Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)

    தேவர் மகன்- 1992

    மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.

    இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.

    இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.

    இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
    இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.


    நடிப்பு என்பது என்ன ?

    ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:

    'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).

    இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.

    ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது

    இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.

    இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.

    இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )

    இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.

    காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.

    அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)

    கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

    எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.

    தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

    நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
    தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.

    தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.

    சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.

    படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.

    பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.

    "சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.

    வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
    தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
    இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :

    "ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"

    "என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
    "நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"

    இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்

    எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.

    'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.

    படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.

    புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.

    பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.

    ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
    அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.

    தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:

    "நீ எப்பிடி செய்வே ?"

    "....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."

    "ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
    இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.

    தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.

    "...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
    பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.

    ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.

    தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

    ----To be continued.
    Last edited by Gopal.s; 30th September 2013 at 10:21 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •