கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.

கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.

அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.

1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.

2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)

3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)

4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.

5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )

கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.