வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா- Part II

ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். மேடையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக விடப்பட்டு அங்கே நடிகர் திலகத்தின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்லை என்பதனால் அப்படி அமைக்கப்பட்டிருப்பதாக மதுவந்தி குறிப்பிட்டார்.

இந்த படத்தை டிஜிட்டல் மெருகேற்றம் செய்வதில் முக்கிய பணியாற்றிய சித்ரா லட்சுமணன் அந்த முயற்ச்சியில் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி குறிப்பிட்டார். தாங்களுக்கு கிடைத்த எந்த பிரிண்டும் முழுமையாக இல்லை என்பதை சொன்ன அவர் லாப் வேலைகள் சிலவற்றை சென்னை பிரசாத் லாபிலும் சிலவ்ற்றை மும்பை ரிலையன்ஸ் லாபிலும் செய்ததாக சொன்ன அவர் அதன் பிறகும் ஒரு சில காட்சிகளை மேம்படுத்த வேண்டி பூனா பிலிம் இன்ஸ்டியுட்ல் இருக்கும் Archive -லிருந்து எடுத்தாக சொன்னார்.

சிவகுமார் இந்தப் படத்தின் முழு வசனங்களையும் சொல்வார் என்று குறிப்பிட்ட சித்ரா லட்சுமணன் இப்போது தாணு போட்டிக்கு வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் அவர் தலை முதல் பாதம் வரை நடிக்கும் என்றார். எந்த நடிகரையும் சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட லட்சுமணன் சிவாஜி மாதிரி நடிப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சிவாஜி மாதிரி நடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கட்டபொம்மன் தெருக்கூத்தை பார்த்துவிட்டுத்தான் நடிப்பு ஆசை நடிகர் திலகத்தின் மனதில் வேர்விட்டதை சொன்ன அவர் அதை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சொன்னார். அதன் பிறகு அவர் வந்திருந்த audience -ஐ பார்த்து " உங்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியாது. கட்டபொம்மன் நாடகம் சிவாஜி நாடக மன்றத்தால் 116 முறை நடத்தப்பட்டு அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வசூலானது. அந்த தொகை மொத்தத்தையும் பல்வேறு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி விட்டார். அன்றைய நாளில் 30 லட்சம் என்றால் சவரன் 80 ரூபாய்க்கு விற்ற காலம், இன்றைய தேதியில் 75 கோடி ரூபாய் வரும். 100 ரூபாய் கொடுத்தால் அதை photographer வைத்து படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய தொகையை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தர்மசீலன் சிவாஜி" என்று அவர் சொன்னபோது அரங்க கூரையே இடிந்து விழுவது போல் ஆரவாரம் அணை உடைந்து பாய்ந்தது.

அடுத்து சிவகுமார் பேசுவதற்கு முன் தான் பேசி விடுவதாக சொல்லி பேசினார் பிரபு. பெங்களூரில் தாங்கள் படித்துக் கொண்டிருந்த அந்த சிறிய வயதில் இந்தப் படம் வெளிவந்ததாகவும் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் அவ்வளவாக இல்லை என்றும் பின்னாட்களில் ராஜ் டிவி வெளியிட்ட VHS காசட்டில்தான் அதிக முறை பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர். பார்த்திபன் விழாவிற்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிரபு அவர் தன்னுடனும் கோழி கூவுது படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசிய மற்றவை எல்லாம் வழக்கமான பேச்சுதான். மேடையில் இருந்த அண்ணன் சிவகுமார் அண்ணன் தாணு, அக்கா கமலா செல்வராஜ் ஆகியோரை சொன்ன அவர் வழக்கம் போல் அண்ணன் ரஜினி, அண்ணன் கமல் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். பிறகு வழக்கம் போல் ரசிகர்களுக்கு நன்றி. அப்பா காலத்திலிருந்து நீங்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

சிவகுமார் பேச வரும்போது பெரிய வரவேற்பு. என் கேள்விக்கென்ன பதில் என்று ஒரு ரசிகர் சத்தமாக கேட்க, சொல்கிறேன் என்றார். சித்ரா லட்சுமணன் சொன்ன கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு கிடைத்த வசூல் நிதியாக வழங்கப்பட்டது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று சொன்ன சிவகுமார் பலருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார் படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துக் கொண்டபோது அதில் பங்கெடுக்க சிவாஜி, பந்துலு, பத்மின, ராகினி ஆகியோர் சென்றிருந்தனர். அன்றைய நாட்களில் வெளிநாடு செல்பவர்கள் மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாடு விமான நிலையத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் கிளம்பும் அவசரத்தில் பத்மினி அதை மறந்து விட்டாராம்..

பத்மினியை விமான நிலையத்திலேயே சிறை வைப்பது போல் வைத்து விட்டார்களாம். யார் சொல்லியும் விடவில்லையாம். அவரை எப்படியாவது விழாவில கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்த ராகினி அன்றைய தினம் பஞ்சாபி உடை அணிந்து விமான நிலையம் சென்று பத்மினியை தனியாக சந்தித்து சினிமாவில் வருவது போல் இருவரும் போட்டிருந்த உடையை மாற்றி ராகினி உள்ளே தங்க பத்மினி விழாவில் கலந்துக் கொண்டாராம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல் பசும்பொன் வரை .15 படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பதை குறிப்பிட்ட சிவகுமார் நடிகர்களில் தன்னளவிற்கு அவருடன் நெருங்கி பழகியவர்கள் யாரும் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வதாக் சொன்னார். அவரின் மகன் போலவே தன்னை நடத்தியதை நினைவு கூர்ந்தார். எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாத சிவாஜி கெய்ரோ விழாவில் விருது வாங்கும் போது தலை சற்றே கிறுகிறுத்தையும் பத்மினி அவரை சட்டேன்று பிடித்துக் கொண்டதையும் சொன்னார். எகிப்து அதிபர் நாசர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு நடிகர் திலகம் பாலர் அரங்கில் அளித்த வரவேற்பில் தானும் கலந்துக் கொண்டதை சொன்னார்.

அதன் பிறகு கட்டபொம்மன் வசனங்கள். பற்றி பேசிய அவர் ஜாக்சன் துரையிடம் பேசுவது, இறுதிக் காட்சியில் எட்டப்பனுடன் பேசும் வசனங்களை அதே ஏற்ற இறக்கதோடு பேசி கைதட்டலை அள்ளிய அவர் அடுத்து கந்தன் கருணை பற்றி சொல்ல ஆரம்பித்தார். முதன் முதலில் சிவாஜியுடன் தூய தமிழ் வசனங்களை பேசிய அந்த படத்தைக் குறிப்பிட்டு அதில் சூரபத்மனுக்கும் வீரபாகுவிற்கும் நடக்கும் வாக்குவாதக் காட்சி படமாக்கப்ப்படும்போது தன்னை ஷூட்டிங்கிற்கு ஏபிஎன் வரச் சொன்னதையும் தான் சென்று பார்த்ததையும் நினைவு கூர்ந்த அவர் நடிகர் திலகத்திற்கும் அசோகனுக்கும் நடக்கும் அந்த வாக்குவாதத்தை அப்படியே அதே modulation-ல் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவாக பேசப்படாத ஆனால் ஏபிஎன்னின் அற்புதமான அடுக்கு மொழி வசனங்களை அதன் சுவை குன்றாமல் வழங்கிய சிவகுமார் தமிழ் உள்ளவரை என் தலைவன் பெயர் நிலைக்கும் என்று சொல்லி பட வெளியிட்டளார்களை வாழ்த்தி விடை பெற்றார்

விழாவிற்கு தாமதமாக வந்த கவிபேரரசு வைரமுத்து இறுதியாக உரையாற்ற எழுந்தார். அது

(தொடரும்)
. .

அன்புடன்