Results 1 to 10 of 3992

Thread: Film / Documentary - Recently watched & worthy of some discussion

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    சினிமா விமர்சனம் : காக்கா முட்டை

    தமிழ் சினிமாவின் 'பொன் முட்டை’ இந்தக் 'காக்கா முட்டை’. உலகத்துக்கான தமிழ் சினிமா இது!

    சென்னை மாநகரத்தின் 'சிங்காரச் சென்னை’ அந்தஸ்துக்காக, நகர வாழ்வில் இருந்து ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் அணுகி, தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பாக மிளிர்கிறது 'காக்கா முட்டை’. இயக்குநர் மணிகண்டனுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறான் விகடன்!

    'ஒரு பீட்சா சாப்பிட வேண்டும்’ என ஆசைப்படும் குப்பத்துச் சகோதரர்கள் இருவரும், அந்த ஆசைக்கு அடுக்கடுக்காக வரும் முட்டுக்கட்டைகளும்தான் இந்த 'முட்டை’க் கதை. சுவாரஸ்யம் என்ற பெயரில் வழக்கமான வணிகச் சமாசாரங்களைத் திணிக்காமல், கதை ஓட்டத்திலேயே அத்தனை சுவாரஸ்யங்களையும் அள்ளித் தந்திருப்பது அசல் வெற்றி.

    கோழி முட்டை வாங்கக்கூட 'வசதி’ இல்லாத குப்பத்துச் சகோதரர்கள் விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), ரமேஷ் (சின்ன காக்கா முட்டை) இருவரும் காக்கா முட்டையைக் குடித்து உடலுக்குப் புரதம் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்தச் சொற்பப் புரதச்சத்தையும் சிறுவர்களிடம் இருந்து பறித்துக்கொள்கிறது புதிதாகக் கட்டப்பட்ட ஒரு பீட்சா கடை. கடையின் திறப்பு விழாவில் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவது, சுண்டி இழுக்கும் விளம்பரங்கள்... என சிறுவர்களுக்கு பீட்சா மீது பைத்தியமே பிடிக்கிறது. ஒரு கிலோ மூன்று ரூபாய் எனக் கரி அள்ளிச் சம்பாதிக்கும் சிறுவர்களால், 300 ரூபாய் சம்பாதிக்க முடிந்ததா, அப்படிச் சம்பாதித்தாலும் பீட்சா சாப்பிட முடிந்ததா... எனத் தடதடப்பும் படபடப்புமாகக் கடக்கிறது படம்!

    'குப்பத்துச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டால் என்ன நடக்கும்?’ என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கும் சினிமா, நுகர்வுக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் உலகமயமாக்கல், எளிமையும் அழகும் நிறைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை, நகரத்து மனிதர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத... அவர்கள் அறிந்தேயிராத விளிம்புநிலை மக்களின் வாழ்வு... எனப் பல விஷயங்களை, போகிறபோக்கில் போட்டுத் தாக்குகிறது.

    இதே சைதாப்பேட்டை பாலத்தை நாம் எத்தனை முறை கடந்திருப்போம்? பாலத்துக்கு அந்தப் பக்கம் வசிக்கும் இந்த மனிதர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    அநாவசியத்தை அத்தியாவசியமாக 'மாற்றும்’ விளம்பரங்கள், பொங்கித் தின்ன அரிசி இல்லாத வீட்டில் பொழுதுபோக்க இரண்டு 'விலையில்லா’ டி.வி பெட்டிகள், சினிமாவில் ஹீரோ எகிடுதகிடாகப் பேசுவதை வீட்டில் வயதுக்கு மீறிப் பிரதிபலிக்கும் சிறுவர்கள், 'ஃப்ளெக்ஸ் பேனர்’ அரசியல், 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’ என வெள்ளந்தியாக வெளிப்படும் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உணவு அரசியல், 'பீட்சாதான் வேணும்... அப்பா எல்லாம் வேணாம்’ எனும் அளவுக்கு மகனை முறுக்கேற்றும் போலி நாகரிக அழுத்தங்கள், சென்னையின் காஸ்ட்லி ஸ்தலங்களுக்குள் தங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பூர்வகுடிகளின் தயக்கம், ஊடகங்களின் சென்சேஷன் பசி... என ஏராளமான விஷயங்கள், சின்னச் சின்னக் காட்சிகளாகவும் கலீர் சுளீர் உரையாடல்களாகவும் மனதில் ஆணி அடிக்கின்றன!

    தூக்கத்தில் டவுசரை ஈரமாக்கும் ஓப்பனிங்குடன் அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷ§ம், 'அவன் சாப்பிட்ட பீட்சாவைக் கொடுப்பான்... அதை நீ வாங்கித் தின்னுவியா?’ என, தம்பியை அதட்டும் விக்னேஷ§ம் அதகளம்... அமர்க்களம்! பாட்டி சுடும் பீட்சாவைச் சாப்பிட்டு கடுப்படிப்பதும், 'தண்ணி வண்டி’யைத் தள்ளு வண்டியில் இழுத்து வந்ததற்குக் காசு கிடைத்ததும் கண்கள் விரிவதுமாக, படம் முழுக்கப் பசங்க ராஜ்ஜியம்.

    துண்டுப் பிரசுரம் பார்த்து பீட்சா சுடும் அந்தப் பாட்டி சாந்திமணி... அழகு அப்பத்தா! மருமகளின் திட்டுக்களில் இருந்து பேரன்களைக் காபந்து பண்ணுவதும் 'ஹோம்மேடு பீட்சா’ முயற்சியில் கலகலப்பது என பாச-நேசமாக ஜொலிக்கிறார். சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம். அழுக்கு மேக்கப், எப்போதும் சோகம்... என வளையவருபவர், மகன் படுக்கையை நனைப்பதை நிறுத்தும்போதும், 'ரொம்ப அடிச்சுட்டாங்களா?’ எனப் பதறும்போதும்... ரசனை உணர்வுகளைக் கடத்துகிறார். ரமேஷ் திலக், 'பழரசம்’ ஜோ மல்லூரி, கரியை எடைக்கு வாங்கும் அக்கா, 'முந்திரிக்கொட்டை’யாகச் சொதப்பும் கிருஷ்ணமூர்த்தி... என ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்.

    பாட்டி குளிக்கும்போது கேரிபேக்கில் தண்ணீர் பிடித்து வருவது, 30 ரூபாய் திருட்டுக் கேபிளுக்கு நுகர்வோர் உரிமை மறுக்கப்படுவது என, குப்பத்துக் காட்சிகளில் அத்தனை இயல்பு. 'தமிழ் சினிமாவின் பிஞ்சிலேயே பழுத்த சிறுவர்களு’க்கு எதிர் துருவமாக படத்தின் கதை நாயகர்களான சிறுவர்கள் இருப்பது பெரும் நிம்மதி. 'அடிக்கக் கூடாதுனு பாலிசி வெச்சிருக்கேன்’ எனும் அம்மாவின் வளர்ப்பில் நேசமும் நேர்மையுமாக வளர்பவர்களை, சமூகம் எப்படியெல்லாம் கறைப்படுத்தக் காத்திருக்கிறது என்பது திரைக்கதையில் அழுத்தமாகப் பின்னப்பட்டிருக்கிறது.

    'ஏன்... சிம்பு ரசம் சாதம் சாப்பிட மாட்டானா?’, 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’, 'சத்தியமா நம்மளை உள்ளே விட மாட்டாங்க’, 'இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடை போட்டு ஏன் உசுப்பேத்தணும்’ - நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்.

    படத்தில், சிம்பு நடித்திருக்கிறார்... சிம்புவைக் கலாய்க்கிறார்கள்... 'நான்தான் லவ் பண்ணலைனு சொல்லிட்டேன்ல’ என ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் சிம்பு. ஹேய்... சூப்பரப்பு!

    எது மாதிரியும் இல்லாத புது மாதிரி சினிமாவின் அந்த க்ளைமாக்ஸ், அத்தனை நெகிழ்ச்சி. எந்தச் செயற்கைப் பூச்சும் இல்லாமல் கண்களைக் கலங்கச்செய்யும் ஈர அத்தியாயம். ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு, பீட்சா குறித்து இரண்டு காக்கா முட்டைகளும் அடிக்கும் அந்த கமென்ட்... கலக்கல்!

    இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பதில் எத்தனை வசதி என்பதை ஒவ்வோர் ஒளிச்சிதறலிலும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். இண்டு இடுக்கு, சந்துபொந்து, வீட்டுக்கூரை... எனச் சிறுவர்களோடு சிறுவர்களின் மனநிலையிலேயே பயணிக்கிறது படம். ஆக்ஷன் அவசரமோ, மாஸ் பன்ச் நவரசமோ இல்லாத 'ரியல் டைம்’ நிகழ்வுகள்தான் படம் முழுக்க. அதிலும் கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்கவைக்கிறது கிஷோரின் எடிட்டிங். மிஸ் யூ கிஷோர்! 'கறுப்பு கறுப்பு கறுப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து...’ பாடலில் மெல்லிசையுடன் மென்சோகம் படரவிடுகிறது ஜி.வி.பிரகாஷின் இசை. 'விட்டமின் ப’ போஷாக்கு இல்லாமல் முடங்கிக்கிடக்கும் இப்படியான 'முட்டை’களைப் பொறிக்கச்செய்ய, தயாரிப்பாளர்கள் தனுஷ§ம் வெற்றிமாறனும் முன்வந்ததற்கு வாழ்த்துகள்.

    குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்குக் கதை சொன்ன, அதுவும் உலகமயமாக்கலின், உணவு அரசியலின், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன 'காக்கா முட்டை’... நம் சினிமா!

    Vikatan verdict
    60%100

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •