Results 1 to 10 of 20

Thread: கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 7

    தினமலர் வாரமலர் 7 - 16.11.2014



    எங்கள் நாடகக் கம்பெனி பரமக்குடிக்கு சென்றிருந்த காலத்தில் தான், சினிமாவில் நடிக்கப் போன ராதா அண்ணன், மீண்டும் எங்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்.
    ராதா அண்ணன் வந்ததும், எல்லாருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. கம்பெனிக்கே ஒரு தனி வேகம் வந்து விட்டது என்று சொல்லலாம்.
    ராதா அண்ணன் என் மீது ரொம்பவும் பிரியமாக இருப்பார்.
    கொஞ்சம் பெரிய பையன்களை வைத்து, கம்பெனியில் உள்ள மற்ற பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, தலை வாரி, டிரஸ் செய்து விடுவது அவரது வேலை. அவரது தலைமையில் கம்பெனியில், உள்ள பிள்ளைகள் பாத்ரூமை சுத்தப்படுத்துவர். எங்களுக்கெல்லாம் ஒரு தளபதி மாதிரி இருப்பார்.
    நடிகர்களிலேயே ராதா அண்ணனைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததில்லை. அவருக்கு மிக நன்றாக நடிக்கத் தெரியும் என்பது மட்டுமல்ல, வேறு பல வேலைகளிலும் அவர் நிபுணராக விளங்கினார். மின்சாரம் சம்பந்தமான, நுணுக்கமான வேலைகளிலும், ரேடியோவைப் பழுது பார்க்கும் கலையிலும் வல்லவர். பம்புசெட், இன்னும் பல கருவிகளையும் நொடியில் பழுது பார்த்து, சரிசெய்து விடுவார்.
    மின்சாரத்தினால் இயங்கும் உபகரணங்களை புதிது புதிதாக அமைத்து, நாடகத்திற்கான தந்திரக் காட்சிகளை அமைத்துக் கொடுப்பார்.
    ராதா அண்ணன் அதிகம் படிக்காதவர் என்றாலும், ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால் போதும், அதை அப்படியே மனதில் பதிய வைத்து, அதை மேலும் விரிவுபடுத்தி, மெருகு கொடுத்து அழகாகச் சொல்லி விடுவார்.
    ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். காலையிலோ, பிற்பகலிலோ அவர் ஓய்வில் படுத்திருக்கும்போது, தலைமாட்டில் உட்கார்ந்து, நான் தான் பத்திரிகைகளை படிப்பேன்.
    'அது அப்படி இருக்கும்; அதனால்தான் இப்படி ஆயிற்று...' என்று ஒவ்வொரு செய்தியையும் படித்து முடித்த தும், விமர்சனம் செய்வார்.

    கம்பெனியில் அவர் மீண்டும் வந்து சேர்ந்தபோது, நடித்த முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'
    இதில், சிங்கக் குட்டி கோவிந்தன் என்ற வேடத்தை ஏற்று அவர் நடித்த நடிப்பு இருக்கே... அப்பப்பா... என்ன ஒரு நடிப்பு! இன்று நினைத்தாலும் என் கண் முன் அவரது நடிப்பு அப்படியே நிழலாடுகிறது. அவ்வளவு அற்புதமாக காமெடி செய்திருப்பார்.
    அடுத்தது, 'பதிபக்தி!'
    இதில், வில்லன் கங்காதரனாக வருவார்.
    பார்ப்போர் பயப்படும்படியாக அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். இந்நாடகத்தில், சரஸ்வதி என்ற பெண்ணாக வருவேன்.
    ஒரு காட்சியில் அவர் முடியைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளி, அவரை நான் மிதிக்க வேண்டும்.
    நன்றாக மிதிக்கச் சொல்வார். நான் மெதுவாக மிதித்தால், 'நல்லா மிதிடா...' என்று, என் காதுக்கு மட்டும் கேட்கும்படி மிரட்டுவார். தலைமுடியைப் பிடித்து எப்படி உலுக்க வேண்டும் என்று அவரே சொல்லித் தருவார். சரியாகச் செய்யாவிட்டால், மேடையிலேயே யாருக்கும் தெரியாத வகையில் அடியும் கொடுப்பார்.
    மேடையில் சண்டைக் காட்சிகளை அந்தக் காலத்திலேயே மிகவும் விறுவிறுப்பாகவும், கவர்ச்சியாகவும் அமைத்தவர் ராதா அண்ணன். இந்த சண்டைக் காட்சிகளில் உண்மையிலேயே அவர் நிறைய அடி வாங்குவார்; சில சமயம் கொடுக்கவும் செய்வார். அம்மாதிரி ஒரு நாள் நடிக்கப் போய், அவரது பல் உடைந்து விட்டது. அவ்வளவு தத்ரூபமாக நடிப்பார்.
    ராதா அண்ணனின், சண்டைக் காட்சிகளை பார்ப் பதற்காகவே நிறைய பேர் வருவர்; அதனால், நாடகத்திற்கு அதிக வசூல் கிடைக்கும்.

    பரமக்குடியில்,'ராமாயணம்' நாடகம் அடிக்கடி நடக்கும். எத்தனை முறை, 'ராமாயணம்' நாடகம் போட்டாலும் நல்ல கூட்டம் வரும்; பார்த்தவர்களே திரும்பத் திரும்ப வந்து பார்த்ததால், நல்ல வசூலும் கிடைத்தது.
    பெரும்பாலும் இரவு, 9:00 மணிக்கு மேல் தான் நாடகம் ஆரம்பமாகும். இரவு ஆரம்பித்தால், விடியற்காலை வரை நடக்கும். மக்கள் இடையில் எழுந்து போகாமல், தூங்கி வழியாமல், ஆர்வத்துடன் பார்ப்பர்.
    நாடகம் முடிந்ததும் காலை, 6:00 அல்லது 6:30 மணிக்கு, எல்லாரும் வைகை ஆற்றுக்குப் சென்று, தலை நிறைய எண்ணெய் வைத்து, வைகை படுகையில் ஊற்றுத் தோண்டி, தண்ணீர் வரவழைத்து குளிப்போம். அவ்வளவு சுகமாக இருக்கும்; இரவு கண் விழித்து நடித்த களைப்பெல்லாம் பறந்து விடும்.
    அக்காட்சிகள் என் மனதில் அப்படியே பதிந்து விட்டன; சில சமயம், இவை எல்லாம் கனவு போல் தோன்றுவதும் உண்டு.
    இந்நேரத்தில் கம்பெனியில், 'தேச பக்தி' என்ற பெயரில், நாடகம் நடத்தினோம்.
    தேச பக்தி உணர்வை தூண்டக் கூடிய வகையிலும், குறிப்பாக காங்கிரசின் லட்சியங் களையும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கும் விதமாக அமைந்த நாடகம் இது. நாட்டில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய, 'கதர் இயக்கம்' அப்போது தான் நடந்தது.
    இந்நாடகத்தில் ஒரு காட்சியில், சிறுவர்களாகிய நாங்கள், கதர்க்கொடியுடன் மேடைக்கு வந்து, 'வந்தே மாதரம்' என்று குரல் கொடுப்போம்.
    நாங்கள், சொல்லி முடித்த மறு நிமிஷமே, நாடகம் பார்க்க வந்த நூற்றுக்கணக்கான மக்களும், 'வந்தே மாதரம்' என்று உரத்த குரலில் முழங்குவர். கொட்டகையே, 'கிடுகிடு'க்கும்!
    அடுத்ததாக,'மகாத்மா காந்திக்கு' என்று சொல்லி முடிக்கும் முன், 'ஜே' என்று இடி முழக்கம் எதிரொலிக்கும்.
    அப்போது உடல் புல்லரித்து, இனம் தெரியாத ஒரு வேகம், ஆவேசம் எங்களுக்குள் ஏற்படும்.
    'தேச பக்தியே தங்கள் லட்சியம்...' என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது! ஒவ்வொரு நாடகத்திற்கும் வெள்ளம் போல் மக்கள் திரண்டு விடுவர்.
    பரமக்குடியில் நடத்திய எல்லா நாடகங்களுக்குமே, பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.
    கம்பெனிக்கும் நல்ல பெயர்; நல்ல வருமானம்; எல்லாருக்குமே பெரும் மகிழ்ச்சி.
    'தேச பக்தி' நாடகத்தைப் பார்க்க, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அடிக்கடி வந்ததாக நினைவு.
    தேச பக்தி உணர்வுடன் அவர், கலை ஆர்வமும், கலை வளர்ச்சியில் பெரும் அக்கறையும் உள்ளவர்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்

    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22715&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •