-
20th May 2016, 08:24 AM
#1
Junior Member
Devoted Hubber
வேண்டாத வேலை !
நேரம் காலை 7.30 மணி.
கேளம்பாக்கம், சென்னையின் தென் கோடியில், நடுத்தர வர்க்க மக்கள் கடனில் வரிசையாக கட்டிய வீடுகள். அதில் ஒன்று.
கோபி வாசலில் தனது பல்சர் மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. வீடு அவனது அப்பாவுடையது. வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.
மாடி வீட்டு அனு, அழகான 7 வயது பள்ளி சிறுமி. சீருடையில், தூக்க முடியாமல் புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள். மூக்கை சிந்திக் கொண்டே !
“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” கோபியின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.
வழக்கம் போல் வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு
வழக்கம் போல் அங்கே குழந்தைகளின் கூச்சல் சிரிப்பு கலாட்டா
வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது.
வழக்கம் போல் பஸ் ஒரு 30 அடி தள்ளி நின்றது.
வழக்கம் போல் பசங்கள்,‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துப் பேருந்தில் ஏறினர்.
வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.
இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த கோபி, ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான்.
மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது கோபியின் ஹாபி. 'உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது' என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர. கோபி இந்த ரகம்.
அனுவிடம் கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ ஏன் பஸ் பிடிக்க ஒரு நாளைப் போல ஓடற? உனக்கு சீட் கிடைக்காதா?”
“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” - அனு
“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” -கோபியின் அடுத்த கேள்வி.
“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு
“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” - விடுவானா கோபி.
“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே போயிடறாங்க.” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.
“சரி! சரி , நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு?”
அனு கொஞ்சம் யோசித்தாள். “ஒண்ணும் இல்லே!”.
“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” கோபி கேட்டான்.
அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!” புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.
****
அடுத்த நாள் காலை.
வழக்கம்போல் வாசலில் கோபி அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று கோபி பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள். உரசிக்கொண்டு சிரித்தாள்.
வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை. நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு, கோபியை பார்த்து கையாட்டினாள்.
ரொம்ப சந்தோஷமாக இருந்தது கோபிக்கு. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா கோபி” மார்பில் தட்டிக்கொண்டான்..
மூக்கை நீட்டுபவர் பல ரகம். தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர். பலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ' தான் உயர்ந்தவன்' என்பதை காட்டிக் கொள்ளவே. கோபிக்கு தான் உயர்ந்தவன் என்ற அசட்டு கர்வமும் உண்டு ! அடிபட்டால் அது குறைய வாய்ப்பு உண்டு !
அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
****
மூன்று நாள் கழித்து.
அனுவின் அம்மா, கோபியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.
தற்செயலாக அங்கே வந்த கோபிக்கு ‘சொடேர்’ என்றது. ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.
****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான் கோபி. மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியே. இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பரோபகாரி கோபிக்கு மனம் தாங்கவில்லை. உதவி செய்ய ஆசை. ஒரு மெல்லிய குச்சி எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே. கோபி மனம் இறக்கை கட்டி பறந்தது. ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே!”.
பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது.... நடந்தது. ஆனால், ஆனால், ... பறக்கவேயில்லை. கோபி ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான்.
‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை. குற்றுயிரும், கொலை உயிருமாக போராடிக் கொண்டிருந்தது .
கோபிக்கு இப்போது புரிந்தது, மெதுவாக ! பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?
****
மறுநாள் காலை நேரம் 7.30 மணி.
கோபி தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக அனுவும், கூட அவள் அம்மாவும். அவள் அம்மா திட்டி கொண்டே வர, அனு கோபி பக்கம் கை காட்டி ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனு அம்மா, கோபியை பார்த்த பார்வையில் நெருப்பு.
கோபி தலையை தாழ்த்திக் கொண்டான். வாசலில்,
வழக்கம் போல் அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு
வழக்கம் போல் அங்கே குழந்தைகளின் கூச்சல் சிரிப்பு கலாட்டா
வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது.
வழக்கம் போல் பஸ் ஒரு 30 அடி தள்ளி நின்றது.
வழக்கம் போல் பசங்கள்,‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துப் பேருந்தில் ஏறினர்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக இன்று, அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார் .
அனுவும் ஓடிப்போய் முண்டியடித்து ஏறினாள்.
அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார்.
திரும்பிப் போகையில், கோபியைப் பார்த்து தன் முகவாய்க் கட்டையை தன் தோளில் இடித்துக் கொண்டே ! உதட்டை சுழித்தார் ! "இனி அனு விஷயத்திலே மூக்கை நீட்டினா பாரு !?படவா ! பிச்சி புடுவேன் பிச்சி ! " என்று திட்டுவது போல இருந்தது .
அப்பா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது போல தோன்றியது கோபிக்கு. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..
முடிவு செய்து விட்டான் கோபி, இனி ஹாபியை மாற்றுவதென்று. இனி, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை.
**** முற்றும் ( நன்றி கூகிள் : வலையில் படித்த ஒரு துணுக்கில் பின்னிய வலை)
Last edited by Muralidharan S; 21st May 2016 at 04:27 PM.
-
20th May 2016 08:24 AM
# ADS
Circuit advertisement
-
20th May 2016, 10:04 AM
#2
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2016, 07:50 AM
#3
Junior Member
Devoted Hubber
Bookmarks