*

நான்காம் பாடல்..

*

“வேலாம் விழிகளது விண்ணோக்கிப் பார்த்ததுவோ
பாலாகப் பொங்கும் பிறை..

என்னடா பேச மாட்டேங்கற..”

“ஆமா.. நீ பாட்டுக்கு கேரள மக்கள் டீயோட சாப்பிடற ப்ரேக்ஃபாஸ்ட் பத்திச் சொன்னேன்னா நான் என்ன சொல்றது..”

“பாவி.. அவங்க சாப்பிடறது பொறை.. நான் இங்க சொன்னது பிறை..

அந்த இளநங்கை ஏதுக்கோ யோசிச்சு குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கிட்டிருந்தாளா..அப்போ மேலே வானைப் பார்க்கறா..அங்கேயோ பிறைச்சந்திரன்..அது இந்த ப்யூட்டி தன்னைத் தான் பார்க்கறான்னு சந்தோஷத்துல பூரிச்சுப் பொங்குது ..அப்படின்னும் வெச்சுக்கலாம்.. விழிகள் மேலே எதுக்கோ பார்க்கறபோது அந்த ப் பெண்ணீன் பிறை நெற்றி இன்னும் வெண்மை கொண்டதுன்னும் வெச்சுக்கலாம்..”

”ஓ.. நீ மதி நுதல்க்கு வர்றயா..”

“ஆமாம்..மதி சந்திரன்..இந்த இடத்தில பிறை பிறை நிலாவைப் போல வளைந்து பிறை நிலாவின் குணத்தைப் போல க் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியையுடைய நங்கை..வேற யார் நம்ம மிஸ்ஸஸ் பரமசிவன் தான்..அப்படின்னு வருது இந்தப் பாட்டுல..அப்புறம் கொதியுறுகாலன் அப்படின்னா டபக்குன்னு கொஞ்சம் குளிர்காத்துல போய்ட்டு வந்தா ஜூரம் வந்துடுதுல்ல..”

“அப்படி இல்லாட்டியும் வருமே..”

“ஹேய்.. நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஸோ உடலை வெப்பமடைய வைக்கிற காய்ச்சல் அப்படிங்கறா.ர்.. வா.. உள்ள போய்ப் பார்ப்போம்..

*

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 4

*

பிறை நிலாவைப் போல வளைந்து, பிறை நிலாவின் குளிர்ச்சியைப் போலக் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியை உடைய உமையவளுடன் தென் திசை நோக்கி வடதிசையில் அமர்ந்து தஷிணாமூர்த்திக்கோலத்தில் மறைப்பொருளாய் இருக்கும் ஞான நூல்களான வேதங்களை ஓதி அருள்கின்ற நமது பரமசிவன் கங்கை நதியுடன் கொன்றை மாலையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தான்..

அதனால் உடலைச் சூடேற்றி வருந்த வைக்கும் காய்ச்சல் என்ற காலனும், உடலைச் சுடுகின்ற அக்னியும் (அங்கி) உயிரை எடுக்கும் தொழில் புரியும் எமனும் அவனுடைய தூதர்களான கொடுமையான நோய்கள் பலவும் சிவனடியார்களுக்கு அவை நல்லவை ஆகிவிடும்.. நற்குணங்களையும் அளித்து விடும்..

*