Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கர்ணன்- 14/1/1964

    கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.

    அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.

    இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.

    முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...

    இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.
    .

    கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.

    கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.

    ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.

    மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.


    குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.

    சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.

    வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
    தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.

    துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.

    தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.

    சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.

    எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .

    இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.

    இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.

    இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.

    இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •