போல் பதிபக்தியில் அவருடைய உடலமைப்பும் கட்டபொம்மனில் அவருடைய உடலமைப்பும் வித்தியாசம் காட்டியது.
    அடுத்து பாகப்பிரிவினையில் அதற்கு முன் இல்லாத உடலமைப்பு.இப் படத்தில் குரல்
    இதற்கு முன்பு வந்த படங்களில் இருந்து வேறு விதமாய் இருந்தது.
    இதற்கு அடுத்ததாக வந்த இரும்புத்திரையில் இருந்து மருத நாட்டு வீரன் வரை இப்பாணி கையாளப் பட்டது.ஆனாலும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு தன் குரலில்
    பேசி வந்தார்.பாலும் பழத்தில் அதையே மென்மையாக பேசி ஆச்சர்யம் காட்டினார்.
    அடுத்து வந்த கப்பலோட்டிய தமிழனில்
    இன்னும் வசீகரம்.எப்படி இப்படியெல்லாம் என்ற வியப்புகளே நம்மை ஆட்கொள்கிறது.
    பார்த்தால் பசி தீரும் படத்திலே ராணுவ காட்சிகள் பகுதியில் ஒரு வகையாகவும், பின் பகுதியில் வேறு வகையாகவும் பேசியிருப்பார்.
    உடல்வாகு கூட பாகப்பிரிவினையில் இருந்து எல்லாம் உனக்காக வரை சிறிய சிறிய மாற்றங்களுடன் காட்சியளிப்பார்.
    பாலும் பழத்தில் இவைகளில் இருந்து சற்று மாறுபட்டு தோற்றம் தருவார்.தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கையிலே இவைகள் எல்லாம் எப்படி சாத்தியமாயின என்று வியப்பு தான் வருகிறது.நிச்சய தாம்பூலத்தில் பொதுவான குரலிலும், படித்தால் மட்டும் போதுமாவில் முரட்டுக் குரலிலும் நடித்திருப்பார்.நிச்சய தாம்பூலத்தில் இருந்து அன்னை இல்லம் வரை சிறிய மாற்றங்களுடன் பாத்திரத்திரத்திற்கேற்றவாறு பேசியிருப்பார்.
    அடுத்து கர்ணன்..
    உடல் வாகில் முந்தைய படங்களில் இருந்து வித்தியாசம் இல்லையெனினும் குரலில் தான் இடி இடித்தது போல் இருந்தது.இதற்கு முரணாக அடுத்ததான
    பச்சை விளக்கில் குரல் சாந்தமாய் காட்டியது.
    ஆண்டவன் கட்டளையிலும் இரு வித குரல்களில் பேசியிருப்பார்.முற்பகுதியில் ஒன்றுமாய் பிற்பகுதியில் வேறுமாயும் இருக்கும்.
    வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்தே குரலில் மிகுந்த கர்ஜனை சேர்ந்து கொண்டாலும் இடைப்பட்ட படங்களில் எல்லாம் அது தெரியாமல் பாத்திரங்களின் தன்மைக் கேற்றவாறு தன் குரலை மாற்றி மாற்றி பேசி குரலிலும் தனித்த நடிப்பை
    காட்டியவர்.
    புதிய பறவை..
    அந்த சிம்மக்குரலில் இருந்தா இப்படியொரு வெளிப்பாடு என்னும் ஆச்சர்யம் இதில்.மென்மையான காதல் சொல்லும்படம் என்பதால் அதற்கேற்ற குரலில் வித்தியாசமாய் பேசியிருப்பார்.சில காட்சிகள் தவிர்த்து சிம்மக்குரல் சிறு பூவாக மாறிய படம்.
    நவராத்திரி ..
    ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ஒருவரின் ஒன்பது குரல் .
    பின் தனித்துவமானதாய் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த திருவிளையாடல்.இதில் சிவனாக பிரமிக்க வைத்தாலும், விறகு வெட்டியின்
    பொருத்தமான பேச்சை தமிழறிந்தோர் வியக்காதோர் இருக்க முடியுமா ?
    இவைகளிலிருந்து விலகி மோட்டார் சுந்தரம் பிள்ளையின் சிறப்பான மாடுலேசனை மறக்க முடியுமா?
    சரஸ்வதி சபதத்தில் நாரதருக்கும், கவிஞருக்கும் இரு வேறு குரல்கள்.பின் வீரபாகுவின் கர்ஜனனையான குரலில் கந்தன் கருணையும். பின் நான்கு படங்களில் பொதுவான பாணியில்.நெஞ்சிருக்கும்வரை பேசும்தெய்வம் தங்கை பாலாடை .
    திருவருட் செல்வரில் அப்பரின் குரலோசை
    எதிலும் காட்டாதது.
    சிறிது தள்ளி தில்லானா மோகனாம்பாளில் வித்வானின் மோகனக்குரலில் பரவசப் படுத்தியிருப்பார்.எல்லாப் படங்களையும் எடுத்துச் சொல்ல இடம் போதாது என்பதினால் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
    எங்க ஊர் ரராஜாவில் ஆண்மைகுரல்,
    உயர்ந்த மனிதனில் மிடுக்கான குரல்,
    தெய்வமனில் மூவர்ண குரல்,
    சிவந்தமண்ணில் வீரக்குரல்,
    விளையாட்டுப் பிள்ளையின் வசீகர குரல்,
    வியட்நாம் வீட்டில் பிராமணர் பாஷையில்,
    சவாலே சமாளியில் முழக்க குரல்,
    அந்தோனியின் அட்டகாச குரல்,
    மூக்கையாத் தேவரின் பாரம்பர்ய மொழிக்குரல்,
    வசந்த மாளிகையில் காதல்மொழிக் குரல்,
    ராஜராஜ சோழனின் சரித்திரக் குரல்,
    ராஜபார்ட்டின் நவரசக் குரல்,
    சௌத்ரீயின் கடமைக் குரல்
    என்று ஒவ்வொரு குரலிலும் ஒரு ரசம்.
    ரசங்கள் ஒன்பது என்றாலும் இவர் குரல்களை எத்தனை ரசமாகக் கொள்வது?
    வரிசை கட்டி வந்த பட வரிசையில்,
    அந்தமான் காதலியில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது எனலாம்.அந்தக் குரலில்
    ஆண்மை முதிர்வும், கம்பீரம் இன்னும் சற்று கூடியும், அனுபவ அறிவுகள் கூடியும்
    இருந்தன..
    பின் வந்த சில படங்களில்,
    இளமைத் தோற்ற வேடங்களுக்கு
    அதை பின்பற்றாமல் இளமை துடிப்புடன் பேசி ஆச்சர்யப்படுத்தாமல் இல்லை.
    அண்ணண் ஒரு கோவில்,
    என்னைப் போல் ஒருவன்,
    தியாகம் படங்களை சொல்லலாம்.
    பராசக்தி ஓர் ஆச்சர்யம்.ஏனெனில் அதற்கு பின் வந்த சில படங்களில் ஒரு நளினமும்,
    வீரியமும் கலந்த குரல்களில் அவர் படங்கள் இருக்கும்.நாடகங்களில் ஸ்த்ரீபார்ட் உட்பட பல வேடங்களில் நடித்ததால் உண்டான மாற்றம் என்று சொல்லப்படுவதுண்டு.
    படங்களில் நடிக்கத் தொடங்கிய பின், நாடகங்களில் பெண் வேடங்களை அதிகம் செய்யாமலும் அவர் நடித்து வந்த நிலையில், காலங்கள் ஆக ஆக குரலில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதானிருந்தன.இந்தக் குரல் மாற்றங்கள் பேராண்மையாய் சிம்மக் குரலாக மெருகேறிக் கொண்டே இருந்தது.
    வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர்திலகத்தால் இப்போது பேச முடியுமா என்று சிலர் கேட்டதுண்டு.ஆனால் பின்னாட்களில் அவர் வாய் திறந்தாலே அது பெரும் கர்ஜனையாய் தானிருக்கும்.
    அதில் அனுபவங்களும் சேர்ந்தே இருக்கிறது.அவர் குரல் ஒவ்வொரு படத்திற்கும் கம்பீரத்தை சேர்த்துக் கொண்டே தான் இருந்தது.
    50 வருடங்களை கடந்த நிலையில் அவரின் திரிசூலம் மெகா ஜாலம்.
    ஒரு பாத்திரத்தின் தன்மையில் இருந்து ஒரு வார்த்தை கூட வேறு பாத்திரத்திற்கு பேசப்படாத வித்தியாசம் அது.
    வரிசைபட்டியலில் சிறிது கடந்தால் ,
    பின்,
    கல்தூணில் கவுண்டர் பாஷையிலும்,
    ஹிட்லர் உமாநாத்தில் வேறு விதமாகவும் பேசிய குரல்கள்.நடிகர்திலகம் இந்த வயதுகளில் செய்த வித்தியாசமான தொடர் அணுகுமுறையை செய்தவர்களும் இல்லை. செய்வதற்கும் யாருமில்லை.இருந்தாலும் செய்வார்கள் என்பதற்குமில்லை.நாமும் அவரோடு எவரையும் இணைத்து பேச வேண்டிய அவசியமும் இல்லை.
    நிறைய வித்தியாசமாயும், ஆச்சர்யப்படுத்தும் படி அவர் செய்த ரோல் என்பதை விட இப்படத்தின் குரலைச் சொல்லலாம்.
    அது,
    "முத்துக்கிருஷ்ணா "
    கருடா சௌக்கியமா?
    பின் வரிசை படங்களில் ,
    தீர்ப்பில் தோரணைக்குரல்,
    துணையில் நையாண்டி குரல்,
    பரீட்சைக்கு நேரமாச்சுவில் நைச்சிய குரல்,
    வெள்ளை ரோஜாவில் பாதிரியின் பாசக்குரல்,
    வாழ்க்கையில் சாதித்த குரல்,
    சிம்ம சொப்பனத்தில் சிம்மக்குரல்,
    படிக்காத பண்ணையாரின் அன்புக்குரல்,
    முதல் மரியாதையில் கிராமத்து குரல்,
    என்று நடிகர்திலகத்தின் குரல்
    காந்தமாய் நம் மனதை இழுக்கவே செய்தன.
    இக் காலகட்டத்தில் ஏற்பபட்ட உடல் நலக் குறைவு அவர் உடலை சற்று தெம்பிழுக்கச் செய்ததே ஒழிய குரலை சோர்வடைய வைக்கவில்லை.
    இறுதியாக ஒன்று ..
    "ஆனா விதை போட்டது நாந்தேன்
    இதெல்லாம் என்ன பெருமையா "
    சாதாரண வசனம்தான்.
    எந்தக் குரல் பேசியது என்பதில் அதன் புகழ்.
    மீண்டும் இறுதியாக ,
    என் ஆச ராசாவேவில் தெருக்கூத்து கலைஞர்களின் பெருமையை பேசும் குரலிலும் கம்பீரம் அமைதியாக வீற்றிருக்கும்.
    நன்றி
    செந்தில்வேல் சிவராஜ்..

    siva-501.jpg


    Thanks Senthilvel Sivaraj
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #883
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக சிவாஜி இருந்ததற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.
    பத்திரிகைக்காக நேர்காணல் செய்ய நடிகர் பிரபுவை அவர் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கச் சென்றேன். இடைவேளை நேரத்தில் எனக்கு பேட்டி கொடுத்தார். அங்கு ஒரேயொரு நாற்காலி மட்டும்தான் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டு பிரபு எனக்கு பேட்டி கொடுக்க, நான் அவர் பேசுவதை நின்று கொண்டே பதிவு செய்துகொண்டிருந்தேன். சற்றுநேரம் முன்புவரை பிரபு நடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பஞ்சத்திற்காகவோ, வறுமைக்காகவோ நடிகர் பிரபு நடிக்க வரவில்லை. ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி அவர் சிவாஜி கணேசனின் மகன். அந்த வாரம் பத்திரிகையில் அந்த பேட்டி வெளியானது. அதை படித்துவிட்டு பிரபு ஃபோன் செய்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அந்த பேட்டியில் 'அறையில் இருந்த ஒரே சேரில் அமர்ந்து கொண்டு பிரபு பேட்டி கொடுத்தார்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர் எனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக நான் அதை எழுதவில்லை. சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் அவ்வளவு சிரமப்பட்டு நடிப்பதை குறிப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன். சிவாஜி கணேசன் அந்தப்பேட்டியை படித்துவிட்டு பத்திரிகைக்காரனை உட்கார சொல்லாமல் நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த எனத் தன்னைத் திட்டியதாகக் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான்கூட அப்படி யோசிக்கவில்லை. ஆனால், அந்த மகாகலைஞன் அதை எந்த கோணத்தில் யோசித்திருக்கிறார் பாருங்கள். கிண்டலுக்காக சிவாஜி கணேசன் மீது நிறைய விஷயங்கள் இட்டுக்கட்டி சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னுடைய அனுபவத்தில் அவர் மகாநடிகர் மட்டுமல்ல; மிகச்சிறந்த மனிதரும்கூட -
    நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன்.


    Thanks Subbiah
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #884
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒரு திரைப்படத்தில், இரண்டு அல்லது மூன்று விநாடிகளுக்கும் குறைவான நேரமே வரக்கூடிய ஒரு விசயத்தைப் பற்றித்தான் இப்போது இங்கு நான் சொல்லப் போகிறேன்.
    ஆனால், அதற்கு முன்னர் நீளமான விளக்கம் ஒன்றைப் பார்த்து விட்டு, அதன் பின்னர் அந்த விசயத்துக்குப் போகலாம். ஏனென்றால், விளக்கம் புரிந்தால்தான் நான் சொல்லப் போகும் விசயத்தை உணர்ந்து ரசிக்க முடியும்.
    ஒரு திரைப்படம் படமாக்கப்படும் போது, கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொடர்ந்து கதை நகரும் வரிசைப்படி காட்சிகளைப் படமாக்க மாட்டார்கள்.
    படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகையர்களின் கால்சீட் கிடைப்பதைப் பொறுத்தும், படத்தின் ஷெட்யூல்கள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்தும், எந்த வரிசையிலும் இல்லாமல், காட்சிகள் சௌகரியத்துக்கேற்பப் படமாக்கப்படும்.
    படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் எடிட்டிங் டேபிளில் வைத்து, ஏற்கெனவே குறிக்கப்பட்ட திரைக்கதைப்படி காட்சிகள் தொகுத்து இணைக்கப்படும். இதுதான் திரைப்பட எடிட்டரின் வேலை. துண்டு துண்டாக எடுக்கப்பட்ட காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு முழுத் திரைப்படமாக உருவாக்கும் காரியகர்த்தா படத்தின் எடிட்டர்தான்.
    ஒவ்வொரு ஷாட் படமாக்கும்போதும் ஆரம்பத்தில் கிளாப் என்னும் கட்டையை அடிப்பதும் இதற்குத்தான். அந்த கிளாப் கட்டையில், படத்தின் பெயர், படமாக்கப்பட்ட தேதி, காட்சி எண், ஷாட் எண், மற்றும் அது எத்தனையாவது டேக் என்பது போன்ற விவரங்கள் சாக்பீஸில் எழுதப்பட்டிருக்கும். பின்னர் எடிட்டிங் செய்வதற்கு இந்த கிளாப் ஷாட்தான் மிகவும் உதவியாக இருக்கும். எத்தனையாவது ஷாட் ஓக்கே ஆனது என்ற விவரங்களும் குறிப்புகளாகத் தரப்படும்.
    சாதாரணமாக, ஒரு திரைப்படத்தில் சராசரியாக 60 - 65 காட்சிகள் ( சீன்கள்) இருப்பது வழக்கம். ஒரு காட்சி ( சீன் ) படமாக்கப்படும் போதும், அதை தொடர்ச்சியாக எடுத்து விடமாட்டார்கள். அதையும் பல ஷாட்டுகளாகப் பிரித்து ஷாட் பை ஷாட்தான் படம் பிடிப்பார்கள்.
    உதாரணத்துக்கு, 'ஊட்டி வரை உறவு' படத்தில் வரும் ' பூ மாலையில் ஓர் மல்லிகை' பாடலில் 33 ஷாட்டுகள் இருக்கும். ( ஒவ்வொரு ஷாட்டும் எத்தனை முறை எடுத்தார்கள் என்று தெரியாது. இயக்குநருக்கு அந்த ஷாட்டில் திருப்தி ஏற்படும் வரை, திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டே இருப்பார்.)
    அந்த ஷாட்களை கூட ஒரே நாளில் படம் எடுத்திருப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. காரணம், ஒவ்வொரு ஷாட்டுக்கும் காமிரா கோணங்கள் மாறக்கூடும். அதற்கேற்ப ஒளி அமைப்புகள் , காமிரா டிராலி போன்றவற்றை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். எனவே ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்கும் இடையில் கொஞ்ச நேரம் இடைவெளி கூட இருக்கும்.
    ஒரே காட்சியில் வரும் ஷாட்களை ஒரு நாளில் எடுத்து முடிக்க முடியாமல் போனால், சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாட்களில் கூட எடுப்பார்கள். அதில் ஏதும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் 'கன்டின்யுடி' என்ற விசயத்தை முக்கியமாகப் பார்த்துக் கொள்வார்கள்.
    அதாவது முந்தைய ஷாட்டில் நடித்த நடிக நடிகையர் அணிந்திருந்தது என்ன கலர் டிரஸ், செருப்பு, வாட்ச், தலையில் அணிந்த விக், நடிகை என்றால் பொட்டு, பூ, வளையல், தலை அலங்காரம், கைப் பை போன்ற விசயங்கள், காட்சி பகலா இரவா, இன்டோரா, அவுட்டோரா, படப்பிடிப்பு தளத்தில் என்னென்ன பர்னிச்சர்கள் இருந்தன... என்பது போன்ற சகல விசயங்களையும் குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த ஷாட் எடுக்கும் போது, முன்னர் எடுத்த ஷாட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் இப்போதும் அதே முறைப்படி இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.
    (கன்டின்யுடியில் சொதப்பி, படம் பார்க்கும் போது ரசிகர்கள் அதைக் கண்டு பிடித்து சிரித்த கதைகள் நிறைய உண்டு.. கன்டின்யுடி பார்ப்பது பெரும்பாலும் எதாவது ஒரு துணை இயக்குநரின் பொறுப்பு.. சில சமயங்களில் அவர்கள் அஜாக்கிரதையாகச் சொதப்பி விடுவது சகஜம்.)
    -----------------------------------------
    சரி. இந்த டெக்னிகல் விசயங்களைக் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ( இந்த விசயங்கள் ஏற்கெனவே நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.. அவர்கள் கடந்து போகவும்)
    இப்போது ஒரு படத்தில் வரும் ஒரு முழு சீனையும், வசனங்களுடன் பார்ப்போம்.
    ---------------------------------------------
    கொலைக் குற்றவாளியான, மைனர் எனப்படும் r.s. மனோகரை, போலிஸ் சூப்ரெண்டென்டென்ட் s.p சௌத்ரியான நடிகர் திலகம், அவரது அடியாட்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று ய, கைது செய்து வருவதுதான் முழுக்காட்சி.
    ------------------------------------------------
    படம் : தங்கப்பதக்கம்.
    நடிகர்கள் : நடிகர் திலகம், r.s. மனோகர் மற்றும் அவரது அடியாட்கள்.
    ----------------------------------------------
    காட்சி ஆரம்பத்தில், காமிராவுக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருக்கும் மனோகர், "அந்தப் பயலோட பொணத்தைப் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துங்கள்" என்பார்.
    அவரது அடியாள் ஒருவர், "எஜமான், s.p சௌத்ரி வாரண்டோட வரப்போறதா ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க.." என்று சொல்ல, காமிரா பக்கம் திரும்பும் மனோகர், "ஹஹ்ஹஹ்ஹா... அப்படியா? அவன் வந்தான்னா, உடனே தீர்த்துடக் கூடாது...அவனைப் பிடிச்சுக் கட்டி, தெருத்தெருவா நாயைப் போல இழுத்துட்டு வந்து, பங்களா வாசல்ல தள்ளுங்க.. அவனோட தலையைத் துண்டு போடற வேலையை நானே கவனிச்சுக்கறேன்." என்பார்..
    அடுத்த விநாடி, காக்கிப்பேண்டும், ஷூவும் அணிந்த இரண்டு கால்கள் மட்டும் இரண்டு முரடர்களை உதைத்து வீட்டுக்குள் தள்ள, மனோகரின் முன்பு வந்து அந்த இருவரும் விழுவர்.
    மனோகர், "யார்ராது ?" என்று திகைப்புடன் கேட்க, அவர்கள் காமிராவை நோக்கிக் கைகளைக் காட்ட, அங்கே sp சௌத்ரி, இரண்டு இடுப்பிலும் கை வைத்தபடி கம்பீரமாக நிற்பார்..
    " குட் மார்னிங்... என்ன மைனர்வாள் ! என் தலையைக் கேட்டீங்க.. நானே வந்திருக்கேன்...எடுத்துக்கறது" என்பார்..
    இனி அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலை மட்டும் பார்ப்போம்.
    மைனர் : "நான் யாருன்னு தெரியாம என்னோட விளையாடப் பாக்கறே"
    சௌத்ரி : "உங்க மாதிரி பெரிய மனுஷாள் கூட விளையாடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."
    மைனர் : " நான் நினைச்சா உன்னைக் குடும்பத்தோட வெட்டிப் புதைச்சுடுவேன்.."
    சௌத்ரி : "யாரு... என் குடும்பத்தையா ? ரொம்பக் கஷ்டம். இந்தியாவிலயே பேர் போன குடும்பம் என் குடும்பந்தான். என் கூட வா. என் குடும்பத்தாரை எல்லாம் உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்சி வெக்கறேன்."
    மைனர் : "டேய் முத்து..ஊரையே திரட்டிக் கொண்டு வந்து நிறுத்து.. நான் யாருங்கறதை இவர் தெரிஞ்சுக்கட்டும்.."
    சௌத்ரி : " சே... சே... நான் உன்னை இழுத்துட்டுப் போற அசிங்கமான காட்சியை ஊரே ஒன்னு சேர்ந்து வேடிக்கை பார்க்கனுமா என்ன ?"
    மைனர் : " என்னை நீ கூட்டிட்டுப்போகப் போறியா ? ஹஹ்ஹஹ்ஹா... என்ன தைரியம்டா உனக்கு ?"
    சௌத்ரி : "என்னடா செய்யறது ?"
    மைனர் : "ஏய்.."
    சௌத்ரி : " ஏய்... ஜாக்ரதை..நான் வரும்போது துப்பாக்கி கொண்டு வரலை. வெலங்கு கொண்டு வரலை. ஏன் தெரியுமா ? உன் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை. இப்ப உன் அங்கவஸ்திரத்தையே எடுத்து, உன் கையைப் பின்னாடி கட்டிக் கூட்டிட்டுப் போனா, நீ வேணான்னா சொல்லப் போற ? உன்னை மரியாதையாக் கூட்டிட்டுப் போய் ஜீப்ல ஏத்தாம, நாய் மாதிரித் தெருத் தெருவா இழுத்துட்டுப் போனா... நீ வருத்தப்படவா போற ? என்ன முழிக்கற ? என் கூட வந்துட்டன்னா, ஜாலியா ஜீப்ல போயிடலாம்... இல்லை என் கூட மோதிப் பார்க்கனும்னு நினைச்சேன்னா... அதுக்கும் நான் தயார். எப்படி வசதி ?"
    மைனர் : "ஹெ ஹெ ஹெ... இங்க பாருங்க சார்..."
    சௌத்ரி : "என்னாங்க சார்..?"
    மைனர் : "உங்களுக்கு எத்தனை லட்சம் வேணும்னாலும் அள்ளி அள்ளித் தர்றேன்...ஆயுசு பூரா நீங்க நிம்மதியா இருக்கலாம்.."
    சௌத்ரி : "எத்தனை லட்சம் கொடுப்பீங்க ?"
    மைனர் : "அஞ்சு லட்சம் தர்றேன்.."
    சௌத்ரி : " அஞ்சு லட்சம் ? யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்களே ?"
    மைனர் : " சத்தியமா சொல்ல மாட்டேன். இப்ப உங்களுக்கு என்ன வேணும் ?"
    சௌத்ரி : "இந்த அங்கவஸ்திரம் வேணும்.."
    மைனர் : " அங்கவஸ்திரமா ?"
    சௌத்ரி : " உங்க ஞாபகமா வெச்சுக்கத்தான் "
    இப்படிச் சொல்லியபடியே நொடிப்பொழுதில் அங்கவஸ்திரத்தால் மைனரின் கைகளைப் பின்புறம் மடக்கிக் கட்டுகிறார் சௌத்ரி...
    மைனர் : " டேய் முத்து, மாணிக்கம், வேலாயுதம்... எல்லாரும் வாங்கடா.."
    சௌத்ரி : "உங்கப்பன், சுப்பன், தாத்தா எல்லாரையும் கூப்பிடு... போடா " என்று சொல்லி மைனரைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து ஜீப்பில் ஏற்றி, கொண்டு செல்வார்.
    ஜீப்புக்குப் பின்னால் இரு அடியாட்கள் ஓடி வர, ஜீப்பை வழி மறித்து 14 அடியாட்கள் கையில் கம்புகளுடன் நிற்பர்.
    அடியாட்களில் ஒருவன் : "மரியாதையா மைனரை விடப் போறியா இல்லையா ?"
    சௌத்ரி : "என்னடா பூச்சாண்டி காட்றீங்க ? மரியாதையா வழி விடப் போறீங்களா இல்லையா ?"
    அப்போது, எல்லோரும் அவரைத் தடி கொண்டு தாக்க முயல, கையில் வைத்திருக்கும் கெட்டியான பிரம்பால் அவர்களை எதிர்த்து அடித்து நொறுக்குவார். சுழன்று சுழன்று ஆக்ரோசமாகச் சண்டையிடுவார்..
    மைனரை இரண்டு போலிஸ்காரர்கள் அவர் தப்பி விடாமலிருக்க, இறுகப் பிடித்தபடி ஜீப் அருகில் நிற்பார்கள்.
    அடியாட்கள் அனைவரும் சௌத்ரியின் பிரம்படிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், அடிபட்டுக் கீழே விழுவர்.
    சௌத்ரி, மூச்சு வாங்கியபடி, மைனர் நிற்கும் இடத்துக்கு வந்து, "என்ன மைனர்...இப்போ ஸ்டேசன் போவமா ?" என்றபடி மைனரின் வயிற்றில் லேசாகப் பிரம்பால் குத்துவார்..
    "அள்ளிட்டுப் போ...கொண்டுட்டுப் போ எல்லாரையும்.." என்று மற்ற போலிஸ்காரர்களிடம் சொல்லியபடி சௌத்ரி ஜீப்பில் ஏறுவார்..
    இத்துடன் இந்தக் காட்சி முடிகிறது.
    -------------------------------------
    இந்த மொத்தக் காட்சியின் நேரமும் நாலு நிமிடம் பத்து செகன்டுகள்தான்.
    ஆனால், இதில் மொத்தம் எத்தனை ஷாட்டுகள் தெரியுமா ?
    சொன்னால் அசந்து விடுவீர்கள்.
    53 ஷாட்டுகள்.
    மனோகருடன் சாதுரியமாகப் பேசி அவரை அங்கவஸ்திரத்தில் கட்டி வெளியே இழுத்து வரும் வரை, வீட்டுக்குள் சிறியதும் பெரியதுமாக 20 ஷாட்டுகள்.
    வெளியே வந்த பிறகு, சண்டைக் காட்சி உட்பட, 32 ஷாட்டுகள். (எப்போதும் சண்டைக் காட்சிகளில் அதிக ஷாட்டுகள் இருக்கும்.)
    இறுதியில் மனோகரிடம், " என்ன மைனர் .. இப்ப ஸ்டேசனுக்குப் போவமா?" என்று கேட்டு விட்டு ஜீப்பில் ஏறுவது இறுதி ஷாட்.
    ஆக மொத்தம் 53 ஷாட்டுகள்.
    ---------------------------------
    சரி.. இத்தனை ஷாட்களை எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் ?
    ஒவ்வொரு ஷாட்டுக்கும் காமிரா கோணங்கள் மாற்ற, எடுக்கப் போகும் ஷாட், குளோசப்பா, மிட் ஷாட்டா, லாங் ஷாட்டா என்பதைப் பொறுத்து ஒளியமைப்பை மாற்ற, டிராலி அமைப்பு மாற்ற, நடிகர்களுக்கு டச்சப் செய்ய... என்று ஏகப்பட்ட நேரம் பிடிக்கும். எனவே இந்த முழுக் காட்சியையும் எடுத்து முடிக்க நிச்சயம் நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். அதிலும் 16 பேர்களுடன் மோதும் ஒரு பெரிய சண்டைக் காட்சி என்பதால், அதற்கே குறைந்தது இரண்டு நாட்கள் ஆகியிருக்கும்.
    நிச்சயமாக சண்டைக் காட்சிகள் தனியாகவும், மற்ற காட்சிகள் தனியாகவும் தான் படம் பிடித்திருப்பார்கள்.
    ---------------------------------
    இப்போது, ஆரம்பத்தில் நான் சொன்ன இரண்டு அல்லது மூன்று செகன்டுக்கு வருகிறேன்.
    சண்டைக் காட்சி எல்லாம் முடிந்து, மைனர் இருக்கும் இடத்துக்கு நடந்து வந்து, "என்ன மைனர்.. இப்ப ஸ்டேசனுக்குப் போவமா ?" என்ற வசனம் பேசும்போது, லேசாக மூச்சு வாங்கியபடி பேசுவார் சௌத்ரி...
    நிச்சயம் சண்டைக் காட்சியுடன் சேர்த்து ஒரே ஷாட்டில் இதை எடுக்கவில்லை... காரணம் சண்டைக் காட்சியின் காமிரா கோணம் வேறு... இறுதி ஷாட்டின் காமிரா கோணம் வேறு... எனவே தனியாகத்தான் இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது உறுதி..
    இதில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அந்த இரண்டு மூன்று செகன்டுகள் என்ன என்பதைச் சொல்கிறேன்.
    இறுதி ஷாட்டில்.. "என்ன மைனர்... இப்ப ஸ்டேசனுக்குப் போவமா ?" என்பது மட்டும்தான் வசனம்.. நடிகர் திலகத்தைத் தவிர வேறு யார் சௌத்ரியாக நடித்திருந்தாலும் அந்த வசனத்தை மட்டுமே பேசி நடித்திருப்பார்கள். ஷாட்டுக்கு அதுதான் தேவை...
    ஆனால் நடிகர் திலகம் அந்த வசனத்தைப் பேசும்போது லேசாக மூச்சு வாங்கியபடியேதான் பேசுவார்.
    ஏன் ? எதற்காக மூச்சு வாங்குகிறார்..??
    ஷாட்கள் வெவ்வேறு நாட்களிலோ, வெவ்வேறு நேரத்திலோ எடுக்கப்பட்டிருந்தாலும், கதைப்படி, சண்டை முடிந்த உடனே அவர் மனோகரிடம் வந்து பேச வேண்டும்.. 16 பேரிடம் நீண்ட கம்புச் சண்டை போட்ட ஒருவருக்கு மூச்சு வாங்காதா ? Sp சௌத்ரியாகவே இருந்தாலும், அவரும் மனிதர்தானே... அவருக்கு மட்டும் மூச்சு வாங்காதா என்ன ?
    எனவே, இந்த ஷாட் எடுக்கும்போது, தான் நடித்த முந்தைய ஷாட்டின் நடிப்பின் கன்டின்யுட்டியை மிக நன்றாக நினைவு வைத்துக் கொண்டு லேசாக மூச்சு வாங்கியபடி வசனம் பேசியிருக்கிறார். நடிப்பில் எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி மிக மிக நுண்ணிய விசயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்திருப்பார் ??
    ( திரிசூலம் படத்தில் விஜயாவுடனான நீண்ட தொலைபேசி உரையாடலின் போது, திடீரென்று 'எக்ஸ்டென்சன் பிளீஸ்..' என்று கத்துவாரே... நினைவிருக்கிறதா ?)
    ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் நடிப்புப் பல்கலைக் கழகம் என்று நடிகர் திலகம் ஏன் மதிக்கப்படுகிறார் என்பது இப்போது புரிகிறது இல்லையா ??
    ---------------------------------
    நன்றி.
    நாகராஜன் வெள்ளியங்கிரி.
    மீள்பதிவு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #885
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 51
    படம் முடிந்து வெளியே வந்தபோது துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று கவலைப்பட்டது தேவையில்லாதது என புரிந்தது. இதை ஏற்கனவே என் கஸின் சொல்லியிருந்தார் என்றாலும் நாமே நேரில் பார்க்கும்போதுதான் சில விஷயங்களை முழுமையாக ஒப்பு கொள்வோம். அப்படிதான் நீதியின் வெற்றியும் அமைந்தது.
    படம் அனைத்து ஊர்களிலும் அந்த பதட்ட சூழலிலும் பிரமாதமாக ஓடுகிறது என்ற செய்தி ரசிகர்கள் மூலமாக அறிய முடிந்தது. 2 வது வார விளம்பரம் 4வது வார விளம்பரம் எல்லாம் முழுப்பக்க விளம்பரங்களாக பாலாஜி கொடுத்தார் என்று சொல்லும்போதே வெற்றியின் வீச்சு புரிந்தது. குறிப்பாக 4 வாரங்களில் வசூலில் ராஜாவையும் மிஞ்சி விட்டது நீதி என தலைப்பிட்டு அனைத்து ஊர்களின் வசூல் விவரங்களை கொடுத்திருந்தது மிக சிறப்பாக அமைந்தது. மதுரை தங்கத்தில் நான்கு வாரத்தில் ரூபாய் 1,72,000/- வசூல் செய்தது. படம் நன்றாக ஓடுவதற்கு மற்றொரு காரணமும் இயல்பாக அமைந்தது.
    பொதுவாக நமது படங்கள் சந்திக்கக்கூடிய சவால்கள்/சிக்கல்கள் எதுவென்று கேட்டால் நமது படங்களே போதிய இடைவெளி இல்லாமல் வெளியாவதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரிலேயே அதை பல முறை விவாதித்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியமாக நீதிக்கு நல்ல இடைவெளி கிடைத்தது. ஆனால் அது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. சில பல வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். தர்மம் எங்கே வெளியான நேரத்தில் அதற்கு ஒரு 8 அல்லது 9 வாரம் இடைவெளி கொடுத்தே தவப்புதல்வன் வெளியாகும் அதற்கு 50 நாள் இடைவெளி கொடுத்து தீபாவளிக்கு வசந்த மாளிகையும் 1973 ஜனவரி 26 நீதி வெளியாகும் என்பதுதான் ஒரிஜினல் பிளான். ஆனால் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றி வாய்ப்பை இழந்தபோது இந்த மேல் சொன்ன மூன்று படங்களும் prepone ஆகி விட்டது. அதன் காரணமாகவே செப் 29 மாளிகை வெளியானதும் அன்று முதல் 1973 மார்ச் 23 வரை கிட்டத்தட்ட 6 மாத கால இடைவெளியில் நீதி மட்டுமே வெளியானது. ஆனால் அன்றைய நாட்களில் இது போல் இடைவெளி இல்லாமல் படங்களை வெளியாவதை பற்றி இன்று நாம் குறையாக சொல்கிறோமே அது அன்று கிடையாது. இன்னும் சொல்ல போனால் அடுத்த படம் எப்போது என்ற கேள்வியே அனைவர் பேச்சிலும் இருக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தங்கப்பதக்கம் வெளியான மறுநாள் (1974 ஜூன் 2) மதுரை சென்ட்ரல் சினிமா வாசலில் ஈவினிங் ஷோ போவதற்கு நானும் என் கஸினும் நின்று கொண்டிருக்கிறோம். அனைவரும் படத்தை பற்றியும் அதன் வெற்றியை பற்றியும் எப்படி அந்த வருடத்தில் சாதனை படைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பையெல்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்க அங்கே அப்போது வந்த கஸினின் நண்பர்கள் சிலர் அடுத்த படம் எது எப்போ ரிலீஸ் என்று கேட்டதும் பாலாஜி படம்தான் ஆகஸ்ட் 15 என்று கஸின் சொன்னதும் மனதில் பசுமையாய்.
    நாம் 1972க்கு திரும்பி வருவோம். நீதியும் மாளிகையும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய படங்களின் அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த டிசம்பரில்தான் குகநாதனின் அன்னை பூமி விளம்பரம் வெளிவருகிறது. இரட்டை வேடம் வண்ண படம் என்றதுமே ரசிகர்களுக்கு ஏக குஷி. அதே டிசம்பரில்தான் ஜெயந்தி பிலிம்ஸ் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்க போகிறார்கள் என்ற செய்தி வந்து பூஜையும் போடப்பட்டது. ஜெயந்தி பிலிம்ஸ் அதற்கு முன்பு எடுத்த இரண்டு படங்கள் பற்றி நான் சொல்லாமலே வாசகர்களுக்கு தெரியும். ஆகவே அவர்கள் முகாம் மாறி வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது. ஆராதனாவின் ரீமேக் என்று தெரிந்தபோது சற்றே கவலை வந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அது பெரிதாக பாதிக்கவில்லை. படத்திற்கு சிவகாமியின் செல்வன் என்று பெயர் சூட்டப்பட்டதும் ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். அந்த பெயர் வைக்கலாம் என்று யோசனை சொன்னது ஏ.எல்.நாராயணன் என்பதும் அதை அவர் சொன்னதும் நடிகர் திலகம் அவரை கட்டி தழுவி மிகவும் பாராட்டினார் என்று பிற்காலத்தில் சிவிஆர் சொல்லி தெரிந்து கொண்டது.
    இதற்கிடையில் மற்றொரு நிகழ்வு. தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மிக பெரிய சக்தியாக விளங்கியவரும் முதன் முதலாக அன்றைய ஓருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937ல் பதவியேற்று பணியாற்றியவரும், சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமாக கவர்னர் ஜெனரல் ஆக சேவை செய்தவரும் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த முதல் பொது தேர்தலிலுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் முதல்வர் பொறுப்பு ஏற்றவரும் பின்னர் சுதந்திரா கட்சியை நிறுவியவருமான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜி, மூதறிஞர் என்று அழைக்கப்பட்டவர். தனிப்பட்ட கோபதாபங்களுக்காக 1967ல் காங்கிரஸை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சியை பிடிக்க உதவி செய்திருந்தார் என்றாலும் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்ததும் அதை பொதுவெளியில் ஒப்புக் கொண்டு மீண்டும் பெருந்தலைவரோடு இணைந்து 1971ல் பணியாற்ற தொடங்கினார் என்பதையும் நாம் இந்த தொடரில் முன்பே பேசியிருக்கிறோம். 1971 ஆகஸ்ட் 30 அன்று திமுக அரசு மது விலக்கை ரத்து செய்தது, தேர்தல் தோல்வி தந்த வேதனையை விட பன்மடங்கு வேதனை அவருக்கு அளித்தது. தானே நேரில் சென்று கேட்டுக் கொண்டும் அன்றைய முதல்வர் கருணாநிதி அதற்கு செவி சாய்க்காதது அவரை மனதளவில் பாதித்தது. அதன் பிறகு அவரின் பொது நிகழ்ச்சிகள் குறைந்து விட்டன. அதற்கு முன்பு அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் மற்றும் வியாசர் விருந்து இவற்றிலிருந்து பல கதைகளை கோவில்களில் உபன்யாசம் செய்வார். அதுவும் நின்று போனது. கல்கியிலிலும் சுவராஜ்யா பத்திரிக்கைகளில் மட்டும் எழுதி வந்தார். டிசம்பர் 10 அவருக்கு பிறந்த நாள். அன்று அவருக்கு அனைவரும் வாழ்த்து சொன்னார்கள். சினிமாவே பார்க்காத ராஜாஜி சம்பூர்ண ராமாயணம் பார்த்து விட்டு அனைவரையும் விட்டு விட்டு பரதனை கண்டேன் என்றார். அப்படி அவரால் பாராட்டப்பட்ட நடிகர் திலகம் இந்த காலகட்டத்தில் அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். பிறந்த நாள் முடிந்து சில நாட்களுக்கு பிறகு அவருக்கு பல்லாண்டுகளாக இருந்த தீவிர ஆஸ்த்மா கடுமையாக, அதை தவிர யூரினரி ட்ராக்ட் இன்பெக்க்ஷன் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட சென்னை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ராஜாஜி சிகிச்சை பலனிக்காமல் அவரின் 94வது வயதில் 1972 டிசம்பர் மாதம் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று காலமானார்.
    இந்த நேரத்தில் தமிழகத்தின் அரசியல் தட்பவெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக நார்மலானது. ஜனவரி பிறந்தவுடன் அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக அடைந்து கிடந்ததனால் வகுப்புகளும் பாடங்களும் விரைவாக நடத்தப்பட்டது. ஆனால் நாடு அமைதியாக இருந்தால் அரசியல்வாதிகளுக்கு பொறுக்காது. ஏதாவது போராட்டம் என்று செய்து கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியும். ஜனவரி மாதம் (ஜனவரி 5 என்று நினைக்கிறேன்) மதுரையில் ஒரு விழாவிற்கு பிரதமர் வருகை புரிகிறார். அவர் வருவதால் முதல்வரும் மதுரை வருகிறார். இந்த நேரத்தில் எம்ஜிஆர் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார். திமுக அமைச்சரவை மீதான ஊழல் புகார்களில் மேலும் சிலவற்றை பழைய புகாரோடு சேர்த்து இணைத்திருப்பதாகவும் அதை பிரதமரிடம் கொடுக்க இருப்பதாகவும் அதற்காக அதே நாளில் மதுரை வர போவதாகவும் அந்த அறிவிப்பில் இருந்தது. டெல்லியில் நடந்தது போல் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் இதில் சேர்ந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது மதுரை வாழ் பொது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அனுப்பி விட்டதாக செய்திகள் வந்திருந்தன, இப்போது இப்படி அனைவரும் ஒரே நேரத்தில் மதுரை வந்து அங்கே மீண்டும் இது போன்ற புகார் பட்டியல் கொடுக்கப்பட்டால் அதன் மூலம் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்ற கவலை.
    மதுரை வருவதாக அறிவித்த எம்ஜிஆர் அதற்காக தேர்ந்தெடுத்த பயண முறை ரயில் பயணம். பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை வருகிறேன் என்று அறிவிப்பு. இது மக்களின் கவனத்தையும் நாட்டின் பிரதமர் குடியரசு தலைவர் கவனத்தையும் ஈர்ப்பதற்காக போட்ட திட்டம். அதன்படி பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்படுகிறார். வண்டி சென்னை நகரை தாண்டும் முன் அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டு கம்பார்ட்மென்ட் வாசலில் அவர் வர வேண்டும் பேச வேண்டும் இல்லாவிட்டால் வண்டியை போக விட மாட்டோம்.என்று ஒரு கூட்டம் நிற்கிறது. அது நடந்து கொஞ்ச தூரம் வண்டி சென்றதும் மீண்டும் சங்கிலி இழுப்பு. வண்டி நிற்க இதே கோரிக்கை. ஓரிரண்டு இடங்கள் என்றால் புரிந்து கொள்ளலாம். இது இயல்பாக நடந்தது என்று. ஆனால் தொடர்ச்சியாக பல இடங்களில் இதே போல் நிகழ்ந்து அனைத்து இடங்களிலும் ஒரே போல் கோரிக்கை அதே டயலாக் வந்தவுடன் உண்மை புரிந்து போனது. இதன் காரணமாக மறுநாள் காலையில் மதுரைக்கு வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்று மாலைதான் வந்து சேர்ந்தது. எத்தனை பேர் அவசர வேலைகளுக்காக அந்த ரயிலில் வந்தார்களோ, பாவம்! மக்கள் ஆதரவு அநத அளவிற்கு இருக்கிறது என காண்பிப்பதற்காக செய்யப்பட்ட இந்த நிகழ்வு பூமராங் ஆனது. மாலையில் இவரை சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார் பிரதமர் இந்திரா. ஆனால் ரயில் விளையாட்டால் அந்த நேரத்திற்கு இவரால் பிரதமரை பார்க்க முடியவில்லை என்பதனால் இவர் தாமதமாக சென்று இப்போது பார்க்கலாமா என்று கேட்க அது மறுக்கப்பட்டு மறுநாளும் பிரதமர் மதுரையிலே இருந்தபோதும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்ட இந்திரா கோபம் அடைந்தார். அது மட்டுமல்ல ஏற்கனவே ஒரு முறை புகார்களை பெற்று கொண்டாகி விட்டது. மீண்டும் மீண்டும் அரசியல் காரணங்களுக்காக பிரதமரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதனாலும் அந்த சந்திப்பு மறுக்கப்பட்டது. இதை போன்ற நிகழ்வு (ரயிலை நிறுத்துவது)1988 பிப்ரவரியில் ஜானகி அம்மையார் மதுரை வந்தபோதும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
    இதற்கிடையில் மற்றொரு அரசியல் நிகழ்வு முக்கியத்துவம் பெற தொடங்கியது. இரண்டு வாரங்களுக்கு முன் 1972 அக்டோபர் மாதம் 22ந் தேதி மதுரை திலகர் திடலில் திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றும் அதில் அன்றைய மதுரை மேயர் முத்து பேசிய பேச்சினால் கலவர சூழல் உருவாகி வன்முறைகள் நடந்தேறின என்பதையும் சொல்லியிருந்தேன். அன்றைய கூட்டத்தில் மற்றொரு பேச்சாளர் அன்றைய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்.ராஜாங்கம். அவரும் மிக ஆவேசமாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிவிட்டு ஊருக்கு கிளம்பி சென்ற அவர் கடுமையான மாரடைப்பால் உயிர் இழந்தார். அதன் காரணமாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள்ளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதனால் திண்டுக்கல் இடை தேர்தல் பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற பத்திரிக்கை செய்திகள் வர அரசியல் களம் சூடு பிடிக்கிறது.
    அரசியல் இப்படி இருக்க நாம் நடிகர் திலகத்தின் திரையுலக பயணத்தில் தொடர்வோம்.1973 பிறந்தவுடன் அந்த வருடம் வெளியாக போகும் நடிகர் திலகத்தின் படங்கள் என்னவென்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.. ஜனவரி 26 அன்று வெளியாகிறது என்று 1972 ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டு படங்களின் விளம்பரங்கள் வந்தது. 1972 ஜூலை மாதம் 1973 குடியரசு தின வெளியீடு என்று ராஜபார்ட் ரங்கதுரை விளம்பரம் வந்தது. ஆனால் அந்த படம் அதற்குள் படப்பிடிப்பு முடியவில்லை. நாளாகும் என்று செய்தி வந்து விட்டது. டிசம்பரில் பாரத விலாஸ் ஜனவரி 26 வெளியீடு என்று ஒரு விளம்பரம் வந்தது. ராஜபார்ட் பாதி அளவிற்கே முடிந்ததிருந்தது என்றால் பாரத விலாஸ் ஒரு 80% மட்டுமே முடிந்திருந்த நேரம். வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னாலும் ஜனவரி 26க்கு முன் படம் முழுமையடையவில்லை. பிப்ரவரியில்தான் முடிந்தது. பிப்ரவரி கடைசியில் சென்சார் செய்யப்பட,, தான் அதற்கு முன் தயாரித்த பாபு சாந்தியில் வெளியான சென்டிமென்ட் வைத்து ACT, சாந்தி கிரௌன் புவனேஸ்வரி வேண்டுமென்று கேட்க முதல்முறையாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை கெடுக்காமல் மாளிகை பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.வெள்ளிவிழா போகும். அதன் பிறகுதான் தியேட்டர் கிடைக்கும் என்று சொல்லப்படவே, பாரத விலாஸ் படத்தை மார்ச் மாதம் 24ந் தேதிக்கு தள்ளி போட்டார் ACT
    படம் தள்ளி போடப்பட்டதால் எதிர்பாராமல் கிடைத்த இந்த இடைவெளியை பற்றி சந்தோஷப்பட்டோம் என்றால் அதுவே நமக்கு வினையாக மாறியது. ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்கள். அதிலும் மிக பிரம்மாணட படம் ஒன்று என்ற சிக்கலில் தள்ளியது. அதை பின்னர் பார்ப்போம்.
    நடிகர் திலகத்தை பொறுத்தவரை இடைவிடாத படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சகோதரர் Kn சுப்பு, ராசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வந்திருந்தது. ACT இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைப்பெற இருக்கிறது என்றும் அதற்காக நடிகர் திலகம் மற்றும் லதா ஆகியோர் சிங்கப்பூர் செல்கிறார்கள் என்றும் செய்தி பத்திரிக்கையில் வந்தது. [வாசகர்கள் நான் பெயரை தவறாக எழுதி விட்டேனோ என்று நினைக்க வேண்டாம். நான் குறிப்பிடும் படம் அவன்தான் மனிதன் என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அந்த நேரத்தில் பெயர் வைக்கப்படவில்லை. அதில் முதலில் ஒப்பந்தமானவர் லதா. ஆனால் கால்ஷீட்(?) சிக்கல்களால் அவர் விலக அந்த வேடத்தில் மஞ்சுளா ஒப்பந்தம் செய்யப்பட்டார்]. அதே போல் சிவகாமியின் செல்வன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நடிகர் திலகம் வாணிஸ்ரீ, போன்றவர்கள் டார்ஜிலிங் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு போவதாகவும் செய்தி வந்தது.
    இதற்கிடையில் நாட்டின் குடியரசு தின விழா ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படும் என அறிவிப்பு வருகிறது. சென்னை மாநகரை பொறுத்தவரை ஒரு ஊர்வலம் நடத்தப்படும் என்றும் திருவல்லிக்கேணி தேரடியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கண்ணப்பர் திடலை அடையும் என்றும் அங்கே பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அந்த ஊர்வலத்திற்கு நடிகர் திலகம் தலைமை தாங்குவார் என்றும் அறிவிப்பு வர ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதற்கு முன்னர் சிகர மன்றத்தின் சார்பாக இல்லாமல் கட்சி சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் நடிகர் திலகம் கலந்து கொண்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு கட்சி ஊர்வலம் அதற்கு தலைமை தாங்குவது என்பது எனக்கு தெரிந்தவரை நடந்ததில்லை. ஆகவே ரசிகர்கள் பெருவாரியாக அந்த ஊர்வலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.
    இந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் புது படங்களை பற்றிய அறிவிப்புகள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் நடிகர் திலகமே பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார். இவர்தான் வி பி ராஜேந்திர பிரசாத். தெலுங்கு படவுலகில் முன்னணி தயாரிப்பாளர். இவர்கள் தெலுங்கில் தயாரித்த சில படங்களை நாம் ஏற்கனவே தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம். இப்போது அவர்களே நேரிடையாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க முன்வந்திருக்கிறார். அவருக்கு நமது தமிழ் பட ரசிகர்கள் வரவேற்பு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ராஜேந்திர பிரசாத் பேசும்போது மிக பிரம்மாண்டமாக கலர் படம் எடுக்க போவதாகவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய விருந்து காத்திருக்கிறது என்று சொன்னார். உடனே படப்பிடிப்பும் ஆரம்பித்து சில ஸ்டில்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்தன. நான் சொல்லாமலே என்ன படம் என்று வாசகர்களுக்கு புரிந்திருக்கும். அது போல மிக பெரிய தனவந்தர் என்றும் தெலுங்கு படவுலகோடு (?) தொடர்புள்ளவர் என சொல்லப்பட்ட என் வி ராமசாமி அவரது என் வி ஆர் பிக்சர்ஸ் சார்பாக நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கிறார் என்ற செய்தி அதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருந்தன. படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட செய்தியும் பத்திரிக்கைகளில் வந்திருந்தன என்றாலும் அந்த ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு 1973 மார்சில்தான் துவங்கியது. சின்னப்பா தேவர் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
    அந்த நேரம் தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டு பல மணி நேரம் நீண்டு நிற்கக்கூடிய மின்வெட்டுகள் அமுல்படுத்தப்பட்டன. திரையரங்குகளுக்கு இரண்டு காட்சிகளுக்குத்தான் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டசபையில் இது கடுமையான விவாதங்களுக்கு வழி வகுக்க அனந்தநாயகி அரசாங்கத்தை கடுமையாக சாடினார். ஆனால் இது போல் பதில் சொல்ல முடியாத கேள்விகள் வரும்போது வேறு ஒரு விஷயத்தை முன்னெடுப்பது இல்லாவிட்டால் இங்கே மட்டுமா? கேரளாவில், ஆந்திராவில் இல்லையா என்று அடுத்த மாநிலங்களை கைகாட்டுவது என்பதுதான் கழகங்களின் பாணி. அப்போதும் அப்படிதான் பதில் சொன்னார்கள். இந்த மின்வெட்டு அதன் காரணமாக மாட்னி காட்சிகளுக்கு மின்சாரம் வழங்காமை இதன் காரணமாக மாளிகையும் சரி, நீதியும் சரி சற்றே பாதிக்கப்பட்டன. வசந்த மாளிகை தந்த வசூல் மழையில் பல் திரையரங்குகளும் ஜெனரேட்டர் புதிதாக வாங்கின. சென்னை சாந்தியிலும் மதுரை நியூசினிமாவிலும் வசந்த மாளிகை வெள்ளி விழா நோக்கி வீறு நடை போட்டது. நீதியை பொறுத்தவரை மதுரை தங்கத்தில் 57 நாட்கள் ஓடியது. சென்ட்ரலில் வெளியாகி இருந்தால் நிச்சயம் 100 நாட்களை கடந்திருக்கும். 1973 பிப்ரவரி 1 வரை நீதி ஓடியது. அடுத்த நாள் முதல் ஒரு இந்தி படம் திரையிடப்பட்டது. அன்று தொடங்கி 1974 ஆகஸ்ட் 14 வரை வாரம் ஒரு படம் என்ற கணக்கில் இந்திப்படங்கள் மட்டுமே தங்கத்தில் திரையிடப்பட்டன.
    கோவையில் 71 நாட்கள் ஓடிய நீதி சென்னை தேவி பாரடைஸ் மற்றும் சேலம் சங்கம் அரங்குகளில் தொடர்ந்து ஓடியது. மார்ச் 16 வெள்ளியன்று 100வது நாள் என்றிருக்க மார்ச் 15 வரை ஓடி 16 அன்று மாற்றப்பட்டது. 99வது நாள் என்ற முழுப்பக்க விளமபரம் வந்தது. ஏன் 99 நாளோடு எடுக்கப்பட்டது என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் போனஸ் பிரச்னை என்று வழக்கம் போல் அள்ளி விட்டனர். சிலர் யாரோ ஒருவர் பாலாஜியிடம் பந்தயம் கட்டியதாகவும் அந்த பந்தய பணத்தை வெல்லவே இது போல் செய்யப்பட்டது என்றும் சொன்னார்கள். ஆனால் இவை இரண்டுமே உண்மையில்லை என்பதுதான் எதார்த்தம். தமிழகத்தில் இரண்டு அரங்குகளில் மட்டுமே 100 நாட்கள் ஓட போகிறது. அந்த இரண்டு அரங்குகளில் பணியாற்றுபவர்களுக்கு பெரிதாக என்ன போனஸ் தொகை வந்து விடப்போகிறது? அது மட்டுமல்ல அதை பாலாஜி கொடுக்க போவதுமில்லை. அதை அரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர் பார்த்து கொள்ள போகிறார்கள். எனவே அந்த பிரச்னையில்லை. இந்த விஷயம் பற்றி சில காலம் முன்பு பாலாஜியின் மகன் திரு. சுரேஷ் பாலாஜியிடம் நான் கேட்டேன். அவர் அப்போது சிறுவன் என்றும் (11 வயது) அதனால் அதை பற்றிய விவரங்கள் தெரியாது என்று சொன்னவர் நிச்சயமாக போனஸ் பிரச்னை காரணமாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தினார். காரணம் தனது படங்களில் நடிக்கும் ஹீரோவில் ஆரம்பித்து தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை பேசிய சம்பளத்தை பைசா குறைவில்லாமல் கொடுத்தவர் தனது தந்தை என்றும் அதன் காரணமாகவே அவரால் பல வருடங்கள் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வர முடிந்தது என்பதையும் சொன்னார். இந்த சம்பள விஷயத்தை சிவிஆர் போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை சரியாக தெரியவில்லை. நீதியின் 99வது நாள் மார்ச் 15 வியாழன் என்றால் அதற்கு அடுத்த வியாழன் மார்ச் 22 வசந்த மாளிகை 175 நாட்களை மதுரை நியூசினிமாவில் நிறைவு செய்தது.
    பாரத விலாஸ் படப்பிடிப்பு பிப்ரவரி வரை நீண்டதை சொன்னேன். அதன் patch works நடந்து கொண்டிருக்கும்போதே ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஜ ராஜ சோழன் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக செய்திகள் வந்தன. மார்ச் 3 வெளியீடு என்று ஒரு முழு பக்க விளம்பரமே உமாபதி கொடுத்தார் என்றாலும் படம் அதற்குள் முடியவில்லை. நாதனை கண்டேனடி பாடல் காட்சியும் அதை தொடர்ந்து முத்துராமன் சிறை வைக்கப்படும் காட்சிகளெல்லாம் அந்த பிப்ரவரி மாதத்தில்தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் 14 வெளியாகிறது என்ற செய்தியும் ரசிகர்கள் மத்தியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. மார்ச் முதல் வாரத்தில் படத்தின் ரிரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் நடைபெறுவதாக செய்தி வர சிறிது நாட்களுக்குள்ளாக சென்சார் செய்யப்பட்டதாவும் செய்தி. 1972 அக்டோபர் நவம்பர் மாதங்களிலேயே சிந்தாமணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்து விட்டது. சிந்தாமணி என்ற விஷயம் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தில்லானாவிற்கு பின் ஒரு பெரிய படமாக வர போகிறது என்ற நம்பிக்கை.
    பாரத விலாஸ் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 24 ரிலீஸ் என்று விளம்பரம் வர மதுரையில் தேவி சித்ரம் என்ற பட விநியோக நிறுவனம் MR (மதுரை ராமநாதபுரம்) ஏரியாவிற்கு வாங்கியிருக்கிறார்கள் என்றும் மதுரை சென்ட்ரலில் ரிலீஸ் என்றும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் திடீரென்று ராஜ ராஜ சோழன் மார் 31 ரிலீஸ் என்று தியேட்டர்கள் பட்டியலோடு விளம்பரம் வர ரசிகர்கள் திகைத்து போனார்கள். ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை என்று கோபமும் வருத்தமுமாக பேசிக் கொள்வதை கேட்க முடிந்தது. 1971 இறுதியில் வந்த பாபுவில் ஆரம்பித்து அதன் பின் வெளியான அனைத்து படங்களும் (தர்மம் எங்கே தவிர்த்து) 100 நாட்களை கொண்டாடியிருக்க அந்த வெற்றி ஊர்வலம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது.
    ராஜ ராஜ சோழன் ஒரு வார இடைவெளியில் வந்தால் பாரத விலாஸ் என்னாகும் என்ற கேள்வியும் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் ராஜ ராஜ சோழனும் பாரத விலாஸ் படத்தால் பாதிக்கப்படுமே என்ற கவலையும் ரசிகர்களை வாட்ட, மார்ச் மாதத்தின் நாட்கள் நகர நகர அந்த ரிலீஸ் நாட்களும் பக்கத்தில் வர வர ----
    (தொடரும்)
    அன்புடன்

    siva-513.jpg

    நன்றி முரளி சிறிநிவாசன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #886
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 52
    இப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்பு, கோபம், கவலை போன்ற கலவையான உணர்வுகளில் சிக்கி தவிக்க மார்ச் 24 ந் தேதி பாரத விலாஸ் வெளியானது. முன்பே சொல்யிருந்தபடி மதுரை சென்ட்ரலில் ரிலீஸ். படம் வெளியான சனிக்கிழமையன்றுதான் எனக்கு தேர்வு முடிகிறது. ஆகவே வழக்கம் போல் கஸின் மட்டுமே காலை ஓப்பனிங் ஷோ பார்த்தார். விநியோகஸ்தர் தேவி சித்ரம் என்ற கம்பெனி என்று சொல்லியிருந்தேன். அதன் உரிமையாளர் என் கஸினின் நெருங்கிய நண்பருக்கு தாய் மாமா. ஆகவே எந்த சிக்கலுமில்லாமல் டிக்கெட் வாங்கி விட்டார். என்னை மாலை காட்சிக்கு கூட்டி போவதாக சொல்லியிருந்தார். ஆனால் படம் வெளியாவதற்கு முதலிரண்டு நாட்களில் விநியோகஸ்தர் ஆபிசில் டிக்கெட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டதில் ஈவினிங் ஷோ கிடைக்கவில்லை. நைட் ஷோ தருகிறேன் என்று சொல்லி தந்தாக கஸின் வந்து சொல்ல வீட்டில் முதலில் முடியாது என்று சொன்னாலும் கடைசியில் சரி என்று சொல்லிவிட (நாங்கள் சொல்ல வைத்துவிட) முதன் முறையாக முதல் நாள் நைட் ஷோ கஸினுடன் போகிறேன். (எப்போதுமே அவர் ஓப்பனிங் ஷோ போவது வீட்டிற்கு தெரியாது. என்னை கூட்டி போகும் காட்சிதான் முதன் முறையாக அவரும் பார்க்கிறார் என்றே வீட்டில் சொல்லப்படும்).
    நம்முடைய வழக்கப்படி ரிப்போர்ட் எப்படி என்று கேட்க அதான் கொஞ்ச நேரத்திலே பார்க்க போறியே என்று சொல்லி விட்டார். எனக்கு இந்த பதில் கேட்டவுடன் ஒரு சந்தேகம். அதை கேட்டும் விட்டேன். படம் நல்லாத்தான் இருக்கு என்றார். பொதுவாக சென்ட்ரல் சினிமாவில் படம் வெளியாகிறது என்றாலே எங்களிடம் டிக்கெட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தியேட்டர் வாசலுக்கு போய் தியேட்டருக்கு எதிரே நிற்க கூடிய ரசிகர்களின் ஜோதியில் கலந்து மகிழ்ந்து பின்னரே உள்ளே செல்வது வழக்கம். ஆனால் அன்று நடக்கவில்லை. என்னவென்றால் விநியோகஸ்தரின் கம்பெனி லெட்டர் பாடில் (Letter Pad) எந்த படம், தேதி, எந்த வகுப்பு டிக்கெட், எத்தனை டிக்கெட், என்பவன எழுதியிருக்கும். சில நேரங்களில் விநியோகஸ்தர்.ஆபிஸிலே பணம் வாங்கியிருப்பார்கள். அதை கொண்டு போய் தியேட்டர் ஆபிஸ் ரூமில் காண்பித்து டிக்கெட்டுகளை வாங்கி கொள்ள வேண்டும். கவுன்டர் திறப்பதற்குள் போய்விட்டால் முதலிலேயே டிக்கெட்டுக்களை வாங்கி விடலாம். டிக்கெட்டுக்கள் கவுன்டருக்கு போய்விட்டால் காத்திருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக தியேட்டர் பின்பக்கம் வழியாக (பொதுவாக பெண்கள் போகும் பாதை) போக வேண்டும். அதனால் இந்த முறை ஜோதியில் கலப்பதை தவிர்த்து பின்புற வாசல் வழியாக உள்ளே சென்றோம்.
    படத்திற்கு சரியான கூட்டம், ஓப்பனிங் ஷோவை விட கூட்டம் அதிகம் என்று கஸின் சொன்னார். டிக்கெட் வாங்கி உள்ளே வந்தவர்கள் சிலர் பிளாக்கில் வாங்கி வந்ததாக சொன்னார்கள். உள்ளே போய் இடம் பிடித்து அமர படம் ஆரம்பித்தது. சினி பாரத் லோகோ, மூவி மேக்கேர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட்களுக்கு பிறகு டைட்டில் ஓடி முடிந்தது. பொதுவாக ACT படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதுவது வழக்கம். ஆனால் இந்த படத்திற்கு மதுரை திருமாறன் வசனம். டைட்டில் முடிய ஒரு ஆபிஸ். அங்கே நீலு மானேஜர். அவரை தேடி வரும் அவரது மனைவி. அவர்களின் திருமண நாள் என சொல்லப்படுகிறது. நீலுவின் பிஏ வந்து கோபால் என்பவர் உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் என்று சொல்ல நீலுவின் மனைவியும் சிபாரிசு செய்ய கதவின் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் கண் பின் கண்கள் பிறகு முழுமையாக நடிகர் திலகம். கழுத்தில் டை கையில் பை என்று உள்ளே வருபவர் கால் தடுமாறி பொருட்களை கொட்டி நீலுவின் மனைவியின் அனுதாபத்தை பெறுவார். நீ நல்ல சேல்ஸ் மான் இல்லை. இப்படியா வியாபாரம் பண்றதுன்னு பேசி நீலு ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி செக் கொடுக்கும் நேரம் விஜயா என்ட்ரி. இவர் உங்களை ஏமாற்றி விட்டார். என்னிடம் பந்தயம் வைத்து உங்களிடம் பொருட்களை விற்று விட்டார் என விஜயா சொல்ல பரவாயில்லை என நீலு வழிவார்.
    எம் ஆர் ஆர் வாசு மனோரமா ஜோடி அறிமுகம். வாசு தெலுங்கு. மனோரமா கன்னடம். ஓரு பெரிய வீட்டில் குடியிருப்பார்கள். நண்பர் ஒருவருக்காக போட்ட ஜாமீன் கையெழுத்தால் பட்டாணிக்காரனால் 300 ருபாய் மாலைக்குள் கொடுக்க வேண்டும் என மிரட்டப்பட அந்த நேரம் வீடு வேண்டும் என தேடி வரும் நடிகர் திலகத்திடமும் அவருக்கு பின்னர் வரும் விஜயாவிடமும் தலா 150 ரூபாய் பெற்றுக்கொண்டு தனி தனி ரூம்களை கொடுத்து விடுவார். இரவு இரண்டு பேரும் மாலையில் சேர்ந்து வர உண்மை வெளிப்பட, வாசு இருவரிடமும் உண்மையை சொல்லுவார். வீட்டு ஓனர் ஒரு வெளிநாட்டவர் என்றும் தற்போது டெல்லியில் இருப்பதாகவும் நமக்குள் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம் என கூற இருவரும் சரி என்பார்கள். விஜயா தனது கம்பனியின் பொருட்களை டெலிவரி கொடுக்க செல்லும்போது ஏற்கனவே பொருட்கள் வந்து விட்டதும் என்றும் அதற்குண்டான பணத்தை உங்க வீட்டுக்காரர் வாங்கி கொண்டு போய்விட்டார் என்று கடைக்காரர் சொல்ல யார் என்று விஜயா கேட்க நடிகர் திலகம் என்பது புரிய வரும். நடிகர் திலகத்தை தேடி அவரது ஆபிசுக்கு விஜயா வர லிப்ட்டில் வைத்தே இருவருக்கும் வாக்குவாதம் நடந்து நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ள கூடாது என்று திடீரென்று நடிகர் திலகம் கேட்க விஜயாவும் ஒப்புக் கொள்ள அடுத்த காட்சி சப் ரெஜிஸ்திரார் அலுவலகம். இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெறும்.
    இருவரும் வீட்டிற்கு வர நடிகர் திலகத்தின் ஏக்கமான பார்வையையும், பேச்சையும் புறக்கணித்து விஜயா அறைக்குள் சென்று கதவை மூடி கொள்ள அசரீரியாக ஒரு குரல் கேட்க நடிகர் திலகத்தின் மனசாட்சி. உருவத்தை காண்பிக்காமல் குரல் மட்டுமே கேட்கும் உத்தியை பயன்படுத்தியிருப்பார்கள். நடிகர் திலகத்தை பயங்கரமாக கிண்டலடித்து மனசாட்சி பேச ரோஷம் கொண்டு கதவை திறந்து உள்ளே போக விஜயாவால் திருப்பி அனுப்பபடுவார். வெளியே வந்தவுடன்தான் சக்கை போடு போடு ராஜா பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரமும் அந்த கதாபாத்திரத்தின் மனசாட்சியும் பாடுவது ஆனால் திரையில் ஒரு உருவம் மட்டுமே தெரியும் என்ற சற்றே சிக்கலான கான்செப்டை வெகு லாவகமாக கையாண்டு இயக்குனருக்கும் பெயர் வாங்கி கொடுப்பார் நடிகர் திலகம். 1971 இறுதியில் பாபுவில் ஆரம்பித்து தொடர் வெற்றி மேல் வெற்றி குவித்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்தை குறிக்கும் விதமாகவும் சக்கை போடு போடு ராஜா. உன் காட்டிலே மழை பெய்யுது என்ற வாலியின் சமயோசிதமான வரிகளுக்கு தியேட்டரில் ஏக கைதட்டல்கள். நான் சில வரிகளுக்கு முன்பு சொன்ன மாதிரி இந்த பாடல் காட்சி மொத்தம் ஒரு கத்தி முனை காட்சி. சற்று பிசகினாலும் கதாபாத்திரம் வேறு ஒரு மாதிரியாக நினைக்கப்பட்டு கேலிக்குள்ளாகி விடும்.அதை எல்லாம் மிக அழகாக தாண்டி ஜெயித்திருப்பார் நடிகர் திலகம். பாடல் முடிந்தவுடன் விஜயா வந்து மஞ்சள் கயிற்றில் கோர்த்த மாங்கல்யத்தை கொடுத்து தனக்கு அணிவிக்க சொல்வார். கழுத்தில் இந்த கயிறு ஏற வேண்டும். அதற்காகதான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன் என சொல்ல இருவரும் இணைவார்கள்
    நடிகர் திலகத்தின் ஆபிசில் (அழகு சாதன பொருட்கள் விற்பனையகம்) பொருட்களை வாங்கி விற்கும் ஏஜென்ட் டைப்பிஸ்ட் கோபு அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் பொருட்கள் எடை குறைந்திருக்கின்றன, சீல் உடைக்கப்பட்டிருக்கின்றன ஆகவே வேறு பொருட்கள் அல்லது நஷ்ட ஈடு கேட்க நடிகர் திலகம் அவரோடு சண்டைக்கு போவார். இவரின் குணமே இப்படித்தான் என்று அந்த பெண்ணிடம் சொல்ல கோபு முதலாளியிடம் புகார் செய்ய நடிகர் திலகத்திற்கு வேலை போய்விடும். அங்கே விஜயாவின் ஆபிசில் மானேஜராக மாறுதல் பெற்று மீண்டும் வரும் செந்தாமரை விஜயாவிற்கு சில பொருட்களை வாங்கி வந்திருப்பதாக எடுத்து கொடுக்க விஜயா கோபமுற்று அதை மறுத்து தனக்கு திருமணமானதை சொல்ல அதற்கும் மசியாமல் செந்தாமரை பேச விஜயா வேலையை விட்டு விடுவார்.
    இருவரும் வீட்டிற்கு வர என ஆபிசில ஒண்ணு நடந்துச்சுன்னு இருவரும் மாறி மாறி சொல்ல முதலில் விஜயா சொல்கிறேன் என்று ஆரம்பித்து பக்கத்தில் உட்காரட்டுமா என கேட்டு (இப்போ எதுக்கு என்று நடிகர் திலகம் முனகுவது டாப்) மானேஜர் பேசினதை பற்றி சொல்ல நடிகர் திலகத்தின் முகம் போகும் போக்கு (எனக்கு கண் நிறைஞ்ச கணவர் என்று விஜயா சொல்ல கண் நிறைஞ்ச கணவர் என்று நடிகர் திலகம் திருப்பி சொல்ல கை நிறைய சமபாதிக்கிறார் என்று விஜயா, முகத்தை அப்பாவியாக வைத்து கை நிறைய சம்பாதிச்சார் என்று நடிகர் திலகம் சொல்லும் விதம் சூப்பர்). இருவருக்குமே வேலை போய்விட்டது என்று தெரிந்ததும் இனி என்ன செய்வது என்று திகைத்து நிற்க அங்கே வரும் வாசுவும் மனோரமாவும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் தங்க வளையல்களை கொடுத்து புதிதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்க பயன்படுத்திக் கொள்ள சொல்ல நடிகர் திலகமும் விஜயாவும் வார்த்தை வராமல் தவிப்பார்கள்.
    அடுத்த காட்சி வரும்போது நடிகர் திலகம் அவருடைய தனி அலுவலகத்தில் இருக்க வியாபாரம் நன்றாக நடக்கிறது என்ற விஷயத்தை வசனங்கள் இல்லாமல் அந்த காட்சியின் தன்மை விளக்கி விடும். அவரது பிஏ வாக ஏ.சகுந்தலா அறிமுகம். சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது போல் காட்சி அமையும். அவரின் நடவடிக்கையில் நடிகர் திலகத்தை கவர முயற்சிக்கும் எண்ணம் பிரதிபலிக்கும். வீட்டிற்கு அல்வா, மல்லிப்பூ இத்யாதிகளுடன் வந்து நடிகர் திலகம் விஜயாவிடம் வழிவது வெளியே போகலாம் என்பது போன்ற வசனங்கள் வரும்போது விஜயா கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் இருவருக்கும் ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் என்பதும் காட்சியாக விரியும். சில வருடங்கள் கடந்து விட்டன என்பதை உணர்த்தி விடுவார்கள்.
    வாசு ஒரு நாள் கடிதத்தை வைத்து சத்தம் போட என்னவென்று கேட்கும் நடிகர் திலகத்திடம் அந்த வீட்டின் மாடியில் இருக்கும் இரண்டு போர்ஷனில் ஒன்றில் ஒரு பஞ்சாபியையும் மற்றொன்றில் ஒரு மலையாளியையும் குடி அமர்த்தியிருப்பதாக டெல்லியிலிருந்து வீட்டு ஓனர் எழுதியிருப்பதாகவும் அப்படி அவர்கள் குடி வந்துவிட்டால் நம்முடைய சுதந்திரம் போய்விடும் என வாசு சொல்ல என்ன செய்யலாம் என்று நடிகர் திலகம் கேட்க அந்த நேரத்தில் அந்த பஞ்சாபி மேஜரும் அவர் மனைவியாக தேவிகாவும் அவர்களின் ஒரே மகளுடன் அங்கே என்ட்ரி. மேஜரை பார்த்தவுடன் வாசு அவரிடம் வீட்டை பற்றி பல கோளாறுகள் சொன்னாலும் மேஜர் கண்டு கொள்ள மாட்டார். மேஜரை வாசு தமிழில் திட்ட மேஜர் ஒன்றும் புரியாமல் போவது போல காட்சியமைப்பு. ராத்திரி பின்பக்க வழியாக சுவரேறி அவர்கள் வீட்டிற்குள் சென்று ஆவிகள் நடமாட்டம் இருப்பது போல் தோற்றத்தை உருவாக்கி அவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என்று பிளான் போடுவார்கள்.அதன்படி கிளம்புவார்கள்.
    மறுநாள் காலை நடிகர் திலகத்தையும் வாசுவையும் காணவில்லை என்று விஜயாவும் மனோரமாவும் மேஜரை தேடி வந்து உதவி செய்யும்படி கேட்க தேவிகா பாத்ரூமில் திருடன் என்று ஓடி வர கதவை திறந்து பார்த்தால் இருவரும் அங்கே இருக்க இரவில் ஏணி வைத்து ஏறியபோது ஏணி உடைந்து பாத்ரூமில் விழுந்த கதையை கூறுவார்கள். அசடு வழிந்து மேஜரிடம் மன்னிப்பு கேட்க அவர் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருக்குறளை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக தனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று மேஜர் உண்மையை சொல்ல அனைவரும் நண்பர்களாவார்கள். அடுத்து மலையாளி இஸ்லாமியராக விகேஆர் ராஜசுலோச்சனா ஒரே மகனோடு வருவார்கள். முதலில் ராஜசுலோச்சனாவோடு அவ்வளவு ஒட்டாமல் இருக்கும் பெண்கள் மூவரும் அவர் பண்டிகைக்கு தின்பண்டங்கள் செய்து கொண்டு கொடுக்க முதலில் மறுத்து பின் அவரின் கதை கேட்டு நட்பாவர்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருந்ததையும் அந்த பெண் இப்போது இல்லை என்பதையும் ராஜசுலோச்சனா சொல்வார். வாசு மனோரமாவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பதும் தெரிய வரும்.
    ஆபிசில் சகுந்தலா நடிகர் திலகத்திடம் தான் ஒரு கிளப்பில் பாட இருப்பதாகவும் அதற்கு அவசியம் வர வேண்டும் என்று நடிகர் திலகத்தை வற்புறுத்த அவர் தயக்கத்துடன் ஒப்புக் கொள்வார். அங்கே செல்ல சகுந்தலா ஆடி பாடும் பாடல் காட்சி. மின்மினி பூச்சிகள் கண்களில் தென்படும் என்ற ஈஸ்வரியின் பாடல். அது முடிந்தவுடன் சகுந்தலாவை காரில் வீட்டில் கொண்டு விடும் நடிகர் திலகத்தை வீட்டிற்குள் வந்துவிட்டு போகுமாறு சகுந்தலா நிர்பந்திக்க உள்ளே நுழைவார். அவருக்கு காபி எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கொண்டு வருபவர் வேண்டுமென்றே அவர் மீது காபியை கொட்டி அவரது உடைகளை கழட்ட வைத்து அவர் பக்கத்தில் சென்று தற்செயலாக நடபபது போல் அவர் மீது தடுக்கி விழுந்து அவரை படுக்கையில் வீழ்த்தி ஒரு ஏடாகூடமான நிலையில் இருப்பது போல் செட்டப் செய்ய அங்கே வரும் அவரது அண்ணன் அதை கேமிராவில் படம் பிடித்து ஒடிவிட அவன் மோசமானவன் என்று சகுந்தலா போலி கண்ணீர் வடிக்க அப்போது முதல் அந்த வில்லனின் டார்ச்சர் ஆரம்பம். பல முறை பணம் கேட்டு வாங்கி போகும் அவன் கடைசியாக வீட்டிற்கே வந்து நெகட்டிவை கொடுத்து விடுகிறேன் 50,000 கொடுத்து விடு என்பான்.
    பணம் இல்லாமல் வீட்டில் பீரோவில் வைத்திருக்கும் நகைகளை நடிகர் திலகம் எடுக்க முயற்சிக்க விஜயா வந்து விடுவார். ஆபிசில் ஒரு சின்ன பிரச்னை. அதற்காக பணம் தேவைப்படுகிறது என்று நடிகர் திலகம் சொல்ல எடுத்துக்குங்க என்று சொல்லும் விஜயா ஆனா என்கிட்டே உண்மையை சொல்லுங்க. நம்ம கம்பெனி நல்ல லாபத்தில் போகுது. ஏன்னா நான்தான் accounts பார்க்கிறேன். அதை பாக்க சொன்னதே நீங்கதான். இப்போ எங்கிட்ட சில விஷயங்களை மறைக்கிறீங்க. உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்க நடிகர் திலகம் சற்று கோபமாக பதில் சொல்ல விஜயா விடாப்பிடியாக அவரை தடுக்க கோபத்தில் நடிகர் திலகம் உதறி விட்டு போக விஜயா கட்டிலின் முனையில் தலை இடிக்க மயங்கி விழுவார். நடிகர் திலகம் அவனை சந்திக்க அவன் சொன்ன விருகம்பாக்கம் சவுக்கு தோப்புக்கு போக அவன் வீட்டிற்கே வந்து நடிகர் திலகத்தை மிரட்டுவதை தற்செயலாக கவனித்து விடும் வாசு, மேஜர், விகேஆர் மூவரும் நடிகர் திலகத்தை பின்தொடர்ந்து செல்ல அங்கே அந்த வில்லன் நடிகர் திலகத்தின் கம்பெனியை தனது பெயருக்கு மாற்றி எழுதி தந்தால்தான் நெகட்டிவை தருவேன் என்று மிரட்ட அவனிடமிருந்து'அதை பிடுங்க நடிகர் திலகம் முயற்சிக்க அவனது ஆட்களை அவன் அழைக்க அங்கே ஒரு சண்டை காட்சி. அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு மூவரும் வந்து விட அவர்களும் சண்டையில் கலந்து கொள்ள போலீஸ் விசில் போல் வாசு அடிக்க அவர்கள் தப்பித்து ஓட அவர்களிடமிருந்து பறித்த நெகட்டிவ்களை மேஜர் தீ வைத்து கொளுத்த வீட்டிற்கு வந்தால் விஜயாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிருப்பதாக ராஜசுலோச்சனா சொல்ல அங்கே விரைவார்கள்.
    அங்கே மனைவியை என் அடித்தீர்கள் என்று டாக்டர் கேட்க நான் அடிக்கவில்லை என்பார் நடிகர் திலகம். நிறை மாத கர்ப்பிணி அவர். அவருக்கு இடுப்பு வலி வருவதற்காக இன்ஜெக்க்ஷன் போட்டிருப்பதாக டாக்டர் சொல்ல உள்ளே சென்று பார்க்கும் நடிகர் திலகம் விஜயாவிடம் தனது வருத்தத்தை சொல்ல அவர் ஆறுதல் சொல்லும் நேரத்தில் அவருக்கு இடுப்பு வலி எடுக்க அவருக்கு பெண் குழந்தை பிறப்பதுடன் இடைவேளை. வெளியே வந்தால் ரசிகர்கள் கூடி பேசுகிறார்கள். செகண்ட் ஹாப் நன்றாக இருக்கும் என என் கசின் சொல்கிறார். ரசிகர்களை விட பொதுவான ஆடியன்ஸுக்கு படம் பிடித்திருக்கிறது என எனக்கு தோன்றியது.
    இடைவேளை முடிந்து படம் தொடங்க இன்னும் சில வருடங்கள் உருண்டோடியிருக்க இப்போது நடிகர் திலகம் சற்றே வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார். தீபாவளி பண்டிகை. குழந்தைகள் வெடி வெடிக்க (ஸ்ரீதேவி சின்ன வயது மகளாக) அவர்களை நடிகர் திலகம் சத்தம் போட விஜயா சமாதானம் செய்து பாடுவார். நாற்பது வயதில் நாய் குணம் பாடல். இதிலும் பாடலின் இடையிடையே நடிகர் திலகம் பேசுவது அதற்கு விஜயா பாடல் வரிகளிலேயே பதில் சொல்வது என போகும். வாலியின் வார்த்தை விளையாட்டை இதிலும் காணலாம்.(நாற்பது வந்தா வெள்ளெழுத்து.அது யாருக்கும் உள்ள தலையெழுத்து). பாடல் முடிய அனைவரும் சந்தோஷமாக ஆடி பாடுவார்கள். அடுத்தது டெல்லியில் இருக்கும் முதலாளில் கில்பர்ட் எழுதியதாக வாசு ஒரு லெட்டரோடு ஓடி வருவார். அதில் அவர் வேலை முடிந்து தாய் நாட்டிற்கே திரும்பி போவதால் வீட்டை விற்க போகிறேன் என்று எழுதியிருக்க அனைவரும் அதை பற்றி விவாதிக்க, அவர் வீட்டை விற்கிறதா இருந்தா நானே வாங்கிறேன் என்பார் நடிகர் திலகம். இந்த முடிவு பெண்கள் மத்தியில் ஒரு விவாதத்தை கிளப்பும். நாமே இதை வாங்கினால் என்ன என்று தேவிகா மேஜரிடமும் ராஜசுலோச்சனா விகேஆரிடம் கேட்பது ஒரு புறம் என்றால் அந்தளவிற்கு பண வசதி இல்லாத வாசு மனோரமா இதை பற்றி வேறு விதமாக சிந்திப்பார்கள்.
    மனோரமாவின் மகனை விஜயா கண்டிக்க போக அது பெரிய தகறாருக்கு வழிவகுக்கும். நான்கு பேரும் நான்கு திசையாக நிற்க தங்கள் கணவன்மார்களை இதிலே அவர்கள் உள்ளே இழுக்க அவர்கள் நால்வரும் சண்டையிடுவது போல் சத்தம்போட்டு சுத்தி சுத்தி வர பெண்கள் பயந்து சண்டை வேண்டாம் என்று சொல்ல உங்களை திருத்தவே நாங்கள் இப்படி செய்தோம் என்று ஆண்கள் கூற அப்போது நடிகர் திலகம் ஒரு யோசனை கூறுவார். நாம் ஏன் அனைவரும் சேர்ந்து இந்த வீட்டை வாங்க கூடாது என்று கேட்க அனைவரும் அந்த யோசனையை ஒப்புக் கொள்வார்கள். ஆகஸ்ட் 15 அன்று கில்பர்டை வர சொல்ல அவரும் அந்த நாளில் வந்து சேருவார். வீட்டிற்கு பாரத விலாஸ் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும். முதலில் ANR வர அவரை வரவேற்கும் வாசு நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்துவார்.(நாகேஸ்வர ராவ் தேவதாஸ் பார்த்திருக்கேல), அடுத்து மது வர விகேஆர் அவரை செம்மீன் மது என அறிமுகம் செய்ய அடுத்து சஞ்சீவ் குமார். 1970 நேஷனல் அவார்ட் வின்னர் என்று மேஜர் சொல்வார். அனைவரும் பாத்திரத்தில் கையெழுத்து போட போக வாசுவும் மனோரமாவும் இருக்க மாட்டார்கள். தன்னால் பணம் புரட்ட முடியவில்லை ஆகவே வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும் வாசுவை நடிகர் திலகம் சத்தம் போடுவார். அன்னிக்கு நான் பிசினஸ் ஆரம்பிக்க நீதானே பணம் கொடுத்தே.அதை திருப்பி கூட கேட்கலே. இப்போ உனக்கு பதிலாக நான் பணம் தரேன், உன்னால் முடிஞ்சப்போ திருப்பி கொடு என்று சொல்ல அனைவரும் கையெழுத்து போட்டு முடிக்க ஆரம்பமாகும் பாடல்.
    தன்னுடைய எத்தனையோ படங்களில் தேசபக்தியை முன்னிறுத்தும் விதமாக நடிகர் திலகம் பாடல்களை இடம் பெற செய்திருக்கிறார். அவற்றில் இந்த இந்திய நாடு என் வீடு பாடலுக்கு தனி சிறப்புண்டு. உணர்வுபூர்ணமான வரிகள், அதை உயர்த்தி பிடிக்கும் இசை, ஹை பிட்சில் அதை பாடிய பாடகர்கள் அந்த உணர்வுகள் கொஞ்சமும் சோர்ந்து போய்விடாமல் திரையில் காட்சிப்படுத்திய நடிகர்கள், அதை முழுமையாக்கி தந்த ஒளிப்பதிவாளர் விஸ்வநாத ராய், இயக்குனர் ACT அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும் என்றாலும் சில வரிகள் (ஆந்திர அஸ்ஸாம் மராட்டி ராஜஸ்தான் பாஞ்சாலமும் சேர்ந்து அமைந்த தேசம் எங்கள் அன்னை பூமி பாரதம், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி பகத் சிங் பிறந்த பொன்னாடு, எங்கு பிறந்தும் எங்கும் வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள், பாரத விலாஸில் ஒன்றாய் வாழ்ந்து பேசி பழகும் கிளைகள், சத்தியம் எங்கள் வேதம் சமத்துவம் எங்கள் கீதம், வருவதை பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம்) இந்த வரிகளின்போது அன்றைக்கு ஆங்கிலத்தில் goosebumps என்பார்கள், நாம் புல்லரிக்கிறது என்று சொல்வோமே அது போன்ற ஒரு சூழல் படம் பார்க்கும் அனைவரும் உணர படத்தோடு ஒன்றி பாடல் முடிந்ததும் இங்கே வந்தே மாதரம் தியேட்டரில் ஒலித்தது. (நடிகர் திலகத்தின் படத்தில் முதன் முறையாக மலேஷிய வாசுதேவன் பாடின பாடல் இது). பாடல் முடியும்போது நடிகர் திலகத்திற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு துடிக்க முதலில் கவனிக்காமல் பிறகு அவர் மயங்கி சரிய அவரை எடுத்து டாக்ட்டரை வரவழைப்பார்கள். டாக்டராக சந்திரபாபு. கவலைப்பட ஒன்றுமில்லை. இன்னும் 50 வருஷம் நல்ல வாழ்வீங்க என பாபு சொல்ல விகேஆர் ஏன்யா 50, நூறா சொல்லு என்று பாபுவை சொல்ல வைக்க தியேட்டரில் ஒரே சவுண்ட்.
    மீண்டும் சில வருடங்கள் பறந்தோட இப்போது நடிகர் திலகமும் விஜயாவும் நரை முடியோடு காட்சியளிக்க நடிகர் திலகம் தான் இப்போது பெரிய ஸ்டேட்டஸை அடைந்திருப்பதாகவும் அதற்கேற்றாற் போல் வீட்டையும் ரீ மாடல் செய்து காட்டியது தனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்ல விஜயா ஸ்டேட்டஸ் பணம் எல்லாம் நமக்கு முக்கியமல்ல என்பார். அந்நேரம் அவர்களின் மூத்த மகன் சிவகுமார் வர ஏன் தங்கச்சியை கூட்டி வரலே என்று கேட்க அவ ஹமீதோட வருவா என்று சிவகுமார் உள்ளே போய்விடுவார். அங்கே நடிகர் திலகத்தின் மகளாக ஜெயசித்ரா, விகேஆரின் மகன் ஹமீதாக சசிகுமார். கல்லூரியில் ஜெயசித்ராவையும் சசிகுமாரையும் தப்பாக பேச சசிகுமார் அவர்களை புரட்டி எடுப்பார். ஜெயசித்ரா விகேஆர் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பார். அவரை பெரியப்பா என்றுதான் கூப்பிடுவார். மேஜரின் மகளாக ஜெயசுதா, சிவகுமாரை காதலிக்க, வாசு மனோரமாவின் மகனாக ஜெயச்சந்திரன். ஜெயசித்ராவிற்காக ஒரு புடவை வாங்கி கொண்டு வரும் விகேஆர் அதை அவர்கள் வீட்டிலே உடுத்துக் கொண்டு ஜெயசித்ரா வர விகேஆரும் ராஜசுலோச்சனாவும் பார்த்து கண் கலங்க ஜெயசித்ரா அப்படியே வீட்டிற்கு போவார்.
    கல்லூரியில் அடி வாங்கிய மாணவன் ஒருவன் இருவரையும் பற்றி தப்பாக மொட்டை கடுதாசி எழுதி நடிகர் திலகத்திற்கு அனுப்பி விட அதை படித்து விட்டு நடிகர் திலகம் உண்மை என்று நம்பி ஆத்திரப்படுவார். விஜயா எடுத்து சொல்லியும் கேட்க மாட்டார். ஜெயசித்ரா அந்நேரம் புது புடவையுடன் வர வரையும் சத்தம் போட்டு இனிமேல் விகேஆர் வீட்டிற்கு போக கூடாது, சசிகுமாரோடு பழக கூடாது என்பார். ஜெயசித்ரா தங்கள் வீட்டில் மறந்து வைத்து விட்டு போன புத்தகத்தை கொடுக்க போன விகேஆர் நடிகர் திலகம் பேசுவதை கேட்டுவிட்டு புத்தகத்தை வைத்துவிட்டு வந்த சுவடு தெரியாமல் வீட்டிற்கு சென்று அந்த கோபத்தை வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் சசிகுமாரின் மீது காண்பிப்பார். பெல்டால் அவரை விளாசி வீட்டை விட்டு போக சொல்ல என்ன காரணம் என்று தெரியாமலே சசிகுமார் வீட்டை விட்டு வெளியேறுவார். அவரை காணோம் என்று சில நாட்கள் தேடுவார்கள் பிறகு அவர் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக கடிதம் எழுதுவார். அந்த நேரத்தில் இந்திய எல்லையில் போர் மூண்டதாக செய்தி வரும். ஜெயசுதா நானும் ஆணாக பிறந்திருந்தால் போர் முனைக்கு போயிருப்பேன் என்று சொல்ல மேஜர், நீ உண்மையான பஞ்சாபி என்று பாராட்டுவார். இந்நிலையில் நடிகர் திலகத்தின் சொந்தத்தில் ஒருவர் அவரது மகனுக்கு ஜெயசித்ராவை பெண் கேட்டு வர ஆரம்ப காலங்களில் தன்னை ஒரு பொருட்டாக இந்த சொந்தங்கள் மதிக்கவில்லை என்றும் அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் தான் பெண் கொடுக்க சம்மதிப்பதாகவும் கல்யாண நிச்சயதார்த்தன்று ருபாய் ஒரு லட்சம் ரொக்கமாக தருவதாக நடிகர் திலகம் வாக்கு கொடுப்பார்.
    இதன் பிறகு சசிகுமாரிடமிருந்து ஜெயசித்ராவிற்கு கடிதம் வர அதை கோபத்துடன் பிரித்து படிக்கும் நடிகர் திலகம் அதில் எழுதியிருப்பதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைவார். காரணம் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு சகோதரிகளுக்கு காட்டும் கயிறை வாங்கி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் உடன் பிறந்த தங்கையாகவே பாவித்து கடிதம் எழுதியிருக்க மனம் உருகும் நடிகர் திலகம் அதை எடுத்து கொண்டு விகேஆரிடம் மன்னிப்பு கேட்க போக அங்கே விகேஆர் ஒரு தந்தியை கையில் வைத்துக்கொண்டு ஸ்தம்பித்து நிற்பார். சசிகுமார் எழுதிய கடிதத்தை படித்து காட்டி நடிகர் திலகம் மன்னிப்பு கேட்க அதுவரை பேசாமல் இருக்கும் விகேஆர் தந்தியை நீட்ட அதை படித்து பார்க்கும் நடிகர் திலகம் அதிர்ச்சி அடைவார். ஹமீது அல்லாஹ்வின் பாதங்களை அடைந்தான் என்று விகேஆர் சொல்லிவிட்டு தொழுகை செய்ய நடிகர் திலகம் கலங்குவார். "வியட்நாமல இருக்கிற மக்கள் கஷ்டப்பட்டாங்கன்னா விருநகரிலே இருக்கிற மக்கள் ஏன் வருத்தப்படணும், எங்கியோ இருக்கிற பங்களாதேஷுக்காக இங்கே பிறந்த ஆறுமுகம் ஏன் சாகணும் தரையிலே இருக்கிற காலிலே அடிப்பட்டா தலையிலே இருக்கிற கண்ணிலே ஏன் கண்ணீர் வரணும்" இந்த வசனத்திற்கு தியேட்டரில் எப்போதும் கைதட்டல் விழும். அன்றும் அப்படிதான். .
    இதன் பிறகு நடிகர் திலகம் மேஜர், வாசு அமர்ந்திருக்க அங்கே வரும் நடிகர் திலகத்தின் மானேஜர் புதிதாக ஆரம்பித்த பிசினஸ் லாஸ் என்றும் 50 லட்சம் நஷ்டம் என்றும் சொல்ல நடிகர் திலகம் இடிந்து போவார்.கல்யாணத்தை எப்படி நடத்த போகிறேன் என்று கலங்குவார். சொந்தக்காரங்கதானே, கொஞ்சம் தவணை கேட்டா ஒத்துக்க மாட்டங்களான்னு விஜயா கேட்க ஒத்துப்பாங்க ஒத்துப்பாங்க என்று சொல்லும் நடிகர் திலகம் ஒத்துக்குவாங்கல்லே என்று திருப்பி விஜயாவை கேட்கும் உடல் மொழி நன்றாக இருக்கும். ஆனால் கல்யாணத்தன்று இவர் நிலைமையை விளக்கி சொன்னதும் மணமகன் தந்தை ஒப்புக் கொள்ள மறுத்து பணம் கொடுத்தால்தான் கல்யாணம். இல்லாவிட்டால் உன் பெண்ணிற்கு வேறு இடம் பார்த்துக்கொள் என்று சொல்ல நடிகர் திலகம் தத்தளிப்பார். அந்த நேரம் வாசு ருபாய் பத்தாயிரத்தையும், மேஜர் தனது கம்பனியின் இடத்திற்கான பாத்திரத்தையும், விகேஆர் தனது மகன் சசிகுமாரின் பெயரில் எடுத்த இன்சூரன்ஸ் பாலிசியையும் கொண்டு வந்து நடிகர் திலகத்தின் கையில் கொடுத்து கல்யாணத்தை நடத்த சொல்ல பணம் வந்துவிட்டது என்றதும் மாப்பிள்ளையின் தந்தை கல்யாணத்தை நடத்துகிறேன் என்று சொல்ல நடிகர் திலகம் உன் சம்மந்தமே எனக்கு வேண்டாம் என்று கோபப்படுவார். உன் பொண்ணுக்கு பையனே கிடைக்காது என்று அவர் மிரட்ட உடனே வாசுவிடம் என் மகளை உன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க முதலில் யோசிக்கும் வாசு, மேஜரிடம் உன் பொண்ணை நீ கோபால் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா இருந்தா நானும் தரேன் என்று சொல்ல மேஜர் ஒப்புக்கொள்ள இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில். நடிகர் திலகம் தனியா சென்று ஒரு நாற்காலியில் அமர பக்கத்து நாற்காலியில் வெகு நாட்களுக்கு பிறகு மனசாட்சி இளமையான நடிகர் திலகமாக. உனக்கு மட்டும் வயசாகாதா என்று நடிகர் திலகம் கேட்க ஆகாது என்று மனசாட்சி சொல்ல இவர் வெறும் நாற்காலியை பார்த்து பேசுவதை பார்த்துவிட்டு விஜயா சத்தம் போட கல்யாணத்திற்கு வந்திருக்கும் டாக்டர் சந்திரபாபு பெரிய ஊசியை எடுத்துக் கொண்டு வர நடிகர் திலகம் அவரிடம் சிக்காமல் இருக்க துள்ளி குதிக்க, வணக்கம்.
    நடிகர் திலகம் நடிக்க வந்த 1952க்கு பிறகு ஒரு காலண்டர் வருடத்தில் முதல் படம் அவ்வளவு லேட்டாக வெளியானது அந்த 1973ல் தான். அதற்கு முன்பு அதிகபட்ச தாமதம் என்றால் 1961ல் மார்ச் 16 வெளியான பாவ மன்னிப்பு. ஒரு மாமாங்கத்திற்கு (12 வருடங்கள்) பிறகு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் படம் வெளியாகாமல் மார்ச் 23 வரை ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது அதுதான் முதன்முறை. ஆகவே நீண்ட காத்திருப்பிற்கு பிறகு வெளியான படம் பாரத விலாஸ். நான் முன்பே சொன்னது போல் பொது மக்கள் மத்தியில் படத்திற்கு.நல்ல ரிப்போர்ட். படம் முதல் வாரத்தில் அனைத்து ஊர்களிலும் நன்றாக போகிறது என செய்திகள் வந்தாலும் ராஜ ராஜ சோழன் வெளியான பிறகு எப்படி இருக்கும் என்ற கவலை இருந்தது. ஆனால் அந்த கவலை தேவையற்றது என்பதை வெகு விரைவிலேயே புரிந்து கொண்டோம். ராஜ ராஜ சோழனின் வெளியீடு பாரத விலாஸ் படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சென்னையில் மூன்று அரங்குகளிலும் சேர்த்து 200 காட்சிகளுக்கு மேலாக தொடர் அரங்கு நிறைந்தது. மதுரையில் தொடர் ஹவுஸ் புல் இல்லாவிட்டாலும் பெரும்பாலான காட்சிகளும் அரங்கு நிறைந்தது. தவப்புதல்வன் படத்தில் ஆரம்பித்து மீண்டும் தொடர்ச்சியாக நான்காவது படமும் 100 நாட்கள் ஓடியது. பாபுவில் ஆரம்பித்து பாரத விலாஸ் வரை 9 படங்களில் 8 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி அதில் இரண்டு வெள்ளிவிழாவும் தாண்டியது என்ற சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்தினார்.
    தமிழகத்தின் முதல் சினிமாஸ்கோப் பிரம்மாண்டம். அதன் வெளியீட்டு விசேஷங்கள், அந்த மன்னர் மன்னனை எதிர்கொண்டு வரவேற்றது, இவை அடுத்த வாரம்
    (தொடரும்)
    அன்புடன்

    siva-528.jpg
    நன்றி முரளி சிறிநிவாசன்

  8. #887
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.
    அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்கு தீனி போட
    முடியவில்லை வேறு கோவிலுக்கு
    யானையை கொடுத்து விடுங்கள்
    என்று கூறினார்களாம்.
    அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம் ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தை காண சென்ற போது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்தது என்னவென்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும் அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் வீடு ஒன்று அமைத்துத் தருவதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார் நடிகர் திலகம் ...
    இன்று வரை நடந்துக் கொண்டு இருக்கிறது அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார் ..
    இளைய திலகம் பிரபு அவர்கள்
    கோவிலுக்கு சமீபத்தில் சென்ற போது யானைப் பாகன் சொன்னார் ..
    கஜ தானம் (யானை தானம்) செய்வது
    நாடு செழிப்புடன் எந்தவித பஞ்சம்
    இல்லாமல் மக்கள் வாழ செய்யும்
    தானம் ஆகும் ...
    இது போல் கோவில்களுக்கு
    ஆறு யானை வாங்கிக் கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது ..
    சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன் போல் வாழ்ந்துள்ளார் .

    Thanks Venkateswaran Rajagopal
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #888
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எல்லா அவதாரத்திற்கும் ஒரு இனையை யூகிக்க முடிகிறது,
    உதாரணத்திற்கு
    பராசக்தி குணசேகரன்- மனோகரா மனோகரன்,
    அன்னையின் ஆணை சாம்ராட் அசோகன்- ராஜா ராணி சேரன் செங்குட்டுவன்,
    ஆலயமணி தியாகராஜன் - அவன் தான் மனிதன் ராம் குமார்,
    பாகப்பிரிவினை கண்ணையா- பழனி பழனி,
    பாசமலர் ராஜ சேகரன் - பச்சை விளக்கு சாரதி,
    இன்னமும் பல
    ஆனால் தங்கப் பதக்கம் எஸ்.பி.சௌத்ரிக்கு இனையாக தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்
    இன்று 01/06/1974 தங்கப் பதக்கம் திரைக்கு வந்த நாள்,
    தங்கப் பதக்கம் படத்தின் விளம்பரம் தான் தினத் தந்தி உட்பட செய்தி பேப்பர்களில் முழுப் பக்க விளம்பரத்தை தாங்கி வந்தது,
    தங்கப் பதக்கம் படம் தான் முதன் முதலாக தமிழ்ப் பட உலகில் இருந்து பிற மாநிலங்களிலும் ஒரே நாளில் திரையிடப்பட்டது..
    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தங்கப்பதக்கம் அதற்கு முன் இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தது,
    குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் குவித்த இந்திய திரைப்பட வரிசையில் முன்னணியில் இன்று வரை நீடித்து வருகிறது,


    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #889
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 53
    இந்த தொடர் சென்ற வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதை ஆரம்பிக்கும்போது இது இப்படி ஒரு நீண்ட தொடராக அமையும் என எதிர்பார்க்கவில்லை. நடிகர் திலகத்தின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், நடிகர் திலகத்தை விரும்புபவர்கள், தமிழ் சினிமா அபிமானிகள், பொது மக்கள் என அனைவரின் ஆதரவால் 52 வாரங்களை கடந்து வந்திருக்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் பதிவிட அனுமதித்த நடிகர் திலகம் பெயரால் இயங்கும் குழுக்களின் நிர்வாகிகளுக்கும் குறிப்பாக ஆரம்பத்தில் என்னை தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வலியுறுத்திய Nadigar Thilagam Fans குழுவின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களுக்கும் என்'மனங்கனிந்த நன்றிகள்!
    நமது பயணத்தை தொடர்வோம். ஒரு வார இடைவெளியில் வெளியான படம் ராஜ ராஜ சோழன் எனபது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். படத்தை தயாரித்தது ஆனந்த் தியேட்டர்ஸ் அதிபர் திரு ஜி.உமாபதி அவர்கள். உமாபதி திரைப்பட துறையோடு தொடர்பு கொண்டவர். அன்றைய நாட்களில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெருந்தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சென்னை மவுண்ட் ரோட்டில் இடம் வாங்கி ஒரு திரை அரங்கத்தை கட்டினார். தமிழகத்திலே முதன் முறையாக குளிர்சாதன வசதியூட்டப்பட்ட அரங்கமாக (ஏர் கண்டிஷன்) தமிழகத்திலேயே அதிக இருக்கைகள் கொண்ட அரங்கமாக சாந்தி திரையரங்கம் அமைந்தது. 1961 ஜனவரியில் திறக்கப்பட்ட அரங்கத்தில் அதே 1961 வருடம் மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட பாவ மன்னிப்பு சாந்தியில் வெளியான முதல் நடிகர் திலகம் படமானது. சென்னையில் நடிகர் திலகத்திற்கு முதல் வெள்ளிவிழா படமாகவும் தமிழகத்தில் ஏசி தியேட்டரில் வெள்ளிவிழா ஓடிய முதல் படமாகவும் சென்னை மாநகரில் 10 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் படமாகவும் பாவ மன்னிப்பு அமையவே சாந்தி திரையரங்கிற்கும் நடிகர் திலகத்திற்கும் ஒரு இணைபிரியாத சொந்தம் ஏற்பட்டு திரு வி சி சண்முகம் சாந்தி அரங்கின் பங்குதாரர்களில் ஒருவராக இணைந்தார். ஓரிரண்டு வருடத்திற்கு பிறகு உமாபதி மவுண்ட் ரோட்டிலேயே வேறொரு பெரிய இடத்தை வாங்கி அங்கே தமிழகத்தின் முதல் 70 mm திரை கொண்ட அரங்கு ஒன்றை நிர்மித்து ஆனந்த் என்ற பெயரிட்டு 1964ல் திறப்பு விழா நடத்தினார். சாந்தி அரங்கில் தனக்கு உரிமையாக இருந்த பங்குகளை நடிகர் திலகத்திடமே விற்றார் உமாபதி.
    தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அது அதுவரை இல்லாத புது முயற்சியாக தமிழ் திரைப்பட வரலாற்றில் காலாகாலத்திற்கும் தனது பெயர் சொல்லும் படமாக அமைய வேண்டும் என எண்ணினார். அவரது ஆனந்த் திரையரங்கில் பெரும்பாலும் வெளியாகும் ஆங்கில படங்கள் அகன்ற திரையில் வெளியாவதை பார்த்து அது போல தயாரிக்க வேண்டும் என எண்ணினார். நடிகர் திலகத்தின் நெருங்கிய குடும்ப நண்பரான உமாபதி நடிகர் திலகத்தை வைத்து அந்த படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரை அணுக அவரும் சரி என்றார். அகன்ற திரை என்றால் அது சரித்திர படமாக இருந்தால்தான் எடுபடும் என முடிவு செய்து அதை இயக்குவதற்கு ஏபிஎன்தான் பொருத்தமானவர் என்றும் தீர்மானித்தனர். சரித்திர கதை என்றாலே தமிழ் மக்களுக்கு கல்கியும் சாண்டில்யனும்தான் சட்டென்று நினைவுக்கு வருவார்கள். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புதினம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கல்கியின் முக்கியமான நாவல்களான பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்ற இரண்டின் திரைப்படமாக்கும் உரிமையை எம்ஜியார் பிக்சர்ஸ் வாங்கி வைத்திருந்தது. நடுநடுவே அவை திரைப்படமாக்கப்படுகிறது என்ற செய்தி வரும். ஆனால் அவை எப்போதும் அறிவிப்புகளோடு நின்று விடுவதுதான் வழக்கம். தமிழ் மண்ணின் சரித்திரம் தமிழ் மன்னன் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது ராஜ ராஜ சோழன்தான். பொன்னியின் செல்வன் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது இல்லை எனும்போது வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏபிஎன் ஒரு யோசனை சொல்கிறார். நாடக உலகில் இருந்து வந்த ஏபிஎன், அண்ணாச்சி என்றும் அவ்வை சண்முகம் என்றும் அழைக்கப்பட்ட டி கே சண்முகம் நடத்தி வந்த டிகேஎஸ் பிரதர்ஸ் நாடக குழுவில் காதல் பத்திரிக்கையின் ஆசிரியர் எழுத்தாளர் அரு.ராமநாதன் எழுதிய ராஜ ராஜ சோழன் நாவலை அடிப்படையாக வைத்து நாடகம் நடத்தப்பட்டதை சொல்லி அதன் உரிமையை வாங்கி படமாக்கலாம் என்று சொல்ல அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் தொழில்நுட்ப முறையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுவரை தமிழில் சினிமாஸ்கோப் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல ஒரு சோதனை முயற்சியாக கூட செயல்படுத்தப்படவில்லை என்பதும் கவனத்திற்கு வருகிறது. இது 1971 இறுதி பகுதி. ஏபிஎன் அப்போது அகத்தியர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். படம் முடியும் தறுவாயிலிருக்கிறது. ஏபிஎன் ஒரு சோதனை முயற்சியாக அகத்தியர் படத்தின் கிளைமாக்ஸ் ரீல் படமாக்கும்போது இரண்டு கேமராக்களில் படமாக்குகிறார். ஒரு கேமராவில் சினிமாஸ்கோப் முறையிலும் மற்றொன்றில் 35 mm முறையிலும். பிலிம் ரோலை கழுவி பார்க்கும்போது சினிமாஸ்கோப் முறையில் எடுத்தது கிளியர் ஆகவும் அவுட் ஆப் போகஸ் ஆகாமலும் சரியான முறையில் அமைந்திருக்கவே ராஜ ராஜ சோழன் படத்தை சினிமாஸ்கோப்பில் எடுப்பது உறுதி செய்யப்பட்டு 1972 பிப்ரவரி 2 ந் தேதி பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டது. ஒரு வருடம் நீண்ட படப்பிடிப்பு நிறைவடைந்து 1973 மார்ச் 15 அன்று தணிக்கை செய்யப்பட்டு மார்ச் 31 அன்று ரிலீஸ் என அறிவிக்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் முதல் நாள் ஊர்வலங்கள் தமிழகமெங்கும் ஜெகஜோதியாக நடந்தது. பல ஊர்களிலும் யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடந்தது. திருச்சி போன்ற ஊர்களில் ஹெலிகாப்டர் மூலமாக நோட்டீஸ்கள் வீசப்பட்டன. அதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது என பல ஊர் ரசிகர்களும் சொல்வதுண்டு. முன்பே சொன்னது போல் மதுரை சிந்தாமணி அரங்கில் மார்ச் 31 வெளியானது.
    படத்தின் விநியோக உரிமையை பொறுத்தவரை இந்த படத்தை வாங்குவதற்கு தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலும் இருந்த வெளியீட்டாளர்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், சிங்கப்பூர் இலங்கை உட்பட வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் போட்டி போட்டனர். ஆனால் உமாபதி எவருக்கும் விநியோக உரிமை கொடுக்காமல் தானே நேரிடையாக தமிழகமெங்கும் தனது ஆனந்த் மூவிஸ் மூலமாகவே வெளியிடப் போவதாக சொல்லிவிட்டார். பந்துலு கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதர் சிவந்த மண் படத்திற்கும் செய்த அதே முறையை கையாண்டார் உமாபதி. ஒவ்வொரு ஏரியாவிலும் அவருக்கு அறிமுகமான விநியோகஸ்தர்களை வைத்து அந்த ஏரியா திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய சொன்னவர் முதன் முறையாக சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் மற்றும் ஆனந்த் மூவிஸ் விநியோக அலுவலகங்களில் ரிசர்வேஷன் முறை மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்தார். அந்த வகையில் மதுரையில் ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டது. டிக்கெட்டுகளை முன்கூட்டி பெற கூட்டம் அலைமோதியது. என் நினைவு சரியென்றால் ரசிகர் மன்றத்திற்கு டோக்கன்கள் கொடுக்கப்படவில்லை. ஆகவே விநியோகஸ்தர் அலுவலகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கஸின் ஓப்பனிங் ஷோ டிக்கெட்க்கள் எங்கள் இருவருக்கும் வாங்க எவ்வளவோ முயற்சி எடுத்தார். ஆனால் இந்த முறை எங்களுக்கு கிடைக்கவில்லை. கிடைப்பது மிக கடினம் என்பது எங்களுக்கு நன்கு புரிந்தது. ஓப்பனிங் ஷோ மட்டுமல்ல ஓப்பனிங் டேயின் எந்த ஷோவிற்கும் கிடைக்கவில்லை. மறுநாள் இரண்டாம் நாள் காட்சிகளுக்கும் கிடைக்கவில்லை. ஏமாற்றமே! என்ன செய்வது? ஒரு வழியாக திங்கட்கிழமை மாட்னி ஷோவிற்கு ரிசர்வேஷன் கிடைத்தது. நல்ல அடர்த்தியான வழு வழு தாளில் அச்சடிக்கப்பட்ட ஸ்லிப் இப்போதும் நினைவில்.
    நமக்கு எப்போதும் படம் பற்றிய ரிப்போர்ட் எப்படி இருக்குமோ என்றுதான் கவலை. கஸினிடம் கேட்டால் யாரையும் பார்க்கவில்லை என்கிறார். ஆனால் ஓப்பனிங் ஷோ நடக்கும் அந்த சில மணி நேரங்கள் அவர் வீட்டில் இல்லை. தியேட்டர் பக்கம் போயிருந்தேன், ஆனால் படத்திற்கு போகவில்லை என்கிறார். எங்கள் வீட்டருகே ஈவினிங் ஷோ போவதற்காக தயாரான ஒரு கூட்டம் ஒரு டிக்கெட் இருக்கிறது என்று சொல்ல என் கஸின் போக முயற்சிக்க அதற்குள் அதற்கு வேறு ஒருவர் வந்துவிட்டார். நாங்கள் திங்கள் மாட்னி போகிறோம். அதற்கு முன்பு அரசல் புரசலாக ரிப்போர்ட் பற்றி கேள்விபட்டோம். எப்படியிருந்தாலும் பார்க்க போகிறோம் என்று சிந்தாமணி டாக்கீஸ் போய்விட்டோம். மிக பிரம்மாண்டமான கூட்டம். நாங்கள் தியேட்டரின் எதிர் பிளாட்பார்மில் நிற்கிறோம். போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த பாடுபடுகிறது. ஆனால் இந்த முறை ரிசர்வேஷன் ஸ்லிப் வைத்திருந்தவர்களை தியேட்டரின் மெயின் கேட் வழியாக அனுமதிக்க நாங்கள் உள்ளே நுழைந்து ஸ்லிப் மாற்றி பால்கனி டிக்கெட் பெற்றுக் கொண்டு சீட்டில் அமர்கிறோம். வெகு விரைவாக அரங்கம் நிறைய படம் தொடங்குகிறது.
    ஏபிஎன் படத்தில் தொடக்கம் எப்படியிருக்குமோ அதே போல் ஆனால் இந்த முறை விஜயலட்சுமி பிக்சர்ஸுக்கு பதிலாக ஆனந்த் மூவிஸ்.லோகோ, பின்னணியில் ஏபிஎன் குரல் என ஆரம்பித்து படத்தின் டைட்டில் ஓடுகிறது. நடிகர் திலகத்தின் பெயர் ஒரு முறை நடிகராகவும் மற்றொரு முறை பின்னணி பாடகராகவும் காட்டப்படுகிறது. டைட்டில் முடிந்து கஜேந்திர கணேச தரிசனம். அது ஆடி அசைந்து செல்ல தஞ்சை பெரிய கோவில் நந்திகேஸ்வரர் சிலையை வடிவமைக்கும் பணியில் தலைமை சிற்பியாக கே.டி சந்தானம் அவருக்கு உதவியாளனாக மாஸ்டர் சேகர். அன்று ஐப்பசி சதய திருநாள் என்பதும் சோழ சக்ரவர்த்தியின் பிறந்தநாள் என்பதும் அதனால் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறுவதும் கரகாட்டம், மயிலாட்டம் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த கொண்டாட்டங்கள் அந்த சிறுவனின் மனதை சலனப்படுத்த அதை போய் பார்க்க வேண்டும் என்று அவன் உந்தப்படுவது பார்வையாளனுக்கு புரிகிறது. சிற்பி சந்தானம் சொல்வார்.நமது மன்னருக்கு இணை அவர்தான். ஒருவரை ஒரு பணிக்கு அமர்த்தும்போதே அவர் தேவை என்ன என்பதையும் புரிந்து கொண்டு செய்வார். எனக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு என்பதனால் வெற்றிலை மடித்து கொடுக்கவும் பின்னர் வெற்றிலை உமிழ் நீரை பிடிக்க ஒரு படிகம் ஏந்தவும் உன்னை ஏற்பாடு செய்திருக்கிறார் என்று சொல்ல சேகர் ஆம் என்பார். ஒரு கட்டத்தில் சேகர் சிற்பிக்கு தெரியாமல் கொண்டாட்டங்களை பார்க்க ஓடிவிட சுற்றிலும் நடப்பதை கவனிக்காமல் வேலை பார்க்கும் சிற்பி, பொன்னா வெற்றிலை மடித்து கொடு என்று சொல்ல மடித்த வெற்றிலையை மணிக்கட்டருகே கவசம் அணிந்த ஒரு கை நீட்ட அதை வாங்கி மென்றுவிட்டு படிகத்தில் உமிழ் நீர் உமிழ அப்போதுதான் அந்த கைகளை கவனித்து பதறி எழ அங்கே எச்சில் படிகம் ஏந்திய மும்முடிச்சோழ சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனாக அழகு கம்பீரம் வீரம் மிக்க ஆண்மை என்ற அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களோடும் நடிகர் திலகம் நின்று சற்றே தலையை இடது பக்கம் அசைத்து நான்தான் என்று உடல்மொழியிலேயே சொல்ல என்ன கைதட்டல்! சிற்பி தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்ட நடிகர் திலகம் அவரை சமாதானப்படுத்துவார். என்னை போன்ற மன்னர்களுக்கெல்லாம் இந்த புகழ் பெருமை எல்லாம் சில காலம்தான். நாளை என் மகன் ராஜேந்திரன் என்னை விட சிறப்பாக ஆட்சி செய்து விட்டால் என்னை மறந்து விட்டு அவனை புகழுவார்கள். ஆனால் உங்கள் நிலை அப்படியல்ல. வெறும் கற்களை உயிருள்ள சிற்பங்களாக மாற்றி எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவை மக்களால் பாராட்டப்படும். சுருக்கமாக சொன்னால் இப்படி காலத்தையும் கடந்து காலத்தையும் கடந்து நிற்பது உங்கள் கலை. ஒரு காலத்திற்குள்ளே அடங்கி விடுவது எம் போன்ற மன்னரின் நிலை என்பார். காலத்தையும் கடந்து நிற்கும் அந்த வசனம் காலங்களை கடந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கே பொருத்தம்.
    அதே காட்சியில் சோழனின் மனைவி புவனமாதேவியாக விஜயகுமாரி வருவார். அங்கே வேலை செய்யும் பெண்ணின் குழந்தை அழ அதை சமாதானப்படுத்துவார். சோழனின் தலைமை அமைச்சராக சஹஸ்ரநாமம் வர இன்று கருவூர் தேவர் அவர்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தீர்கள் என்று நடிகர் திலகத்திடம் நினைவூட்ட அரண்மனைக்கு விரையும் நடிகர் திலகம். அங்கே கருவூர் தேவராக டி ஆர் மகாலிங்கம். அவர் தமிழரசி என்ற பெண் புலவரை அறிமுகப்படுத்த உங்கள வரலாற்றை நாடகமாக எழுத விழைகிறேன் என்று அவர் சொல்ல நாயகனாக எனக்கு தகுதி இருக்கிறதா என்று நடிகர் திலகம் கேட்பார். நவரச திலகமாயிற்றே தாங்கள். உங்களை விட்டால் நாயகனாவதற்கு யாருக்கு தகுதி இருக்கிறது என்று புலவர் பதில் சொல்ல அரங்கம் அதிர்கிறது. உங்கள் பாடலை கேட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று நடிகர் திலகம் சொல்ல மகாலிங்கம் ஆலாபனை செய்ய ஆரம்பிக்க நடிகர் திலகமே தென்றலோடு உடன் பிறந்தாள் என்ற வசனமும் பாடல் வரிகளுமாக ஆரம்பிக்க மகாலிங்கம் அதை பாடலாக பாடுவார். நடிகர் திலகத்தின் நடை உடல்மொழி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும் காட்சி இது. அந்தப்புரம் செல்லும் நடிகர் திலகத்தை விஜயகுமாரி வரவேற்க அங்கே மூன்று பெட்டிகள் இருப்பதை பார்த்துவிட்டு என்ன என்று கேட்க உங்கள் மகள் குந்தவையின் பரிசு என பதில் வரும். உள்ளே இருக்கும் பொருட்களுக்கு பொருள் கூற சொல்ல முதல் பெட்டியில் கருங்கல் வைரக்கல் மலர் இருக்க என்ன இது என்ன இது என்று நடிகர் திலகம் கேட்க குந்தைவையாக லட்சுமி அறிமுகம். நாட்டின் நலனுக்காக தீர்மானங்கள் எடுக்கும்போது கருங்கல்லை போன்ற இதயம், எதிரிகளிடம் வைரக்கல்லை போன்ற உறுதி, குடும்பத்தினரிடம் மலர் போன்ற மென்மை என்று லட்சுமி சொல்லுவார். அடுத்த பெட்டியில் நாற்று முடியும் வைர முடியும் இருக்க அதற்கு சரியான விளக்கமும் மூன்றாவது பெட்டியில் இருக்கும் வெண்சாமரம், அதில் இருக்கும் கவரிமான் முடி இவற்றை வைத்து நடிகர் திலகம் விளக்க லட்சுமி என்னப்பா என்று சொல்ல உனக்கு அப்பனம்மா நான் என்பார். அப்போது அங்கே பெரிய குந்தவை நாச்சியாராக எஸ் வரலட்சுமி வர அவரிடம் நடிகர் திலகம் ஆசி கோர, அந்த தெய்வத்தின் வடிவமப்பா நீ என்று வரலட்சுமி சொல்ல மீண்டும் அலப்பறை. அமைச்சரின் தங்கை வீரமா தேவியாக குமாரி பத்மினி அறிமுகம். அண்ணன் ராஜேந்திரன் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று லட்சுமி சொல்ல வேங்கி நாட்டின் விடுதலைக்கு உதவ சென்றிருக்கிறான் என்று நடிகர் திலகம் சொல்ல காட்சி மாறுகிறது.
    அங்கே ராஜேந்திரனாக சிவகுமார் விமலாதித்தனாக முத்துராமன் இவர்களுடன் வேங்கி மன்னன் சக்தி வர்மன். இரட்டைப்பாடி மன்னன் சத்யாசிரியனை தோற்கடித்து வெற்றி பெற்றதை சொல்லும்போது அவன் தப்பித்து விட்டதாக செய்தி வரும். உள்ளே அரண்மனையில் சத்யாசிரியனாக மனோகர் அவர் மனைவியாக புஷ்பலதா, அவரின் அந்தரங்க ஆலோசகர் பாலதேவராக நம்பியார் அறிமுகம். தன்னை கட்டிப்போட்டு விட்டு தப்பித்து கொள்ளும்படியும் தான் சோழர்களோடு சேர்வது போல் நடித்து அவன் கூட இருந்தே குழி பறிக்கிறேன் என்று நம்பியார் சொல்ல மனோகர் அப்படியே செய்வார். அரண்மனைக்கு உள்ளே வரும் சிவகுமார் முத்துராமன் இவரை பார்க்க இவர் யார் என்பதை சக்திவர்மன் கூறுவார். அவரை கைது செய்து சிறைக்கைதியாக அடைக்கும்படி முத்துராமன் கூற நம்பியார் நான் மாறி விட்டேன்.உங்கள் பக்கம் வந்துவிட்டேன். என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூற அவர்கள் மறுக்க என்னை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று சொல்ல அவர் கட்டுக்கள் அவிழ்க்கப்பட அங்கே அணிவகுத்து நிற்கும் வீரர்கள் வரிசையை பக்கத்தில் சென்று பார்த்து சோழ சக்ரவர்த்திகளே என்று சொல்ல அங்கே வீரனாக மாறு வேடத்தில் வந்திருக்கும் நடிகர் திலகம் வேடத்தை கலைத்து நம்பியாரை மெச்சி தன்னுடன் அழைத்து செல்வார். சக்திவர்மனுக்கு முடிசூட்டி வேங்கி நாடு சுதந்திர நாடாக திகழும் என்ற உறுதி அளித்து நடிகர் திலகம் தஞ்சை செல்ல தொடர்ந்து சிவகுமார் முத்துராமனை அழைத்துக் கொண்டு தஞ்சை வருவார். அங்கே லட்சுமி முத்துராமன் இடையே உருவாகும் காதல், சிவகுமார் குமாரி பத்மினி இடையே ஏற்கனவே இருக்கும் காதல் ஆகியவை பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட இரு ஜோடிகளும் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சி மாதென்னை படைத்தான் உனக்காக. அனைத்து தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம் பெறும் பாடல், மைசூர் பிருந்தாவனத்தில். முத்துராமன் அண்ணனுக்கு உதவியாக தான் இருக்க வேண்டும் என்று மீண்டும் வேங்கி நாட்டிற்கே போய்விடுகிறார்.
    நம்பியாரை தனது அரசியல் ஆலோசகராக நியமித்து அவரை ஒரு தனி மாளிகையில் தங்க வைப்பார் நடிகர் திலகம். அங்கே இரு புலவர்கள் என்று இருவரை அறிமுகம் செய்ய அதில் ஒருவர் சுருளிராஜன். அங்கே நம்பியாரை சந்திக்க வேண்டும் என்று மனோரமா வர, நம்பியாரை பார்த்தவுடன் நான் உங்கள் இரட்டைப்பாடி நாட்டை சேர்ந்தவள். இப்படி சோற்றுக்காக சோழனின் காலில் விழுந்து விட்டீர்களே என்று குற்றம் சாட்ட முதலில் தன் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தாமல் பேசும் நம்பியார் சோழனை ஒழிப்பதே என் லட்சியம் என்று சொல்லியவாறு மனோரமா கத்தியால் கையை கிழித்துக் கொண்டு ரத்தத்தில் சத்தியம் செய்யவே ஏற்றுக்கொண்டு சற்று பொறு நாம் சதிவலை பின்னிதான் சோழனை சாய்க்க முடியும் என்பார். அங்கே மனோகர் குடியும் கும்மாளமாக இருக்க புஷ்பலதா அவரை திருத்த முயற்சிப்பதாக வரும். ஆனால் மனோகர் அந்த பேச்சை அலட்சியம் செய்வார். அந்த இடத்தில ஏ.சகுந்தலாவின் ஒரு டான்ஸ் பாடல் வரும் (இது சில சமயங்களில் இடைவேளைக்கு பின்னரும் காட்டப்பட்டதுண்டு. இந்த பாடல் சில நேரம் வெட்டப்பட்டதுமுண்டு).
    அடுத்து தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் மேற்பார்வையிடும் நடிகர் திலகம். அங்கே வரும் எஸ்.வரலட்சுமி தன்னுடன் வந்த சீர்காழியை நம்பியாண்டார் நம்பி என அறிமுகப்படுத்தி நான் ஏற்கனவே இவரை பற்றி சொல்லியிருக்கிறேனே, சிவத்தொண்டர். தேவாரம் பாடுவதில் வல்லவர் என்று சொல்ல நடிகர் திலகம் ஒரு பதிகம் பாட சொல்ல சீர்காழி பாடுவார். மூவர் பாடிய தேவாரம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்க அதை திருமுறைகளாக தொகுத்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முயற்சிக்கிறேன் ஆனால் என்று இழுக்க என்ன தடை என்று நடிகர் திலகம் கேட்க அந்த ஓலை சுவடிகள் அனைத்தும் சிதமபுரம் நடராஜர் ஆலயத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. தேவாரம் பாடிய மூவரும் நேரில் வந்தால்தான் திறவுகோல் கொடுக்கப்படும் என்று சீர்காழியார் சொல்ல அவ்வளவுதானே ஏற்பாடு செய்து விடலாம் என்று நடிகர் திலகம் சொல்ல ராஜ ராஜா என்ன விளையாடுகிறாய் என்று வரலட்சுமி கேட்க மூவருடனும் ஆலயத்திற்கு வருவதாக செய்தி அனுப்பி விடுங்கள் என்று அமைச்சருக்கு சொல்வார் நடிகர் திலகம்.
    சிதம்பரம் ஆலயம். அங்கே வரும் நடிகர் திலகத்தையும் வரலட்சுமி மற்றும் சீர்காழியரை வரவேற்கும் தலைமை குருக்கள் அவரிடம் நீங்கள் அனுப்பிய செய்தியை கேட்டோம் ஆனால் எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.என கூற நடிகர் திலகம் அவர்களை அழைத்து வாருங்கள் என்று சொல்ல, பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சிவிகைகள் அங்கே இறக்கப்பட்ட திரை சீலையை நீக்கி நாவுக்கரசர், ஞானசம்பந்தர் சுந்தரர் என்று கூறி அவர்களின் சிலையை காண்பிப்பார், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று குருக்கள் கேட்க இவர்கள் சிலை என்றால் அங்கே அம்பலத்தில் நடனமாடும் என் அப்பன் நடராஜனும் சிலைதான். அவன் கடவுள் என்றால் இவர்களும் கடவுள்தான் என்று பதிலளிக்க திறவுகோல் கொடுக்கப்படும். திறந்து உள்ளே சென்று செல்லரித்து கிடக்கும் மணல் மேட்டை ஒதுக்கி சுவடிகளை அள்ளி எடுத்து சீர்காழியிடம் கொடுத்து இதை திருமுறையாக வரிசைப்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என்பார். அங்கே நடராஜர் சன்னதியில் வரலட்சுமி ஏடு தந்தானடி தில்லையிலே என்று பாட இறுதியில் சீர்காழியும் சேர்ந்து கொள்வார்.(தான் தனி பாடலாக இசையமைத்த ஆடுகின்றானடி தில்லையிலே பாடலின் அதே மெட்டில் குன்னக்குடி இசையமைத்திருப்பார்). நம்பியாரின் மாளிகையில் உள்ள ரகசிய சுரங்க பாதை வழியாக மனோகர் நம்பியாரை வந்து சந்திக்க நீங்கள் அடிக்கடி கடிதத்தில் குறிப்பிடும் பெண் இவள்தானா என்று கேட்டு மனோரமாவை அறிமுகப்படுத்தி கொள்வார். சோழனுக்கு விமலாதித்தனை விரோதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இனி நேரில் வர வேண்டாம் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஒரு ஒற்றனை அனுப்பி வைக்க சொல்ல மனோகரின் கூட வந்திருக்கும் ஒற்றன் மட்டுமே இனி வருவான் என்று சொல்லி இருவரும் கிளம்பி செல்வார்கள்.
    தஞ்சைக்கு வரும் விமலாதித்தன் சக்ரவர்த்தியை சந்திக்க, உன் அண்ணன் இறந்தவுடன் என்னை கூட அழைக்காமல் நீயே முடிசூட்டிக் கொண்டாயே என்று நடிகர் திலகம் கேட்க நாடே சோகத்தில் ஆழ்ந்த நேரத்தில் நான் விமரிசையாக முடிசூட்டு விழா கொண்டாட விரும்பவில்லை. அதனால் தங்களை அழைக்க முடியவில்லை என்பார். எனது நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று முத்துராமன் சொல்ல சோழ நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் மக்களே தேர்ந்தெடுக்கும் நபர்களே ஊர் தலைவர்களாக பதவி வகிக்கிறார்கள் ஆகவே குடவோலை முறைப்படி மக்களாட்சியை அறிமுகம் செய்ததே நான்தான் என்பார் நடிகர் திலகம். சரி போகட்டும் உங்கள் நாடு எங்கள் சோழநாட்டின் தலைவாசலாக இருப்பதால் அங்கே எங்கள் தரைப்படையை நிறுத்த வேண்டும் என்பார். முத்துராமன் மறுப்பார். எங்கள் நாட்டிற்கு திரை செலுத்த வேண்டும் என்று கூற முத்துராமன் மறுக்க அப்படியென்றால் சோழ நாட்டு படைகள் வேங்கியின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தும் என்று சொல்ல முத்துராமன் எங்கள் நாட்டில் கடைசி மனிதன் இருக்கும்வரை நடக்காது என்று நடிகர் திலகத்திடமும் நம்பியாரிடமும் கோபப்பட்டு வெளியேற அந்நேரம் லட்சுமி வர இளவரசியுடனாவது சாந்தமாக உரையாடுங்கள் என்று சஹஸ்ரநாமம் சொல்ல பெண்ணை காட்டி என் மண்ணை பறிக்க பார்க்கிறீர்களா என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியேறுவார். வழியில் எதிர்ப்படும் சிவகுமாரிடம் அந்த பாலதேவரிடம் எச்சரிக்கையாக இருக்க சொல் உன் தந்தையிடம் என்று கூறி போக நடிகர் திலகத்திடம் வந்து என்ன நடந்தது என்று கேட்க அவர் கோபத்துடன் கையை அசைத்து உள்ளே போக சொல்லுவார்.
    தஞ்சை கோவில் பணிகள் நிறைவுற்று அதற்கு குடமுழுக்கு நடத்தப்பட முடிவு செய்யப்படும். தமிழகத்திலேயே மிக உயர்ந்த கோபுரமாக விளங்கும் என்று நடிகர் திலகம் சொல்லுவார். தஞ்சை பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்படும். அந்த விழாவில் என் மகள் குந்தவை நாச்சியாரின் நடன அரங்கேற்றமும் நடைபெறும் என நடிகர் திலகம் அறிவிப்பார். விழாவிற்கு அனைத்து மன்னர்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி சொல்ல விமலாதித்தனுக்குமா என்று நம்பியார் கேட்க வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்லிவிடுவார். என் நண்பனுக்கு அழைப்பு இல்லாததனால் நான் கரூர் பாசறைக்கு போகிறேன் என்று அமைச்சரிடம் சொல்லி விட்டு சிவகுமார் போய்விடுவார்.
    குடமுழுக்கு காட்சி. பெரிதாக சாரம் கட்டி கோபுர உச்சிக்கு செல்ல வழி ஏற்படுத்தியிருக்க அதில் கலச நீரை கையில் எடுத்துக் கொண்டு நடிகர் திலகம் ஏறிப்போகும் காட்சியை மிக நன்றாக படமாக்கியிருப்பார்கள். மேலே சென்று கலசத்தின் புனித நீரை கோபுர கலசங்களின் மேல் அபிஷேகம் செய்ய மக்கள் அனைவரும் ஆர்பரிப்பர். அதை தொடர்ந்து உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடிகர் திலகம் செய்ய வரலட்சுமி, மகாலிங்கம் மற்றும் சீர்காழியார் மூவரும் சேர்ந்து பாடும் தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே பாடல் காட்சி. அது முடிந்து அங்கே இருக்கும் பெரிய மாடத்தில் வந்து நின்று நடிகர் திலகம் மக்களை பார்த்து உரையாற்றும் காட்சி வருகிறது. மாடத்திலிருந்து கீழே இறங்கி வர அங்கே முத்துராமன் நிற்பதை பார்த்துவிட்டு நீயா? அழைப்பில்லாமல் எப்படி வந்தாய் என்று கேட்க மன்னனாக வரவில்லை. கலைஞனாக வந்திருக்கிறேன்.என்பார். போட்டி பொறாமை இவற்றையெல்லாம் தாண்டி எவன் கலையை ரசிக்கிறானோ அவனே நல்ல கலைஞன் என்பார் நடிகர் திலகம். தங்களுடன் அமர்ந்து நாட்டியத்தை ரசிக்க சொல்ல மறுத்துவிட்டு ஒரு மூலையில் நின்று நாட்டியத்தை பார்ப்பார். லட்சுமி ஆட துவங்கி பின் பாடலுடன் தொடர்வார். நாதனை கண்டேனடி, சுசீலாம்மாவின் பாடல் (படத்திலேயே குன்னக்குடி போட்ட உருப்படியான பாட்டு இது ஒன்றுதான் என்று ரசிகர்கள் சொல்வதுண்டு). பாடலுக்கு நடுவில் லட்சுமி கவன பிசகாக தடுமாறி விட முத்துராமன் அதை சுட்டிக்காட்டி வாதம் செய்வார். லட்சுமியும் எதிர் வாதம் செய்ய என் நாட்டியத்திற்கு உங்களால் வாசிக்க முடியுமா என லட்சுமி கேட்க என் வாசிப்பிற்கு உங்களால் ஆட முடியுமா என்று முத்துராமன் பதில் சவால் விடுவார்.(நம்பியார் முத்துராமனை கண்டிக்க நடிகர் திலகம் அவரை தடுப்பார்.இது கலைஞர்கள் பிரச்னை. இதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. நிறைய கைதட்டல்கள் வாங்கின வசனம்). முத்துராமன் மிருதங்கத்தை வாசிக்க லட்சுமி ஆட ஒரு கட்டத்தில் நடிகர் திலகம் எழுந்து முத்துராமனை நிறுத்த சொல்லிவிடுவார். என் மகளை நீ கொடுமைப்படுத்துகிறாய். இதை நான் அனுமதிக்க முடியாது என்று கூற முத்துராமன் வெளியேற இடைவேளை.
    இடைவேளை நேரத்தில் படம் பற்றிய ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. மீண்டும் தொடங்க அரண்மனையில் லட்சுமி தனது அத்தையான வரலட்சுமியிடமும் தாய் விஜயகுமாரியிடமும் கோபமும் வருத்தமுமாக புலம்புவார். நடிகர் திலகம் அங்கே வர அவருடனும் இது தொடரும். சிறிது நேரத்தில் சிவகுமார் திரும்பி வர குடமுழுக்கு விழாவிற்கு இல்லாமல் ஏன் கரூர் பாசறைக்கு போனாய் என்று நடிகர் திலகம் வினவ அது முடிந்த விஷயம் என்பார் சிவகுமார். வேங்கி நாட்டின் மீது படையெடுத்து சென்று நாட்டை கைப்பற்றி வர நடிகர் திலகம் சொல்ல சிவகுமார் மறுக்க இது சக்ரவர்த்தியின் கட்டளை என்பார் நடிகர் திலகம்.மன்னிக்க வேண்டும் என் நண்பன் மீது போர் தொடுத்து வெற்றி பெறுவதுதான் வீரம் என்றால் அது எனக்கு தேவையில்லை என்று உடைவாளை எடுத்து நடிகர் திலகம் கையில் கொடுத்துவிட்டு போய் விடுவார். வீரமா தேவியின் மீது கொண்டுள்ள காதலினால்தான் இளவரசர் கோழையாகி விட்டார் என்று நம்பியார் சொல்ல நடிகர் திலகம் குமாரி பத்மினியிடம் வந்து குற்றம் சாட்டி பேச அவர் நான் காதலித்தது ஒரு கோழையை அல்ல. என்னால் உங்கள் குலத்திற்கு இழுக்கு வராது என்று சொல்லும்போதே சிவகுமார் ஓடோடி வந்து என வீரத்தை சந்தேகித்தால் நான் பொறுக்க மாட்டேன். நண்பன் என்பதற்காக சற்று தயங்கினேன். போர்க்களம் புகுந்து வெற்றியுடன் திரும்புவேன் என்று சொல்லி போக ஒரு விஷம புன்னைகையோடு உன் காதலுனும் கோழையல்ல, என் மகனும் கோழையல்ல என்பார் நடிகர் திலகம். அப்லாஸ் அள்ளிய வசனம்.
    இதற்கிடையில் மனோரமா சுருளிராஜன் மற்ற இரு காவலர்கள் இடம் பெறும் சில நகைச்சுவை(?) காட்சிகள் வந்து போகின்றன. அங்கே வேங்கி நாட்டின் மீது படையெடுத்து செல்லும் சோழ படையும் அதை எதிர்கொண்டு நிற்கும் வேங்கி நாட்டு படையும் போர்முனையில் எதிரெதிரே நிற்க போர் ஆரம்பிக்கும் நேரம் அங்கே ஒரு சிவனடியார் வருவார். சண்டை வேண்டாம் என சொல்வார். இல்லை சண்டை செய்தே தீருவோம் என சிவகுமார் முத்துராமன் இருவரும் சொல்ல ஏதோ ஒரு நாடு வெற்றி பெறுவதற்காக இத்தனை பேர் உயிரிழக்க வேண்டுமா? சண்டைதான் முடிவென்றால் நீங்கள் இருவர் மட்டுமே போரிட்டு வெற்றி தோல்வியை முடிவு செய்யலாமே என்று யோசனை சொல்ல இருவரும் ஏற்றுக் கொள்வார்கள். சிவனடியாரை இருந்து பார்க்க சொல்வார்கள். ஆனால் நான் ஜீவ இம்சைக்கு எதிரானவன் என கூறி சிவனடியார் அங்கிருந்து விலகி வந்து சற்று தூரத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தினுள்ளில் சென்று மீண்டும் வெளியே வரும்போது உடையெல்லாம் மாற்றி சோழ சக்ரவர்த்தியாக நடிகர் திலகம் வந்து குதிரை ஏறி போவார். அங்கே சிவகுமார் முத்துராமன் சண்டையில் சிவகுமார் வெற்றி பெற முத்துராமனை தன்னுடன் அழைப்பார். வரமாட்டேன் என சொல்லும் முத்துராமனை தகுந்த மரியாதையுடன் நடத்துவதாக கூறி சிவகுமார் அழைத்து செல்வார்.
    போர்க்கைதியான முத்துராமனை புலிக்கூண்டில் அடைத்து கோட்டை வாசலில் நிறுத்திவிட நம்பியார் சொல்ல அதை நடிகர் திலகம் ஏற்றுக் கொள்வார். சிவகுமார் எதிர்க்க, வேங்கி நாட்டை வெற்றி கொண்டதோடு உன் வேலை முடிந்துவிட்டது என அவரை அடக்கி விடுவார் நடிகர் திலகம். கோட்டை வாசலில் புலிக்கூண்டில் வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் அங்கே கூடி இருக்கும் பொது மக்களிடம் பேசி சோழ நாட்டிற்கு வேங்கி நாட்டு என்றுமே நட்பு நாடு. இதை கெடுப்பது பால தேவர்தான் என்று சொல்ல அந்த நேரம் நம்பியார் அங்கே வர பொதுமக்கள் அனைவரும் நம்பியாருக்கு எதிராக குரல் கொடுக்க அவர் அங்கிருந்து ஓடி பின்னர் முத்துராமனை பாதாள சிறையில் அடைக்க சொல்லி நடிகர் திலகத்திடம் கூற அதன்படியே அடைக்கப்படுவார். அவரை அங்கிருந்து விடுவிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று லட்சுமி சிவகுமாரிடம் யோசனை கேட்க சிறையிலிருந்து தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு ஒரு சுரங்க பாதை இருக்கிறது. அதன் வழியாக நீ விமாலாதித்தனை அழைத்துக் கொண்டு சென்று பெருவுடையார் சன்னதியில் மாலை மாற்றி கொள்ளுங்கள் என்பார். ஆனால் அந்த சுரங்க பாதை எங்கே இருக்கிறது என்பது தெரியாது என்பார். அத்தைக்கு தெரியும் என்பார்
    லட்சுமி வரலட்சுமியிடம் சுரங்க பாதைகள் பற்றி கேட்க அரண்மனையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பல்வேறு சுரங்க பாதைகள் இருக்கின்றன என்றும் சிறைச்சாலையிலிருந்து பெரிய கோவிலுக்கு கூட வழி இருக்கிறது என்று சொல்ல லட்சுமி நம்ப மாட்டேன் என்று சொல்ல அவர் காதோடு ரகசியமாக கூறுவார் வரலட்சுமி. அந்நேரம் அங்கே நடிகர் திலகம் ஆஜராகி என்ன அத்தையும் மருமகளும் ரகசியம் பேசுகிறீர்கள் என்று கேட்க வரலட்சுமி சமாளிப்பார். கோவில் பிரசாதம் என்று நடிகர் திலகம் கொடுக்க உன் மகளுக்கு கொடு என்பார் வரலட்சுமி. மலர் மாலையை கையில் எடுத்துக் கொண்டு திருநீறு வைத்து விடுங்கள் என்று லட்சுமி நடிகர் திலகத்திடம் கேட்டு வைத்து கொள்வார். அத்தை நீங்கள் திலகம் வைத்து விடுங்கள் என்று கேட்டு வைத்துக் கொள்வார். எண்ணம் போல் அனைத்தும் இனிதாக நடக்கட்டும் என்று நடிகர் திலகம் ஆசி கூற அடுத்த காட்சியில் லட்சுமி முத்துராமனை சிறையிலிருந்து சுரங்க பாதை வழியாக அழைத்து வருவார். பாதையின் முடிவில் ஒரு கதவு வழியாக சன்னதியில் பிரவேசித்து திரும்ப அங்கே அந்த பெருவுடையார் முன்பு நடிகர் திலகம் மிக கம்பீரமாக நிற்க அலப்பறை. அங்கே அவரை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி கைகால் வெலவெலக்க லட்சுமி நிற்க அதிர்ச்சியில் எதுவும் செய்ய முடியாமல் முத்துராமன் நிற்க அந்த ஒரு நிமிடத்தில் முகத்தில் கோபம் ஆத்திரம், தனது மகள் சொல் கேட்காமல் இப்படி செய்து விட்டாளே என்ற உணர்வு இவை அனைத்தும் அநத முகத்தில் செந்நிறத்தை பூச முத்துராமனை பார்த்து கையை மட்டும் உயர்த்தி வந்த வழியை காண்பிக்க முத்துராமன் திரும்ப செல்ல இதற்குள் கையில் பிடித்திருக்கும் மாலையில் இருக்கும் இதழ்களெல்லாம் உதிர்ந்து விழுந்து விட வெறும் நாரை பிடித்து நிற்கும் லட்சுமியும் நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்க முடியாமல் அழுகையோடு ஓடி போக வசனமே இல்லாத அந்த 2 நிமிட காட்சி தியேட்டரில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
    அடுத்த காட்சியில் அந்தப்புரத்தில் லட்சுமி அத்தையோடும் தாயாரோடும் தமையனோடும் அழுதவாறு நிற்க அங்கே நம்பியாருடன் வருவார் நடிகர் திலகம். லட்சுமி பலவகையாக புலம்ப நடிகர் திலகம் நான் உன் தந்தை மட்டுமல்ல இந்த நாட்டிற்கே மன்னன். அதை மனதில் வைத்து பேச வேண்டும் என்று சொல்ல இளவரசி போலவே பேசுகிறேன் என்று கூறி பெண்கள் மட்டுமே இருக்கும் இந்த அந்தப்புரத்திற்கு நீங்களே அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்றிருக்க இந்த பாலதேவர் எங்கள் அனுமதியில்லாமல் எப்படி நுழைந்தார் என்று கேட்க பாலதேவரே என்று நடிகர் திலகம் சொல்ல நம்பியார் வெளியேறுவார். வரலட்சுமியிடம் நமது எதிரி சத்யாசிரியன் ஓலை அனுப்பியிருக்கிறான். விமலாதித்தனை விடுதலை செய்து குந்தவைக்கு மணம் முடித்தால் வேற்று நாட்டு அரசர்களுடன் சேர்ந்து படையெடுத்து வந்து நமது சோழ சாமராஜ்ஜியத்தை அழித்து விடுவானாம். மாறாக விமலாதித்தனை கொன்று சத்யாசிரியனின் மகனுக்கு குந்தவையை மணம் முடித்து கொடுத்தால் நமது படைகளுக்கு உதவியாக வந்து விந்தியத்திற்கு அப்பாலும் நமது புலிக்கொடி பறக்க உதவி செய்வானாம். நீ என்ன பதில் சொல்லப்போகிறாய் ராஜராஜா என்று வரலட்சுமி கேட்க, நான் சொல்கிறேன் அத்தை. சிறையிலே நிராயுதபாணியாக இருக்கும் விமாலாதித்தரை கொல்வார். பின் பகைவனின் மகனுக்கு தனது மகளை மணமுடிப்பார். அவளும் போகிற வழியிலேயே உயிர் துறப்பாள். விமலாதித்தன் குந்தவை என்ற இரண்டு பிணங்களின் மீதும் ஏறி சென்று விந்திய மலைக்கு அப்பாலும் தனது புலிக்கொடியை பறக்க விடுவார்.ராஜ ராஜ சோழர்.என்று லட்சுமி அழுகையோடு முடிக்க இளவரசி என்பதை மறந்து பேசுகிறாள் என சொல்ல ஆம். மறந்து விட்டேன். இதோ வருகிறேன் என்று கூறி உள்ளே செல்ல, இவள் என்ன சொல்ல போகிறாள் என்று சிவகுமார் கேட்க எண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் சிக்கலை கூட என்னால் கணிக்க முடிகிறது. ஆனால் உன் தங்கையின் வாயிலிருந்து அடுத்து என்ன வார்த்தை வரும் என்பதை என்னால் யூகிக்க முடிவதில்லை என்பார் நடிகர் திலகம். இளவரசிக்கான அனைத்து அணிகலன்களையும் களைந்து விட்டு அரண்மையை விட்டு போகப்போவதாக லட்சுமி சொல்ல எங்கே என்று நடிகர் திலகம் கேட்க அடுத்து வரக்கூடிய கேள்விகளும் பதில்களும் ராஜேந்திரன் என்ற சிவகுமாரை முன்னிறுத்தி வெளிவருவது ரசிக்கும்படியாக இருக்கும். (என்ன செய்ய போகிறாள் என்று கேளடா, இந்த பரந்த சோழ சாம்ராஜ்ஜியத்தில் எங்கோ ஒரு மூலையில் சென்று பிழைத்துக் கொள்வேன் என்று கூறண்ணா) உன்னையும் துன்பப்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் துன்பத்துக்குள்ளாகிறாய் என்று சிவகுமார் சொல்ல ராஜேந்திரா இவள் என் மகளே அல்ல என்று நடிகர் திலகம் சொல்ல அத்தை என் தாய் தங்கை மனம் புண்படும்படி பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சிவகுமார் கோபப்பட மீண்டும் சொல்கிறேன் இவள் உடம்பில் ஓடுவது என் ரத்தமே அல்ல. என் மகளாக இருந்திருந்தால் இங்கேயே இருந்து போராடியிருப்பாள். இப்படி கோழையை போல் ஓடி போக மாட்டாள் என்று நடிகர் திலகம் சொல்ல லட்சுமி நான் இளவரசிதான் . இங்கேயே இருந்து போராட போகிறேன் என்று அணிகலன்களை எடுத்து அணிய பொங்கி வரும் சிரிப்பை அடக்கி விஷம புன்னைகையோடு சந்தேகமில்லை இவள் என் மகள்தான் என்று நடிகர் திலகம் சொல்ல செம கைதட்டல்கள். ராஜராஜா உன் மகளுக்கு என்னதான் முடிவு சொல்ல போகிறாய் என்று வரலட்சுமி கேட்க காதலர்களை சேர்த்து வைத்து மணம் முடிப்பதா இல்லை இத்தனை வருடம் கட்டிக்காத்த சோழ சாம்ராஜ்ஜியத்தை எதிரிகளிடம் இழப்பதா? எதற்கும் முடிவு செய்யும் அக்கையாரே இதற்கும் ஒரு முடிவை சொல்லுங்கள் என்று சொல்லி நடிகர் திலகம் நடந்து நீங்க, படத்திலேயே மிக அதிகமாக ரசிக்கப்பட்ட காட்சி இதுதான் என்று அப்போதும் இப்போதும் சொல்ல முடிகிறது.
    வெளியே நடிகர் திலகத்தை சந்திக்கும் நாடக ஆசிரியர் சில நாட்களில் உங்களது பிறந்த நாள் வருகிறது. அப்போது உங்கள் வரலாற்றை எழுத ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். சற்று பொறுங்கள். இனிமேல்தான் என் வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள் இடம் பெறப்போகின்றன. அதையும் சேர்த்து எழுதலாம் என்று சொல்லி அனுப்பி வைப்பார். அருகில் இருக்கும் சஹஸ்ரநாமத்திடம் என் பிறந்த நாளை முன்னிட்டு புலவர்களுக்கு அவர்கள் விரும்பிய பரிசுகள் கொடுக்கப்படும் என அறிவித்து விடுங்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்து விடுங்கள் என்பார். இதை சற்று தூரத்தில் நின்று கேட்கும் லட்சுமியின் காதில் வரலட்சுமி ரகசியமாக சொல்ல அதை மற்றொரு தூணின் மறைவிலிருந்து பார்க்கும் நம்பியார் சே இந்த சோழநாட்டு பெண்கள் கூட திறமையானவர்கள். முக்கியமான விஷயத்தை காதோடு சொல்லிவிட்டார்களே என்பார். பாதாள சிறைக்கு நம்பியார் செல்ல அங்கே முத்துராமன் காதில் லட்சுமி ஏதோ கூறுவதை பார்த்துவிட்டு இவர் சத்தம் போட பதிலுக்கு முத்துராமனும் லட்சுமியும் இவரை சத்தம் போட்டு அனுப்பி விடுவார்கள். அங்கே மனோகரின் மாளிகையில் மனோகரிடம் சகுந்தலா பௌர்ணமி நெருங்குகிறதே ஒற்றனை அனுப்ப வேண்டாமா என்று கேட்க ஒற்றன் வருவான். அவனிடம் நம்பியாருக்கு ஓலை கொடுத்து அனுப்புவார் மனோகர்.
    பௌர்ணமியன்று ஒற்றன் வருவதற்கு முன்பு காவலர்களை அனுப்பி விடுவார் மனோரமா. சுவரேறி குதித்து வரும் ஒற்றன் அங்கே நந்தவனத்தில் விஸ்வரூபமாக தன் முன் நிற்கும் ராஜராஜ சோழரை கண்டதும் காலில் விழுந்து கதறுவான்.என்னை மன்னித்து விடுங்கள் என்பான். உங்கள் கட்சியில் சேர்ந்து விடுகிறேன் என்பான்.என்னடா இது ஒரு முறைதான் மிரட்டினேன். அதற்குள் கட்சி மாறுகிறேன் என்று சொல்லிவிட்டானே என்று நடிகர் திலகம் சொல்ல ஒரே கைதட்டல். அன்று ஸ்தாபன காங்கிரஸிலிருந்து ஒரு சிலர் இந்திரா காங்கிரஸுக்கு போனதை குறிப்பிடுவதாக அமைந்திருந்தது. மனோகர் கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கி படித்து பார்த்துவிட்டு காவலாளிகளை அழைத்து அவனை தனியறையில் அடைத்து வைக்க சொல்லிவிட்டு மீண்டும் வர சொல்வார். அவர்கள் மீண்டும் அங்கு வர அந்த ஒற்றனின் உடை அணிந்து நடிகர் திலகம் வர அடையாளம் தெரியாமல் அவரை பிடிக்க பின் நடிகர் திலகம் என்று தெரிந்ததும் பதறி விடுவார்கள். உள்ளே ஒற்றன் வரவில்லையே என்று தவிக்கும் நம்பியார் இறுதியில் ஒற்றனாக நடிகர் திலகம் வர அவரிடம் வருகின்ற பௌர்ணமி அன்று படையெடுத்து வரும்படி ஓலை கொடுத்து அனுப்புவார். மறுநாள் ஐப்பசி சதயம் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் என்பதால் இரவு விருந்துக்கு அவரை அழைத்திருப்பார் நம்பியார். அவர் அருந்த போகும் பாலில் கொடிய விஷத்தை கலந்து வைக்கும்படி மனோரமாவிடம் சொல்வார் நம்பியார். அவர் வரும் நேரம்தான். கதவை திறக்க சொல்ல கதவு திறக்கும்போது நடிகர் திலகம் அங்கு நிற்க இருவரும் அதிர்ச்சி அடைவார்கள். வெகு நேரமாகி விட்டதா என்று நம்பியார் கேட்க நான் வந்து நிற்க கதவு திறக்க எல்லாம் சரியாக அமைந்தது என்று நடிகர் திலகம் சொல்லும் விதம் மிகவும் ரசிக்கப்பட்டது. ஆசனத்தில் அமர்ந்தவுடன் பால் கொண்டு தரப்பட அதை குடிக்க ஆரம்பிக்கும் முன் நடிகர் திலகம் பேச முற்பட பால் அருந்தி விட்டு சொல்லலாமே என்று நம்பியாரும் அதற்கு சொல்லி விட்டு அருந்துகிறேனே என்ற நடிகர் திலகத்தின் பதிலும் ரசிக்கும்படி இருக்கும். நான் சில முடிவுகள் எடுத்திருக்கிறேன். என் மகள் குந்தவையை சத்யாசிரியன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து சத்யாசிரியனிடம் நட்பு பாராட்டலாம் என்றிருக்கிறேன். எனக்கு அரசியல் வெறுத்துவிட்டது. ஆகவே ஆட்சி பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்து விட்டு இறைவனின் ஆலயங்களுக்கு ஒரு யாத்திரை மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று அடுக்க நம்பியாரின் முகம் மாற இப்போது சொல்லுங்கள் ராஜ தந்திரியாரே இதையெல்லாம் செய்ய நான் உயிரோடு இருக்கவா அல்லது இந்த விஷம் அருந்திய பாலை குடித்து விட்டு இறந்து போகவா என்று கேட்க அரங்கில் ஒரே அமர்க்களம். விஷம் கலந்த பாலா சக்ரவர்த்திகள் என்ன சொல்லுகிறீர்கள் என்று வாய் குழறி நம்பியார் பேச, பாவம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பூங்கோதைதான் இதை செய்தாள் என்று நடிகர் திலகம் சொல்ல பூங்கோதை என்று நம்பியார் சத்தம் போட அவள் ஓடி விட்டாள். அவளை விட்டு விடுங்கள். உங்களை தனியே விட்டு போனால் அதையே நினைத்து கொண்டிருப்பீர்கள், ஆகவே இன்றைய இரவை என்னுடன் கழியுங்கள் என்று கையை பிடித்து இழுத்து செல்வார் நடிகர் திலகம்.
    மறுநாள் அரசவை..புலவர்கள் கவி பாடி பரிசுகள் பெற்று செல்ல முத்துராமன் வருவார். நீ எப்படி சிறையிலிருந்து வந்தாய் என்று நடிகர் திலகம் கேட்க உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சொன்னீர்களே என்று சஹஸ்ரநாமம் சொல்ல உங்களை பாட வந்திருக்கிறேன் என்று முத்துராமன் சொல்ல பாடு என்பார் நடிகர் திலகம்.வசன பாணியில் அமைந்த அந்த பாடலை முத்துராமன் பாட (பாடல் சுமார் என்றாலும் சொந்த குரலில் முத்துராமன் நன்றாகவே செய்திருப்பார்). பாடல் முடிந்து என்ன வேண்டும் என்று கேட்க உங்கள் மகளை மணம் முடித்து தர வேண்டும் என முத்துராமன் சொல்ல அது முடியாது என்பார் முதலில். எது கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னீர்களே என்று எதிர் கேள்வி வர அதற்காக அரசகுமாரியை பரிசு பொருளாகக்க கூடாதே என்று நடிகர் திலகம் சொல்ல சக்ரவர்த்திகளும் தருகிறேன் என்ற வார்த்தை மாற கூடாதே என்பார் முத்துராமன்.முல்லைக்கு தேர் தந்தான் பாரி என்று ஆரம்பித்து பல்வேறு மன்னர்கள் கொடுத்த பரிசுகளை முத்துராமன் பட்டியலிட அவரை இடைமறித்து பகைவனுக்கு பெண்ணை தந்தான் ராஜராஜன் என்று லட்சுமியை அழைத்து முத்துராமன் கையில் ஒப்படைப்பார் நடிகர் திலகம். சக்ரவர்த்திகளே என்ன இப்படி செய்து விட்டீர்கள்? திடீரென்று சத்தியாசிரியன் படையெடுத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று நம்பியார் கேட்க அடுத்த பௌர்ணமியன்றுதானே படையெடுத்து வருவதாக ஒற்றன் மூலமாக நீங்கள் ஓலை கொடுத்து அனுப்பியிருக்கும்போது எப்படி திடீரென்று வருவான் என்று நடிகர் திலகம் கிண்டலாக கேட்க ஒரே கைதட்டல். என்ன சொல்கிறீர்கள்? ஒற்றனா? என்று கேட்க இதுவரை வந்தது உங்கள் ஒற்றன்தான்.அனால் நேற்று ஒற்றனாக வந்தது மட்டும் நான் என்று கூற ஒற்றன் சபைக்கு அழைக்கப்பட்டு உண்மை வெளிப்பட நம்பியார் எழுதிய ஓலையை காட்டி இது உங்கள் கையெழுத்துதானே என்று நடிகர் திலகம் கேட்க அடுத்து பூங்கோதை என்று அழைக்க மனோரமா வர இவள் உங்கள் நாட்டு பெண்ணல்ல. எங்கள் சோழ நாட்டை சேர்ந்தவள். உங்கள் நாட்டில் ஆண்கள் மட்டும்தான் ஒற்றர்கள். எங்கள் நாட்டில் பெண்கள் கூட ஒற்றர்களாக இருப்பார்கள் என்று சொல்லி நம்பியாரின் கைத்தடியை மட்டும் பிடுங்கி கொண்டு அவரை போக விட்டுவிடுவார். என்னை ஏன் இப்படி சோதித்தீர்கள் என்று முத்துராமன் கேட்க எங்கள் சோழ நாட்டின் தலைவாசலாக விளங்கக்கூடிய வேங்கி நாட்டு மன்னன் நீ..மாற்றான் மிரட்டினாலோ அடிமைப்படுத்த நினைத்தாலோ நீ எப்படி நடந்து கொள்வாய் என்று பார்க்கவே உன்னை சோதித்தேன் என்பார். அங்கே வரும் பெண் புலவரிடம் இனி உங்கள் நாடக ஆக்கத்தை தொடங்கலாம். என்பார். ராஜ ராஜேஸ்வரம் என்ற பெயரில் இது அரங்கேறும் என்று புலவர் சொல்ல இதை நாடெங்கும் நடத்துங்கள். அதில் சோழ மன்னன் தனது களை வேங்கி மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததன் மூலம் கலப்பு திருமணத்தையும் ஆதரித்தான் என்று ஒரு வரி எழுதி விடுங்கள் என்பார்.
    பின் முத்துராமன் லட்சுமி, சிவகுமார் குமாரி பத்மினி திருமணம் நடக்க முத்துராமனும் லட்சுமியும் வேங்கி நாட்டிற்கு கிளம்ப அந்நேரம் வெள்ளை வஸ்திரம் அணிந்து அதே நிறத்தில் ஒரு தலைப்பாகையும் அணிந்து அவ்வளவு அழகாக இருப்பார் நடிகர் திலகம். உன் கையில் என் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று சீர்காழியின் பின்னணி குரலில் பாட்டு ஒலிக்க ராஜராஜா நீயா கண் கலங்குகிறாய் என்று வரலட்சுமி கேட்க நாடாளும் மன்னனாக இருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே என்று நடிகர் திலகம் சொல்வது அவ்வளவு சிறப்பு. தேரில் கோட்டை வாசலை விட்டு வெளியேறும் மகளையும் மருமகனையும் ராஜராஜனாக நடிகர் திலகம் உப்பரிகையில் நின்று இடது கையை உயர்த்தி கம்பீரமாக வாழ்த்தி வழியனுப்ப வணக்கம்.
    படம் தொடர்பான அனைத்து இதர விஷயங்களையம் பற்றி அடுத்த வாரம். பேசுவோம். அது வரை ----
    (தொடரும்)
    அன்புடன்


    நன்றி முரளி சிறிநிவாசன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #890
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Thanks to ntfans
    முகநூலில் ஒரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார் சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
    அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
    1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
    2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
    3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
    4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
    5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
    6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
    7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
    8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
    9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
    10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
    11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
    12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
    13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
    14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
    15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
    16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
    17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
    இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களை தெய்வம் மன்னிக்காது.

    Thanks Vasudevan Sundararaman
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 89 of 113 FirstFirst ... 3979878889909199 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •