நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் .


நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி.


.* சமீபகாலமாக உங்களை சீரியல்களில் பார்க்க முடியவில்லையே?


நான் சீரியல்களில் அதிகமாக நடித்திருந்தபோதும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதனால் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த படம் தொடங்க இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற ஜூன், ஜூலையில் அந்த படம் தொடங்குகிறது..


* யாரடி நீ மோகினி சீரியல் நேயர்களிடம் எத்தகையை வரவேற்பு பெற்றுள்ளது?


நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்னை பார்த்த நேயர்கள், இத்தனை நாளும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கவில்லை. மறுபடியும் உங்களை ஸ்கிரீன்ல பார்த்தது சந்தோசமாக உள்ளது என்று சொல்லி நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள். அதோடு, யாரடி நீ மோகினி சீரியல் சினிமா பார்த்த திருப்தியை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பேமிலி டிராமா. எல்லோருக்குமே இதில் முக்கியத்துவம் உள்ளது. மோகினி என்றொரு திரில்லர் மேட்டரும் உள்ளது. குழந்தைகளுக்கு அதுதானே பிடிக்கும். ரொம்ப விகாரமாக காட்டாமல் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி மோகினி கேரக்டர் இடம்பெற்றுள்ளது


.* சீரியல் கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?


நான் எதிர்பார்ப்பது பியூர் எண்டர்டெய்ன்மென்டுதான். அதுக்கு நடுவுல அப்பப்ப ஒரு சின்ன மெசேஜ் வேண்டுமானால் கொடுக்கலாம். மற்றபடி கருத்து சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.


* சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?


முன்பெல்லாம் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் சீரியலோட நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. டிரண்ட் மாறியிருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சினிமா டைரக்டர்கள் நல்ல வெயிட்டான வேடம் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்


.* பேமிலி டிராமா தவிர என்னென்ன வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண ஆசை?


நான் டோட்டலாக ஒரு டைரக்டர் நடிகன்தான். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர நினைப்பேன். அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் மைண்டில் என்ன உள்ளதோ அதை வெளிப்படுத்தவே முயற்சி செய்வேன். அப்படித்தான் ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன்.


இப்போது நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேமிலி டிராமா என்றாலும், இந்த சீரியலே சினிமா போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம்தான். முக்கியமாக, பாடல், சண்டை காட்சியெல்லாம் உள்ளது. சினிமா மாதிரி பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சினிமா போன்று ஒரு சீரியலில் நடிப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இது நேயர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் புதுமையான அனுபவமாக உள்ளது என்கிறார் சஞ்சீவ்.

நன்றி: தினதந்தி