Page 14 of 73 FirstFirst ... 412131415162464 ... LastLast
Results 131 to 140 of 722

Thread: 'Kalai Nilavu' RAVICHANDRAN

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.





    படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
    இசை: T.K.ராமமூர்த்தி.
    ஒளிப்பதிவு: G.விட்டால் ராவ்.
    சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
    நடன அமைப்பு: சின்னி-சம்பத்
    இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
    தயாரிப்பு: ஆதிநாராயணன்.
    பேனர் : விவிதபாரதி


    ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

    கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

    இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

    ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

    படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

    ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

    பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

    பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

    இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

    சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

    கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

    பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

    திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

    O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

    இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

    கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

    பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

    "என்ன வேலை என்ன தேவையோ..
    சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
    பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
    கோயில் பார்க்கவோ...
    பாவம் தீர்க்கவோ...
    சொத்து சேர்க்கவோ...
    சுமையைத் தூக்கவோ"...


    என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

    பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

    ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

    இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

    'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்


















    அன்புடன்,
    வாசுதேவன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' படத்தின் அனைத்து பாடல்களையும் வீடியோ வடிவில் கண்டு மகிழ கீழ் உள்ள 'லிங்க்'கை சொடுக்கவும். ஒரே 'லிங்க்' கில் அனைத்துப் பாடல்களையும் தொடர்ச்சியாகக் கண்டும், கேட்டும் மகிழலாம்.

    http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=12481

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 17th December 2011 at 03:43 PM.

  4. #3
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    தங்களின் 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தின் திறனாய்வுக்கட்டுரை படு சூப்பர். திரைப்படத்தை நேரில் பார்ப்பது போலிருக்கிறது. நான் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் இப்படத்தை தியேட்டரில் ஆரவாரங்களோடு கண்டு ரசித்திருக்கிறேன். மிக அருமையான பொழுதுபோக்குப்படம் என்பதில் சந்தேகமேயில்லை. இப்போது உங்கள் கட்டுரை படித்ததும் மீண்டும் பார்த்தது போலிருந்தது.

    திரு. ரவிச்சந்திரன் அவர்களின் திரியில் நீங்கள் சுறுசுறுப்பாகப் பதிவுகள் இட துவங்கியிருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. சாரதா மேடம் இத்திரியைத்துவங்கி தனியொருவராக படங்களின் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வந்தார். உடன் நமது ராகவேந்தர் சார், பம்மலார் சார் ஆகியோர் பல்வேறு சுவையான பதிவுகளைத் தந்து வந்தனர். இடையில் சிறிது காலம் திரி சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சாரதா அவர்கள் முன்போல தீவிரமாக இறங்காததால் இருக்கலாம். நடிகர்திலகத்தின் திரியிலும் தற்போது சிறிது காலம் வரக்காணோம்.

    இருப்பினும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன், 'இத்திரி மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கப்போகிறது' என்று சாரதா ஒரு அறிவிப்புச்செய்திருந்தார். அதைத்தொடர்ந்து நமது பம்மலார் சார் சிறப்பான ஆவணப் பதிவுகளைத்தந்தார். ராகவேந்தர் சார் அருமையான வீடியோ பதிவை (மலர்கள் நனைந்தன பனியாலே) தந்தார். இப்போது நீங்கள் புயலாக வந்திருக்கிறீர்கள். மனதுக்கு மகிழ்ச்சியைத்தரும் இந்தப்புயல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். (நீங்களெல்லாம் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை உணர்ந்துதான் அப்படியொரு அறிவிப்பைச் செய்தாரா தெரியவில்லை).

    இரு திலகங்களுக்கு அடுத்து ஜெய்யும், ரவியும் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாதவர்கள். இவர்கள் காலத்தில்தான் வித்தியாசமான பொழுதுபோக்குப் படங்கள் வந்து குவிந்தன. அவர்களின் படங்களை நினைவு கூர்வது மிகவும் சந்தோஷம் தரும் விஷயம்.

    தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால், ரவிச்சந்திரனின் 'மீண்டும் வாழ்வேன்' படத்தின ஆய்வுக்கட்டுரையைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மற்ற முக்கியமான படங்கள் பலவற்றை சாரதா அவர்கள் ஏற்கெனவே எழுதிருக்கிறார். பார்த்திருப்பீர்கள். ஆனால் அவரிடம் இல்லாத ஒரு விசேஷம் உங்களிடம் இருப்பது என்னவென்றால், படத்தின் ஸ்டில்களையும், பாடல்களின் வீடியோ இணைப்புகளையும் கூடவே இணைத்துத்தருவது. அது ஆய்வுக்கட்டுரையின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.

    தங்கள் பதிவுகளுக்கு மகத்தான நன்றிகள்.

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கலைநிலா ரவியின் மதராஸ் டு பாண்டிச்சேரி பயணக் கட்டுரையை மிகச் சிறப்பாக வடித்துள்ளார் வாசுதேவன். பாராட்டுக்கள். அனைத்துப் பாடல்களும் பிரபலமாயின. டி.கே.ராமமூர்த்தி தனியாக இசையமைக்க முதலில் வாய்ப்பளித்தவர் பீம்சிங். அவருடைய முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் பால முரளி கிருஷ்ணா அவர்கள். அருள்வாயே அருள்வாயே என்று ஆண்டவன் அருளை வேண்டித் தன் தனியிசை வாழ்க்கையைத் துவக்கினார் ராமமூர்த்தி. இந்தப் படம், மதராஸ் டூ பாண்டிச்சேரி படம் அவருக்கு மிகப் பெரிய புகழைத் தந்தது. குறிப்பாக மலரைப் போன்ற பருவமே சென்னை வானொலியில் அன்றாடம் ஒலித்தது மறக்க முடியாது. கல்பனாவுக்கும் சுசீலாவின் குரலில் மை Friend நெஞ்சத்தில் என்ன (அப்போதே தங்கிலீஷ் வந்து விட்டது) மிகுந்த புகழைக் கொடுத்தது.

    சென்னை பிளாசா திரையரங்கில் பல காட்சிகள் கடைசி வரை அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட படம். திருமலை மகாலிங்கம் இரட்டையரின் இயக்கும் திறமைக்கு மற்றொரு சான்று மதராஸ் டு பாண்டிச்சேரி.

    இப்படம் தான் பின்னர் பாம்பே டு கோவா என ஹிந்தியில் எடுக்கப் பட்டது.

    அருமையான காட்சிகளையளித்த வாசுதேவன் சாருக்கு மீண்டும் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவிச்சந்திரனின் தமிழ்ப்படங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மலையாளத்திரைப்படங்களைப் பற்றி அதிகம் தகவல் அந்தக் காலத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இணையத்தின் உதவியால் அந்தப் பாடல்களும் படங்களும் காணொளியாகக் கிடைக்கின்றன. அப்படி ஒரு மலையாளப் படம் ஓமன. ரவிச்சந்திரன் ஷீிலா இணையாக நடித்த இப்படத்திற்கு இசை ஜி.தேவராஜன் அவர்கள். அந்தப் படத்திலிருந்து பாடல் காட்சி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவியின் படங்களில் அபூர்வமான படம் ஐரீஸ் மூவீஸ் நீயும் நானும். அந்தப் படத்தை அப்போது திரையரங்கில் பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் வாய்ப்பே கிடைக்க வில்லை. இனிமேல் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் மெல்லிசை மன்னரின் பாட்டுக்கள், குறிப்பாக யாரடி வந்தார் பாடல் அந்தக் காலத்தில் சூப்பரோ சூப்பர் ஹிட். அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடும் போது பியானோ இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். கோரஸ் குரல்கள் சரியான இடத்தில் தாளக் கட்டோடு அட்டகாசமாக இருக்கும். இதே பாடலை டி.எம்.எஸ். ரவிக்காக பாடும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். இணையத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஆடியோ கிடைக்கிறது. இதோ நாம் கேட்டு ரசிக்கலாம்.

    http://www.raaga.com/play/?id=204930

    இதே படத்தில் மற்றொரு பாடல் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்ற பாடலும் அதைத் தவிர இன்னோர் பாடலும் உண்டு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #7
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார் ,

    பதிவிட்ட உடனேயே 'மதராஸ் டு பாண்டிச்சேரி' ஆய்வை படித்து பாராட்டிய தங்கள் பெருந்தன்மைக்கும், அன்பு உள்ளத்திற்கும் நன்றிகள் சார். ராகவேந்திரன் சார் கூறியுள்ளது போல தமிழில் எடுக்கப் பட்ட பிறகுதான் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' இந்தியில் எடுக்கப்பட்டது. இந்தி 'பாம்பே டு கோவா' 1972-இல் வெளியாகி உள்ளது. பிறகு தான் நான் conform செய்து கொண்டேன். பாம்பே டு கோவா வண்ணப் படமும் கூட.



    தாங்கள் கேட்டிருந்த படி 'மீண்டும் வாழ்வேன்' பற்றிய ஆய்வை தர முயற்சி செய்கிறேன்.திறமை உள்ளவர்கள், நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களை மதித்து கௌரவிக்கும் நற்பண்புகளும்,நல்ல ரசனையும் தங்களுக்கு இருப்பது கண்டு மனம் பூரிப்படைகிறேன்.தங்கள் அன்புப் பாராட்டிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறக் கடமைப் பட்டவனாகிறேன்.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 17th December 2011 at 08:59 PM.

  9. #8
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,

    தங்களுடைய மனமுவந்த பாராட்டிற்கு நன்றி. விரைவாக பதிவைப் படித்ததோடல்லாமல் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' தான் முதலில் தமிழில் எடுக்கப் பட்டது... பின்னர்தான் 'பாம்பே டு கோவா' இந்தியில் எடுக்கப்பட்டது என்ற தகவலை சுட்டிக்காட்டியமைக்கும் மிகுந்த நன்றிகள் சார்.

    'ஓமன' படத்தின் அபூர்வ பாடல் காட்சியை காணொளி வடிவில் காண வைத்ததற்கு என் சிறப்பு நன்றிகள்.

    என்னுடைய அபிமானப் பாடகியின் 'யாரடி வந்தார்...என் எண்ணத்தை கொள்ள' பாடல் இணைப்பிற்கும் மிகுந்த நன்றி.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 17th December 2011 at 08:43 PM.

  10. #9
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நீயும் நானும்' படத்தில் வரும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மிளிரும் "ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா" ...என்ற அற்புதப் பாடலின் லிங்க் கீழே.

    http://www.raaga.com/player4/?id=204...68141774627289

    அன்புடன்,
    வாசுதேவன்.

  11. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவிச்சந்திரன் நடித்த அபூர்வ திரைப்படமான 'சத்தியம் தவறாதே' படத்தில் T.M.S. மற்றும் சுசீலாவின் தேன் குரல்களில் ஒலிக்கும் "முத்துக் குளிப்பவரே! கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...என்ற அற்புதமான பாடல் கேட்க...



    http://www.inbaminge.com/t/s/Sathiyam%20Thavarathe/

    லிங்கை சொடுக்கவும்.

    அன்புடன்,
    வாசுதேவன்.

Page 14 of 73 FirstFirst ... 412131415162464 ... LastLast

Similar Threads

  1. Was Kalai Arasi the first Indian film to feature aliens?
    By inetk in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 18th November 2010, 03:19 AM
  2. Hariharan gets `kalai mAmaNi'
    By app_engine in forum Current Topics
    Replies: 1
    Last Post: 15th February 2006, 10:12 PM
  3. Songs from "Pagalil oru nilavu"
    By S.Balaji in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 17
    Last Post: 19th October 2005, 09:37 PM
  4. NILAVU SONGS
    By Justice in forum Current Topics
    Replies: 72
    Last Post: 1st October 2005, 10:52 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •