PDA

View Full Version : கடல் மைனா



chinnakkannan
17th August 2014, 12:24 AM
கடல் மைனா..
**
சின்னக் கண்ணன்
*
முன்னுரை
*
திடுமென மனதில் ஒரு எண்ணம்.. ஏன் வெகு சிலவே பாராக்கள் கொண்ட ஆனால் இனிமையான ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதக் கூடாது என..உடனே செயல் படுத்தி முக நூலில் ,இரண்டு அத்தியாயங்கள் எழுதியும் விட்டேன்..பின் தான். வரலாற்றுக் களம் தேடினேன்! ..என்னசெய்வது..

சரித்திர நாவல்களின் பகவத் கீதை போன்ற பொன்னியின் செல்வன் கண்ணில் பட்டது..முதல் அத்தியாயத்திலேயே கதாநாயகரின் பெயர். இவரை வைத்து ஏன் எழுதக்கூடாது...பின் கேட்க வேண்டுமா..அது பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து அவரே என் நாயகர் எனத் தோன்றி எழுத ஆரம்பித்தேன்..

நான்கு பாராக்களுக்குள்ளாக சரித்திரத் தொடர்கதை எழுதுவதென்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது..எனினும் விறு விறுவெனப் பல அத்தியாயங்கள் எழுதிப் பார்த்த போது நடுவில் கொஞ்சம் மனக்கலக்கம்.. முடியுமா என்ன சுவை இருக்குமா.. என நினைத்ததினலோ என்னவோ கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டேன்..கிட்டத் தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல்..

முடியாதென்பது இல்லை தான்..இருப்பினும் கதாநாயகரும் கதா நாயகியும் கனவில் வந்து யோவ் இப்படி எழுத ஆரம்பித்து அம்போ என விடலாமா நீ .. சரி நாலு பாரால முடிஞ்சவரைக்கும் எழுதிப்பார்..அப்படி இல்லை எனில் கொஞ்சம் நீட்டி எழுதேன்.. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் எனச் சொன்னதால்(கொஞ்சம் வேண்டியபுத்தகங்களையும் வாங்கிப் படிப்பதால்) இப்போது மீண்டு வந்து எழுதுகிறேன்..எழுதப்போகிறேன்..முடிக்கவும் உறுதி இருக்கிறது..

அன்புடன்
சி.க..

chinnakkannan
17th August 2014, 12:28 AM
கடல். மைனா..

சின்னக் கண்ணன்..

1. பாய்ந்த அம்பு..சாய்ந்த கொடி!!

****

வில்,வேல், ஈட்டி இன்னபிற கூர்மையான ஆயுதங்களை விடக் கூரிய பார்வையுடன் அந்த யெளவனப் பிராயத்தில் இருந்த அழகிய நங்கை தன்னருகே நின்ற வாலிபனிடம், “ வாலிபரே நீங்களும் கொஞ்சம் நடுத்த்ர வயது உடைய இன்னொருவரும் ஒரு நாழிகைப் போதின் முன் வந்தீர்..வந்தவர் அமர்ந்தீர்.. தந்தையைப் பற்றிக் கேட்டீர்.. ஆனால் உங்கள் இருவரையும் என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை.. அதனால் தான் உங்களை இங்கு அழைத்து வந்து விபரம் அறியமுற்படுகிறேன்..நில்லுங்கள்.. நீங்கள் இருவரும் எப்படி தஞ்சையிலிருந்து இந்த பள்ளி கொண்ட புரம் என அழைக்கப் படும் புன்னை பூதங்குடிக்கு வந்தீர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டாம்..அதற்கு நான்கைந்து பக்கங்கள் தேவைப் படும்.. கொஞ்சம் சின்னதாய் விவரம் கூறலாமா” என வேகவேகமாகக் கேட்டதில் அவளது மேலாடை மேலும் கீழும் ஒரு சின்ன நடன அசைவைக் கொண்டது..

அவளது வீட்டின் பின்புறத் தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்துக் குலுங்கியிருந்த செவ்வந்தி,முல்லைப் பூக்களின் மணத்தை சுவாசித்தவாறே கொஞ்சம் தள்ளி அழகாய் விரிந்து பரந்திருந்த வேப்ப மரத்தின் அடியில் ச்ற்றே ஒரு காலை மடக்கி ஒருகாலை நின்று ஊன்றியிருந்த வாலிபன் “ பெண்ணே..இவ்வளவு வேகமாகப் பேசவேண்டிய அவசியமே இல்லை.. நான் தஞ்சையில் அரண்மனையில் வேலை பார்க்கும் சாதாரணக் காவலன் தான் .. இளவரசன் என்றெல்லாம் எண்ணாதே.. கூட வந்திருப்பவர் எனது சித்தப்பா. என் பெயர் இள.. என ஆரம்பித்து விட்டு “வீரன் “ என்று வைத்துக் கொள்ளேன்” என்றான்..

அவள் அவனையே மேலும் கூர்மையாய்ப் பார்க்க, “என்ன கோவில் அர்ச்சகர் மகளே.. இன்னும் நம்பவில்லையா..சரி என் சித்தப்பாவையே அழைக்கிறேன்” எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நங்கையின் கண்கள் அகல வீரிவதைக் கண்டவன் என்ன என்று கேட்குமுன் அவள் அவன் மீது பாய்ந்து தள்ளியும் விட்டாள்..

அப்படியும் கீழே விழாமல் கொஞ்சம் சமாளித்தவன் அவனைத் தாண்டி அந்த வேப்ப மரத்தில் தைத்திருந்த அம்பைப் பார்த்து வியந்தான்.. மெல்ல அதை எடுக்கப் போகையில் அதன் நுனியில் இருந்த பொருளைக் கண்டதும் அவனது முகம் வியப்பின் எல்லைக்குச் செல்கையிலே அந்த நங்கையின் குரல் சற்றுத் தொலைவில் கேட்டது!

தொடரும்…

chinnakkannan
17th August 2014, 12:30 AM
கடல். மைனா..

சின்னக் கண்ணன்..

2.பள்ளத்தில் விழுந்த நிலவு!

எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடக்காமல் எதிர்பாராமல் கோர்க்கப் படும் சம்பவங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. என நினைத்துக் கொண்டான் வீரா...இன்னும் கொஞ்சம் யோசித்து வேறு எதுவும் தத்துவ்ம் கிடைககாததால் என்ன நடந்தது என யோசித்தான்.. விடுமுறையாகச் சில நாட்கள் கிடைத்ததைக் கொண்டாடிட அரண்மனையிலிருந்து குடந்தைக்குப் போவதற்காகத் தான் கிளம்பும் போது தனது சித்தப்பா இன்னொருவருடன் வந்தது, அவருடைய முகத்தில் தெரிந்த ராஜ களை,பின் அவரும் தனது நண்பர் தான் எனச் சொல்லி “வீரா.. இவரையும் சித்தப்பா என்றே அழை.. அவருக்குத் துணையாக இரு”என்று சொன்னது, அவரும் தானும் கிட்டத்தட்ட் முக்கால் நாட் பொழுது ஒன்றாக வந்தது, குடந்தை செல்லாமல் இந்தப் பள்ளி கொண்ட புரம் சாலையில்புரவியைத் திருப்பி அக்ரஹாரத்திற்கு வந்தது, வீட்டின் கதவைத் தட்டிய்தும் வெளிப்பட்ட அரதப் பழசானாலும் பொருத்தமான உவமையான வெண்ணிலவு முகம் கொண்ட இள மங்கை, அவள் தன்னை அழைத்தது..பின் இப்போது இந்த அம்பு..

அந்த அம்பின் நுனியில் சிக்கியிருந்த அந்த ச் சின்ன மோதிரத்தை எடுத்துப் பார்த்தான் அவன்..ஒற்றை முத்தும் அதைச் சுற்றி பொன்னில் வட்டமாய் இருக்க அதைப் பார்த்தபடி இருக்கையில் உதவி” என அந்த அர்ச்சகர் பெண்ணின் சிறு குரல் கேட்கத் திகைத்துப் பார்த்தால் அவள் அங்கு இல்லை..

ஓ.. அவள் தள்ளி விட்டதுமே அந்த அம்பை எடுத்துப் பார்ப்பதில் புத்தியைச் செலுத்திவிட்டதை எண்ணி தன்னையே கொஞ்சம் நொந்த வீரன் அவளுக்கு என்னாயிற்று என்று பார்த்த போது வியந்து போனான்..

அந்தவேப்பமரத்தின் பின்னால் ஒருபள்ளம் இருந்திருக்க வேண்டும்..அதில் அவ்ள் விழுந்திருக்க அவளது கைகள் மட்டும் பொன்னிறமாய் வெளியில் தெரிந்தன.. கை நீட்டி அவளைத் தூக்குவ்தற்காக முயன்றவன் – – சற்று வேகமாக முயற்சித்த போது பின்னாலிருந்து யாரோ தள்ளிவிட அவனும் அந்தப் பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்.. ஆனால் விழவில்லை!

தொடரும்

chinnakkannan
17th August 2014, 09:48 PM
கடல். மைனா..
சின்னக் கண்ணன்..

3.எழுந்த பருவம்,! ஓடிய உருவம் !

அவனுக்கோ நீச்சல் தெரியாது..ஆனால் திடீரென வெள்ளம் அந்த கிராமத்தில் உட்புகுந்து அடித்துச் செல்வதைக் கண்டதும் தப்பித்து தனது வீட்டின் கூரையின் மீது ஏறினான்.. நல்ல வேளை மனைவி ஊரில் இல்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்த பொழுது வெள்ளத்தில் தனது ஐந்து வயது மகன் சிக்கியிருப்பதைக் கண்டு எதையும் யோசிக்காமல் பாய்ந்து நீரில் விழுந்து மகனையும் இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் போக்கிலேயே சென்று குறுக்கே மிதந்தகட்டையைப் பிடித்துக் கொஞ்சம் அருகிருந்த வீட்டின் கூரையில் ஏறிப் பெருமூச்சு விட்டான்.. அங்கே ஏற்கெனவே இருந்த அவனது நண்பன் அவனிடம் உனக்கோ நீச்சல் தெரியாது எப்படி இப்படிச் செய்தாய் எனக் கேட்க, தெரியவில்லை, என் மகன் முழுகுகிறான் என்று பார்க்கையில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது, எப்படி விழுந்தேன் எப்படி எழுந்தேன் எனப் புரியவில்லை என பதிலிறுத்தான்..

கிட்டத்தட்ட அந்தத் தந்தையின் மன நிலையில் தானிருந்தாள் பள்ளத்திலிருந்த அர்ச்சகரின் மகளும்.. தான் விழுந்த பள்ளம் தன் தோளளவே இருந்தாலும் மேலிருந்து வீரன் தன்னை இழுக்கட்டுமென்று இளமனதின் ஆவல் உந்த இருந்தவள் வீரனின் பின்னால் ஒரு கறுப்பு நிழல் விழுவதைக் கண்டதும் ச்ற்றே அச்சத்தின் வசப்பட்டாளெனினும் அதைப் பட்டென உதறி தனது காலை அகல எழுப்பி மூச்சையும் அடக்கி டபக்கென பள்ளத்தின் மேலேறி வீரனையும் பற்றிப் பிடித்தவாறே சற்றுப் புறம் தள்ளி விட்டதுமல்லாமல் அவனுடன் புரண்டும் விட்டாள்..

”என்னாயிற்று எனக் கேட்ட வீரனின் குரலைப் பொருட்படுத்தாமல் படுத்தவண்ணம் நோக்கிய அவள் விழிகளில் பட்டது தூரத்தே கறுப்புத் தலைப்பாகை அணிந்து ஓடிக் கொண்டிருந்த ஒரு உருவம்..பின் மெல்ல எழுந்து கொண்டிருந்த வீரனுடன் அவ்ளும் எழுந்து மறுபடியும் கேட்டாள், “ நீங்கள் யார் என்று சொல்லிவிடுங்கள் இப்பொழுதாவது”

“நான் சொல்கிறேன் மகளே” எனக் குரல் வரப் பார்த்தால் புன்முறுவல், தாடி மீசையுடன் கம்பீரச் சித்தப்பா..

தொடரும்

chinnakkannan
17th August 2014, 10:23 PM
கடல். மைனா..
சின்னக் கண்ணன்..

4.இலக்கணமும் இலக்கியமும்

நரைத்த தலை, பருத்த உடல், முகமெங்கும் நரை தாடி. பரந்து விரிந்த மார்பு, தோள்களில் தெரிந்த வாட்காயத் தழும்புகள், இவையெல்லாவற்றையும் மீறிக் கண்களில் தெரிந்த கருணை..அர்ச்சகரின் பெண் சித்தப்பாவைக் கேள்விக் குறியாகப் பார்த்துக் கொண்டிருக்க, “இவன் பெயர் பாவையே..இளவீரன்..” என்றார் அவர். அவள் விழிகளில் சீற்றம் கொண்டு “ஆமாம்..புளிமாங்காய்..” எனச் சொல்ல அவர் விழுந்து நகைத்தார்..

“பெண்ணே.. அவனுடன் பழகுவதற்கு முன்னமேயே இப்படிச் சொல்கிறாயே..பழகியதற்குப் பின்னல்லவா நீ சொன்னது தேவைப்படும்” என மேலும் நகைக்க, “சிற்றப்பரே, நான் இலக்கணம் சொன்னேன்.. நீங்கள் என்னவென்றால் இலக்கியம் சொல்கிறீர்கள்.. இவர் பெயர் தான் இளவீரன் என ஏற்கெனவே சொல்லிவிட்டாரே..இவரை ஏன் அந்த தொண்டை மண்டல ஒற்றன் கொல்லப் பார்த்தான்” என்றாள்.

அதுவரை மெளனமாகவும் பணிவுடனும் இருந்த வீரன் அவளிடம் “எழில்..உனக்கு எப்படித் தெரியும் இது” எனத் தோளைத் தொட்டுக் கேட்க அவள் சற்றே திமிறி,”வீரரே எதற்கெடுத்தாலும் உம்மை காப்பாற்றத் தெரிந்த எனக்கு இது தெரிவதில் வியப்பென்ன..அது ச்ரி.. என் பெயர் உமக்கெப்படித் தெரியும்” என்றாள்..

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்..இவற்றைத் தவிர இந்தப் பெண் ஜென்மங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதோ எனத்தன்னைத் தானே நொந்து கொண்ட வீரன், “உனக்குப் போய் எழில் என்று ஏன் பெயர் வைத்தார்கள் எனப் புரியவில்லை” எனச் சொல்ல எழில் “உம்மைப் போய் இருமுறை காப்பாற்றினேனே..என்னைச் சொல்லவேண்டும்” என முறைத்தபடி சித்தப்பா என்ன செய்கிறார் எனப் பார்க்கையில் சிற்றப்பா அந்த முத்து மோதிரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்..

தொடரும்

chinnakkannan
18th August 2014, 09:03 PM
கடல். மைனா..

சின்னக் கண்ணன்..

5. முத்து மோதிரம் சொன்ன கதை

”சொல்லுக பெண்களின் சோர்விலாத் தோற்றமதை;
சொல்லற்க இன்ன பிற!”

எனத் தன் சகதோழன் சேயோனின் பாடலும்,

“ சீரிய பாம்பின் சீற்றமும் சினங்கொண்ட பெண்ணின் சீறலும் ஒன்று”
என ஓலை நறுக்கில் எழுதிச் செருகி வைத்திருந்த தனது இல்லத்து மாட்டு வண்டியோட்டியும் வீரனின் நினைவுக்கு வந்தார்கள்.. ம்ம் பெண்களிடம் வார்த்தைகள் பேசுவதற்கே தயங்குகின்ற தான் எப்படி இந்த இளம் வாழைக்குருத்திடம் நகைச்சுவையாய்ப் பேச முற்பட்டேன் என்று எண்ணிய படி சினங்கொண்ட விழிகள் கொண்ட எழிலைப் பார்த்துப் பேச முற்பட்டான். நங்காய்.. உனது உடல் முழுமையும் அழகுக்கே அழகு செய்வது போல் அமைந்திருக்கின்றபடியால் உனக்கு எழில் என்று வைக்காமல் எண்ணவொட்டா எழில் அல்லது பேரெழில் என வைத்திருக்கலாம் எனச் சொல்லவந்தேன்” என எழிலின் சினங்கொண்ட கண்களைப் பார்த்துப் பேச எழில் சற்றே குளிர்ந்தாள்..

பின் சிற்றப்பனை நோக்கியவள் அவர் அந்த மோதிரத்தின் பின் பக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாள்..”என்ன கண்டு விட்டீர் சிற்றப்பா” என வினவவும் செய்தாள்.

சிற்றப்பா சற்றே புன்சிரித்து கொஞ்சம் பொறு மகளே..விளக்கம் வீட்டில் சொல்கிறேன்”எனச் சொல்லி வீட்டை நோக்கி நடக்க எழிலும் வீரனும் பின் தொடர்ந்தனர்..

எட்டுக் கட்டு வீட்டின் பின்புறக் கொல்லைப்பக்கத்தின் கதவு சற்றே திறந்தவண்ணம் இருக்க அதை மேலும் திறந்து உள் நுழைந்தவர்கள் கொஞ்சம் திடுக்கிட்டனர்…பார்த்த சிற்றப்பனுக்கு மட்டும் கொஞ்சம் புரிந்தது அது முத்து மோதிரத்தின் செயல் தானென்று..

(தொடரும்)

chinnakkannan
18th August 2014, 09:06 PM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

6. சிவனும் ஸ்ரீ ராமனும்

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பது சாலச் சிறந்த ஒன்று தான் என்றாலும் சிலவிஷயங்கள் அவ்வண்ணம் செய்ய முடிவதில்லை..உதார்ணமாக ஒருவன் ஒரு பெண்ணின் மேல் மையல் கொண்டால், அவன் அவளைப் பற்றி அறிந்து, அவளது பழக்கவழக்கங்க்ளைத் தெரிந்து, பின் மெல்ல அவளிடம் சில பல சங்கதிகள் பேச ஆரம்பித்து பின் தன் காதலைச் சொன்னால், அந்தப் பெண்ணும் அவனிடம் ஈர்ப்புகொண்டிருந்தால் அந்தக் காதல் கண்டிப்பாய் வெற்றிபெறும். அதை விடுத்து பெண்ணைப் பார்த்தமாத்திரத்திலேயே “பெண்ணே.. நான் உன்னை விரும்புகிறேன்” என ஒருவன் சொல்வானாகில் அவனது கன்னம் பழுக்க வாய்ப்புமிருக்கிறது.. எனில் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளைப் (?)பற்றி எழுதும் போது அதன் சுற்றுச் சூழலைப் பற்றி எழுத சரித்திர ஆசிரியனுக்கு(?!)த் தேவைப் படுகிறது.. எனில் இந்தக் கதை நிகழ்ந்த இடமான புன்னைபூதங்குடி என்றும் திருப்புள்ள் பூதங்குடி என்றும் அழைக்கப் பட்ட இடத்தைப் பற்றி அடுத்துப்பார்க்கலாம்..

சாதாரணமான மனிதர்களுக்கு மனதை சோகம் கவ்வும் போது சோர்ந்துபடுத்து விடுவார்கள்.. அதை “அப்படியே சிவனேன்னு தூங்கிட்டேம்ப்பா எனச் சொல்வதுமுண்டு!. ஸ்ரீராமன் ஜடாயு மரணமடையக் கண்டு மிக்க சோகத்துடன் அவருக்கு உண்டான கிரியைகளைச் செய்து முடித்து பின் சிவனே என்று படுத்த ஸ்தலம் திருப்புள்ள பூதங்குடி என்று சொல்வார்கள்..வல்வில் ராமன் அனந்த் சயனத்தில் பூமாதேவியுடன் அருள் பாலிக்கும் கோவில் உள்ள இடம்..திருமங்கை ஆழ்வார் மங்களாஸாஸனம் பாடிய ஸ்த்லமான பு்ள்ள பூதங்குடி அன்றைய கால கட்டத்தில் கோவில் பிரகாரம் சற்று பெரிதாய் இருக்க அமைந்திருந்தது..

கோவிலின் முன்புறமிருந்த தெருவில் இரண்டுபக்கமும் வ்ண்ண மலர், இன்ன பிற விற்கும் அங்காடிகள் நிறைந்திருக்க அதை அடுத்த தெருவில் தான் கோவிலின் அர்ச்சகர் வீர நாராயணரின் வீடு அமைந்திருந்தது..

அந்த வீட்டின் பின்புறம் தான் இளவீரனும் மற்றவரும் நுழைய, உள்ளே ஏழாம் கட்டில் இருந்த ஊஞ்சலில் ஒருவர் அமர்ந்து சில ஓலைகளைப்படித்துக் கொண்டிருக்க, இவர்கள் நுழையவும் நிமிர்ந்தார். இந்த கிராமத்தில் இந்த வீட்டில் இப்படி அனைவருக்கும் அறிந்த அந்த நபர் வருவார் என எதிர்பார்க்காததால். அவர்கள் திடுக்கிட்டனர்..


(தொடரும்)

pavalamani pragasam
19th August 2014, 08:36 AM
:clap::clap::clap: கலக்குறீங்க, சி.க.! அப்படியே கல்கியையும், சாண்டில்யனையும் கலந்து கட்டி உருட்டி பக்குவமாய் சி.க.வின் முத்திரை குறும்பெனும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்த லட்டுருண்டை என்னமாய் தித்திக்கிறது! ஜமாயுங்கள்!

chinnakkannan
19th August 2014, 10:27 AM
பி.பி க்கா :) மிக்க நன்றி..:) இன்னும் வெகுதூரம்போக வேண்டும்..கதையில..

chinnakkannan
19th August 2014, 10:42 PM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

7. கிருஷ்ணா, மாதவா, ராஜாதித்தா

நட்பு என்பதை சிருஷ்டித்த கர்த்தா எதற்காக விரோதம் என்பதையும் சிருஷ்டித்திருக்க வேண்டும்.. ஒரு வேளை அது நியதியோ..பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம் என்பது போல.. விரோதத்தால் விளைவது பகை..பகையால் விளைவது பல தீய செயல்கள்.. அதுவே இரண்டு நாடுக்ளுக்கு நடுவில் பகை எனின் என்னாகும்.. ஏகப்பட்ட பொருட்சேதம் மற்றும் மற்றற்ற உயிர்சேதங்கள் தான்..

அப்படி சோழ நாட்டின் முதன்மைப் பகைவனான ராஷ்டிர கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் ஆச்சார்யரும் அவனது அரசியல் கவலைகளில் பங்கு பெறுபவரும் அவனது நம்பிக்கைக்கு மிகுந்த பாத்திரமானவரும் ருக்வேத பாஷ்யம் எனச் சிறந்த நூலொன்றை எழுதியவருமான மாதவர் தான் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்.. செவேலென்ற தேகத்தின் குறுக்கே முப்புரி பூணுல் வீற்றிருக்க,. பின்பக்கம் நன்றாக வாரி இழுக்கப்பட்ட குடுமியில் ஆங்காங்கே நரை தெரிந்திருக்க மிளகும் உப்பும் கலந்தாற்போன்ற நிறம் அங்கு வைக்கப் பட்டிருந்த் குத்து விளக்கின் விளக்கில் மெல்லிய காற்றால் அசைந்தாடிய ஒளியில் தெளிவாகவே தெரிந்தது. ராஷ்டிர கூட அந்தணர்களின் வழக்கப் படி ஒற்றை மஞ்சள் நிறத் திருமண்ணும் முகத்தில் அவர் அணிந்திருந்தார்..பஞ்சகச்சமாய்க் இடையில் கட்டப் பட்டிருந்த பட்டுச் சரிகை வேஷ்டியின் கீழ் தெரிந்த கால்கள் அந்த வேஷ்டி தொ\டர்ந்திருக்க அதற்கான சிவந்த கரை போலும் தெரிந்து மின்னின.

சற்றே உற்று நோக்குகையில் கொஞ்சம் பின்னால் கை பொத்தி நின்றிருந்த வீர நாராயணரும் தெரிந்தார்.. அவரது முன்னெற்றியில் அணிந்திருந்த நாமத்தில் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகள் அந்த மஞ்சள் வெளிச்சத்தில் வைரத் துளிகளைப் போல் பள பளத்தன..

ஓலைச்சுவடிகளிலிருந்து ஒரு கணம் கண்ணெடுத்துப் பார்த்து மீண்டும் அதில் கண்களைப் பதித்த வண்ணம் உள்ளே நுழைந்தவர்களிடம்- அதுவும் முதலில் நுழைந்த சிற்றப்பாவிடம், “என்ன ராஜாதித்யரே தஞ்சை அரண்மனை எதற்காக இந்தச் சிறு கிராமத்திற்கு வரவேண்டும்” எனப் புன்முறுவலுடன் கேட்க, எழில் அடிக்கடி ஏற்பட்ட அதிர்ச்சிகளை தாங்கிக்கொளவொண்ணாமல் கொஞ்சம் தலைகிறுகிறுத்த படி முன்னேறாமல் நிற்க அடுத்து சிற்றப்பாவும் வீரனும் செய்த செயல் அவளை மேலும் நிலை குலைய வைத்தது

(தொடரும்)

chinnakkannan
19th August 2014, 10:44 PM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

8 சாதகமில்லா ஜாதகம்

”தேங்கும் அழகினைத் தீட்டியே மேலுமே
பாங்காக மாற்றும் பணிவு ” என்ற தனிப்பாடலும்
பணிவு உடையன், இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல, மற்றுப் பிற. என்ற திருக்குறளும் சொல்வது என்ன..எவ்வளவு தான் சொத்து வீரம், இருந்தாலும் சீரிய உடற்பயிற்சி எல்லாம் செய்ததில் உடல் பொலிவு பெற்றாலும் கூட ஒருவன் அடக்கம் கொளாதிருப்பின் அவனது அழகு மாறிவிடும்..பணிவு என்பது ஒரு மகத்தான விஷயம்..தன்னை விட வயதில், அறிவில் பெரியவர்களிடம் மதித்துப் பணிவது,, அனைவரிடமும் இன்சொலே பேசுவது என்பது அந்தக் காலத்தில் பொக்கிஷமாய் எங்கணும் நிறைந்திருந்தது எனலாம்!..

பலகளங்கள் கண்டவரும் முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனுமான ராஜாதித்யர் வெகுசாதாரணமாய் உடை அணிந்து தன் அரண்மனையில் வேலை பார்க்கும் சாதாரணக் காவலனுடன் (ஒருவேளை அவன் சொன்னதும் பொய்யோ) சிறியதொரு கோவிலில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் தன் தந்தையைத் தேடி வருவதே ஆச்சர்யமான விஷயம்.இதில் தன் வீட்டிலேயே பகை மன்னனின் ஆச்சார்யரைக் கண்டதும் பொங்கி எழாமல் இருந்தது இன்னொரு ஆச்சர்யம்..

அதை எல்லாம் விட ராஜாதித்யரும் வீரனும் இரண்டடி முன்னால் சென்று அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கவே, எழிலும் செய்வதறியாமல் தானும் வணங்கினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த மாதவர் கிறீச்சென ஊஞ்சல் ஒலியெழுப்ப எழுந்தார்.. மன்னனின் மகனிடம் இப்படி ஒன்றை எதிர்பார்க்காததனால் சற்றே நெகிழ்ந்த மனத்துடன் அவர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து வீரன், எழிலுக்கும் ஆசிகள் வழங்கி தரையில் அமர்ந்து அவர்களையும் அமரச் சொல்லவே அனைவரும் அமர்ந்தனர்..“ஆசார்யார் எல்லாருக்கும் ஆசி வழங்கினீர்..எனக்கில்லையே” என ராஜாதித்யர் பேச்சை ஆரம்பித்தவர் வியந்தார்..மாதவரின் கண்களில் சற்றே கவலை குடிகொண்டிருந்தது..

“ நான் வசிக்கும் நாட்டிற்கும், உன்னுடைய நாட்டிற்கும் நடக்கும் விவகாரஙக்ளில் என் பங்கு ஏதுமிலை ஆதித்தா..இங்கு வந்ததின் காரணம் பள்ளிகொண்ட சயனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனைக் காண எனக்கு வெகு நாட்களாக ஆசை..தவிர இங்கு வந்தபோது இங்கு வந்திருக்கும் மற்றவர்கள் என்னுடன் வரவில்லை..தவிர இந்த ஓலைச் சுவடிகளைப்பார்த்தேன்..அதிலொன்று உன்னுடைய ஜாதகம்” என நிறுத்த ராஜாதித்தர் கேள்விக் குறியாய்ப் பார்க்க, “உன்னுடைய ஜாதகம் வெற்றி உனக்கும, கிருஷ்ணனுக்கும் உண்டு என்கிறது” எனச் சொல்லிக் கொஞ்சம் சோகப் புன்முறுவல் செய்தார்..

(தொடரும்)

pavalamani pragasam
20th August 2014, 08:19 AM
ம்ம்ம்....அப்புறம்?

chinnakkannan
20th August 2014, 08:56 PM
கடல் மைனா..
சின்னக் கண்ணன்..

முன்கதைச் சுருக்கம்!

அவள் அழகான எழில்..அல்லது எழிலான அழகி..அவன் காவல வீரன்..வீரக்காவலன் எனலாம்..மூன்றாவதாய்ப்பேசுதற்கு ஒரு இளவரச சித்தப்பா. காலம் பராந்தக சோழன் காலம்; இருப்பது புன்னை பூதங்குடி; பார்ப்பது எதிரியின் குரு நாதரை..குரு நாதர் எதிரிக்கும் வெற்றி, சித்தப்பாவிற்கும் வெற்றி எனச் சொல்லிக் குழப்புகிறார்..

புரியவில்லை எனில் தயை கூர்ந்து முப்பத்திரண்டு பாராக்கள் படித்து விடவும்!! அடுத்த போஸ்டில் ஒன்பதாம் அத்தியாயம்!.

chinnakkannan
20th August 2014, 08:58 PM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

9 பால், பழம், பனையோலை..

மெளனம் என்பது எப்போது விளைகிறது.?. காதலன் தன் காதலியை முதன் முதலாகத் தீண்டும் போது அவளுடல் சிலிர்த்து வெட்கத்தில் நா ஒட்டிக்கொள்ள பேசவொண்ணாத நிலை ஏற்படுகிறது..பின்னால் அவள் பேச முற்பட்டால் விளையும் விளைவுகள் அனேகம்!. பெற்று வளர்த்து பொக்கிஷமாய் வளர்ந்த பெண் மணமாகிப் போகையில் தகப்பன் கொள்வது ஒருவித மெளனம்.. வாழ்க்கையில் நிகழும் சோகத் தருணங்களிலும் மெளனம் முதன்மைப் பங்கை வகுக்கிறது. எனினும் தன் வீட்டிற்கு ஆசார்யரும் ராஜாதித்தரும் வந்திருந்தும் அவர்களை சரிவர உபசரிக்காமல் தான் மேலும் மெளனமாய் இருப்பது தவறு என்பதை உணர்ந்த வீர நாராயணர் தனது மெளனத்தைக் கலைத்தார்..

“ஆசார்யரே, ஆதித்தரே..அடுத்தடுத்து தங்கள் வரவால் கொஞ்சம் மனம் குழம்பி செய்ய வேண்டியவற்றை மறந்து விட்டேன்.. என்னை ஷமிக்க (மன்னிக்க) வேண்டும்..வானில் முழு நிலவு ஏறிவிட்டது.. எனில் இராப் போஜனத்திற்கு அடியேன் சிறியதாய் உணவளிக்க விரும்புகிறேன்..செய்யட்டுமா” எனக் கேட்க ஆசார்யர் மெல்லத் தலையசைத்ததும் எழிலிடம் “ எழில், போய் வேண்டிய ஏற்பாடுகள் செய்யம்மா” என்றதும் எழிலும் சற்றே தன் அழகிடை ஒசித்து ஒசித்து தனது கரு நாகப் பாம்பையொட்டிய ஒற்றைப் பின்னலை முன்னால் இட்டுக் கொண்டு வெகு நளினமாய் உள்ளே சென்றாள்..

பின்னர் ஆசார்யர் சொன்னது புரியாமல் திகைத்திருந்த ராஜாதித்தர் அதை வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தார்..”மாதவரே, சற்று நாழிகைக்கு முன்னால் இந்த முத்து மோதிரம் இந்த வீரனை அடைந்தது..அதன் பின்னால் இருக்கும் ராஷ்டிர கூட மொழியில் (கன்னடம்) எழுதப் பட்டிருக்கும் எழுத்துக்களை வைத்து அங்கிருந்து சிலர் இங்கு வந்திருப்பார்கள் என நினைத்தேன்..அதுவும் இந்த மோதிரம்…”

சொல்லிக் கொண்டு வந்தவர் நிறுத்தினார். காரணம். எழிலும் அவள் அன்னையும் ஒரு பணிமகளும் சில வெள்ளித் தட்டுகளில் பொன்னிற மாம்பழங்களையும், கருகருவென்ற திராட்சைப் பழங்களையும், இன்னபிற கனிகளையும் வைத்து, பின் ஒரு தாமிரப் பாத்திரத்தில் சுடச்சுடக் கொதித்திருந்த பசும்பாலையும் கொண்ர்ந்து பரத்தினர். சூடாக இருந்த பசும்பாலின் மேல் சிறிதே மஞ்சள் பொடி இட்டிருந்ததால் அதுவும் பார்க்கப் பொன்னிறமாய்ப் பளபளத்தது.. தனது ஒற்றைப் பின்னலை வட்டமாய்ச் சுருட்டிக் குட்டிக் கருமேகமாய்த் தலையில் வைத்திருந்த எழில், மடமடவென விருந்தினர் வந்தால் கொடுப்பதற்காக உள்ளே வைத்திருந்த வெள்ளிக் கிண்ணங்களில் பாலை இட்டு, ஒவ்வொரு பழத் தட்டையும் ஒரு குவளைக் கிண்ணத்தில் பாலும் தனித்தனியாக அனைவரிடமும் வைத்தாள்.. வீரனுக்கருகில் பழத்தட்டை வைத்த போது எதேச்சையாகவோ வேண்டுமென்றோ அவள் கண்கள் அவனது கண்ணை ஊட, பழத்தட்டைப் பார்த்த வீரன் கண்ணில் ஒரு மாங்கனியின் கீழ் சொருகியிருந்த சிறு ஓலை தட்டுப் பட்டது..

(தொடரும்)

chinnakkannan
20th August 2014, 09:00 PM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

10 ரேவா தேவியும் ரேணுகா தேவியும்.

பசி என்பது என்ன..உடலுழைத்துக் களைப்படைகிறது.. அப்போது உடலுக்குத்தேவை என்ன? சக்தி. அப்படி உடலுக்குப்
“ பிணைக்கின்ற சக்தியை பக்குவமாய்ச் சொல்லும்
அணையா நெருப்புதான் ஆம்”. என்பர் பெரியவர்கள்.. அதுவும் சூரியன் நடுவில் ஏறிவிட்ட உச்சிப் பொழுதில் தான் தஞ்சையிலிருந்து புறப்பட்டதாலும் எங்கும் தங்காமல் நேரே வீர நாராயணர் வீட்டிற்கு வந்து விட்ட போதிலும் நிகழ்ந்த சம்பவங்களால் மறைந்திருந்த ராஜாதித்யரின் பசியானது பழங்களைக் கண்டதும் மேலெழுந்தது எனலாம்..அரை நாழிகைப் பொழுதில் பழங்களும் பாலும் எப்படி மறைந்தது என்பதை அறியவில்லை அவர்..மாதவரும் கூட ருசித்து அருந்தினார். பின் கொல்லைப் புறத்தில் கைகழுவி மறுபடியும் உள்ளமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

“மாதவரே..எனக்கு ஒரு தகவல் கிட்டியிருந்தது..அதைச் சரிபார்க்கவே இந்த இடத்திற்கு நான் வந்தேன்..” என்றதற்கு மாதவர் எதுவும் பதில் பேசாதிருக்கத் தொடர்ந்தார்..”உங்கள் இளைய இளவரசி ரேணுகா தேவியும் மெய்க்காவல் தளபதி பூதகனும் குடந்தைப் பக்கம் வந்ததாகக் கேள்விப் பட்டோம்..இங்கு இருக்கும் வீர நாராயணருக்கு எதுவும் தெரியுமா எனக் கேட்பதற்கு வந்தோம்.வந்த இடத்தில் உமது தரிசனம் கிடைத்தது..தவிர எங்களது ஒற்றன் ஒருவன் இந்த முத்து மோதிரத்தை எங்களுக்கே அனுப்பியிருக்கிறான்..இது இளவரசியின் மோதிரம் என நினைக்கிறேன்..” என்றார்.

மாதவர் சிரித்து, “ ராஜாதித்யரே.. உமக்கு அறியாத விஷயமில்லை.. ராஷ்டிர கூட மன்னன்.. நானிருக்கும்நாட்டு மன்னன். கிருஷ்ணனுக்கு நாட்டை விஸ்தரிக்க வேண்டும் என ஆசை தான்..ஆனால் அதற்காக தனது சகோதரியையும் மெய்க்காவலனையும் அனுப்பியிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது..ஆனால் அவ்வண்ணம் செய்பவரல்ல எம் மன்னர். தவிர கிருஷ்ணருக்கு முதல் தங்கையான ரேவா தேவிக்கு ரேணுகாவென்றால் மிகப் ப்ரியம்..அவராவது தனியாக வருவதாவது.. “ என்றார்..

ராஜாதித்தர் மெல்லப் புன்முறுவல் புரிந்தார்..”ஆசைப் படுவதற்கு அளவு என்பது உண்டு மாதவரே.. கிருஷ்ணரின் ஆசை கொஞ்சம் பேராசை..சோழ நாடு அதற்கு இடம்கொடாது..” எனச் சொல்கையில் சுற்றுமுற்றும் பார்த்த போது அங்கே வீரனையும் எழிலையும் காணாது திகைத்தார்..”வீரன் கைகழுவச் சென்ற போது எழிலும் தொடர்ந்ததைப் பார்த்தேன்..பார்த்து வரவா” என வீர நாராயணர் கேட்க ராஜாதித்யர் தடுத்தார்..”வரும் போது வரட்டும்..மாதவரிடம் கொஞ்சம் பேச்சிருக்கிறது” எனத் தொடர்ந்தார்..அதே சமயத்தில் கொல்லைப் புறத்தில் வீரன் ஒரு பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதை அவர் அறியவில்லை..

(தொடரும்)

pavalamani pragasam
21st August 2014, 07:44 AM
சஸ்பென்ஸ் கொல்கிறதே!!!

chinnakkannan
22nd August 2014, 10:16 AM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

11 அசைந்த சிற்பம்.

ஒரு பொருள், ஒரு காட்சி, ஒரு உருவம் என்பது மனதில் பதிவதென்பது எப்போது?.. அந்தப் பொருள் மிக அழகிய ஒன்றாக இருக்கவேண்டும். அந்தக் காட்சி மறக்க இயலாத இயற்கைக் காட்சியாக-உதாரணத்திற்கு சில சமயங்களில் வெளிர் நீலம் படர்ந்த வானத்தில் வெண்மேகங்கள் பலவிதமாய்ச் சூழ்ந்து சிலப் பல உருவங்களைத் தோற்றுவிக்கும்..யானை போல ஒரு மேகம் வாயைத் திறந்தாற்போலிருக்க அதன் காலடியில் முதலையைப் போல ஒரு மேகம் கவ்வுவது போல-இன்னபிற விதமாகவும்- இருப்பின் மறக்க நாளாகும்.. ஒரு உருவம் என்றால்- ஆணாயிருப்பின்கட்டுக்கோப்பான உடல்,தெளிவான கண்கள்,தீர்க்கமான அறிவு- பெண்ணாயிருப்பின் மேற்கண்ட மூன்றுடன் கூட பிரமிக்க வைக்கும் அழகு இருந்தால் அந்தத் தோற்றம் சுங்கச் சாவடியில் வரி செலுத்தியதும் பண்டங்களுள்ள பெட்டிகளில் வைக்கப்படும் அரக்கு முத்திரைபோல மனதில் சப்பக் எனப் பதிந்துவிடும் எனலாம்.!

அதுவும் ராஷ்டிரகூடச் செல்வி ரேணுகா தேவியை எட்டு வருடம் முன்னர் பார்த்த போதே அவள் முகத்தில் தெரிந்த பொலிவு,தெளிவான பேச்சு, அழகிய முகம் எல்லாம் ராஜாதித்யரின் மனத்தில் பதிந்தே தான் இருந்தன.இந்த வருடங்களில் அவள் உடல்நில பலவித மாற்றங்கள் கொண்டிருக்கும் என்பது தெரிந்தாலும்அவள் வந்திருக்கிறாள் எனற சேதி வந்ததும் பார்க்க வேண்டும் என ஆவல் உந்தியதாலும் என்ன காரணம் என அறிவதற்காகவும் வந்து மாதவரிடம் கேட்டால் மாதவர் சொன்ன பதில் அவருக்கு ஏமாற்றத்தையே விளைத்தது. வீரனைத் தேடிச் செல்ல நினைத்த வீர நாராயணரையும் தடுத்து நிறுத்தி மாதவரிடம் மறுபடி கேட்டார்..மாதவர் மெல்லிய முறுவலுடன்“ ராஜாதித்யா எனக்குத்தெரிந்தால் சொல்ல மாட்டேனா..சரி.நான் கேட்பதற்குப் பதில் கூறு..அரிஞ்சயன் காஞ்சி அரண்மனையிலா இருக்கிறான்..” எனக் கேட்டார்.

வியப்பின் வசப்பட்டார் ராஜாதித்யர். தானும் தந்தையும் போன மாதம் தான் ஆலோசனை அறையில் முடிவெடுத்து அரிஞ்சயனை காஞ்சி அரண்மனைக்கு அனுப்பியிருக்க இவருக்கு எப்படித் தெரிந்தது”என. பதிலுக்கு “ஆமாம்” என்று மட்டும் சொல்ல “இல்லை..காஞ்சியின் வரதனையும் தரிசிக்கலாம் என நினைத்திருக்கிறேன்..ம்ம் அது பற்றி உன்னிடம் காலையில் சொல்கிறேன்” என்ற மாதவர் வீர நாராயணரிடம் “ நாராயணா..எனக்கு தலைக்கு ஒரு பலகையும் ஒரு விரிப்பும் கொடுக்கிறாயா.. நான்உறங்க நினைக்கிறேன்” எனக் கூற, அவர் அவ்வண்ணமே எடுத்துக் கொடுத்தார்.. ராஜாதித்யரும் மாதவரிடம் விடை பெற்று வீர நாராயணருடன் வாசலுக்கு வந்து “ நாராயணரே.. நான் சிறிது தூரம் நடந்து விட்டு வருகிறேன்” எனச் சொல்லித் தெருவில் இறங்கி நடந்தார்..

தெருவில் அனைத்து வீடுகளும் தூக்கத்தில் மூடியிருக்க, அங்கங்கே சில வீடுகளின் வாசல்களில் இரவுக்காக வைக்கப் பட்ட ஒற்றைத் தீப்பந்தங்கள் சோகையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. முழு நிலவு வருவதற்கு இரு நாள்கள் தானென்பதால் வானத்தில் இருந்த நிலவு நன்றாகவே தன் தண்ணொளியைக் கீழே வீசிக் கொண்டிருந்தது..முதல் ஜாமம் முடிந்து இரண்டரை நாழிகை* கடந்திருந்ததால் உறக்கம் வர மறுத்த சில இனம் தெரியா பூச்சிகளும் சலசலவென மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தன..தெருவைக் கடந்து கோவில் செல்லும் பாதையில் நடந்த ராஜாதித்யர் கோவிலின் பிரகாரத்தின் இடதுபுறமிருந்த நந்தவனத்தில் நுழைந்த போது ஒரு புன்னை மரத்தின் அருகே ஒரு சின்னத் தீப்பந்தம் சிறு ஒளியைச் சிந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அந்த இடத்திற்குச் செல்ல அங்கே அவர் கண்டது ஒரு அழகிய சிற்பத்தின் நிழல்.. அடுத்த நொடியில் அந்தச் சிற்பம் சற்றே அசைந்தது..!..

) (தொடரும்) (* இரவு பத்து மணி)

chinnakkannan
22nd August 2014, 10:19 AM
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

12 புஷ்ப எச்சரிக்கை..!.

சில பேருக்குப் பெயர் வெள்ளையப்பன் என்றிருக்கும்..ஆள் பார்க்கக் கொஞ்சம் கற்சிற்ப நிறத்தில் இருப்பான்.. சில பெண்களுக்கு முத்தழகி எனப் பெயரிருக்கும்.. பற்களின் காரணமாக இருக்குமோ என எண்ணிப் பார்த்தால் பல்வரிசை சற்றே தவறியிருக்கும்! ராஜாதித்யர் தோற்றத்திலும் இளவரசர் தான்..ஆனால் பிராயம் தான் நாற்பதை நெருங்கியிருந்தது. அதனால் அவரது கம்பீரம்,வீரம்,அழகு எதுவும் குறையவில்லை.. இருந்தாலும் மன்னவர் பராந்தகர் நல்ல உடல் நிலையில் இருப்பதால் அவருக்கு ராஜ யோகம் என்பது குறைவு தான்..அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டதேயில்லை.. என்ன, இந்தக் காலத்தைப் போல் அந்தக் காலத்திலும் இப்படிப் பட்ட சூழல் இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யம் தான்!

கோவில் பிரகாரத்திற்கு முன்னமேயே இருந்த அந்த நந்தவனமானது அடர்ந்த புன்னை மரங்கள் பல கொண்டு அமைந்திருந்தது.. கூடவே சில வரிசைகளாய் வைக்கப் பட்டிருந்த புஷ்பச் செடிகள் அந்த நிலவொளியில் சற்றே நிறம் மங்கித் தெரிந்து சிரித்துக் கொண்டிருந்தன.. புன்னை மரங்கள் கூட புஷ்பிக்கும் காலமென்பதால் மேலே வெண்ணிறமும் உள்ளே மஞ்சள் வண்ணமும் கொண்ட தனது பூக்களை மேலிருந்து தரையிலும் அழகாய்த் தூவியிருந்தன..

மேலிருந்து ராஜாதித்தர் நுழைவதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவுப் பெண்ணும் அந்த நந்தவனத்தில் வீசிய தென்றல் காற்றினால் சற்றே சிரிப்பது போலிருந்தது.. திடீரென ஒரு கிராமத்தில் தான் வந்து தங்கும்படியான நிகழ்வு ஏற்படும் என்பதைச் சிந்தித்திராத ராஜாதித்தர் அதைப் பற்றி யோசித்தபடியே நந்தவனப் பாதையில் கொஞ்சம் வேகமாக நடந்தார்..சற்றே பெரிய நந்தவனமாகையால், நிலவொளி காரணமாக இருள் சற்றே மட்டுப் பட்டிருந்தது..இருந்தாலும் சில பல இடங்களில் இருளின் ஆக்கிரமிப்பு கொஞ்சம் அதிகமாய் இருந்தது..அப்படிப் பட்ட இருள் சூழ்ந்த இடங்களில் ஒன்றாய் கொஞ்சம் தூரத்தில் இருந்த ஒரு புன்னை மரத்தின் கீழ் தான் அந்தப் பந்தம் கொளுத்தப் பட்டதைப்பார்த்தார் அவர்..கூடவே நிழல் சிற்பத்தையும் அதன் அசைவையும்..

அந்தப் புன்னை மரத்தை நோக்கி வேகமாக நடக்கையில் தரையில் சிதறியிருந்த புன்னை மரத்தின் புஷ்பங்கள் ஏதோ தகவல் சொல்வது போலும் அவரை ஆர்வமாய்ப் பார்த்தன.. காற்று கூட சற்றே சலசலத்து அவரது தோளிலிருந்த சிறியமெல்லிய துண்டினைத் தட்டி விட்டு அவரைச் சற்றே எச்சரித்தது..ஒருகையை வேகமாகக் காற்றில் வீசி மறு கையால் தாடியைச் சற்றே கோதியபடி அந்த இடத்தை அடையவும் பந்தம் அணையவும் சரியாக இருந்தது..!

(தொடரும்)

pavalamani pragasam
22nd August 2014, 02:04 PM
திக் திக் திக் சஸ்பென்ஸ்! வர்ணனைகளும் உபமான உபமேயங்களும் அருமை!

chinnakkannan
23rd August 2014, 11:00 AM
கடல் மைனா..

*
சின்னக் கண்ணன்..

*
13 இருளும் ஒளியும்..!.

*

மனதில் சோகம் நிரம்பியிருப்பின் சோக இருள் சூழ்கிறது என்கிறோம்..அதுவே உறக்கம் வருகிறது எனில் விளக்கைத் தூண்டி அணைத்து விட்டு, கண்களை இறுக்க மூட்டி இருளை வரவழைத்துக் கொள்கிறோம். அதுவரை பார்வையில் இருந்த வெளிச்சக் காதலி வெறுப்புடன் விலகிச் செல்ல உறக்கக் காதலி வந்து நம்மை ஆட்கொள்கிறாள்!. ஆனால் புன்னை மரத்தடியை நோக்கி நடந்திருந்த ராஜாதித்தரின் கண்கள் திறந்திருந்தாலும் முன்னால் ஒரே இருளோவென்று இருந்தது.- அதுவும் அதுவரை சிறு வெளிச்சம் இருந்து மறைந்ததால்.. அவரது இடதுகை கொஞ்சம் எச்சரிக்கையாக இடையிலிருந்த குறுவாளுறையைத் தடவிக் கொண்டது..வேகவேகமாக அந்தப் புன்னை மரத்தின் பின்னே சென்றால் வியப்பு ஆட்கொண்டது அவரை..இருள் முழுவதுமாக அந்த மரத்தருகே போகும் வரை சூழ்ந்திருந்ததாலும் பின்னால் கொஞ்சம் கிளைகளினூடே பாய்ந்த நிலவொளியில் சற்றே மரத்தில் சாய்ந்து கண்களில் சிரிப்பு மின்ன அவரைப் பார்த்தவாறு மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தது ஒரு பெண்ணுருவம்..

*

ராஷ்டிர கூடப் பெண்களின் அந்தக் கால வழக்கப் படி தலையில் சேலையை முக்காடு போல் போர்த்தியிருந்தாள் அவள்.. அவளது புன்னை மரப் புஷ்பத்தின் வெண்மையை ஒத்த நாசியில் சொகுசாக உறவாடிய ஒற்றைவட்டப் புல்லாக்கு அவள் முகத்தின் அழகைக் கூட்டியது.. நெற்றியில் அணிந்திருந்த ஒரு வைரப் பொட்டு கீழே அவள் கண்கள் பளிச்சிடும் அழகைக் கண்டு பொறாமையில் ஒரு மாற்றுக் குறைவாய்த் தான் ஜொலித்தது.. செக்கச் சிவந்த மாதுளைக் கனிகளின் முத்துக்களைப் போன்ற உதடுகள் நீரோட்டம் கொண்டு மிகுந்து அந்த நிலவொளியிலும் மினுமினுத்தன.. சின்னதாகப் புன்னகை புரிந்ததில் அவளது சதைப்பற்று மிகுந்த மாம்பழம் போன்ற கன்னங்களில் ஒற்றைக் கன்னத்தில் விழுந்த குழியானது இந்த அழகி எவனுக்குக் குழி பறிக்கப் போகிறாளோ என்பதை எண்ணியதாலோ என்னவோ நெற்றியிலிருந்து விழுந்த ஒற்றைக் கரு முடியானது அவள் கன்னத்தில் முட்டி மோதி மறைக்கப் பார்த்துக் கொண்டிருந்தது. கீழே கழுத்து, மற்றும் அழகிய ஆடை மறைத்த உடலினை நிலாவெளிச்சம் அவ்வளவாகக் காட்டாததினால் ராஜாதித்யரால் பார்க்க இயலவில்லை!

*

ஆனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதுவேக வேகமாய் நீரோட்டம் அலையடித்துச் செல்வது போல் அவரது உற்சாகம் பெருக்கெடுத்தது..அவரது வாயிலிருந்து ராஷ்டிர கூட மொழியில் அந்த நாட்டுப் பாடலொன்றும் வந்தது. அது தமிழில் என்னவென்றால்:

கூராய்ப் பாயும் கண்ணவெச்சு கூறுபோட்டே என்நெஞ்ச
வேறு நாட்டில் இருந்தாலும் வேறாய்ப் போகா தெம்மனசு
ஊரக் கொஞ்சம் ஒதுக்கிவச்சு உன்னோ டநான் சேருதற்கு
வாரும் நல்ல காலமின்னு வாய்ப்ப நினச்சுக் காத்திருக்கேன்!”

கொஞ்சம் கரகரத்த குரலில் பாடிய வண்ணமே அவளை நெருங்கினார் அவர்..

*

ராஷ்டிர கூடச் செல்வி ரேணுகா நல்முத்துக்களை மெலிதான தங்கத்தட்டில் இடும் போது எழும்பும் ஒலி போல மெல்ல நகைத்தாள்..”அதாவது வீரப் பெருமகனார், எட்டு வருடம் முன்பு இந்தப் பேதையைப் பார்த்து விட்டுச் சென்றவர் அவளைப்பற்றியே நினைந்திருக்கிறார் என்பதை நான் நம்ப வேண்டுமா என்ன.. இப்படி மாறிவிட்டீர்களே நீங்கள்.. கருத்து,இளைத்து, அதென்ன நரை முடி.. ம்ம் வேஷமாகத் தான் இருக்கும்.. நான் எழுதிய ஓலைகள் உங்களை அடைந்ததா எனத் தெரியவில்லை..பலவிதப்போர்களில் மிக மும்முரமாய் இருந்திருப்பீர்கள்.. என் நினைவு இருப்பதை நான் நம்பத்தான் வேண்டும்” உணர்ச்சி பூர்வமாய் அவள் சொல்கையிலேயே அவள் கண்ணோரம் நீர் துளிர்த்தது. “ஆனால் நான் அப்படி அல்ல” என்றபடி இடையிலிருந்து ஒரு ஓலை நறுக்கை எடுத்துக் காட்ட மங்கிய ஒளியில் அதில் தெரிந்தது சிகப்புக் கோடுகளால் வரையப்பட்ட ராஜாதித்தரின் ஓவியம்.. அதை அடுத்து ரேணுகா செய்த செய்கையினால் வானத்திலிருந்து சாதாரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலவுப்பெண் மிகுந்த வெட்கமடைந்து டபக்கென தன் முகத்தை அருகில் ஊர்ந்த மேகத்திடம் வேகமாய்ச் சென்று மறைத்துக் கொண்டாள்!

*

(தொடரும்)

chinnakkannan
23rd August 2014, 11:06 AM
*
கடல் மைனா..

*
சின்னக் கண்ணன்..

*
14 ரகசியம் இல்லாத ரகசியம்..!.

*

கணப் பொழுது என்பது என்ன.. ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றன் மேலொன்றாக அடுக்கி அதனுள் ஒரு மெல்லிய ஊசியினை விட்டால் ஓரிதழுக்கும் அடுத்த இதழுக்கும் அந்த ஊசி செல்லும் நேரமே அது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். கணப்பொழுதில் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் எத்தனை..அது எப்படி நிகழும் எங்கு நிகழும் என யாராலும் சொல்ல முடியாது..அது கால தேவனின் விளையாட்டு.. அப்போது நிகழ்ந்ததும்அது தானோ என்னவோ..வெகு நாட்களாக மனதுக்கினிய காதலனைப் பிரிந்திருந்த துயரம் ,அந்தக் காதலன் தன்னை மறந்து விட்டானோ என நினைத்திருந்ததில் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த துக்கம், அவனை எதிர்பாராத விதமாகக் கண்டதில் ஏற்பட்ட மனச் சிலிர்ப்பு, பருவமடைந்த உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் இன்ன பிறவால் உந்தப் பட்டு விரைவாய் ராஜாதித்தரை அடைந்து அணைத்து கணப் பொழுதில் அவரிதழ்களில் முத்திட்டு மீண்ட அந்த ராஷ்டிர கூட மங்கையானவள் தளர்ந்து ஒரு கையால் புன்னை மரத்தைப் பிடித்துக் கொண்டும் மறுகையால் கன்னத்தில் தாடி மீசை குத்தியதால் ஏற்பட்ட மென்வலியால் சிறிது துடைத்த படி நின்று கொண்டாள்.. அவளது உடல் நங்கென்று அடிக்கப் படும் கோவில் மணி முதலில் வேகமாகவும் பின்னர் சிச்சிறிதாகவும் அதிர்வது போல மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. அவளது.கண்ணோரம் கொண்ட நீரும் மெல்லிய ஒளியில் பளபளத்தது..

*


ராஜாதித்யருக்கும் அதே கணப் பொழுது தான்..ஆனால் அவர் ஆண்மகன்.. உரங்கொண்ட தோள்கள்..திடங்கொண்ட மனது..தீர்க்கமான கண்கள்.. இருப்பினும் அவரும் எதிர்பாராமல் கிடைத்த பரிசினில் மயங்கி விட்டார்.. பிற்காலப் புலவரொருவர் சொன்னது போல,

முத்தமிட வாய்வழி மோகம் தலைக்கேறி
பித்தம் பெருகிடும் பார்..

என அவருக்கும் ஆகி விட மெல்லச் சென்று உடல் நடுங்கிக் கொண்டிருந்த நங்கையின் அனிச்ச மலரை விட மென்மையான தோளின் மீது சற்றே ஸ்பரிசித்தார். “ரேணுகா” எனச் சொல்லவும் செய்ய அவள் மெல்ல அவர் மீது சாய்ந்தாள்..பின்னர்….

*

விழிகள் நோக்குகையில் வாய்ச் சொற்கள் பலனற்றதாய்த் தான் போய் விடுகின்றன..இருப்பினும் சிறிது நேரம் கழித்தே “நேரம் கூடிவிட்டதே என நினைத்த ராஜாதித்யர் “ரேணுகா.. நாளைக் காலை கோவிலுக்கு நான் வருவேன்..உன்னைச் சந்திக்க இயலுமா..அல்லது எங்கு சந்திப்பது.. நிறையப் பேசவேண்டும்” என வினவ அவள் முகத்தில் வெட்கத்துடன் கூடிய குறு நகை விரிந்தது..”அதற்குள்ளாகவா போகவேண்டும்” எனக் கேள்வியும் வர, மறுபடி ஓசை வராமல் கெக்கெக்கெக் என சிரித்தபடி மாறன் மலர்க்கணைகளை எய்ய காதல் நாடகம் தொடர்ந்தது ரகசியமாய் அந்த மரத்தடியில்.. அப்படித் தான் நினைத்தனர் இருவரும்..

*

ஆனால் வாழ்க்கையில் எதுவும் ரகசியம் கிடையாது.. நாம் செய்யும் செயல்களை அஷ்டதிக்கு பாலகர்கள், நட்சத்திரங்கள், மரங்கள் என நிறைய சாட்சிகள் பார்த்துக் கொண்டு தானிருப்பர் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.. அது போலவே சரித்திர நாடகங்களில் வருவது போல அந்தக் காதலரிருவரும் தனிமையில் இருப்பதை மரத்தின் பின்னிருந்து இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன!

*

(தொடரும்)

pavalamani pragasam
23rd August 2014, 04:27 PM
நடத்துங்க! ம்ம்ம்..சல்லாபம்!

chinnakkannan
23rd August 2014, 05:20 PM
*

கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

15 வெட்கம் பயம் வியப்பு!.

*

வயிறு நிறையப் பசிக்கிறது..என்ன செய்கிறோம் பிடித்த உணவை ஒரு பிடி பிடிக்கிறோம்… இட்லியாக இருந்தால் ஒரு சின்னக் கணக்கிற்காக பத்து என வைத்துக் கொள்ளலாம்..அதற்கு மேலென்றால் கூட இரண்டு சாப்பிடலாம்..மேலும் சாப்பிட்டால் உள்சென்றது வெளிவந்து விடும்..எனில் எதற்கும் அளவு இருக்கிறது.. நன்றாகப் பாலில் வெல்லம் அரிசி இட்டுக் நன்குகொதிக்க வைக்கப் பட்டு சுத்தமான நறு நெய்யினால் வறுக்கப் பட்ட முந்திரிப் பருப்புகள் இடப்பட்டு நன்கு கிளறப் பட்ட சர்க்கரைப் பொங்கல் தான்..ஆனால் இரண்டு கிண்ணத்திற்கு மேல் உண்ண இயலாது.. திகட்டி விடும்..

*

ஆனால் மெளனம்+உணர்ச்சி இவைகளால் உந்தப் பட்டிருந்த காதலர்களுக்கு இது தெரியாமல் நேரம் நீளத் தான் செய்தது..இத்தனைக்கும் எல்லை மீறிய எதையும் அவர்கள் செய்து விடவில்லை..இது தவறு என்று தோன்றியதாலோ என்னவோ அங்கு வீசிய தென்றல் சற்றே கொஞ்சம் வேகமெடுக்க புன்னை மரத்துக் கிளியிலிருந்த சில பூக்கள் ரேணுகாவின் மீது உதிர்ந்தன..சிவந்து விட்ட கண்களைத் திறந்த ரேணுகா சற்றே ராஜாதித்யரை விலக்கி கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொண்டு விலகி உட்கார்ந்தாள்..

*

” நாளை உங்களைக் கோவிலில் அல்லது வழியில் எப்படியாவது சந்திக்கப் பார்க்கிறேன்” என மெல்லிய குரலில் சொல்ல ராஜாதித்யர் அவளது கரம் பற்றி சிறு முத்தம் கொடுத்து எழுந்து நந்தவன வாயிலை நோக்கி நடந்தார். அதுவரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த கண்களுக்குச் சொந்தக் காரன் சற்றே வெளியில் வந்தான்..

*

காதலில் சேர்ந்திருப்பதும் வேதனை, பிரிவென்பதும் வேதனை எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள் ரேணுகா.. கன்றிப் போயிருந்த தோள்கள், கன்னங்கள் என மெலிதாகத் தடவிக் கொள்கையில் அவள் கண்களில் வெட்கம் குடிகொண்டிருந்தது.. சற்றே திரும்பி தலைகுனிந்து நடக்கையில் அந்த நபரிடம் சற்றே மோதிக் கொண்டு நிமிர்ந்து பார்த்த அவள் கண்களில் ஆச்சரியமும் பயமும் வெட்கத்தை விலக்கிக் குடியேறின..

(தொடரும்)

pavalamani pragasam
24th August 2014, 07:45 AM
அதெப்படி பத்திக்கு பத்தி சஸ்பென்ஸ்???

chinnakkannan
24th August 2014, 10:22 PM
*
கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

16 மாமனும் மைத்துனியும்.

*

கறுத்த உடல்..கொஞ்சம் நீண்டு கழுத்தளவு தொங்கிக் கொண்டிருந்த குழல்.. சீற்றம் மிகக் கொண்ட கண்கள்..கன்னத்தில் ஒற்றைக் கோடாய் வாட் தழும்பால் கொஞ்சம் கொடூரம் பறை சாற்றிய முகம்..ஓங்கு தாங்காய் இருந்து நீண்டும் பரந்துமிருந்த உடல் வாகு..என்ன பானை வயிறு தான் இல்லை..இருந்திருந்தால் கைலாயத்தில் சிவபிரானைக் காத்திடும் பூதகணங்களில் ஒன்று ரேணுகா தேவியின் மேல் மோதியவன் என்று கண்டவர்கள் நம்பியிருப்பார்கள்..

*

தன் மீது மோதிய ரேணுகாவைத் தடுத்தாட் கொண்டு கொஞ்சம் கரகரத்த குரலில் பேச ஆரம்பித்தான் அவன்..”என்ன ரேணுகா..உனது அரசியல் காதலன் என்ன சொல்லுகிறான்” என.. எதிர்பாராவிதமாய் மோதினாள் எனினும் தான் மோதியது தனது சகோதரி ரேவா தேவியின் கணவர் பூதுகனே என் உணர்ந்ததால் சற்றே சுதாரித்தாலும், அவர் தன்னையும் தன் காதலனையும் பார்த்திருப்பாரோ எனப்பயந்திருந்த ரேணுகா அவரது கேள்வி புரியவே கொஞ்சம் அலட்சியத்தின் வசப்பட்டாள் தான்.. கொஞ்சம் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “மாமா..நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றாள்

*

சற்றே உரக்க நகைத்தான் பூதுகன். “ நீ ஒன்றும் சமாளிக்க வேண்டாம்.. நீ அவனைச் சந்தித்ததை நான் பார்த்தேன்.. பின் ஏகாந்தத்தில் இருக்கும் உங்களைத் தொந்தரவு செய்வது தவறென்று இந்த மரத்தின் பின்னாலேயே சற்றே கண்ணயர்ந்து விடப் பார்த்தேன்.. நல்லவேளை..விரைவில் அவன் விலகி ச் சென்று விட்டான்..ம்ம்.. என்ன..உன்னை மணம் புரிவதன் மூலம் நம் நாடுகள் இணையுமா.. நமது ராஜ்ய விஸ்தரிப்புக்குத் துணைவருமா உன் காதல்.. உன்னைக் கண்டிப்பாய் மணம் புரிவான் என நம்புகிறாயா.. ஒன்று தெரிந்து கொள்..எனது உயிரானவள் உனது சகோதரி..உனது சகோதரியின் உயிர் நீ..உனக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் எதுவும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” எனச் சொல்லி நிறுத்தினான்..

*

மாமன் தங்களை முழுக்கப்பார்க்கவில்லை எனக் கொஞ்சம் நிம்மதியான ரேணுகா சற்றே நகைத்தாள்..”கிருஷ்ணச் சக்கரவர்த்தியின் தளபதியான மாமா..உங்கள் மண்ணாசையை பெண் கொடுத்துப் பூர்த்தி செய்ய வேண்டுமா..இருப்பினும் நான் அறிந்தவரை ராஜாதித்யர் என்னைக் கைவிட மாட்டார் என நினைக்கிறேன்..உங்களுடன் உறவு எனக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை அந்த ஆண்டவன் தான் அவருக்குத் தரவேண்டும்” எனப் பதிலிறுக்க பூதுகனின் புருவங்கள் நெளிந்தன.. “புரியவில்லை பெண்ணே.. பகைவன் எனத் தெரிந்தும் நீ ஆசைப்பட்ட படியினால் நாங்கள் பொறுமையுடன் இருக்கிறோம்..உன்னை ராஜாதித்யர் மணந்தால் உறவு பலப்படத் தானே செய்யும்..பராந்தகர் நம்மீதுபடையெடுத்து அழித்தது இன்னும் எம் நினைவில் இருக்கிறது.. இருப்பினும் உன் மீது கொண்ட பாசத்தால்..” பூதகன் சொல்லிக் கொண்டே சென்றதைத் தடுத்துச் சீறினாள் ரேணுகா.. நிறுத்தும் மாமா..நீங்கள் என்னிடம் பாசம் என்பது போல் நடித்து என்னைப் பகடைக்காயாய் பயன் படுத்துகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்” என்றாள்..

*

(தொடரும்)

chinnakkannan
25th August 2014, 10:28 PM
கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*
17 கனல் கண்ணீர், கேள்விகள்

“பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ” என்ற சொலவடை பெரியவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள்.. அஃதாகப் பட்டது பெண்ணும் பீர்க்கங்காயும் படக்கென வளர்ந்துவிடுவார்களாம்..ஆண்கள் வளர்வதிலலை போல என பூதகன் நினைத்தான்.. கங்க நாட்டு மன்னன் பிரத்வீபதியை முறியடித்து வெற்றி கொண்டாலும் கூட அந்த வெற்றியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து இராஷ்டிர கூடச் சக்ர்வர்த்தி கிருஷ்ணனிடம் கொடுத்ததும் அவர் அதை ஏற்காததுடன் தனக்குத் தன் சகோதரி ரேவகா தேவி என்றழைக்கப்படும் ரேவா தேவியை மணமுடித்து வைத்த பெருந்தன்மையையும் நினைத்தான்.. அதே சமயத்தில் அந்தத்திருமணத்தின் போது ரேணுகா தக்கணூண்டு இருந்து இரட்டைப் பின்னல், சீனத்துப் பட்டில் தைத்த சிகப்புப் பட்டுப் பாவாடை, கலிங்க நாட்டுப் பருத்தியில் நெய்த பொன்னிற மேலாடை அணிந்து ரேவகாவை ஒட்டியே நின்று இவனது கரிய நிற உருவத்தை பயந்து.”அக்கை , யாரிது ” எனக் கிசுகிசுக்க, வெட்கம் ததும்பிய விழிகளுடன் ரேவகா,” இது உன்னுடைய பாவா..இனிமேல் பாவா என்றே அழைக்க வேண்டும்” என ராஷ்டிர கூட மொழியில் சொல்ல உடன் பயம் போய் பாவா பாவா என பாசத்துடன் ஒட்டிக் கொண்டது..தானும் அந்தச் சிறுமியின் மேல் மகளைப் போல் பாசம் வைத்தது..ம்ம் எல்லாம் மாயை தானா..


எனில் அந்தச் சிறுமி தான் வளர்ந்து இளம் பெண்ணாகித் தன்னைக் கேள்வி கேட்கிறது..பாவமே தமிழகத்திற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூட்டி வந்தால் பகைவனிடம் கத்தரிக்காய்க் காதல், இப்போது அவளே பகடைக்காயாம்..ஹீம் எல்லாம் நேரம் தான்..


கொஞ்சம் வாய்விட்டே பூதுகன் சொல்லிவிட,”எந்த நேரம் என்கிறீர் மாமா” எனக் கேட்டாள் ரேணுகா. கொஞ்சம் தமிழ் கற்றதும் அறிந்ததும் அவனை மாமாவென்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள் அவள். மேலும் தொடர்ந்தாள் “ சோழரின் மூத்த இளவரசரை அறிமுகப் படுத்தியது யார்..அவரைச் சிலமாதம் தங்கியிருந்து ராஷ்டிர கூட மொழி கற்க வைத்தது யார்.. நீங்கள் தானே..என்னைப் பழகவும் விட்டது நீங்கள் தானே..பின்னர் பின்னர்..”


அவள் கண்களில் கண்ணீர் ததும்பினாலும் கனல் அணையவில்லை.. “எதனால் சென்றார் அவர்..அவர் இருந்த காலத்தில் ஏதுமறியாதவர் போல நீங்கள் ஏதோ ஒரு பொய்சொல்லிவிட்டு கங்க நாட்டைக் கைப்பற்றி அவரது நண்பரி ப்ரத்வீபதியின் மகனான விக்கியண்ணனை – இளம் சிறுவனை படுபாதகமாய்க் கொல்ல வைத்தீர்..பின் அவரது நண்பரையும் கொன்று நாட்டைக் கைப்பற்றினீர்.. என்ன தான் தந்தை ராஷ்டிர கூடத்தை வென்றாலும் கூட அதைத் திருப்பித் தருவதற்கான முயற்சியில் தானே அவர் இருந்தார்..ஏன் அதெல்லாம் செய்தீர்..இப்போது கூட..” பேசிய அவளுக்கு மூச்சிறைத்தது.. “இப்போது கூட அவரை சந்தர்ப்பம் கிடைத்தால் முடிக்கலாம் என்று தானே இருக்கிறீர்..” என்றாள்..பூதுகன் கபகபவென நகைத்தான்..ரேணுகாவைப் பயம் சூழ்ந்தது..


(தொடரும்)

pavalamani pragasam
26th August 2014, 08:06 PM
ம்ம்ம்ம்...

chinnakkannan
26th August 2014, 09:45 PM
*
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

18 மாமன் மனம்..

சிரிப்பு என்ற மகோன்னத விஷயத்தை ஏன் மனிதர்களுக்கு மட்டும் வைத்தான் ஆண்டவன்..? பூனை, ஆடு, மான் போன்றவை சிரித்தால் ஏதோ ஏகடியம் அல்லதுகிண்டல் செய்வது போலிருக்கும்..ஆனால் நரியின் சிரிப்பு பயத்தை வரவழக்கும்..அதனால் விளையும் விளைவுகளும் விபரீதம் தான். கிட்டத் தட்ட பூதுகனின் சிரிப்பு அதைப்போலத் தான் என நினைத்தாள் ரேணுகா. கொஞ்சம் இடத்தை விட்டு நகரவும் முற்பட்டாள்.


பூதகன் சிரிப்பை நிறுத்தி கண்களில் கூர்மையுடன் “ரேணுகா” என்றான்.. “ நீ சொல்வதெல்லாம் முழுக்கத் தவறல்ல.. கங்கமன்னனை உன் சகோதரியைக் கைப்பற்றிய போதே வெற்றி கொண்டிருந்தேன்..பின் சில காலம் அவனே ஆளட்டும் என விட்டும் வைத்திருந்தேன்.. எனக்குத்தலைவணங்காமல் அந்த தஞ்சைச் சோழனிடம் நட்பு கொண்டு என்னை ஏமாற்றவும் பார்த்தான்.. அதனால் தான் அவனுக்கந்த முடிவு.. தவிர அவன் மகனை நான் கொல்லவுமில்லை..திடீரென நோயுற்று இறந்ததை இப்படி நான் கொன்றேன் என்று வதந்தியைப் பரப்பியது சோழ நாடு தான்..இந்த இளவரசன் மட்டும் என்ன.. நம் நாட்டிற்கு வந்தது சமாதானத்திற்கென்றா நினைக்கின்றாய்.. இல்லை..இல்லை.. மறுபடியும் புலிக் கொடி நாட்டினால் என்ன என்ற நாட்டமும் தான்..ஏதோ விதிவசத்தில் உன்னிடம் அன்பு கொண்டும் விட்டான்.. எனில் நானும் உன் தந்தையும் அவனை விட்டு விட்டோம்..பின் எத்தனை வருடங்கள் கழிந்தன..


இந்த எட்டு வருட காலத்தில் என்ன செய்திருக்கிறான் தெரியுமா உன் காதலன்.. மறுபடியும் இராஷ்டிர கூடத்தைக் கைக் கொள்ள வேண்டும் என படை பலத்தைப் பெருக்கியுமிருக்கிறான்.. உன்னைப் பற்றி ஏதாவதுகேட்டு ஒரு சிறு ஓலையாவது அனுப்பியிருக்கிறானா..இல்லை இல்லை..இருப்பினும் உன் மனம் அவன் பால் ஈடுபட்டிருப்பதனால் சரி சமாதானமாகச் சென்று உன்னைக் கொடுத்து நட்பாய் இருக்கலாம் எனத் தான் நினைத்தோம்..அதற்காகத் தான் இங்கு வந்தும் இருக்கிறேன்..அவனைக் கொல்வது என்பது என்றால் அது முன்னமேயே நிகழ்ந்திருக்கும்..” என்றான்..


இப்படிச் சொன்ன போது பூதகனின் கண்கள் உணர்ச்சி வசத்தால் கலங்கியிருந்தன.. அவனது வார்த்தைகளை நம்பலாம் என அவன்கண்கள் சொல்லியதாலோ என்னவோ மறுபடியும் எதுவும் பேசாமல் “ வாருங்கள் மாமா.. நாம் தங்கியிருக்கும் இடம் போகலாம்” என ரேணுகா நடக்க “ நீ போ ரேணு.. நான் சற்று நேரம் கழித்து வருகிறேன்” என பூதுகன் திரும்பி நடந்தான்.. அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வான்மதி திடீரென ஏதோ நினைவு வந்தாற்போல் விரைந்து வீர நாராயணர் வீட்டுக் கொல்லைப் புறத் தோட்டம் பக்கம் பார்வையை ஓட்ட எழிலும் வீரனும் இருந்த நிலையைக் கண்டு வியந்தது!


(தொடரும்)

chinnakkannan
26th August 2014, 09:49 PM
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
19 மடலும் மடந்தையும்....
*

”கள்ளப் பார்வை என்பது என்ன..யாருக்கும் தெரியாமல் பார்ப்பது –அதுவும் இளம் பருவத்துப் பெண்கள் பார்க்கும் பார்வை எனப் பெரியவர்கள் சொல்வார்கள்..யாரிடம்.. காதலனிடம்.. ஆனால் நான் இவளைச் சந்தித்தே சில நாழிகைகள் தானே ஆகிறது. எதுவும் வீரச் செயல் எதுவும் புரியவில்லை அவள் தான் என்னைக் காப்பாற்றினாள் இருமுறை.. எப்படிக் காதல் வரும்….”.என வீரன் யோசித்தான்..வள்ளுவரும் அவன் புலவ நண்பனும் அவன் நினைவுக்கு வந்தார்கள்..
” கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது-
எனச் சொன்ன வள்ளுவர் என்ன பொருத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்..பெண்ணானவள் விடுகின்ற சிறு கள்ளப் பார்வையானது காதலில் செம்பாகமல்ல அதாவது சரிபாதியல்ல மிகப்பெரியது என........என்ன சொன்னான் நண்பன்..
சிறுநோக்கில் சிற்றம்பு சீராகப் பாய
உருகியே ஓடும் உளம்...
இருக்கலாம் தான்..ஆனால் இப்பொழுது பசிக்கிறது..உண்ணலாம்..”

பசியின் தாக்கத்தில் பழங்களும் பாலும் விரைவாக அருந்திய வீரன் ரகசியமாய் எழில் கண்ஜாடை காட்டிய ஓலையைக் கைக்குள் அடக்கி வெளியில் வந்து கிணற்றருகே இருந்த இரும்பு வாளியில் இருந்த தாமிரப்பாத்திரத்தில் நீரெடுத்து கைகழுவிவிட்டு கொஞ்சம் கொல்லைப் புறத்தில் சற்று தூரம் நடந்தான்..

*வள்ளுவர் மறுபடி மனதில் வந்தார்..
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்..நண்பன் சேயோன் என்ன சொன்னான்.
சின்னவளை கொண்டிருந்த சின்னவளும் தந்தமடல்
பின்னும் துயரினைப் பார்..அதாவது சின்னவளை கொண்ட காதலி மடலை மட்டும் தரவில்லை..கூடவே மாலையில் வரும் துயரத்தையும் தந்துவிட்டாள்.. அதுபோல இருக்குமா இந்த ஓலை..எழில் கழுத்தில் எதுவும் அணிகலன் அணிந்திருந்தாளோ..ஆமாம். பொன் நகையில் சற்றே இளைத்திருந்த சங்கிலி..அவள் நிறத்தில் தெரியவில்லையே.. சரி ஓலையைப் பிரித்துப் படிக்கலாம் என முடிவு செய்தான் வீரன்.. ஆனால் அவனுக்கு கொஞ்சம் பயமாக கொஞ்சம் கிளர்ச்சியாக,கொஞ்சம் நெகிழ்ச்சியாக கொஞ்சம் நடுக்கமாகவும் தான் இருந்தது..முதல் அனுபவம் என்பதால்..ஓலையைப் பிரித்தால் “கைகழுவி விட்டு உள்ளே வரவேண்டாம் வீரரே..வேப்பமரப் பள்ளத்தின் அருகிருக்கவும்..சில கேள்விகளுக்கு விடை வேண்டியிருக்கிறது” என எழிலான எழிலின் எழில் எழுத்துக்கள் கோணலாக இருந்தாலும் அழகாய்த் தான் தெரிந்தது அந்த நிலவொளியில்..

* “மறுபடியும் கேள்விகளா” எனத் தலையில் கைவைத்த படி அவள் சொன்ன வேப்பமரத்தின் பின்புறம் கொஞ்சம் பள்ளத்தைச் சற்றே தள்ளியிருந்த புல்தரையில் அமர்ந்து கொண்டு மேலே பார்த்தால் நிலா காணாமற் போயிருக்க கொஞ்சம் இருளாகத் தான் அந்த இடம் இருந்தது..சில நட்சத்திரங்கள் மட்டும் அவனை ப் பார்த்துக் கண்சிமிட்டி “என்ன நண்பா யோகம் தான் நடத்து” எனச் சொல்வது போல இருக்கையில் காதுகளில் சின்னதாக ரம்மியமான இசை விழுந்தது.. இசையில்லை.. கொலுசொலி!

*

(தொடரும்)

pavalamani pragasam
27th August 2014, 07:43 PM
ம்ம்ம்...

chinnakkannan
28th August 2014, 04:50 PM
*
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

20 பெயர், பிரமை, பேச்சு.


தூக்கத்தில் ஏதோ கனவுகண்ட சின்னக் குழந்தையானது தூக்கம் விலகாமல் தூளியிலேயே கெஞெ என மென்மையாகச் சிணுங்கும் ஒலி போல் இருந்தது அந்தக் கொலுசொலி.. சற்றே திரும்பிப் பார்த்தால் இருட்டினில் பாதை தெரிவதற்காக ஒரு சற்றே பெரியதான மண் அகல் விளக்கினில் காற்றில் அணையக் கூடாது என்பதற்காக சுற்றியும் ஓலையால் கட்டி கொஞ்சம் வெளியே தெரிந்த சுடர் மூலம் வழி தெரிந்து வந்து கொண்டிருந்தாள் எழில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அந்த வேப்பமரத்தின் வேர் ப் பகுதியில் அந்த விளக்கை வைத்து விட்டு கொஞ்சம் தெரிந்த நிலவொளியில் அவன் அருகிலேயே அமர்ந்தாள். “என்ன செய்வதாக உத்தேசம்” என வினவவும் செய்தாள்..வீரனுக்கு பதிலுக்குப் பதில் காற்று தான் வந்தது..


ஏனெனில் அந்த அகல் விளக்கை எடுத்து அவள் மெல்ல அன்னத்தை விட அழகாக நடந்து வருகையில் இளங்கோவடிகள் தான் நினைவுக்கு வந்தார்..*”உன் தகப்பன் என்னடாவென்றால் மீன் பிடிக்கும்கொடுமையான வலையால் உயிர்களைக் கொல்லுகிறான்..நீ என்னவென்றால் கண்வலையால் உயிர்களைக் கொல்லுகின்றாய்” என நினைத்த போதே அடுத்த வரியும் நினைவுக்கு வந்து திகைத்த போது தான் எழிலின் கேள்வி அவன் காதுகளுக்கு எட்டியது.. “பராவாயில்லை..இந்தப் பராந்தக சோழர் காலத்தில் பெண்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்!” என நினைத்து “ நீ சொல் எழில் என்ன செய்ய வேண்டும்” என்று சொல்லி மென்சிரித்தான்.. அருகில் நகரவும் செய்தான்..எழில் முறைத்தாள்.. ” வீரரே..என்னை என்ன செய்வதாக உத்தேசம் எனக் கேட்கவில்லை.. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டேன்! அது சரி முதலில் சொல்லுங்கள்..உங்கள் பெயர் இளவீரன் தானா..இல்லை வேறு ஏதாவதா.. நானும் முதலிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்” என்றாள்.


சற்றே மெளனித்த வீரன், “ பெயரில் என்ன இருக்கிறது எழில்..வாழும் வாழ்க்கையில் பெயர் வரவேண்டும் அது தானே முக்கியம்.. இருப்பினும் இளவீரன் என்பது நான் வைத்துக் கொண்ட பெயர்..என் சிற்றப்பா ரங்கனாதப் பிரம்ம மாராயர் அரிஞ்சய சோழர் படையில் ஒரு சிறு பிரிவுக்குத் தளபதி.. நான் வேறு ஒரு பிரிவில் உப தளபதியாக இருக்கிறேன். எனது பெயர் **ராமபத்ரப் பிரம்ம ராயர் என்பார்கள்..ஓலை அனுப்பவேண்டுமென்றால் கையெழுத்துக்கு மட்டும் தனி ஓலை தேவைப்படுவதால் இளவீரன் எனச் சுருக்கி வைத்துக் கொண்டேன்!..மேலும் பெயரைக் கேட்டால் அந்தணனுக்கு எதற்குப் போர்த்தொழில் என சில தளபதிகள் நகைச்சுவைக்காகக் கேட்கிறார்கள்.. போர்த்தொழில் புரிய ஆசைப்படுபவனுக்குக் குலமா முக்கியம்..போரிட்டு வெற்றியடையத்தெரிந்தால் போதாதா..எனில் கூடிய வரை வீரன் என்றே அனைவரையும் அழைக்கச் சொல்லுவேன்” என்றான்..


எழிலுக்கு உடலெல்லாம் நடுங்கியது.. சற்றே பிரமை பிடித்தவள் போலானாள்..ஏற்கெனவே மாலையில் பார்த்த நபர் ராஜாதித்யர் எனத் தெரியவந்தது, மாதவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறார். நாம் சாதாரண மனிதன் ஹே சும்மா அரண்மனைக் காவலன் தானே எனக் கடிந்து பேசிய இவன்..இவரோ அரிஞ்சய சோழரின் படை உபதளபதியாம்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா இள நெஞ்சே தாங்கு..ஸ்ரீராமா எனக்குத் தைரியம் கொடு” என மனதில் சொல்லிக் கொண்டு “ வீரரே..நீர் சொல்வதெல்லாம் உண்மையா.. இருப்பினும் உங்களிடம் சற்றே கடிந்தாற்போல் பேசிவிட்டேன்.. மன்னிக்க” எனச் சொல்ல அவன் மெல்ல அவளது செந்தாழம் மடலொத்த கைகளில் வ்லது கையைப் பற்றப் பார்த்தான்..அவள் உதறினாள்.. “ நன்றாக இருக்கிறதே.. சந்தித்து நிறைய நேரம்கூட ஆகவில்லை..அதற்குள் காதல் என்றெல்லாம் சொல்லாதீர்கள்..எனக்கெல்லாம் காவியங்களில் வருவது போல சட்டெனக் காதலெல்லாம் வராது..அதற்கு நிறையப் போக வேண்டும்..சரி.. நீங்கள் இங்கு வந்த காரணம்..கண்டிப்பாய் பெரிதாகத் தான் இருக்கவேண்டும்..சொல்லுங்கள்” எனக் கேட்டு அவன் விழியூடிப் பார்க்க, அவனோ கலகலவென நகைத்தான்..


(தொடரும்)
***
* கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் – (சிலப்பதிகாரம்)

*
** பிரம்ம மாராயர் என்பவர்கள் அந்தக் காலத்தில் சோழர் படையில் பெரும்பதவி வகித்திருந்தார்கள்..இந்த ராமபத்ர பிரம்ம மாராயர் – ராசராச சோழனின் அமைச்சர் அனிருத்தப் பிரம்ம ராயரின் பாட்டனார் ஆவார்.

”எண்டிசை நிகழும் இருபிறப் பாளன்
கொண்டல் அன்ன குவலய தந்திரன்
ஓங்கு புகழான் உதயமார்த் தாண்ட
பிரம்ம ராயன் தேம்கமழ் தாரோன்
செழுமறை வாணன் தன்திருத் தமையன்.

என கர்னாடக மானிலத்தில் கொள்ள ஹல்லியில் பைரவன் நிலத்துக் கல்லில் குறிப்பிட்டிருப்பது இவராகக் கூட இருக்கலாம்!

**

ஹையா.. சரித்திரக் கதை சம்பிரதாயம் மாறாம * போட்டுட்டேனே!

pavalamani pragasam
29th August 2014, 09:01 AM
ம்ம்ம்...

chinnakkannan
30th August 2014, 09:07 PM
*

கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

21 எதிரும் புதிரும்.

*
காதலைப் பற்றிப் பலர் எந்தக் காலத்திலும் நனைத்து துவைத்து அலசி காயப் போட்டு உலர்த்தியிருந்தாலும் கூட அந்த மூன்றெழுத்தில் எந்தப் பருவத்தினருக்கும் மூச்சுமிருக்கிறது.. பேச்சுமிருக்கிறது..அதுவும் கனவுகள் கண்களில் மின்னி வரும், வேதியியல் மாற்றங்களை உடல் கொள்ளக் கூடிய யெளவனப் பருவமென்றால் கேட்கவே வேண்டாம்..


அதுவும் வீர நாராயணரின் திரு நிறைச் செல்வி, கருவேப்பிலைக் கொத்தைப் போன்ற ஒரே மகளான எழில் பிறந்தது சிறு கிராமமான புன்னை பூதங்குடியில் என்றாலும் வளர்ந்தது கற்றது எல்லாம் சிறு நகரமான குடந்தையில் தான்.. வீர நாராயணரின் தங்கையின் கணவர் குடந்தையில் மருத்துவத் தொழில் புரிந்து வந்ததனால் அங்கேயே தங்கிப் படிக்கவும் செய்தாள் அவள். .வீர நாராயணரின் தங்கைக்கோ மகவேதும் இல்லையாதலின் எழிலையே தன் மகளாய் வளர்த்து வந்திருந்தாள்...சிறுபருவத்தில் இருந்து பூத்துக் குலுங்கும் இளமைப் பருவமான தற்சமயம் வரை பல மாணவ மாணவிகளிடம் கற்பதற்காகவோ, விளையாடலுக்காகவோ பழகியதால் கொஞ்சம் எதையும் வெளிப்படையாகப்பேசும் சுபாவம் கொண்டு தானிருந்தாள் எழில். .அப்படிப் பல தரப்பட்ட மாணவர்கள், ஆதுர சாலைக்கு வரும் நோயாளிகள், காயம் பட்ட வீரர்கள் எனப் பலரிடம் பேசிப் பழகியிருந்த தனக்கு இந்த வீரனிடம் ஏன் கொஞ்சம் நெருக்கமாகவே கோப தாபத்தைக் காட்டுகிறோம் என அவளுக்குப் புரியவில்லை.காதலென்றால் அதற்கெல்லாம் வெகு நாளாகும்என வீரனிடம் சொன்னாலும் கூட அது தவறோ என உள்ளூரக் குழம்பவும் செய்தாள்..அந்தத் தருணத்தில் தான் நகைத்தான் வீரன்..

சிரித்தவன் தொடர்ந்தான்..” அதெப்படி நான் உன்னிடம் எல்லாவற்றையும் சோல்ல வேண்டுமென எதிர்ப்பார்க்கிறாய்..அதுவும் காதலில்லை காதலில்லை என நீ செந்நிறக் குயிலாய்க் கூவுவது ஏதோ என் மீது மையல் கொண்டாற்போலத்தான் தெரிகிறது” எனச் சொல்லிக் கொஞ்சம் அவளருகில் உட்காரப்பார்க்க அவள் மரத்தின் மீது சாயப் பார்த்தாள்..அது முடியாமல் போகவெ கொஞ்சம் எசகு பிசகாக காலை மடக்கி உட்கார்ந்து கொண்டதில் முழங்காலில் பற்றியிழுத்தாற் போல் வலி வர கொஞ்சம் முகமும் சுளித்தாள்..அதைக் கண்ட வீரன் “சாய் மானம் வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.. நானும் நீயும் எதிரும் புதிருமாய் முதுகுகாட்டி அமரலாம்..என் முதுகில் சாய்ந்து கொள்..உன் கேள்விகளுக்கு விடையிறுக்கிறேன்” எனச் சொல்ல கொஞ்சம் யோசித்து சரியென எழில் சொல்ல அப்படி முதுகும் முதுகும் சாய்ந்து கொண்டு முழங்கால்கள் கட்டிய வண்ணம் அவர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தான் மேலிருந்த வான்மதி வியந்து போனாள்..வீரன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தான்-.ரேணுகா தேவியை ராஜாதித்தர் பார்க்க வந்திருப்பதை.;,அவள் வந்திருக்கிறாள் என அறிவிக்க அவருடைய ஒற்றன் எய்த மோதிர அம்பு (தன்னைக் கொல்வதற்கு இல்லை);, பள்ளத்தில் தள்ளிவிட்டுத் தப்பியோடியதும் அவனே (அவனுக்குக் கொடுத்திருந்த உத்தரவு அப்படி),; .அப்படியே பகைவரின் நடமாட்டமிருப்பதாக வந்த தகவல் பற்றி; ,, ரேணுகாவிற்குத் தஞ்சைவர இஷ்டமிருப்பின் அழைத்துச் செல்லலாமா என ராஜாதித்தர் யோசிப்பது பற்றி; எனச் சொல்லிக் கொண்டே போனான் வீரன்.

அவன் பேசிக்கொண்டு தான் போனானென்றாலும் இந்தப் புறம் திரும்பியிருந்த மங்கையின் முகத்தில் வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் அவன் முதுகில் முழுக்கச் சாயவில்லை என்றாலும் அவளது கூந்தல் அவனது தலைமுடியில் உரசவே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாள் அவள். அவன் பேச்சும் அவள் காதில் அரை குறையாகத் தான் விழுந்தது. .கடைசியில்“உங்களுக்கு என் உதவி எதுவும் வேண்டுமா” எனக் கேட்டாள் எழில். .”கண்டிப்பாகத் தேவைப் பட்டால் சொல்கிறேன் மருத்துவ மாணவியே” என வீரன் சொல்ல அது கூடத் தெரியுமா உமக்கு” என்றவள், ”சரி திண்ணையில் ஒரு படுக்கை கொடுக்கிறேன். சென்று சற்று உறங்குங்கள்..விடிகாலை பூஜையில் கோவிலில் சந்திக்கலாம்” எனச் சொல்லி டபக்கென விலகி எழ, ஒரு ஷணம் விழ இருந்த வீரன் சமாளித்துத் தானும் எழுந்தான்.. மறு நாட்காலை கோவிலில் அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.. கோவிலுக்கு ரேணுகா தேவியும் பூதுகனும் வந்திருந்தனர்!

*(தொடரும்)***

chinnakkannan
30th August 2014, 09:10 PM
*
கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

22. நினைப்பும் பிழைப்பும்.

சில சமயங்களில் வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ ஏதாவது செய்து கொண்டிருப்போம்.. மனம் வேறு எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும்.. செய்யும் காரியம் செவ்வனே செய்யும் படி கண் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் இறக்கை கட்டிப் பறந்துகொண்டே இருக்கும்.. எழிலுக்கும் அப்படித் தான் இருந்தது.. வீட்டினுள் நுழைந்த அவள் வீரனையும் அழைத்துக் கொண்டு உள்ளே ஒரு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாதவரையும் தந்தையையும் தொந்தரவு செய்யாமல் பொற்பதம் பதித்து விழிகளில் எச்சரிக்கையுடனும் வீரனின் கரம் பற்றி காற்றினால் விழிகளில் பேசி எல்லா கட்டுக்களையும் கடந்து ஒரு படுக்கையை எடுத்து வாசலில் திண்ணை வந்ததும் அதில் சற்றே உதறி விரித்துப் பின் கண்களால் விடை பெற்று வீட்டிற்குள் வந்து உள்ளே இருந்த ஒரு அறையில் அன்னை உறங்கிக் கொண்டிருக்க அவள் அருகில் ஓசையுறாமல் படுத்துக் கொண்டாலும் கூட நினைப்பென்னவோ வீரனின் மேலேயே இருந்தது..

*

இவன் மேல் தான் கொண்டது என்ன..என நினைத்தவண்ணம் மேலே கூரையில் கட்டியிருந்த சிறு பானைகளை மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்..உறக்கம் வரத் தான் இல்லை.
. நெஞ்சில் நுழைந்த நெடுவுருவம் செய்ததுவோ
பஞ்சில் சிறுநெருப்பாம் பார்
என யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது..புரண்டு படுத்தாள்.. அன்னையின் மீது கை வைக்க தூக்கக் கலக்கத்திலும் ‘எழில்..தூங்குடி.. உடல் அசதியா’ என்ன” என அவளன்னை கேட்டு பதில் எதிர்பாராமல் தூங்கிவிட, எழிலும் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்..உறக்கம் வருவதற்காக எண்களைச் சொல்லாமல் வ, வா வி வீ எனத் தமிழ் எழுத்துக்களைச் சொன்னவள் தன் செய்கையின் தன்மையை உணர்ந்து வெட்கம் முகத்தில் ஏற அப்படியே உறங்கியும் விட்டாள்..

*

திண்ணையில் படுத்த வீரனுக்கு உடல் அசதியாகத் தான் இருந்தது..இருப்பினும் இளமையின் காரணமாக உறக்கம் வர மறுத்தது..கண்ணை மூடிக்கொண்டான்..இஃதென்ன..எழில்.. மாலையில் பார்த்த சிவந்த சேலையன்று.. இரவில் வேப்ப மர நிழலில் அவள் இரவாடையாக மாற்றி அணிந்திருந்த பச்சை வண்ண சேலையுமன்று.. .தெளிவான வான நிறத்தைப் போன்ற நீல நிறம்..காதுகளில் அது என்ன நீலக்கல் பதித்த அணிகலன்..எங்கு கிடைத்திருக்கும்..ம்ம் கழுத்தில் இருக்கும் நகை.. ஏன் முறைக்கிறாள்.. ஏன் பெண்ணே எனக் கேட்க அவளும் சொல்கிறாள்..அட என்ன இது..அவள் குரல் இப்படிக் கரகரப்பாய் மாறியிருக்கிறது..இல்லை இல்லை..ஒரு பெருமூச்சாய் வருகிறதே..

*

சட்டென்று கண்விழித்த வீரன் பார்த்தால் எதிர்த்திண்ணையில் ராஜாதித்யர் உட்கார்ந்தபடிஉறங்கிக் கொண்டிருந்தார்..களைப்பில் அவரிடமிருந்து தான் கொஞ்சம் ஒலி வந்து கொண்டிருந்தது.. தன் விதியை நொந்த படி கண்ணை இறுக்க மூடிக் கொண்டான் வீரன்..சற்று நேரத்தில் உறங்கியும் விட்டான் அவன்.. மறு நாட்காலை அவர்களுக்கு ஏற்படப் போகும் அனுபவங்களை நினைத்து சற்றே கவலை கொண்ட நிலா, விடிவதற்கு இன்னும் இரு ஜாமம் தான் இருக்கிறது என எண்ணியதாலோ என்னவோ தானும் தூங்க நினைத்து அருகிலிருந்த மேகத்தினுள் சென்று புதைந்து கொண்டது
..
(தொடரும்)

pavalamani pragasam
31st August 2014, 08:46 AM
திக் திக் திக்

chinnakkannan
2nd September 2014, 11:22 PM
*

கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..


*

23. வல் வில் ராமன்

*

“என்னைக் கொன்ற பின்பு தான் உன் ஆசை நிறைவேறும்” சொல்வது யார் ஒரு அதி அதி கிழடான பறவை.. யாரிடம்.. தன்னிடம்.. நான் யார்..இலங்கை மன்னன்.. என்னிடமா இந்த எள்ளல் தொனி..

கண்சிவந்த ராவணன் சூலாயுதத்தை எறிந்தான்..அந்த சூலாயுதம் என்ன ஆனது..ஜடாயுவின் மார்பிற்கருகே போய்த் ஒரு நிமிடம் தயங்கிப் பின் திரும்பி வந்தது..எப்படி வந்ததாம்..

தாசி வீட்டுக்குச் சென்ற ஒருவன் கையில் சிறிதே பணமிருப்பதை உணர்ந்து அவள் வீட்டருகில் தயங்கிப் பின் திரும்புவது போல; வாருங்கள் வாருங்கள் எனப் பலமுறை வருந்தி அழைத்ததால் சென்ற போது அங்கு சரிவர உபசாரங்கள் நடக்காததால் மனம் நொந்து திரும்புபவர் போல; துறவியிடம் ஆசிவாங்கச் செல்லும் ஒரு நங்கை அந்தத் துறவியின் அழகில் காதல் வயப்பட்டு மதி மயங்க, அந்த மதியே விழித்துக் கொண்டு ஹேய் நீ நினைப்பது தவறு என இடித்துக் காட்ட வருத்தத்துடன் திரும்புவது போல அந்த வேலானது ராவணனிடமே திரும்பி வந்ததாம் எனக் கம்பன்** சொல்கிறார்..

அப்படிப் பட்ட ஜடாயு போராடி மரணிக்க, அவருடைய ஈமக் க்ரியைகள் செய்து விட்டு ராமன் இளைப்பாறிய இடமான திருப் புள்ள பூதங்குடி என்ற புன்னை பூதங்குடி கோவிலில் அந்த அதிகாலையில் வானம் சிச்சிறிதாய் வெளிர் நீல வண்ணமாய் வெளுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தது.*.

கோவில் பிரகாரத்தினுள் இருந்த சில பணியாளர்கள் குளித்து முடித்தும் கூட துடைப்பத்தை எடுத்து அழகுற பெருக்கிக் கொண்டிருந்தனர்.. சில நடுத்தர வயது
நங்கைகள் குடங்களில் தண்ணீர் வாரி தரையில் தெளித்து வரைந்திருந்த அழகிய கோலங்களில் சிக்கிய புள்ளிகள் பெருமையுடன் சிரித்துப் பார்ப்பவரைக் கவர்ந்து கொண்டிருந்தன.. நான்காம் ஜாமம் முடிய * இரண்டரை நாழிகைகளே இருப்பினும் கொஞ்சம் வெளிச்சமாய்த் தான் இருந்த்து அந்தக் கோவிலின் பிரகாரம்..*

உள்ளே இந்தக் கோவிலில் யாரிருக்கிறார் என அலட்சியமாய்த் திருமங்கை ஆழ்வார் சென்றுவிட, “அன்பா..இங்கு இருப்பவனும் நான் தான்” எனச் சங்கு சக்ர தாரியாய்க் காட்சி அளித்து அவரை மங்களாசாசனம் பாடவைத்த புஜங்க சயனத்தில் இருந்த வல்வில் ராமன் தன் காலருகில் இருந்த பூமா தேவியைப் புன்சிரித்துப் பார்த்திருந்தான்…

மூலவராம் ராமனுக்கு ஒரு படி கீழே ஐம்பொன் சிலையில் வார்க்கப் பட்ட வல்வில் ராமன்,கூட இருக்கும் பொற்றாமரையாள் ஆகியோருக்குத் திருமஞ்சனமும் பூஜைகளும் பயபக்தியுடன் செய்து கொண்டிருந்தார் வீர நாராயணர்..

அருகில் பளபளக்கும் தேகத்துடன், அதே பளபளப்பான கண்கள் மூடியவண்ணம் மாதவ ஆச்சார்ய்ர் ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்..மற்றவர்கள் பார்க்கவொண்ணாமல் திரையும் போடப் பட்டிருந்தது.. மெல்ல மெல்ல நந்தவனப் பூக்களை எடுத்து அலங்கரிக்கவும் ஆரம்பித்தார் வீர நாராயணர்.

.*

திரைக்கு வெளியில் பெருமாள் தரிசனத்திற்கான கூட்டம் அவ்வளவாக இல்லை..பூஜைக்காக அதிகாலையிலே எழுந்து நீராடி இருந்த ராஜாதித்யர் தனது பொய்த் தாடியினைக் களைந்திருந்ததால் அவர் முகம் சற்றே பிரகாசமாக இருந்தது..அருகில் வீரனும் அமர்ந்து இருந்தான்..

சற்றுத் தொலைவில் எழிலும் இன்னொரு இள நங்கையும் கருவறை நோக்கி வந்து கொண்டிருந்தனர்..கண் மூடியிருந்ததால் ராஜாதித்யர் பார்க்கவில்லை.. வீரனுக்குத் தெரிந்தது..கொஞ்சம் எழுந்தும் நின்றான்..இங்கு இவர் எதற்காக வர வேண்டும் என் எண்ணவும் செய்தான்.


(தொடரும்)

• காலை ஐந்து மணி

**கம்ப ராமாயணம்

*
பொன்நோக்கியர்தம் புலன்
நோக்கிய புன்கணோரும்,
இன் நோக்கியர் இல் வழி
எய்திய நல் விருந்தும்,
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர்
தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும், ஆம்
என மீண்டது, அவ்வேல்.

****

chinnakkannan
2nd September 2014, 11:27 PM
*

கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

24. தரிசனங்கள்

*
ராஜாதித்யரின் காதலைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்ததாலும் அவர் சொன்ன நடை உடை பாவனைகளை வைத்து எழிலுடன் நடந்துவருவது ரேணுகா தேவியாய்த் தான் இருக்கும் என வீரன் நினைத்தான்..

ரேணுகா ராஷ்டிர கூடர் வழக்கப்படி கரு நீல வண்ண சேலை அணிந்திருந்தாள்..கழுத்தில் குட்டிக் குட்டியாய் செம்பழுப்பில் அழகிய முத்துமாலையும் அணிந்திருக்க மெல்ல எழிலைப் பார்த்தபடி பேசியவண்ணம் நடந்துவந்து கொண்டிருந்தாள்..எழிலின் சேலையோ வான நீல நிறம்.. கழுத்தில் இது என்ன..கனவில் கண்டது போல நீலக் கல்லினால் கோர்க்கப்பட்ட மாலை.. இருவரும் இணைந்து நடந்து வருவது காலையும் காரிருளும் இணைந்து வருவது போல அழகாக இருந்தது..

அது சரி எழிலுக்கு எப்படி ரேணுகா தேவியைத் தெரியும்.. வந்தவுடன் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் வீரன்..


வீரன் நினைத்த படி எழிலுக்கு ரேணுகாவைத் தெரியாது.. கோவில் வாசலில் காலணிகளைக் கழட்டும் போது சற்றுத் தள்ளி ஒரு புதிய பெண் தனது காலணிகளை நளினமாக விடுவதைக் கண்டாள்..அது மட்டுமன்றி தோலினால் செய்யப் பட்ட அந்தப் பெண்ணினுடைய காலணிகளின் நடுவில் அழகாய் ஒரு பூ கரு நீல வண்ணத்தில் வரையப்பட்டு அதன் நடுவில் ஒற்றை முத்துசிரித்துக் கொண்டிருந்தது..

ம்எங்கு வாங்கியிருப்பாள்..பாண்டிய நாட்டு விலையுயர்ந்த முத்துப்போலத் தெரிகிறதே…

ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் பேச்சைத் துவக்க பெரிதாக அறிமுகம் ஏதும் எக்காலத்திலும் வேண்டியிருப்பதில்லை போலும்..

அவளைப்பார்த்து எழில் மென்னகை புரிய அவளும் சிரித்தாள்..இருவரும் இணைந்து நடக்க ஆரம்பிக்க, “நீங்கள்” எனக் கேட்ட எழிலை “இந்த ஊரில்லை.. ராஷ்டிர கூடம்..நீங்கள் இந்த ஊர் தான் போலும்” எனப் பதில் கேள்வி கேட்டாள்.. எழிலும் சிரித்து பதிலிறுக்க,”உங்கள் *நீலக் கல் மாலை அழகாய் இருக்கிறது.. எங்கு வாங்கினீர்கள்..” “ நாகையில் தான்.. யவனக்கப்பலில் வந்த ஒரு யவனரிடமிருந்து..உங்கள் முத்து மாலையும் வெகு அழகு” என்ற கேள்வி பதில்களுடனும் மெல்ல மென்மையான நளின நடைகளுடனும் இருவரும் கருவறையை நெருங்கி நுழைந்து திரை மூடியிருப்பதைப் பார்த்ததும் அமைதியாய் நின்றனர்..

எழிலின் கண்கள் வீரனின் கண்களைப் பார்த்துச் சிரித்து காலை வணக்கம் சொல்லின..கண்மூடியிருந்த ராஜாதித்யரைப் பார்த்ததும் ரேணுகாவின் கண்கள் நாணின.

திரை விலகி பெருமாளுக்கு நெய் தீப ஆராதனை செய்தார் வீர நாராயணர். ராஜாதித்யரும் கண்களைத் திறந்து ராமனின் திருக்கோலத்தைக் கண்குளிரதரிசித்தார்.. வீர நாராயணர் அனைவருக்கும் தீர்த்தமும் திருத்துழாயும் தர, அதை வாங்கிக் கொண்ட ராஜாதித்யரின் கண்கள் எதிரில் நின்றிருந்த ரேணுகாவையும் கண்டு கொண்டன..கூடவே கருவறை வாசலுக்கருகில் கை கூப்பி நின்றிருந்த பூதுகனையும்..!

(தொடரும்)

• Turquoise stones என இந்தக் காலத்தில் வழங்கப் படுகிறது!

pavalamani pragasam
3rd September 2014, 08:39 AM
கம்பன் கவிநயத்தையும் திருத்தலப் பெருமையையும் விளக்கியதற்கு நன்றி!

chinnakkannan
3rd September 2014, 10:13 AM
நன்றி பவள மணிக்கா..

chinnakkannan
12th September 2014, 12:44 PM
*
கடல் மைனா..

சின்னக் கண்ணன்..

25. விதியின் ரேகைகள்

*
கோபம், துக்கம், மகிழ்ச்சி, காதல் எல்லாம் மனித வாழ்வில் ஏற்படுகின்ற உணர்ச்சிகள் தான். ஆனால் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பவனும், தன் இஷ்டப் படி எல்லாரையும் ஆட்டி வைப்பவனுமான இறைவன் சன்னிதானத்தில் அவனைத் தவிர மற்றதை நினைக்கக் கூடாது என்பதை வீர நாராயணரும் உணர்ந்தே தான் இருந்தார்..

ஆனாலும் வரிசையாக ஒவ்வொருவருக்கும் தீர்த்தமும் திருத்துழாயும் கொடுத்த வண்ணம் வந்த அவர் ஆண்களில் கடைசியாக நின்றிருந்த கருவண்ண பூதுகனின் கையில் பொற்பாத்திரத்திலிருந்த தீர்த்தமிட்டுப் பிறகு அதை பொற்தட்டில் வைத்து திருத்துழாயாகிய துளசியைக் கொடுத்து நிமிர்ந்த போது அவனைக் கண்டதும் கொஞ்சம் சலனமுறவே செய்தார். சற்றே அங்கு சில நொடிகள் செய்வதறியாமல் நின்றும் விட்டார்..அவர் அப்படி நின்றதைப் பார்த்த எழில் குயில் இருமுவது போல கக் என ஒலியெழுப்ப சுதாரித்து பெண்களுக்குக் கொடுக்கத் திரும்பினார்..


முதலில் பார்த்தது ரேணுகாதேவியின் கைகளை.. செம்பஞ்சுக் குழம்பினால் கையின் மறுபுறமும்,கையின் மேற்புறங்களிலும் வெகு அழகாக குட்டிக் குட்டி பூக்கோலங்கள் வரையப்பட்டிருக்க, எல்லா விரல்களிலும் கால்பாகம் வரையிலும் செவ்வண்ணமாய் ஆகியிருக்க உள்ளங்கையில் சூரிய சந்திரரைப் போல வட்டமாய்ச் சிவந்த நிறம் பதிந்து இடது கையின் மேல் வலது கையைக் குவித்து தீர்த்தம் வாங்குவதற்காக இருந்த கையைப் பார்த்தவர் சற்றே அதிர்ச்சியின் வசமும் பட்டார்..

செக்கச்செவேல் கையில் கர்வமாய் இருந்திருந்த ரேகைகள் அவரைப் பார்த்து மென்னகை புரிந்தன..நிமிர்ந்து தலை குனிந்திருந்த அவளது முகத்தைப் பார்த்துவிட்டு அவளது கையில் தீர்த்தம் வார்த்து திருத்துழாய் கொடுத்து விட்டு புஜங்க சயனத்தில் படுத்திருந்த ராமனைப் பார்த்தார்..அவன் முன்னால் கையேந்தி கண்மூடிவேண்டிய வண்ணமிருந்த மாதவரையும் பார்த்தார்..

பிறகு ராமனிடம் மனதிற்குள் ”ராமா.. எனக்கு எதற்கு அந்தப் பெண்ணின் விதியின் ரேகைகளைக் காட்டினாய்..ம்ம் அதைத் தவறாக மாற்றவேண்டியது உனது பொறுப்பு” என வேண்டியும் கொண்டார்..

எழிலுக்கும் பிரசாதம் வழங்கி, பின் அனைவருக்கும் சடாரி வைத்து முடித்ததும்,மாதவர் கண்விழித்தார்.. வீர நாராயணருக்கு சற்றே தெம்பு வந்து “மாதவரே..வராதவர்கள் வந்திருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும் கோவிலின் பின்னால் இருக்கும் சிறு மண்டபத்தில் அமர வைக்கிறீர்களா.. அடியேன் மடப்பள்ளிக்குச் சென்று பிரசாதம் ஆகிவிட்டால் பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டு அங்கு வருகிறேன்” என்று கெஞ்சல் குரலில் சொல்ல மாதவரும் சரியெனத் தலையசைத்தார்..

பின்னர் மாதவர் அங்கிருந்த அனைவருக்கும் பொதுவாக, “வாருங்கள்..மண்டபத்திற்குச் சென்று பேசலாம்..அதற்குள் பெருமாள் பிரசாதமும் வரும்..பசியாறலாம்” எனச் சொல்ல மறுபேச்சுப் பேசாமல் ராஜாதித்யர், வீரன்,எழில், ரேணுகா பூதுகன் ஆகியோர் அவரைப் பின் தொடர்ந்தனர்..அவர்கள் மண்டபம் சென்று அடைவதற்கு முன்னமேயே கோவில் பரிசாரகர்கள் இருவர் அந்த இடத்தைச் சுத்தம் செய்து அங்கு மிகப் பெரிய ஜமுக்காளத்தை விரித்திருந்தனர்..

ஆண்கள் எல்லாம் ட வடிவில் அமர, எழிலும் ரேணுகாவும் ஒரு மூலையில் நின்றனர்.. மாதவர் அவர்களையும் அமரும் படி பணிக்க அமர்ந்தனர்.. முதலில் குரலெழுப்பியவன் பூதுகன் தான்..அதுவும் அந்தக் கேள்வி மாதவரிடமே கூர்மையாக வந்து விழுந்தது..”ஆச்சார்யரே, என் மைத்துனி விஷயமாக சோழ இளவரசர் என்ன உத்தேசித்திருக்கிறார்..கொஞ்சம் அறிந்து சொல்லுங்கள்” என்றான்..ஆச்சார்யர் முறுவலித்தார்..

(தொடரும்)

chinnakkannan
16th September 2014, 10:33 PM
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
26. பெருமாள் பிரசாதங்கள்*

பள்ளி கொண்ட ராமனின் கருவறையை விட்டு வெளியில் வ்ந்து கொஞ்சம் வெளிப் பிரகாரத்தை ஒட்டி இடது புறமாக அமைந்திருந்தது மடப்பள்ளி என்றழைக்கப் படும் கோவில் சமையலறை..கொஞ்சம் விசாலமாகவே அமைந்து அடுப்புகள் எல்லாம் சுவற்றின் பக்கமிருக்க விறகுப் புகை உள்ளே தங்காதவாறு செம்மண்ணால் செய்யப் பட்ட புகை போக்கிகள் அடுப்புக்கு மேற்புறத்தில் அமைக்கப் பட்டிருந்தன.. பிர்சாதங்கள் அன்றாடம் பெருமாளுக்குப் படைக்கப் பட்டு வந்ததால் அவை நிறம் மாறிக் கரிய நிறத்திலிருந்தாலும் அதுவும் ஒரு வித அழகாய்த் தான் இருந்தது.

கருவறையை விட்டு வெளியில் வந்த வீர நாராயணர் சற்று நடந்து தள்ளியிருந்த மடப்பள்ளியில் நுழைந்த போது ஒரு விறகடுப்பில் அகண்ட பித்தளைப் பாத்திரத்தில் அக்கார அடிசில் கொதித்துக் கொண்டிருந்தது.. அக்காரம் போட்ட அதாவது கரும்பினிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை, பசுவின் பால், பசு நெய், கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குமப் பூ போன்ற கலவைகளினால் எழுந்த மணம் அந்த மடப்ப்ள்ளியெங்கும் பரவி இருந்தது. ஒரு உதவியாள் நின்றபடி அடுப்பை மெல்லவே எரியவிட்டு அவ்வப்போது கிளறிவிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு புறம் இன்னொருஅடுப்பிலிருந்து இறக்கிய தஞ்சையிலிருந்து வந்த அரிசியில் செய்து சற்றே குழைவாக இருந்த சாதத்தை விரித்து வைக்கப் பட்டிருந்த ஓலைப்பாயில் சாதித்து (போட்டு) அதன் மீது பசுந்தயிர், சிறிதளவு பால், நறுக்கிய பச்சை மிளகாய்கள், கொஞ்சம் சிறு மாங்காய்த் துண்டங்கள் போட்டு மரக்கரண்டியால் மென்மையாகவும் வேகமாகவும் ததியோன்னம் பிசைந்து கொண்டிருந்தாள் கனகம் என்ற வயது முதிர்ந்த பெண்..

இன்னொரு பக்கம் ததியோன்னத்திற்கு ஏதுவாக இருக்கட்டுமென்று இன்னொரு அடுப்பில் சிறிய பித்தளைப்பாத்திரத்தில் பச்சைப் பசேலெனப் புளிமிளகாய் கொதித்துக் கொண்டிருக்க அதன் மணமும் அக்கார அடிசிலின் மணமும் கலந்து வாழ்க்கையில் உணவின் மணத்தில் கூட இன்பமும் துன்பமும் இருக்கும் எனக் காட்டியவாறு இருந்தன..


(தொடரும்)

chinnakkannan
16th September 2014, 10:35 PM
*

கடல் மைனா..

*

சின்னக் கண்ணன்..

*

27. வீர நாராயணரின் கவலை

*

வீர நாராயணர் எல்லாவற்றையும் பார்த்தாலும் கூட எதுவும் அவரது மனதிலும் நாசியிலும் ஏறவில்லை.. அக்காரவடிசல் என்றும் அக்கார அடிசல் என்றும் சொல்லப் படும் திருக்கண்ணமுதைக் கிளறிக் கொண்டிருந்தவனிடம் “ஆராவமுது.. என்னப்பா ஆகிவிட்டதா” எனக் கேட்கவேண்டுமே எனக் கேட்க “இதோ அரை நாழிகை மாமா”என்ற பதில் வர, பின்னர் அந்த விறகடுப்பையே பார்த்தவண்ண்ம் இருந்தார் வீர நாராயணர்.. அவர் வந்தது, அவர் முகத்தில் தெரிந்த கவலை எல்லாவற்றையும் கண்ட கனகம் “என்னாயிற்று ஸ்வாமிகளே” எனக் கேள்வி கேட்டு சுடச்சுடத் ததியோன்னம் பிசைந்ததினால் மரக்கரண்டி பிடித்த கை சற்றே வேர்க்க அருகிருந்த பாத்திரத்தில் இருந்த நீரில் தனது கைகளை அலம்பி விட்டும் கொண்டாள்.. வீர நாராயணரின் கண்கள் அனிச்சையாய்க் கனகத்தின் கைகளை நோக்கின..



*
கனகமாகப் பட்டவள் சிறுவயதிலிருந்தே பெருமாளுக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தாலும் நிறைய திருவிழாக்களின் போது நடனம் புரிந்தவள் தானெனினும் தனக்கென வாரிசு என யாரையும் கொள்ளவில்லையாதலின் யெளவனம் போன பிறகு கோவில் மடப்பள்ளியிலேயே பிரசாதங்களையும் செய்து கொண்டு வந்திருந்தாள்..சோழ அரசாங்கத்திலிருந்து அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப் பட்டு வருடாவருடம் மானியமும் வந்து கொண்டிருந்ததால் அவளுக்கு வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் இல்லாமலும் அவ்வாறு தந்த கோவிந்தனுக்குச் சேவை செய்வதையே குறிக்கோளாகவும் கொண்டிருந்தாள். அவளது கைகளை அலம்பிய போது முதுமை நெருங்கியதற்கான சுருக்கங்கள் அவள் புறங்கையில் தெரிய வீர நாராயணரின் கண்களில் ரேணுகா தேவியின் செங்காந்தள் மலர்க் கைகள் தெரிந்தன..

கனகத்தின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் விறகடுப்பை மறுபடிவெறித்த படி மனதிற்குள் ராமனை நினைத்தார்..” ராமா..இது என்ன சோதனை எனக்கு.. எதற்காக அந்த ராஷ்டிர கூட இளவரசியின் கரங்களைக் காட்டினாய்..எனக்கு ரேகை சாஸ்திரம் எதுவும் தெரியாது தான்.. இருப்பினும் மேல் நோக்கி ஷணப் பொழுது அந்தக் கையைப்பார்க்கையில் ஆயுள் ரேகை பாதியில் நின்றிருக்கிறதே.. அட ராமா! இவளைத் தானே அந்த ராஜாதித்யரும் விரும்புகிறார் என ஆச்சார்யர் உறங்கப் போகும் முன் சொன்னார்.. ராஜாதித்யரின் ஜாதகப் படியும் நிலைமை சரியில்லை போல இருக்கிறது..இல்லையேல் ஏன் ஆச்சார்யர் பூடகமாய்ப் பேச வேண்டும். ராஜாதித்யருடன் வந்திருக்கும் வீரன் எழிலிடம் பார்க்கும் பார்வையில் சற்று மயக்கம் தெரிகிறது.. என்ன வேலை, என்ன கோத்திரம் என விசாரித்துப்பார்க்க வேண்டும்..அவளுக்கும் வயதாகிறது..இந்தப் பூதுகன் எங்கிருந்து வந்தான்..என்ன துணிச்சல்..இருந்தாலும் ராஜாதித்யரின் உணர்ச்சிகளின் அடக்கும் தன்மையை என்னவென்று சொல்வது..ஆச்சார்யர் சொன்னவுடன் அவர் பின்னாலேயே மண்டபத்திற்குப் புறப்பட்டு விட்டாரே..மண்டபத்தில் என்ன நடந்திருக்கிறதோ”எனப் பலவண்ணம் கண்களால் அடுப்பில் கண கணவென எரிந்து கொண்டிருந்த விறகைப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண்டிருந்த வீர நாராயணரை “ஸ்வாமிகளே” எனக் கனகத்தின் குரல் இகலோகத்திற்கு இழுத்து வந்தது..

வீர நாராயணர் பார்த்த போது பாத்திரங்களில்அக்கார வடிசலும்,ததியோன்னமும் வைக்கப் பட்டு பெரிய தட்டால் மூடியும் இருக்க அந்தப் பாத்திரத்தின் பிடியையும் மூடியையும் ஒரு ஈர்த்துண்டால் பிடித்தவண்ணம் மடப்பள்ளியைச் சேர்ந்த இருவர் தயாராக எடுத்துச் செல்ல இருந்தனர்..கனகம் விருந்தினருக்காகச் செய்த புளிமிளகாயை வான் நோக்கிப் பார்த்து “பகவானே உனக்கே அர்ப்பணம்” என்றாள்.. வீர நாராயணர் செல்லலாம் எனத் தலையசைக்க பிரசாதங்களை இருவரும் எடுத்து நடக்க, பின்னாலேயே நடந்தார் அவர்..கருவறையை அடைந்து மறுபடி திரை போட்டு ராமனுக்கு, பொற்றாமரையாள் எனச் சொல்லப்படும் பூமா தேவிக்கு பிரசாதங்களை நைவேத்தியம் செய்து விட்டு மறுபடியும் ராஜாதித்யர் ரேணுகாவிற்காக சிறப்பு விண்ணப்பத்தையும் ராமனிடம் இட்டு விட்டு வெளியில் வந்தார்.. மடப்பள்ளி ஆரவமுது பொற்தட்டுகளுடன் காத்திருக்க பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மண்டபம் இருந்த திசையை நோக்கி நடக்கும் போது வீர நாராயணருக்குச் சற்றே பதறியது மனம்.. இரு விரோதிகள், ஒரு இளவரசி, வேற்று நாட்டு குருதேவர்..கிட்டத் த்ட்ட ஒரு நாழிகைப் பொழுதுக்கு மேல் ஆகிவிட்டதே..ஏதாவது வாக்குவாதங்கள் நடந்திருக்குமோ.. கோவில் என்றும்பார்க்காமல் மோதியிருப்பார்க்ளோ..ம்ம் அப்படி எல்லாம் நடந்திருக்காது..ராமன் பார்த்துக் கொண்டிருப்பான்.சரி தானே ராமா “ எனத் தனக்குள் ராமனையும் கேட்டுக் கொண்டு மண்டபத்தை அடைந்தார்..மண்டபத்தில் கண்ட காட்சியோ மாறாக இருந்தது..மாதவர், பூதுகன், ராஜாதித்யர் மூவரும் சிரித்த வண்ணம் இருந்தனர்!

(தொடரும்)

pavalamani pragasam
17th September 2014, 06:41 PM
ம்ம்ம்...அப்புறம்?