`பரபர...சுறுசுறு' என சுற்றிவரும் ஐஸ்வர்யாவின் பேச்சும் `படபட ஸ்பீடு!' ஏழு வருடத்துக்குள் 45 சீரியல், 5 சினிமா என்று முடித்த இந்த `ஐஸ்' தேவதை இப்போது ஜோடி நம்பர் ஒன் ஆட்டத்தில் படுபிஸி

ஆட்டத்தின் இடைவெளியில் கொடுத்த பேட்டி:

* டிவியில் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னோட போட்டோவை பார்த்து டிவியில் `கங்கா யமுனா சரஸ்வதி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன கேரக்டர் தான் என்றாலும் நன்றாக இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. இந்த ஏழு வருஷத்தில் 45 சீரியல்கள், 5 படங்கள் பண்ணிட்டேன். அண்ணாமலை சீரியல்தான் எனக்கு பிரேக் கொடுத்தது. சி.ஜே.பாஸ்கர் எனக்கு நடிப்பை நன்றாக கற்றுக் கொடுத்தார். இப்போது ஆனந்தம், பந்தம், கிரிஜா, நம்ம குடும்பம் என்று நடித்து வருகிறேன். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக ரிகர்சல் என்று எப்பவும் ஆட்டம்... நடிப்பு என்று ஒரே கொண்டாட்டம்தான்!

* படித்துக் கொண்டே நடிப்பதில் சிரமம் இல்லையா?

பத்தாம் வகுப்புக்கு மேல் ஸ்கூலுக்கு போக முடியல...அதனால் பிளஸ்டூ பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன். அப்புறம் சென்னை பல்கலைக்கழகத்தில் கரஸ்பான்டன்ஸில் பி.பி.ஏ., முடிச்சேன்.

* நடிப்பு தவிர வேறு என்னவெல்லாம் தெரியும்?

டான்ஸ் ஓரளவு தெரியும். அதுவும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்காக கத்துக்கிட்டேன். மத்தபடி வேற எதுவும் தெரியாது.

* வீட்டிலும், தோழிகளும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

ஐஸூ...

* சும்மா இருந்தால் என்ன பண்ணுவீர்கள்?

பாட்டுக் கேட்பேன். டிவியில் கிரிக்கெட், டென்னிஸ் விரும்பிப் பார்ப்பேன். தோழிகளுடன் ஜாலியா சென்னையைச் சுத்தி வருவேன்.

* காதல்..?

அதெல்லாம் நமக்கு ஒத்து வராது; நேரமும் கிடையாது!

* பிடித்த விளையாட்டு?

நான் ஸ்கூல்லேயே அதெலட்டிக் வீராங்கனை. வாலிபால், த்ரோபால் ஆகியவையும் தெரியும்.

* நீங்க முன்னுதாரணமாகக் கருதுவது யாரை?

எனக்கு நானே ரோல்மாடல்! மத்தவங்க போல நான் எதுக்கு வரணும்?

* பிடித்த நடிகர், நடிகை?

மாதவனையும், சிம்ரனையும் ரொம்பப் பிடிக்கும்.

* சினிமா வாய்ப்பு வந்தது எப்படி?

சீரியலில் சிநேகிதி, தங்கை கேரக்டர்களில் நடிப்பதைப் பார்த்து டும் டும் டும் படத்தில் தங்கை கேரக்டர் கொடுத்தார்கள். அப்புறம் தவசி, லவ்லி, ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்களில் நடித்தேன்.

* உங்க குடும்பத்தைப் பற்றி?

அப்பா ராஜாமணி பிசினஸ்மேனë. அம்மா சித்ரா ஹவுஸ்வைப். ஒரு அக்கா. அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சு. இப்போ வீட்ல நம்ம ராஜ்யம்தான்!

* எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்று ஆசை?

நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும். நடிச்சுக்கிட்டே... இருக்கணும்!

ரொம்ப...ரொம்பச் `சின்ன' ஆசைதான்!