-
6th April 2016, 08:22 PM
#1
Junior Member
Devoted Hubber
நம்பிக்கை !
நம்பிக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவனுக்கு அப்பா சித்தப்பா தெரியும், அது என்ன ஆசிரியப்பா ? அவனுக்கு அது புரியாத புதிர்.
இது நம்பியின் கை - நம்பிக்கை
அவன் இதுவரை எழுதி அனுப்பியிருந்த எழுபது எண்பது கதைகளில், கேவலம், ஒன்றை கூட , ஒரு தண்ட பத்திரிகையும் பிரசுரிக்க வில்லை. ஆனால், நம்பி தன் நம்பிக்கையை தளரவிடவில்லை. அவனுக்கு நிறைய ஆசைகள்: சினிமாவுக்கு கதை எழுத ஆசை, புக்கர் பரிசு வாங்க ஆசை, சாஹித்ய அகாடெமி விருது பெற கூட ஆசையோ ஆசை! அதே கனவு தான் , நினைவு தான் நம்பிக்கு ! நம்பி, நம்பி எதிர்பார்த்து ஏமாற்றம் தான் அவனுக்கு.
நாளாக நாளாக, மீண்டும் மீண்டும் தோல்வியை சந்தித்து, நம்பி, நொந்து போய் விட்டான். வருத்தமும் வேதனையும் அவனை வாட்டியது. மன அழுத்தம் , மன உளைச்சல்,அதில் உழன்று, உழன்று நம்பி நம்பிக்கையை இழந்தான் . தன்னை தானே வெறுக்க தொடங்கி விட்டான்.
தன் தலையில் அடித்துக்கொண்டு திருவிளையாடல் தருமி மாதிரி வராது! வராது! எனக்கெழுத வராது! அலுத்துக்கொண்டான் நம்பி. அவனது பத்து ரூபாய் பால் பாயிண்ட் பேனா குத்தி, அவன் தலை , சீத்தலை சாத்தனார் போல் வீங்கி விட்டது. கடவுளே! என்னை சோதிக்கிறாயே? இது நியாயமா ? நீ வரலாகாதா? உன்னருள் தரலாகாதா ? நீயன்றி கதிவேறேது.? என்று அடிக்கடி இறைவனை கெஞ்சுவான்.
நிறைவேறாத ஆசைகளால், நம்பி கொஞ்சம் கொஞ்சமாக மற்றவரிடமிருந்து விலக ஆரம்பித்தான் . சரியாக உண்ணமாட்டான். நல்ல மசால் வடையைக் கூட நல்லாவேயில்லை! ஏதோ வாடை வருது! என்று ஒதுக்கி விடுவான். எப்போதும் தனிமையை விரும்ப ஆரம்பித்தான்.
டிவி சிரியல்களில் வரும் கதா நாயகி நாயகன் போல், தனக்கு தானே உரத்த குரலில் பேசிக் கொள்ள ஆரம்பித்தான். அடிக்கடி "நானெல்லாம் எழுதறதே வேஸ்ட் !" என்பான். மற்றவரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான். எப்போதாவது பேசினாலும், அப்போதும் வள்ளென்று குரைத்தான்!
நாளாக நாளாக, நம்பி தன் கையையே எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பான். "இந்த கையெல்லாம் எனக்குத் தேவை தானா?" என்பது போல. கனவுலகில் இருப்பது போல குத்திட்ட பார்வை, இறுக்கமான முக பாவம், இதுவே இப்போதெல்லாம் அவன் சுபாவம். பாவம், அவன் அப்பாவும் அம்மாவும் என்ன செய்வதென்று தெரியாமல் அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாமென , முடிவாய் ஓர் முடிவெடுத்தனர்.
****
அறையில் நம்பி தனியாக உட்கார்ந்து தீவிர யோசனையிலிருந்தான். அப்போது யாரோ நம்பியைத் தட்டி கூப்பிட்டது போலிருந்தது. திரும்பினான். நீண்ட தாடியுடன், கையில் ஓலைச்சுவடோடு. குரல் கொடுத்தவர் வேறு யாருமல்ல, குறள் கொடுத்த கோமகன். அப்பா நம்பி ! இங்கே பார் ! உன் அபயக் குரல் கேட்டு , உனக்கு உதவி செய்யத்தான் இறைவன் என்னை அனுப்பினார்
நம்பிக்கு ஆச்சரியம்! நம்ம தமிழ் மறை கொடுத்த புலவரா? சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாங்க! வாங்க ! வேறே யாரும் வரவில்லையா ? கடவுள் வருவாரா ? அவன் குரலில் எதிர்பார்ப்பு தெரிந்தது. இறைவன் தன் குறை செவி மடுத்து விட்டான்!
சிரித்தார் பெருந்தகை. தருமிக்குத்தான் அவர் போவார். உன்னைப் போன்ற கருமிக்கு நானே போதும். வள்ளுவரின் ஹாஸ்யம் நம்பிக்கு சிரிப்பு வரவில்லை. அவனுக்கு நகசுத்தி கூட வரும், ஆனால் நகைச்சுவை மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது. மாறாக பற்றிக் கொண்டு வந்தது.
பரவாயில்லே! உங்களை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! நம்பி சமாளித்தான்.
பேசும்போது நன்றாகத்தான் பேசறே! எழுதும் போது மட்டும் கோட்டை விட்டுடறே! நகைத்தார் நட்பு எழுதிய நாயகன்.
உங்களைப்பார்த்தால் கொஞ்சம் சோர்வாகத்தேரிகிறதே! கொஞ்சம் மோர் குடியுங்கள் உபசரித்தான் நம்பி.
அதை ஏன் கேட்கிறாய் அப்பா! குண்டும் குழியுமாக அண்ணா நகர் வரதுக்குள்ளே சே! என்னா நகர் என்று ஆகி விட்டது! என்று அங்கலாய்த்தார் வள்ளுவப் பெருந்தகை. எங்க இலக்கிய சங்க கால மண் சாலையே தேவலை போலிருக்கு. நகரம் இல்லே நம்பி இது! நரகம்!
ஆமோதித்தான் நம்பி. ஆமாம் வள்ளுவரே! நாங்க கொஞ்சம் கொஞ்சமாக கற்காலத்தை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
சரி! சரி! அரசியலை விடு! விஷயத்துக்கு வருவோம் என்று பேச்சை மாற்றினார் தெய்வப் புலவர். ராஜதந்திரி அல்லவா! உன்னோட பிரச்னை என்ன ? கதை எழுத வரலே! கவிதை சுத்தமா வரேலே! அவ்வளவு தானே! நான் சொல்றபடி செய். நன்கு வரும். வள்ளுவர்
என்ன பண்ணனும்?- நம்பி. அவனுக்கு நெஞ்சம் கசந்தது. நம்ம இயலாமை வள்ளுவர் காது வரைக்கும் போயிருக்கிறதே ! இது என்ன கொடுமை?
நம்பி, நீ முதல்லே நிறைய படிக்கணும்! ஐந்து வரி எழுத ஐயாயிரம் வரி படிக்கணும். அப்புறம் தான் எழுதவே ஆரம்பிக்கணும்
அய்யோடா! கல்லூரியிலேயே நான் கஷ்டப்பட்டு படிச்சு தான் ஒரு மாதிரி ஒப்பேத்தினேன். படிக்க கஷ்டப்பட்டு உத்தியோக உயர்வு கூட வேண்டாமென்று சொல்லிவிட்டேன். என்னைப் போய்.. இழுத்தான் நம்பி.
வெகுண்டார் வள்ளுவன். படிக்காமல் கதை பண்ணினால், காய்ந்து தான் போவாய் சாடினார் சான்றாண்மை சொன்ன பிரான்.
சரி!. சரி! நிறைய படிக்கிறேன்! அப்புறம் எழுதறேன். கோபம் வேண்டாம்! மேலே சொல்லுங்கள்
இரண்டாவது: எழுதப் போற பிரச்சினை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள். அந்த பிரச்னையை நன்றாக அலசு. மற்றவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார். எதை, எப்படி, எப்போது சொல்லவேண்டுமோ அப்படியே சொல்லும் திறனை வளர்த்துக்கொள். அழகாக ஆரம்பித்தார் வள்ளுவன்.
கொஞ்சம் புரிந்தது போலிருந்தது நம்பிக்கு. அவனுக்கு தனது தவறு தெரிந்தது. இப்போது தான் தனக்கு கதை எழுத வராது என்பது உள்ளங்கை நெல்லி போல விளங்கியது.
மூன்றாவது: சொல்லும் விஷயத்தை அழகாக, கூடிய வரையில் அந்த மொழியிலேயே சொல். சொல்ல வந்ததை சுருக்கமாக சொல். அவ்வையிடமிருந்து அதை நீ கற்றுக்கொள். இரண்டு வரியை இருபதாக்க இது என்ன மெகா சீரியலா?
குழம்பினான் நம்பி. என்னை சொல்லிவிட்டு இவரே தங்கலிஷ்லே பேசறாரே.
வள்ளுவர் சொன்னார் முகத்தை சுளிக்காதே அப்பனே!. உனக்கு புரிவதற்காக சொன்னேன். சில விஷயங்களை தமிழ்ப்படுத்தினால், இந்த காலத்தில் படிப்பவர் பாடு பெரும் பாடு. அதையும் நினைவில் வை
இல்லை! இல்லை! மேலே சொல்லுங்கள்
வள்ளுவ நாயனார் தொடர்ந்தார்.
நான்காவது: நான் எழுதிய பயனில சொல்லாமை அதிகாரத்தில் வரும் குறட்களை கடைப்பிடி. சொல்லுக சொல்லின் பயனுடைய : சொல்லற்க சொல்லின் பயனிலா சொல் இந்த குறள் புரிந்ததா? கட்டாயம் எல்லாக் குறளும் படி. நல்ல சிறந்த கதைகளை, கவிதைகளைப் படி. குப்பைகளை வெட்டி எறி. அதுவே நீ உருப்பட ஒரே வழி
அப்படியே ஆகட்டும் ஐயா!- நம்பிக்கு இன்னும் குழப்பம்! வெட்டி எறியச்சொல்கிறாரே?
"சொல்ல மறந்துவிட்டேன். இயற்கையை ரசிக்க கற்றுக்கொள். உனது அனுபவம் உனக்கு கை கொடுக்கும். உளறிக் கொட்டுவதை தவிர். "
'!' - வாயைப் பிளந்தான் நம்பி.
வாயை மூடு. இங்கு கொசு அதிகம் . உள்ளே போய்விடும். நான் வருகிறேன்! எழுந்தார் பொய்யாப் புலவர். அப்போது, நம்பியின் பின்னால் நான்கைந்து பேர் சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பினால், அவனது நெருங்கிய நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள் ! வேறு சிலரும் அவர் பின்னால் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
எழுந்து விட்டான் நம்பி. வெறுத்து விட்டது. சே ! நாலு பேர் சிரிக்கும்படியாகி விட்டதே நம் வாழ்க்கை! அதுவும் என் நண்பர்கள் ! அவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது. ஆற்றாமை பெருகியது. இனி கதை எழுதி கண்டவர் வாயில் விழுவதில்லை. இந்த கை இருப்பதால் தானே கதை எழுதுகிறோம். இந்த கையே இல்லை என்றால் ?
முன் பின் யோசியாமல், ஒரு வேகத்தில், பக்கத்திலிருந்த ஒரு அரிவாளை எடுத்து தன் வலது கையை வெட்டிக் கொண்டான். கை துண்டாகி அவன் படுக்கையின் மேல் விழுந்தது. ஐயோ ஐயோ என்றலறினான் .
****
பத்மலோசனி ஹாஸ்பிடல் :
அந்த பெரிய ஆஸ்பத்திரியில் அப்போது நேரம் இரவு இரண்டு மணி. அமைதியான நேரம். மயான அமைதி என்று கூட சொல்லலாம், ஆனால் அப்படி சொன்னால், ஆஸ்பத்திரியை அவமதிப்பது போல தோன்றும் .
இரவு டூட்டி டாக்டர் கண்ணனும், டாக்டர் பரிமளமும் தங்கள் தங்கள் கையில் இருந்த கேஸ் ஷீட்டுகளை கொட்டாவி விட்டுக் கொண்டே புரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் மேஜை இன்டர் காம் அந்த இரவின் நிசப்தத்தை ட்ரின்க் ட்ரின்க் என்று தண்ணீர் போட்டு அழித்தது.
ஹலோ நான் டாக்டர் கண்ணன் பேசறேன்
மறு முனையிலிருந்து ஒரு பதற்றமான குரல் டாக்டர் ! நான் நர்ஸ் விமலா ! மூணாவது மாடி அறை எண் 321லேருந்து பேசறேன். கொஞ்சம் உடனே இங்கே வர முடியுமா ?
***
அறை எண் 321:
டாக்டர் கண்ணனும் டாக்டர் பரிமளமும் நோயாளி நம்பியையே பார்த்துக் கொண்டிருந்தனர். கட்டிலுக்கு பக்கத்தில் நம்பி தலையை லேசாக குனிந்து உட்கார்ந்திருந்தான். தன் கையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நம்பி முகத்தில் ஆச்சரியம், பயம், குழப்பம், வெறுப்பு, அருவருப்பு, அத்தனையும் அள்ளித்தெளித்திருந்தது, ரங்கோலி கோலம் போல. அவன் டாக்டர்கள் இருப்பதை சட்டை செய்ய வில்லை. தனது படுக்கையை பார்த்தான். தன் கையை பார்த்தான் . மீண்டும் படுக்கையை பார்த்தான். ஐயோ என் கை,! ஐயோ என் கை !- என்ற ஓலம் இடையிடையே அவனிடமிருந்து.
டாக்டர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. டாக்டர் கண்ணன், கீழே கிடந்த நோயாளி நம்பியின் கேஸ் ஷீட் எடுத்து படித்தார். கொஞ்சம் வித்தியாசமான கேஸ் தான் என்று மட்டும் புரிந்தது. நர்ஸ் விமலா பேஷன்ட் நம்பி பற்றி பரிமளா டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆமா டாக்டர், இந்த பேஷன்ட் இன்னிக்கு காலைலேதான் இங்கே வந்து அட்மிட் ஆகியிருக்கிறார், சாயங்காலம் வரை சாதாரணமாக தான் இருந்தார். ரெண்டு மூணு டாக்டர்ஸ் ஏதேதோ டெஸ்ட் பண்ணிட்டிருக்காங்க. என்னன்னு தெரியலே, இப்போ திடீர்னு எழுந்து ஓவென்று சத்தம் போடறார். ரொம்ப பதட்டமாக இருக்கிறார். எதுவும் பேச மாட்டேங்கிறார் . திரும்ப திரும்ப என் கை ! என் கை ! அப்படின்னு , எதையோ கட்டில்லேருந்து எடுத்து பார்த்துட்டு திரும்ப அங்கேயே வெச்சுடறார். என்னன்னு தெரியலே டாக்டர் !
டாக்டர் கண்ணன் கையிலிருந்த கேஸ் ஷீட் , மிச்சமீதி விவரங்களை தெளிவாக சொன்னது:. நம்பியின் பிரச்னை மன சம்பந்த பட்டது போல. நம்பி யாரோ தன்னுடன் அடிக்கடி பேசுவதாகவும், தன் வலது கையால் தான் தனக்கு அவமானம் ஏற்படுவதாகவும், அந்த கையை வெட்டிஎடுத்து விட முடியுமா என அவன் டாக்டர்களை நச்சரிப்பதாகவும் அந்த குறிப்பில் எழுதியிருந்தது.
டாக்டர் கண்ணன் நம்பி அருகில் சென்று, அவன் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டார். நம்பி டாக்டரை பொருட்படுத்தவில்லை. தன் கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன நம்பி, என்ன பண்ணுது உங்களுக்கு? என்கிட்டே சொன்னாக்க, நான் சரி பண்ண ஏதாவது வழி இருக்கா பார்க்கிறேன்?
நம்பி டாக்டரை ஏறெடுத்து பார்த்தான். என் கை ! அங்கே பாருங்க ! கட்டில் மேலே இருக்கு ! கோபத்திலே வெட்டிகிட்டேன்!
கண்ணன் நம்பியை பார்த்தார். அவனது இரண்டு கையும் உடலோடுதான் இருந்தது. கட்டில் மேல் எந்த கையும் இல்லை.
நம்பி! இதோ பாருங்க ! உங்களுக்கு மன பிராந்தி தான் ! கட்டில் மேலே எதுவுமே இல்லை. உங்க கை உங்ககிட்டதான் இருக்கு
நம்பி நம்பவில்லை . இல்லே டாக்டர் ! இதோ பாருங்க ! கட்டில் மேலே என் வலது கை ! அது என் கையிலே இல்லே பாருங்க !
கண்ணன் சொன்னார் ஒண்ணு செய்யுங்க நம்பி ! கட்டில் மேலே இருக்கிற கையை எடுத்து உங்க வலது கையோட சேருங்க பாக்கலாம்
நம்பி மெதுவாக கட்டில் பக்கம் தனது இடது கையை , வேண்டா வெறுப்பாக நகர்த்தினான். திடீரென அவன் முகம் மாறியது. வெளிறிவிட்டது. அவன் உடல் நடுங்கியது. தனது வலது கையை உதறினான். டாக்டர் ! இங்கே பாருங்க ! கட்டில் மேலே இருந்த கை என்னோட ஒட்டிக் கொண்டது. இந்த கை எனது இல்லை. எனக்கு வேண்டாம் ! சொல்லிக்கொண்டே நம்பி தன் வலது கையை உதறினான். தனது இடது கையால் வலது கையை பிடுங்கி எறிய முயற்சித்தான்.
டாக்டர் கண்ணனும் பரிமளமும் அவனை தடுத்தனர். ஈஸி ஈஸி நம்பி ! கையை உடைச்சிக்க போறீங்க! பார்த்து பார்த்து ! டாக்டர், நம்பியின் வலது கையை பிடித்தார்.
ஏன் கூடாது ?எனக்கு வேண்டாம் இந்த கை! நம்பி கோபமாக, எரிச்சலோடு கேட்டான்.
நம்பி! இது உங்க வலது கை. உங்க கை உங்களுக்கு தெரியாதா? ஒன்னு பண்ணுவோம் ! இப்ப இந்த கை உங்க கூடவே இருக்கட்டும் . இதை எதற்கும் உபயோகப் படுத்த வேண்டாம் . நாளைக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம். இப்போ நிம்மதியாக தூங்குங்க
***
இன்று வரை, தினமும் நம்பி இப்படித்தான் திடீரென கத்துவான். என் கை ! ஐயோ என் கை! என கூக்குரலிடுவான். நம்பியை யாராவது சென்று சமாதானப் படுத்தும் வரை , பாடாய் படுத்துவான். ஆறு மாதமாக இது மாறாத பிரச்னை!
மீண்டும் மீண்டும் நம்பி கேட்கிற கேள்வி இதுதான் என் கையை நாந்தான் வெட்டிக் கிட்டேனே ! அது எப்படி மீண்டும் வந்து ஒட்டிகிட்டது ? அது எப்படி சாத்தியம் ? அவனால் நம்ப முடியவில்லை. இன்றுவரை அவனது வலது கையை அவனால் அசைக்கவும் முடியவில்லை. அதைதான் அவன் வெட்டிவிட்டானே ! இது வேறு யார் கையோ ? என்கிட்டேயே கதை விடறாங்க !
டாக்டர்களுக்கும், மனநோய் வல்லுனர்களுக்கும் அவன் ஒரு புரியாத புதிர். அவர்களுக்கு இவன் ஒரு சவால். அவன் நிஜமாகவே தன் கையை வெட்டிக் கொள்ளும் முன் இவர்கள், அவன் சைகொசிஸ் நோயை குணப் படுத்த வேண்டும்.
அவர்கள் நம்பிக்கை வெற்றி பெறட்டும் !
நம்பி கை மீண்டும் பெறட்டும் !
***
Last edited by Muralidharan S; 19th April 2016 at 02:38 PM.
-
6th April 2016 08:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks