Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    . Facebook ல் படித்தது

    கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்.. 88

    புராண இதிகாசங்கள் பார்வை வடக்கில் உள்ளவர்க்கு வேறு தெற்கில் உள்ளவர்க்கு
    வேறு .
    அதுவும் இந்தத் தமிழ் இரத்தத்திற்கு .. நன்றி சொல்லுதலும், வாக்கு மாறாமையிலும் ஒரு அதீத பற்று இருக்கவே செய்கிறது . அதையே அந்த சமுதாயம் தங்கள் வேதநீதி யாக்கிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இதிகாசங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
    மகாபாரதத்தில் , கர்ணன் என்ற மகோன்னதமான பாத்திரப் படைப்பை அன்று உபன்யாசம் செய்பவர்கள் அவ்வளவாக விமரிசிக்க மாட்டார்கள் .
    ஆனால் கர்ணன் .. திரைப்படம் வந்தபிறகே எம் போன்றவர்க்கு அதில் பிடிப்பு ஏற்பட்டது .
    இந்த எண்ணங்கள் யாவற்றையும் ஒரே பாடலில் கவிஞர் திறம்பட வெகு அழகாக
    தனது முத்தான வரிகளில் பிரதிபலித்திருப்பார்.
    பாரதப்போரின் இறுதிக்கட்டம் .. ஒரு நல்லவனை வஞ்சகம் செய்தே பாண்டவர் ஜெய்க்கும் நிலை . இப்படிச் சொன்னால் விவாதத்திற்கு உரியதாகிடும். வஞ்சித்த பழியை கண்ணன் ஏற்றதால்தான் .. தர்மம் நின்று வெல்லும் என்றாவது சொல்ல முடிகிறது.
    சரி பாடலுக்கு வருவோம்..

    ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா ! கர்ணா !
    வருவதை எதிர் கொள்ளடா.

    கர்ணன் சிவாஜி மீது திட்டமிட்டபடியே அம்பெய்து.. குற்றுயிராக.. தர்மதேவதையின் அருளால் அவர் கிடக்க,
    பாண்டவர்க்கு துணை செய்ய கண்ணன் ..என். டி.ராமராவ் தயாராகிறார் . வஞ்சகமாய் தர்மதேவதையின் முழுப்பலனையும் யாசித்துப் பெற ..தனக்கு அற்புதமாக பொருந்திய அந்தணர் வேடமிட்டு .. சீர்காழியார் குரலில் ..இயல்பான கம்பீரத்தில் பாடி வருகிறார்..
    கர்ணன் நல்ல உள்ளம் கொண்டவன். நல்ல உள்ளங்கள் நிம்மதியாக என்றும் உறங்காது. அதாவது சோதனைகளைச் சந்தித்தே நிற்கும் . இது வல்லவன் வகுத்த நியதி எனத்
    ..தானே பரமாத்மா என்ற நிலையில் விளக்கம் சொல்கிறார் ..
    அதனால் அடுத்து அவனிடம் வர இருக்கும் வஞ்சகத்தையும் அவன் எதிர் கொள்ள வேண்டும் ..என்று சூட்சுமமாக உரைக்கிறார்.

    ' தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர்ப்பழி ஏற்றாயடா.... நானும்
    உன் பழி கொண்டேனடா..!'

    வஞ்சிக்கப்பட்ட முறைகள் வரிசையாக
    அறியாத பருவத்தில் ஈன்று அவனை ஆற்றில் விட்டவள் .. அதை மன்னித்து விடலாம் .ஆனால் பின்னாளில் மற்ற மக்களுக்காகவும்.. குறிப்பாக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஒரு வரம் கேட்டு அவனுக்குத் தாயுமில்லை , தம்பியுமில்லை என்ற அனாதை நிலை தந்தாளே.. வஞ்சித்தாளே.... இதுவே அவர்கள் பக்கத்தில் சேரும் பெரிய பாவம்.
    ஆனால் பாரதம் நடத்தும் கண்ணன் தானே அப்பழியை ஏற்று கர்ணனுக்கு விதியாகிறான்.
    ' மன்னவர் பணியேற்கும்
    கண்ணனும் பணிசெய்ய
    உன்னிடம் பணிவானடா - கர்ணா
    மன்னித்து அருள்வாயடா !'

    கவியரசரின் சொல்லாடல் இங்கு வெகு அழகு.
    ராஜகாரியங்களின் சாதுர்யப் பணிகளை கண்ண பரமாத்வாவே ஏற்றுக் கொண்ட நிலையில் அவரே அவனிடம் கர்ணனிடம்
    பணிந்து செல்ல வேண்டிய நிலைமையை நாசூக்காக உணர்த்துகிறார். ஆமாம் .. தான் அவனிடம் பிச்சை வாங்கத்தானே அந்தணர் வேடத்தில் செல்வது .. யாசிப்பவன் கண்ணன் .. அவனை மன்னித்து அருள் செய் .. உண்மை ..யாசிப்பது வெறும் பொருள் அல்லவே . செய்த புண்ணிய பலன்கள் அனைத்துமன்றோ..?
    இந்த வரிகள் கேட்கும் போதெல்லாம் நல்லவர் உள்ளம் வெதும்பும்.

    அடுத்து, கண்ணன் சொல்லாக
    இறுதியாக விவாதப் பொருளை உண்மையுடன் வஞ்சகமாக வைக்கிறார்.

    'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா- கர்ணா
    வஞ்சகன் கண்ணணடா..'

    சேராத இடம் சேர்ந்தாய் என்று முதலில் சொன்னால் அது பழியாகும் . செஞ்சோற்றுக் கடன் தீர்க்க .. இந்தச் சொல்லில் தர்மநீதி அடங்கி விட்டது.
    வஞ்சகம் கண்ணன் செய்தான் .. சேராத இடம் சேர்ந்து .. எனச் சொன்னால் , அது அந்த வஞ்சகத்தில் அடங்கிவிட்டது.

    எனவே இங்கும் கர்ணனுக்கு வரவிருக்கும் பழியை கண்ணனே சுமந்து கொள்கிறான்.
    நம் உள்ளம் மெல்லிசை மன்னர்களின் இசையில் கரைந்தே போய்விடுகிறது.
    கவியரசின் வரிகளில் ..கர்ணனின் கம்பீரம் நிமிர்கிறது.

    Kothaidhanabalan

    '

  2. Thanks Russellmai thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •