PDA

View Full Version : ஒரு யுகத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பொ



chinnakkannan
23rd August 2014, 09:36 PM
****
ஒரு யுகத்தின் கீழ்

நின்று கொண்டிருந்த பொழுதினில்..

**
சின்னக் கண்ணன்..

*
ஜெனிஃபர் உள்ளே நுழைந்த போது கிட்டத் தட்ட இருபது நாய்கள், ஐந்து எருமைகள் அழகாய் நாற்காலிகளில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தன.. ஒரு சில எருமைகள் உள் நாட்டைச் சேர்ந்தவை.

கவுண்ட்டரை நெருங்கியதும் அங்கு இருந்த பல்லி கொஞ்சம் விகாரமாய்ச் சிரித்து “ஜென்னி.. இன்னிக்கு உன் ட்ரஸ் நல்லாயிருக்கு” என்றது.

மையமாகப் புன்சிரித்து, மனதுக்குள் முறைத்து அங்கிருந்தட்ரேயை எடுத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.

“ஏன் நான் சொல்றது பொய்னு நினைக்கறயா..ஒன்னோட இந்த புது ஸ்டைல் பொட்டு கூட நல்லாருக்கு..ஆனா இந்தச் சுடிதார் தான் டைட்னு நினைக்கறேன்..”

ஜென்னியின் நெற்றியிலிருந்த நெளி நெளியான பாம்பு ஸ்டிக்கர் பொட்டு ஒருகணம் உயிர் பெற்று அவனைக் கொத்தி விட்டு மீண்டும் நெற்றியில் அமர்ந்தது.

“என்ன.. இன்னிக்கு லேட்டாகிப் போயோ.. ஒரு ஃபோன் பண்ணியிருந்தா ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்லை.?” மறுபடியும் வம்பிழுக்கும் பல்லி..

“சும்மா இருங்க மாதவன்..ரெஸ்ட்டா..லீவா.. நல்லா தருவீங்களே.. எங்கே லீலா..”

“ஓ லீலாவோ..அது அவ்விடத்து இருக்கே…”

லீலா ஜீன்ஸ் பேண்ட் லூஸ் டாப்ஸில் சற்றே தொலைவாய் இருந்த டேபிளில் இருந்த ஒரு நாயிடம் சிரித்துக் கொண்டிருந்தாள்.. அதன் கண்கள் மட்டும் மானசீகமாக லீலாவைத்தின்ற படி ஏதோ சொல்ல, அவள் தலையாட்டி இவள் பக்கம் வந்தாள்..

“எந்தா ஜென்னி.. இது..லேட் ஆயோ..சரி..அந்தடேபிளை அட்டெண்ட் பண்ணு..ஜல்தி”

இரண்டு வருடம் சீனியர் அவள் இந்த ஹோட்டலில்.. ஒரு மாதிரியாய் தலைமை ஆள் போல.. சொல்வதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும்..

வேகமாய் அந்த டேபிளிடம் சென்றால் இரண்டு பேர்…ஒருவ்ன் தன் கண்கள் விரித்து அவளிடம்.,”ஒரு ஹெலிகன், ஒருஃபாஸ்டர்..” சரி எனத் திரும்புகையில் “ஹலோ கழிக்க கொஞ்சம் ஃப்ரென் ச் ஃப்ரைஸ்..கொஞ்சம் வேகமா..”” ம்ம்

கொஞ்சம் இரேன்.என்ன அவசரம். குடியா முழுகிடும்..ம்ம் கொஞ்ச நேரத்துல குடிச்சே இவன் முழுக்ப் போறான்” என நினைத்தவளுக்குள் சிரிப்பு வந்தது.. மாதவனிடம் ஆர்டர் சொல்லி பீர் கேன்களை இயந்திரமாக எடுத்து வைக்கையில் வழக்கம் போல விரக்தி வந்து விட்டது…சே..என்ன பிழைப்பு இது..

chinnakkannan
23rd August 2014, 09:38 PM
நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் அகஸ்தீஸ்வரம் தான் ஜென்னியின் ஊர்..பிறந்தது முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை ஜென்னி தான் ஏஞ்சல் அவள் குடும்பத்திற்கு. அவளுடைய அம்மா திடீர் என்று ஏதோ பெயர் தெரியாத காய்ச்சல் வந்து சட்டென்று மறையும் வரை.

