PDA

View Full Version : malaicharal - oru maan kutti



madhu
25th August 2012, 08:02 PM
http://farm5.staticflickr.com/4098/4856660040_590c9740c4_z.jpg

அப்பாடா.. என் சொர்க்கத்துக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்து விட்டேன்.

நேற்று அந்தச் செய்தி கிடைத்தபோது இருந்த மகிழ்ச்சியை விட இப்போது இன்னும் அதிகமாக இருந்தது. நேற்று மாலையே நண்பனின் அறைக்கு வந்தபோது இந்த ஒரு வாரமும் தினமும் என் மனதுக்குப் பிடித்த இந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

அட.. விஷயத்தைச் சொல்லாமல் வளவளக்கிறேன் என்கிறீர்களா ?

நாந்தாங்க சந்தர். என்னை பெற்று வளர்த்தவர்கள் நான் கல்லூரிப்படிப்பை முடிக்கும் வரை வாழ்ந்து விட்டு ஒரு விபத்தில் மறைந்து விட்டனர். சொந்தங்கள் இருந்தும் அவர்களிடமிருந்து தன்னலமற்ற அன்பு மட்டும் கிடைக்கவில்லை. அப்போது கோடையின் புழுக்கத்தில் வீசும் தென்றல் போல சில நண்பர்களின் உறவில் கிடைத்த அன்பால் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் இந்த சுரேந்திரன். ஒரு பெரிய இயக்குநரிடம் துணை இயக்குநராக இருப்பவன். ஏற்கனவே பணம் படைத்த குடும்பத்தில் பிறந்தவன். மேலும் அழகன். அதனால் அவன் செய்யும் வேலைக்கு ஏற்றபடி அழகான பெண்களுடன் சுற்றுவதில் வல்லவன். இந்த மலையின் மீது இருக்கும் சிறிய மலை வாசஸ்தலத்தில் சில கல்லூரிகள் இருந்ததால் அதிலும் அதில் பல அழகிகள் இருந்ததால் அவன் இந்த ஊரில் சொந்தமாக ஒரு சிறிய பிளாட்டை வாங்கியிருந்தான். அவன் படங்களுக்கு தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகைகளை (மட்டும்) தேர்ந்தெடுப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் சொல்லும் பெண்களை அவன் பாஸ்.. அதாங்க அந்த முன்னணி டைரக்டர் வேண்டாம் என்று சொன்னதே இல்லை. எனக்கு மனதில் தனிமை உணர்வு வரும்போது நான் அடிக்கடி இங்கு வந்து தங்குவேன்.

அதிலும் அருகேயிருந்த மலையின் மீது ஒரு தனியான, அழகான இடத்தை ஒரு முறை கண்டு பிடித்தேன். என்று முதல் எப்போது வந்தாலும் நான் அங்கே போகாமல் திரும்புவதில்லை. இப்போது எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு முன் ஒரு வாரமாவது இங்கே இருந்து தினமும் என் மனதை கவர்ந்த இடத்தில் அம்ர்ந்து இயற்கையுடன் ஒன்ற வேண்டும் என்று தோன்றியதால் வந்து விட்டேன்.

மலைக்கு மேலே போகும் பஸ்ஸில் ஏறி நடுவிலேயே இறங்கி நெட்டையாய் நிற்கும் ஊசியிலை மரங்களின் வழியாக நடந்து ஒரு பாறைச் சரிவில் பள்ளத்தில் இறங்கினால் என் சொர்க்கம் வரும். ஒரு சிறிய நீரோடை. அதன் கரையில் சில மரங்களும் மெத்தென்ற பசும்புல்லுமாய் அது ஒரு தனி உலகம். பச்சை வெல்வெட்டில் வண்ணக் கற்கள் சிதறிக்கிடப்பது போல புல்தரையில் சின்னச் சின்ன பூக்களின் கண்சிமிட்டல். வாகனங்கள் செல்லும் மலைச்சாலை அருகிலேயே ஓடைக்கு மேல் வளைந்து சென்றாலும் அங்கிருந்து இந்த இடம் தெரியாது. மரங்களால் மறைக்கப்பட்டதால் சத்தமும் கேட்காது. பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டு தலையை வருடும் மேகங்களையும், எங்கோ கத்தும் தொட்டில் குருவியின் கீச் சத்ததையும் கேட்டபடி இருந்தால் பசி, தாகம் கூட மனதில் நினைவுக்கு வராது.

