ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.

ராகம்:- பாகேஸ்வரி