மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியது என்றால் அது மிகையல்ல. நுழைந்த வேகத்திலேயே கல்லூரி மாணவிகளிடம் தனி யிடம் பிடித்த கதாநாயகர் ஜெய்சங்கர். அவருடைய திருமணத்தின் போது நான் பள்ளி மாணவன். அப்போதைய சுவையான தகவல் நான் கேள்விப்பட்டது. தமிழ்த்திரையுலகில் முதன் முதலாக ஒரு கதாநாயகனின் திருமணம் செய்து கொண்டதற்கு பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் வருந்தி ஏக்கம் கொண்டது ஜெய்சங்கரின் திருமணத்தின்போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமர்ந்தவர் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல அது வரை பல நாயகர்களை வைத்து படம் எடுத்து வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறிப்பிட்ட ஒரு நடிகரை வைத்தே தொடர்ச்சியாக படம் எடுத்த பெருமையும் ஜெய்சங்கரையே சேரும். அதே போல காமிரா மேதை கர்ணன் பெரும்பாலும் ஜெய்சங்கருக்காகவே கதை உருவாக்கி அருமையான படங்களைக் கொடுத்துள்ளார், சில பல வேறுமாதிரியான காட்சிகளைத் தவிர்த்து. அதில் குறிப்பாக கங்கா தமிழ்த்திரையுலகில் தனி முத்திரை பதித்தது. கறுப்பு வெள்ளை படங்களிலேயே ஒளிப்பதிவில் அசுர சாதனை படைத்த கர்ணனின் இப்படத்தில் ஒரு காட்சியில் சாரட் வண்டியும் குதிரையும் ஒரே சமயத்தில் வேகமாக அதே சமயம் இணையாக பயணிக்கும் காட்சி இடம் பெறும். அக் காட்சியில் சாரட் வண்டியின் இரு சக்கரங்களுக்கு இடையில் தொலைவில் பயணிக்கும் குதிரை ஓடுவதைக் காண்பித்திருப்பார். இன்று வரை இக்காட்சியினைப் போல் இன்னொரு படத்தில் இடம் பெறவில்லை. இக்காட்சியில் ஜெய்சங்கர் முழுதும் டூப் இன்றி நடித்துள்ளார் என்றால் அவரின் தொழில் பக்தியை அறிந்து கொள்ளலாம்.
இது ஒரு உதாரணம் மட்டுமே.

ராகவேந்திரன்