இன்று வ்ந்தபோது லேசாக சாரல் அடித்துக் கொண்டு இருந்தது. ஜெர்க்கினை போர்த்திக் கொண்டு உட்கார்ந்தேன். மேகம் மூடி இருந்ததால் பள்ளத்தாக்கு கண்ணுக்கு தெரியவில்லை. நான் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு பின்னால் சரசரவென்று ஒரு சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை. ஒரு சின்னஞ்சிறு மான்குட்டி. லேசான தளர் நடையுடன் மரத்தின் பின்னாலிருந்து மெதுவக வெளியே வந்தது. அதன் மருண்ட கண்கள் என்னைப் பார்த்ததும் அதன் நடை நின்றது. நான் அசையாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது மீண்டும் மெல்ல நடந்து என் அருகில் வந்தது. நான் என் அருகில் இருந்த செழித்த பச்சைப் புல்லை கிள்ளி நீட்டினேன். அது யோசித்தபடி மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு பிறகு இன்னும் அருகில் நெருங்கி வாயால் புல்லைப் பற்றிக் கொண்டது.

அப்போது "ஹய்யா.. நீ இங்கேதான் வந்திருக்கியா ?" என்று ஒரு குரல் கேட்க மான்குட்டி ஒரு நொடி அப்படியே நின்று விட்டு பின் ஒரே தாவலாக துள்ளி குதித்து மரங்களின் பின்னே மறைந்து விட்டது. நான் குரல் வந்த வழியே பார்த்தேன். அங்கே ஒரு வனதேவதை நின்றது. பிரமிப்புடன் பார்த்தேன். ஓ... அது தேவதை அல்ல.. அழகான் மனிதப் பெண்தான்.

அவள் வெள்ளை நிறத்தில் கணுக்கால் வரை மூடிய ஸ்கர்ட்டும் பூக்கள் போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். தலைமுடியில் ஒரு க்ளிப் போட்டு பின்னால் கட்டியிருந்தாள். காது, கழுத்து, கைகள் எல்லாம் வெறுமே இருந்தன. நான் அவளையே பார்த்தபடி நிற்பதைக் கண்டு என் அருகே வந்தாள்.

"என்ன பிரமிச்சு நிக்கிறீங்க ?"

"இல்லே.. இறக்கையை காணுமேன்னு யோசிச்சேன்"

"இறக்கையா ? எதுக்கு ?"

"தேவதைக்கு எல்லாம் இறக்கை இருக்கும்னு சொல்லுவாங்க"

அவள் கலகலவென்று சிரித்தாள்.

"நீங்க என்னைப் பார்த்து பிரமிக்கிறது போலத்தான் நானும் உங்களைப் பார்த்து பிரமிச்சு போயிருக்கேன்"

"ஏன் ? எனக்கு தலையிலே ராட்சசன் போல கொம்பு காணவில்லையே என்றா ?"

"அச்சச்சோ.. அது இல்லீங்க. எப்படி அந்த மான்குட்டி உங்க கிட்டே பயமே இல்லாம வந்திச்சு ? நான் எத்தனையோ தடவை இது போல இலை எல்லாம் கொடுத்துப் பாத்திருக்கேன். ஆனா பயந்து ஓடிடும். பெரிய மானைப் பாக்கக் கூட முடியாது"

"ஒரு வேளை என்னை அதுக்குப் பிடிச்சிருக்கும். அதுதான்"

"உங்களை எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்"

நான் அவளைப் பார்த்தேன். குழந்தை போன்ற முகம். இளமையான பெண். கள்ளம் தெரியாத பார்வை.

"உன் பேர் என்ன ?"

"ம்ருகநயனி. வித்தியாசமா இருகேன்னு பாக்குறீங்களா ? என் அப்பா ஒரு பெங்காலி. அவருதான் இந்த பேரு வச்சாரு. அதுக்கு மான்விழின்னு அர்த்தம். ஆனா இங்கே எல்லோரும் மிருகம்னு கூப்பிடுவாங்கன்னு அம்மா நயனின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.அம்மா தமிழ்தான். அப்பா கவிதை எல்லாம் எழுதுவாரு. நான் பிறந்து கொஞ்ச நாளிலே புற்று நோய் வந்து இறந்துட்டாரு. அம்மா சினிமாவிலே துணை நடிகையா இருக்காங்க. நானும் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். அம்மா இப்போ எனக்கும் சான்ஸ் தேடிகிட்டு இருக்காங்க"

அவள் விடாமல் பேசிக் கொண்டே போனாள். நான் பேச மறந்து அவள் உதடுகளின் அசைவையும், முகத்தை சாய்த்து சட்டென்று நிமிரும்போது தெரியும் கண்ணின் மின்னலையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்த முகம் சினிமாவில் வந்தால் நிச்சயம் உலகத்தை மயக்கும் என்று தோன்றியது. ஆனால் அதே சமயம் இந்த கள்ளங்கபடமில்லாத இதயம் பாலில் இருந்து புளித்த கள்ளாக மாறிவிடும் என்றும் தோன்றியது.

"நீங்க என்ன சார் செய்யிறீங்க ?"

நான் சொன்னேன்.

"அப்போ இன்னும் ஒரு வாரம் தினமும் வருவீங்களா ?

"ஆமாம்"

"அப்போ சரி.. நாளைக்கு வரும்போது நாம சாப்பிட நெய்முறுக்கு கொண்டு வரேன்"

மீண்டும் அவள் பேச ஆரம்பித்து முடித்தபோது மரத்தின் நிழலில் சூரியன் மயங்கத் தொடங்கி இருந்தான்.

"உன்னைத் தேட மாட்டாங்களா ?"

"அம்மா ஷூட்டிங் போயிருக்காங்க. வீட்டுல வேற யாரும் இல்லையே சார்"

நான் எழுந்து நடந்தபோது அவளும் மான்குட்டி போல என் பின்னாலேயே வந்தாள்.

பஸ்ஸில் ஏறியபோது டாடா காட்டிவிட்டு திருப்பத்தில் அது திரும்பும் வரை அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். ஏனோ என் மனதில் இனம் புரியாத ஒரு உணர்ச்சி.

அறைக்கு வந்ததுமே சுரேன் வந்து விட்டான்.

"டேய் மச்சி.. என்னடா விஷயம் ? நீதான் சைவ சாமியாராச்சே . இன்னைக்கு ஒரு சூப்பர் ஃபிகர் சான்ஸ் கேட்டு வந்துச்சு. "

இனி நான் நிறுத்த சொன்னாலும் அவன் நிறுத்த மாட்டான் என்று தெரியும். அவன் உதவி டைரக்டர் என்பதால் அவனிடம் சான்ஸ் கேட்டு வரும் பெண்களை அவன் வசப்படுத்துவது அவனுக்கு சுலபம்..

"ஒரு மாசம் முன்னாலேயே பார்த்தேன் மச்சி. அவளைப் பத்தி விவரமா சொல்லவா ?" என்றான்.

நான் சிரித்துக் கொண்டே தலையணையை அவன் மேல் எறிய "டேய் சாமியாரே... நீ பாறையிலே உட்கார்ந்துகிட்டு கவிதை எழுத்த்தான் லாயக்கு" என்றான்.

அதிலிருந்து தினமும் நான் காலையிலேயே என் சொர்க்கத்துக்கு போவதும் நயனியுடன் பேசிப் பொழுதைக் கழிப்பதுமாகவே ஐந்து நாட்கள் நகர்ந்து போயின. நாளைக்கு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்தபோது எதையே இழப்பது போல மனதுக்குள் ஒரு சஞ்சலம். அன்று நயனியை கண்டிப்பாக சந்திப்பதாக சொல்லி இருந்தேன். அவளும் என்னிடம் ஒரு முக்கிய விஷய்ம் சொல்ல வேண்டும் என்று சொன்னாள். அந்த மான்குட்டி இன்னும் அங்கேயேதான் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் சொன்னாள்.

இந்த ஐந்து நாட்களில் நானும் நயனியும் மனதால் மிகவும் நெருங்கி விட்டோம். நான் ஒரு வேளை அவளைக் காதலிக்கிறேனோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஆறாம் நாள் காலையில் எழுந்தபோது சுரேந்திரன் என்னிடம் வேகமாக வந்தான்.

"மச்சி.. இன்னைக்கு மலைக்கு போகாதேடா "

"ஏன் ? என்ன விஷயம் ?"

"சிறுத்தை ஒண்ணு உலாவுதாம். அதுவும் நீ சுத்துவியே அந்த இடத்தில்தான். பேசாம இங்கேயே இரு"

என் மனதுக்குள் அந்த மான்குட்டி வந்து போனது. இதயம் உறைபனியாய் உறைந்து போனது.

"இல்லேடா.. நான் நிச்சயம் போகணும். உடனே வந்திடறேன்"

நான் கிளம்பி விட்டேன்

( தொடரும் )

Madhu Sree
25th August 2012, 08:02 PM
en karcheepu... :yes:

Madhu Sree
25th August 2012, 08:11 PM
enna tragedy endaaa :( no pls... :|
nallla poikittu irukku... mela enna aachu podunga... :redjump:

madhu
25th August 2012, 08:18 PM
( மான் குட்டி தொடர்ந்து ஓடுகிறது )


வழியெங்கும் பார்த்த மனிதர்களின் முகங்களில் இனம் தெரியாத பயத்தைக் கண்டேன். சிறிய ஊர் என்பதால் எல்லோருக்கும் சிறுத்தை பற்றி தெரிந்திருந்தது. பஸ்ஸில் ஏறியபோது அதிலிருந்த பயணிகளின் பேச்சும் அதைப் பற்றியே இருந்தது. வனத்துறையில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாக சொன்னார்கள்.

பஸ் மலையில் ஏற ஆரம்பித்தபோது சிலர் பயத்தால் ஜன்னல் ஷட்டர்களையும் மூடிக் கொண்டார்கள். எனக்குள் ஏனோ ஒரு பதற்றம் இருந்தாலும் தெளிவாகவும் இருந்தது. நான் இறங்க வேண்டிய இடம் வரும் முன் கண்டக்டர் என்னிடம் வந்து "சார்.. நீங்க இறங்குற இடத்துல இன்னைக்கு காட்டிலாகா ஆளுங்க இருக்காங்க. உங்களை இறங்க விட மாட்டாங்க." என்றார்.

யோசித்தபடி எழுந்து படிக்கு அருகில் வந்தவன் அடுத்த வளைவில் பஸ் சற்றே மெதுவாகத் திரும்பியபோது குதித்து இறங்கி விட்டேன். பஸ்ஸில் ஒருவர் கூட கவனிக்கவில்லை போலும். பஸ் என் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் நடக்க ஆரம்பித்தேன். அங்கங்கே மேகக்கூட்டங்கள் மரங்களின் நடுவாக புகை போல படர்ந்து வர சாலை ஓரப் புல்லின் ஈரம் பாண்டின் கீழ் முனையை நனைய வைத்தது. இன்னும் ஒரு வளைவுதான். அதோ நான் இறங்க வேண்டிய சரிவு.

மெதுவாக சரிவில் இறங்கி என் சொர்க்கத்துக்கு வந்தேன். எங்கும் ஒரு அமைதி. காற்றில் இலைகளின் சலசலப்பு சப்தம் மட்டுமே கேட்டது. உயர்ந்த மரங்கள் உராயும்போது எழும் கிர்க் கிர்க் என்ற சத்தம் பின்னணியாக ஒலித்தது. எங்கோ ஒரு குருவி கீச் கீச் என்று குரல் கொடுத்தது. பாறையின் அருகில் நயனியைக் காணவில்லை.

"நயனி.. நயனி"

காற்று மட்டுமே சிலுசிலுத்தது. மரங்கள் மௌன சாட்சியாக பார்த்தபடி இருந்தன. குருவியின் கீச் கீச் சத்தம் கூட இப்போது கேட்கவில்லை.

"தினமும் இத்தனை நேரம் வந்திருப்பாளே " என்று யோசித்தபடி சுற்றிச் சுற்றி நடந்தேன்.

"நேற்று கூட சொன்னேனே ? நாளைக்கு வரும்போது புடவை கட்டிக் கொண்டு வா என்று. ஏனோ அவளை அப்படிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் இனி எப்போது பார்ப்பேன்? அவளுடைய செல்போன் நம்பரையாவது கேட்டு வைத்திருக்கலாம். என்ன முட்டாள்தனம் ?"

ஓடைக் கரை ஓரம் ஈர மண்ணில் சில தடங்கள். புலியின் காலடிச் சுவடுகள் போலத் தோன்ற மனதில் பயத்துடன் அருகில் சென்றேன். ஒன்றும் புரியவில்லை. புல்தரையில் ந்சுங்கிக் கிடந்த புல்லும், அருகில் இருந்த கோடுகளும், ஈரமண்ணில் இருந்த சுவடுகளும் என்னைக் குழப்பின. இதெல்லாம் ஒரு வேளை அந்த சிறுத்தையோடு யாராவது போராடியதால் ஏற்பட்டதோ ? அது மான்குட்டியா அல்லது நயனியா ? பின்னாலிருந்து யாரோ நடந்து வரும் சலசலப்பு சத்தம் கேட்டது. திரும்பினேன்.

ஒரு வனத்துறை அதிகாரி கையில் துப்பாக்கியுடன் என் முன்னே வந்தார்.

"யார் சார் நீங்க ? இங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க ?"

நான் என்னைப் பற்றி கூறி விட்டு தினமும் இங்கு வருவதைச் சொன்னேன்.

"விஷயம் தெரியாதா சார். இங்கே ஒரு சிறுத்தை உலாவுது. நேத்து கிராமத்துல ஒரு குழந்தையைக் கடிச்சிட்டுது. நல்ல வேளையா கொழந்த பொழச்சிகிடிச்சு. அதைப் பிடிக்கத்தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம். இங்கே கிராமத்துக்காரங்களைத் தவிர யாரையும் அனுமதிக்கவில்லையே. நீங்க எப்படி வந்தீங்க ?"

நான் சொன்னதும் அவர் என்னைப் பார்த்து "சார் படிச்சவங்க நீங்களே இப்படி எல்லாம் நடந்துகிட்டா என்ன சொல்றது ? முதல்ல கிளம்புங்க. அந்த மான்குட்டி எங்கேயாவது ஒடியிருக்கும். இங்கே யாரையும் வர நாங்க அனுமதிக்க மாட்டோம். அதனால் நீங்க சொல்ற பொண்ணு எல்லாம் இங்கே வந்திருக்க சான்ஸ் இல்லே. நிங்க கிளம்புங்க" என்றார்.

மேலே எதுவும் பேச முடியாமல் திரும்பி அறைக்கு வந்து சேர்ந்தேன். சுரேன் மாலை நான்கு மணிக்குத்தான் வந்தான். வந்தவன் முகமெல்லாம் ஒரே ஆனந்தம்.

"மச்சி.. என்ன ஆச்சு ? சிறுத்தையா சிங்கமா ? எது வந்திச்சு?" என்றான்.

"என்ன விஷயம் ? ரொம்ப குஷியா இருக்கே போலிருக்கு ?"

"ஆமா சாமியாரே.. இன்னைக்கு எதிர்பாராத லக்கி பிரைஸ். ஒக்காரு மச்சி.. விவரமா சொல்றேன்" என்றபடி லுங்கியைக் கட்டிக்கொண்டு என் அருகில் வந்தான்.

"டேய் கண்ணா. இன்னைக்கு எனக்கு சுக்கிரதசைடா.. எங்க அடுத்த படத்துக்கு ஒரு சூப்பர் பொண்ணு கிடைச்சிருச்சு. நானே ஒரு படம் டைரக்ட் செய்யலாம்னு நெனச்சுகிட்டு இருந்தேன் இல்ல. அதுக்கும் அவதாண்டா ஹீரோயின்"

நான் விழித்தபடி "ஒழுங்கா சொல்லித் தொலை" என்றேன்.

"மச்சி.. நான் உன்னை மலைக்குப் போக வேணாம்னு சொல்லிட்டு இருந்தேனா ? அப்போதான் நினைவுக்கு வந்துச்சு. ஒரு அம்மா, நம்ம படத்துல எக்ஸ்டிரா வேஷம் கட்டுவாங்க. அவங்க தன் பெண்ணுக்கு சான்ஸ் கேட்டிருந்தாங்க. இன்னைக்கு சட்னு நெனப்பு வந்திச்சு. அந்தம்மா ஊரிலே இல்லை. வெளியூருக்கு ஷூட்டிங் போயிருக்காங்கன்னு சொன்னாங்க. அத்னாலே அந்தப் பொண்ணை மேலே ஹோட்டலுக்கு வர சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுவும் வந்திச்சு.. அய்யோ... மச்சான். சான்ஸே இல்லைடா. நல்ல அழகு.. நல்ல நடிப்புத் திறமை"

எனக்குள் எங்கோ ஒரு திரியில் நெருப்பு பற்றிக் கொண்டது.

மச்சி... சொல்லச் சொல்ல எனக்கு மூடு எகிறுதுடா.. அவளைப் பாக்க சின்னப் பொண்ணாட்டம் பேசுறா. ஆனா பயங்கர ஷ்ரூடு. கப்புனு புரிஞ்சுகிட்டு காம்ப்ரமைஸுக்கு வந்திட்டா. ம்ம்ம்.. இனிமேல் அவளை வச்சே இந்த இண்டஸ்டிரியை ஒரு ஆட்டு ஆட்டறேன் பாரு ", அவன் என்னைப் பார்த்துக் கண்ணடித்தபடியே நகர்ந்தான்.

"நயனி...நயனி." வார்த்தைகள் என் தொண்டைக்குக் கீழேயே இருந்தன.

என் கண்ணெதிரே நான் வரைந்த ஓவியம் தண்ணீரில் கரைந்து போயிருந்தது. அப்படியே படுத்துக் கொண்டேன். இருள் பரவியிருந்தது. என் கண்களில் தண்ணீரும் வற்றிப் போனது. பாலைவனம் போல வறண்ட கண்களில் தங்க மனமில்லாமல் தூக்கமும் போனது. நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து போனது. எப்போது தூங்கினேன் ? எனக்கே தெரியாது.

காலையில்...

"சாமியாரே.. விஷயம் தெரியுமா ? அந்த சிறுத்தை மாட்டிகிச்சாம். வயிறு பெரிசா இருந்துச்சாம். மான்குட்டியோ, நாய்குட்டியோ எதை முழுங்கிச்சோ தெரியல" என்றபடி சுரேன் என்னை எழுப்பினான். நான் குளித்து விட்டு அவசரமாக கிளம்பினேன்.

சுரேன் நான் கிளம்புவதைப் பார்த்து "என்னடா.. மறுபடி பாறைக்கா ? இன்னைக்கு ராத்திரி ஊருக்குக் கிளம்பணுமில்லே.. பாறையைப் பாத்து பல்லை இளிச்சிகிட்டு நிக்காம சீக்கிரம் திரும்பி வந்துடு" என்றான்.

மனமெல்லாம் ஏதோ பாறாங்கல்லைச் சுமப்பது போல கனக்க நான் பஸ்ஸில் இருந்து இறங்கி சரிவில் இறங்கினேன். அந்த மான்குட்டியின் கண்கள் நினைவுக்கு வந்தன. அதைப் போலவே நயனியின் முகமும் மூடி நகர்ந்த மேகக்கூட்டத்தில் தெரிந்தது.

மேகம் கலைய நான் ஓடைக்கரை பாறைக்கு வந்து சேர்ந்தேன். உட்கார்ந்தபடி ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"சார்......."

திரும்பினேன்.

நயனி... இளநீல நிறப் புடவையில் இன்று காதில் ஒற்றை முத்தும், கழுத்தில் மெல்லிய முத்து மாலையுமாக கடல் கன்னி போல வந்தாள்.

"நேத்து வரலை இல்லையா ? வந்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். புலி ஒண்ணு வந்திருச்சுன்னு சொன்னாங்க. எனக்கு அந்த மான்குட்டி நெனப்புதான். என்னை வீட்டை விட்டு போகக்கூடாதுன்னு அம்மா போன் செஞ்சு சொல்லிட்டாங்க. அவங்கே ஷூட்டிங் போன இடத்துல தங்கிட்டு இன்னைக்கு காலையிலேதான் வந்தாங்க. நல்ல வேளை. புலி மாட்டிகிச்சாம்"

எனக்குப் புரியவில்லை.

"நீ நேத்து வேறு எங்கேயுமே போகலையா ?"

"ஓ.. அதைக் கேக்கறீங்களா ? நேத்து ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் கூப்பிட்டிருந்தாரு. ஆனா நான் போகலை. எனக்கு ஏனோ இப்போ எல்லாம் நடிக்க இஷடமே இல்லை. என் அம்மாவும் என் இஷடம் என்னவோ அதுவே சரின்னு சொல்லிட்டாங்க. அத்னாலே எனக்கு பதிலா எனக்குத் தெரிஞ்ச இன்னொரு பொண்ணை போக சொல்லிட்டேன், அதுக்கு சான்ஸ் கிடைச்சுதா இல்லையான்னு தெரியலை."

நான் பிரமித்து உட்கார்ந்திருந்தேன். அப்படியானால் சுரேன் சொன்னது நயனியைப் பற்றி இல்லையா ?

"இன்னைக்கு அம்மா கிட்டேயும் சொல்லிட்டேன். சினிமாவுல நடிக்க எங்கம்மா ஒரே ஒரு தடவை போனாப் போகுதுன்னு அனுமதிச்சாங்க. அதுவும் அவசரமா பணம் தேவைப்பட்டது அதனால்தான். என் கூடவே இருந்து என்னை யாரும் தொடக்கூட விடாம அம்மா பாத்துகிட்டாங்க. ஆனா இதெல்லாம் எப்போதும் நடக்காது. சினிமா அவ்வளவு நல்லது இல்லை அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. அதனாலே இன்னைக்கு அம்மா ஒண்ணு சொன்னாங்க"

நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

"எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடப்போறாங்களாம்" என்றபடி கலகல்வென்று சிரித்தாள்.

"சொல்லுங்க சார். என்னை மாதிரி சொந்த பந்தம் எதுவுமில்லாத ஏழைப் பெண்ணை யார் சார் கட்டிக்குவாங்க"

"ஏன் ! நான் இல்லையா ?"

ஒரு நொடி மரங்கள் ஆடாமல் நின்றன. மேகங்களும் அசையவில்லை. காற்று கூட மௌனமானது.

அவள் இமைகள் படபடக்க என்னைப் பார்த்தாள்.

"சார்... நீங்க"

"நயனி.. உனக்கு என்னைப் பிடிச்ச்சிருக்கா ? என்னை கல்யாணம் செஞ்சுக்க பிரியமா ?"

அவள் உதடுகள் லேசாக திறந்து துடித்தபடி இருந்தது.

:சொல்லு நயனி"

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"சொல்லு.. உன் அம்மா ஒத்துக்குவாங்க இல்லே"

அவள் நிமிர்ந்து பார்த்து விட்டு "இது போல மாப்பிள்ளையை வேணாம்னு சொல்ல எங்கம்மா என்னைப் போல அசடு இல்லே"

"அப்போ நீ வேணாம்னு சொல்லுறியா?"

"அய்யய்யோ... நான் அப்படி சொல்லலை.. எனக்கு நீங்க கிடைக்க வேணுமின்னு உங்களையும் மான்குட்டியையும் பார்த்த அன்னைக்கே சாமிகிட்டே வேண்டிகிட்டேன்"

நான் அவள அருகே போய் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் என் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

பின்னால் ஏதோ ஒரு சலசலப்பு.

திரும்பியபோது புதரின் பின்னே இருந்து மான்குட்டி மெதுவாக வெளியே வந்தது. எங்களை பார்த்தபடி அப்படியே நின்றது. சில நொடிகளில் மேலும் சலசலப்பு கேட்க நாலைந்து பெரிய மான்க்ள் புதரிலிருந்து வந்தன. எங்களைப் பார்த்ததும் அப்படியே நின்றன. அதில் ஒரு மான் திடீரென்று ஒரு துள்ளல் துள்ளி ஓட ஆரம்பித்தது. எல்லா மான்களும் அதைத் தொடர்ந்து ஓட மான்குட்டி நின்று எங்களைத் திரும்பிப் பார்த்தது.

பிறகு துள்ளி அந்த மான்கூட்டத்தின் பின்னேயே ஓடி மறைந்தது.

"நயனி... உன் அம்மாவைப் பார்க்க போகலாம் வா"

கைகளைக் கோர்த்தபடி நாங்கள் சரிவில் ஏறியபோது மேகங்கள் மீண்டும் பனிச்சாரலை தூவி எங்களை வாழ்த்தின.

( முற்றும் )

Madhu Sree
25th August 2012, 08:39 PM
Good narattion as always madhupappaa... :D

ummm... edhaachum thiruppam varumnu edhirpaarthen... konjam storyaa polish seidhaal(just the second part) innum minukkume :D good job :clap:

Madhu Sree
25th August 2012, 08:40 PM
initially pic potu aarambikkaradhu enaku pudichirukku... :cool2:

pavalamani pragasam
25th August 2012, 09:02 PM
மான்குட்டி புலி உவமானம் வெளிப்படையாய் எதிர்பார்த்த விஷயம்; நல்லபடியாய் மான்குட்டியை புலியிடமிருந்து காப்பாற்றியது எதிர்பாராத சந்தோஷ திருப்பம்!சபாஷ்!

Madhu Sree
25th August 2012, 09:08 PM
மான்குட்டி புலி உவமானம் வெளிப்படையாய் எதிர்பார்த்த விஷயம்; நல்லபடியாய் மான்குட்டியை புலியிடமிருந்து காப்பாற்றியது எதிர்பாராத சந்தோஷ திருப்பம்!சபாஷ்!

yes, naankooda irandhidumnu nenichen :D

chinnakkannan
25th August 2012, 11:29 PM
//மனமெல்லாம் ஏதோ பாறாங்கல்லைச் சுமப்பது போல கனக்க நான் பஸ்ஸில் இருந்து இறங்கி சரிவில் இறங்கினேன். அந்த மான்குட்டியின் கண்கள் நினைவுக்கு வந்தன. அதைப் போலவே நயனியின் முகமும் மூடி நகர்ந்த மேகக்கூட்டத்தில் தெரிந்தது. //

இதற்கு அப்புறம் உள்ள வரிகளை வெட்டி விட்டிருக்கலாம்.. தெரிந்த உவமை என்றாலும் கூட, முடிவு இது தான் என ஊகித்திருந்தாலும் கூட, கதைக்குக்கொஞ்கம்கனம் கூடியிருக்கும்.. என்பது என் கருத்து..அதுவும் அட அட.. என்னவொரு சரள நடையில் அழகாகக் கொண்டு போனீர்கள்.

என்ன மலை..என்ன ரிசார்ட் என்றெல்லாம் சொல்லாமல் சிறப்பாகவே எழுதியிருக்கிறீர்கள்...

நல்லா எழுதறீங்க மது..அண்ணா.. இன்னும் எழுதுங்கள்..

madhu
26th August 2012, 04:17 AM
:ty: சிக்கா..

ஹய்யோ.. சோக முடிவு வேணாம்னு நினைச்சு இப்படி எழுதினா ( மயிலம்மா ஒரு பாறாங்கல்லோட வெயிட் செஞ்சுகிட்டு இருந்ததா கேள்வி :shaking: ) நீங்க இப்படி சொல்லலாமா ?
எல்லா கதைக்குமே முடிவுல டிவிஸ்ட் எதுக்கு வைக்கணும் ? :think:

உங்க கதையைத் தட்டி விடுங்க !!! :redjump:

Shakthiprabha
27th August 2012, 11:22 AM
phew............ symbolic aa niraiya sollirukeenga..........enga indha maan kuttiyum (nayani) puli kitta maatidimo nnu ore dhil dhil...........happada.........alls well that ends well............

haiya........santhoshama irukku :redjump: ...maan kuttiya pola vaasaragaL uLLamum thuLLuthu :bluejump:

adutha kathai eppo :huh:

madhu
27th August 2012, 11:27 AM
நன்றியோ நன்றி பவர் :bow:

ஒரு சூப்பர் ஸ்டோரியோடு சீக்கிரமே வர்ரேன்.. ( ஹூம்.. நான் தான் சூப்பர்னு சொல்லிக்கணும் :banghead: )

:notthatway: இல்லாட்டி எப்படி மத்தவங்க ரசிப்பாங்க ?

நெசமாவே ஒரு நல்ல கதை எழுத டிரை செஞ்சா என்ன ? :think:

Shakthiprabha
27th August 2012, 11:29 AM
ezhuthunga madhu.........neenga ezhuthara kathaigaL ellame nalla kathai thaan..... :bow: