எனக்கும் இந்த தேசிக் கடைகளுக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகாத ஒரு விஷயம் "தேங்காய்". எத்தனை முறை வாங்கினாலும் வீட்டிற்கு போய் உடைத்துப் பார்த்தால் கெட்டுப் போனதாய் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் தண்ணியாய் கரைந்தாலும், இன்னொரு முறை, இன்னொரு முறை என நானும் கஜினி போல முயன்றுகொண்டுதான் இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் Grated தேங்காயை விட கொப்பரைத் தேங்காய்தான் சிறப்பல்லவா! எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு தடவை நல்ல தேங்காய் கிடைத்திருக்கிறது. எப்படியென்றால், பொருட்களை விலைபோடும் போது, தேங்காய் இருந்த பாலிதீன் பை கீழே விழுந்து தேங்காய் இரண்டாய் பிளந்து விட்டது. கடைப்பெண் "வேறொன்று எடுத்து வாருங்கள். இது உடைந்து விட்டது!" எனச் சொல்லியும், நல்ல தேங்காய் என்பதால், அதையே பார்சல் பண்ணி விட்டேன் வீட்டுக்கு.