அலைகடல் ஓரம் நின்று கொண்டிருந்தேன். அலைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. அப்போது ஆயிரக்கணக்கான முத்துகளை உதிர்க்கின்றன; கரையோரம் வந்து தவழ்ந்து, பழையபடியே கடலுக்குள் சென்று சங்கமம் ஆகின்றன.
இதே போன்று தான் நடிப்பு என்பதும் ஒரு பெரிய கடல். இதில், காட்டப்படும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் தான் அதன் முத்துகள்; பலதரப்பட்ட பாவங்கள் அதன் அலைகள்!
கடலைப் போல் நடிப்பும் எல்லையில்லாதது; அதேசமயம் எல்லைகளைக் கடந்து நிற்பதும் அது தான்!
அத்தகைய நடிப்பைப் பற்றி நான் கற்றிருப்பதோ கை மண்ணளவே!
அப்படியானால் இதை நான் ஏன் எழுத வேண்டும்... அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
நமக்குத் தெரிந்ததை, அது சிறிதளவானாலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. அதேசமயம், 'எனக்குத் தெரிந்தது இது தான்; இன்னும் நான் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது...' என்று சொல்லிக் கொள்வதிலும் தவறில்லை; வெட்கப்பட வேண்டியதும் இல்லை. எனக்குத் தெரியாததை, மற்றவர்கள் கற்றுத் தரலாம் அல்லவா?
சிலரை, 'பிறவி நடிகன்' என்று அடைமொழி கொடுத்து அழைப்பர். என்னைக் கேட்டால், உலகில் உள்ள ஒவ்வொருவருமே பிறக்கும் போதே நடிகனாகத் தான் பிறக்கிறான். நடிப்பு என்பது, மனிதர்களின் ரத்தத்துடன் கலந்தே இருப்பது.
ஒரு சிறு குழந்தை, தன் பிஞ்சுக் கரங்களால், தன் கண்களை மூடியபடி, தன் அம்மாவையோ, அப்பாவையோ பார்த்து, 'ஆ.... பூச்சாண்டி...' என்று பயமுறுத்துகிறது. அதைக் கண்டு குழந்தையின் பெற்றோர், பயப்படுவது போல நடிக்கின்றனர்.
குழந்தை பூச்சாண்டி காட்டுவதும், பெற்றோர் அதைக் கண்டு பயப்படுவதும் நடிப்பு தானே!
இதை யார் சொல்லிக் கொடுத்தது? இறைவனே தந்தது; இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்தது.
கடன்காரன் வருகிறான்... 'அவர் வீட்டில் இல்லயே...' என்று, கணவன் வீட்டிலிருக்கும் போதே, இல்லாதது போல நடிக்கிறாள் மனைவி. வருபவனும் அதை நம்பி விடுகிறான்.
இங்கே, அந்த மனைவிக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது யார்?
இறைவன், இயற்கை, இயல்பு!
கடன் கேட்க வருபவன், தன் கஷ்டத்தை எல்லாம் பலவாறு முகத்தில் படம் பிடித்துக் காட்டுகிறான். அவன் முக பாவம், குரலின் ஏற்ற இறக்கத்தினால் அவன் கஷ்டத்தை உணர்ந்து, மனம் இரங்கி, இன்னொருவன் கடன் கொடுக்கிறான்.
இங்கே, கடன் கேட்பவனுக்கு நடிப்பைச் சொல்லித் தந்தது யார்?
இப்படியே, ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்தில், தினமும் நடிக்கத்தான் செய்கின்றனர்; அந்த நடிப்பை பலர் நம்பத்தான் செய்கின்றனர்.
இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் செயல்களையே நாங்கள் மேடையிலும், திரையிலும் கலை என்கிற பெயரில் செய்கிறோம்.
இக்கலை, நம் நாட்டில் எப்போது வந்தது? காலம் காட்ட முடியாத பழங்காலத்தில் இருந்தே, தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது.
அப்போது, இது, கூத்து என்று அழைக்கப்பட்டது.
கடந்த, 19ம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.
நாடகம் என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, அது எப்படி அமைக்கப்பட வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னவர் சுவாமிகள் தான். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
இதேபோல், அமெச்சூர் கோஷ்டி வகையில், நாடகத்தை ஆரம்பித்து, அதற்கு ஒரு மறுமலர்ச்சியைக் கொடுத்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
இவர், மனோகரா மற்றும் வேதாள உலகம் ஆகிய நாடகங்களை எழுதியதோடு, மேடையில் நடித்தும் காட்டினார். முதன் முதலாக ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், வடமொழிக் கவி காளி தாசனின் நாடகங்களையும், தமிழில் மொழி பெயர்த்தவர் இவரே!
கடந்த, 1922ல் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், கதரின் வெற்றி என்ற நாடகத்தை எழுதினார். தமிழில் எழுதப்பட்ட முதல் தேசிய நாடகம் இது. மேலும், இவர், தேசியக் கொடி என்ற நாடகத்தை, சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதினார்.
இவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்ததோடு, லண்டனில் தமிழ் நாடகங்களையும் நடத்தி, நம் நாடகக் கலையின் மேன்மையை உணர்த்தியவர்.
பதி பக்தி, பம்பாய் மெயில் மற்றும் பர்த்ருஹரி - ஆகியவை பாவலரின் படைப்புகளே!
இதன்பின், எம்.கந்தசாமி முதலியார், நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். பெரும்பாலான நடிகர்கள், ஏதாவது ஒரு வகையில் இவருடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருப்பர்.
நடிப்புக் கலை நம் நாட்டில் எப்படி வளர்ந்தது, வேரூன்றியது என்பதற்காகவே இவற்றை சொல்கிறேன்.
இப்படி பல மேதைகளால் வளர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இக்கலையில், நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
ஆனால், ஒரு நடிகன் என்ற நிலையில், 'என் நிலை மற்றும் என் எண்ணம் என்ன?' என்பதையே நான் இங்கு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் சொன்னது போல, நடிப்பு என்பது ஒரு பெரிய இலக்கியம் போன்றது.
நடிப்பை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம், இன்னும் எந்தெந்த வகைகளில் நடிப்பில் புதுமையை உண்டாக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.
கை, கால்களை ஆட்டி, முக அசைவுகளை உண்டாக்கி நடிப்பது ஒரு வகை என்றால், மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளியே காட்டாமல், வசனம் பேசி நடிப்பது மற்றொரு வகை.
அதிகம் பேசாமல், கண் அசைவிலும், உதட்டின் நடுக்கத்திலும் நடிப்பது பிரிதொரு வகை நடிப்பாகும்.
எந்த உணர்ச்சியும் இல்லாமல், ஜடமாக நிற்பதும் ஒரு வகை நடிப்பு தான்!
இவை அத்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் மாறுபாட்டை உண்டாக்க விரும்பி, அதில், இப்போது தான் முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் ஆயிரம் படிகள் மேலே இருக்கின்றன.
ஏதாவது ஒரு சம்பவம் ஏற்பட்டு, அந்தச் சம்பவத்தின் தன்மையை பிரதிபலிக்க முடியாமல், சில சமயத்தில் முகத்தை மூடிக் கொள்கிறோமே... என்ன காரணம்? அந்தச் சம்பவத்துக்குத் தகுந்தாற் போல, நம்மால் அப்போது உணர்ச்சியை முகத்தில் காட்ட முடிவதில்லை.
சில சமயம் தேர்ந்த நடிகர்களாலும், இது முடிவதில்லை.
உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
'சொர்க்கத்தில் அவளை விட்டு விடு' என்று ஒரு ஆங்கிலப் படம்.
இப்படத்தில் ஒரு காட்சியில், படத்தின் கதாநாயகி, தன் சொந்த மைத்துனனையே தண்ணீரில் மூழ்கடித்து சாகடிப்பது போல ஒரு காட்சி.
தன் கையாலேயே, தன் நெருங்கிய உறவினரையே கொல்லும் போது, அவளது முக பாவம் எப்படி இருக்கும்?
இதில், கதாநாயகியாக ஜீன் டிரனி என்ற ஒரு நடிகை நடித்தார். எவ்வளவோ முயற்சித்தும், அந்த உணர்ச்சியை அவரால் முகத்தில் கொண்டு வர முடியவில்லை.
இயக்குனர் பொறுமையை இழந்து விட்டார்.
நடிகையிடம் ஒரு கூலிங் கிளாசை போட சொல்லி, கண்களை மறைத்து விட்டார்; அவர் எத்தகைய உணர்ச்சியை வெளிக்காட்டினார் என்பதே தெரியவில்லை.
இங்கே அந்த நடிகைக்கு வெற்றி இல்லை; இயக்குனருக்கு தான் வெற்றி!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூலிங் கிளாசை அணியாமல், எவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டுமோ, அதைக் காட்டி நடிக்கவே முயற்சிப்பேன்; அதில் வெற்றி பெற, எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமோ அதைச் செய்வேன்.
இப்படி சொல்வது ஆணவத்தின் அடிப்படையில் அல்ல; ஆசை, ஆர்வம் மற்றும் திறமையைக் காட்ட வேண்டும் என்ற துடிப்பினால் தான்.
நான் ஒரு பெரிய சுயநலக்காரன்; ஆம்! நடிப்பில் புதுமைகளைப் புகுத்தி, சமூகத்திற்கு அதை எப்படிப் பயன்படுத்தலாம், மக்களை எப்படி மகிழ்விக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அதே நடிப்பால் என்னை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்திப்பேன். ஒருவன் தான் ஈடுபட்டிருக்கும் கலையில், மேலும் வளர்ச்சி பெற்று, முன்னேற்றம் காண முயற்சிப்பதில் தவறு இல்லையே! நடிகனுக்கு தன் மீது அதிக அக்கறை ஏற்பட்டால் தான், அந்த அக்கறை மற்றவர்களுக்கும் பயன்படும்; பயன்படுத்த முடியும்.
கண்கள் ஆயிரம் கதை பேசும் என்று சொல்வர். அது, காவியமே பேசும்!
கண்களாலேயே பலவித பாவங்களைக் காட்ட முடியும். உள்ளத்தில் இருப்பதை இரண்டு விழிகளினாலேயே உணர்த்தி விடலாம்.
அகத்தின் அழகை, முகத்தில் பார்க்கலாம் என்று இதனால் தான் சொல்கின்றனர்.
அந்த முகத்திலேயே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது விழிகள் தான். உள்ளத்தின் ஜன்னல்கள் அவை!
பார்வைக்குப் பார்வை, வித்தியாசத்தையும், உணர்ச்சிகளிலே வேற்றுமைகளையும் காட்டலாம்.
பேசும் கண்கள் என்று சொல்வரே... அது உண்மை. நாள் கணக்கில் பேச வேண்டியதை, ஒரு பார்வையே சொல்லிவிடும். பார்வையாலேயே பலவித நடிப்புகளை காட்டலாம்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
Bookmarks