கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) (பிறப்பு ஏப்ரல் 13 1930 ) 29 வயதில் மறைந்து விட்டார்




இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.

189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'

கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'

இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!

'திருடாதே' திரைப்படத்தில் (மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பை கொண்ட படம் ) குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது