-
12th September 2014, 01:09 PM
#1
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே!
பாசுரம் பாடிவா தென்றலே..
சின்னக் கண்ணன்..
ஒன்று
மனித வாழ்க்கையில் சோகங்கள் கலைந்து செல்லும் மேகங்கள் தானோ..
பாருங்கள்..திடுமென ஒரே சோகமாய் இருக்கிறது.. கொஞ்சம் மனசு வறட்சியாக..கற்பனை எதுவும் வராமல்.. எதைப்பற்றியாவது எழுதிப் பார்க்கலாம் என்று புத்தகங்களைப் படித்தது தான் மிச்சம்.. எழுத விரல் வர மாட்டேன் என்கிறது… காரணம் சோம்பல்.
.
இன்று எப்படியும் எழுத வேண்டும் என ஆழ்மனத்திடம் “சமர்த்தோல்லியோ..உன் திறமை உனக்கே தெரியாது..எழுதலாம்பா “என்று சொல்லியும் கூட மறுபடி சோம்பல்.. எனில் அகெய்ன் சோகம்..
கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து புத்தகமொன்றைப் புரட்டும் போதே யோசித்தேன்..எப்படியெல்லாம் வருத்தம் சோகம் நம்மைச்சூழ்கிறது..
பரீட்சைக்குப் படித்துச் செல்லும் போது படித்தது வராத போது.:
அழகாய் டிரஸ் செய்து செல்கையில் உடன் வேலை பார்க்கும் நண்பனோ நண்பியோ கமெண்ட் எதுவும் அடிக்காததால்..:
லீவு நாளில் கொஞ்சம் பசி எனக் கிச்சனுக்குள் போனால் நொறுக்ஸ் எல்லாம் தீர்ந்திருப்பது:..ஒரு விருத்தமோ கவிதையோ எழுதலாம் என நினைக்கையில்
போப்பா உனக்கு வேற வேலை இல்லை என கற்பனைக் குதிரை சோம்பேறியாய் வேறெங்கோ போய் புல்லை மேயப் போய்விடுவது -..இவையெல்லாம் குட்டிக் குட்டிசோகங்கள்
உறவினரின் இறப்பு, நண்பர்களின் பிரிவு, காதலில் தோல்வி இதெல்லாம் பெரிய சோகங்கள்..
புத்தகம் புரட்டியதில் விரல் ஒரு பக்கம் நிற்க அட இந்த விருத்தமும் சோகத்தைச் சொல்கிறதே..
**
மிகப் பெரிய சக்கரவர்த்தி, தன் மனையாள் கேட்ட வரத்தை நிறைவேற்ற பையன் காட்டுக்குப் புறப்பட்டுப் போய் விடுகிறான்..தசரதர் புலம்புகிறார்…
வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
…கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா
…விடையோந்தன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்காலம் வல்வினையேன்
…மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்நெஞ்சம் இருபிளவாய்
..போகாதே நிற்கு மாறே…
ஹே ராமா..உன் தந்தை தசரதன் அழைக்கின்றேன் இங்கே வா..என்னை வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப்போ.. மறுபடியும் கூப்பிடுகிறேன்..
ராமா..மறுபடியும் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ..
ஓ மை பாய், மகனே…மலர்க்கூந்தலை உடையவளும் மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதையை மணப்பதற்காக சிவ தனுசை முறித்தவனே..மகா வீரனே..
கொடிய விலங்குகள் கொண்ட காட்டிற்கு நீ செல்கிறாய் என்னைத் தவிக்க விட்டு.. இதைக் கண்டு என் மனம் இரண்டாகப் பிளக்காமல் இருக்கின்றதே..
கொடிய வினை செய்த பாவி நான்.. என்னை விட்டுப் போகிறாயே ஓ ராமா ஸ்ரீராமா.. நான் எப்படியடா உயிர் வாழ்வேன்..
**
படக்கென தசரதரின் சோகம் நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.. எழுதியவர் குலசேகர ஆழ்வார் (ஆழ்வார் ஆகுமுன் சேர மன்னனாய் இருந்தவர் எனப் படித்த நினைவு) எவ்வளவு அழகு..
டாட் நீங்க கொடுத்த boon நிறைவேத்தத் தான் போறேன்..டேக் கேர் டாட் எனச் சொல்லிச் செல்லும் ராமபிரானுக்கு அந்த சமயத்தில் புத்திர சோகம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மை தான்.. கொஞ்சம் அனுபவப் பட்டிருந்தால் தசரதனோடே இருந்திருப்பாரன்றோ ( ராமாயணம் வந்திருக்குமா என்பது வேறு விஷயம்!!).. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இறைவனுக்கும் பொருந்தியிருக்கிறது..பிற்காலத்தில் லவ குசர்களை பிரிந்து தானே இருந்தார்.. பிறந்தது முதல் பார்க்க முடியவில்லையே..
ம்ம்..இந்த விருத்தத்தையே நானும் எழுதிப்பார்க்க முயற்சி செய்தேன்
அழைக்கின்றேன் உந்தனையே அருமைராமா
…அருகில்வா என்று சொல்லி
தழைக்கின்ற துயரத்தில் தசரதனும்
..தயங்காமல் கூவ அங்கே
விளைகின்ற துக்கமெதும் அறியாமல்
..வில்லினையே தோளில் சேர்த்தே
கலைகின்ற மேகம்போல் கரைந்துசென்றான்
…கானகத்தே அண்ணல் தானே…
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழி உருவானது அப்பொழுது தான் போலும்..
அவ்வப்போது ஒரு பாடலுடன் வருவேன்….வரட்டா
(அதான் வந்துட்டியே.. சோகத்தப் பத்திச் சொன்னே சரி..நீ மறுபடி வந்ததுனால மத்தவாளோட சோகத்தப் பத்தி நினச்சியா..
போ மனசாட்சி..அப்படில்லாம் இருக்காது..
அப்படிங்கற.. சரி என்ன பண்ணப் போற..இங்க..
இப்போதைக்கு ஒரு பாட்டுன்னு எடுத்துருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..எல்லாம் அந்த இறைவன் தான் துணை..
ஆல் த பெஸ்ட்)
..தொடரும்
-
12th September 2014 01:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks