PDA

View Full Version : அந்த நாள் ஞாபகம்...RAGHAVENDRA
24th March 2014, 12:54 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ANGfw_zpsc296d8cc.jpg

"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே... பூக்கூடை கொண்டு வந்து வாரி இறைப்போம்... ஆடியென்ஸுக்கு சாக்லேட் குடுப்போம்.."

இப்படியெல்லாம் நீங்க செஞ்சிருப்பீங்க.. இல்லை பாத்திருப்பீங்க.. ரசிச்சிருப்பீங்க... இதையெல்லாம் மத்தவங்களோட ஷேர் பண்ணிக்கிட்டா தானே மனசு ஜாலியா ரெக்கை கட்டி பறக்கும்... இதையெல்லாம் நண்பர்கள் கிட்டே சாயங்காலம் சொல்லியிருப்பீங்க.. ராத்திரி தூக்கம் வராம இதையே நெனச்சு சந்தோஷப் பட்டுக்கிட்டே மனசு அசை போட்டுக்கிட்டு தூக்கம் வந்தது தெரியாமல் தூங்கியிருப்பீங்க..

இதையெல்லாம் மத்தவங்களும் அனுபவிக்க வேண்டாமா...

வாங்க... நடிகர் திலகத்தின் படத்தை ரசிகர்களோட தியேட்டரில் ஜாலியா படம் பார்த்தது அந்தக் காலத்தில் சுவையான அனுபவம் என்றால் அதை மற்றவர்களோட பகிரந்து கொள்ளும் போது அது இன்னும் சூப்பராச்சே...

அதையெல்லாம் இங்கே எழுதுவோம்..

அது மட்டுமா... அவரோட அரசியல்லேயும் உங்களில் சிலர் பங்கெடுத்திருக்கலாம்.. அது பழைய காங்கிரஸாயிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரஸாயிருந்தாலும் சரி, த.மு.மு. வா இருந்தாலும் சரி.. எப்படியெல்லாம் அவருக்காக உழைச்சிருக்கீங்க... எப்படியெல்லாம் அவர் நினைப்பு உங்களை ஆட்டிப் படைக்குது...

இதையெல்லாம் இங்கே ஷேர் பண்ணிக்குவோமே..

மெயின் திரியில் படங்களோட அனாலிஸிஸ்... ம்ம்.. அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும்.. தனிக்காட்டு ராஜா.. அதை யாரும் அசைக்கமுடியாது... என்னைக்குமே அது முதலிடம் தானே...

இங்கே நாம நம்ம அனுபவங்களையும் நினைவுகளையும் அசை போடுவோமே...

என்ன ... நான் சொல்றது...

RAGHAVENDRA
24th March 2014, 01:12 AM
உங்களை சொல்லிட்டு நான் சும்மாயிருக்க முடியுமா...

ஆரம்பிச்சுடுவோமே..

http://img688.imageshack.us/img688/9646/bharathavilas.jpg

திரைப்படப் பாடலும் தேசிய கீதமாகலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும் பாடல் இந்திய நாடு என் வீடு. இந்த திரைத் தேசிய கீதம் இடம் பெற்ற பாரத விலாஸ், கப்பலோட்டிய தமிழன், ஒரு வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைக்காவியங்களுக்கு சற்றும் குறையாத புனிதத் தன்மை வாயந்ததாகும். சொல்லப் போனால் முந்தையவை விடுதலை வேள்வியின் பிரதிபிம்பங்கள் என்றால் பின்னது அவற்றின் காவல் தேவதை எனலாம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும் நடிகர் திலகத்தின் படங்கள் பாடம் சொல்கின்றன. அவற்றில் நாம் பிறந்த மண், பாரத விலாஸ், புண்ணிய பூமி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

அப்படிப் பட்ட பாரத விலாஸ் வெளியாகி 41 ஆண்டுகள் நிறைவுற்று 42வது ஆண்டில் நுழையும் நாள் மார்ச் 24, 2014. இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 24, 1973 அன்று வெளியான போது நாடு இருந்த நிலைமைக்கும் இப்படம் பொருந்தியது. மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. தாய்மார்களின் அளப்பரிய ஆதரவோடு வெற்றி நடைபோட்டது. இன்றைக்கும் இப்படம் இன்றைய சமுதாயத்திற்கு பொருந்தி வருவதைப் பார்க்கும் போது இந்த படைப்பாளிகளின் தீர்க்கதரிசனம் புலனாகிறது.

மலேசியா வாசுதேவன் மெல்லிசை மன்னரின் இசையில் முதலில் பாடிய பாடல் இந்திய நாடு என் வீடு.

முன்னணி நட்சத்திரங்கள், கேரளத்தின் மது, களி தெலுங்கின் அக்கினேனி நாகேஸ்வரராவ், வட இந்தியாவின் சஞ்ஜீவ் குமார் என தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் இவர்களெல்லாம் பங்கேற்ற சிறந்த தேச பக்திச் சித்திரம் பாரத விலாஸ்.

நூறு நாட்களுக்கு மேல் வெற்றி நடை போட்டு வசூலிலும் வாரிக்குவித்த உன்னதத் திரைக்காவியம் பாரத விலாஸ்.

http://youtu.be/kG2Get7rZuU

வழக்கம் போல ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வெளியான படம் பாரத விலாஸ். அடுத்த வாரம் ராஜ ராஜ சோழன் ரிலீஸுக்கு மும்முரமாக எல்லோரும் ஆவலோடு காத்திருக்க ஒரு வாரம் முன்னாலேயே வெளியாகிறது என்கிற அறிவிப்பு கடுப்பேற்றியது. அவ்வளவு பெரிய படத்திற்கு வரவேற்பு தரத் தயாராகும் போது இதனுடைய வெளியீடு நம்மில் சிலருக்கு [பலருக்கு ?] கோபம் வந்தது உண்மை. அந்த கோபத்தோடு படம் பார்க்கப் போனோம். இதற்குள் அரசல் புரசலாக ராஜ ராஜ சோழனைப் பற்றிய விமர்சனங்களும் நம் நண்பர்கள் சிலர் மூலமாக தெரிய வந்து விட்டது. நம்முடைய வீக்னெஸ் எல்லாம் தலைவருக்கு நல்லா தெரியுமே.. இந்த பிள்ளைங்கெல்லாம் வெளியே எவ்வளவு கோபமாயிருந்தாலும் உள்ளே நம்மளைப் பார்த்தா அவ்வளவு தான் னு நல்லா தெரிஞ்சில்லே வெச்சிருக்கார்... சக்கை போடு பாட்டு வந்த வுடனே அத்தனை பேரும் FLAT... அதுவும் வந்தே மாதரம் என்று சொல்லிக் கொண்டே நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு துடிப்பார் பாருங்கள்.. அவ்வளவு தான்... தலைவா.... என்று ஏகோபித்த குரல் எல்லா திசையிலும்... [ நாங்கள்லாம் அப்பவே அப்படி] பாட்டு முடியும் முன் வரை சஞ்சீவ் குமார், மது, நாகேஸ்வர ராவைப் பற்றி விவாதித்த அத்தனை உதடுகளும் கப் சிப்... அதுவும் பசங்கள்லாம் வளர்ந்த நிலையில் ஒருத்தர் வந்தார் பாருங்க... தியேட்டரே ரெண்டாயிடுச்சி... வேறெ யாரு.. வயசான ரோல்லே தலைவரு தான்..

ஆரம்பத்திலேருந்தே கோபாலுக்கு ஒரு தனி வரவேற்பு தான்.. அது இன்னைக்கு வரைக்கும் குறைய மாட்டேங்குது.. பேசாம நம்ம பேரை கோபால்னு வீட்லே வெச்சிருந்திருக்கலாமோ..

எனிவே... படம் முடிஞ்சி வெளியே வரும் போது பசங்க முகத்தைப் பாக்கணுமே... சேப்பாக் ஸ்டேடியத்திலே டே நைட் மேட்சிலே வீசும் ஒளியை விட பிரகாசம்னா பாருங்களேன்.

மறக்க முடியுமா...

நீங்களும் தான் எழுதுங்களேன்...

Murali Srinivas
26th March 2014, 01:31 AM
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய Forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று. ரசிகர்கள் குறிப்பாக பழைய ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மார்ச் 24-ந் தேதி (1973) பாரத விலாஸ் படத்திலிருந்து ஆரம்பித்திருப்பது சிறப்பு பாரத விலாஸ் படத்திற்கு வருவதற்கு முன் வேறு ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் என் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றி எழுதினேன். அதை மீள் பதிவாக மீண்டும் பதிவிட எண்ணம் அந்த மீள் பதிவு தொடர் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு வருகிறேன். இதனிடையில் மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2009-ல் எழுதியது.

அந்த நாள் ஞாபகம்

இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது

நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.

அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது [சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.

இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.

(தொடரும்)

அன்புடன்

gkrishna
26th March 2014, 03:02 PM
அன்புள்ள ராகவேந்தர் மற்றும் முரளி சார்
முதல் நாள் நம்மவர் பட அனுபவம் பல நினைவலைகளை தோற்றுவித்தது. நமது பாரதவிலாச் படம் நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த நினவு கண் முன் காட்சி அளிகிறது மார்ச் 24 சென்ட்ரல் திரை அரங்கில் பாரத விலாஸ்
மார்ச் 31 நெல்லை பூர்ணகல திரை அரங்கில் ராஜா ராஜா சோழன் சினிமாஸ் ஸ்கோப் இரண்டும் முதல் நாள் இரண்டாவது காட்சியில் பார்த்தது அப்போது எல்லாம் தினசரி 3 காட்சிகள் சனி மற்றும் சண்டே நாட்களில் தான் காலை காட்சி.
அன்று காலை காட்சி பார்த்த அனைவரும் தலைவரின் "சக்கை போடு" பாடலை பற்றி மற்றும் "இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு எல்லா ஊரும் என் ஊரு எல்லா மக்களும் என் மக்கள்" பாடலைபற்றி பேசி கொண்டே வெளி வந்தனர் அதில் ஒரு ரசிகர் அந்த பாடலில் பெருந்தலைவர் படத்தை காண்பித்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறியது இன்னும் பசுமையாக நினிவுக்கு உள்ளது . மேலும இந்த ் படம ் நன்றாக உள்ளது இந்த படத்தின் வெற்றியினால் சோழன் பாதிகப்பட கூடாது என்றும் பேசி கொண்டே சென்றனர் மார்ச் 25 சண்டே ஒரு நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு சேலம் செல்ல வேண்டி இருந்தது.
மார்ச் 24 நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்து விட்டு இரவு பஸ் பிடித்து சேலம் சென்று மறு நாள் இரவு காட்சி பாரத விலாஸ் திரை படத்தை சேலம் ஜெயாவில் பார்த்தேன். திருமணத்திற்கு முன் தினம் இரவு தாம்பூல கவர் போதுவது என்ப்து முன்னாட்களில் வழக்கம் இப்போது எல்லாம் கோன்றக்ட்தான் அந்த வேலையை முடித்துவிட்டு கல்யாண மண்டபத்தில் இருந்து பஸ் பிடித்து சேலம் ஜெயா திரை அரங்கு சென்று பாரத விலாஸ் படம் பார்த்தது எல்லோரும் நடிகர் திலகத்தின் நடிப்பை பாராட்டியது மறக்க முடியாத அனுபவம்

RAGHAVENDRA
27th March 2014, 11:42 PM
http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/11/Thanga-Surangam-Releasing-Soon.jpg?resize=390%2C354

ஹா...ஹா...ஹா... நான் ஜேம்ஸ்பாண்டாம்... இந்த மாபெரும் வெற்றிப் படத்தைப் பற்றிய நடிகர் திலகத்தின் விமர்சனம் இது. தலைவா... ஜேம்ஸ் பாண்ட் மட்டுமல்ல உலகத்தின் எந்த கமர்ஷியல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, க்ளாஸிகல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, எந்த எபிக் ஹீரோவானாலும் சரி, எந்த ஹிஸ்டாரிகல் ஹீரோவானாலும் சரி, எந்த ஹல்லூசினேடிவ் ஹீரோவானாலும் சரி... எந்த பாத்திரமானாலும் அதற்கு ஜீவன் தர உங்களைத் தவிர வேறு யார் உளர்.
மிஸ்டர் எக்ஸுடன் கை குலுக்கும் காட்சியில் தாங்கள் காட்டும் ஸ்டைல் தமிழ் சினிமாவில் அதுவரையில் யாரும் பார்த்திராதது, அதற்குப் பிறகு யாரும் செய்ய முடியாதது.
திரையரங்குகளில் கடைசிக் காட்சி வரை அரங்கு நிறைந்து ஓடி தங்களுடைய அடுத்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாபெரும் வெற்றிக் காவியமான தங்க சுரங்கம் திரைப்படத்தை மறக்க முடியுமா..
பள்ளியில் முழுத் தேர்வு நடைபெற்ற நிலையிலும் பரீட்சையைப் பற்றிய கவலை கொள்ளாமல், சாந்தியில் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலையே அதிகம் கொண்டு, அரங்கில் குளிரக் குளிர குளிர் சாதனத்தையும் மீறு தங்கள் பெயரைப் பார்த்த வுடன் குதித்த குதியில் உடம்பெல்லாம் வியர்த்ததை மறக்க முடியுமா.
1969 மார்ச் 28 .... தங்க சுரங்கம் வெளியாகி இன்று 2014 மார்ச் 28ம் நாளுடன் 45 ஆண்டுகள் முடிகின்றன.
அது சரி முதல் நாள் முதல் காட்சியில் அதிகம் கைதட்டல் வாங்கிய பாடல் எது எனத் தெரிய வேண்டுமா ...
இதோ பாடலையே பாருங்களேன் ...

http://youtu.be/TojrKH2x7lo

RAGHAVENDRA
27th March 2014, 11:49 PM
முரளி சார்
முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை மிகச் சிறப்பாக எழுதி அசத்தி விட்டீர்கள்.. எழுத்தாற்றல் தங்களுக்கு ஏராளம்.. நினைவாற்றலோ தாராளம்...
தங்களுடைய ரசிகர் பட்டாளத்தின் எல்லைக் கோட்டை நாங்களெல்லாம் அழித்து விட்டோம்... அதற்கு பௌண்டரி கிடையாது. அந்தக் காலத்தில் 70களில் சென்னை மெரினா கிரௌண்டில் லீக் மேட்ச் நடக்கும். ஐஓபி ரமேஷ் என ஒரு கிரிக்கெட்டர் ஆடுவார். காடா என செல்லமாக அழைக்கப் படும் அதிரடி ஆட்டக்காரர். மெரினா கிரௌண்டில் அவர் ஆடுகிறார் என்றால் மைதான நிர்வாகி குறைந்த பட்சம் ஒரு டஜன் பந்துகளாவது ஸ்டாக் வைத்திருப்பார். காரணம் ரமேஷின் சிக்ஸர்கள் கேலரியைத் தாண்டி பின்னால் இருக்கும் கால்வாயில் போய் விழும். அது போல் தங்களுடைய ரசிகர் பட்டாளத்திற்கு கோடு போட்டால் அதைத் தாண்டி பல தூரம் விரிவாக்கும் திறன் தங்களுடைய எழுத்துக்கு உள்ளது.

தொடருங்கள்.

RAGHAVENDRA
27th March 2014, 11:50 PM
டியர் கிருஷ்ணா ஜி
முதல் நாள் முதல் காட்சி தங்களைக் கவர்ந்திழுத்துள்ளது மிகவும் மன மகிழ்ச்சியைத் தருகிறது. இதைப் போல் தாங்களும் நம் மற்ற நண்பர்களும் பல படங்களுக்கு சுவையான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
31st March 2014, 08:49 AM
நமது மய்யத்தில் சமீபத்தில் இணைந்த மதுரை சந்திரசேகர் அவர்களின் பேட்டி தலைவன் சிவாஜி இணைய தளத்தின் சிவாஜி குரல் இணைய இதழில் வெளிவந்துள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு

https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.thalaivansivaji.com%2F wp-content%2Fuploads%2F2014%2F03%2Fmarch-30.pdf&docid=09b4e4baa22ef1bb02adf603e29f0413&a=bi&pagenumber=2&w=844

நமது நண்பர் சந்திரசேகர் அவர்கள் இது பற்றி இன்னும் விரிவாக தன் நினைவகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Murali Srinivas
31st March 2014, 07:56 PM
மீள் பதிவு தொடர்

அந்த நாள் ஞாபகம்

அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்

தெற்கத்தி கள்ளனடா

தென் மதுரை பாண்டியனடா

தென்னாட்டு சிங்கம்டா

சிவாஜி கணேசனடா !

நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.

அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.

இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.

நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.

(தொடரும்)

அன்புடன்

gkrishna
2nd April 2014, 11:11 AM
முரளி சார்
நம்நாடு மற்றும் சிவந்தமன்
நினவு அலைகள் சூப்பர்
நெல்லை பார்வதியில் நம்நாடு 7த ரிலீஸ்
நெல்லை சென்ட்ரலில் சிவந்தமன் ரிலீஸ்
சிவந்த மண் முதல் ஷோ முடிந்த உடன் அப்போது மாற்று
முகாம் நண்பர்கள் வந்து வாயில் blade வைத்து ஊதி நம் ரசிகர்கள் இருவர் முகத்தில் பாய்ந்து ரதகளறி ஆனது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ஆக இருந்த போஸ் என்பவர் பெயரே சிவந்த மண் போஸ் என்று தான் பெயர் அப்போது கல்லூரி படித்த ு
கொண்டு இருந்தார்
அவரை போலீஸ் பிடித்து கொண்டு சென்று விட்டது பாலம் போலீஸ் ஸ்டேஷன் என்று இப்போது பெயர் அப்போது நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் கிடையாது அதனால் அதன் பெயர் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷன் ஸ்தாபன காங்கிரஸ் தலிவர் ஒருவர் கூட வரவில்லை ஜாமீன் எடுக்க. அப்போது என் வயது 9 முடிந்து 10 ஆரம்பம் சிறுவர்கள நாங்கள் (10 முதல் 16 வரை உள்ளவர்கள்) எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் நினிவில் உள்ளது அந்த ப்ளடி பார்ட்டி இருவரும் பின்னாளில் அ தி முக அரம்பிந்தவுடன் தி மு கவில் இருந்து பிரியாமல் தி மு க வில் தங்கி விட்டனர்

Gopal.s
3rd April 2014, 11:28 AM
முரளி,

அருமை.தொடருங்கள். உங்களுடன் மதுரையில் சிறு வயதை கழித்த உணர்வை தரும் இதம்.(உங்களோடு தற்போது நட்பாக இருப்பது இதமா என்பது வேறு விஷயம்)

Murali Srinivas
5th April 2014, 01:16 AM
கிருஷ்ணாஜி,

உங்கள் அனுபவங்களை எளிமையாக ஆனால் அதே நேரத்தில் சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

கோபால் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!

அந்த நாள் ஞாபகம்

இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.

தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.

என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.

அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.

அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூசினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.

இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.

இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
9th April 2014, 12:01 AM
அந்த நாள் ஞாபகம் iv

மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.

படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி ev பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.

அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.

1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.

இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.

(தொடரும்)

அன்புடன்

chinnakkannan
9th April 2014, 06:45 PM
முரளி சார் நீங்கள் சொன்ன ஒவ்வொரு தியேட்டரிலும் (ஸ்ரீதேவி வீட்டுக்குப் பக்கம் உள்ள தியேட்டர்- கொல்லைப் புற வாசலிலிருந்து எட்டிப் பார்த்தால் தியேட்டர் தெரியும்.. ) நீங்கள் சொன்ன வருடங்களிலேயே அந்தந்த தியேட்டருக்கு வீட்டில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்..ரொம்ப குட்டிப் பையனாய் இருந்தேன் அப்போது!! நியூசினிமா ராமன் எத்தனை ராமனடி.. நினைவிருக்கிறது..எ.வ.. கூட்ட நெரிசலில் வீட்டில் கூட்டிச் சென்றார்கள் - தீபாவளிக்கு மறு நாள் என நினைவு..சவாலே சமாளியும் ஸ்ரீதேவி தான்!!(ஏழு வயதுப்பையன் துறு துறுவென ஒல்லிஒல்லியாய் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அது நான் தான் :))

Murali Srinivas
10th April 2014, 09:47 PM
சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>

அன்புடன்

Murali Srinivas
12th April 2014, 12:15 AM
அந்த நாள் ஞாபகம் - V

மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.

அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.

ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.

சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].

முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.

10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].

அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது

முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.

(தொடரும்)

அன்புடன்

chinnakkannan
13th April 2014, 10:21 AM
இரண்டு நாட்கள் ஏனெனத் தெரியவில்லை..இந்தப் பக்கமும், ப்ரைவேட் மெஸேஜூம் ஓபனே ஆகவில்லை..எனில் இன்று திறக்கமுடிந்ததும் எழுதுகிறேன்..தாமதமான பதிலுக்கு மன்னிக்க முரளி சார்..

கி.தெ..மேலத் தெரு.. ஒரு வேதபாடசாலை இருந்தது..அதற்கு எதிர் வீடு..வே.பா மறைந்து அங்கு ஒரு டாக்டர்வீடும்,ப்ரஸ்ஸீம் தோன்றிப் பலகாலம் ஆகிவிட்டன(82)..படித்தது மங்கையர்க்கரசி, செய்ண்ட்மேரிஸ்..மதுரையை முழுமையாக விட்டது 87ன் இறுதியில்..


சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>

அன்புடன்

chinnakkannan
15th April 2014, 02:07 PM
எந்தப் படமுமே ஓப்பனிங்க் ஷோ எனப் போனதுகிடையாது..வீட்டில் அட்லீஸ்ட் ஒரு வாரமாவது எடுக்கும்..அம்மா அக்காக்கள் சூழத்தான் செல்வது வழக்கம்..வெகு சின்னவயது ராஜா வந்த சமயத்தில்.. ரிக்*ஷாவோ குதிரை வண்டியோ கட்டிக் கொண்டு போய் ஒரு வார நாளில் (சனி ஞாயிறென்றால் கூட்டம் அம்முமே) பார்த்தோம் என நினைக்கிறேன்..இருந்தாலும் என் நல்ல மனசுக்கு உதாரணமாக அந்த வயதிலேயே- படத்தில் பத்மா கன்னா இறந்து போவது வேதனையாக இருந்தது..! :)

பின் பாடல்கள்.. நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்று வீட்டுக்கு வந்தவுடன் பாடியது - பாரேன் இந்தக் கற்பூர புத்தியெல்லாம் பாடத்துல காட்டு என அக்காவோ அம்மாவோ சொன்னது நினைவில்..:) ம்ம் அடுத்த இஷ்யூ எப்போ எழுதுவீங்க முரளிசார்?

Murali Srinivas
15th April 2014, 10:41 PM
சின்ன கண்ணன்,

தகவல்களுக்கு நன்றி. 70-களின் இறுதியில் நீங்கள் அதே தெருவில்தான் இருந்தீர்கள் என சொல்லும் போது நீங்கள் என்னையும் நான் உங்களையும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது, யாரென்று தெரியாமலே. காரணம் அந்த ஒர்க் ஷாப் ரோட்டில் எனக்கு நிறைய நண்பர்கள். தினந்தோறும் அங்கே வருவேன்.

இதோ நீங்கள் கேட்ட அடுத்த பகுதி.

அன்புடன்

Murali Srinivas
15th April 2014, 10:51 PM
அந்த நாள் ஞாபகம்

அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.

விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.

நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்

ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.

அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.

இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.

இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.

படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

Russellmai
18th April 2014, 10:42 PM
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாக இருந்த துறையூரில் வசித்து வந்த நேரம்.திருச்சி நகரைச் சுற்றிக் காண்பிக்க என்னை என் அப்பா 1965இல் அழைத்துச்
சென்றிருந்தார்.துறையூரில் அந்நாட்களில் முதல் வெளியீட்டில் படங்கள்
வெளியாவதில்லை.திருச்சிக்கு நான் முதல் முதலாகச் சென்றிருந்த அந்த
நேரத்தில் திருச்சி ஜூபிடர் திரையரங்கில் ஆண்டவன் கட்டளையும்,ராஜா
திரையரங்கில் பச்சை விளக்கும் ஓடிக் கொண்டிருந்தன.அப்பொழுதுதான்
முதன்முறையாக ஆண்டவன் கட்டளைப் படத்தினை முதல் வெளியீட்டில்
கண்டேன்.அந்த பசுமையான நினைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி.இதுவும் அந்த ஆண்டவன் கட்டளையோ என்னவோ.

Murali Srinivas
19th April 2014, 12:03 AM
அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.

நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.

ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.

இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.

1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.

மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும்.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

(தொடரும்)

அன்புடன்

Russellmai
19th April 2014, 07:55 PM
தற்பொழுது சன்லைப் தொலைகாட்சியில் நடிகர் திலகம் நடித்த
வாணி ராணி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது.

JamesFague
19th April 2014, 09:11 PM
Mr Murali Sir,

No words to explain your memory. Fantastic narration.

Regards

Gopal.s
21st April 2014, 07:17 AM
முரளி,
சான்ஸே இல்லை. ஒரு சுவையான period கதை படிக்கும் இன்பம்.உங்களுடன் நான் ரசிப்பது ஆற்றோட்டமான நடையில் நீங்கள் வைக்கும் சுற்று பின்னல்கள்.அரசியல்,கலை,சதி,காலகட்டம் சார்ந்த தகவல்கள் எல்லாம் கலந்தது. இப்படி ஒரு சுவாரஸ்யமான எழுத்தை படித்து நாளாயிற்று.(ஏனோ கார்த்திக் சார்,வாசு தலை காட்டுவதே இல்லை)நீங்கள் எழுதுவது 100% உண்மை என்பதால் ,தொகுத்து சரித்திரமாக்கியே விடலாம்.
இப்படிக்கு,
உங்கள் பரம ரசிகன்.
பின்னே இல்லையா?எனக்கெதிராக நீங்கள் பண்ணிய ஆங்கில நாட்டாமையையே ரசித்தவன் இல்லையா?

Murali Srinivas
22nd April 2014, 11:45 PM
அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி

அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்

ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].

இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.

நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.

இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.

நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.

மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.

மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.

நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.

இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.

அன்புடன்

JamesFague
23rd April 2014, 10:19 PM
Mr Murali Sir,

Pls do write each and every movie with your style.

Watched the movie during my childhood days with mother at Chennai Plaza
Theatre. Not only this each and every NT movie were seen with my mother
at Shanthi,Pilot,Chitra,Wellington and othern theatres near Mount Road.

Murali Srinivas
25th April 2014, 11:33 PM
அந்த நாள் ஞாபகம்

ஞான ஒளி படம் தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றி. சென்னையில் ஐந்து அரங்குகளில் திரையிடப்பட்டும் மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக வந்த செய்தி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிகுள்ளாக்கியது. நாடகமாக நடத்தப்பட்டு படமானதால் அதை பார்ப்பதற்கு சபாக்கள் சார்பில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. அது மட்டுமல்ல அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது மற்றொரு சாதனையாகும்.

நல்ல நேரம் திரைப்படமும் நன்றாகவே ஓடியது.

அடுத்த படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குனர் பி.மாதவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவிஸ், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி படங்களுக்கு பிறகு தயாரித்த படம். கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்பது தெரியும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நடிகர் திலகத்தின் இரண்டு வித கெட் அப்கள் [குடுமி வைத்த கெட் அப் மற்றும் ஹிப்பி ஸ்டைல் தலை முடி வைத்த கெட் அப்] ஆவலை தூண்டியிருந்தாலும் ஆவேசம் இல்லை. அதற்கு ஒரு காரணம் அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆவலை தூண்டியிருந்த படங்கள் தர்மம் எங்கே, வசந்த மாளிகை, என்னைப் போல் ஒருவன், ராஜ ராஜ சோழன், பாலாஜியின் புதிய படம் [நீதி என்று பெயர் வைக்கப்படவில்லை], என்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் [ரோஜாவின் ராஜா] என்பவை. மேற் சொன்னவை எல்லாமே கலர் படங்கள் என்பது கூட பட்டிக்காடா பட்டணமா என்ற கருப்பு வெள்ளை படத்திற்கு எதிர்பார்ப்பை குறைப்பதற்கு ஒரு காரணமானது.

இதற்கிடையே ராஜா, ஞான ஒளி விடுத்த சவாலையும் சமாளித்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நூறு நாட்களை கடந்தது. ஞான ஒளி 50 நாட்களை கடந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் மதுரை விநியோகஸ்தரான பாரத் மூவிஸ் கார்பரஷேன், சென்ட்ரலில் படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு மூன்று வார டெர்ம்ஸ் போட்டுக் கொண்டார்கள். இது என்னவென்றால் அன்றைய சூழலில் நிலவி வந்த பங்கு விகிதாசார முறை. அதாவது முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தருக்கு வசூலின் பங்கில் அதிகம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு வசூலாவதில் சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்று அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்பதால் மூன்று வாரம் மட்டுமே போடப்பட்டது.

1972 -ம் வருடம் மே 6 அன்று ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. இதை எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

அன்புடன்

அன்றைய நாட்களின் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான போது நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் இந்த அந்த நாள் ஞாபகம் தொடர் பதிவிற்கு பாராட்டு தெரிவித்த வாசு மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி!

HARISH2619
26th April 2014, 01:16 PM
திரு முரளி சார்,
நீங்கள் எழுதும் தொடர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான அந்த நாள் ஞாபகம் தொடரை படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.மிகவும் ரசித்து படித்து அனுபவித்துகொண்டிருக்கிறேன் .நன்றி பல கோடி .

Murali Srinivas
1st May 2014, 01:03 AM
அந்த நாள் ஞாபகம்

சம்மர் லீவ் என்பதால் படம் பார்க்க போவது பெரிய விஷயமில்லை. போகலாம் என்று முடிவு எடுத்தவுடன் டிக்கெட் வாங்க முயற்சி எடுத்தோம்.மன்ற டிக்கெட்கள் கிடைக்கவில்லை. படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் கூட அவரின் மாபெரும் ரசிகர் கூட்டம் படத்தை வரவேற்க தயாராகி விட்டது என்பது புரிந்தது. சரி எப்படியும் வாங்கி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முதல் நாள் இரவு வரை முயற்சி எடுத்தோம். ஆனால் பலன் இல்லை. சரி எப்படியும் மறு நாள் காலை தியேட்டர் பக்கம் போய் ட்ரை பண்ணலாம் என்று முடிவானது.

6ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கே சென்ட்ரல் சினிமா வாசலில் ஆஜர். ஆனால் அங்கேயும் ஏமாற்றம். படம் பார்க்க வந்திருந்த எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்து விட்டோம். பலன் பூஜ்யம். டைம் போய்க் கொண்டிருக்கிறது. Q -வில் நின்று டிக்கெட் வாங்குவதெல்லாம் நடக்காத விஷயம். காரணம் சரியான கூட்டம். ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள். தியேட்டரின் பின் பக்க வாசல் பக்கம் போய் பார்க்கலாம் என்று அங்கே போனோம். அப்போதுதான் மன்ற டிக்கெட்கள் வைத்திருந்தவர்களை உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம். உள்ளே போனாலும் டிக்கெட் இல்லை. ஆபிஸ் ரூம், கவுன்ட்டர் என்று எங்கே கேட்டாலும் டிக்கெட் இல்லை என்ற ஒரே பதில். மட்டுமல்ல, டிக்கெட் இல்லாதவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க என்ற சத்தமும் கேட்கிறது. நாங்கள் அப்படி இப்படி என்று சுத்திக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை என்பதால் ராகு கால நேரம் முடிந்தவுடன் [9 -10.30 ] படம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியாக உள்ளே இருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்டால் அருகில் போனோம். அங்கே என் கசினுக்கு தெரிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமும் விஷயத்தை சொல்லி புலம்ப, எத்தனை டிக்கெட் வேணும் என்று அவர் கேட்டாரே பார்க்கலாம். எங்களுக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு என்று சொன்னவுடன் உடனே இரண்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு புதையல் கிடைத்த சந்தோஷம். [குறிப்பிட வேண்டிய விஷயம் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர்].

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

(தொடரும்)

நன்றி செந்தில்!

mr_karthik
1st May 2014, 06:56 PM
Re-Submission of post written in October 18, 2011

1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....

தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).

தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)

தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).

எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.

ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.

இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.

அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.

ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.

மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்காரனுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.

இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.

எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.

Murali Srinivas
1st May 2014, 11:42 PM
கோடை வெயில் கொளுத்தும் போது குளிர் மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அப்படி குளிர் மழையாய் மீண்டும் மீள் பதிவோடு அதுவும் எங்கள் பாபுவோடு மீண்டும் வந்த எங்கள் அருமை நண்பர் கார்த்திக் அவர்களே! வருக! வருக! உங்கள் எழுத்துக்களை அள்ளி தருக!

அன்புடன்

mr_karthik
2nd May 2014, 04:33 PM
வாஞ்சையுடன் வரவேற்ற அன்பு சகோதரர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு,

அடுத்த மீள்பதிவு.....

ஆண்டவன் கட்டளை

முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.

மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?. 'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.

முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.

'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க, 'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.

நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.

'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.

ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.

ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.

அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".

என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை"..

mr_karthik
2nd May 2014, 04:47 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (3)

நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'

1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.

1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்

உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா

ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).

அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.

1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.

ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).

தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.

இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.

வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).

பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).

கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.

அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.

டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.

RAGHAVENDRA
2nd May 2014, 08:44 PM
கார்த்திக்,
தங்கள் பதிவு மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. பார்த்த ஞாபகம் இல்லையோ என்பது தலைவர் நமக்கெல்லாம் அளித்த மிகப் பெரிய Tagline ஆகவே நான் நினைக்கிறேன். அந்த நாள் ஞாபகம் என்பதற்கும் பார்த்த ஞாபகம் என்பதற்கும் இடையே இருக்கும் வேற்றுமையை இத்திரி மிகச் சிறப்பாக காட்டுகிறது என்பதற்கு முரளி சாருடைய பதிவுகளும் தங்களுடைய பதிவுகளும் சான்றாகும். அந்த நாள் ஞாபகம் என கூறும் போது ஒரு மனிதனின் வயது முதிர்ச்சியை எடுத்துரைப்பாதக ஒலிக்கிறது. ஆனால் பார்த்த ஞாபகம் என்பது வயதையோ காலத்தையோ பருவத்தையோ தொடாமல் நினைவுகளை மட்டும் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

தங்களிருவருக்கும் நினைவிருக்கும் அளவிற்கு திரையரங்க நிகழ்வுகள் எனக்கு இல்லை என நான் உணர்கிறேன். ஆனால் தங்கள் எழுத்துக்களுக்கு உள்ள வலிமையினால் அங்கே நாங்களும் இருப்பது போல உணர்கிறோம்.

இன்னும் தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

chinnakkannan
2nd May 2014, 08:56 PM
கார்த்திக் சார்.. வாங்க வாங்க ... சிக்கலாரே சுகமா இருக்கீயளா..என்ன ரொம்ப நாளா காங்கலை..நம்ம ஊர்ப் பக்கமும் வரலாமில்லை.. பரவால்லை.. நீங்க எந்த ஊர்ல எழுதினாலும் பார்க்க வருவோம்ல..அடிக்கடி வாங்க..வந்து தாங்க..உங்கள் உணர்வுகளை..

mr_karthik
3rd May 2014, 11:31 AM
அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ராகவேந்தர் சார் அவர்களின் விளக்கம் மிகவும் ஏற்புடையது.

சின்னக்கண்ணன் சார், சென்ற ஆண்டு நவம்பருக்குப்பின் (சரியாக சொன்னால் ஐட்டம் விஜயஸ்ரீயின் பதிவுக்குப்பின்) இப்போதுதான் திரியில் நுழைந்திருப்பதால், அதன்பின் வந்த பதிவுகள் அனைத்தையும் படித்து வருகிறேன். முடித்ததும் மெயின் திரியில் நிச்சயம் பதிவிடுவேன். சில முக்கிய தலைப்புகளுக்கு தனித்திரி துவங்கியதை நானும் வரவேற்கிறேன். (கோபால் சார் மன்னிக்க).

இனி முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (4)

'நீதி' நினைவுகள்

ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.

1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).

இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.

வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.

நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).

கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.

பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.

முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).

அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதாடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.

காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.

படம் வெளியானது 1972 ஆச்சே.

mr_karthik
3rd May 2014, 11:44 AM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (5)

'ராஜபார்ட் ரங்கதுரை'

நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)

தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.

1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).

ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.

அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).

ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.

மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).

ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.

போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.

ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.

அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.

பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.

படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.

அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)

பாடல் காட்சிகளில் மட்டுமல்லாது வசனக்காட்சிகளிலும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்கள், கைதட்டல்கள். நடிகர்திலகத்தின் மற்றைய படங்கள் போலல்லாது இதில் பொடிவைத்த வசனங்கள் அதிகம். அவை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக்கொண்டு சென்றன.

குறிப்பாக சொன்னால், ராமதாஸிடம் "இது பனங்காட்டு நரி, உன் சலசலப்புக்கு அஞ்சுமா?"

கொடிகாத்த குமரன் நாடகத்தில் போலீஸாரிடம், "கூடிய சீக்கிரமே கோட்டையிலே எங்கள் மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப்பறக்கத்தான் போகிறது. அப்போது இதே கைகள் எங்களுக்கும் வெண்சாமரம் வீசத்தான் போகின்றன".

ஆர்மோனியத்தை அடகு வாங்க மறுக்கும் அடகுக்காரர் சொல்லும் வசனம் "உன்னை கோடி ரூபாய்க்கு மதிக்கிறேன்யா, எதுக்கு? உன்கிட்ட இருக்கிற நடிப்புக்கு"

இப்படி படம் நெடுக நிறைய இடங்கள். பாடல்களில் கண்ணதாசனும், வசனங்களில் பாலமுருகனும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டனர். ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இப்படியொரு படத்தை எடுத்ததற்கு குகநாதன் காலம் முழுக்க பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.

இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.

JamesFague
3rd May 2014, 09:29 PM
Mr Sindhanur Karthik,

Warm welcome after a long gap and your memories of watching NT's movies taking us to
those wonderful days. Pls do contribute regularly.

Regards

mr_karthik
5th May 2014, 12:50 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (6)

'ஜஸ்டிஸ் கோபிநாத்'

1978-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களில் (தமிழ் 7, மலையாளம் 1) சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வெளிவந்தது 'தியாகம்' ஒரு படம் மட்டுமே. ஜெனரல் சக்ரவர்த்தி சாந்தி, மகாராணி, அபிராமியிலும், தச்சோளி அம்பு சாந்தியில் மட்டும் ரிலீஸ் ஆயின. மற்ற படங்கள் மற்ற தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. பட்டியல் போட்டால் தெளிவாகும். (1977 தீபாவளியன்று வெளியான 'அண்ணன் ஒரு கோயில்' மார்ச் 3 அன்று சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 114 நாட்களைக்கடந்த நிலையில், அதே அரங்குகளில் 'தியாகம்' திரையிடப்பட்டது).

அந்தமான் காதலி - லியோ/மிட்லண்ட், மகாராணி, ராக்ஸி
தியாகம் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
என்னைப்போல் ஒருவன் - தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா
புண்ணிய பூமி - சித்ரா, பிராட்வே, உமா
ஜெனரல் சக்ரவர்த்தி - சாந்தி, மகாராணி, அபிராமி
தச்சோளி அம்பு (மலையாளம்) - சாந்தி
பைலட் பிரேம்நாத் - அலங்கார், மகாராணி, ஈகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, பால அபிராமி, லிபர்ட்டி

இவற்றில் அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத் ஆகிய நான்கும் 100 நாட்களைக்கடந்து ஓடின. என்னைப்போல் ஒருவன் 10 வாரங்களும், மற்றவை 50 நாட்களும் ஓடின. தியாகம் சாந்தியிலும், புவனேஸ்வரியிலும் 104 நாட்களில் மாற்றப்பட, கிரௌனில் தொடர்ந்து ஓடியதும், அங்கே வெள்ளி விழாவைக்கடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு ஒரு வாரம் ஓடிய நிலையில் 111 நாட்களில் வேறு படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஏமாற்றினர்.

ஆனால், மதுரை சிந்தாமணியில் தியாகம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளிவிழாப்படமாக அமைந்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது. (முரளி சாருக்கும் மதுரை ரசிகர்களுக்கும் நன்றி). ஜஸ்டிஸுக்கு வருவோம்...

அக்டோபர் 26 அன்று வெளியான பைலட் பிரேம்நாத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை பேப்பரைப் பார்க்கும் வரை பாரகன் தவிர மற்ற தியேட்டர்கள் முடிவாகாமலே இருந்தது. காலை தினத்தந்தியைப் பார்த்ததும்தான் சென்னையில் நான்கு தியேட்டர்களில் வெளியாவதாக விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஆச்சரியம், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த 'லிபர்ட்டி' தியேட்டரும் இடம் பெற்றிருந்ததுதான்.

ஆச்சரியத்துக்குக் காரணம் இருந்தது. லிபர்ட்டி தியேட்டரில் ஆரம்ப காலத்தில் புதுப்படங்கள் வெளியாகியிருக்கும் போலும். ஆனால் பல ஆண்டுகளாக புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல், பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தன. அந்த தியேட்டரில் ஜஸ்டிஸ் கோபிநாத் ரிலீஸாகிறதென்பது ரசிகர்களுக்கு அதிசயமாக இருந்தது. (இதற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதில் 'ஒருதலை ராகம்' திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி, லிபர்ட்டி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற விஷயமும் பின்னர் நடந்தது).

1971-க்கு முன்னர் நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, எங்க மாமா, குலமா குணமா போன்ற படங்கள் லிபர்ட்டியில் ரிலீஸாகின. ஆனால் அதன்பின்னர் நான்காவது ஏரியா தியேட்டர் என்றால் கிருஷ்ணவேணி, ராம், கமலா, நூர்ஜகான் என்றுதான் படங்கள் வெளியாயின.

ஜஸ்டிஸுக்குப்பின்னர், நடிகர்திலகத்தின் கவரிமான், நான் வாழ வைப்பேன் படங்களும் லிபர்ட்டியில் ரிலீஸானது

பேப்பர் பார்த்ததும் மண்ணடியிலிருந்த மளிகைக்கடையிலிருந்து தி.நகர் நண்பர் வீரராகவனுக்கு போன் செய்து விவரம் சொல்ல (அப்போது லோக்கல் கால் 15 பைசா) அவனும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், முதல்நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு லிபர்ட்டிதான் சரியான தியேட்டர், மற்றவைகளில் முதல்நாள் டிக்கட் கிடைக்காது என்று சொல்லி, என்னை கோடம்பாக்கம் வரச்சொல்ல, பீச் ஸ்டேஷனிலிருந்து புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் விரைந்தேன். சைக்கிளில் வந்த வீரராகவன் ஸ்டேஷனில் காத்திருக்க, இருவரும் லிபர்ட்டிக்கு விரைந்தோம். அப்போதுதான் ருசிகர சம்பவம் நடந்தது.

அந்த நேரத்திலும் (காலை 8 மணிக்கு) தியேட்டர் கேட் முன்னால் சுமாராக கூட்டம் கூடியிருந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தைப்பார்த்த தியேட்டர் சிப்பந்திகள் இருவருக்கு ஆச்சரியம். "எதுக்குய்யா எல்லாரும் வந்திருக்கீங்க?" என்று கேட்க, பலர் கோரஸாக "புதுப்படத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ண வந்திருக்கோம்" என்று சொன்னதும்...
"என்னது? புதுப்படமா? இங்கே புதுப்படமெல்லாம் போடறதில்லைங்க. நீங்க தியேட்டர் தப்பா வந்துட்டீங்க. போங்க... போங்க" என்று விரட்டினர். "இல்லேப்பா, பேப்பர்ல பார்த்துட்டுதாம்பா வந்திருக்கோம்" என்று (சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல) சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் வேடிக்கை "அப்படியா? அப்போ பேப்பர்காரங்க தப்பா போட்டிருப்பாங்க" என்று சொன்னார்களே தவிர கேட்டைத் திறக்கவில்லை.

"இது ஏதுடா வம்பா போச்சு, பேசாம வேறு தியேட்டருக்குப்போயிடலாம் போலிருக்கே. போயும் போயும் இந்த தியேட்டரை புக் பண்ணியிருக்காங்க" என்று ரசிகர்கள் முனகியபடி நிற்க (இத்தனைக்கும் நடிகர்திலகமும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் முதல்படம்), அப்போதுதான் தியேட்டர் மேனேஜர் பைக்கில் வந்தார். அவருக்கு மட்டும் சிறிதாக கேட்டை திறந்து விட்ட சிப்பந்தி, "சார், நம்ம தியேட்டர்ல புதுப்படம் ரிலீஸாகப்போறதாக எல்லோரும் தப்பாக வந்து நிற்கிறாங்க" என்று சொல்ல,

"இல்லேப்பா ஜஸ்டிஸ் கோபிநாத் படம் நம்ம தியேட்டர்லதான் ரிலீஸாகுது. நேத்துராத்திரிதான் நம்ம தியேட்டர் கன்பர்ம் ஆச்சு. அதுனாலதான் இன்னும் போஸ்ட்டர்கள் வரலை. நீ மெயின் கேட்டையும் கவுண்ட்டர் கேட்டையும் திறந்து எல்லாரையும் உள்ள விடு" என்று சொல்லிவிட்டு உள்ளே போக, எல்லோரும் சரியான நகைச்சுவை கிடைத்து போல 'ஓ'வென்று கூச்சலிட்டு சிரித்தனர். தியேட்டர் சிப்பந்திகள் முகத்தில் அசடு வழிந்தது. அவ்வளவு சீக்கிரம் போயும் முதல்நாள் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது. மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து ஆறு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். இந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.

என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஒருமுறை மாலைக்காட்சி பார்த்தபின் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை இன்றுவரை மறுமுறை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலமுறைகள் பார்க்க முயன்றும், வேறு சில தடங்கல்கள் வந்து இடையூறு செய்து பார்க்கமுடியாமல் போனது. வீடியோ கேஸட்டிலும் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் படத்தின் கதை சரியாக நினைவில்லை. ஆனால் படம் நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்தின் ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், ரஜினிகாந்த்தின் ஜோடியாக சுமித்ராவும் நடித்திருந்தனர். சி.ஐ.டி.சகுந்தலா ஏதோ கிராமத்துப்பெண் ரோலில் ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார். Heron ராமசாமிதான் பிரதான வில்லன். "நானா சொன்னேன் தீர்ப்பு" பாடல் T.M.S. இன் கணீர்க் குரலில் அட்டகாசமாகவே இருந்தது. இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைல் செம கலக்கல். வயதான ரோலில் வரும் போது நடிகர் திலகத்தின் அந்த குறுந்தாடி அவருக்கு கன கச்சிதம். அந்த குறுந்தாடி அவர் மேல் ஒரு கம்பீரமான மரியாதையை ஏற்படுத்தும்.

படத்தில் நடிகர்திலகம் மற்றும் ரஜினியை விட தேங்காய் சீனிவாசனுக்கு அதிக சீன்களில் வரும் வாய்ப்பு. அவருக்கு ஒரு பாட்டு கூட இருந்தது. தேங்காய் ஸ்ரீனிவாசன், அவர் ஜோடியாக வரும் அபர்ணா காட்சிகளில் கொஞ்சம் கத்தரி வைத்து கதையிலும், காட்சி அமைப்புகளிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நல்ல வெற்றி கண்டிருக்கும். ரஜினிக்கும் சுமித்ராவுக்குமான ஒரு டூயட் பாட்டு "நமது காதல் என்றும் என்றும் மாறாதது" வாகினி ஸ்டுடியோ புல்வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. சுமித்ரா ரோஸ்கலர் பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணுவார். அந்தப்பாடலை மட்டும் சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்ததால் நினைவிருக்கிறது.

இப்போது மீண்டும் 'ஜஸ்டிஸ் கோபிநாத்' முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.

Gopal.s
6th May 2014, 08:55 AM
எங்களுக்கு பார்த்த ஞாபகம் அற்று போகும் அளவு திரியில் அவ்வப்போது அந்தர்த்யானம் ஆகி விடும் மாயாவியே? மாய்ந்து மாய்ந்து நாங்கள் எவ்வளவு எழுதினாலும்,நீ வரும் போது ,திரிக்கு வரும் உற்சாகம்,களை தனிதான்.எனக்கே மனசு துள்ளி,உடனே முரளி சாருக்கு நாலு missed call போட்டு,என்ன ஏது என்று பதற வைத்தேன்.

எங்களை விட்டு எங்கும் ஓடாதே. எங்களுடன் இரு. நாங்கள் கண்ணால் காண முடியாத திரியின் மாய கடவுளாய்.

mr_karthik
6th May 2014, 01:33 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (7)

“கவரிமான்” (06.04.1979) .

நடிகர்திலகத்துக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதுவரை தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட்டு, அப்போது கொடிநாட்டத்துவங்கியிருந்த புதிய தலைமுறையினருடன் நடிகர்திலகம் இணைந்த முதல் படம். இசைஞானி இளையராஜாவுடன் மூன்றாவது படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சுவின் கதை வசனம், பாபுவின் ஒளிப்பதிவு என முற்றிலும் புதிய கூட்டணி அமைந்த படம். ஆச்சாரமாகவும் கௌரவமாகவும் வாழும் ஒரு மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நாகரிக மோகம் கொண்ட ஒரு மனைவியால் / மகளால் ஏற்படும் சீரழிவை மிக அற்புதமாக சொன்ன படம்.

1979 ஏப்ரல் துவக்கம், ஜனவரியில் வெளியாகியிருந்த திரிசூலம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மகத்தான காலகட்டத்தில், திரிசூலம் அனைத்து அரங்குகளிலும் 71-வது நாளாக வெற்றி நடை... இல்லையில்லை.. வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏப்ரல் 6 அன்று வெளியானது கவரிமான் என்ற அற்புத திரைக்காவியம்.

சென்னையில் மிட்லண்ட், பிராட்வே, உமா, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 6 காலை சாந்தியில் அகில இந்திய சிவாஜி மன்றத்துக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதற்காக இரண்டு நாட்கள் முன்பாகவே எங்கள் மன்ற தலைவர் பார்த்தசாரதி மூலம் டிக்கட்டுகளை வாங்கி விட்டோம். அதற்கு முதல் நாளிரவு 12 மணி வரை மிட்லண்ட் தியேட்டரில் அலங்காரங்கள் நடப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம. எங்கள் மன்றத்தின் சார்பில் வழக்கம்போல தலைவரின் கட் அவுட்டுக்கு ராட்சத காகித மாலை ஏற்பாடு செய்திருந்தோம். வடசென்னை மிண்ட் (Seven Wells) ஏரியாவில் காகித மாலைகள் செய்யும் ஒரு குழுவினரிடம் ஆர்டர் கொடுத்திருந்ததை இரவு 9 மணிக்கு நானும் எங்கள் மன்ற நண்பர்கள் கோவை சேது, மந்தவெளி ஸ்ரீதர் முவரும் ஆட்டோவில் சென்று வாங்கி வந்ததும் மற்ற நண்பர்கள் மேலே ஏறி அதனைபபொருத்தும் வேலையில் ஈடுபட்டனர். மற்ற மன்றங்களின் அலங்காரங்களும் விமரிசையாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. தியேட்டர் ஊழியர்களும் ஒத்துழைத்தனர்.

மறுநாள் காலை 8 மணிக்கே சிறப்புக்காட்சிக்காக சாந்தியில் கூடி விட்டோம். அங்கங்கே சிறுசிறு வட்டங்களாக ரசிகர்கள் கூடி நின்று தமிழகமெங்கும் திரிசூலத்தின் அபார ஓட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டும், வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்தித்தாள்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் பரவ விட்டுக்கொண்டு இருந்தனர். சென்னை மாரீஸ் ஹோட்டலில் பணி செய்த நண்பர் சந்திரசேகர், திருச்சி தினத்தந்தி பதிப்புகளை வரவழைத்து அங்கு சுழற்சி முறையில் வலம் வரச் செய்து கொண்டிருந்தார். திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம், மாயவரம், பகுதிகளில் திரிசூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தசெய்தி மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

சாந்தியில் ஒன்பது மணிக்கு ஸ்பெஷல் ஷோ துவங்கியது. ஆரம்பமே மிக வித்தியாசமான படமாக இருந்தது. யேசுதாஸின் கர்னாடக பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. பாத்திரங்களின் அறிமுகம் சற்று குழப்பமாக இருந்தபோதிலும் அந்த டைனிங் டேபிள் காட்சி சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. பூப்போலே பாடலுக்கு தலைவர் ஸ்டைலுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது. ரசிகர்மன்ற ஷோவாச்சே. அதனால் காட்சிக்கு காட்சி கைதட்டல். பூப்போலே பாடலுக்கு பிரமீளாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு எடுத்ததால் சற்று உறுத்தியது. (நடிகர்திலகத்தின் படத்துக்கு கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிரமீளா பிஸியா என்ன)

ரவிச்சந்திரன் வரும் காட்சிகள் சைலன்ட்டாக ஓடின. ரசிகர்கள் ரொம்பப்பேர் அந்த ரோலில் ரவிச்சந்திரனை விரும்பவில்லை. டெல்லி போன தலைவர் பயணம் ரத்தாகி வீட்டுக்கு வர, பஸ்ஸர் ஒலிக்கும் காட்சியிலேயே கைதட்டல் துவங்கி விட்டது. வேலைக்காரியின் சமாளிப்பை ஏற்று வேறு பக்கம் செல்ல இருந்தவர், மாடியில் தன அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்தே தலையைத் திருப்பிப் பார்க்கும் இடத்தில் மீண்டும் பலத்த கைதட்டல். அப்போது ஆரம்பித்த ஆரவாரம், அவர் தன மனைவியை அந்நியனுடன் காணும் கோலம் கண்டு துடித்து, செய்வதறியாது தவித்து இறுதியில் பாட்டிலால் மனைவியின் தலையில் அடிக்கும் வரை ஆரவாரம் அடங்கவில்லை. படத்தின் ஹைலைட்டே அந்த இடம்தானே.
(ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த இக்காட்சி பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வியப்படைவார்)

படம்பார்த்த அந்த தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாயிருப்பதாகவே சொன்னார்கள். ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லாது அன்றைய மாலைக் காட்சிக்கும் மிட்லண்ட் அரங்கில் ரிசர்வ் பண்ணியிருந்தோம். வழக்கம்போல நான்கு மணிக்கே தியேட்டரில் கூடி விட்டோம். எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் ரோட்டை அடைத்து நின்றிருந்தது. ஐந்து மணி சுமாருக்கு இயக்குனர் எஸ்.பி.முததுராமன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் வந்து, படம் துவங்கும்வரை தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர்திலகத்துடன் பணியாற்றிய பெருமை அவர்கள் பேச்சில் எதிரொலித்தது. தான் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனபின்னர் நடிகர்திலகத்துடன் முதல் படம் இது எனக்குறிப்பிட்ட பாபு, தில்லானா மோகனாம்பாளில் கே.எஸ்.பிரசாத்தின் உதவியாளராக நடிகர்திலகத்துடன் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்தார். தன்னுடைய பிஸ்கட் கலர் ‘பியட்’ காரைத் தானே ஓட்டிவந்த விஜயகுமார், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்து இயக்குனரோடும் ரசிகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.

தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். (தியேட்டர் உள்ளே மேட்னி ஷோ இன்னும் முடியவில்லை என்பதால் உள்ளே போக முடியவில்லை). சற்று நேரத்தில் (மாஸ்ட்டர்) சேகரும் வந்தார். ரோஸ்கலர் புல்ஷர்ட்டும் கருப்பு பேண்ட்டும் அணிந்து மோட்டார் பைக்கில் வந்து இறங்கியவரை ரசிகர்கள் சூழ்ந்து, அவரது சிறப்பான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். (படத்தில் ஸ்ரீதேவியின் ஜோடி, மற்றும் இரண்டாவது வில்லன்). முதல் எபிசோட்டில் மனைவியே ஒரு அயோக்கியனுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்யும் சூழல் என்பதால் அதில் மனைவி கொல்லப்படுகிறாள். அயோக்கியன் தப்பிவிடுகிறான். ஆனால் இரண்டாவதில் மகளின் சம்மதமின்றி கற்பழிக்க முயற்சிக்கும் சூழலில் அயோக்கிய காதலன் கொல்லப்படுகிறான். சேகருக்கு இது வித்தியாசமான ரோல். நன்றாக செய்திருந்தார். அவரும் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். நடிகர்திலகத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்', சிவாஜி அங்கிள்' என்று குறிப்பிட்டார். (பாவம், மிகச்சிறிய வயதில் விபத்தில் பலியாகிவிட்டார்).

மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்து, ஏற்கெனவே திரண்டிருந்த கூட்டத்துடன் சேர, குறுகலான ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு டிராபிக் ஜாம் ஆனது. மாலைக்காட்சியின்போது காலையில் ரசித்ததை விட ரசிகர்களும் பொதுமக்களும் நன்றாக ரசித்தனர். அதிலும் "பூப்போலே உன் புன்னகையில்" பாடல் இரண்டாம் முறையாக ஹோட்டலில் பாடும்போது நடிகர்திலகத்தின் ஸ்டைலை ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தனர். படத்தை உருவாக்கியவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் நாட்கள் நகர நகர புன்னகை நீடிக்கவில்லை.

சமீபத்தில் கூட தொலைகாட்சியில் ‘கவரிமான்’ பார்த்தபோது, முற்றிலும் வித்தியாசமான இப்படம் ஏன் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது..

uvausan
6th May 2014, 05:54 PM
திரு கார்த்திக் - உங்கள் இந்த அருமையான பதிவுகளை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகி விட்டன - மீண்டும் நீங்கள் திரும்பி வந்தது சந்தோஷமாக உள்ளது - உங்கள் திறமை , எழுத்தின் வளமை , ஞாபக சக்தி , பதிவுகளை கொண்டு போகும் விதம் இவைகளில் மனதை பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் - விரைவில் main திரியிலும் வருவீர்கள் என நம்புகிறேன்

mr_karthik
7th May 2014, 06:40 PM
"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே...

நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...

'மோகனப்புன்னகை' (14.01.1981)

இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.

நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக பாவை விளக்கில் நான்கு கதாநாயகிகள். அதனை அடுத்து இப்படத்திலும் நான்கு அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).

ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ரா தியேட்டரில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணாடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).

ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச் சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.

கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.

குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.

பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.

Russellcaj
8th May 2014, 07:59 PM
Nice Experiences.

Please Continue your Memories for More Films.

Murali Srinivas
9th May 2014, 10:59 PM
நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து

விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.

உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.

இரண்டாவது சரணம் வந்தது

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க

ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி

வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி

1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்

சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்

செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த

மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,

ரசிகர்களை அளப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.

அன்புடன்

Murali Srinivas
14th May 2014, 11:19 PM
அந்த நாள் ஞாபகம்

இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் " ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.

அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.

ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி

"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.

அப்படியா? நான் வராமே போயிட்டனே

நான் வந்திருக்கனே உயிரோடு

நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"

மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த கிராமத்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்தவாறே அவருக்கே உரித்தான கன்னத்தில் வழியாமல் கண்களில் நீர் கரை கட்டி நிற்க

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்! அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!

தாயாருக்கும் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி

என்ற வரிகளின் போதெல்லாம் செம அப்ளாஸ்.கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.

படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.

தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.

ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழ கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.

(தொடரும்)

அன்புடன்

mr_karthik
17th May 2014, 03:29 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (9)

"உத்தமன்"

இப்போதுதான் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. அதற்குள் 38 ஆண்டுகள் முடிந்து விட்டனவா?. நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நடிகர்திலகம் மெலிந்திருந்த காலங்களில் வந்த படம். எப்போதும் இப்படியேதான் இருக்கப்போகிறார் என்றெண்ணிய காலத்தில் அதன் அருமை அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் உருவம் மாறத்துவங்கியபின் அவையனைத்தும் பொக்கிஷங்களாகி விட்டன. அதில் ஒன்றுதான் உத்தமன்.

1976 பொதுவாக தமிழ்ப்பட உலகுக்கும், குறிப்பாக நடிகர்திலகத்துக்கும் சற்று தேக்கமான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. அப்போது வெளியான படங்களின் வெற்றிகளைப் பார்த்தாலே தெரியும். அன்பே ஆருயிரே வில் துவங்கிய மந்த நிலை, படங்கள் சரியில்லாத காரணத்தாலும், பெருந்தலைவர் மறைவுக்குப்பின் ஏற்பட அரசியல் சூழல்களாலும் தொடர்ந்தது. 'பாட்டும் பரதமும்' போன்ற நல்ல படங்களும் இதில் பாதிக்கப்பட்டன.

அந்த ஆண்டில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வந்த ஒரே படம் என்றபோதிலும், உண்மையில் லக்கி காம்பினேஷனா என்பது பின்னர் ஐயப்பாடானது. இதற்கு மாறாக மிட்லண்ட், மகராணி, ராக்ஸி என்ற காம்பினேஷனில் வந்திருந்தால் சென்னையிலும் மதுரையைப்போல 100 நாட்களைக் கடந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் பத்தாவது வாரத்தில் படம் எடுக்கப்பட்டபோது நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது உண்மை என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ சென்னையில் அந்த ஆண்டில் 100 நாள் படமே இல்லாமல் போனது.

உத்தமன் படம் வெளியாவதற்கு முன் பாடல்கள் வெளிவந்து டீக்கடைகளில் சக்கைபோடு போட்டன. இப்போது போல இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் திரையுலகையே அழைத்து விழா நடத்தும் கூத்து எல்லாம் அப்போது ஏது?. முதலில் டீக்கடைகளில் பாடலைக் கேட்டு பின்னர் ஹோட்டல் ஜுக் - பாக்ஸ்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உத்தமன் பாடல்கள் முதலில் கேட்டபோது சுமாராக இருந்தவை, பின்னர் திரும்பத்திரும்பக் கேட்டதும் மனதுக்குப் பிடிக்க ஆரம்பித்தன. 'படகு படகு' பாடலும் 'தேவன் வந்தாண்டி' பாடலும் மனத்தைக் கிறங்கடித்தன. இயக்கம் ராஜேந்திர பிரசாத் என்பதால் பிக்சரைசேஷன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

வீட்டுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் உத்தமன், ஊருக்கு உழைப்பவன், மன்மத லீலை, கிரஹப்பிரவேசம் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் ஏரியா பெரியவர்களால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு தெரு அமைதியானது. இருந்தாலும் உத்தமன் பாடல்களைக்கேட்டு பழகி விட்டதால் காதுகள் அனிச்சைசெயலாக 'ஜுக் - பாக்ஸ்' ஹோட்டல்களை நாடின. அப்போது ஆடியோ கேசட்டுகள் புழக்கதில் வந்துவிட்ட போதிலும், பாடல்களை கேசட்களில் பதிவு செய்துதர கடைக்காரர்கள் மறுத்து விடுவார்கள். இசைத்தட்டு விற்பனை குறைந்து விடும் என்ற காரணம். ஒவ்வொரு கிராமபோன் ரிக்கார்ட் கடையிலும் எச்.எம்.வி. நிறுவனத்தினரின் “Please do not ask us to tape, it is illegal” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

நண்பன் ஒருவன் வீட்டில் ஆடியோ கேசட் பிளேயர் இருந்ததால், காசினோ திரையரங்கின் பின்புறமுள்ள ரிட்சி தெருவிலிருந்த ஒரு ரிக்கார்ட் விற்பனையாளரை நச்சரித்து 'உத்தமன்' பாடல்களை மட்டும் ஒரு கேசட்டில் பதிவிட்டு, திரும்பத்திரும்பக் கேட்டு வந்ததில் படம் வரும் முன்பே பாடல்கள் மனப்பாடமாகி இருந்தன. இதனிடையே சினிமா பத்திரிகைகளான பேசும்படம், பிலிமாலயா, பொம்மை, மதிஒளி, திரைவானம் ஆகியவற்றில் உத்தமன் பற்றிய செய்திகளும் வண்ணப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தன. நடிகர்திலகம் அருமையான ஹேர்ஸ்டைலுடன், அற்புதமான காஸ்ட்யூம்களில், மஞ்சுளாவுடன் செம கியூட்டாக இருந்தார். இதற்கு முந்தைய கிரஹப்ரவேசம், சத்யம் படங்கள் கொஞ்சம் டல்லாக அமைந்து தாய்க்குலத்துக்கு ஏற்றவையாக அமைந்திருந்தனவே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடவில்லை.

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் வெளியாகும் அறிவிப்பும், ரிசர்வேஷன் விளம்பரமும் வந்தது. (அப்போதெல்லாம் நடிகர்திலகத்தின் படங்கள் சனிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும். அதற்கேற்றாற்போல ஞாயிற்றுக்கிழமை ரிசர்வேஷன் துவங்கும்). அப்புறம் என்ன? கிரௌன் தியேட்டருக்கு மொத்த நண்பர்கள் கூட்டமும் படையெடுத்தோம். ஏற்கெனவே பலமுறை இங்கே பேசியதுபோல அந்த ஆண்டு கொஞ்சம் சுமார் ஆண்டு என்பதால் ரிசர்வேஷனுக்கும் கூட்டம் அவ்வளவு இருக்காது என்று எண்ணி அசால்ட்டாக போனோம். ஆனால் நிலைமை வேறாக இருந்தது.

எவ்வளவு ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்துள்ளனர் என்பது கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. வழக்கமாக ரிசர்வேஷன் என்றால் ஏழு ஏழரைக்குள் போய்விடும் எங்களுக்கு அன்று அசால்ட்டாக சற்று தாமதமாக போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை எங்களுக்கு முன் சென்றிருந்த ரசிகர்கள் உணர வைத்தனர். நாங்கள் போவதற்கு முன்பே ரிசர்வேஷன் துவங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. கியூவில் நின்ற சிறிது நேரத்தில் முதல்நாள் மூன்று காட்சிகளும் புல்லாகிவிட்டன. முதல்நாளே படம் பார்க்கப்போகிறோம் என்ற கனவு 'பணால்' ஆனது. கியூ நகர அடுத்த நாள் மேட்னியும் 'புல்'. அவ்வளவுதான் எங்களுக்கு பதைபதைப்பு அதிகமானது. 'உன்னாலதாண்டா லேட்' என்று ஒருவருக்கொருவர் பழிபோட ஆரம்பித்தோம். கவுண்டரை நெருங்கி விட்டோம். எங்கள் கண்கள் ரிசர்வேஷன் சார்ட்டிலேயே இருந்தது. இரண்டாவதுநாள் மாலைக் காட்சியாவது கிடைக்கணுமே என்ற படபடப்பு. (இரவுக்காட்சி பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது).

சொன்னால் நம்ப மாட்டீர்கள். (எங்களாலேயே நம்ப முடியவில்லையே, அப்புறம் எப்படி உங்களை நம்பச்சொல்ல?) எங்கள் நண்பர் குழுவின் கடைசி ஆள் டிக்கட் வாங்கியதும் இரண்டாவதுநாள் ஈவினிங் ஷோ புல். எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். முதல்நாள் பார்க்கமுடியாமல் போனதற்கு ஆறுதல் பரிசு என எண்ணியவாறு வீடு திரும்பினோம். அடுத்த ஐந்துநாட்களும் நண்பர்களுக்குள் உத்தமன் பற்றியேதான் பேச்சு. பள்ளிப்படிப்பை முடித்து அந்த ஆண்டுதான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் உத்தமன் ரிலீஸ். தினமும் பஸ்ஸில் சாந்தி வழியாகத்தான் கல்லூரிக்கு போவோம் வருவோம். ஆனால் ஏனோ சாந்தியில் பார்க்கலாமே என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ('அண்ணன் ஒரு கோயிலில்' இருந்துதான் சாந்தி சங்கமம்).

முதல் நாள் மேட்னிஷோ விடும் முன்பே கிரௌன் தியேட்டருக்குப் போய்விட்டோம். முதல்நாள் படம் பார்க்காவிட்டால் என்ன ‘ரிலீஸ் மேளா’வை மிஸ் பண்ணலாமா?. நண்பன் ஒருவனுக்குத் தேவையில்லாத நப்பாசை. கரண்ட் புக்கிங் டிக்கட் கிடைத்தால் முதல்நாளே பார்த்துவிடலாமே என்று நான்கு மணிக்கே போய்விட்டான். நாங்கள் போய் அவன் நின்ற இடத்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்தது. ஒரு ஷோவுக்கு டிக்கட் வாங்க நான்கு ஷோவுக்கான கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவனும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான் பாவம். கவுண்டர் மூடியதும் எங்களுடன் ஐக்கியமானான். 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் கிரௌன் தியேட்டர் களைகட்டியது உத்தமனுக்குத்தான். அரசியலில் அப்படி இப்படி மதில்மேல் பூனைகளாக இருந்த ரசிகர்களும், நடிகர்திலகத்தின் முடிவை ஏற்று, இந்திராவின் தலைமையின் கீழ் ஒன்று கூடி வந்துவிட்டனர். மேட்னிஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெளியே நின்றிருந்த ரசிகர்களுடன் ஒன்று கலந்து படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு, ரொம்ப நாளைக்குப்பிறகு ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படம் என்பதுதான். இரவு எட்டுமணிவரை அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்.

ஏற்கெனெவே பார்த்த ரசிகர்களின் வர்ணனைகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட, ஆவலுடன் அடுத்தநாள் மாலைக்காட்சிக்குச் சென்றோம். முதல்நாளுக்கு சற்றும் குறையாத கூட்டம். எங்களுக்கோ சந்தோஷம் தலைக்கேறி ஆடியது. மாலைநேரம் கிரௌன் தியேட்டர் ஓரம் நல்ல நிழலாக இருக்கும். கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டது. சாந்தி மற்றும் புவனேஸ்வரியிலும் மிக நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொன்னார்கள். வெளியூர் ரிப்போர்ட்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனாலும் படத்தின் கெப்பாஸிட்டியை வைத்துப் பார்க்கும்போது ரிசல்ட் இன்னொரு ‘அவன்தான் மனிதனாக’ அமையும் என்றார்கள். ஆஹா, அந்தப்பொற்காலம் திரும்புமா என்று மனம் ஏங்கியது. (அப்போதெல்லாம் வெளியூர் ரிசல்ட்கள் கடிதம் மூலம்தான் வர வேண்டும். இப்போது போல செல்போனை அழுத்தி "ஹலோ மச்சி, மதுரைல எப்படி போகுது?" என்ற வசதியெல்லாம் அப்போது ஏது?) . இதன்பிறகு 'அவன் ஒரு சரித்திரத்துக்குத்தான்' (பக்கத்து ஸ்ரீ கிருஷ்ணா) தியேட்டரில் இப்படி ஒரு எழுச்சியைக் காண முடிந்தது. அது உத்தமனை விட அதிகம்

மாலைக்காட்சிக்கு தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். முதல் ஒருவாரம் அது ரசிகர்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் அன்றைக்கும் ஆரவாரம் அமர்க்களப்பட்டது. படம் துவங்கியது முதலே அட்டகாசமும் துவங்கி தொடர்ந்தது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடைகள் மேக்கப் அனைத்தும் செம தூக்கல். அதுவே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. சரிதான், தலைவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பாடல் காட்சிகளனைத்தும் அட்டகாசமாக இருந்தன. 'மஞ்சுக்குட்டியும்' சரியாக ஈடுகொடுத்திருந்தார். 'படகு படகு ஆசை படகு' பாடல் காட்சியில் இடையே வரும் லைலா - மஜ்னு மற்றும் சலீம் - அனார்கலி இடைச்செருகல்களுக்கு நல்ல கைதட்டல்....

நிலவு முகத்திலே முக்காடு மூடும் மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா

வரிகளின்போதும்....

அனார் என்றால் மாதுளம், ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன் சலாம் உரைத்தான் உன்னிடம்....ம்.....ம்....ம்.
உண்மைக் காதல் காதல் காதல் - இன்பக்
காதல் போயின் சாதல்

என்ற வரிகளின்போதும், மாமாவின் தபேலா லயத்துக்கேற்ப ரசிகர்கள் கைதட்டியதுடன், பல ரசிகர்கள் எழுந்து ஆடத்துவங்கி விட்டனர். ஏகப்பட்ட ஆரவாரம். (அதானே, வடசென்னை ரசிகர்களா கொக்கா?).

(படகு படகு பாடலில் பின்னணியில் ஸ்கேட்டிங் செய்பவர் நம்ம பிரபு என்பது சமீப காலம்வரை எனக்குத் தெரியாது. தெரிந்தபின் இப்போதெல்லாம் அப்பாடலில் அவரை உற்று உற்றுப் பார்க்கிறேன். சூப்பராக ஸ்கேட்டிங் பண்ணுகிறார்).

அதுபோல 'தேவன் வந்தாண்டி' பாடல் காட்சியும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தலைவரை அழகழகு உடைகளில் காண்பிப்பதில்தான் இந்த தெலுங்கு தயாரிப்பாளர் / இயக்குனருக்கு எவ்வளவு ஒரு ஆர்வம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்தை நடக்க வைத்தே டூயட் பாடல்களை எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை ஓட வைத்து டூயட் எடுப்பவரும் இவர்தான். அருமையான காஷ்மீர் பின்னணி லொக்கேஷனில் கருப்பு நெக்-ஸ்வெட்டர், சிவப்பு கோட் அணிந்து தலைவர் வரும் காட்சி கண்ணிலேயே தங்கிவிட்டது. முரளிசார் குறிப்பிட்ட (சுசீலாவின்) 'இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி' என்ற குழைவு ஐயோ ஐயோ என்ன அருமை. அதுபோல 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலிலும் தலைவரை நன்றாக ஓடவிட்டு பெண்ட் எடுத்திருப்பார் ராஜேந்திர பிரசாத். (ஏற்கெனவே 'கல்யாண ஆசைவந்த' மற்றும் 'இரவுக்கும் பகலுக்கும்' பாடல்களிலும் ஓட்டத்தைப் பார்த்தோமே).

ஆரவாரமும் அட்டகாசமுமாக படத்தைப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மனம் நிறைந்திருந்தது. தலைவர் ட்ராக்குக்கு வந்துவிட்டார். இனி அதகளம்தான் என்று பூரிப்படைந்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக்காட்சி 'உத்தமன்' பார்ப்பது என வழக்கம் வைத்து ஏழுமுறை கிரௌன் தியேட்டரிலேயே பார்த்தேன். முந்தைய ஆறு படங்களின் ரிசல்ட்டைப்பார்த்து, 'கணேசன் இத்துடன் ஒழிந்தான்' என்று எக்காளமிட்டோருக்கு சாவுமணி அடிக்க வந்த படம் "உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).

Murali Srinivas
23rd May 2014, 01:51 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.

ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.

இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.

இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
29th May 2014, 12:39 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு. கடந்த பதிவின் இறுதி பகுதி.நடிகர் திலகத்தின் தயாரிப்பில் இருந்த படங்களைப் பற்றிய நினைவலைகள்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு வருவோம். மூன்றாவது வாரம் நான்காவது வாரம் grip சற்றும் குறையவில்லை. பொதுவாக சினிமா விநியோக துறையில் சில குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக புழங்கும். அவறில் ஒன்று opposition, இது என்னவென்றால், ஒரு படத்தின் ஓட்டத்திற்கு போட்டியாக இருக்கக் கூடும் என விநியோகஸ்தர்கள் கருதும் வேறு படங்களை opposition என்று கூறுவார்கள். ஆனால் இதில் இன்னார் படத்திற்கு இன்னார் படம் மட்டுமே opposition என்று எடுத்துக் கொள்ள முடியாது. எந்த படங்கள் வேண்டுமானாலும் opposition ஆக வர முடியும்."நம்ம படம் போடும்போது இந்தப் படம் [படத்தின் பெயரை சொல்லி] opposition-னா விழுந்துருச்சு. அதிலே நம்ம படம் கொஞ்சம் அடி வாங்கிருச்சு" போன்ற சால்ஜாப்புகளையும், அடுத்தவர் படத்தை பற்றி குறிப்பிட்டும் போது "opposition-யே இல்லை. அதனாலே நல்லாப் போயிருக்கு" போன்ற வயித்தெரிச்சல் வசனங்களையும் ரெகுலராக கேட்கலாம். பட்டிக்காடா பட்டணமாவைப் பொறுத்தவரை அந்த opposition கூட எடுபடவில்லை. ஓரளவிற்கு அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் என்று சொன்னால் KSG-யின் குறத்தி மகன் படத்தை சொல்ல வேண்டும். ஜெமினியும் கே ஆர் விஜயாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் B அண்ட் C ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது. மதுரையில் கல்பனா திரையரங்கில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. மற்றபடி நோ opposition என்றே சொல்ல வேண்டும். ஜூன் 1 அன்று பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. பொதுவாக அந்த நேரம் படங்களுக்கு ஒரு drop இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் மீறி பட்டிக்காடா பட்டணமா தன வெற்றியோட்டதை தொடர்ந்தது. ஜூன் 4 ஞாயிறன்று இரவுக் காட்சி வரை நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ் புஃல். அடுத்த நாள் திங்கள் முதல் drop ஆகும் என்று சிலர் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க அதுவும் பொய்த்து போய் திங்கள் செவ்வாய் எல்லாம் புஃல். [House Full]

இதற்கு நடுவில் நியூசினிமாவில் ஞான ஒளி 13-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அப்போது disturbing news ஒன்று வருகிறது. படத்தை 100 நாட்கள் ஓட விடாமல் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திதான் அது. கேஆர்விஜயாவின் பினாமி தயாரிப்புகளில் ஒன்றான அவரும் முத்துராமனும் இணைந்து நடித்த கண்ணம்மா என்ற திரைப்படம் [மாதவன் இயக்கம்?] ஜூன் 23 வெளியாவதாக இருந்தது தெரியும். அது மதுரையில் நியூசினிமாவில் chart செய்யபட்டிருந்ததும் தெரியும். அப்படி ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஞான ஒளி 104 நாட்களை நிறைவு செய்திருக்கும் என்பதனால் முதலில் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜூன் 9 அன்றே ஞான ஒளி படத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். விநியோகஸ்தர் அலுவலகத்திற்கும் திரையரங்க அலுவலகத்திற்கும் ரசிகர்கள் சென்றனர். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வியட்நாம் வீடு படத்திற்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டதை அனைவரும் நினைவு கூர்ந்தனர். மீண்டும் அப்படி நடந்து விடக் கூடாது என முயற்சித்தார்கள். இத்தனைக்கும் படத்திற்கு overall hold over குறையவில்லை. அப்படியிருந்தும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தனர். விநியோகஸ்தரால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. ஜூன் 8 அன்று 90 நாட்களை நிறைவு செய்த ஞான ஒளி ஜூன் 9 அன்று மாற்றப்பட்டு தெலுங்கு டப்பிங் படமான ரிவால்வர் ரீட்டா வெளியானது. ரசிகர்களுக்கெல்லாம் பெருங்கோபம் மற்றும் வருத்தம். வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி என தொடர்ந்து மூன்று படங்கள் மதுரையில் 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படங்கள் 90 நாட்களில் எடுக்கப்பட்டது இன்று வரை மனதில் மாறாத வடுவாக இருந்துக் கொண்டேயிருக்கிறது. இதற்க்கெல்லாம் ஆறுதலாக பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continuous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?

(தொடரும்)

அன்புடன்

rsubras
29th May 2014, 04:22 AM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (7)

“கவரிமான்” (06.04.1979) .there are so many good aspects in this movie in the 2nd half in particular which i wanted to read in your post but missing :).........especially in the climax, when Sivaji arrives late at the scene to watch his daughter murdered her lover......... appo avarin muga baavam, and complimenting his acting was the innocent looking sridevi............so..so..touched by this scene many moments.............at first when he quietly starts........ with a helpless tone in his voice... "appave sonnane" and then changes tact to handle the situation, to snatch the bottle from his daughter and ask her to blame this murder on him "appa...no..no...nee enai appa nu othukka maatiye...intha aalu nu sollu" the feelings change here....and when Sridevi breaks down into "appa" the ice breaks.........thiagu...overwhelmed by the emotions (and so is me... :)) caught brilliantly by the facial expressions......then he hugs his daughter and finally when Sivaji says ............ 'maanathukku oru bangam vantha onnu uyirai vidanum illai uyirai edukkanum".......and the change in reaction from Sridevi..rendu perum kannulaye pesikarathu............... actually sollite pogalam.... i cant stop raving about this scene..........


சமீபத்தில் கூட தொலைகாட்சியில் ‘கவரிமான்’ பார்த்தபோது, முற்றிலும் வித்தியாசமான இப்படம் ஏன் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது..

I think it is the needless additions here and there, vijayakumar character, his love, hero ravichandran in that kind of a role, Sivaji yoda wife antha maathiri character ah irukarathu, these are some unpleasant things in that film..........and one weakness i saw was..Sivaji's father role......... it was such a powerful role with a strong character but i thought a weaker person donned that role.....would have liked to see Major play Sivaji's father or some one like V.S.Raghavan........... i had the luxury of skipping scenes and go to the highlights of the movie and so i enjoyed the film very much....60s la iruntha screenplay talent late 70s la kurainjirukalam........ is my view....... Compared with this movie or annan oru koyil, I can watch Gnana oli or Babu (even in Babu nagesh comedy track was avoidable) in its entirety without getting bored

mr_karthik
29th May 2014, 06:06 PM
there are so many good aspects in this movie in the 2nd half in particular which i wanted to read in your post but missing :).

Missing...??. Yes should be missing.

Because, what I wrote is not the movie analysis, but only the happenings and fans enjoyment on the release day of the movie in theatres. So, one cant expect every nuances of the movie of such posts. It is just description of incidents happened in theatre on opening show. Thats all.

mr_karthik
30th May 2014, 04:40 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (10)

'அவன் ஒரு சரித்திரம்' (14.01.1977)

1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி, நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.

அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......

ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.

சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.

ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.

டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.

அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).

mr_karthik
30th May 2014, 04:44 PM
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.

தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.

வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.

வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).

நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.

ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது

mr_karthik
30th May 2014, 04:56 PM
மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.

உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத் துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.

டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.

அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......

வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது.

நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்......

JamesFague
30th May 2014, 05:18 PM
Nice writeup on AOS. I have seen the movie in Noorjehan, Saidapet.
Those golden days will never come.

RAGHAVENDRA
30th May 2014, 05:26 PM
டியர் கார்த்திக்,
இன்றைய இளைஞர்களுக்கு நம்முடைய அனுபவங்கள் வியப்பையும் பொறாமையையும் ஒரு சேர அளிக்கும் என்பதில் ஐயமில்லை. திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டதெல்லாம் அதுவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடியதெல்லாம் அவர்களுக்கு நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அந்த நாட்களுக்கே நம்மையெல்லாம் அழைத்துச் சென்று விடும் வலிமை தங்களுடைய எழுத்துக்களுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

தாங்கள் கூறிய அபிராமி திரையரங்கிற்கு பதிலாக அஷோக் திரையரங்கின் பெயர் இடம் பெற்ற விளம்பரத்தின் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

ரிசர்வேஷன் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOSreserveAd01fw-1.jpg

Gopal.s
31st May 2014, 05:43 AM
Murali Srinivas


நடிகர் திலகத்தைப் பற்றி அவரது படங்களைப் பற்றிய துணுக்கு செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என ராகவேந்தர் சார் சொல்லியிருப்பதற்கு ஏற்ப என் நினைவிற்கு வந்த இந்த செய்தியை இங்கே பதிகிறேன். அதிலும் ராகவேந்தர் சார் அவருக்கு மிகவும் பிடித்த படம் என்று சொன்ன படத்தைப் பற்றிய பகிர்வு.

ஆம்! சிவகாமியின் செல்வன்! நம் அனைவருக்கும் பிடித்த படம்! இதே நாளில் [ஜனவரி 26] இன்றைக்கு 39 வருடங்களுக்கு முன் வெளியாகி நம்மை கொள்ளை கொண்ட படம் பற்றிய ஒரு துணுக்கு.

50-களில், 60-களில் 70-களில் முற்பகுதியில் பிறந்தவர்களுக்கு நான் சொல்லும் விஷயம் பரிச்சயமாகி இருக்கும். அன்றைய கால கட்டங்களில் ஒரு திரைப்படம் வெளியான பிறகு வாரா வாரம் புதிய போஸ்டர்கள் ஒட்டப்படும்! 2-வது வாரம், 3-வது வாரம் என ஆரம்பித்து 7 வாரம் வரை போகும். 8-வது வாரத்திற்கு பதிலாக 50-வது நாள் போஸ்டர் வரும். மீண்டும் 9,10 வாரத்தின் போஸ்டர். பிறகு 75-வது நாள் (சில நேரங்களில் இது 11-வது வார போஸ்டராகவும் வரும்]. அதன் பிறகு 12,13,14 என தொடர்ந்து 100-வது நாள் போஸ்டர் சுவர்களில் இடம் பிடிக்கும்.

இதை ரசிகர்கள் அனைவரும் வெகு ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு வாரமும் எந்த டிசைனில் போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கிறது? என்ன கலர் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கும்! இந்த வார போஸ்டர் பார்த்தாயா என்று ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வதையும் பார்க்க முடியும். போஸ்டர்கள் தங்கள் எண்ணப்படி அமையாமல் சொதப்பும் போது அதைப் பற்றிய சூடான விமர்சனங்களும் ரசிகர்களால் முன் வைக்கப்படும்!

சிவகாமியின் செல்வன் வெளியான அந்த 1974 ஜனவரி கால கட்டத்திலும் இதுதான் வழக்கம்! படம் வெளியாகி நல்ல wom (word of mouth) பரவி படம் வெற்றிகரமாக அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாதாரணமாக இரண்டாவது வார துவக்க நாளன்று 2-வது வாரம் போஸ்டர் ஓட்டப்படவிடும். ஆனால் பிப்ரவரி 2-ந் தேதி சனிக்கிழமையன்று போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. மறுநாள் ஞாயிறு அன்றும் ஒட்டப்படவில்லை. ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.போஸ்டர் வந்து சேரவில்லையா இல்லை வேறு ஏதாவது விஷயமா என்று குழம்பினர். காரணம் அன்றைய காலங்களில் தினத்தந்தி விளம்பரம் போஸ்டர் விளம்பரம் இவை இரண்டு மட்டுமே ஒரு படத்தின் publicity -யாக விளங்கிய காலம். அனைவரும் தந்தி படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு படத்தின் விளம்பரத்திற்கு போஸ்டர்கள் கண்ணில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அது இல்லை என்று சொல்லும்போது படத்தின் long run-ஐ அது பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. மதுரையைப் பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ்தான் மதுரை மாவட்ட விநியோகஸ்தரும் கூட. அன்றைய நாளில் அவர்களின் அலுவலகம் திண்டுக்கல் ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற புகழ் பெற்ற ஹோட்டலின் நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் இயங்கி வந்தது. ரசிகர்கள் அந்த அலுவலகத்திற்கு நேரே சென்று விட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே யாரும் இல்லை. மறுநாளும் திங்களன்றும் போஸ்டர் இல்லை என்றவுடன் இது ஒரு பெரிய விஷயமாக சர்ச்சை செய்யப்பட ஆரம்பித்து விட்டது. அன்று படம் திரையிடப்பட ஸ்ரீதேவி தியேட்டருக்கும் ஜெயந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் ரசிகர்கள் கூட்டமாக சென்று விட்டனர். போஸ்டர்கள் அப்போதுதான் வந்ததாகவும் இரவு ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் செவ்வாய் அன்று சுவர்களை அலங்கரித்த சுவரொட்டிகளைப் பார்த்தவர்களுக்கு surprise அல்லது shock என்று சொல்லலாம். காரணம் நார்மலாக காணப்படும் 2-வது வார போஸ்டருக்கு பதிலாக வெற்றிகரமான 11-வது நாள் போஸ்டர் அங்கே காணப்பட்டதுதான். இந்த புதுமை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.அடுத்த 10 நாட்கள் கழித்து 22-வது நாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. சரி அடுத்து 33-வது நாள் வரப் போகிறது என்று நினைத்திருக்கும் போது 35-வது நாள் போஸ்டர் வந்தது. அதன் பிறகு நேராக 51-வது நாள் போஸ்டர்தான் வந்தது. அந்த 51-வது தின ஞாயிறன்று [மார்ச் 17] அன்று தினத்தந்தியில் முழு பக்க விளம்பரமும் வந்தது.

அதுவரை நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்றி புதிய முறையில் போஸ்டர் அடிக்கப்பட்ட முதல் படம் சிவகாமியின் செல்வன் என்று சொல்லலாம். நான் முதலில் சொன்னது போல் இதை பலர் வரவேற்றாலும் ரசிகர்களில் ஒரு சாரார் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.வழமையான முறையில் விளம்பரம் செய்திருந்தால் படம் நிச்சயமாக 100 நாட்களை தொட்டிருக்கும் என்பது அவர்களின் ஆதங்கமாக இருந்தது.

இப்படிப்பட்ட போஸ்டர் விளம்பரமே வழக்கொழிந்து போன இன்றைய காலக்கட்டத்தில் வாழும் இளைய தலைமுறையினருக்கு இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அதுவும் இந்த ரிலீஸ் நாளில் இது ஒரு நினைவூட்டலாக அமையும் என நம்புகிறேன்!

அன்புடன்

eehaiupehazij
10th June 2014, 10:17 AM
Excellent postings by experienced writers! The nostalgia of NT movies are analysed in every detail making me feel that the scenes unfold right in front of my eyes! Hats off Murali Sir and Karthik sir.

Murali Srinivas
21st June 2014, 10:20 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

அந்த நேரத்தில் வெற்றிகரமாக குறத்தி மகன் படம் ஓடிக் கொண்டிருந்ததை குறிப்பிட்டேன். மற்றொரு படம் அதே காலகட்டத்தில் அதே போல் வெற்றிகரமாக ஓடியது என்று சொன்னால் அது காசேதான் கடவுளடா ஆகும். அதே நேரத்தில் வெளியான நவநீத ரெட்டியாரின் புகுந்த வீடு சென்னையில் நன்றாக போனாலும் மதுரையில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. வெகு நாட்களுக்கு பின் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் மீண்டும் பின்னணி பாடிய செந்தாமரையே செந்தேனிலவே என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்று பிரபலமானது. ஸ்ரீதேவியில் காசேதான் கடவுளடா வெளியானது. புகுந்த வீடு மீனாட்சியிலும் வந்தது. மே மாதம் இறுதியில் என்று நினைவு மீனாட்சியில் புகுந்த வீடு படம் மாற்றப்பட்டு எஸ்.பி. முத்துராமனின் முதல் படமான கனிமுத்துப் பாப்பா வெளியானது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமான Andaaz படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஷர்மீலீ இந்திப் படத்தின் மிக பிரபலமான Khilte Hain Gul Yahan பாடல் ராதையின் நெஞ்சமே என்று மாற, Andaaz படத்தின் Zindhaki Ek Safar காலங்களே காலங்களே என்று எஸ்பிபி குரலில் ஒலிக்க, Hai na bolo bolo அதே மெட்டில் மாமா சொல்லு சொல்லு என்றாக, இப்படி பல்வேறு கலவைகளின் சங்கமமாக வெளிவந்த கனிமுத்துப் பாப்பா வெற்றி பெற முடியாமல் போனது.

ஜூன் 9 அன்று நான் ஏன் பிறந்தேன் வெளியானது. இது கேஆர்விஜயாவின் சொந்தப் படம். Jeene Ki Raah என்ற இந்திப் படத்தின் தழுவல். என்ன காரணத்தினாலோ இது ரீமேக் படம் என்பதை வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். விஜயாவைப் பொறுத்தவரை வேலாயுதன் அவர்களை மணந்த பின் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் மீண்டும் மறு பிரவேசம் செய்த பிறகு நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம் 1969 அக்டோபரில் வெளியான பாலாஜியின் திருடன். அதற்கு முன் அவர் நடிகர் திலகத்தின் படத்தில் பணியாற்றியது 1968 பிப்ரவரியில் வெளியான திருமால் பெருமை படத்தில்தான். தங்கை, என் தம்பி, திருடன் என்று வரிசையாக பாலாஜியின் படங்களுக்கு பைனான்சியராக இருந்த வேலாயுதன் திருடன் திரைப்படத்தில் கேஆர் விஜயாவிற்கு தனியாக டைட்டில் கார்டு போடவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்தி விட்டார். பாலாஜி பிறகு சேது பிலிம்ஸ் மற்றும் கீழக்கரை யாசின் என்று போய் விட விஜயாவின் திரைப்பட career-ஐ steady செய்யும் பொறுப்பை வேலாயுதனே ஏற்றுக் கொண்டு பல பெயர்களில் தயாரிப்பு நிறுவனங்களை நடத்திக் கொண்டு வந்தார்.

1969 அக்டோபரில் வந்த திருடன் படத்திற்கு பின் பாலாஜியின் தயாரிப்பில் 1983-ம் ஆண்டு ஜனவரியில் வெளி வந்த நீதிபதி படத்தில்தான் மீண்டும் விஜயா இடம் பெற்றார். பாலாஜியின் தயாரிப்பில் நடிக்க 14 வருடங்கள் இடைவெளி விட்ட போதும் இருவரும் வேறு படங்களில் சேர்ந்து நடித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் 1975-ம் ஆண்டு மார்ச்சில் வெளி வந்த தயாரிப்பாளர் கேஆர்ஜியின் ஆயிரத்தில் ஒருத்தி திரைப்படத்தில் இருவரும் ஜோடியாகவே நடித்தார்கள்.

1970-ம் ஆண்டு நடிகர் திலகத்துடன் எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம் என மூன்று படங்களில் ஜோடி சேர்ந்த விஜயா அதன் பின் 1971-ம் ஆண்டில் நடிகர் திலகத்தின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 1970 அக்டோபரில் சொர்கத்திற்கு பிறகு 1972-ல் ஆகஸ்டில் வெளியான தவப்புதல்வன் படத்தில்தான் சிவாஜியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார். அந்த 1970-ன் இறுதியில்தான் Jeene Ki Raah என்ற இந்திப்படத்தின் தமிழ் உரிமையை வேலாயுதன் வாங்கினார்.

1967 தீபாவளிக்கு வந்த விவசாயி படத்திற்கு பிறகு விஜயா எம்ஜிஆருடனும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில்தான் 1971 ஜனவரியில் காமாட்சி ஏஜன்சீஸ் என்ற நிறுவனம் எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்கப் போவதாக செய்தி வருகிறது. அந்த 1971 ஜனவரியிலேயே வேலாயுதன் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே பூஜை போடப்பட்டது. எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைப்பாளர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.ஆனால் அதன் பிறகு குறுக்கிட்ட 1971 பாராளுமன்ற சட்ட மன்ற பொது தேர்தல்களினால் இந்தப் படம் தயாரிப்பில் நீண்டு போனது. பெயரிடப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பிறகு அப்போது ஆனந்த விகடனில் தொடராக வந்துக் கொண்டிருந்த எம்ஜிஆரின் சுய சரிதை தொடரான நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பே சூட்டப்பட்டது.

நமது தொடரில் இதனையும் சொல்வதற்கு காரணம் நான் இந்த தொடரின் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பட்டிக்காடா பட்டணமாவிற்கு opposition படம் அதுவும் strong opposition என்ற முறையில் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் எங்கள் மதுரையில் தங்கத்தில் வெளியானது நான் ஏன் பிறந்தேன். பட்டிக்காடா பட்டணமா ஓடிக் கொண்டிருந்த சென்ட்ரல் சினிமாவிலிருந்து a stone's throw away என்பது போன்ற தூரத்தில்தான் தங்கம் அமைந்திருந்தது இந்த opposition பேச்சிற்கு வலு கூட்டியது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
27th June 2014, 12:38 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

அந்த நாள் ஞாபகம்

நண்பர் ஆதிராமிற்கு வேண்டி சஸ்பென்ஸை முதலிலேயே சொல்லி விடுகிறேன். acid test என்பது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளில் பட்டிக்காடா பட்டணமா ஒரு புதிய சாதனை படைக்குமா என்பதே ஆகும். இந்த தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற concept உருவெடுத்ததே 60-களின் இறுதிப் பகுதியில்தான். குறிப்பாக தில்லானா வெளிவந்த சமயம் நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் காரணம் நமது திரியில் கூட அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1968 ஜூலையில் வெளியான தில்லானா சாந்தியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டபோது தொடர்ந்து 100 கொட்டகை நிறைந்த காட்சிகள் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதுதான் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள என்ற கான்செப்ட் பிரபலமாவதற்கு வழி வகுத்தது. அதுவும் ஒரு சின்ன விஷயத்தில் கூட போட்டி என்று இரு தரப்பு ரசிகர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

சென்னை மாநகரில் 70-களில்தான் காலைக்காட்சி என்ற item சேர்க்கப்பட்டது. அதுவரை வாரத்தின் 7 நாட்களிலும் தினசரி 3 காட்சிகள்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் என்னவென்றால் தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள். ஆக ஒரு வாரத்திற்கு மொத்தம் 23 காட்சிகள். மதுரையில் இது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றைய நாட்கள் போல் அல்லாமல் terms முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஒவ்வொரு காட்சிக்கும் hold over என்ற முறையிலே படத்தின் ஓட்டம் தீர்மானிக்கப்பட்டது. விளக்கமாக சொல்வதென்றால் சனிக்கிழமை காலைக் காட்சி திரையிடப்படும்போது அந்த காட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை வசூலாக வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையைதான் hold over (இதை விநியோகஸ்தர்கள் பேச்சு தமிழில் holder என்று குறிப்பிடுவார்கள்) என்று சொல்லுவார்கள். அந்த தொகை வரவில்லையென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை காலைக்காட்சி ஓடாது. விளம்பரத்திலேயே தினசரி 3, ஞாயிறு 4 காட்சிகள் என்று வந்து விடும். இது போன்றே ஞாயிறு காலைக்காட்சி, சாதாரண தினங்களில் பகல் காட்சிக்கு என்று தனி தனி hold over உண்டு.

இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரம் 23 காட்சிகள். நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 5வது வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் 8 காட்சிகளும் புல் ஆகிவிட்டால் 30-வது நாள் ஞாயிறு இரவு காட்சியுடன் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து விடும். இதே வெள்ளிக்கிழமை வெளியான படம் என்றால் நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 29-வது நாள் வெள்ளி அன்று 3 சேர்த்தால் 95, சனிக்கிழமை 4 சேர்த்து 99, பிறகு ஞாயிறு காலைக்காட்சிதான் 100 ஆகும். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று பார்ப்போம்.

இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
27th June 2014, 01:15 PM
ஆஹா ஆஹா அருமை முரளி சார் அருமை நீண்ட நாட்கள் காக்க வைக்காதீர்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடருங்கள் என கேட்டுகொள்கிறேன்

mr_karthik
28th June 2014, 02:48 PM
அந்த நாள் ஞாபகம்

சவாலே சமாளி வெளியானபோது அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.

இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ர&