'எதிர் நீச்சல்' கிட்டு மாமா.

ஸ்ரீகாந்த் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமான போதிலும், அவருக்கு தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. பெரும்பாலானவை சப்போர்ட்டிவ் ரோல்களே. அவையும் பலசமயம் நல்ல எஃபெக்டிவ் ரோல்களாக அமைந்தது உண்டு. அவற்றில் ஒன்றுதான் எதிர்நீச்சலில் நடித்த கிட்டுமாமா ரோல்.

எதிர்நீச்சல் படத்தின் கதை மிகப்பெரிது. அந்த வீட்டில் வந்து ஒண்டியிருந்துகொண்டே கல்லூரியில் படிக்கும் மாது என்ற பரிதாபமான ஜீவனை, எப்படி எல்லோரும் தங்கள் சுயநலத்துக்குப் பந்தாடுகிறார்கள். ஒரு ரூபாய் பெறுமான சோற்றைப்போட்டுவிட்டு, பதிலுக்கு அவனிடமிருந்து பத்துரூபாய்க்கான வேலையை எப்படி வாங்குவது என்ற வித்தையை அனைவரும் அறிந்துள்ளனர். இதையும் விட்டால் தனக்குப் போக்கிடமில்லையே என்று நினைக்கும் அவன், எல்லாவற்றையும் சகிக்கிறான். மாது (நாகேஷ்) ஒரு பணக்காரரின் மகன் என்று நாயர் (முத்துராமன்) கிளப்பிவிடும் புரளியை நம்பி, திடீரென ஒவ்வொருவரும் அவன் மீது காட்டும் அக்கறையென்ன, அது பொய்யென்று தெரிந்ததும், தங்கள் சுயரூபத்தைக்காட்டும் பச்சோந்தித்தனம் என்ன?. கே.பி.யின் சிந்தனையே தனிதான்.

படத்தின் முக்கிய பாத்திரம் நாகேஷ் நடித்த 'மாடிப்படி மாது' பாத்திரமாக இருந்தாலும், அதற்கு துணை நின்ற அனைவரது கதாபாத்திரங்களுமே சிறப்புப் பெற்றன. படத்தின் கதையமைப்பு சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர் பகுதிகளில் ஒரே வீட்டில் பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. அந்தக்குடித்தனக்காரர்களில் ஒன்றுதான் 'பட்டுமாமி-கிட்டுமாமா' தம்பதியினர் மற்றும் அவர்களின் கைக்குழந்தை. மடிசார் கட்டிய பட்டுமாமியாக சௌகார் ஜானகியும், பஞ்சகச்சம் வேஷ்டி, முழுக்கை சட்டை, துண்டு, மீசையில்லாத முகம் இவற்றுடன் ஸ்ரீகாந்த். மூச்சுக்கு மூச்சு 'ஏன்னா கேட்டேளா' என்றும் 'அடியே பட்டூ... நோக்கு விஷயம் தெரியுமோன்னோ?' என்றும் வளைய வ்ரும் 'டிப்பிக்கல்' மைலாப்பூர் பிராமணக்குடும்பம். இருவரும் ஜாடிக்கேத்த மூடி. இப்பாத்திரத்தில் நடிக்க, ஸ்ரீகாந்துக்கு நிச்சயம் நாடகமேடை அனுபவம் கைகொடுத்திருக்க வேண்டும். (இந்த படமும், நாடகத்திலிருந்து திரை வடிவம் பெற்றதுதான்). நாடகம் திரைப்படம் இரண்டையுமே செதுக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்தான்.

இந்ததம்பதியினரின் பாடல், 1968-ன் சூப்பர் பாடல்களில் ஒன்று...

'ஏன்னா.. நீங்க சமத்தா இல்லை அசடா?
சமத்தாயிருந்தா கொடுப்பேளாம் அசடாயிருந்தா தடுப்பேளாம்.

ஏண்டி புதுசா கேக்கிறே என்னைப்பாத்து?

அடுத்தாத்து அம்புஜத்தைப்பாத்தேளா -அவ
ஆத்துக்காரன் கொஞ்சறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையே வாங்கிக்கறா பட்டுப்பொடவையே வாங்கிக்கறா.

அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி - அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்தை மூணுஷோவும் பார்த்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா
பொடவைக்கு ஏதுடி, பட்டூ பொடவைக்கு ஏதுடி’

என்ற பாடல் ஒலிக்காத நாளே இல்லையெனலாம்.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட இப்படத்திலிருந்து (இது ஸ்ரீகாந்த் திரியென்பதால்) அவர் ஏற்றிருந்த 'கிட்டுமாமா' ரோலைமட்டும் சொல்லியிருக்கிறேன்.