அந்த நாள் ஞாபகம்

தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

தவப்புதல்வன் வெற்றி பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்! 1972 பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடியதைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் விளம்பரம் இதோ. மதுரையில் சிந்தாமணியிலிருந்து விஜயலட்சுமி அரங்கிற்கு ஷிப்ட் செய்யப்பட்ட தவப்புதல்வன் அங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. சென்னையில் பைலட் அரங்கிலும் 100 நாட்கள்.



[மதுரை 04.12.1972 தேதியிட்ட தினத்தந்தி விளம்பரம் -நன்றி சுவாமி]

அன்பு தாயார் ராஜாமணி அம்மையார் மறைந்து நான்கே நாட்களில் காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்து கொண்டதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உடனே வசந்த மாளிகை படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் நடிகர் திலகம். முன்பே சொன்னது போல் தீபாவளிக்கு வருவதாக இருந்த வசந்த மாளிகை அதற்கு சற்று முன்னரே செப்டம்பர் 29 அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்தது, மயக்கமென்ன பாடல் காட்சியும் ஒரு சில patch up காட்சிகளுமே பாக்கி என்ற சூழலில் அதற்காக போடப்பட்ட set-ம் ரெடியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே ஷூட்டிங்-ல் கலந்து கொண்டு அதை விரைவாக முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். பல்வேறு படங்களின் சின்ன சின்ன படப்பிடிப்பு schedules முடித்துவிட்டு ஒய்வு எடுத்தார்.எப்படி என்றால் 1972 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை பாலாஜியின் நீதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் திலகம். மைசூருக்கு அருகேயுள்ள கிராமப் பிரதேசங்களில் படப்பிடிப்பு பிளான் செய்திருந்தார்கள்.

நீதி ஷூட்டிங் தேதிகளுக்கும் அதற்கு முன் முடித்துக் கொடுத்த ஷூட்டிங் தேதிகளுக்கும் நடுவே கிடைத்த 5,6 நாட்கள் இடைவெளியைத்தான் சூரக்கோட்டை சென்று ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார். அதை ஒய்வு என்று சொல்லுவதை விட தாயாரின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய வெறுமையையும் சோகத்தையும் மறக்கவே பண்ணைக்கு சென்றார். ஓய்விற்கு என்று சொல்லி சென்றாலும் அங்கும் அவரை காண ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர் ஆக ஒய்வு எடுக்கப் போனாலும் அங்கேயும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்துக் கொண்டுதானிருந்தார்.

இதற்கிடையே பட்டிக்காடா பட்டணமா வெற்றி சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மதுரையை பொறுத்தவரை 100 நாட்களில் 4,19,000/- வசூலைப் பெற்று புதிய சரித்திரம் படைத்தது. 16 வாரத்தில் சுமார் 4,40,000/- ரூபாய் வசூல் செய்து அன்று வரை மதுரையில் அனைத்துப் படங்கள் [பணமா பாசமா நீங்கலாக] வெள்ளி விழா நாட்கள் ஓடி பெற்ற வசூலையெல்லாம் இந்த கருப்பு வெள்ளை காவியம் முறியடித்தது. அது மட்டுமா ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக 140 நாட்கள் ஓடி ரூபாய் 4,75,000/- சொச்சம் வசூல் பெற்ற கேஎஸ்ஜியின் பணமா பாசமா படத்தின் வசூலை தங்கம் தியேட்டரை ஒப்பிட்டு நோக்கினால் அதன் பாதி அளவே capacity உடைய சென்ட்ரல் திரையரங்கில் வெறும் 125 நாட்களுக்குள்ளாகவே கடந்தது பட்டிக்காடா பட்டணமா, [பணமா பாசமா வெளிவந்த 1968-ம் வருடத்தில் இருந்ததை விட டிக்கெட் கட்டணத்தில் 5 பைசா மட்டுமே 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வெளியானபோது அதிகமாக்கப்பட்டிருந்தது]. 19 வாரத்தில் ரூபாய் 4,90,000/- வசூலித்த இந்தப் படம் 20 வாரத்தில் மதுரையில் மற்றொரு வரலாற்று சாதனை புரிந்தது. மதுரையில் சினிமா திரையரங்குகள் தொடங்கிய காலம் முதல் அன்றுவரை மொத்த வசூலில் எந்தப் படமும் தொடாத 5 லட்சம் ரூபாயை தாண்டியது பட்டிக்காடா பட்டணமா. மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் 139வது நாள் இரவுக் காட்சியோடு 5 லட்சத்தை தொட்டது. அதாவது 1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வியாழனன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஆம் நண்பர்களே! எந்த ஒரு மனிதன் அந்த நாளில் பிறந்து பின்னாட்களில் நடிகர் திலகத்தின் சாதனை பொன்னேடுகளையெல்லாம் அகில உலகமும் அறிந்துக் கொள்ளும்வண்ணம் தரவேற்றினானோ அந்த மனிதன் பிறந்த நாளன்றுதான் அதற்கு முன்பும் சரி அதற்கு பின்னும் சரி மதுரையில் எந்த கருப்பு வெள்ளை படமும் தொடாத 5 லட்சம் வசூல் என்ற வெற்றிக் கோட்டை கடந்து இன்று வரை ஏன் இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காண கிடைக்காமல் இருந்த நடிகர் திலகத்தின் பல்வேறு சாதனை ஆவணங்களை தேடி பிடித்து வெளிக் கொண்டுவந்து நமக்கு வழங்கிய இரா. சுவாமிநாதனுக்கு இந்த மதுரைக்காரன் dedicate செய்யும் ஒரு சாதனை துளி இது.

(தொடரும்)

அன்புடன்