Results 1 to 10 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 50
    அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் மூடப்பட, நான் படித்த பள்ளி மட்டும் டிசம்பர் 4 திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பித்து விட்டன. பள்ளி விடுமுறையாக இருக்கும், ஆகவே நீதி ஓபனிங் ஷோ போகலாம் என்று நினைத்திருந்த வேளையில் அது நடக்காமல் போனது. அதே நேரத்தில் என் கஸின் படித்த கல்லூரியும் மூடப்பட்டிருக்க அவர் எந்த சிக்கலுமில்லாமல் (அதுவும் தங்கம் என்பதனால் டிக்கெட் பற்றிகவலைப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை) ஓபனிங் ஷோ சென்று விட்டார். ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 7 வியாழன் அன்று படம் ரிலீஸானது எப்போதும் தனது படம் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் அதற்குண்டான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடிக்கும் பாலாஜி இந்த நீதி படத்தின் அனைத்து வேலைகளை முடித்து நவம்பர் 30 அன்று சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டுக்காட்டி தணிக்கை சான்றிதழ் பெற்று விட்டார். 1972ல் முதன் முறையாக வியாழக்கிழமை படம் வெளியானது மட்டுமல்லாமல் முதல் நாள் காலைக்காட்சி இல்லாமல் மாட்னி ஓபனிங் ஷோவாக ஆரம்பித்தது.
    மாட்னிதான் ஓபனிங் ஷோ என்பதால் அவர் படம் முடிந்து வருவதற்குள் நான் ஸ்கூலிலிருந்து வந்து விட்டேன். கஸின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தார். என் ஆவல் அவருக்கு தெரியும் என்றாலும் அனைவருக்கும் முன்பாக வைத்து படம் பார்த்துவிட்டு வந்ததை சொல்ல முடியாது என்பதால் என்னை தனியே அழைத்து போய் படம் நன்றாக இருக்கிறது. நாம் ஹிந்தி துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு படம் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் திலகம் இறங்கி அடித்திருக்கிறார் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வியாழன் படம் ரிலீஸ். வெள்ளி சனி இரண்டு நாட்களும் ஸ்கூல் இருந்ததால் சனிக்கிழமை ஈவினிங் ஷோதான் போக முடிந்தது. தங்கம் தியேட்டரில் நல்ல கூட்டம். இந்த முறை பால்கனி டிக்கெட் வாங்கி படம் பார்க்க உள்ளே நுழைகிறோம்.
    வழக்கம் போல் சுஜாதா சினி ஆர்ட்ஸின் லோகோ அந்த பரபரப்பான பின்னணி இசையுடன் பல வண்ணங்களில் பளிச்சிட தியேட்டரில் ஆரவாரம். அன்றைய நாட்களின் வழக்கப்படி இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்டு முதலில் வருகிறது. படத்தின் கதையை பற்றிய ஒரு முன்னோட்ட வரிகள் மேஜர் குரலில் ஒலிக்க அடுத்த காட்சி ஹைவேஸில் வரும் லாரியை காண்பித்து உள்ளே காமிராவை காண்பிக்க நடிகர் திலகம் கருநீல ஷர்ட் அணிந்து லாரி ஓட்டிக் கொண்டிருக்க செம கைதட்டல்கள். சுஜாதா சினி ஆர்ட்ஸ் அளிக்கும் நீதி என்று காண்பித்து விட்டு அடுத்த கார்டு திரைக்கதை வசனம் ஏ எல் நாராயணன் என்று வர தியேட்டரில் ஒரு சின்ன சலசலப்பு. எந்த நடிகர் நடிகை பெயரையும் போடவில்லை என்பதை கஸின் என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால் எனக்கு அது ஏமாற்றமாக தெரியவில்லை. சௌகாருக்கும் ஜெயலலிதாவுக்கும் பல வருடங்களாக இருந்த ஒரு கோல்ட் வார் காரணமாகத்தான் யார் பெயரும் போடாமல் டைட்டில்ஸ் காட்டப்பட்டது ஏற்கனவே திருடன் படத்தில் பெயர் போடுவதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் (சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர் கோபித்துக் கொண்டு இனிமேல் உன் படங்களுக்கு பைனான்ஸ் பண்ண முடியாது என்று சொன்னதை இந்த தொடரில் நாம் பார்த்திருக்கிறோம்) பாலாஜிக்கு நினைவிருந்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்து வி சி சண்முகத்திடம் அனுமதி வாங்கி செய்தார் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள் (படம் வெளியான பிறகு தெரிய வந்த விஷயம்). டைட்டில் போடும்போதே நடிகர் திலகம் பாட்டிலில் இருப்பதை போட்டுக் கொண்டே வருவார். அவரை வேண்டாம் வேண்டாம் என்று கிளீனர் ஐ எஸ் ஆர்,கெஞ்சுவதும் (வாத்யாரே வண்டி புல் லோடிலே இருக்கு., வண்டி மட்டும் இல்லைடா. உன் வாத்தியாரும் புல் லோடுதான்) நடிகர் திலகம் கொடுக்கும் பதிலும் படத்தை ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக்கிறது. வண்டியை நிறுத்தி விட்டு இது உளுந்தூர்பேட்டைதானே என்று நடிகர் திலகம் கேட்க ஆம் என்ற பதில் வந்ததவுடன் நான் அந்த ராணியை பார்த்து விட்டு வந்திறேன் என்று நடிகர் திலகம் இறங்கி செல்ல அங்கே ஒரு வீடு. பலர் படுக்கை திண்டில் சாய்ந்திருக்க ஏ சகுந்தலா ஆட தயாராக நிற்க நடிகர் திலகம் என்ட்ரி. அந்த கருநீல பான்ட் அதே கலரில் புல் ஸ்லீவ் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் அந்த தூணில் சாய்ந்து நிற்க கைதட்டல் அள்ளுகிறது.
    நடிகர் திலகம் எல்லோரையும் போக சொல்லு என்று சொன்னவுடன் அனைவரும் சென்று விட கே கண்ணன் மட்டும் போகாமல் முரண்டு பிடிக்க நடிகர் திலகம் கிண்டல் மரியாதையாக போங்க சார் என்று சொல்ல கண்ணன் நடிகர் திலகத்தை தாக்க அத்தேரி கழுத, என்கிட்டே அடிவாங்கிறதுக்குன்னே இவன் பிறந்திருக்கான் என்று கண்ணனை அடி பின்ன சண்டைக்காட்சியை சிவிஆர் நன்றாக எடுத்திருப்பார். அடி வாங்கி தபலா வாசிப்பவரின் மேல் கண்ணன் விழ ஸ்வரம் சொல்லி அடிப்பது, ஆர்மேனிய பெட்டிக்கருகில் ஆலாபனை போல் பாடி அடிப்பது என்று நடிகர் திலகம் அமர்க்களம் செய்வார். படம் ஆரம்பித்தவுடனே சண்டை அதுவும் கண்ணனை வெளுக்கிறார் என்றதும் தியேட்டரில் அதிலும் குறிப்பாக கீழே செம கைதட்டல் விசில். அந்த 1972ல் மட்டும் ராஜா தவப்புதல்வன் அப்புறம் நீதி என்று மூன்று படங்களில் கண்ணன் சண்டைக்காட்சியில் அடி வாங்குவதை ரசிகர்கள் ஓஹோவென்று ரசிக்கிறார்கள். சண்டை முடிந்தவுடன் மாப்பிளையை பார்த்துக்கடி மைனாக்குட்டி பாடல். சண்டை ஒரு ட்ரீட் என்றால் இந்த பாடலும் ஆடலும் வேறு வகை விருந்து. அதை ஒரு கிளப் டான்ஸ் பாடலாக மட்டுமல்லாமல் ஒரு கஸல் பாணியில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்க தனது பங்கிற்கு டிஎம்எஸ் ஆலாபனையில் அசத்த நடிகர் திலகம் திரையில் அனைவரையும் தூக்கி சாப்பிடுவார். பாட்டு முடியும்போது செம கிளாப்ஸ். காலையில் தூக்கம் விழிக்கும் நடிகர் திலகத்தை எழ விடாமல் சகுந்தலா தடுக்க அத்தேரி கழுத காலங்கார்த்தாலே என்ன லவ்வு என்று நடிகர் திலகம் எழுந்து போக மூன்றாவது காட்சியிலேயே கதைக்குள் வந்து விடுவார்கள்.
    வண்டி கொஞ்சம் ஆட ரொம்ப பனியா இருக்கு, ரோடே சரியாக தெரியலை, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்திட்டு அப்புறம் போகலாம் என்று நடிகர் திலகத்திடம், ஐ எஸ் ஆர் கெஞ்ச, அத்தேரி கழுத பேசாம வாடா என்று நடிகர் திலகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோட்டின் ஓரத்திலிருந்து மாடுகளை ஒட்டி வரும் ஒரு மனிதன் தெரிய ஐயோ என்று பிரேக் அடிப்பதற்குள் மோதி விட கீழே இறங்கி பார்த்தால் முதலில் ஒரு மாடும் சக்கரத்திற்கு அடியில் ஒரு மனிதனும் சிக்கிக்கொண்டு இறந்திருப்பார்கள். மனிதனை வெளியிலே இழுத்து பரிசோதிக்கும்போது அவன் குடும்பத்தினர் வந்து விட நடிகர் திலகம் கைது செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்க மேஜர் நீதிபதியாக இருப்பார். குடிச்சிருந்தேன், ஆனா நிதானத்தை இழக்கலே பனி அதிகமாக இருந்ததாலே ரோடு சரியா தெரியலே என்று வாதிடுவார் நடிகர் திலகம். இல்லை இவரின் அஜாக்கிரதையினாலும் அலட்சியத்தினாலும் இந்த விபத்து நடந்தது என்று அரசாங்க வக்கீல் வாதிட, நான் வேணுமின்னே செய்யல. எனக்கும் அவருக்கும் என்ன பகை? நான் வேணுமினே செஞ்சிருந்தா அங்கே ஏன் நிக்க போறேன்? வண்டி எடுத்து போயிருக்க மாட்டேன்? அத்தேரி கழுத நான் போற ஸ்பீடுக்கு எந்த பய என்னை பிடிக்க முடியும் என்று சத்தம் போட்டு பேச மேஜர் கண்டித்தவுடன் அதே வசனத்தை லோ வாய்ஸில் சொல்லுவார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். வழக்கை ஒத்தி வைத்துவிட்டு மேஜர் போக அடுத்த காட்சியில் சௌகார் கால் இல்லாமல் கட்டை வைத்து நடக்கும் அவரின் மாமனார் எஸ் வி சுப்பையாவை கூட்டிக் கொண்டு மேஜர் வீட்டிற்கு வர இங்கே நீங்க வரக்கூடாது. ஏதாவது சொல்லனுமுன்னா கோர்ட்டில சொல்லுங்க என்பார். சௌகார் தங்கள் நிலைமையை விளக்குவார். கால் இல்லாத மாமனார், கண் தெரியாத மாமியார், கல்யாணத்திற்கு நிற்கும் நாத்தனார் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகள் இவர்களை எப்படி காப்பாற்றுவது? கொலைக்கு காரணமாக இருந்தவனை தண்டித்து விட்டால் என் கணவர் திரும்பி வருவாரா? உங்கள் தீர்ப்பு எங்கள் வாழ்விற்கு வழி செய்யுமா என்று கேட்டு விட்டு போக மேஜர் மனதில் சிந்தனைகள்.
    அடுத்து constituional bench போல அதாவது முக்கியமான ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு 5 அங்க அமர்வாக நீதிபதிகள் இருக்க அவர்களுக்கு முன்னால் மேஜர் காலத்திற்கேற்ப தீர்ப்பில் சில மாற்றங்களை கொடு வர அனுமதி வேண்டி நிற்க அந்த அமர்வு அதற்கு அனுமதி கொடுக்க இங்கே கீழமை நீதிமன்றத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு ஆண்டு தணடனை விதித்து அந்த இரண்டு ஆண்டுகளும் இறந்து போன குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என மேஜர் தீர்ப்பு சொல்ல நடிகர் திலகம் வேண்டாம் வேண்டாம் என்பார். ஆனால் அந்த தீர்ப்பின்படி அந்த கிராமத்திற்கு அவர் கொண்டு வரப்பட ஊர்க்காரர்கள் அவரை தடுக்க முயற்சிக்க கான்ஸ்டபிள் சந்திரபாபு அனைவரையும் விரட்டி அவரை இறந்து போனவரின் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே அவருக்கு கடுமையான எதிர்ப்பு. சுப்பையா கட்டையால் தலையிலே அடித்து விடுவார். அந்த வீட்டின் கடைக்குட்டி பெண் மட்டும் வந்து ரத்தம் வழிய உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகத்திடம் பேச சௌகார் பெண்ணை மிரட்டி கூட்டி செல்வார். அவன் கொலைகாரன் என்று அந்த பெண்ணிடம் சொல்லப்பட கொலைகார மாமாவா என்று அந்த குட்டி பெண் அப்பாவியாக கேட்கும். கடைசி வரை அந்த பெண்ணிற்கும் அவள் அண்ணனுக்கும் நடிகர் திலகம் கொலைகார மாமாவாகவே இருப்பார். வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் குடுமபத்தில் பெண் குழந்தை கஞ்சி சாப்பிடாமல் சோறு வேணும் என்று அழும். கிளீனர் ஐ எஸ் ஆர், ராத்திரி வந்து தப்பித்து போய்விடலாம் என கூட்டிக் கொண்டு போக ஊர் எல்லையில் காவல் நிற்கும் சந்திரபாபு தடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் கூட்டி செல்வார்.
    பாலாஜி சத்தம் போட தண்ணி குடிக்கிறியான்னு கூட ஒருத்தனும் கேட்க மாட்டேங்கிறான். பசியால நான் துடிக்கிறேன் என்று நடிகர் திலகம் சொல்ல பாலாஜி ஒரு டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு கொடுக்க அவசர அவசரமாக ஒரு கவளம் சோறு எடுத்து சாப்பிட போகும்போது குழந்தை பசியால் அழுதது ஞாபகம் வர கையை உதறி விட்டு எழுந்து போய் விடுவார். இதற்கிடையில் ஊரில் பண்ணையார் மனோகர். பணக்காரர். சில பல தொழில்களை செய்து கொண்டிருப்பவர் கிராமத்து மக்களுக்கு கடனை கொடுத்து அவர்களின் நிலத்தை அபகரிக்கும் டிபிக்கல் தமிழ் சினிமா வில்லன். அவரது கணக்கு பிள்ளையாக எம் ஆர் ஆர் வாசு. சௌகாருக்கும் ஜெயகௌசல்யாவிற்கும் வேலை கொடுக்கிறேன் வர சொல் என்று சொல்ல சௌகார் மட்டுமே வேலைக்கு செல்வார்.அங்கே மனோரமா அறிமுகம். ட்ராக்டர் பொன்னம்மா என்ற பாத்திரத்தை (சற்றே பிசகினாலும் விரசமாகி விடக்கூடிய ஆபத்து) ஆச்சி நன்றாகவே செய்திருப்பார்.(உண்மையை சொல்ல போனால் படத்தில் நாயகி ஜெயா வரும் நேரத்தை விட மனோரமாவுக்கு ஸ்கிரீன் டைம் அதிகம்) மனோரமாவின் டிராக்டரை நடிகர் திலகம் ரிப்பேரை சரி செய்து தர அவருக்கு கூலியாக மனோரமா 30 ரூபாய் கொடுப்பார். குழந்தைகளுக்கு ஜாங்கிரியும் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பும் நடிகர் திலகம் வாங்கி கொண்டு வர ஆசையோடு சாப்பிடும் குழந்தையின் கையிலிருந்து பறித்து கீழே வீசும் சௌகார், ஜெயகௌசல்யாவிடம் அரிசி பருப்பையும் தூக்கி எறிய சொல்ல அவர் அப்படியே செய்வார். நடிகர் திலகம் ஏதும் பேசாமல் விலகி நடக்க கீழே விழுந்த ஜாங்கிரியை குழந்தை பொறுக்கி எடுத்து சாப்பிட முயற்சிக்க சௌகார் அந்த பெண்ணை அடித்து எங்கியாவது போய் செத்து தொலை என ஆத்திரத்தில் கத்த அந்த குழந்தை அழுது கொண்டே ஆற்று பக்கம் போவதை பார்த்து நடிகர் திலகம் நிறுத்தி அந்த பொண்ணை கூட்டிக் கொண்டு போய் சாப்பிட வாங்கி கொடுப்பார். அவளின் அண்ணனையும் வரவழைத்து சாப்பிட கொடுக்க முதலில் மறுக்கும் அந்த சிறுவனிடம் தனது மனதில் இருப்பதை நடிகர் திலகம் ஆற்றாமையோடு வெளிப்படுத்த (நான் படிக்காதவன்ப்பா, எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலே. லாரியில் பாரத்தை ஏத்தினா அது தாங்கும். ஆனா பாவத்தை மனசில் ஏத்தின்னா என்னாலே தாங்க முடியாதுப்பா - ஏ எல் நாராயணன்) அந்த பையனும் சாப்பிடுவான்.
    இப்படி இருக்க ஒரு நாள் காலையில் தனது இரு குழந்தைகளை காணவில்லை என்று சௌகார் பதற அனைவரும் சென்று பார்த்தால் வயலில் ஏரில் ஒரு மாட்டை பூட்டி மற்றொரு பக்கம் தான் நின்று நடிகர் திலகம் அந்த குழந்தைகளின் உதவியோடு நிலத்தை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பார். அது சரியாக வராது. சுப்பையா நடிகர் திலகத்தை கண்டபடி திட்டுவார். குடிகார பயலே என்று இரண்டு முறை சொல்ல நடிகர் திலகம் வெகுவாக கோபப்படுவார். (உன் காசிலேயே குடிச்சேன்? நான் சம்பாதிக்கிறேன் குடிப்பேன். ஆடுவேன் பாடுவேன். அந்த கோபத்தை அருமையாக வெளிப்படுத்துவார்). கிராமத்தில் ஒரு சாராய கடைக்கு முன்னால் நடிகர் திலகம் நின்று கொண்டிருக்க ஒரு பெண் தனது கணவனிடம் குடிக்காதே என்று கெஞ்ச நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்னிக்கு மட்டும் என்று பதில் சொல்ல நடிகர் திலகம் ஒரு பஞ்ச் அடிப்பார். தெருவுக்கு நாலு சாராய கடையை திறந்து வச்சிட்டு குடிக்காதே குடிக்காதேன்னா எவன் குடிக்காமா இருப்பான்? செம கைதட்டல் வாங்கிய வசனம் அது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல். கவியரசர் தனது அனுபவம், தத்துவ விசாரம் இவற்றின் துணையோடு அவரது கைவண்ணம் அனைத்தையும் காட்டியிருப்பார்.
    முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
    மறு வாழ்வு வாழ மறு வீடு
    இடைக்கால பாதை மணல் மேடு
    எது வந்தபோதும் அவனோடு
    கடைசி வரி வரும்போது நடிகர் திலகம் கையை மேலே தூக்கி காண்பிக்க கிளாப்ஸ். இந்த பாடலிலும் எம் எஸ் வி மற்றும் டி எம் எஸ் அருமையாக பங்களித்திருப்பார்கள். சரணம் முடிந்து மீண்டும் அனுபல்லவியான போதை வந்தபோது புத்தி இல்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே என்ற வரிகளை டி எம் எஸ் அவ்வளவு உருக்கமாக பாடியிருப்பார். இரண்டாவது சரணத்தில் ஏழைகளின் வாழ்வு இப்படியே இருக்கிறதே நீயும் அதில் விளையாடுகிறாயே என்ற தார்மீக கோபத்தை கவியரசர் காண்பித்திருப்பார்.
    பாடல் முடிந்து அவர் கோவிலில் இருக்கும் தெய்வத்தின் சிலை முன் நின்று பேசுவது படத்தின் ஹைலைட்டான காட்சிகளில் ஒன்று. உன்னை ஏன் ஆத்தங்கரையிலும் குளத்தங்கரையிலும் வச்சிருக்காங்க தெரியுமா என்ற அந்த கிண்டல், உலகத்திலே இந்த மாதிரியெல்லாம் நடக்குதுங்கிற விரக்தி, என் லைசென்ஸை பறிச்சே , என் லாரியை பறிச்சே உன்னால நான் குடிக்கறதை மட்டும் தடுக்க முடியாது. ஏன் தெரியுமா? உனக்கு இருக்கிறதை விட இதுக்கு இங்கே கடை ஜாஸ்தி என்ற அரசியல் நக்கல் பிரமாதப்படுத்தியிருப்பார். அந்த நேரத்தில்தான் கீழே ஜெயகௌசல்யாவும் அவரை காதலிக்கும் ஒரு இளைஞனும் பேசுவதை கேட்பார். வரதட்சணை கொடுக்க முடியாததை பற்றி பேச்சு வரும். வயல் விளைஞ்சு அறுவடை நடந்து நெல்லு வித்துதான் பணம் தரேன் என்று எங்க அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் இப்போ அவரே போன பிறகு எங்கே வயல் விளைஞ்சு அறுவடை செய்து பணத்தை கொடுக்கிறது என்று ஜெயகௌஸல்யா வருத்தத்துடன் சொல்லிவிட்டு போக பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு நடிகர் திலகம் கடைசியிலே என் பாட்டிலையும் பறிச்சுட்டியே என்பார்.
    அடுத்து டிராக்டரை வைத்து நடிகர் திலகம் நிலத்தை உழுது கொண்டிருக்க மனோரமா இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் ஊர் ஜனங்களை கூட்டி ஓடி வருவார். என்னை கேட்காம எப்படி என் டிராக்டரை எடுக்க போச்சு என்று கேட்க பாலாஜியும் ராஜா, நீ செஞ்சது தப்பு என்று சொல்ல மனோரமா ட்ராக்டர் பயன்பாட்டிற்கு கூலி கேட்க பணம் இல்லையே என்று நடிகர் திலகம் சொல்ல நான் தருகிறேன் என்று பாலாஜி பணம் கொடுப்பார். உன் உழைப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணம்தான் இது என்று சொல்லிவிட்டு செல்வார். ஏற்கனவே நிலத்தின் மூலையில் இருக்கும் புளிய மரம் பற்றியும் அதில் பேய் இருப்பதாகவும் மனோரமா பேச்சு வாக்கில் சொல்லியிருக்க மீண்டும் அதை பற்றி பேச்சு வந்ததும் நடிகர் திலகம் விவரம் கேட்க அந்த புளிய மரத்தில் ஒரு மோகினி பேய் குடியிருப்பதாகவும் ராத்திரி நேரத்தில் நடமாடும் என மனோரமா சொல்ல சரி நான் பார்க்கிறேன் என்பார். நிலத்தை உழுத பின்னர் சுப்பையா நடிகர் திலகத்தின் மனதை புரிந்து கொண்டிருப்பார் தனது மனைவி காந்திமதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம்ம நிலம். அவன் இப்போ உழுறான். நாம ஆள் வச்சு வேலை வாங்கினா கூலி கொடுக்கிறதில்லையா அது மாதிரிதான் இதுவும். நாமா வளர்கிற நாய்க்கு சோறு வைகோறோமில்லே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நடிகர் திலகம் வர பேச்சை நிறுத்தி விடுவார். ஏன் நிறுத்திடீங்க என்று காந்திமதி கேட்க நாய் வந்திருக்குமா என்று நடிகர் திலகம் பதில் சொல்லுவார். அரங்கில் குறிப்பாக பெண்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அவருக்கு கொடுக்கும் சாப்பாடை அவர்கள் வீடு நாய் கவ்வி எடுத்து கவிழ்த்து விடும். விரக்தியோடு சிரிக்கும் நடிகர் திலகம் சுப்பையாவிடம் சென்று புளிய மரத்தை வெட்ட போறேன் என்று சொல்ல அவரும் தடுப்பார். அதை புறக்கணித்து இரவு நேரத்தில் நடிகர் திலகம் அங்கு வர ஜல் ஜல் என்ற சதங்கை சத்தமும் வெள்ளை உடை அணிந்த கால்களும் நடந்து வருவதை பார்த்து நடிகர் திலகம் பதுங்கி பக்கத்தில் வரும்போது பாய்ந்து பிடித்தால் ஜெயலலிதா. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர்தான் நாயகி வருகை. தனது குடிகார தாத்தாவிற்கு பயந்துதான் பணத்தை இங்கே மரத்தின் பொந்தில் வைப்பதாகவும் அதை யாரும் எடுத்து கொண்டு போய்விட கூடாது என்பதற்காகவே மோகினி பேய் என்று கதை கட்டியதையும் ஜெயா ஒப்புக் கொள்ள பணத்தை எடுத்து கொண்டு ஓடி விடுமாறு நடிகர் திலகம் சொல்ல அதே போல் அவர் செய்ய நடிகர் திலகம் மரத்தை வெட்டுவார். [இந்த காட்சியில் நடிகர் திலகம் ஜெயா interaction ரசகரமாக இருக்கும். உன் பேர் என்ன என்று ஜெயா கேட்க வேதாளம் என்று நடிகர் திலகம் பதில் சொல்வதும் தெருவில் வித்தை காட்டும் ஆட்கள் பேசுவது போல் வா இந்த பக்கம், வந்தேன் என்பதெல்லாம் ரசிக்கும்படியாக சிவிஆர் எடுத்திருப்பார்]
    மறுநாள் காலையில் ஊர் பொது மக்கள் வந்து பார்க்கும்போது மரம் வெட்டுப்பட்டு கிடைக்க அதன் அடியில் நடிகர் திலகம் படுத்து தூங்கி கொண்டிரு[ப்பார். அதை பார்த்துவிட்டு ஊர் மக்கள் தவறாக புரிந்து கொள்ள சௌகாரின் சின்ன பெண் மட்டும் தைரியமாக அவர் பக்கத்தில் சென்று கூப்பிட நடிகர் திலகம் கண் விழித்து பார்ப்பதை பார்த்தவுடன் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். வீட்டிற்கு குழந்தையை தோளில் தூக்கி செல்ல சௌகார் பார்த்துவிட்டு குழந்தையை சத்தம் போட அது அழுது கொண்டே போகும். தண்ணி எடுத்து குடிக்கும் நடிகர் திலகத்திடம் ஏன்ப்பா தண்ணி குடிக்கிறே? சாப்பிடலியா என்று கேட்கும் சுப்பையாவிடம் நெஞ்சு எரியுது அதான் என்று சொல்லிவிட்டு பேசுவார் நடிகர் திலகம். உங்க குடுமபத்தை காப்பாத்தத்தான் அரசாங்கம் என்னை அனுப்பிச்சிருக்கு உங்க மருமக வேலைக்கு போறது நியாயமா என்று கேட்கும்போது காந்திமதி இவன் யாருங்க நம்ம குடும்பத்திலே தலையிட என்று பேச அம்மா உங்களுக்கு கண்ணுதான் இவ்ல்லைன்னு வருத்தப்பட்டேன். ஆனா இதயமும் இல்லைன்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன் என்று போவார். தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
    சலூனில் ஷேவ் செய்து கொண்டிருக்கும்போது மோகினி பேய் பற்றி முடி திருத்துபவர் கேட்க நடிகர் திலகம் அவரை மிரட்டுவதற்காக அள்ளி விட பயத்தில் அவர் நடிகர் திலகத்தின் ஒரு பக்க மீசையை வழித்துவிட வேறு வழியில்லாமல் மீசை முழுவதையும் எடுத்துவிட்டு வெளியே வர, சௌகாரின் சின்ன பெண் அவரை அடையாளம் தெரியாமல் எங்க கொலைகார மாமா எங்கே என்று கேட்க, நாந்தாம்மா என்று சொல்ல தியேட்டரில் சிரிப்பு. பயாஸ்கோப் பார்க்க காசு கேட்கிறாங்க என்று சொல்ல உன்கிட்டே யார் கேட்டாங்க, வா என்னோட என்று நடிகர் திலகம் அழைத்து போக அங்கே பயாஸ்கோப்பில் ஜெயா பாட்டு பாடி கொண்டே ஆடுவார். ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்ன பொண்ணு என்ற பிரபலமான பாடல். நடுவில் நடிகர் திலகம் வந்து சேர அவரின் மீசை இல்லாத முகத்தை பார்த்து ஜெயா கிண்டல் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் திலகம் பஞ்ச் அடிக்க (அடக்கம் இல்லாத பொண்ணுக்கு பேரென்ன? பிசாசு) மீண்டும் பாடல் தொடரும்.
    வங்காளத்தில் முன்னே போகும் சேனை பாருங்க
    இந்திரா காந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
    வங்க தேசப்போரில் நமது படைகள் செல்வதையும் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் இந்திரா பேசுவதையும் ஸ்டில் போட்டோக்களாக திரையில் தோன்ற இதற்கு அமைதியாக இருந்த அரங்கம் அடுத்த வரியான
    காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க (பெருந்தலைவர் பேசுவதையும் நடிகர் திலகத்தின் கோவை மாநாட்டு பிறந்தநாள் கூட்டத்தையும் காட்டுவார்கள்) அப்படியே ஆர்ப்பரித்தது என்றால் அதற்கு அடுத்த வரியில் கர்ம வீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க என்ற வரியின்போது கோவை மாநாட்டு மேடையில் பெருந்தலைவர் அமர்ந்திருக்க அவரை திரும்பி பார்த்து நடிகர் திலகம் மைக்கில் பேசும் ஸ்டில் காட்டப்பட்டபோது அந்த ஆர்ப்பரிப்பு அலையாக மாறியது. அந்த இரண்டு வரிகளும் மீண்டும் ஒலிக்க ஜெயா இரண்டாவது வரியில் சிவாஜி பாருங்க என்று வரும்போது நடிகர் திலகத்தின் பக்கத்தில் வந்து அவரை கையால் விலாவில் இடிக்க மீண்டும் ஆரவாரம். அடுத்த சரணத்தில் எம் எல் ஏ பற்றியம் அவர்கள் அடிக்கடி கட்சி மாறுவது பற்றியும் கிண்டல் வரிகள் வர நடிகர் திலகம் கண்ணடிப்பார். அதற்கும் அலப்பறை. மொத்தத்தில் அந்த பாடல் செம மாஸ் என்று இப்போது அடிபடும் வழக்கு மொழிக்கு அன்றே உதாரணமாக இருந்தது.
    மனோரமாவிடம் ஜெயா வந்து நடிகர் திலகம் பற்றி கேட்பது ( அந்த ஆளுடைய உண்மையான பேர் என்ன?) மனோரமா ஜெயா பற்றி தெரிந்து கொண்டதை சொல்வது, என்கிட்டே எல்லா விஷயமும் சொல்லிடும் என்பது, அதை கேட்டு முதலில் ஜெயா அதிர்ச்சி அடைவது, தொடர்ந்து நடிகர் திலகம் மனோரமாவை காதலிக்கவில்லை என்பது தெரிந்ததும் சந்தோஷப்படுவது என போகும் அந்த காட்சியின் தொடர்ச்சியாக ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் என்னை பற்றி அடிக்கடி விசாரிக்கிறியாமே என்ன விஷயம் என்று சீண்டுவது. குளித்து முடித்து தாவணி அணிந்து வரும் ஜெயாவிடம் புது மாடல் பென்ஸ் லாரி மாதிரி இருக்கியே என்பது, என்னை பார்த்துட்டு வீட்டிற்கு போனியே தூக்கம் வந்துச்சா என்று கேட்பது, இவை படத்தின் சில ரிலாக்ஸான நிமிடங்கள்.
    ஜெயகௌசல்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் பேசி வைத்திருந்த இடத்திலிருந்து ஆட்கள் வர கல்யாணத்திற்கு தரேன்னு சொன்ன பணம் எங்கே என்று கேட்க 15 நாட்கள் டைம் கேட்பார் சௌகார். மனோகரிடம் வாசு கூட்டி போக சௌகார் தங்கள் நிலத்தை அடமானமாக தருவதாக ஒப்பு கொள்வார். இதை பற்றி மனோரமாவிடம் பேசும் நடிகர் திலகத்திடம், மனோகர் இது போன்ற நிலங்களை அடமானம் வாங்கும்போது பாத்திரத்தில் அடமானம் என்ற வார்த்தைக்கு பதிலாக கிரயம் என்று எழுதி கைநாட்டு வாங்கி விடுவார் என்றும், படிக்க தெரியாத பெரும்பாலானோர் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலே கைநாட்டு வைத்து மாட்டிக் கொள்வார்கள் என்று சொல்ல மறுநாள் சௌகார் வீட்டிற்கு வரும் மனோகரும் வாசுவும் சுப்பையாவிடம் கைநாட்டு வாங்கும் நேரத்தில் நடிகர் திலகம் அதை தடுத்து கிழித்து போட்டுவிட சௌகாரும் சுப்பையாவும் கோபப்படுவார்கள். வாசு அந்த நேரம் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் பற்றி தப்பாக பேச நடிகர் திலகம் வாசுவை அடி வெளுப்பார். ஜெயகௌசல்யாவின் கல்யாணத்திற்கு நான் பொறுப்பு என்பார். தியேட்டரில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
    மணமகன் வீட்டிற்கு நடிகர் திலகம் போக அங்கே மனோகரும் வாசுவும் இருப்பதை பார்த்து மறைந்து நின்று கவனிக்க அந்த பையனுக்கு மனோகர் வீட்டில் சம்பந்தம் பேசி முடிவு செய்வது தெரிய வரும். அவர்கள் போன பிறகு மணமகன் அப்பாவோடு வாக்குவாதம் செய்வார் நடிகர் திலகம் ஆனால் அவர் ஒப்பு கொள்ள மாட்டார். வேதனையோடு திரும்பும் நேரம் மணமகன் நடிகர் திலகத்திடம் கமலாவிடம் என்ன மன்னிக்க சொல்லுங்க என்று கேட்க பளார் என்று ஒரு அறை விடுவார் நடிகர் திலகம். போன காரியம் என்ன ஆச்சு என்று கேட்கும் ஜெயாவிடம் நடிகர் திலகம் நடந்ததை சொல்ல ஜெயாவும் மனோரமாவும் கல்யாண வீட்டிற்கு செல்வார்கள். பயாஸ்கோப் காட்டுவது போல் பாடல் (ஓடுது பார் நல்ல படம் பாடலே மீண்டும் வேறு வரிகளில்) அதில் மணமகனையும் அவர் தந்தையையும் செமையாக கிண்டல் செய்து பாட மணமகனின் தந்தை கோபப்பட்டு இவர்களை வெளியே போக சொல்லி விடுவார். அன்றைய இரவே மணமகன் இவர்கள் வீடு தேடி வர ஜெயகௌசல்யாவையும் மணமகனையும் இரவோடு இரவாக கோவிலுக்கு கூட்டி சென்று கல்யாணத்தை நடத்துவார் நடிகர் திலகம்.
    விஷயம் தெரிந்து மணமகன் தந்தை ஆட்களோடு வந்து விட கோவில் கதவை அடைத்து யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி நடிகர் திலகம் தடுக்க அவர்கள் நடிகர் திலகத்தை சரமாரியாக தாக்க அவர் அத்தனையும் தாங்கி கொண்டு நிற்பார். அங்கே வரும் பாலாஜி அனைவரையும் தடுத்து நிறுத்த கல்யாணம் முடிந்து தம்பதியர் இருவரும் கதவை திறந்து வெளியே வந்து மணமகன் என்னை யாரும் கடத்தவில்லை, என் சுய விருப்பத்தின் பேரில்தான் நான் கமலாவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல இருவரையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வருவார் நடிகர் திலகம். ஆட்கள் தாக்கியதில் தலையில் ரத்தம் வர அதற்கு கட்டு போட்டிருப்பார் நடிகர் திலகம். முதன் முறையாக காந்திமதி நடிகர் திலகத்திடம் அன்பாக பேசி மன்னிப்பு கேட்பார். அப்போதும் சௌகாரின் மனம் இளகாது.
    இடையில் மனோரமா ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்க நடிகர் திலகம் வருவார். அவரை பார்த்து மனோரமா பெருமூச்சு விட்டு விட்டு போக ஏன் இவ இப்படி இருக்கா என்று நடிகர் திலகம் கேட்க இது புரியலையா என்பார் ஜெயா. உனக்கு தெரியுமா என்று கேட்க எங்க ஊர் கொட்டகையில நான் பாத்திருக்கேனே இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் நாம் இருவர் நமக்கு இருவர் என்று ஜெயா சொல்ல அது குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம். நீ இங்கிலீஸ் படம் பார்த்திருக்கியா என்று அருகில் அமரும் நடிகர் திலகம் அது கிளப் படம். அதாவது கிளப்புற படம். அதில் நாயகனும் நாயகியும் என்று பேசியவாறே ஜெயாவை அணைத்து முன்னேறி செல்ல முயற்சிக்க சில சிறுவர்கள் கூடி நின்று சிரிக்க அவர்களை விரட்டுவார் நடிகர் திலகம். மீண்டும் பக்கத்தில் வந்து இங்கிலீஸ் படம் மறுபடியும் பார்க்கலாமா என்று கேட்பதும் ஜெயா ம்ம்ம் என்று சொல்வதும் இளமை குறும்பு. ஒரு டூயட் வரும் என்று எதிர்பார்க்க அது கடைசி வரை வராது. இதை தொடர்ந்து ஜெயாவின் வீடு, அவரின் தாத்தா ஆகியோர் காட்டப்பட்டு அவர் குடிக்கு அடிமையாக இருப்பதும் வரும்.
    இதற்கிடையில் ஊரிலிருக்கும் நிலங்களையெல்லாம் மனோகர் தந்திரமாக பறிப்பது பற்றி மனோரமா ஊர் ஆட்களை கூட்டி வந்து நடிகர் திலகத்திடம் முறையிட கலெக்டரை போய் பார்க்கலாம் என்று அனைவரும் கிளம்ப அங்கே கலெக்ட்ராக மேஜர் (நீதிபதி எப்படி மாவட்ட ஆட்சி தலைவராக முடியும் என்ற கேள்வி எழும்) அவரிடம் முறையிட ஆவண செய்வதாக மேஜர் உறுதியளிப்பார். இந்த காட்சியில் difficulty என்ற வார்த்தையையும் என் friend என்று நடிகர் திலகம் சொல்வதும் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். தாத்தாவின் குடிப்பழக்கத்தை பற்றி ஜெயா வருத்தப்பட்டு பேச நடிகர் திலகம் ஆறுதல் சொல்லுவார். நானும் குடிச்சிட்டிருந்தேன். இப்போ முழுசா நிறுத்திட்டேன் என்று பேசிக்கொண்டிருக்க திருமணத்திற்கு பிறகு ஜெயகௌசல்யாவும் அவரது கணவரும் ஊருக்கு குதிரை வண்டியில் வர நடிகர் திலகத்தை பார்த்து வண்டியை நிறுத்தி பேசுவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு புதிய சட்டையை ஜெயகௌஸல்யா கொடுக்க அவர் மறுப்பார். அவர் அணிந்திருக்கும் சட்டை தோள்பட்டை அருகே கிழிந்திருப்பதை காட்டி புது சட்டையை கொடுக்க அங்கே வைத்தே சட்டையை மாற்றிக்கொண்டு (வெள்ளை கலர் ஜிப்பா) அவர்களையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வர அனைவரும் சந்தோஷப்படுவார்கள். கொஞ்சம் இரும்மா இதோ வந்துடறேன் என்று நடிகர் திலகம் நேராக பாலாஜியிடம் போவார். கல்யாணத்திற்கு அப்புறம் முதல் தடவையா வந்திருக்காங்க. கல்யாணத்திற்கே நானும் ஒண்ணும் பண்ணலை, என் சம்பளத்திலிருந்து கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா என்று கேட்க பாலாஜி 100 ரூபாய் எடுத்து கொடுப்பார். என் சம்பளத்தை விட அதிகமா கொடுக்கிறீங்களே என கேட்கும் நடிகர் திலகத்திடம் பரவாயில்லை. அறுவடை முடிஞ்சவுடன் பணத்தை கொடு என்பார் பாலாஜி. அது என் நிலம் இல்லையே அய்யா என சொல்ல நீ உழைச்சிருக்கேல, அதுக்கு கூலி கிடைக்கணுமில்லே என்று பாலாஜி வழி சொல்ல உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கி வார்த்தை வராமல் சல்யூட் அடிப்பார் நடிகர் திலகம். பயங்கரமான கைதட்டல் விழுந்தது அந்த காட்சிக்கு. புடவையும் மணமகனுக்கு வேட்டியும் வாங்கி கொண்டு கொடுப்பார்.
    மறுநாள் அறுவடைக்கு தயாராகி விட்டார்கள் என்று வாசு சொல்ல அறுவடை நடந்தால்தானே என்று மனோகர் சிரிக்க அடுத்த காட்சி எங்களது பூமி காக்க வந்த சாமி பாடல் .வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி, சிவப்பு துப்பட்டாவில் தூள் கிளம்புவார் நடிகர் திலகம். முதன் முதலாக கோவை சௌந்தரராஜன் நடிகர் திலகத்திற்க்காக பின்னணி பாடிய பாடல். நடிகர் திலகத்தை வாழ்த்தி பாடும் வரிகளுக்கெல்லாம் தியேட்டரில் செம அலப்பறை. பாடல் முடிவில் வயலுக்கு தீ வைத்து விட்டதாக ஒருவர் வந்து சொல்ல அனைவரும் அங்கு ஓட பயிர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாக யாராலும் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார்கள். நடிகர் திலகம் பாலாஜியிடம் சென்று மனோகரை கைது செய்ய சொல்ல எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்வது என அவர் கேட்க நடிகர் திலகம் கோபப்படுவார். அவ்வளவு உழைப்பும் வீணாகி விட்டதே என்று கலங்குவார்.மறுபடியும் எப்போ நிலத்தை உழுது பயிரிட்டு செய்ய முடியும் என்று திகைப்பாக பேசுவார். வருத்தத்தில் இருக்கும் அவரை ஜெயா வீட்டிற்கு சாப்பிட கூப்பிட அங்கே அவரை ஜெயாவின் தாத்தா அவமானப்படுத்திவிடுவார். கோபித்து கொண்டு நடிகர் திலகம் வெளியேற ஜெயா தாத்தாவை கண்டபடி திட்டி விடுவார். வயல் தீயினால் எரிந்து போனது நடிகர் திலகத்தினால்தான் இனிமேலும் அவர் அந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்று சௌகார் சத்தம் போட வேண்டாம் நானே போகிறேன் என்று நடிகர் திலகம் வெளியேறுவார். அந்நேரம் நடிகர் திலகத்திடம் வந்து மன்னிப்பு கேட்கும் ஜெயாவின் தாத்தா அவரை வீட்டிற்கு வரும்படி கெஞ்சுவார். சரி வரேன் என்பார்.
    மனோகர் வாசுவை ஜெயாவின் தாத்தாவிடம் அனுப்பி தனது வீட்டில் நடனம் ஆட சொல்ல தாத்தா சத்தம் போட்டு வாசுவை அடிக்க மனோகரின் ஆட்கள் தாத்தாவை கொன்று விடுவார்கள். அந்நேரம் ஜெயா வர அவரையும் மயக்கப்படுத்தி தூக்கி செல்வதை சௌகார் பார்த்து விடுவார். சிறிது நேரம் சென்று அங்கே வரும் நடிகர் திலகம் தாத்தா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகி நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்று சொல்ல, பாலாஜி அவரையே சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைப்பர். ஜெயா கோடௌனில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளும் சௌகார் அங்கே செல்ல மனோகரின் ஆட்கள் தடுப்பார்கள். மனோகர்தான் அனுப்பினார் என்று சௌகார் சொல்லி உள்ளே சென்று தனது உடைகளை ஜெயாவிற்கு தந்து அவர் உடைகளை தான் அணிந்து தப்பிக்க வைப்பார். வெளியில் ஓடி வரும் ஜெயாவை வழியில் பார்க்கும் மனோகர் சௌகார் என நினைத்து தனது ஆட்களை அவரை பிடிக்க அனுப்பி விட்டு கோடௌனில் வந்து பார்க்கும்போது சௌகார் அங்கு இருக்க அவரை பலவந்தப்படுத்தும் முயற்சியில் இறங்குவார். மனோகரின் ஆட்களிடமிருந்து தப்பித்து வரும் ஜெயாவும் போலிஸிடமிருந்து மறைந்து ஓடி வரும் நடிகர் திலகமும் வழியில் பார்த்து கொள்ள விஷயம் புரிந்து நடிகர் திலகம் கோடௌனிற்கு வர பூட்டியிருக்கும் கதவை லாரியை வைத்து மோதி உடைத்து உள்ளே நுழைந்து சண்டையிடுவார். அதுவும் இறைச்சி பதனிடும் கோடௌனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் பார்களின் மீது ஏறி உருண்டு வழுக்கி அருமையாக படமாக்கியிருப்பார்கள். தியேட்டரில் ரசிகர்களுக்கு செம விருந்து. மனோகரை கொல்ல நடிகர் திலகம் முயற்சிக்க தம்பி வேண்டாம் என்று சௌகார் சொல்ல என்னை ஏற்றுக் கொண்டீர்களா என்று நடிகர் திலகம் நெகிழ அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை தாக்க வரும் மனோகரை துப்பாக்கியினால் சுட்டு பாலாஜி கைது செய்வார்.
    கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என நினைத்திருக்கையில் ஒரு tail end வரும். சௌகார் வீட்டில் முதன் முறையாக நடிகர் திலகத்திற்கு சாப்பிட கொடுக்க அந்நேரம் அங்கே வரும் பாலாஜி உன்னுடைய நன்னடத்தையினாலே உன்னை தண்டனை காலம் முடியறத்துக்குள்ளே ரிலீஸ் பண்ணிட்டாங்க என்று கூறி அவரின் லைசென்ஸை திருப்பி கொடுப்பார். இனிமே இங்கே இருக்க வேண்டாம், உன்னை கொண்டு போய் டவுனிலே விட்ருறேன் என்பார். அனைவரும் போக வேண்டாம் என்று சொல்ல நடிகர் திலகம் நேரே மேஜர் வீட்டிற்கு சென்று இது என் வீடு, என் குடும்பம். நான் எங்கேயும் வர மாட்டேன், இங்கேதான் இருக்க போறேன் என்று சொல்ல மேஜர் புன்னைகையிலே சம்மதம் சொல்ல ஊர் திரும்பும் நடிகர் திலகத்திற்கு ஊர்க்காரர்கள் வரவேற்பு கொடுப்பது, சௌகாரின் குழந்தைகள் இருவரும் கொலைகார மாமாவை அன்போடு அணைப்பது, சுப்பையா காந்திமதி சௌகார் மனோரமா நடிகர் திலகத்தை வரவேற்பது, ஜெயாவும் நடிகர் திலகமும் அத்தேரி கழுத என மாறி மாறி சொல்லி அணைத்து கொள்வது இப்படி நான்கு விதமான காட்சிகளும் ஒரே பிரேமில் வர வணக்கம்.
    படத்தின் ரிப்போர்ட், வரவேற்பு, வெற்றி சாதனைகள் அது அடுத்த வாரம்.
    (தொடரும்)
    அன்புடன்

    siva-496.jpg

    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •