-
20th July 2015, 10:50 AM
#111
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.
பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.
ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.
ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,
இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.
நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.
அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th July 2015 10:50 AM
# ADS
Circuit advertisement
-
28th July 2015, 10:47 AM
#112
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை படத்திற்கு வந்த கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட ம்தார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.
வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.
மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.
ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.
இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.
ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.
அன்றைய தினம் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு அன்றைய [முதல் நாள்] இரவுக் காட்சி சமயத்தில் மழை பெய்ததையும் அப்படி இருந்தும் மக்கள் அந்த அடாத மழையிலும் விடாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த விவரத்தையும் நமது திரியிலே பல வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன்.
ஒரு நாள் நமது அருமை நண்பர் பம்மல் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கும்போது "சார் நான் செக் பண்ணினேன் சார். நீங்கள் சொன்னது கரெக்ட்தான்" என்றார். என்ன சுவாமி? எதைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை சார். வசந்த மாளிகை வெளியான அன்று இரவு மழை பெய்தது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். பழைய தினமணி பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்டது போல் அன்று மதுரையில் மழை பெய்த விவரம் பேப்பரில் வந்திருக்கிறது என்றார்.
அவரிடம் மேலதிக விவரங்கள் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எப்படி இந்த தகவலை தேடிப் பிடித்தார் என புரிந்தது.
விஷயம் என்னவென்றால் வசந்த மாளிகை படம் வெளியானது செப்டம்பர் 29 வெள்ளி. மூன்றாவது நாள் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை நடிகர் திலகத்தின் பிறந்த நாள். பழைய தினமணி நாளிதழ்களை [மதுரை பதிப்பு] பார்வையிடும் வாய்ப்பு சுவாமிக்கு கிடைத்தபோது அன்றைய தினம் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை மதுரை பதிப்பு தினமணியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதனால் ஏதேனும் விளம்பரமோ அல்லது செய்திகளோ வந்திருக்குமா என பார்த்திருக்கிறார். அப்போது ஒரு பெட்டி செய்தியாக வெள்ளிக்கிழமை இரவு மதுரை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்தது என்று வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டுத்தான் சுவாமி இதை கூறியிருக்கிறார்.
நான் அவரிடம் சொன்னேன். சுவாமி எப்போதும் நடந்தவற்றை பற்றி மட்டும் எழுதுவதுதான் என் பாணி. பொய்யாக நடக்காத ஒன்றை நடந்தது போல் அள்ளிவிட மாட்டேன். எழுதும் செய்தி நமக்கு இனிப்பாக இல்லாவிட்டாலும் கூட அதை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று சொன்னேன்.
.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் புலர்ந்தது
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th August 2015, 09:39 AM
#113
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை வெளியான முதல் நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றில் சிலவற்றில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் அவைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
1970 முதல் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 மகாத்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கலை அரசியல விழாவாக அகில இந்திய சிகர மன்றம் கொண்டாடிக் கொண்டிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். சென்னையை தாண்டியும் அதை நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க அந்த வருடம் (1972) அந்த விழாவை கோவையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த ஸ்தாபன காங்கிரஸில் ஒரு பிரிவினர் குறிப்பாக நெடுமாறனின் ஆதரவாளர்கள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கு பலத்த அழுத்தமும் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரம் என்று சொன்னால் செப்டம்பர் முதல் வாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்டில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டிற்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைக்கு காரணம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிகள் அதே அக்டோபர் 1,2.
பொதுவாகவே அகில இந்திய சிகர மன்றமோ அல்லது நடிகர் திலகமோ சிகர மன்றத்தின் சார்பில் இது போல் ஒரு மாநாடு அல்லது விழா நடத்துகிறோம் என்று அழைத்தால் உடனே மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தலைவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார். 1970,71 பிறந்த நாள் மாநாடுகளும் சரி 1970 ஜூலையில் கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவும் சரி அதற்கு உதாரணங்கள். .அது போன்றே பெருந்தலைவர் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அழைத்தால் அந்த விழாக்களில் நடிகர் திலகமும் கலந்துக் கொள்வார். அன்னை ராஜாமணி அம்மையார் மறைந்தபோது நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்துக் கொண்டது பற்றி ஏற்கனவே பேசினோம்.
இதற்கு உதாரணமாய் மற்றொரு நிகழ்வையும் இங்கே சொல்ல வேண்டும். 1970 செப்டெம்பரில் மயிலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாப்பூர் சித்ரகுளம் அருகே மகாத்மாவின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதை திறந்து வைப்பதற்காக பெருந்தலைவரை அணுகியபோது அவர் நான் வருகிறேன், அதே நேரத்தில் நீ சிவாஜியை போய் பார்த்து இந்த விழாவிற்கு கூப்பிடு என்று அன்றைய தினம் மயிலை வட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மயிலை பெரியசாமியிடம் சொல்ல அவர் சென்று நடிகர் திலகத்தை அழைக்க பெருந்தலைவர் சொல்லி இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனக்கு இருந்த படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இப்போது மறைந்து விட்ட திரு பெரியசாமி இரண்டு வருடங்களுக்கு முன்னால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடிகர் திலகத்தின் நினைவுநாள் அன்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தபோது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். .
எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால் நடிகர் திலகம் விழா என்றால் பெருந்தலைவர் நிச்சயம் கலந்துக் கொள்வார். ஆகவே கோவையில் சிகர மன்றம் சார்பாக நடக்கவிருந்த விழாவிலும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதே தேதிகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு மதுரையில் என்றவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் என்பதனால் நடிகர் திலகம் தன்னாலோ அல்லது தனது பெயரால் இயங்கும் மன்றதினாலோ அப்படி ஒரு நிலைமை உருவாவதை விரும்பாத காரணத்தினால் மன்ற விழாவை ஒரு வாரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார்.
சிகர மன்ற மாநாடு தேதி மாற்றப்பட்டதால் நெடுமாறன் தலைமையேற்று நடத்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நடிகர் திலகத்திற்கு முறையான அழைப்பு இல்லை. எப்போதும் நடிகர் திலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நெடுமாறன் தஞ்சை ராமமூர்த்தி அணி அன்றும் அதே போல் நடந்துக் கொண்டது.
ஆனால் நமது ரசிகர்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்திரளாக மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆட்சியையும் அதிகாரத்தையும் பண பலத்தையும் படோபத்தையும் பயன்படுத்தி திமுக மாநாடு நடைபெற்றது என்று சொன்னால் அந்த பின்புலங்கள் ஏதுமின்றி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடு காங்கிரஸ் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. மிகுந்த பொருட்செலவில் அலங்கார வளைவுகள் திமுக மாநாட்டிற்கு அமைக்கப்பட்டபோது வெறும் மூவர்ண துணியில் இங்கே வளைவுகள் அமைக்கப்பட்டன.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன். மேலமாசி வீதியில் ராஜேந்திரா காப்பி கடைக்கு எதிராக பொன்.முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று இருந்தது. திமுக மாநாட்டிற்கு அந்த இடத்தில ஒரு பிரமாண்டமான ஆர்ச் அமைக்கப்பட்டு ஒரு பெரிய உலக உருண்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் செய்யாமல் அதே மேலமாசி வீதியில் நான் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றால் வரக்கூடிய ஐயப்பன் கோவில் அருகே நெடுமாறனின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தில அமைக்கப்பட்ட மூவர்ண துணியில் எழுதப்பட்ட "தென்பாண்டி மதுரை இது நெடுமாறன் கோட்டை இது" என்ற வளைவு பெரிதும் பாராட்டப்பட்டது.
மாநாட்டின் முதல் நாள் மாலை அக்டோபர் 1 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தை தெற்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பெருந்தலைவர் பார்வையிட்டார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நானும் என் கசினும் அந்த இடத்திற்கு அருகில் போக முயற்சித்தோம். ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி எங்களால் போகவே முடியவில்லை. மேலமாசி வீதியில் அமைந்திருந்த உடுப்பி ஹோட்டல் வரைதான் [இப்போது அந்த இடத்தில போத்தீஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இருக்கிறது] போக முடிந்தது. கூட்டம் நெருக்கி தள்ள மூச்சு திணறி விட்டது. அதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பி விட்டோம். நடிகர் திலகம் வரவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்தால் மற்றபடி மாநாடு சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th September 2015, 09:46 AM
#114
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
1972 அக்டோபர் 1,2 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு பற்றி பார்த்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மதுரையில் ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு நடந்த நாட்களில் நடிகர் திலகம் மைசூர் அருகே நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று காலையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு மதிய உணவு இடைவேளையோடு pack up ஆனது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் மிகப் பெரிய கேக் வரவழைக்கப்பட்டு நடிகர் திலகம் கேக் வெட்ட பிறந்த விழாவும் அதை தொடர்ந்து விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. நீதி தயாரிப்பாளர் பாலாஜி அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை காண வந்திருந்தார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
சில பகுதிகளுக்கு முன்பு நீதி படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் என்றும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை ஷூட்டிங் என்பதையும் சொல்லியிருந்தோம். அக்டோபர் 6 வெள்ளியன்று மைசூரிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தார் நடிகர் திலகம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அக்டோபர் 7,8 கோவையில் சிகர மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தார். அன்றைக்கு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் கூடுவார். கோவையில் அன்றைய நாட்களில் மிக பிரபலமான ஹோட்டல் குருவில் தங்கியிருந்தார். ஹோட்டல் வாசலில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததை புகைப்படமாகவும் செய்தியாகவும் பத்திரிக்கைகள் வெளியிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. .
எப்போதும் போல் இரண்டு நாட்கள் மாநாடு. முதல் நாள் கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் இரண்டாம் நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது. முதல் நாள் பிரமாண்டமான ஊர்வலம் ஆரம்பித்து மாநாட்டு பந்தல் வரை சென்று முடிவடைந்தது. நடிகர் திலகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டு கை அசைத்து ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களோ சாதரணமாகவே கேட்கவே வேண்டாம். வெற்றி மேல் வெற்றியாக வந்துக் கொண்டிருந்த நேரம் எனும்போது மகிழ்ச்சி துள்ளல் அதிகமாகவே இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஆனது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. கடலலை போன்ற அந்த பிரமாண்ட கூட்டத்தை புகைப்படமாக பார்த்து பிரமித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ஊர்வலத்தையும் பின் நடைபெற்ற விழாவையும் ராமாநாயுடு தன் குழுவினரை வைத்து படமாக்கினார்.
முதன் முதலாக 1970-ம் ஆண்டு அகில இந்திய சிகர மன்றம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு ஒரு சில மாதங்களுக்கு பின் தமிழகமெங்கும் அப்போது ஓடிக் கொண்டிருந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. 1971-ம் வருடம் ஜூலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி பட விழாவின் செய்தி தொகுப்பு சவாலே சமாளி திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு பாபு திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. ஆனால் 1972-ல் கோவையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழா வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த செய்தி தொகுப்பை நான் பார்த்த நினைவில்லை. ராகவேந்தர் சார் அல்லது வாசு போன்றவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறேன்.
முதல் நாள் கலை விழாவில் அன்றைய முன்னணி நாயக நாயகியர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மிக அதிகமான தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிட்டத்தக்க விஷயம். அன்றைக்கு நடிகர் திலகத்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று அனைவரும் காத்துக் கிடந்த நிலை. அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால் மேடையிலிருந்த இசைக்குழுவினரின் வாத்திய பின்னணியோடு நடிகர் முத்துராமன் அவர்கள் என்னடி ராக்கமா பாடலை பாடியதுதான். மாநாட்டு பந்தலே திமிலோகப்பட்டது என்று சொல்வார்கள்.
மறுநாள் அரசியல் மாநாடு. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல் நிலைமைக்கேற்ப பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவரின் பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இறுதியாக நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தினார். தானும் தனது ரசிகர் படையும் எந்நாளும் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைப்போம் என்று சூளுரைத்தார். கொங்கு மண்டலமே குலுங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அதே நாளில் (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பதை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. . .
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 07:08 AM
#115
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 07:08 AM
#116
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd November 2015, 09:40 AM
#117
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
அக்டோபர் மாத துவக்கத்தில் கோவையில் நடந்த நடிகர் திலகத்தின் சிகர மன்ற மாநாடு பற்றியும் தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார். இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th November 2015, 01:35 PM
#118
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
மதுரையில் பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை ஆகிய படங்களின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th November 2015, 06:18 PM
#119
Senior Member
Devoted Hubber
Dear murali sir,
we are waiting........................
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
9th December 2015, 10:37 PM
#120
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்
ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.
அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks