கண்ணா..சிவன் ஈசன்கறயே.. கொஞ்சம் சொல்லேன்ப்பா..

ஞானப் பிள்ளை சிரித்தது.. இதோ உங்களுக்கும் உலகுக்கும் எனச் சொல்லிப் பாடியது..


தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப் பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடைய பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


தோடணிந்த திருச்செவியாள் உமையம்மை இடத்திலே
..தொக்கிநிற்கும் முறுவலுடன் உடற்பாதி கொண்டவன்
வேடமென எருமையிலே வெண்பிறையாம் நெற்றியுள்
..வெண்மையான சாம்பலையே தரித்தபடி அமர்ந்தவன்
தேடலெனத் தாவித்தாவி அலைபாயும் நெஞ்சையே
திதிக்கவைத்தே கவர்ந்துவிட்ட கள்வனவன் மேலுமே
நாடிவரும் அடியார்க்கு நன்மைசெயும் நாயகன்
..நாட்டிலுள்ள பிரமபுரக் கோவிலுள்ள ஈசனே

அழகிய வேலைப்பாடுகள் மிக்க காதணிகள் அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தனது இடது பாகத்தில் கொண்டவன்.

விடையெனச் சொல்லப் படும் எருதின் மேலேறி, தூய்மையிலேயே தலைசிறந்த தூய்மைகொண்ட வெண்மை நிறத்திலான பிறைச் சந்திரனை தனது சிரத்தின் முடியிலே சூடியவன்.. சுடுகாட்டில் விளைந்த சாம்பற்பொடிகளை உடலில் பூசிய அந்த ஈசன் என்னிடம் வந்தான்..என் நெஞத்தைக் கொள்ளையும் கொண்டான்

அழகிய சிவந்த மெல்லிதழ்க்ளை உடைய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன் படைத்தல் தொழில் வேண்டி முன்னொரு காலத்தில் வழிபட, அவனுக்கு அருள் புரிந்தபெருமைக்குரிய பிரம்மபுரத்தில் இருக்கும் பெருமான் அவன்..

வேறு யார் பரமசிவனாகிய இவன் தானே!

*

கண்களில் நீர் ஆறாய்ப் பெருக்கெடுக்க பிள்ளையின் காலில் வீழ்ந்தார் தந்தை.. பிள்ளை திகைத்தது..மெல்லத் தோள் தொட்டு எழுப்பியது.. வியப்பாய்ப் பார்த்த தந்தையை.. நீ சேவிக்க வேண்டியது நானல்ல..உள்ளே இருக்கும் இறைவனாம் ஈசனையே என ஜாடையிலேயே சொல்லி கோவிலுள் அழைத்துச் சென்றது..

அப்பாவுடன் கோவிலுக்குச் சென்ற ஞான சம்பந்தர் அங்கும் சிவனைப் பற்றி ப் பதிகம் பாடினார்..பின் சிவ நாமம் பரப்புதற்காக பல கோவில்கள் சென்று பதிகங்கள்பாடி இருந்த போதில் அப்பரைச் சந்தித்தார்...

*