அடிமைப்பெண் படத்தில் 'ஏமாற்றாதே... ஏமாற்றாதே' மிகவும் அருமையான பாடல். தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பாகாத பாடலும் கூட. ஒருத்தர் குழியில் விழுந்தால், எல்லோரும் குழியில் விழுவது என்ற நம் மூதாதையரின் வழிகாட்டல்படி, திருப்பி திருப்பி 'ஆயிரம் நிலவே வா' அதைவிட்டால் 'தாயில்லாமல் நானில்லை' இவற்றையே ஒளிபரப்புவர். அந்தக்கால 'வினைல் ரிக்கார்ட்' எனப்படும் மண் இசைத்தட்டில், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இடம் இருந்ததால், பாடலின் அற்புதமான முன்னிசைகள் மற்றும் இடயிசைகள் நிறைய அடிபட்டுப்போகும். இதனால் எம்.எஸ்.வி.யும் கே.வி.எம்.மும் நிறைய நஷ்டமடைந்தனர். பாடல் வரிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இசைக்கோலங்கள் வெட்டப்பட்டு விடும். (சில பாடல்களில் இடமின்மையால் சரணங்கள் கூட கட் செய்யப்படும்) முழுசாக படங்களில் மட்டுமே பார்க்க (கேட்க) முடியும். இந்தக்காலத்திலோ, சி.டி.க்களில் அத்தனை 'பிட்'டுகளும் இடம் பெற்றுவிடுகின்றன. ஆனால் தரம்.. அந்தோ. அப்படி அற்புத இசைக்கோலங்கள் அடிபட்ட பாடல்களில் 'ஏமாற்றாதே' பாடலும் ஒன்று. படத்தில் பார்க்கும்போது மகாதேவனின் இசையமைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு மாதிரியான அரேபிய இசையைக் கலந்து கொடுத்திருப்பார்.

பாடலின் முக்கிய விசேஷம், ஜெயலலிதாவின் அருமையான நடனம். இப்பாடலுக்கு பல காஸ்ட்யூம்களில் வந்து ஆடுவார். அதிலும் இடுப்பு, முழங்கால், பாதம் போன்ற் இடங்களில் சின்ன்ச்சின்ன முரசுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை அடித்துக்கொண்டே அவர் ஆடுவது இன்றைய நடிகையர் யாராலும் செய்ய முடியாத ஒன்று. நைட் எஃபெக்ட்டில் பாடல் அழகாகப்படமாக்கப்பட்டிருக்கும்.