கான்வெண்ட் படிப்பு இல்லையென்றாலும் கொஞ்சம் கார்ப்பரேஷன் பள்ளியிலேயே நன்குபடித்துக் கொண்டிருந்த ஜென்னியின் படிப்பு அவளுடைய அம்மாவைப் போலவே அல்பாயுசில் இறந்து போனது..

அதன் பிறகு வாழ்க்கையின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக மாறக் காரணம் அவளுடைய அப்பா..

சின்னதாக ஒருவேலை பார்த்துக் கொண்டிருந்தவர் மனைவியின் மறைவில் குடிக்க ஆரம்பிக்க, வீட்டில் வழக்கம் போல் வரவு குறைய ஆரம்பிக்க..

ஜென்னி தான் சவாலாக எடுத்துக் கொண்டு சில வருடங்கள் கஷ்டப் பட்டு நாகர் கோவிலில் ஒரு தனியார் கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்..

உடன் பிறப்புகள் என்று யாருமில்ல்லை..ஆனால் அம்மா போனதும் தூரத்துச் சொந்தம் என்று வந்து அமர்ந்த மரியம் ஆன்ட்டி மட்டும்….

எலேய் வயசுக்கு வந்த பொண்ண வேலை பாக்க விட்டுட்டு இப்படிக் குடிச்சு அழியறயே..

ம்ம்.அவள் அப்பா எதுவும் காதில் போட்டுக் கொண்டதில்லை. அம்மா இருக்கும் போதும் ஒன்றும் கொஞ்சியதில்லை.இவளும் சின்ன வயதிலிருந்தே விலகி இருந்தாள்..

அவளது கம்பெனிக்கு அடுத்த கட்டடத்தில் தான் கிருஷ்ண மேனனின் ஆஃபீஸ். எப்படியோ ஆரம்பித்த பழக்கம் ஒரு நட்பா காதலா என அவள் குழம்பிக் கொண்டிருந்தாள்..

சில சமயங்களில் இள மனத்தின் அபிலாஷைகள் மனதை உந்த, அவன் எப்போது ஓடிப் போலாமா கேட்பான் என்று கூட அவள் யோசித்திருந்த பொழுதில் அவன்..

“ஜென்னி. எத்தனை நாள் இப்படிக் கஷ்டப் ப்டணும்..”

“ஏன் மேனன்..”

“என்னோட ஃப்ரெண்ட் கல்ஃப் ல பெரிய ஹோட்டல்ல ஒர்க் பண்றான்..அங்க ரிசப்ஷ்னிஸ்ட் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்..”

“அப்பாவை விட்டு விட்டு நான் எப்படி ப் போறது..தவிர நான் ஒண்ணும் ஜாஸ்தி படிச்சதில்லையே..”

“ம்ம்..உனக்குத் தான் நல்லா இங்க்லீஷ் பேச வருமே..”

“இருந்தாலும் இருந்தாலும் தனியா..”: எனக்கு ஒண்ணு ஏதாவது ஆகிட்டா என்ற் கேள்வியை அவள் கேட்கவில்லை. அதற்கும் சேர்த்து அவன் பதில் சொன்னான்..

“கவலைப் படாதே ஜென்னி. அங்கு ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட் தான்..கூட நிறையப் பெண்கள் வேற வேலை பார்க்கறாங்க.. உனக்கு எந்தஒரு கெடுதலும் வராது. நா கூட அப்ளை பண்ணியிருக்கேன்.. கொஞ்ச நாள் ள வந்துடுவேன்.. அப்ப நாம புது வாழ்வு ஆரம்பிக்கலாம்.”

கடைசியில் போட்ட குண்டு தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. புது வாழ்வு..இவன் இவன் என்னைக் காதலிக்கிறானா..இப்படியெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளலாமா என்ன..

மேனன்.. நீங்க..

யெஸ்..ஜென்னி.. ஐ லவ் யூ..

chinnakkannan
23rd August 2014, 09:39 PM
ஜென்னி மிதந்தாள்.. விரல் கூடத் தீண்டாத காதல்.. கண்களை மட்டும் பார்த்துப் பேசிய மேனன்…

அடுத்து நிகழ்ந்த விஷயங்கள் எல்லாம் வெகு விரைவு..

அப்பனுக்கென்ன..குடிக்கக் காசு ஒழுங்காய்க் கிடைத்தால் போதும்.

மரியம் தான் முணுமுணுத்தாள்.. பாத்துடி..ஏதாவது ஏடாகூடமாய் ஆகிடப் போகுது..

அதெல்லாம் ப்ராப்ளம் இருக்காது அத்தை..

வந்த நாட்களில் வேகமாய்ப் பாஸ்போர்ட் கிடைக்க அனுப்பிய ஒரு மாதத்தில் விஸா வந்து விட..மஸ்கட் பயணம்.

வந்தபின் தான் தெரிந்தது.. ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட் இல்லை..குடிக்க வரும் நாய்களின் முன்னால் ஆட வேண்டும். வித விதமாய் டிரஸ் போட்டு..

மாதவன் தான் மேனனின் நண்பன்..அதிகம் வழியும் பல்லி..

ஆனால் அவன் தான் கொஞ்சம் நல்லதும் செய்தான்..

“மேனன்.. அப்படியா சொன்னான்.. ஞான் அறிஞ்சுட்டில்லா..”

வந்து இறங்கிய முதல் நாள்.. புதிய நாடு..புதிய ஊர்.. புதிய மனிதர்களிடையே தெரிந்த ஒரே நபர்..சொன்ன பதில் அது..

“ஜென்னி.. நீ நல்லா ஆடும்னு மேனன் பறஞ்சு..”

ஆட்டமா.. எனக்குத் தெரியாதே..அது லவ் பண்றேன்னுல்ல சொல்லிச்சு..

ச்ச்.. பல்லி வருத்தப் பட்டது.. சரி பரவாயில்லை.. நீ என்ன பண்றே.. பார்ல சர்வ் பண்ணு.. ஒண்ணும் ப்ரச்னை இல்லை..

வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டு பாரில் வேலை பார்த்ததில் ஒரே ஒரு சந்தோஷம்..மாதக் கடைசியில் கிடைத்த பணம்.. முழுதாய்ப் பத்தாயிரம் ரூபாய் அனுப்ப முடிந்தது.. அதுவும் பல்லி தான் பாங்க் அக்கெளண்ட் வலை மூலமாகச் செய்து கொடுத்தது..

அவ்வப்போது நம்பியவளை நட்டாற்றில் கைவிட்ட மேனன் முதலை நினைவில் வரும்..

இரவில் கனவில் பலவிதமாய் அதை ஈட்டியால் குத்தி, வெடிகுண்டால் வெடிக்க வைத்துக் கொன்றிருக்கிறாள்..

chinnakkannan
23rd August 2014, 09:40 PM
உடன் இருந்த அறைத் தோழி பிந்தியாவை விட இவளோட பாடு தேவலை என்ற ஆறுதல்..பிந்தியாவுக்கும் ஒரு கதை..

அவள் அதே ஹோட்டலில் உள்ள இன்னொரு பாரில் ஆடுபவள்.. ஆடல் தெரியாத ஆட்டக் காரி..

ஆளை ஆளைப் பார்க்கிறாய் ஆளை ஆளைப் பார்க்கிறாய்
ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறாய்
அங்கொண்ணு என்னைப் பார்த்து கண்ஜாடைபண்ணுது..
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத் தான் ரசிக்குது..”

ஹோட்டலில் ஆடுவது ஹிந்திப் பாடல்கள் தான் என்றாலும் அறையில் தமிழ்ப்பாட்டில் பிந்து ஆடுகையில் சிரிப்பு வரும்.. அழுகையும் வரும்..

ஆரம்பத்தில் பிந்தியாவிடம் கேட்டதுண்டு..”எப்படிம்மா ஆடறே.. ஒரு மாதிரி இல்லையா..”

கிடைத்த பதில் “பழகிடுச்சு…”

“எதுவும் மானத்திற்கு ஆபத்தில்லையே…”

“ஆரம்பத்திலேயே இருந்தால் தானே” கண் சிமிட்டி அவள் சிரிக்க இவள் கண்ணில் நீர் கோர்க்க பிந்தியா சமாதானப் படுத்தினாள்..

“வெரி ரேர்.. நானொண்ணும் ரெகுலர் இல்லை.. பட் என்னைத் தப்பா நினைக்காதே.. என்ன பண்றது..பன்னி வேஷம் போட்டாச்சு.. ஆனா நீ சுதாரிச்சுக்கிட்ட..லக்கி..அப்படியே கொஞ்சம் காசு சேர்த்துட்டு ஆன்யுவல் லீவ்ல ஊருக்குப் போய்டு..”

அது தான் ஒரு வருடம் ஓடி விட்டது..இன்னும் ஆறு மாதம்..கிளம்ப வேண்டியது தான்.. பல்லைக் கடித்துக் கடித்து பல் கூடச் சின்னதாகியிருக்கும்..பாரில் நின்று நின்று..கேட்டுக் கேட்டு சர்வ் செய்ததில் ஆரம்பத்தில் வலித்தகால்கள் வலிக்குப் பழகி விட்டன.. மனவலிக்கு முன்னால் அது ஒன்றுமில்லாத விஷயம்..

அப்பாவிற்குச் சாராயத்திற்குத் தொட்டுக் கொள்ள முட்டை ஆம்லெட் பண்ணியிருக்கிறாள். ஆனால் அப்பாவின் கண்கள் வேறு. இந்த நாய்களின் கண்கள் வேறு..

கெளண்ட்டர் அருகே நின்று கொண்டே பார்த்துக் கொண்டு இருந்ததில், கதவைத் திறந்து கொண்டு அவன் வருவது தெரிந்தது.. நெஞ்சம் படபடத்தது..

chinnakkannan
23rd August 2014, 09:41 PM
அவன் பெயரெல்லாம் அவளுக்குத் தெரியாது. முதன் முதலில் பார்த்த போது . வழக்கம் போல அவனையும் ஒரு நாயாகத் தான் அவள் நினைத்திருந்தாள்..

கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி.. தீர்க்கமான கண்கள். மூக்கின் கீழ் கொஞ்சம் திக்கான மீசை..இரட்டை நாடி முகம்.சுருள் முடி.. நடுத்தர வயது..

“சாருக்கு எந்தா வேண்டும்?”

அவன் அவளது கண்களைப் பார்த்துத் தனது ஆர்டரைக் கூறினான்.

சரி என்று திரும்புகையில் பக்கத்து டேபிளில் இருந்த உள் நாட்டு ஆட்கள் அவளைக் கூப்பிட, என்ன ஏது என்று விளித்து நகர முற்படுகையில் ஒரு ஆள் அவளுக்குத் தெரியாது என நினைத்து இந்தியில் அருகில் உள்ளவனிடம் எதோ கேவலமாகச் சொல்ல..

அவள் கால்கள் தடுமாறின..

மாதவனிடம் சொன்னால்., “சும்மா கண்டுக்காத இரேன்..எப்படியும் போய்டுவாங்கள்ள.” என்று சொல்வான்.

கண்ணில் அடிபட்டவாறு அவள் நகர முற்படுகையில், இவன் எழுந்து அந்த ஆட்களிடம் பேசுவதைப் பார்த்தாள்.

ஆர்டர் மாதவனிடம் வாங்கி மறுபடி வருகையிலும் அவன் பேசி முடித்து அவனுடைய டேபிளில் அமர்ந்தான்.. அதுவும் அரபு மொழி சரளமாய்..

“சார்..”

“ம்ம் குட்டி ஒண்ணும் பேடிக்க வேண்டாம்.. நான் நன்கு சொல்லி…”

“என்னன்னு”

புன்சிரித்தான்.. “என்னுடைய நண்பன் இந்த ஊர் காவல் துறையில் உயரதிகாரியாக இருக்கிறான் என்று..”

அன்றிலிருந்து அவனை அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்தது.. அன்றே அவன் அவளுடைய பேரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.. எப்போது வந்தாலும் ஜென்னி டேபிள் தான்..

தின்மெல்லாம் வருவதில்லை. வாரம் ஒருமுறை.. அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை.. அதுவும் தனியாகத் தான் வருவான்.

வந்தாலும் நேராக எல்லாம் ஆர்டர் கொடுப்பதில்லை.. “ஜென்னி.. செளக்கியமா..” எனச் சில வார்த்தைகள்..பின் தான் சொல்வான்.

அமைதியாய் எதிரில் இருக்கும் டி.வியைப் பார்த்த வண்ணம் மது அருந்திவிட்டு முடித்துச் செல்லும் போது நின்று “ஜென்னி பை” என்றும் சொல்லிச் செல்வான்.

அதுவெ மகிழ்ச்சியாக இருந்தது. வறண்டு போயிருந்த மனத்தில் ஒரு துளி மழைத்துளியாக..

பில் கொடுக்கும் போதும் கொஞ்சம் தாராள மனது.. நன்றாகவே டிப்ஸ் தருவான்..”ஆனால் அதுவா முக்கியம்.. மனுஷியாய் என்னை மதிக்கிறானே ஒருவன்’ என மனதுள் நினைத்துக் கொள்வாள்.. அதுவும் இந்த நாய்க் கூட்டத்தில் நடுவில் திசை மாறி வந்திருக்கும் தேவன் என்றுகூடச் சொல்லலாம்.

ஒரு சில சமயம் நள்ளிரவில் காணும் அடல்ட்ஸ் ஒன்லிக் கனவில் அவனது முகம் புகையாக வந்து செல்லும்.

அன்று அவன் நுழைவதைக் கண்டதும் ஜென்னியின் கண்கள் தன்னிச்சையாக அவளது வரிசையைப் பார்த்தன..

chinnakkannan
23rd August 2014, 09:43 PM
டேபிள்கள் மூன்று ரோக்களாகப் போடப் பட்டு இருக்கும்..முதல் ரோ ஃபிலிப்பைனி க்ளாராவுடையது.. இரண்டாவது லீலா.. மூன்றாவது இவளுடைய டேபிள்கள்.இவள் கவனிக்க வேண்டியவை.

மூன்றாவது ரோ முழுக்க ஆட்கள் அமர்ந்து இருக்க, இவளுக்குப் பரபர்வென்றிருந்தது..

இடத்திற்காக அவனுடைய கண்களும் துழாவின..

அச்சச்சோ..இவன் எங்கே அமரப் போகிறான் எனத் தவித்த பொழுதில் அவன் இரண்டாவது வரிசையிலிருந்த டேபிளில் அமர்ந்து கொண்டான்.

உடன் லீலா வந்து ஆர்டர் எடுக்க, இவள் வெறும் ட்ரேயை எடுத்தபடி அந்தப் புறம் செல்ல, அவன் கண்கள் அவளைப் பார்த்ததே தவிர சிரிப்பு எதுவும் இல்லை..

கொஞ்சம் ஏமாற்றம்..

பின் தொடர்ந்த நேரத்தில், அந்தப் பக்கமே சென்று சென்று அவனிருக்குமிடத்தைப் பார்க்க, அங்கு எந்த சலனமும் இல்லை..ஒரு இயந்திரம் மாதிரி சோம பானம் பருகிக் கொண்டிருந்தான்.

தேவனே என்னைப் பாருங்கள்..என் பாவங்கள் தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்…

சீ.. போ..ஜென்னி..அவனுக்கும் உனக்கும் ஒரு தொடர்புமில்லை..ச்சே..சும்மா இரு..” மனம் அதட்டியது..

லீலாவும் அவளது வழக்கப் படிக் கொஞ்சம் சிரித்துப் பேச அவனும் பேச இவளுள் ஏதோ எரிந்தது…

ஒரு மணி நேரம் கழிந்திருக்க, லீலா எதற்கோ உள்ளிருந்த ஹோட்டல் சமையலறைக்குச் சென்றிருக்க, இவள் அந்தப் பக்கம் போனாள்..

“ஹலோ…”

காதுகளில் தேன் மழை பொழிந்ததா. உணர்வுகளில் ஏன் இப்படி உற்சாக ஆறு ஓட வேண்டும்..

“எஸ்..” என விழிகளில் ஆவலுடன் ஜென்னி அவனிடம் கேட்டாள்…

“Where is that girl? Call her” என்றான் அவன்.

ஜெனிஃபருக்குள் ஏதோ உடைய கண்ணோரம் நீர் வந்தது…..

**

(முற்றும்)

(மரத்தடி இணையக் குழுவில் எழுதியது..2005)

pavalamani pragasam
24th August 2014, 08:21 AM
ம்ம்ம்....அவலங்கள்!