-
19th April 2020, 01:29 PM
#3251
Junior Member
Diamond Hubber
தங்கத்தில் நிறமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று
வந்திருக்கும் மலரோ
மீனவ நண்பன் பட பாடல்
உருவான விதம்
உங்கள் பார்வைக்கு
சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.
வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.
பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.
யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.
இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.
அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.
ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.
ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.
சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.
மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.
இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
அங்கங்களோ மன்மதனின் படைக்கலம்.
ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களேன் என்கிறார்.படைக்கலம்னா போர்க்களம்தானே.இதெப்படி இங்கு வரும்.
சார் படைக்களம் அப்படீன்னா தான் போர்க்களம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மன்மதனின் பண்டங்களாக....
என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.
முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ
மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.
முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.
வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ
அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.
எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.
மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.
அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்........... Thanks.........
-
19th April 2020 01:29 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2020, 01:33 PM
#3252
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்.
M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.
முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’.......... Thanks...
-
19th April 2020, 01:38 PM
#3253
Junior Member
Diamond Hubber
' படம் போட்டாச்சா...டைட்டில் போட்டாச்சா?' என்ற படபடப்புடன் காட்சி நேரம் 5 நிமிடம் கடந்த பின் டிக்கெட் எடுத்துக் கொண்டு ஓடியபடியே செல்லும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ' அய்யோ எம்ஜிஆர் பெயர் போட்டிருப்பாங்க' அடுத்தக் காட்சி பார்க்கலாம்' என கூறி டிக்கெட் கவுண்டரிலிருந்து வெளியே வந்த அனுபவமும் உண்டு.இன்றைய நடிகர் ஒருவரின் படத்தின் ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு ஆர்எம் வீரப்பன் மாலை அணிவிப்பார். தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. டிக்கெட் கவுண்டருக்குள் விட்டிருந்த கையை வெளியே எடுத்து நகருகிறேன். ' ஏம்பா படம் பார்க்கலையா?' கேட்டவர் திக்கென ஆச்சரியப்படும் அளவில் எனது பதில்...' புரட்சித்தலைவர் வரும் சீன் கடந்துவிட்டது,அவர் முகத்தை இன்றைய இளைய ரசிகர்களின் ஆரவாரத்தோடு கண்டுகளிக்க நினைத்தேன், முடியாமப் போச்சு' என்றேன். இத்தனைக்கும் அது ரிலீசான முதல் நாள்.அந்தப் படம் பாட்சா. இப்படி மக்கள் திலகம் டைட்டிலைப் பார்த்தால்தான் தலைவர் படம் பார்த்த திருப்தி ஏற்படும். தலைவர் மீனவ நண்பன் படத்தில் அறிமுகமாகும் காட்சியில் வில்லன் கண்ணனின் கையை கர்ச்சிப் கட்டிய இரும்புக்கரம் தடுக்கும். பின் பெல்ஸ்பாட்டம் பேண்ட் அணிந்த தலைவர் காலிலிருந்து காமிரா மேலே செல்லும். படம் பார்த்துவிட்டு ஊரில் வந்து சிறுவர்களிடம் சொல்லிச் சொல்லி மாளாது. 'இ.போ.எ.வாழ்க படம் பார்த்திருக்கிறாயா? தலைவர் பெயர் டைட்டிலில் எத்தனை தடவை வரும்?' எனக் கேட்டு என்னை மடக்கியவர்கள் உண்டு. ' ச்சே... தலைவர் படத்தை எத்தனை தடவை பார்த்திருக்கேன். 3 தடவை டைட்டிலில் தலைவர் பெயர் வருவதை பார்த்தும் மறந்துவிட்டோமே' என வருந்துவேன். நினைத்ததை முடிப்பவன் படத்தில் தலைவர் இந்த கலர் பேண்ட் சர்ட்டுக்கு இந்த கலரில் சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்து வருவார் என கூறுபவர்களையும் பார்த்திருக்கிறேன். தலைவர் படப் பட்டியலை அகர வரிசையிலும் எந்த தேதியில் என்ன படம் ரிலீஸ் என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் விஜய் டிவி மன்னாதி மன்னன் பொங்கல் நிகழ்ச்சி புகழ் அய்யா ஆழ்வை ராஜப்பா சாமி வரை இன்றளவும் எண்ணற்ற மக்கள் திலகம் பக்தர்களுடன் தலைவர் காவியங்களை சென்னை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கோவை போன்ற ஊர்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படம் சீன் பை சீன் நான் அறிந்திருந்தாலும் சில நண்பர்கள் நம் அருகில் இருந்து கொண்டு அடுத்தடுத்து காட்சியில் என்னென்ன நிகழ்வு வரும் என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மனதுக்குள் எரிச்சல் வந்தாலும் காட்டிக் கொள்வதில்லை. அன்று 1985 களில் தலைவர் படம் மறுரிலீஸ் என்றாலும் ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து விநியோகித்துள்ளனர் என்பதை 1995 களில் அறிந்தேன். அப்போ ரிலீஸ் சமயத்தில் தலைவர் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எப்படி இருந்தது என மூத்தவர்களிடம் கேட்பேன்.' தம்பி 1965 ல எங்கவீட்டுப் பிள்ளை படம் ரிலீஸ் எப்படி ஆரவாரமா இருந்ததோ அதைவிட ஆரவாரம் இன்றுவரை எப்போதெல்லாம் மறுவெளியீடு செய்கிறார்களோ தலைவர் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்துவருவதைப் பார்த்து வருகிறேன்' என்கிறார்கள். இந்த சாதனையை இன்றைய நடிகர்களோ, அவரது ரசிகர்களோ வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பே இல்லை. தலைவர் படம் பிரமாண்டம் என உணர்த்த போஸ்டரில் பிரமீடு அமைப்பில் படத்தின் பெயர் இருக்கும். திரையில் அந்த பெயர் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற போஸ்டர்கள் 1985 களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். (இவை தற்போது டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யும்போது திரையிலும் டைட்டில் பிரமாண்டமாக மாற்றம் செய்திருந்தனர்.) ஆனால் அரசகட்டளை டைட்டில் போஸ்டரிலும் திரையிலும் ஒரே மாதிரியாக இருக்கும். குடியிருந்த கோயில் முதன்முதலாக பார்க்கும்போது என்னை படத்திற்கு அழைத்துச் சென்ற என் மாமாவிடம் ' எம்ஜிஆர் பெயர் டைட்டிலில் எப்ப வரும் எப்ப வரும் ?' என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். புலி, பசுவும் கன்றுடன் தலைவர் பெயர் திரையில் வரும்போது எழுந்த ரசிகர்கள் தலைவர் வங்கி கூரையில் ஓடுகளைப் பிரித்து இறங்கி சண்டை போடுவதுவரை துள்ளிக் குதித்தபடியே இருந்தனர். நானும் மீனவ ரசிகர்கள் கூட்டத்தினுள் சிக்கி அவ்வப்போது தலைவர் முகத்தை பார்க்க படாதுபாடு பட்டேன். முகநூல், வாட்சப் தளங்களில் எண்ணற்ற தலைவர் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டேன். நண்பர்கள் பதிவிட்ட புகைப்படங்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களும் வீடியோ clipகளும் சேமித்தாச்சு. மற்றவர்களிடமிருந்து எனது பதிவு மாறுபட்டிருக்க வேண்டும் என யோசித்தேன். தலைவரைப் பற்றி செய்தி சொல்லும் போது ஓவியத்துடன் சொன்னேன். தலைவர் பற்றி சித்திரக்கதை பதிவிட்டேன். ம்கூம் தலைவர் புகைப்படத்தை ஒரிஜினலாவே பதிவிட்டால் ஒழிய எனது ஓவியம் சார்ந்த தலைவர் பற்றிய பதிவுகளுக்கு வரவேற்பு இருப்பதில்லை. என்றாலும்....'சரி இப்ப என்ன சொல்ல வருகிறீர்?' எனத்தானே கேட்கிறீர்கள். தலைவர் பெயர் டைட்டிலில் அறிமுகமாகும் தொகுப்பு பதிவிட நினைத்து தயார் செய்தபோது ....முன்னுரை வேண்டாமா? அதான் இத்தனை ஆதங்கம்.......... Thanks.........
-
19th April 2020, 01:53 PM
#3254
Junior Member
Diamond Hubber
MGR அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பும் சொல்லிக்கொடுத்து அவர் வறுமையில் வாடிய போது தன் வீட்டில் பல நேரம் சாப்பாடு போட்டவர் காளி.என்.ரத்தினம்.(சபாபதி படத்தில் காமடியனாக கலக்கியவர்) தலைவரை பெரிய ஆளாக வருவாய் என சாமான்யராக இருந்தபோதே கணித்தவர்.. MGR முதன் முதலாக ராஜகுமாரி படத்தில்1947ல் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த போது அவரை சந்தித்து ஆசி பெற்றார். படம் வெற்றி பெற்றது.திரும்ப அவர் வீட்டுக்கு சென்றபோது அண்ணே நீங்க சொன்னமாதிரியே நா பெரிய ஆளாயிட்டேன். அதற்கு காளி.என்.ரத்தினம் சொல்கிறார். "நான் சொன்ன பெரிய ஆள் என்ற இலக்கு வேறு. இதெல்லாம் அதில் 10சதவீதம் கூட வராது. நா சொன்ன மாதிரி பெரிய ஆளா நீ இருக்கும் போது நா இருக்கமாட்டேன். "
1950ல் காளி ரத்தினம் மறைந்தார். அவர் மனைவி ராஜகாந்தத்துக்கு எம்ஜிஆர் மகன் போலவே இருந்தார். பல சூழல்கள் மாறின... எம் ஜி ஆர் முதல்வரானார். அப்போது அவர் சொன்ன வார்த்தை. "என்னை இந்த இடத்தில் கொண்டு வந்தது கலைத்துறை. அதுதான் வேர். அந்த வேருக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்தது காளியண்ணன்."
அவர் வீட்டுக்கு சென்றார் எம்ஜிஆர். அவருடைய படத்துக்கு மாலை போட்டார். ராஜகாந்தம் அம்மாவிடம் ஆசி வாங்கி விடைபெற்ற போது ராஜகாந்தம்"சாப்பிட்டு விட்டு போ ராமச்சந்திரா"என்றார். அதற்கு தலைவர் பதில். "நீங்க போட்ட சாப்பாடு இன்னமும் என் வயித்துல அப்படியே இருக்கு அம்மா!! நா சாகுற வரைக்கும் அது கரையாது"
இறந்து 33 ஆண்டுகளாகியும் அவர் புகழ் மங்காமல் கூடிக்கொண்டே இருக்க காரணம். "வந்தவழி மறவாத ஒருவரை எந்தவழியும் மறக்காது.."....... Thanks.........
-
19th April 2020, 01:55 PM
#3255
Junior Member
Diamond Hubber
#தெய்வமாக #வலம்வந்த #தலைவன்
தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு வீட்டுக்குப் போகிறார் புரட்சித்தலைவர்... கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.
மக்கள்திலகம் அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.
‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.
குழந்தையைத் தொட்டுப் பார்த்தார் வாத்தியார்... அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.
‘#தலைவா...!' என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.
‘#ஒரு #குழந்தை #காய்ச்சலால் #உயிருக்குப் #போராடிக்கொண்டு #இருக்கும்போது #நான் #வீட்டுக்குப் #போறதுதான் #முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
#மகராசன் #வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை...
தலைவர் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....
அப்படிச் செய்யவில்லை...
ஏனெனில் #அக்குழந்தையைத் #தன் #குழந்தையாகவே #பாவித்ததன் விளைவு தான்...இது...
இதைப்போல...பல கற்பனைக்கும் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
ஆனால்...!!!
#தெய்வமே #தலைவராக #வந்து #மக்களை #வழிநடத்தியது
என்றால் அது நம் #இதயதெய்வம் #பொன்மனச்செம்மலைத் தவிர வேறுயாராக இருக்கமுடியும் ???....... Thanks...
-
19th April 2020, 03:08 PM
#3256
Junior Member
Diamond Hubber
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார். படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் N S V சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.
தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார். கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள். ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின. ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள். எங்கள் காதுகளில் நம்நாடு படப்பாடல் பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க பாடலும் நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும் என்ற உலகம் சுற்றும் வாலிபனின் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது. நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
அதிகாரம் நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.......... Thanks.........
-
19th April 2020, 03:14 PM
#3257
Junior Member
Diamond Hubber
அன்புத் தம்பி
;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
எம்.ஜி.சக்கரபாணி
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.......... Thanks...
-
19th April 2020, 03:20 PM
#3258
Junior Member
Diamond Hubber
"வாத்யார்"
தமிழகத்தை பொருத்தவரை "எம்.ஜி.ஆர்" என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயர்கூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதை சாதித்து இப்படியொரு உயரத்தை தொட்டார் என்று, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா..? காமராஜ் செய்ததுதானே? பொக்கை வாய் கிழவிகளைக் கட்டி பிடித்து அன்பை தெரிவித்ததாலா..? அதுவும் அரசியலில் புதிதல்லயே?
எம்.ஜி.ஆர் என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்று வரை நீடித்தது வாழ்கிறார்.
சினிமாவில் இருந்தவரை அவரை முந்த இன்னொருவர் கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை, அவரை எந்த தேர்தலிலும் தோற்க்கடிக்க முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி, அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சரித்திரம் சொல்கிறது.
பொது வாழ்வில் அவரது பிரமாண்ட வெற்றி ஒரு இரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம்.
வெற்று தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த வாழ்க்கையை போல வாழ்ந்து, அவரைப்போல் உழைப்பாளியாக, வள்ளலாக, ஒழுக்கமுள்ளவராக திகழ்ந்தால், எந்த நடிகரும் மக்களின் இதயத்தில் இடம்பிடிக்கலாம்.
by : M.G.Nagarajan
Updated : 18 April 2020 - 3:54 AM....... Thanks...
-
19th April 2020, 05:09 PM
#3259
Junior Member
Diamond Hubber
மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும், நாளையும், ‘வாத்தியார்’ என்று மக்களால் போற்றப்படுபவர் அவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த படம்.
எம்.ஜி.ஆர் தனது நெய்தல் நாட்டில் மருத்துவராக இருப்பார். அந்நாட்டு மன்னன் சர்வாதிகார எண்ணம் கொண்டவன். சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத மக்கள் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள். புரட்சியாளன் ஒருவனுக்கு உதவி செய்கையில், மன்னரின் படையிடம் சிக்கிக் கொள்வார் எம்.ஜி.ஆர். கோபமடைந்த மன்னன் எம்.ஜி.ஆரைப் புரட்சிக் கூட்டத்துக்குத் தலைவர் என்று தீர்மானித்து எம்.ஜி.ஆர் அண்ட் டீமைக் கன்னித்தீவில் அடிமைகளாக விற்று விடுவான். தன் குழுவோடு, அத்தீவை மேம்படுத்தக் கடுமையாக உழைப்பார் எம்.ஜி.ஆர். ஆயினும் சரியான அங்கீகாரமோ விடுதலைக்கான வாய்ப்போ கிடைக்காது. கோபப்படும் குழுவினரை சமாதானப்படுத்தப் பல வழிகளைக் கையாளுவார். நல்ல அறிவுரைகளைப் பாடலாகப் பாடிப் புரிய வைப்பார். “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.
இப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே! வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம்! நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்துளிகளின் விளைவாகக் கிடைத்தது சுதந்திரம் என்பதை நமக்கு நன்கு புரிய வைக்கும் இந்தப் பாடல்.
படத்தில் நாகேஷின் உடல்மொழி பல காட்சிகளில் மிகப் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக, கூட யாருமே இல்லாமல் வெறும் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி அவருடைய மாஸ்டர் பீஸ்களில் ஒன்று!
நம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார்! கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்!
இந்திய சினிமாவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். இந்திய அளவில் மட்டுமில்லை, உலக அளவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!
அப்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் ஈஸ்ட்மென் கலரில், அழகிய கேமரா கோணங்கள் மற்றும் நேர்த்தியான கேமரா நகர்வுகளோடு பிரம்மாண்டத்தின் மகுடமாக இந்தப் படம் திகழ்ந்தது என்பதைத் திரையில் கண்டவர் அறிவர். டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து 2014-இல் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம், 175 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது! புதிதாக வெளியாகும் பல படங்கள் ஓரிரு நாட்களில், வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடும் சூழலில் ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் இந்தப் படம் வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடுவதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு இன்றும் மக்கள் மீதுள்ள செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
*எம்.ஜி.ஆர்* *ஆயிரத்தில்* *ஒருவரில்லை* , லட்சத்தில் ஒருவரில்லை, *கோடியில் ஒருவர்!* ✍............. Thanks.........
-
19th April 2020, 05:11 PM
#3260
Junior Member
Diamond Hubber
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்💐💐💐
******************************
மலேசியா நாட்டின் மேடைப் பாடகர் டி.எம்.எஸ். குரல்வழி பாடகர் பாசமிகு சகோதரர் திரு. டி.எம்.எஸ். சித்திரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
புரட்சித்தலைவரின் பற்றுமிகு பக்தரான திரு. சித்திரன் அவர்கள் ஏராளமான மேடை நிகழ்வுகளில் அதாவது , மலேசியா , சிங்கப்பூர் , இந்தியா உட்பட பல மேடை நிகழ்ச்சிகளில்... சரித்திர நாயகர் , பொன்மனத் தங்கம் , ஏழைகளின் இதயத் தலைவன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படத்தின் பாடல்களை , மேடையில் பாடி இதயத்தில் பதிந்தவர்.
மலேசியா நட்டில் 2019 ம் ஆண்டு மாத கடைசியில் நடந்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , நானும் ஆண்டவன் mgr குடும்பத் தளத்தின் அட்மீன் சகோ.ஆர்.ஜி.சுதர்சன் அவர்களும் கலந்து கொள்ள சென்றபோது ...
நாங்கள் தங்கியிருந்த ரெஷ்ட்ராண்ட்டுக்கு நேரில் வந்து சந்தித்து ,
மரியாதை , கௌரவத்துடன் அருமையான விருந்தும் கொடுத்து எங்ஙளை மகிழ்வித்த திரு.டி.எம்.எஸ். சித்திரன் சகோதரர் அவர்களுடைய பிறந்த நாளுக்கு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" "உழைக்கும் குரல்" மாத இதழ் மற்றும் ஆண்டவன் mgr குடும்பத்தளத்தின் சார்பாகவும்...
பல்லாண்டு காலம் சந்தோஷம் பொங்க வாழ , மனிதக்கடவுள் இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறோம்.
வாழ்க..வாழ்க ,
நோய்நொடியின்றி என்றும் சீறோடும்...சிறப்போடும்🎂💐
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
&
ஆர்.ஜி.சுதர்சன்
(அட்மீன்)
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
🙏........... Thanks...
Bookmarks