Results 1 to 10 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 42
    ---------------------------------

    அன்பு...

    பேரன்பு...

    மாசற்ற அன்பு...

    உண்மை அன்பு...

    உன்னதமான அன்பு...

    இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
    நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

    இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
    ----------

    நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
    உண்டு. " திரிசூலம்".

    எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.

    தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
    பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
    ----------

    கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
    வைத்திருக்கிறது.

    தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
    நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
    நம் மெல்லிசை மாமன்னருக்கு.
    --------

    புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
    காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.

    சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
    அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
    புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.

    "கண்ணான மணவாளன் சேயாகிறான்.
    கல்யாண மகராசி தாயாகிறாள்.
    கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
    தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."

    "என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
    என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."

    "மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
    தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
    ----------

    தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
    சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
    கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
    குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
    குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.

    " மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...

    பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
    அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
    இருக்கின்றன.

    பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
    எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
    காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.

    "தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
    குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
    நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.

    இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.

    அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.

    சட்டென்று கண்கள் பனிக்கிறது.

    அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •