View Full Version : பாசுரம் பாடி வா தென்றலே!
chinnakkannan
12th September 2014, 01:09 PM
பாசுரம் பாடிவா தென்றலே..
சின்னக் கண்ணன்..
ஒன்று
மனித வாழ்க்கையில் சோகங்கள் கலைந்து செல்லும் மேகங்கள் தானோ..
பாருங்கள்..திடுமென ஒரே சோகமாய் இருக்கிறது.. கொஞ்சம் மனசு வறட்சியாக..கற்பனை எதுவும் வராமல்.. எதைப்பற்றியாவது எழுதிப் பார்க்கலாம் என்று புத்தகங்களைப் படித்தது தான் மிச்சம்.. எழுத விரல் வர மாட்டேன் என்கிறது… காரணம் சோம்பல்.
.
இன்று எப்படியும் எழுத வேண்டும் என ஆழ்மனத்திடம் “சமர்த்தோல்லியோ..உன் திறமை உனக்கே தெரியாது..எழுதலாம்பா “என்று சொல்லியும் கூட மறுபடி சோம்பல்.. எனில் அகெய்ன் சோகம்..
கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து புத்தகமொன்றைப் புரட்டும் போதே யோசித்தேன்..எப்படியெல்லாம் வருத்தம் சோகம் நம்மைச்சூழ்கிறது..
பரீட்சைக்குப் படித்துச் செல்லும் போது படித்தது வராத போது.:
அழகாய் டிரஸ் செய்து செல்கையில் உடன் வேலை பார்க்கும் நண்பனோ நண்பியோ கமெண்ட் எதுவும் அடிக்காததால்..:
லீவு நாளில் கொஞ்சம் பசி எனக் கிச்சனுக்குள் போனால் நொறுக்ஸ் எல்லாம் தீர்ந்திருப்பது:..ஒரு விருத்தமோ கவிதையோ எழுதலாம் என நினைக்கையில்
போப்பா உனக்கு வேற வேலை இல்லை என கற்பனைக் குதிரை சோம்பேறியாய் வேறெங்கோ போய் புல்லை மேயப் போய்விடுவது -..இவையெல்லாம் குட்டிக் குட்டிசோகங்கள்
உறவினரின் இறப்பு, நண்பர்களின் பிரிவு, காதலில் தோல்வி இதெல்லாம் பெரிய சோகங்கள்..
புத்தகம் புரட்டியதில் விரல் ஒரு பக்கம் நிற்க அட இந்த விருத்தமும் சோகத்தைச் சொல்கிறதே..
**
மிகப் பெரிய சக்கரவர்த்தி, தன் மனையாள் கேட்ட வரத்தை நிறைவேற்ற பையன் காட்டுக்குப் புறப்பட்டுப் போய் விடுகிறான்..தசரதர் புலம்புகிறார்…
வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
…கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா
…விடையோந்தன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்காலம் வல்வினையேன்
…மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்நெஞ்சம் இருபிளவாய்
..போகாதே நிற்கு மாறே…
ஹே ராமா..உன் தந்தை தசரதன் அழைக்கின்றேன் இங்கே வா..என்னை வந்து ஒருமுறை பார்த்துவிட்டுப்போ.. மறுபடியும் கூப்பிடுகிறேன்..
ராமா..மறுபடியும் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ..
ஓ மை பாய், மகனே…மலர்க்கூந்தலை உடையவளும் மூங்கில் போன்ற தோள்களை உடைய சீதையை மணப்பதற்காக சிவ தனுசை முறித்தவனே..மகா வீரனே..
கொடிய விலங்குகள் கொண்ட காட்டிற்கு நீ செல்கிறாய் என்னைத் தவிக்க விட்டு.. இதைக் கண்டு என் மனம் இரண்டாகப் பிளக்காமல் இருக்கின்றதே..
கொடிய வினை செய்த பாவி நான்.. என்னை விட்டுப் போகிறாயே ஓ ராமா ஸ்ரீராமா.. நான் எப்படியடா உயிர் வாழ்வேன்..
**
படக்கென தசரதரின் சோகம் நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.. எழுதியவர் குலசேகர ஆழ்வார் (ஆழ்வார் ஆகுமுன் சேர மன்னனாய் இருந்தவர் எனப் படித்த நினைவு) எவ்வளவு அழகு..
டாட் நீங்க கொடுத்த boon நிறைவேத்தத் தான் போறேன்..டேக் கேர் டாட் எனச் சொல்லிச் செல்லும் ராமபிரானுக்கு அந்த சமயத்தில் புத்திர சோகம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மை தான்.. கொஞ்சம் அனுபவப் பட்டிருந்தால் தசரதனோடே இருந்திருப்பாரன்றோ ( ராமாயணம் வந்திருக்குமா என்பது வேறு விஷயம்!!).. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இறைவனுக்கும் பொருந்தியிருக்கிறது..பிற்காலத்தில் லவ குசர்களை பிரிந்து தானே இருந்தார்.. பிறந்தது முதல் பார்க்க முடியவில்லையே..
ம்ம்..இந்த விருத்தத்தையே நானும் எழுதிப்பார்க்க முயற்சி செய்தேன்
அழைக்கின்றேன் உந்தனையே அருமைராமா
…அருகில்வா என்று சொல்லி
தழைக்கின்ற துயரத்தில் தசரதனும்
..தயங்காமல் கூவ அங்கே
விளைகின்ற துக்கமெதும் அறியாமல்
..வில்லினையே தோளில் சேர்த்தே
கலைகின்ற மேகம்போல் கரைந்துசென்றான்
…கானகத்தே அண்ணல் தானே…
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழி உருவானது அப்பொழுது தான் போலும்..
அவ்வப்போது ஒரு பாடலுடன் வருவேன்….வரட்டா
(அதான் வந்துட்டியே.. சோகத்தப் பத்திச் சொன்னே சரி..நீ மறுபடி வந்ததுனால மத்தவாளோட சோகத்தப் பத்தி நினச்சியா..
போ மனசாட்சி..அப்படில்லாம் இருக்காது..
அப்படிங்கற.. சரி என்ன பண்ணப் போற..இங்க..
இப்போதைக்கு ஒரு பாட்டுன்னு எடுத்துருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..எல்லாம் அந்த இறைவன் தான் துணை..
ஆல் த பெஸ்ட்)
..தொடரும்
pavalamani pragasam
12th September 2014, 06:20 PM
தொடரட்டும்!
chinnakkannan
13th September 2014, 10:55 AM
பாசுரம் பாடிவா தென்றலே..
**********************
இரண்டு..
*******
இரண்டு உரையாடல்கள்:
“ஆமா..உன்னோட ஃபேவரிட் நடிகரோட படம் ரிலீஸாச்சே பாத்தியா..என்ன”
“பாக்கலை..டிக்கட் மட்டும் ரிசர்வ் பண்ணியிருந்தேன்..இப்ப எந்தப் படத்துக்கும் ரிவ்யூ பாக்காம போறதில்லை..
அது சரி..ரிசர்வ் பண்ணினதை என்ன செஞ்ச..”
“’ரெண்டு நூறு ரூவா டிக்கட்.. ப்ளாக்ல வித்துட்டேன்.. லாபம் 195 ரூபா..ப்ளஸ் ஒரு சாக்லேட்”
“என்னது..
“ஆமா வித்தது ஒரு ஹோட்டல் காரர் கிட்ட..! அஞ்சு ரூபாய்க்குச் சேஞ்ச் இல்லையாம்..”
**
“என்ன ஆச்சுடி.. ஒன்னோட லவ்வுக்கு..”
இன்னும் சொல்லவே இல்லை..”
”
ஏன் இன்னும் டிலே பண்றே.. பார்த்துக்கோ.. சனிக்கிழமை சனிக்கிழமை அவன் எங்கேயோ க்ளாஸஸ் போறானாம்..கூடவே அவனோட ஆஃபீஸ் மாத்வியும் போறா போல இருக்கு.. சொல்லாமேயே இருந்திடாதே..மிஸ் பண்ணிடுவே.. அப்புறம் உங்க அப்பா பார்க்கற மதுரை மாப்பிள்ளையக் கட்டிக்கிட்டு அப்பப்ப வெட்டு குத்து ந்னு நியூஸ் பாத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்..
*
ஆக காதல் சினிமா இன்ன பிற என பல விஷயங்களுக்கு முன்பதிவு என்பது தேவையான ஒன்றாக இருக்கிறது..
**
பாபம் செய்தால் என்ன ஆகும் புண்ணியம் செய்தால் என்ன ஆகும்..
ஆண்டவனே, நான் செய்த பாபங்களுக்கெல்லாம் என்னால் முடிந்த அளவுக்கு தான தர்மம் வழங்கி விட்டேன்.. ஸோ என் பாபத்தைக் குறைத்து விடு” என்றால் குறையுமா என்ன..
மஹா விஷ்ணுவும் மஹா லஷ்மியும் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்த சமயம் அது.. மஹாவிஷ்ணுவின் உத்தரீயமும் லஷ்மியின் முந்தானையும் முடி போட்டு வைக்கப் பட்டிருக்கின்றன..
வைகுண்டத்தில் இருவரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… என்ன சதுரங்கம்..
பூலோகத்தில் மிகப் பெரிய இந்திர பதவிக்கு ஒப்பான பதவியில் இருப்பவனைப் பார்க்கிறார் விஷ்ணு.. அவனை அப்படியே டபக்கென்று எடுத்து நரகத்தில் போடப் போகிறார்..
மஹாலஷ்மி:: ஓ மை ஸ்வீட் ஹார்ட்.. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்
இத்தனை நாட்களாக போகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தானே..இப்போ நரகம்னா சிரமப்படுவானே
விஷ்ணு:: தேவி உனக்குத் தெரியாதா.. இத்தனை காலம் புண்ணீயம் பண்ணியிருக்கிறான்.. அதன் பலன் சுகம்.. அனுபவித்தான்.. பாவமும் நிறைய பண்ணியிருக்கிறான் அதற்கு நரகம்
லஷ்மி எவ்வளவு புண்ணியம் எவ்வளவுபாவம்
விஷ்ணு அறுபது சதவிகிதம் புண்ணியம் நாற்பது சதவிகிதம் பாவம்..
லஷ்மி: சரி ஓய் அறுபதுல நாப்பது கழிச்சுட்டு இருபது பர்சண்ட் புண்ணியம் இருக்கறதால இவனுக்கு சொர்க்கம் கொடுமேன்..
விஷ்ணு சிரித்து” அப்படி இல்லை லஷ்மி புண்ணியத்திலிருந்து பாவத்தைக் கழிப்பதெல்லாம் சாஸ்திரப்படி கிடையவே கிடையாது..புண்ணியத்திற்கும் ஒருவன் அனுபவிப்பான் செய்த பாவங்களுக்கும் ஒருவன் அனுபவிப்பான்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நாராயணா” எனக் குரல் வர..பார்த்தால் இந்திரத்யும்னன்.. முற்கால ப் பாண்டிய அரசன்..அகத்திய முனிவரின் சாபம் பெற்று கஜேந்திரன் என்னும் யானையாக மாறி முதலை யானையின் காலை பிடிக்க கதறும் ஓசை..
விஷ்ணுவுக்கு படபடப்பு கூடிக் கிளம்ப லஷ்மி தடுக்கிறாள் “ ஓய்..உம்முடன் லெஷரா இருக்கற நேரம் கிடைக்கறதே அபூர்வம்.. நான் என்ன சொன்னேன்.. ரெண்டு பேரும் செஸ் ஆடலாம்னு தானே.. அதுக்காக த் தானே ஆட்டம் முடியறவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் போகக் கூடாதுன்னு தானே முடிச்சுப் போட்டுக்கிட்டு உட்கார்ந்துருக்கோம்.. கம் லெட்ஸ் ஃபினிஷ் த கேம்”
விஷ்ணு ஒரு கள்ளத்தனமான கண்ணச் சிரிப்பு சிரித்து முடிச்சை அவிழ்க்காமலேயே ஓட பின்னால் சேலையைப் பிடித்துக் கொண்டே லஷ்மியும் ஓட,எதிரில் கருடன் வர, ஸ்டாப் சொல்லி அதில் ஏற, லஷ்மியும் உடன் ஏறப் பறந்து கஜேந்திரன் இருக்கும் இடத்தை அடைகிறார்..
பின் என்ன..
கஜேந்திரனின் ஆபத்தைக் கண்டதும் சக்ராயுதத்தை எடுக்கவெல்லாம் இல்லை.. தொட மட்டும் செய்ய அது சென்று முதலையை சம்ஹரிக்கிறது..
எனில் பாப புண்யக் கணக்குக்கு மேலாக ஒன்றிருக்கிறது..பகவானின் திருவடி பற்றினாலே போதும் என்பது தான்..
**
இந்த முன்பதிவு, பாவ புண்ணிய சமாச்சாரங்களைப் பற்றி பெரியாழ்வார் ஒரு பாடலில் சொல்லியிருகிறார்..
துப்புடையாரை அடைவதெல்லாம்
..சோர்விடத்துத் துணையாவா ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
.. ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு
..ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
..அரங்கத் தரவணைப் பள்ளியானே..!
ஆண்டவனே.. வயதாகி முதுமை வந்து தளர்வடையும் போது தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில் –தம்மைக் காப்பாற்றும் தகுதி கொண்டவர்கள் என்ற எண்ணத்தில் பிள்ளையோ பெண்ணோ அவர்களை அண்டி வாழுதல் உலக இயல்பு..
எனக்குத் தகுதி எதுவும் இல்லை.. இருந்தாலும் உன்னையே சரணடைந்தேன் ஏன் தெரியுமா..
ஆதிமூலமே என ஓலமிட்ட யானையை நீ காத்தது உலகிற்குத் தெரியுமே..
வயதானால் என்ன ஆகும்.. சர்க்கரை,, கொழுப்பு, இருதய பலவீனம் என சொல்லாமலேயே நோய்கள் வந்து தாக்கும்.. டயட்டில் எல்லாம் இருக்க வேண்டியிருக்கும்.. உடல் சோர்வாகி நலியும்..அப்போது பசி என்ற நினைப்பு மட்டும் தான் மேலோங்குமோ என்னவோ..உன்னை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன்..
ஸோ.. என் கண்ணோல்லியோ.. அப்போதைக்கு – அந்த சமயத்திற்கு..இப்போதே சொல்லிவைத்துவிட்டேன் உன்னிடம்..
திருவரங்கத்தில் கண்வளரும் பெருமானே..என்னுடைய இந்த அப்ளிகேஷ்னை மறவாமல் நான் இறக்கும் காலத்தே வந்து அருள்புரிவீராக..” என்கிறார் பெரியாழ்வார் தன் பெரிய திருமொழியில்..
ம்ம்.. நாமும் அப்படியே சொல்லி வைத்து விடுவோம்.. லெட் அஸ் கண்டின்யூ டு டூ வர் ஸின்ஸ்.. ஏனெனில் நாளைக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே..ஆஃபீஸ் போகணுமே..!
(தொடரும்)
pavalamani pragasam
14th September 2014, 08:07 AM
உவமானங்கள் ஜோர்! ரொம்ப நல்ல யோசனையாயிருக்கே-முன் பதிவும் பாவ வாழ்வும்!
aanaa
14th September 2014, 08:40 PM
>>ஆமா வித்தது ஒரு ஹோட்டல் காரர் கிட்ட..! அஞ்சு ரூபாய்க்குச் சேஞ்ச் இல்லையாம்..”<<<
ஐந்து சதத்திற்கும் இதே "ஒரு சாக்லேட்" தான் ,,
பிழைக்கத் தெரிந்த "ஹோட்டல்" காரர்கள்
என்னடா சாரத்தை விட்டிட்டு சக்ககையை எடுக்கிறனே ;; :-)
chinnakkannan
14th September 2014, 10:22 PM
பாசுரம் பாடி வா தென்றலே
**
மூன்று
**************
அ’னாவில் ஆரம் பித்து
…அழகுற பாடங் கற்று
’வ’னாவில்’ தொடங்கும் வண்ண
…வாலையாம் பருவம் கொண்டு
’ம’னாவில் வந்து அங்கே
..மங்கையாம் பருவந் தன்னில்
’’க’னாவில் மதிம யங்கி
….காதலுங் கொள்வ தேனோ....
இது நான் சொல்லவில்லை பக்கத்து ஃப்ளாட் மாமி., ஒரு பெண்ணின் அம்மா சொல்கிறார்.. அவர் என்ன சொல்கிறாரென்று கேட்போம்..
என்னத்த சொல்றது போங்க.. அழகாப் பொண்ணு பொறந்துச்சேன்னு போற்றி வளர்த்தேன்..எல்லாத்துக்கும் நான் வேண்டும்.அவளுக்கு பள்ளிப்பருவத்துல ஹோம் வொர்க், கொஞ்சம் பருவமடைஞ்சப்போ சினேகிதியா அவளுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.. கிடுகிடுன்னு வளர்ந்து காலேஜ் போய்ட்டு முடிச்சு ஒரு வேலையும் தேடிக்கிட்டா..
அப்பப்ப நட்சத்திரத்தப் பாக்கறா, மொட்டை மாடில்ல ஒக்காந்துக்கிட்டு தானா பேசறா.. என்னடின்னா போம்மா செல்ஃபோன்ல தான் பேசிக்கிட்டிருந்தேன்னு புருடா விடறா.. பாத்தா கீழ சார்ஜர்ல போட்டிருக்கா..
திடீர்னு சிரிப்பு சிரித்துக்கறா.. சரி.. போனாப் போவுது.. நமக்கா தெரியாது..இவ வயசக் கடந்து வந்தவ தானே நானு..இவர்கிட்ட சொல்லி ஜாதகம் எடுக்கலாம்னா ஷ்.. கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடேன்ங்கறா.. சரின்னு இருக்கலாம்னு பார்த்தா..
அவ படிக்கற புத்தகத்தில இருந்து ஒரு புள்ளையாண்டான் ஃபோட்டோ விழுது..ம்ம் இதானா சமாச்சாரம்..
ஏட்டி.. யாருடி இவன்.. ம்ம்ம் கூட வொர்க் பண்றவர்.. என்னடீ விஷயம்.. ம்ம் அதான் பாத்தேல்ல ஹேண்ட்ஸம்மா இருக்காரில்லை.. ஹீ ஈஸ் மை வுட்பி.. அடிப்பாவி உங்க அப்பா கேட்டார்னா.. ஸோ வாட்.. மம்மி நீ தான் அவரக் கன்வின்ஸ் பண்ணணும் ப்ளீஸ் ப்ளீஸ்..
இதான் எனக்குப் புரியலை.. நீயே சொல்லு கண்ணா..இந்தக் காதல் எப்படி பொண்ணுங்க மனசுல புகுந்துக்கிட்டு விளையாடுது..
ம்ம் பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு பழமொழி சொல்வாங்க.. இவ பொண்ணு தானே.. ஒருவேள கிராமத்து பாஷையில புள்ளன்னா பொண்ணு..அந்த மாதிரி சொல்லியிருப்பாங்களோ”
***..
அந்த மாமியின் நிலை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. காதலிக்கும் பெண்கள் எல்லாம் தன்னைப் பெற்ற அம்மாவும் ஒரு பெண் என்பதை மறந்து விடுகிறார்களோ. என்னமோ.. புத்திரன் பிரிந்த சோகம் தசரதனை முன்பு சொன்னபாடலில் பற்ற.. புத்திரி புரியாமல் காதலில் அலமலத்து இருப்பது பார்த்து இந்த அம்மாவிற்கு சோகம் ஏற்பட்டிருக்கிறது..
இதே போல வேறு ஒரு தாய்க்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது ஒரு பாடலில்..
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
…கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்
பார்வண்ண மடமங்கை பத்தர்; பித்தர்
…..பனிமலர்மேல் பாவைக்கு; பாவம் செய்தேன்
ஏர்வண்ண என்பேதை என்சொல் கேளாள்
…எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்’ என்னும்
…இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே..
(தலைவியின் நிலை குறித்து பெற்ற தாய் இரங்குவதாக உள்ள பாசுரம் இது)
“என்ன சொல்வதென்று தான் தெரியவில்லை.. என் மகளோ எம்பெருமானையே தலைவனாக நினைத்துக் கொண்டு பித்துப்பிடித்தவள் போல் புரியாத விதமாக ஏதேனும் பேசிக்கொண்டே இருக்கிறாள்..கார்மேகத்தின் கரிய நிறம் கொண்டது பெருமானது திருமேனி..திருக்கண்கள்,திருவாய்,திருவடிகள்,தி ருக் கைகள் எல்லாம் தாமரைப் பூவைப் போல சிவந்த நிறமுடையன..
என்னடீ ஆச்சு உனக்கு என்ன பைத்தியமா என்றால்..அடபோம்மா.. நான் ஒண்ணும் பித்துப் பிடிச்சவள் இல்லை..இந்த எம்பெருமான் இருக்கிறாரே அவர் தான் பூமிப்பிராட்டியின் அன்பர்.. அதுக்குமேல.. திருமகள்பால் பித்தர்.. என்கிறாள்..
என்னடி சொல்ற..
போம்மா..ஒண்ணு சொல்லு..திருவரங்கம் எங்கே இருக்கு? நீர்வண்ணன் கோயில் கொண்டிருக்கும் திரு நீர் மலைக்குப் போகப் போகிறேன்”
என்ன செய்வது நான் சொல்லுங்கள்.. அழகான என் பெண் என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள்.. நான் என்ன பாவம் செய்தேனோ..என் மகளுக்கு இப்படி மன அடக்கம் இல்லாதவாறு அவள் எம்பெருமான் மீது கொண்ட காதல் செய்துவிட்டதே..அதனால் தான் இந்த நிலையோ” எனச் சொல்லி அந்த தாய் புலம்புவதாக திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்தில் வருகிறது..
என்ன தான் சொல்லுங்கள்... லவ்னா;லே கஷ்டம் தான்.. எந்தக் காலத்திலயும்!!!
வரட்டா..
(தொடரும்..)
gkrishna
14th September 2014, 11:06 PM
பாசுரம் பாடும் தென்றலே
தமிழ் கொஞ்சுகிறது
சற்று தாமதமாக தான் கவனித்தேன்
மன்னிக்கவும்
pavalamani pragasam
15th September 2014, 08:54 AM
காலத்திற்கேற்ற மாடர்ன் விளக்கம்! மிக்க நன்று!
chinnakkannan
16th September 2014, 12:21 AM
பாசுரம் பாடிவா தென்றலே..
நான்கு
நிலா தெரியும்.. வான்மதி..வானில் சிரிக்கின்ற சந்திரன்..
உலாசெய்தே அங்கு உவகை கொண்டே
நிலாப்பெண் சிரிக்கிறா ளே..
சரிதான்.. அப்போ வெண்ணிலா.. வெள்ளை நிறத்தில் இருக்கும் நிலா..ஹையா என்ன கண்டு பிடிப்பு.. இல்லையே… நிலாவில் களங்கம் இருக்கிறதே..
வெண்ணிற கிரணங்களை இடுவதால் வெண்ணிலா.. வழக்கமாய் வெண்ணிலவு என்றாலே பெண்ணைத் தான் ஒப்பிடுவார்கள்..
வெண்ணிலவு தனையுருக்கிப் பொன்னுடலில் தான்வார்த்து
…மின்னிவரும் பெண்ணழகுப் பெட்டகமோ – இவள்
மேதினியில் ஆழ்கடலின் நித்திலமோ
கண்ணழகு கண்டுவிட்டால் வெண்ணிலவும் நாணியங்கு
…கார்முகிலின் பின்சென்று நோக்கிடுமோ – பின்பு
*கொண்டலினை விட்டகன்று சென்றிடுமோ
நுண்ணியதாய் நுதலழகு நோக்கிவிடில் வான்மதியும்
…நோய்கொண்டு தானகன்று ஓடிடுமோ – இவள்
கண்ணசைவில் தான்மயங்கி வந்திடுமோ..
மென்மையெனப் புன்சிரிப்பு மோவாயில் தேங்கிவிட
…மென்னிலவும் தன் நிறத்தை எண்ணுதடி – உந்தன்
மேல்கோபம் கொண்டுகொண்டு நாணுதடி..
என்று ஒரு வாலிபன் பாடுவதாக ஒரு ஆன்றோர் எழுதியிருக்கிறார்!
பெண்களை வெண்ணிலாவிற்கு ஒப்பிட்டு ஆண்கள் செய்வது டூ மச்சோ த்ரீ மச்சோ..அதே பெண்கள் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் பெற்றுவிட்டால் என்ன செய்கிறார்கள்..
நிலாவைக் காண்பிக்கிறார்கள்..அதோ பார் நிலா எவ்வளவு ப்ரகாசமா இருக்குல்ல வட்டமா இருக்கு உன் மூஞ்சியாட்டமா .. ஆ காமிம்மா.. என்ற அம்மாக்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள்.
இன்று டிவிடியில், பாரேன் அந்த மூன் பின்னாடி எப்படி டோரா போறா பாரு எனச் சொல்லி ஊட்டி விடும் – ராசாத்தி நைட்டி போட்ட அம்மாக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்..
இப்படித் தான் ஒரு அம்மா நிலாவைக் காட்டி ஊட்டியெல்லாம் விடவில்லை.. நிலாவையே கூப்பிடுகிறாள்.
சொல்பவள் யார் யசோதா..பிள்ளை வேறு யார் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தான்..
”ஓ மை டியர் மூன்..இங்கே வந்து பாரேன் என் பிள்ளை அடிக்கும் கூத்தினை -.
என் மகன் நீல வண்ணக் கண்ணன் தன் முகத்திலே கட்டிய நெற்றிச் சுட்டியானது டபக் டபக்கென்று பலதடவை அசையுமாறும், திருவடிகளில் கட்டிய கிண்கிணிகள் – காற்சதங்கைகள் ஒலிக்கும்படியாகவும் தபக் தபக்கெனத் தவழ்ந்து கொண்டு போய் அங்கே இருக்கும் புழுதியில் கைகள் விட்டு அளைந்து கொண்டு இருக்கிறான்.. ஓ இளமையாய் இருக்கும் சந்திரனே.. உன் முகத்தில் கண்கள் இருந்தால் என் செல்லப் பிள்ளையின் அழகிய கூத்தைக் காண்பாய்..”
பெரியாழ்வார் திருமொழியில் அம்புலிப் பருவத்தில் வருகிற முதற்பாடல் இது..
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ
அப்படியே கொஞ்சம் கொஞ்சியும் கெஞ்சியும் தன் பிள்ளையாண்டோனோட விளையாடக் கூப்பிடறாளா யசோதை.. வெண்ணிலா வரலை.. அம்மாக்குக் கோபம் வருது.. உருட்டி முழிக்கறா..இவ்ளோசொன்னாலும் அந்த வெண்ணிலா இறங்கி வரமாட்டேங்கறதே..என்னசெய்யலாம்..
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர்விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான் கண்டாய்; உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும், ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா..
அழகிய பெரிய ப்ரியமேயில்லாத சந்திரனே..வெண்ணிலவே.. உனக்குத் தெரியுமா…மண்பானையிலிருந்து கை முழுக்க முழுக்க எடுத்து சொப்பு வாய் முழுக்க இட்டு பின் அதை முழுங்க முடியாமல் முழுங்கி அதனால் தொம்மென்று பெரிய வயிறு கொண்ட என்னோட கண்ணன் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்.. நீ என்னடான்னா வரவே மாட்டேங்கற.. இப்போது நீ வராவிட்டால் தன் சக்ராயுதத்தால் உன் தலையை அறுத்து விடுவான்.. இதில் சந்தேகமே இல்லை..ஸோ நீ வாழ விரும்பினால் இந்தக் கண்ணனிடத்தே அன்பு கொண்டு ஓடி ஓடி வா நிலா..
என்கிறாள் யசோதை..என்கிறார் பெரியாழ்வார்..
ம்ம் இந்த அம்மாக்கள் குழந்தைகளை மிரட்டறது பத்தாதுன்னு நிலாவை எல்லாம் மிரட்டி இருக்காங்களே..
சரி..அப்புறம் வரட்டா…
(தொடரும்)
pavalamani pragasam
16th September 2014, 01:38 PM
ம்ம்ம்...
aanaa
16th September 2014, 06:36 PM
தொடருங்கள்!!
chinnakkannan
16th September 2014, 10:28 PM
பாசுரம் பாடி வா தென்றலே..
ஐந்து..
துறவுப் பாதை நாடிச் செல்லும்
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று மட்டும்
உணர்த்தி அருள்வாய் நாரணே
//நேத்திக்கு வேறவிதமா இருந்தே.. இன்னிக்கு என்னாச்சு..
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கையே போரடிச்சுடும்..
கொஞ்சம் இரு..எழுதிட்டு வர்றேன்..)
திரு ஊரகம், திருப்பாடகம், திருவெஃகா..
(என்னடா.அரபிக் ஸ்வீட்ஸோட பேரா
ஷ் ஷ்)
மூன்று தலங்கள்..
திருவூரகத்தில் உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடதுகால் தூக்கியவண்ணம் காட்சி தருகிறார்.
திருப்பாடகத்தில் இருப்பது அட நம்ம கிஷ்ணா. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத ஒன்று. மூலவரின் பெயர் பாண்டவ தூதர்.
திருவெஃகா- வெஃகா என்றால் வெம்மையான காடு என அர்த்தம் இங்கிருப்பவர் புஜங்க சயனப் பெருமாள் ஆமாம் கிடந்த திருக்கோலம்… படுத்துக் கொண்டிருக்கும் கோலம்..அப்புறம் அதிலென்ன விசேஷம் திருவெஃகாவில் மாத்திரம் எப்படியிருக்கிறதென்றால், பெருமாள் தெற்கு - வடக்காக சிரஸ் - பாதங்களை வைத்து சயனித்திருத்திருந்தாலும் ஸந்நிதி மேற்குப் பார்த்தது. அதாவது அவருடைய திருமுகமண்டலம் மேற்குப் பார்க்க, வலது கையை உயர்த்தி அபயஹஸ்தம் செய்து கொண்டிருக்கிறாராம்..
(என்னாச்சு வேளுக்குடி ப்ரோக்ராம் ஏதாவது பாத்தியா..
ஷ்ஷ்)
இந்த மூன்று தலங்களும் வரும் வண்ணம் ஒரு பாடல் இருக்கிறது. திருமழிசையாழ்வாரின் பாசுரம்..திருச்சந்த விருத்தம்.
.
நின்ற தெந்தை யூரகத்
திருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணை கிடந்த
தென்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன்;
பிறந்தபின் மறந்திலேன்;
நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என் நெஞ்சுளே
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் திருவூரகத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகிறான்.. திருப்பாடகத்தில் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறான்..திருவெஃகாவில் திருப்பள்ளி கொள்ளும்கோலத்திலே இருந்து அருள் புரிகிறான்..
ம்ம்.. பெருமாளே.. நீ இவ்வண்ணம் மூன்று நிலைகளிலும் இருந்து அருள் புரிந்த காலத்து நான் அறிவுடையவனாகப் பிறக்கவில்லை..
அதன் பின்னர் பிறந்தேன்..பிறந்த பின்பு உன்னை மறக்கவில்லை..
உன்னை மறக்காமல் இருப்பதினால் உன்னுடைய நின்றதும் அமர்ந்ததும் கிடந்ததுமான மூன்று நிலைகளையும் என் நெஞ்சுள்ளே இருத்திக் காண்கிறேன்..” என்கிறார் திருமழிசையாழ்வார்..
//நானும் கொஞ்சம் மனசுக்குள் யோசித்துப் பார்க்கிறேன் பெருமாளை.. மனசாட்சி..
நெஜம்மாவா சொல்றே .. என் நயனத்தப்பார்த்து சொல்லு
ஷ்ஷ்.. சரி.. கொஞ்சூண்டு தூக்கம் வருது.. நாளைக்கு வரட்டா..
(தொடரும்)
pavalamani pragasam
17th September 2014, 08:27 AM
தொடரட்டும்..
gkrishna
17th September 2014, 12:28 PM
அண்ணா சின்ன கண்ணா
ஊரகம் நீரகம் காரகம் கார்வானம் பாடகம் திருவெகா,அச்டபுஜங்க பெருமாள் எல்லாம் காஞ்சிபுரம் திவ்ய ஷேத்ரம்
ரொம்ப தன்யன் ஆனேன் உங்கள் பாசுரம் படித்து
108 திவ்ய ஷேத்ரம் பற்றியும் எழுதுங்கோ
நீங்கள் ஆழ்வார்கடியான் என்பது நினைவில் உண்டு
கொஞ்சம் நாயன்மார் பற்றியும் எழுதுங்கோ பேதம் இல்லை என்றால்
ரொம்ப சந்தோசம்
chinnakkannan
17th September 2014, 01:45 PM
அன்பின் கிருஷ்ணா சார்..மிக்க நன்றி.. கண்டிப்பா முயற்சித்து எழுதுகிறேன்..
அன்புடன் சி.க.
gkrishna
18th September 2014, 05:18 PM
சி கே சார்
உங்கள் பாசுரம் படித்த உடன் எனக்கு ஏற்பட்ட அன்பவத்தின் விளைவு இந்த பாடல் மாணிக்க வாசகரின் திருவாசக பாடல்
தயவு செய்து சைவ வைணவ பேதம் மனதில் கொள்ளாமல் படிக்கவும்
நானும் மனதில் எந்த துர் எண்ணமும் இல்லாமல் சொல்கிறேன்
'வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேன்ட முழுந் தருவோய் நீ
வேண்டுமயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா(து) அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்(று) உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே! [திருவாசகம்-மாணிக்கவாசகர்]
இது போல் நீங்களும் எங்களுக்கு வேண்டும் பாசுரம் எல்லாம் தந்து எல்லாம் வல்ல இறை ஆற்றல் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
chinnakkannan
18th September 2014, 11:18 PM
நன்றி கிருஷ்ணா சார்..இப்போது தான் இதைப் பார்த்தேன்.. இப்போது அடுத்த பாசுரம் இடுகிறேன்..நீங்கள் கோளறு பதிகத்திற்கு நான் எழுதிப்பார்த்த சிறு உரையைப் படித்தீர்களா..
chinnakkannan
18th September 2014, 11:20 PM
பாசுரம் பாடி வா தென்றலே
ஆறு..
கறுப்பு என்போம்..அடைக்கறுப்பு என்போம்.. கறுப்பு நிறம் தான்..அதுவே அடர்ந்த கறுப்பு என்றால்.. என்னவென்று பார்க்க முடியாத கருமை.. அதையே அந்தகாரம் என்பர்..
அப்படி இரவு ஆரம்பித்து மூன்றாம் ஜாமம் முடிந்து நான்காம் ஜாமம் துவங்கிவிட்ட அந்த வேளையில் அந்த அடர் கானகத்தில் ஒரு வித அலட்சிய அமைதி நிலவியிருந்தாலும் எங்கு நோக்கிலும் அந்தகாரம் சூழ்ந்தே இருந்தது..
இருட்டு தான் என நினைத்த படியால் தங்களுக்குள் மெல்லிய காற்றலை அடித்ததால் சற்றே உரசிக் கொள்ளலாம் என நினைத்த சில மரங்களின் கிளைகள் கொஞ்சம் காற்று நின்று போனதால் அப்படியே உறைந்த நிலையில் உறங்கத் தான் செய்தன..
அந்தக் கானகத்தில் நடுவில் இருந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஒரு வெளிச்சப் பொட்டாய் ஒளி தெரிந்து கொண்டிருந்தது..சற்று அருகில் சென்று பார்த்தால் அந்தக் கோவிலின் உள் இருந்த கருவறைக்குமுன் இருந்த அறையில் ஏற்றிவைக்கப் பட்ட சிறு நெய் விளக்கு என்று தெரியும்..
அந்த அறையில் யாரோ நடமாட அதில் கொஞ்சம் காற்றசைய அந்த தீபமும் கொஞ்சம் ஆட அந்த நிழல் சற்றே பெரிதாய் சுவற்றில் தெரிந்து தெரிந்து மறைந்தது..
அந்த நிழலுக்குச் சொந்தக்காரன் “ஏன் இன்னும் அவர் வரவில்லை..வந்திருக்க வேண்டுமே” எனச் சொல்லிக் கொண்டு வானத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்தான்..அமாவாசைக்கு மறுதினம் ஆனதினால் இருட்டாய் இருந்தாலும் போனால்போகிறதென்று நடை பழக வந்திருந்த சில நட்சத்திரங்கள் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டின..
“ம்க்கும்” என்ற கனைப்புச் சத்தம் கேட்டு மறுபடியும் அந்தக் கோவிலினுள் நுழைந்த அவன் அந்த தீபம் வைத்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த மூலையில் அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டதும் திடுக்கிட்டான்..
கறுப்புப் போர்வை, அந்த தீபம் செய்வித்த சிறுஒளியில் தெரிந்த நரைத்த தலை, மீசை..வாளின் ஒற்றைக் கீறல் கன்னத்தில்..இடுப்பில் ஒரு பருத்தி ஆடை அதுவும்கொஞ்சம் அழுக்காக… கண்களில் மட்டும் பளிச்சென எடைகூடிய ஒற்றை வைரக்கல்லின் ஒளியைப் போன்ற பிரகாசம்..”உதயகுமாரா” என விளித்த குரல் சற்றே கருங்கற்பொடிகளை சிறு பாத்திரத்தில் வைத்துக் குலுக்குவது போன்ற சப்தமாய் இருந்தாலும் அவற்றிலும் ஒரு வசீகரம் இருந்தது..
உதயகுமாரன் தலை வணங்கினான். “சக்கரவர்த்தி.. இங்கு எப்போது எப்படி வந்தீர்கள் என்று தெரியவில்லை”
“சக்கரவர்த்தி” சிரித்தார் வீர சிம்ம பல்லவர்.. எங்கிருக்கிறது ராஜ்யம், அரண்மனை,.. எல்லாம் இழந்தாகி விட்டதடா உதயகுமாரா.. நீ ஒருவன் தான் விசுவாசமாய் இருக்கிறாய் என நினைக்கிறேன்.. எல்லாம் சோழனுக்குக் கொடுத்தாகி விட்டது..”
“சக்கரவர்த்தி.. நீங்கள் அப்படி சொல்லக் கூடாது.. நான் இருக்கிறேன்..மேற்கொண்டு பாண்டிய மன்னன் உதவுவதாகச் சொல்லியிருக்கிறான்..”
“ நிஜமாகவா சொல்கிறாய் உதயகுமாரா.. என்னிடம் தான் படைகள் ஏதும் இல்லையே.. ஏதோ மறைந்து மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். மனைவி, மகனைக் கூட சிறைப்பிடித்து விட்டானாம் சொழன்.. பிடித்து விடுதலையும் செய்து அங்கேயே ஒரு குடிலில் இருக்க வைத்திருக்கிறானாம்..என்ன ஒரு கேவலம் பல்லவ நாட்டிற்கு..ம்ம்..பாண்டியப் படைகள் எவ்வளவு..சோழனை சமாளிக்க அந்தப் பாண்டிய மன்னனால் முடியுமா..எனக்கு உதவி செய்வதன் மூலம் அவர் என்ன ஆதாயம் அடைவார்”
“அதைப் பற்றி நீங்கள் அவரிடமேயே கேட்டுக் கொள்ளுங்கள்..”
“அவர் இங்கு வரப் போகிறாரா..”
“இல்லை சக்கரவர்த்தி..இதோ ஒருகல்லில் இருக்கிறது காஞ்சி.. அதற்கு முன்னால் ஒரு சிறு கிராமம்..ஓரிருக்கை..அங்கே சென்று அக்ரஹாரத்தில் மூன்றாவது வீட்டிற்குச் செல்லுங்கள்..”
“சரி செல்கிறேன்..அதற்கு முன்.. உண்ண எதுவும் வைத்திருக்கிறாயா..”
“இந்தாருங்கள்..இந்தத் தட்டில் சில பழங்கள் இருக்கின்றன உண்ணுங்கள் சக்கரவர்த்தி என்ற உதயகுமாரனுக்கு க் கண்ணில் நீர்க் கோர்த்தது.. சக்கரவர்த்தி இருந்த நான்கு வாழைப்பழங்களை வேகமாக விழுங்கினார்.. இந்தா தட்டு..
வேண்டாம் அதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.. இதைப் பார்த்ததும் அவர் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்” என்றான்..
வீர சிம்மர் மெல்ல எழுந்து கரும்போர்வையைச் சுற்றிக் கொண்டு அந்தக் கோவிலை விட்டு வெளிவந்து அந்த காரத்தில் மறைந்தார்..
உதயகுமாரன் உள்ளிருந்து ஒரு புறாவை எடுத்தான்..பின் ஏற்கெனவே இடுப்பில் எழுதி வைக்கப் பட்டிருத ஓலையைப் பார்த்தான்..”சோழ மன்னருக்கு..வீர சிம்மன் சொன்னபடி அக்ரஹாரம் ஆறு நாழிகை ப் போதில் வந்துவிடுவார்” என எழுதியிருந்ததை மறுபடி படித்துக் கொண்டான்.. புறாவின் உடலில் புதைத்து அதைப் பறக்க விட்டான்.. புறா திடுமென க் கோபித்துக் கொண்டு பிறந்தகம் விரைவாகச் செல்லும் மனைவியைப் போல வானத்தில் பறந்தது..
**
இது தானே ஊர்..ஊரே அமைதியாய் இருக்கிறதே.. இருள் வேறு.. நமதாட்சியில் என்றால் தெருவுக்குத்தெரு ஒரு தூண் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் இரவெங்கிலும்..ம்ம்
ஊருக்குள் நுழையக் கால் வைக்கும் போது வள்ள் வள்ள்ள் என மெல்லிய உறுமல் பின் அதுவே சத்தமாக வரப் பார்த்தால் கண்கள் பளபளக்க இரு கரு நாய்கள்.. அவர் மேல் பாய்ந்தன..
கையிலிருந்த தட்டினால் தடுத்துத் தள்ளிவிட்டார் வீரசிம்மர்.. நாய்களின் பாய்ச்சலும் பலமும் கொஞ்சம் கூடுதலாக இருக்கவே வேகமாக ஓடி ஓடி ஒரு தெருவில் நுழைந்து ஒரு திண்ணையின் மேலேறி ஒளிந்து கொண்டார்..
துரத்தி வந்த நாய்கள் அவரை க்காணாமல் தேடின.. பின் காற்றில் அவர் வாசனை பிடிப்பதற்காக மூக்கை மூக்கை நீட்ட..சொட்டென அவற்றின் தலையில் விழுந்தன மழைத்துளிகள்..அதுவே வேகமாக விழ ஆரம்பிக்க அவையும் நனையாமல் இருக்க விரைவாக அந்தத் தெருவை விட்டே ஓடின..
திடுமென ஆரம்பித்த மழைக்கு நன்றி சொல்லிக் கொண்டார் வீரசிம்மர்.. கடவுளே நன்றி..இது தான் அக்ரஹாரம் போலிருக்கிறது..இது என்ன இரண்டாவதுவீட்டுத் திண்ணையா.. சரி மூன்றாவது வீட்டுக்குப் போகலாம் எனக் கிளம்பும் போது மெல்லிய சிரிப்பொலி.. பெண்ணினுடையது..
“யார் யாரது” என்றார் வீர சிம்மர்..
மறுபடியும் சிரிப்பொலி..இடுப்பைத்தேடினார்..வாளை ஓரிடத்தில் வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.. குறுவாளும் ஓடிவந்ததில் எங்கோ விழுந்து விட்டது..இருப்பது தட்டு மட்டும் தான்..
“துணிச்சலென்றால் வெளியில் வா..யார் நீ”
“வெளியில் எல்லாம் வரமாட்டேன்..உனக்கு உதவி செய்யவே வந்தேன்.. நான் தான் விதி..”
“விதியா.. பின் ஏன் பெண்குரலில் பேசுகிறாய்..”
“ஆண்குரலில் பேசியிருந்தால் என்னைத் தேடியிருப்பாய்..அப்புறம் வேலைமெனக்கெட்டு அந்தப் பக்கம் ஒளித்து வைத்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டு என்னிடம் வருவாய்..எனக்கு வாள் என்றால் பயம்..அது தான் பெண் குரலில் பேசினேன்..சொல்வதைக் கேள் வீரசிம்மா..”
“சக்கரவர்த்தி என்று சொல்”
“சக்கரவர்த்தியா.. “ சிரித்தது விதி..” எங்கிருக்கிறது மன்னா எங்கிருக்கிறது உன் ராஜ்யம் நீ எப்படி இருந்தாய்..
ஒரு காலத்தில் செல்வச் செழிப்பான அரண்மனையில் அழகாக அரசாட்சி செலுத்தி வந்தாய்.. என்ன ஆயிற்று காலம் செய்த கோலம் எல்லாவற்றையும் இழந்தாய்..உணவு கூட உனக்குக் கிடைக்கவில்லை..
கேவலம் உன்னிடம்வேலைபார்த்த கடை ஒற்றனை நம்பி இங்கு வந்திருக்கிறாய்.. பசியில் அவனிடமே பழங்கள் கேட்டிருக்கிறாய்.. கேட்டு உண்டும் இருக்கிறாய்..
இங்கு வந்தால் கரு நாய்கள் உன்னைத் துரத்துகின்றன..என்ன செய்வதென்று தெரியாமல் இப்படித்திண்ணையில் ஒதுங்கிப் பரிதவிக்கிறாய்..
இவையெல்லாம் எதனால் நிகழ்ந்தது தெரியுமா”
“நீ தான் காரணம்” என்றார் வீரசிம்மர்
“ நான் காரணமாயிருக்கலாம்” என்றது விதி..”ஆனால் அதை நீ வென்றிருக்கலாம்… செல்வந்தர்கள் வறுமையை அடைவதும் வறுமையிலிருப்பவர்கள் செல்வமடைவதும் ஒரு வட்டம் போல..வாழ்க்கைச் சக்கரம்..அப்படிச் செல்வம் இருக்கும் சமயத்தில் நீ நாராயணனின் தாளைப் பற்றியிருக்கலாம்.. அப்படிச் செய்யவில்லை தெரியுமா.. அப்படி நாராயணனின் தாள் பற்றியிருந்தால் விதிப்பலன் என்று ஒன்று இருந்தாலும் உனது இடர்கள் துன்பங்கள் எல்லாம் குறைந்திருக்கும்”
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ
புரிகிறதா உனக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் இந்தப் பாசுரத்தின் பொருள்”
“புரிகிறது” என்றார் வீரசிம்மர்..” இப்போது நான் என்ன செய்யவேண்டும் விதியே”
“மூன்றாவது வீட்டிற்குச் செல்லாதே..அங்கே சோழ காவலர்கள் இருக்கிறார்கள்..கொஞ்சம் தொலைவில் போய் முதலில் கண்ட பெருமாள் கோவிலில் போய்க் கசிந்துருகி வேண்டு..பின் உனக்கு வேண்டியது கிடைக்கும்..” என்றது விதி
சரி என வீரசிம்மர் புறப்பட்டுச் சென்றார்..
சரி என நாமும் அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாமா..:)
(தொடரும்)
aanaa
19th September 2014, 03:19 AM
>> ""கசிந்துருகி வேண்டு..பின் உனக்கு வேண்டியது கிடைக்கும்..” என்றது விதி""
pavalamani pragasam
19th September 2014, 08:41 AM
ம்ம்ம்... விதி...சதி..
gkrishna
19th September 2014, 09:44 AM
இல்லை சி கே .நிச்சயம் படிக்கிறேன்.
எந்த திரியில் உள்ளது
'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் '
chinnakkannan
19th September 2014, 11:00 AM
இதே செக்*ஷன் தான்.. கோள்கள் என்ன செய்யும்னு தலைப்பு!
chinnakkannan
20th September 2014, 01:12 PM
பாசுரம் பாடி வா தென்றலே
சின்னக் கண்ணன்…
ஏழு..
இன்று புரட்டாசி சனிக்கிழமை.. என்ன செய்யலாம்..திருவேங்கடத்தில் இருக்கும் பெருமாளை ச் சற்றே நினைக்கலாமா..
வேர்முதல் உச்சிவரை ஆட்கொண்ட வேங்கடவா
கோர்வையாய் இங்கே கேட்டிடுவேன் - நேர்பட
நெஞ்சில் நினைந்துருகி நித்தமும் நினைக்குமென்
பிஞ்சுமனம் தான்தழைக்க வா
வாவென்றால் வந்திருந்தாய் வாகாகப் பாய்சுருட்டிப்
போவென்றால் போன பெருமாளே – நாவெங்கும்
ஆர்வமாய் உச்சரித்தே ஆழ மனம்பதிப்பேன்
தீர்த்திடு என்வலியைத் தான்..
(ஓரிருக்கையில் பாய்சுருட்டிச் சென்று பின் வந்த பெருமாள்)
தானால் குழம்ப தகுந்த ரசமாக்க
தானை எடுக்கவுன் தாள்பணிவேன் – ஆனாலும்
வீற்றிருக்கும் கோலத்தில் வேங்கடவா உன்கண்ணால்
தீற்றி அருள்புரிந்தால் தேன்..
தேனாய்த் திதிக்கும் திருவுருவம் கண்டதனால்
மானாகத் துள்ளும் மனமும் – வீணான
எண்ணங்கள் போக்கியே ஏற்றங்கள் செய்யுமுனை
திண்ணமாய் வேண்டுமே பார்..
பார்க்கும் விழிகளிலே பற்றும் கருணையதும்
ஊற்றிலே பொங்கி உயர்ந்துவிழும் நீராக
ஆற்றிலே வெள்ளம் அலையடித்துச் செல்வதுபோல்
தேற்றுமே நெஞ்சத்தைத் தான்
தான் தான் எனைவிட்டு தக்கபடி போய்விடும்
தீண்டும் விழியினால் திண்ணமாய் – மீண்டும்
இருளது நெஞ்சினில் ஏகாமல் நிற்க
உருகுவேன் உன்பதத்தில் நான்..
*
ஆக வேண்டும் அருள் தரும் வேங்கட நாதனைப் பற்றி திருமங்கையாழ்வார் பாசுரத்திற்குப் போகுமுன் நம்மைப் பற்றி அனலைஸ் செய்து கொள்ளலாமா..சரி..என்னை ப் பற்றி நான் அனலைஸ் செய்து பார்த்தால்…
ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..
நாம் என் செய்கிறோம் மனிதனாகப் பிறந்து விட்டோம்.. என்ன செய்வது பிழைக்கணுமே எனப் படித்து பட்டம் பெற்று வேலைசேர்கிறோம்..பின் எத்தனை அலைச்சல்கள், எத்தனைபொய்கள், எத்தனை வேஷங்கள், எத்தனை துன்ப இன்பங்கள் என வாழ்க்கை நம்மைச் சுழற்றிச் சுழற்றி ப் போடுகிறது.. பின் என்ன செய்யவேண்டியிருக்கிறது.. சமயத்தில் எதற்கடா இந்த மனிதப்பிறப்பென்று கூடத் தோன்றும்..
திருமங்கை ஆழ்வாரும் இந்தப் பாசுரத்தில் அதையே சொல்கிறார்..
நோற்றேன் பலபிறவி நுன்னைக்காண்பது ஓர்ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே! இடர் உற்றனன் எம்பெருமான்
கோற்றேன் பாய்ந்தொழுகுங்க் குளிர்சோலைசூழ் வேங்கடவா
ஆற்றேன்வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே”
திருவேங்கடமாமலை எனப்படும் திருப்பதி எப்படி இருக்கிறது..கண்ணுக்குக் குளிர்ச்சியான மலர்களைக் கொண்ட சோலைகள் பல கொண்டு இருக்கிறது..அதுவும் அந்த மலர்களில் இருந்து மிக நிறையத் தேன் எடுத்து தேனீக்கள் கூடு கட்ட அந்தத் தேன்கூட்டிலிருந்து கொம்புத்தேன் வழிந்தோடும் வண்ணம் இருக்கின்றதாம்..
அப்படிப்பட்ட திருவேங்கட மலையில் இருக்கும் திருவேங்கடத்தானே.. அடியேன் பலப் பல பிறவிகள் எடுத்துபலவிதமான துன்பங்களை அனுபவித்தவன்.. பலப் பல வினைகளையும் செய்தவன்.. இந்தப் பிறப்போ உன்னைப் பார்க்கவேண்டும் உன்னுடைய அருள் பெறவேண்டும் என்பதனால் உனக்கே என்னை அர்ப்பணித்துவிட்டேன்..
பற்பல துன்பங்களையும் அடைந்துவிட்டேன்.. இவையெல்லாம் என்னால் தாங்கவும் முடியவில்லை..உன் தாள்களைச் சரணடைந்தேன்.. அடியேனை ஆட்கொண்டு அருள் செய்வாயாக
என்கிறார் திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில்..
அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாமா
(தொடரும்)
gkrishna
20th September 2014, 03:19 PM
திருவாலி திருநகரி மன்னன் திருமங்கை பாசுரம் அருமை சி கே சார்
ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..
இது சொந்த சாகித்யமா ?
chinnakkannan
20th September 2014, 05:16 PM
தாங்க்ஸ்.கிருஷ்ணா சார்...//இது சொந்த சாகித்யமா ? // ஆமாம்.. அதிலென்ன சந்தேகம் கிருஷ்ணா சார்.இன்று எழுதியது. வெண்பாக்களும் என்னுடையவையே..அவை சில மாதங்களுக்கு முன் எழுதியவை..இங்கு உபயோகித்தேன்..
pavalamani pragasam
20th September 2014, 08:44 PM
ம்ம்ம்....
chinnakkannan
20th September 2014, 09:38 PM
ம்ம்ம்.... // இந்த ம்ம்ம்க்கு அர்த்தம் புரியலை..அது கவிதைக்காக எழுதியது.. நான் ரொம்பப் பாவம்லாம்பண்ணலை பி.பிக்கா :)
pavalamani pragasam
21st September 2014, 08:19 AM
சொந்த சாஹித்தியம்னு தெரியுமாக்கும்ம்மம்ம்ம்ம்.........
gkrishna
21st September 2014, 04:17 PM
சொந்த சாஹித்தியம்னு தெரியுமாக்கும்ம்மம்ம்ம்ம்.........
அருமை சி கே
நீங்கள் எவ்வளவு புண்ணியமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள் . நீங்களாவது பாவம் செய்வதாவது
chinnakkannan
22nd September 2014, 11:52 AM
நன்றி கிருஷ்ணா சார் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு..எங்கு போனாலும் என்னை புரிந்து கொள்ளும் நண்பர்கள் வாய்த்தது/வாய்ப்பது நான் செய்த புண்ணியம்..இன்று மறுபடி வருகிறேன் இங்கு..ஈவ்னிங்க் முடிந்தால்..
aanaa
23rd September 2014, 06:24 PM
>> ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..<<
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள் :-(
ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?
aanaa
23rd September 2014, 06:27 PM
ம்ம்ம்... விதி...சதி..
ம்ம்ம்
நம் விதியை நாம் தானே எழுதுகின்றோம்.
chinnakkannan
23rd September 2014, 09:18 PM
//"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?//ஆனா… இந்தப் பாவம் புரிஞ்சு மனசு பக்குவமிழக்குதில்லையா அதைத்தான் சொன்னேன்..திரைகடல் ஓடித் திரவியம் சேர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் நான்..:)
aanaa
24th September 2014, 09:56 PM
//"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?//ஆனா… இந்தப் பாவம் புரிஞ்சு மனசு பக்குவமிழக்குதில்லையா அதைத்தான் சொன்னேன்..திரைகடல் ஓடித் திரவியம் சேர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் நான்..:)
தவறாகப் புரிந்துவிட்டீர்கள்/ புரிந்துகொள்ளவேண்டாம்.
தடங்களுக்கு மன்னிக்கவும்.
chinnakkannan
9th October 2014, 11:55 AM
பாசுரம் பாடி வா தென்றலே…
எட்டு
குழந்தை எக்காலத்திலும் ஒரு அதிசயம்.. வளர்ந்து பெரியவன் பெரியவள் ஆகி எப்படி மாறு பட்டாலும் பிறந்து வளரும் சிறுவயதில் எல்லாமும் தெய்வம் தான்..
குழந்தை பற்றி எழுதிப்பார்த்தேன்..
விடாது அழும்
அடம்பிடிக்கும்
“யே” என்று கூக்குரலிடும்
கூடமெல்லாம் கிறுக்கும்;
எல்லாவற்றையும் போட்டுடைக்கும்
சாப்பிட ஆரம்பித்தால் தான்
கக்கா போகும்..
பிடிவாதத்தால் கோபத்தைக் கிளறும்,
வாயைத் திறக்காமல்
சாதத்தை முகத்தில் ஈஷிக் கொள்ளும்
அறிவு கெட்ட ஜென்மம்!
இருந்தாலும்,
அந்தக் குட்டிச் சிரிப்புக்குக்
கோடிப் பொன் கொடுக்கலாம்!
குழந்தை இப்படி என்றால் அதன் அம்மாவின் நிலை என்ன..
உம்மென்று அதுமுகத்தை வைத்துக் கொண்டால்
..ஓடிவந்து பதறித்தான் தூக்கிக் கொள்வாள்
பம்மென்று வயிறிருக்கா என்று எண்ணி
..பக்குவமாய்த் துணிவிலக்கித் தடவிப் பார்ப்பாள்
விம்மாதே வலிக்கிறதா சொல்டா செல்லம்
..வேண்டியதைச் செய்திடுவேன் நானும் என்றே
அம்மாவாய் அவளும்தான் பதறிக் கேட்பாள்..
..அழகான உயிர்த்தெய்வம் அவளே அன்றோ..
ஆனாலும் குழந்தை வளரும் போது இந்த அம்மாக்கள் படும் கஷ்டம் இருக்கிறதே சொல்லி மாளாது..
கோகுலத்தில் கண்ணன் சிறு குழந்தையாய் இருந்த போது பக்கத்து வீட்டுப் பெண் யசோதையைப் பார்க்க வந்தாள்..பார்த்தவள் திகைத்தாள்.. காரணம் யசோதையின் நிலை..
அழகாய் லட்சணமாய் இருந்த யசோதையானவள் இளைத்திருந்தாள்..கண்களில் மட்டும் மின்னற் கோலம்..
என்ன ஆச்சு யசோதாக்கா..
ஒண்ணுமில்லைடி – யசோதையின் முகத்தில் வெளிர் சிரிப்பு..
குட்டிக் கண்ணா எங்கே காணோம்..அட இதோ தொட்டில்ல இருக்கானே..சின்னு பட்டூ செல்லப்பாப்பு.. எவ்ளோ அழகாச் சிரிக்கிறான் பாருங்களேன்.. ஆமா இது சமர்த்தாத் தானே இருக்கு..
யசோதையிடம் மறுபடி புன்னகை..
சொல்லுங்கக்கா.. என்றபடி குட்டிக் கண்ணனைத் தூக்கிக் கொள்ள கண்ணன் செல்லமாய் அந்த பக்கத்துவீட்டுகோபிகையின் முடி பிடித்து இழுக்க..ஷ்ஷ்..ஆ.. சரியான விஷமக் காரக் கண்ணன் இல்லியாக்கா..
ஒழுங்கா காலைச் சாப்பாடு சாப்பிட்டேளா.. நீங்க ஒழுங்கா சாப்பிடறதில்லைன்னு நினைக்கறேன்.. நீங்க சாப்பிட்டாத் தான் கண்ணா சாப்பிட முடியும்.. என்னடாச் செல்லம் படுத்தப் படாது..போய் வேணும்னா சாப்பிட்டுட்டு வாங்க.. நான் கண்ணாவை பார்த்துக்கிறேன்..
அவ்வளவு தான் கோபிகையின் வார்த்தைகள் மனதுள் போக யசோதைக்குக் பொங்கி வருகிறது.. அப்படிப் பொங்கி வருவதாக ப் பெரியாழ்வார் சொல்கிறார்..
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
”அழகான விழிகளையும் மேலான குணங்களையும் கொண்ட கோபிகையே.. நான் என்ன சொல்லுவேன்..
இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே..அவனை தொட்டிலில் இட்டு விட்டு இங்கிட்டு அங்கிட்டு என்னால் போக இயலாது.. தொட்டில் துணி கிழிந்து போகும் அளவுக்கு உதைக்கிறான்..
சரி பாவம் போரடிக்கிறது போல..என நினைத்து “வாடா செல்லம்” என இடுப்பில் வைத்துக் கொண்டால் அவ்வளவு தான்..ஒரே துள்ளல் தாவல் தான்.. அவன் போடும் ஆட்டத்தில் என் விலா எலும்புமுறிந்து விடுகிறது என்றால் பார்த்துக்கோயேன்..
”சரிடாப்பா வா.. தாச்சிக்கலாம்” என்று சொல்லி அவனை ஒடுக்கி என்னருகில் படுக்க வைத்து அணைத்துத் தழுவிக் கொண்டால் என்ன செய்கிறான் தெரியுமா இந்தபடவா.. டபக் டபக்கென என் வயிற்றில் கதக்களி ஆடுகிறான்..
ஹச்சோ..இவ்ளோ பொல்லாத குறும்பு எல்லாம் இவன் செய்வதால் தான் நான் மிக மெலிந்து போய்விட்டேன்..தெரிகிறதா பெண்களில் சிறப்புடைய கோபிகா..”
என்கிறாளாம் யசோதை..
என்கிறார் பெரியாழ்வார்..
ம்ம் அந்தக் கண்ணனின் லீலைக்ள் தான் என்னே..!
(அப்புறம் வரட்டா)
(தொடரும்)
gkrishna
9th October 2014, 02:39 PM
சின்ன கண்ணன் சார்
'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்து சிறுவன்
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளாயோ '
பாடல் நினைவில் வருகிறது . மிக அருமை
aanaa
10th October 2014, 12:59 AM
பாசுரம் பாடி வா தென்றலே…
(அப்புறம் வரட்டா)
(தொடரும்)
நிச்சயம் ...
chinnakkannan
10th October 2014, 09:46 PM
கிருஷ்ணா சார் ,திரு.ஆனா – நன்றி..
கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்களுக்கு முன் திருப்பாவை பாசுரங்கள் பற்றி சிறு உரை எழுதிப் பார்த்தேன்..தினம் ஒருகவிதை என்ற மின்னஞ்சற்குழுவில்..
அவற்றுக்கான மென்காப்பி என்னிடம் இல்லை..எனில் இருக்கின்ற ஹார்ட்காப்பியைப் பார்த்து இங்கு தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். முப்பது பாசுரங்களையும்..
இடையில் நான் படித்து எழுதும் பாசுரங்கள் பற்றிய எனது சின்ன உரைகளையும் இடுகிறேன்.. சரியா..
chinnakkannan
10th October 2014, 09:48 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – a)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை
*
முந்தி வணங்கிடுவோம் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்..
*
மனதிற்குள் உட்காரலாமா
******
உலகில் ஆசைப் படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?
ஆசையே அழிவுக்குக் காரணம் என்பார்கள். அது தவறு. ஆசைப்பட்டுக் கனவு கண்டு அதற்கான முயற்சி செய்தால் வேண்டியதை அடைய முடியும் என மனதத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
(மனச் சாட்சி: என்ன தான்யா சொல்ல வர்றே நீ)
அந்தக் காலத்தில் காதலன் காதலி மீது இருந்த ஆசையால் ஆர்வங்கொண்டு “கண்ணே, மணியே, கற்கண்டே, தேனே!” என வர்ணிப்பான்..
இதுவே தவறு. கண் அடிக்கடி கோபத்தால் சிவந்து விடும். இரவில் மூடிக் கொள்ளும். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடியும் மாட்டி விடுவார்கள்!
மணியில் ஒலிப்பது இனிமையான நாதம் தான். ஆனால் அதுவே அடிக்கடி ஒலித்தால், “என்ன நான் லொட லொட என்று பேசுவதைக் கிண்டல் செய்கிறாயா” என்பாள் காதலி.
கற்கண்டை நிறையச் சாப்பிட்டால் திகட்டி விடும். சர்க்கரை வியாதி வரும் அபாயமும் உண்டு..
தேன்.. கேட்கவே வேண்டாம். இன்னும் மோசம். அதிகம் உண்டால் குளியலறையை விட்டு வெளியில் வர முடியாது!
இந்தக் காலத்திலும் காதலன் காதலியை வர்ணிப்பது தொடர்கிறது- வேறு விதமாக. தொலைபேசி மணிபோல் சிரிப்பவன் நீ என்கிறான் காதலன். தொலைபேசிக்கு கண்,காது,மூக்கு, வாய் வைத்து சிரிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். பயங்கரமாக இருக்கும்.
(ம.சா. இன்னும் விஷயத்துக்கு வரலை நீ)
காதலன் காதலியை ஆசை கொண்டு வர்ணிப்பது எல்லாம் சிற்றின்பத்தில் அடங்கும். எனக்கும் ஒரு ஆசை வந்தது. என்னவென்றால் பேரின்பப் பொருளான இறைவனைப் பற்றி எழுதுவதற்கு.
புதியதாகப் பாட்டு, கவிதை எழுதலாம் என்றால் இன்னும் மனது பக்குவப் படவில்லை..
கோயிலில்
அம்பாளுக்கு
அழகிய அலங்காரம்
பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்
தேஜஸ் அப்படியே
முகத்தில் ஜொலிக்கிறது
பார்க்க இருகண்கள் போதாது
இந்த நிறச் சேர்க்கையில்
எங்கு பட்டுப் புடவை வாங்கினார்கள்
விசாரிக்க வேண்டும்
என்று தான் எழுத வருகிறது. இந் நிலையில் இறையைத்துதிபாடி நானே எழுதுவது என்பது இப்பொழுதுகொஞ்சம் கஷ்டம். எனில் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒன்று தோன்றியது..
(தொடரும்)
chinnakkannan
10th October 2014, 09:49 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – b)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை – தொடர்ச்சி
உலகில் பார்க்க, கேட்க, படிக்கச் சலிக்காத விஷயங்கள் பல உள்ளன.
(ம.சா. போச்சுடா மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்)
பார்க்கச் சலிக்காத விஷயங்கள் என எடுத்துக் கொண்டால்:: இயற்கை விண்ணிலும் மண்ணிலும் வரைந்திருக்கும் அழகிய ஓவியங்கள், சின்னக் குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு, சூல் கொண்டு சில நாட்களே ஆன பெண்ணின் முகம் என பலவற்றைச் சொல்லலாம்.
கேட்கச் சலிக்காத விஷயங்கள்: சின்னஞ் சிறுவன்/சிறுமி பெற்றோரிடம் கூறும் பொய்கள், இனிய இசையில் அழகான கருத்தாழம் மிக்க பாடல்கள் (உதா: பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும்), பாருவப் பெண்ணின் சிரிப்பு இன்னும் பல.
படிக்கச் சலிக்காத விஷயங்கள் : அழகிய கவிதைகள், நல்ல நாவல்கள், அடிப்படை விஷயங்கள் மாறாத தினசரிப் பத்திரிகைகள் இன்னும்பல.
ஆனால் எந்தக் காலத்திலும் எல்லாத் தரப்பினருக்கும் அலுக்காத ஒரு விஷயம் உண்டு. அது தான் ஆண்டவனும் அவன் சார்பான விஷயங்களும். ஒவ்வொரு மதத்தவரும் தத்தம் வழிகளில் இறையைத்துதிப்பதும், அவர் புகழ் பாடி கவிதைகள் பாடல்கள் எழுதுவதும் அவற்றைப் பாடுவதும் செய்கிறார்கள்.
இந்து மதத்தைப் பொறுத்தவரை பல தெய்வங்கள் உண்டு. அவற்றுக்காக எழுதப்பட்ட பல பாடல்கள் உண்டு. மார்கழி மாதம் என்றால் தமிழ் நாட்டவருக்கு நினைவுக்கு வருவது திருப்பாவை மற்றும் அதிகாலை நாலரை மணிக்கு தெருமுனை அம்மன் கோவிலில் போடப்படும் “கற்பூர நாயகியே கனகவல்லி” பாட்டு.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எழுதிய திருப்பாவைக்கு பலர் அழகிய உரைகள் எழுதியிருக்கிறார்கள். இறை சம்பந்தப் பட்ட விஷயம் என்பதால் எத்தனை பேர் எவ்வளவு விதமாக எழுதினலும் அலுக்காது. எனில் நானும் திருப்பாவைக்கு உரை எழுத முயற்சிக்கலாம் என நினைத்தேன்..
திருப்பாவைக்கு உள்ளே சென்றால், பல விஷயங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. மனம் உருகி சிலிர்ப்பு ஏற்படுகிறது.
என்னையும் மீறிய ஏதோ ஒரு சக்தி தான் எனை ஆசைப் பட வைத்திருக்கிறது. அதுவே என்னை ஒழுங்காக எழுத வைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தச் சிறியவனும் ஆண்டாள் மீதும் அவளை ஆட்கொண்ட ஸ்ரீ ரங்க நாதன் மீதும் பாரத்தைப்போட்டு இந்த உரை எழுதுகிறேன்.
கொஞ்சம் எளிமையாக எனக்குள் தோன்றிய எண்ணங்கள், நான் படித்து, கேட்டு, பார்த்தறிந்த விஷயங்களை வைத்து ஆண்டாளின் திருப்பாவையின் மூலம்கெடாமல் இந்த உரையைத் தர முயன்றிருக்கிறேன்.
அடுத்து, பெரியாழ்வாரையும், ஆண்டாளைப் பற்றியும் சிறிது அறிந்துவிட்டு திருப்பாவை முதல் பாசுரத்திற்குச் செல்வோம்..
(தொடரும்)
chinnakkannan
10th October 2014, 09:50 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – c)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை – தொடர்ச்சி
கிழியறுத்தான் வளர்த்த கிளி
***
“ நான் அழகாய் இருக்கிறேனா”
பதில் மெளனம்
“சரி, இந்தப் பட்டுப் புடவையில் எப்படி இருக்கிறேன்” மறுபடியும் மெளனமே பதில்.
“சரி, இப்பொழுதாவது சொல். இந்த நெற்றிச் சுட்டி, காதுகளில் கம்மல்கள், மூக்குத்தி, ஒட்டியாணம், கழுத்தில் காறை எனும் நகை, காற்கொலுசுகள் அணிந்து, கழுத்திலும் கொண்டையிலும் அணிந்திருக்கும் மலர்மாலையுடன் நான் எப்படி இருக்கிறேன்? அவரது அழகிற்கு இணையாக இருக்கிறேனா?” – கேள்வி கேட்டவள் கோதை. கேட்டது தன் எதிரே இருந்த கண்ணாடியை.
நிலைக்கண்ணாடி என்ன சொல்லும். ஏற்கெனவே எதிரில் நின்றவளின் அழகில் திகைத்து “ஏய், இன்னும் சற்று நேரம் என் முன்னேயே இரேன். உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே” என மனதிற்குள் வேண்டிக்கொண்டு “இன்னும் சற்று நேரத்தில் அவள் அகன்று விடுவாளே” என நினைத்ததால் பெருமூச்சும் விட்டுக் கொண்டு நின்றிருந்தது.
“என்ன காரியம் செய்தாய் அம்மா?” பதற்றக் குரல் பின்னால். திரும்பினாள் கோதை. விஷ்ணு சித்தர் என்றும் கிழியறுத்தான் என்றும் அழைக்கப் பட்ட பெரியாழ்வார் பதற்றமாய் நின்றிருந்தார்.
யார் இந்தக் கோதை? யார் இந்தப் பெரியாழ்வார்?
மஹா விஷ்ணுவிற்கு மூன்று தேவியர்கள் என்கிறது உப நிஷத். – ஸம்வதி, ஸந்தினி, ஹலாதினி.
ஸம்வதி – ஞான சக்தி – மஹாலஷ்மி
ஸந்தினி – க்ரியா சக்தி – பூமிப் பிராட்டி
ஹலாதினி – ஆனந்த சக்தி – ராதை
கலியுகம் பிறந்த போது விஷ்ணு லஷ்மியைக் கேட்டார். “ நீ ஏன் இப்பொழுது பூலோகத்தில் அவதரித்து நல்லது செய்யக் கூடாது?”
லஷ்மி சொன்னாள், “போப்பா. உங்களுக்கு வேறு வேலை இல்லை. ஆசையாய் பூமிக்கு வா என்று கூப்பிடுவீர்கள். வந்தால் வா காட்டுக்கு என்பீர்கள். குளிப்பதற்கு நீரைத்தராமல் தீயைத் தருவீர்கள். நான் வரவிலலை இந்த ஆட்டத்திற்கு!”.
பிறகு விஷ்ணு பூமிதேவியிடம் கேட்டுஒப்புதல் வாங்கிவிட பூமிதேவியின் அம்சமாய் ஆடி மாதம் வளர்பிறையில் பூர நட்சத்திரத்தில் தோன்றியவள் தான் ஆண்டாள் என அறியப் பட்ட கோதை. (கோதாவரி ஆற்றின் குணங்கள் கொண்டவள் என்பதால் கோதை எனச் சொல்பவர்கள் உண்டு.
கோதையைப் பற்றியும் அவளை வளர்த்த பெரியாழ்வார் பற்றியும் அவள் எழுதிய திருப்பாவையைப் படித்துக் கொண்டே பார்ப்போம்.
மாடம்கொள் மேல் நிலைக் கோபுரமும் உயர்
…மாமதிலும் திரு மாளிகையும்
நீடும்பொன் ஆலயம் மேவியகோதையை
… நேர்ந்து கும்மி அடிப்பம் அடி! (புலவர் அழகிய சொக்க நாத பிள்ளையின் கும்மிப் பாட்டிலிருந்து)
(தொடரும்)
chinnakkannan
10th October 2014, 09:52 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது (d)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஒன்று.
****
கோகுலத்தில் ஒரு நாள் கூட்டங்கூடி கோபியர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “அவன் அழகன், கருமை நிறத்தோன். குறும்புக்காரன். நம் எல்லார் மனங்களையும் கவர்ந்தவன் அவன். அந்தக் கண்ணன். ஓய்வுமொழிதலும் இல்லாமல் அவனது உறவையே வெறுமனே நினைத்து ஏங்கியிருந்தால் என்ன பிரயோஜனம். அவனை அடைவது எப்படி?.”. அப்போது அங்கு வந்த சாண்டில்ய மகரிஷி “ என்ன விஷயம் கோபிகாள்?” எனக் கேட்டு விஷயம் அறிந்தார்.
“மாயக் கண்ணனை அடைய வேண்டுமா கன்னியரே. கேளுங்கள்..தேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மதத்தில் அதிகாலை எழுந்து நீராடி அவனைத்தொழுது பாவை நோன்பிருங்கள். அவனது அருள் பெறலாம்” எனச் சொன்னார். (பூலோகத்தில் ஒருவருடம் என்றால், தேவ லோகத்தில் ஒரு நாள். – அதிலும் தேவர்களின் விடியற்காலை (வைகறை) மார்கழியில் துவங்குகிறது)
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை இவ்வாறு தான் ஆரம்பிக்கிறது. ஆண்டாள் ஸ்ரீ வில்லிப் புத்தூரை ஆயர்பாடியாகவும் அங்கே இருக்கும் பெரிய கோவிலைச் சுற்றியுள்ள தோட்டத்தை பிருந்தாவனமாகவும் கோவில் எம்பெருமான் வடபத்ர சாயியைக் கண்ணனாகவும் தன் தோழியரைக் கோபியராகவும் வைத்துமார்க்ழி மாதம் பாவை நோன்பு நூற்க அதிகாலை வேளையில் அழைக்கிறாள்..
*
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்
..நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மலும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
..கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தக் கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
..கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
..பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்..
*
” இது மார்கழி மாதம். இந்த நாள் மனதெல்லாம் நிறைந்த நன்னாள். இந்த நாளில் நாம் விடியற்காலை எழுந்து யமுனை நதிக்கரையில் நீராடச் செல்வோம்.
ஓ. அழகிய நீலமேக சியாமளன் விளையாடல் நடத்தும் பெருமை கொண்ட, ஆயர்பாடியைச் சேர்ந்த – செல்வச் செழிப்பில் மூழ்கியிருக்கும் தோழியரே,
மிகக் கூர்மையான வேலை வைத்துக் கொண்டு நந்தகோபனால் காக்கப்படுபவன், நீண்டு அழகாய் விரிந்த, **பாக்கியம் பெற்ற கண்களை உடைய யசோதையின் இளைய மகன், அவனுக்கோ கருமை நிற மேனி, கண்களோ சிவந்த நிறம். அவனது முகம் நல்லவர்களுக்குச் சந்திரனைப் போலக் குளுமையாகவும், தீயவர்களுக்குச் சூரியனைப் போலச் சுட்டெரிப்பதாகவும் இருக்கும். அவன் தான் கண்ணன் என்னும் நாராயணன். அவனே அவனை எண்ணி நாம் நோற்கும் நோன்பிற்குத் தகுந்த பரிசுகள் கொடுப்பான். உலகம் அவனைப் புகழுதற்கும், நாமும் உய்யவும் அவன் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம். வாருங்கள்.”
***
’* ஆண்டாள் பாவை நோன்பைத் துவக்கிய போது – அந்த மார்கழி முதல் நாளன்று பெளர்ணமி. எனில் “மதி நிறைந்த” என்கிறாள்.
** யசோதையின் கண்கள் குழந்தை முதலே கண்ணனைப் பார்த்து மகிழ்ந்திருந்தன. எனவே “பாக்கியம் பெற்ற கண்களைஉடையவள்” என்கிறாள்.
(தொடரும்)
aanaa
11th October 2014, 07:33 AM
.தினம் ஒருகவிதை என்ற மின்னஞ்சற்குழுவில்..
.
ஹரி கிருஸ்ணன் என்பவர்....
chinnakkannan
12th October 2014, 11:54 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பத்து
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இரண்டு
உலகத்தில் ஆதாயம் இல்லாத காரியங்கள் இருக்கிறதா என்ன?
ஒரு நாள் குருவிடம் சீடன் கேட்டான்; குருவே எனக்கு நீங்கள் இவ்வளவு கற்றுத் தருகிறீர்களே. இதனால் உங்களுக்கு ஏதாவதுலாபம் உண்டா?
குரு சொன்னார் “ நீ என்னைக் கேள்விகேட்குமளவுக்குக் கற்றுத் தெளிந்திருக்கிறாயே. இதை நினைத்து நான் அடையும் பெருமிதம் தான் எனக்கு மிகப் பெரிய லாபம்”
500 ரூபாய் முதல் போட்டு 50 ரூபாய் லாபம் எடுக்கின்ற சிறு கறிகாய் வியாபாரி முதல் லட்சக் கணக்கில் செலவு செய்துகோடிகளைக்குவிக்கும் அரசியல் வாதி வரை லாபம் ஒன்றே குறி. சரி. அப்படி உடனடியாக லாபம் கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை. எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்குக் கடின உழைப்பு அவசியம். அப்படி உழைத்தால் லாபம் தானாய்த் தேடிவரும்.
இதைத் தான் இன்றைய பாடலும் சொல்கிறது. ஆண்டாள், கோபியரிடம் கண்ணனை அடைவதற்கான பாவை நோன்பைப் பற்றியும், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள்.
****
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
..செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
… நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
…செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
..உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
***
“ இந்த உலகத்தில் இன்பத்திலும் துன்பத்திலும்கிடந்து உழலப் பிறந்து விட்டவர்களே,
நாம் நம் பாவை நோன்பிற்கு என்னவெல்லாம் செய்வோம் என்பதைக் கேளுங்கள்.
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும்பாம்பின் மீது தலைவைத்துத் துயிலுகின்ற நாராயணனின் திருத்தாள்களைப் போற்றிப் பாடுவோம்.
இந்த மார்கழி மாதத்தில் உணவில் நெய் சேர்க்க மாட்டோம், பால் அருந்த மாட்டோம். அதிகாலையில் எழுந்து நீராடுவோம். அழகிய கண்களை மேலும் அழகூட்டும் மை இட மாட்டோம். கருங்கூந்தலில் மலர்கள் சூட மாட்டோம். செய்யக் கூடாது என ஒதுக்கப் பட்ட விஷயங்களைச் செய்ய மாட்டோம். கண்ணனைப் போற்றும் பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலையும் எங்கும் பாட மாட்டோம்.
எவ்வளவு தான் தானம் செய்தாலும் அதைப் பற்றி கர்வப் படாமல் ‘ஏதோ நாம் தான் கைகாட்டினோம்’ என அடக்கத்துடன் இருப்போம். இந்த மார்கழி மாதம் முழுதும் நோன்பிருக்கும் பொழுதுகளில் கண்ணனையே நினைத்துக் கசிந்துருகிக் காலம் கழிப்போம். அதிலேயே நமக்கு, நம் வாழ்க்கைக்கு நாம் எண்ணியது கிடைத்து விடும்”
**
மனதை ஒருமுகப் படுத்தி விரத நியமங்கள் அனுஷ்டித்தால் இறைவன் தானே தேடி வருவான். நமக்கு வேண்டியவற்றைத் தானே தருவான் என்பது இந்தப் பாடலின் உட்பொருள்..
(தொடரும்)
gkrishna
16th October 2014, 05:02 PM
அன்பு நண்பர் சி கே அவர்களுக்கு
கீழே உள்ள ஒரு பகுதியை இங்கே பதிவிட அனுமதி தருவீர்களா ?
சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.
அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.
லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.
மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.
"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.
gkrishna
18th October 2014, 12:33 PM
thanks ck/aanaa
regards
gk
chinnakkannan
14th December 2014, 09:59 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினொன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – மூன்று
*
இறைவனிடம் பக்தி செலுத்துவது எப்படி?
கோவிலிலிருந்து வெளியே வந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன், “ இறைவனிடம் என்ன வேண்டிக் கொண்டீர்கள்?”
“மைத்துனிக்கு நல்ல வரன் அமைய வேண்டும். கடைக்குட்டிப் பெண்ணுக்கு பத்மா சேஷாத்ரியில் இடம் கிடைக்க வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு சீக்கிரம் வர வேண்டும். நான் பார்க்கும் நீண்ட தொலைக்காட்சித் தொடரில் எனக்குப் பிடித்த கதா பாத்திரம் சாகடிக்கப் படக் கூடாது “ என நீண்டு கொண்டே சென்றது அவர் பட்டியல்.
“இறைவனிடம் ஒன்றுமே கேட்காமல் இருக்க வேண்டியது தானே. அவருக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டுமென்று?” எனக் கேட்டேன்.
நண்பர் “அப்படியும் இருந்தேன் சில நாள். என்ன ஆயிற்று தெரியுமா?” என்றார்.
“என்ன நடந்தது?”
“எனக்கு இப்போது இரு மனைவிகள்” என்றார் நண்பர்.
சிரிப்பதற்காகச் சொல்லவில்லை இதை. நண்பர் ஆசைப்பட்டதை இறைவன் நிறைவேற்றியிருக்கிறான். அவ்வளவே! அவர் அவஸ்தைப் பட்டால் அவன் என்ன செய்வான்!
இறைவனிடம் வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
நீரில் மூழ்கும் போது ஒருவன் வாழ்வதற்காகக் காப்பாற்றும் படி கதறுவானே அதைப்போல மனதுக்குள் கதற வேண்டும். சரி, அப்படிச் செய்தால் என்ன பயன்? அட, அதைத் தான் இந்தப் பாடலில் ஆண்டாள் கோபியர்க்குச் சொல்வது போல நமக்கும் சொல்கிறாள்.
*
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந் நெல் ஊடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
*
இந்திரனின் துயர் தீர்ப்பதற்காக வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் தானம் கேட்டு, பின் நெடிதாய் உயர்ந்து உலகையே அளந்தவர் எம்பெருமான் மஹாவிஷ்ணு! அவனுடைய திரு நாமங்கள் பாடி நாம் நோன்பு நூற்றால் அருள் நமக்கு மட்டுமின்றி இவ்வுலகிற்கே கிடைக்கும்.
நாடெங்கும் மாதம் மும்முறை மழை பெய்யும்., நெற்பயிர்கள் உயரமாக வளர்ந்திடும், நெற்பயிர்களின் நடுவே உள்ள நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்., அப்படி விளையாடுகின்ற மீன்களால் அந்தப் பயிர்களிடையே பூத்திருந்த குவளை மலர்கள் அசைக்கப்பட, தேன் குடித்த வண்டுகள் கண்ணூஞ்சல் ஆடிக்கொண்டே கண்ணயரும். எனில் ஊர் என்னாகும்?
ஊரும் செழிக்கும். கண்ணனின் கை படும்பாக்கியம் பெற்ற ஆயர்பாடியின் பசுக்கள் அளவில்லாமல் பாலைச் சொரியும். ஆயர்கள் பசுக்களின் மடியைப் பற்றியிழுத்துக் குடம் குடமாய்ப் பாலை நிறைத்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அளவில்லாத செல்வம் ஆயர்பாடி எங்கும் நிறைந்திடும். எனவே வாருங்கள்”
***
இந்தப் பாடலின் உட்கருத்து என்னவெனில், எம்பெருமானின் பாடல்களை மனமுருகிப் பாடினால் பாடுகிறவர் மட்டுமின்றி, நாடு முழுமையும் செழிப்படையும். தன்னலம் மட்டும் எண்ணாமல் உலகனைத்தும் வாழ வேண்டும் என நினைப்பவனே எம்பெருமானின் உண்மையான அடியவன் ஆகிறான்…
**
(தொடரும்)
chinnakkannan
19th December 2014, 02:02 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பன்னிரண்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – நான்கு.
நல்ல மழையைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?
கவிஞர்களுக்குக் கற்பனை மழை, கன்னிப் பெண்களுக்கு மனம் கவர்ந்தவனை நினைத்த மாத்திரத்தில் மனதுக்குள் பூமழை பொழியும். ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் சொன்ன போது ‘பொன் மழை’ பொழிந்தது. இப்படி சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பிரனாலும் பார்த்து அனுபவிக்கத் தக்க விஷயம் இந்த மழை.
மழையைப் பிடிக்காதவர்களும் உண்டு – வானிலை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவர்கள். “என்னப்பா இது. நாம் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து மிதமான மழை பெய்யும் எனச் சொன்னால் இருக்கிற மேகங்களும் கலைந்து விட்டதே! – என நினைத்து அவர்கள் விடுகின்ற பெருமூசில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும்!
அதென்ன நல்ல மழை? கெட்ட மழை?
மனிதர்கள், பயிர்கள் தாவரங்கட்குத் தேவையான அளவு நீர் நிலைகள் நிரம்பும் வண்ணம் பெய்வது நல்ல மழை! தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தால் கோபம் கொண்ட பெண்ணைப் போல் வெள்ளம் பெருக்கெடுத்து எல்லாவற்றையும் அழித்து விடும். இது கெட்ட மழை.
இந்தப் பாடலில் வருண பகவானை அழைத்துக் கட்டளை இடுகிறாள் ஆண்டாள். எதற்கு? உலகனைத்தும் வாழும்படியாக நல்ல மழை பொழிய வேண்டும் என்று.
*
ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து
பாழியத் தோளுடையப் பத்ம நாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்..
*
மழைக்குத் தலைவனான வருணனே..
உனது திறமையை நீ சிறிதும் குறைத்துக் கொள்ளக் கூடாது. எங்களுக்கு மழை பொழிவதற்காக மிகப் பெரிய கடலின் ஆழத்தில் புகுந்து அங்குள்ள நீரைக் கொண்டு வரவேண்டும். அவ்வண்ணம் நீரை எடுத்து வானத்தில் வரும்போது செய்கின்ற ஆராவாரத்தைக் கேட்டு அந்த முழக்கத்தைக் கேட்டு நாங்கள் மகிழ வேண்டும்.
வானத்தில் நீ வரும்போது உலகைப் படைக்கும் காலத்தில் எம்பெருமான் கொண்ட கரிய நிறத்துடன் வரவேண்டும். அவனைக்காணாத குறை தீர நாங்கள் உன்னைக் கண்டு குறை தீர வேண்டும். அழகுபொருந்திய அவனது திருத் தோள்களில் மின்னி ஒளிவிடும் சக்ராயுதத்தைப் போலவும், அவனது திருவாய்ப்படும் பாக்கியம் பெற்ற ”பாஞ்ச சன்னியம்” என்ற சங்கைப் போல முழங்கிகொண்டும் நீ வர வேண்டும். அவனை நினைத்து நோன்பினால் வாடியிருக்கும் எங்களைத் தேற்றுவிக்கும் வண்ணம் நீ ஓடி வரவேண்டும்.அவனது சாரங்கம் என்ற வில்லினின்று புறப்படும் அம்பு மழை போல நீ வரவேண்டும். ஆனால் ஒன்று அவனது அம்பு மழை அசுரர்களை அழிக்கும். உன் மழையோ உலகினையும் எங்களையும் காத்திடவேண்டும்.!
எனில் வேகமாய் வருவாய்.. நாங்களும் இந்த மார்கழியில் நீராட வேண்டுமல்லவா”
*
எம்பெருமானிடம் உள்ளன்பு கொண்ட அடியார்க்ளுக்கு தேவதைகள் கட்டுப்படும், அவர்கள் பெய்யெனச் சொன்னால் மழை பெய்யும் என இப்பாடலில் உட்கருத்தாக ஆண்டாள் கூறுகிறாள்.
*
gkrishna
23rd December 2014, 09:33 AM
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
சி கே சார்
ஆண்டாள் பாசுரத்தில் விஞ்ஞானத்தை கவனித்தீர்களா?
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.
http://4.bp.blogspot.com/_DHtTAYDedhA/TUvr0hm5urI/AAAAAAAAAJQ/33FNhltaXSM/s400/800px-Watercycleprint.jpg
மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.
இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை
gkrishna
23rd December 2014, 09:40 AM
சின்ன கண்ணனாரே
உண்மையில் நீவிர் மழை (மழலை) கண்ணன். அவ்வாறே அழைக்கவும் ஆசை படுகிறேன் .
http://4.bp.blogspot.com/-O7KdPewjVHM/UNFgoIGALgI/AAAAAAAAGzo/l2tQ-uANDzM/s320/282989_435572743162731_1339693266_n.jpg
chinnakkannan
23rd December 2014, 10:25 AM
கிருஷ்ணாஜி.. மிக்க நன்றி.. சூப்பர் உங்கள் விளக்கம்..இன்னும் அஞ்சு நாள் ஓடிடுத்து.. ஒரே வேலை எனில் வர இயலவில்லை..வந்து பாசுரம் இட இயலவில்லை.. ஸாஃப்ட் காப்பி இல்லை.. டைப் தான் அடிக்க வேண்டும்..இன்னிக்குத் தொடரப் பார்க்கிறேன்..
chinnakkannan
23rd December 2014, 09:00 PM
*
பாசுரம் பாடி வா தென்றலே…
பதின்மூன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஐந்து.
*
சந்தேகம் என்பது என்ன? அது ஒரு பெரிய நோய் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மாணவனுக்கு ஆசிரியர் நடத்தும் பாடத்தின் மீது சந்தேகம் வரலாம். அந்த ஆசிரியர் மீதே சந்தேகம் வரக் கூடாது!
நாரதருக்கும் அப்படித்தான் ஒரு சந்தேகம் வந்தது. என்ன சந்தேகம்? எப்பொழுதும் நான் “ நாராயணா” என்று இறைவனை ஜபிக்கிறேனே, இப்படி அவன் பெயரைச் சொல்வதால் என்ன நன்மை?
மஹா விஷ்ணுவிடமே சென்று கேட்டார். விஷ்ணு சிரித்து ‘ நாரதா பூலோகத்தில் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று நாராயணா’ எனச் சொல்லிப் பார்” என்றார். நாரதர் சென்று மண்புழுவிடம் ‘நாராயணா’ என ஒருமுறை சொன்னார். சொன்னதும் அது இறந்து விட்டது. நாரதர் சோகமாகச் சென்று விஷ்ணுவிடம் விஷயத்தைச் சொல்ல, மஹாவிஷ்ணு, “ நாரதா. நீ மறுபடி சென்று ஒரு மான் குட்டியிடம் சொல்” என்றார்.
நாரதர் சென்று அந்த மான்குட்டியிடம் சொல்ல அதுவும் இறந்து விட்டது. மறுபடி விஷ்ணு. விஷயம். விஷ்ணு சொன்னார். “ நாரதா கவலைப் படாதே. இப்போது பூமியில் உள்ள கன்றுக்குட்டியிடம் போய்ச் சொல்” எனச் சொல்ல நாரதர் சென்று “ நாராயணா’ என்று கன்றுக்குட்டியிடம் சொல்ல அது தாவிக் குதித்து உயிர் விட்டது.
நாரதருக்கு மிக்க சோகமாகி விட்டது. விஷ்ணுவிடம் போய் “யோவ். என்ன தான்யா உன் மனசில நினச்சிருக்க? நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாம இப்படி அலைக்கழிக்கறே?” என மனதில் நினைத்துக் கொண்டு விஷ்ணுவிடம்” ஐயனே. என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்?” எனக் கேட்டார். விஷ்ணு புன் முறுவல் புரிந்து “ நாரதா. இப்போது பூலோகத்தில் ஒரு ராஜாவிற்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் சென்று “ நாராயணா” என்று சொல்லிப் பார். உன் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றார். நாரதரும் தன் விதியை நொந்து அந்த ராஜ்யத்துக்குச் சென்று அந்தக் குழந்தையிடம் “ நாராயணா” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டார்.
சற்று கழித்துப் பார்த்தால் அந்தக் குழந்தை அவரைப்பார்த்து சிரித்து விட்டுப் பேச ஆரம்பித்தது. “இன்னுமா புரியவில்லை நாரதரே! நீர் ஒரு தடவை பகவான் நாமமான நாராயணா என்று சொன்னதைக் கேட்டதால், புழுவாய்ப் பிறந்த நான், மான் , கன்று ஆகிய ஜன்மங்கள் எடுத்து இப்போது கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்திருக்கிறேன். இதுவே இறை நாமத்தின் மகிமை” என்றது.
ஆண்டாள் இந்தப் பாடலில் இதையும், இறைவனை வணங்கி நோன்பிருக்கும் போது அந்த இறை நாமத்தால் இடையூறுகள் விலகும் என்றும் சொல்கிறாள்.
*
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது
வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயீனில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்..
*
அவன் நம் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத ஆச்சர்யமான சக்தி படைத்தவன். வடமதுரையில் வெகு காலம் எழுந்தருளியிருந்தவன். அவன் பிறந்தபோது, அவனை வசுதேவர் ஆயர்பாடிக்குத் தூக்கிச் சென்ற போது அவருக்கு வழி விட்டதால் தூய்மையடைந்தது யமுனை நதி. அங்கு விளையாடியதால் யமுனைத் துறைவன் என்று பெயர் பெற்றான் அவன்.
அவனது ராமாவதாரத்தில் பிரகாசிக்காத குணங்கள் கூட ஆயர் குலத்தில் பிரகாசித்தன. எல்லாம் செய்யும் ஆற்றல் இருந்தும் கூட, யசோதையிடம் சக்தியில்லாத குழந்தையாய், அவளுக்குக் கட்டுப் பட்டான். அவள் அவனை உரலில் கட்டிய போது அதை இழுத்துச்சென்று அதனால் வயிற்றில் ஏற்பட்ட தழும்புகளால் தாமோதரன் என்று பெயரும் பெற்றான். இப்படிக் கட்டவும், அடிக்கவும் செய்து , தன்னை மாற்றிக் கொண்டு, பெற்ற வயிற்றிற்குப் பட்டம் சூட்டியவன் அவன். அந்தக் கண்ணன். அவனை, நாம் வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, இதுவரை செய்த பாவங்களும், நம்மையும் அறியாமல் செய்யப் போகும் பாவங்களும், நெருப்பினில் பஞ்சு போல அழிந்து போகும். எனவே அவனை, அவன் நாமத்தை வாயாரச் சொல்லுங்கள்.
** ** **
பயனே கருதாமல் எம்பெருமானின் நாமங்களைச் சொன்னால் எப்படிப் பட்ட பாவங்களும் அழிந்து விடும் என்பது இதன் உட்கருத்து!
**
chinnakkannan
23rd December 2014, 09:31 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினான்கு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஆறு.
*
பறவைகளில் காக்கையைச் சண்டாளன் என்பார்கள். ஏனெனில் ஆனானப் பட்ட சீதா தேவியையே ஆசைப்பட்டதல்லவா அந்தப் பொல்லாத பறவை!
முதன் முதலாக அரபு நாடான ஃப்யூஜைரா சென்றிருந்த போது ஒரு பறவையைப் பார்த்தேன். கறுப்பாக மிகக் குண்டாக, கண்களை உருட்டி விழித்த வண்ணம் அமர்ந்திருந்தது. பருந்தோ என்னவோ என்று யோசிக்கும் போது “கா…கா..” எனக் கத்தியவண்ணம் பறந்தது. நண்பரிடம் கேட்டேன். “ஏன் உங்கள் ஊரில் காக்கைகள் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன?” அவரது பதில், “இங்கு யாரும்காக்கை பிடிக்க மாட்டார்கள்!”
காக்கையின் மிகப்பெரிய நற்குணம் ஒன்று உண்டு. எவ்வளவு சிறிய ஆகாரம் கிடைத்தாலும்,, மற்றவற்றைக் கூவி அழைத்து, எல்லோரிடமும் பகிர்ந்து உண்ணும்.
“புள்ளும் சிலம்பின காண்” என்கிற ஆறாவது பாடல் முதல் “எல்லே இளம் கிளியே” என்கிற பதினைந்தாவது பாடல் வரை கண்ணனை நினைத்து மயங்கிக் கிடக்கின்ற தோழிகளைப் பொழுது விடிந்ததற்குப் பல அடையாளங்கள் கூறி எழுப்பி நோன்புக்கு அழைக்கிறாள் ஆண்டாள். காக்கை பகிர்ந்துண்ணுவதைப் போல், அடியவர்களுடன் சேர்ந்து தான் எம்பெருமானை அனுபவிக்க வேண்டும் என்பதை அறியாமல் கிடக்கின்றவள் ஒருத்தியை இந்தப் பாடலில் எழுப்புகிறாள்.
** **
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விரிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தின்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்லவெழுந்து அரியன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்..
*
”அறிவற்ற பறவைகளும் பொழுது விடிந்ததை உணர்ந்து உறக்கம் கலைந்து கூவுகின்றன, அறிவுள்ள நீ இன்னும் உறங்கலாமா?
கருடனை வாகனமாக உடைய பெருமாளின் கோவிலில் விடியற்காலை பூஜைக்காக ஊதப்படுகின்ற வெண்மையான் சங்கின் நாதம் உன் செவிகளில் விழவில்லையா? எம்பெருமானை அனுபவிப்பதில் புதியவளான பிள்ளையே. (பேதையே) , அடியவர்களுடன் சேர்ந்து தான் அவனை அனுபவிக்க வேண்டும் என அறியாமல் நீ மட்டும் அவனை அனுபவிக்க முயல்வதை விட்டு எழுந்திரு!
பூதனையை மாய்த்தவனும் சகடாசுரனை அழித்தவனும், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனுமாகிய எம்பெருமானை எப்பொழுதும் சிந்திப்பவர்கள் முனிவர்கள்.
அவனுக்கு எப்பொழுதும் தொண்டு செய்பவர்கள் யோகிகள். அவர்கள் அனைவரும் தங்கள் உள்ளத்தில் உறையும் எம்பெருமானுக்கு வாட்டம் ஏற்படக்கூடாதென விடிகாலையில் எழுந்து “ஹரி ஹரி” என நாம பாராயணம் செய்யும் பேரொலி திருவாய்ப்பாடி எங்கும் நிறைந்து எங்கள் உள்ளங்களையும் குளிர வைத்து எழுப்பியது.
எனில், நாங்களும் எழுந்தோம். நீயும் எழுந்திருப்பாயாக” என்கின்றனர் வீட்டுக்கு வெளியில் இருப்பவர்கள்..
**
உட்கருத்து: எம்பெருமானுடைய அடியவர்களுடன் சேர்ந்தே அவனை அனுபவிக்க வேண்டும் என்பதை உணராதிருத்தல் மிகப்பெரிய அறியாமை ஆகும்…
** **
(டிசம்பர் 2001 இல் எழுதியது)
**.
chinnakkannan
23rd December 2014, 09:45 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினைந்து
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஏழு
*.
நல்ல உறக்கம் என்பது என்ன?
ஒரு நாளில் எட்டு மணி நேர உறக்கம் ஒரு மனிதனுக்குப் போதும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
நன்பர் ஒருவரைக் காலையில் பார்த்தேன்.. அவர் விழிகள் சிவந்திருந்தன. “என்ன ஆயிற்று?”
”இரவு முழுவதும் தூக்கம் இல்லை. பையன் வாயில் விரல் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்”
“சரி, அதற்கும் நீங்கள் தூங்காததற்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் வாயில் போட்டுக் கொண்டது என்னுடைய விரலை!” என்றார் நண்பர்.
வெகு நேரம் ஒருவன் உறங்கினால் “இவன் என்ன பேய்த்தூக்கம் தூங்குகிறான்?” என்போம். ஆண்டாளும் இந்தப்பாடலில் விடியற்காலை கடந்தும் உறங்குகின்ற ஒருத்தியை எழுப்புகிறாள்.
** **
கீசு கீசென் றெங்கு மானைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும்பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயக பெண்பிள்ளாய் நாராயண மூர்த்தி
கேசவன் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்த் திறவேலோ ரெம்பாவாய்.”
*
“பொழுது விடிந்ததற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் ஆனைச்சாத்தான் என்கிற பறவை “கீச் கீச்” என ஒலி எழுப்புவது உன் காதில் விழவில்லையா? அடியார்களுடன் கலந்து பழகும் சுவையை அறிந்திருந்தும் நீ உறங்குகிறாயே, நீ பேய்ப் பெண் தானே?
ஆயர்பாடியில் எல்லாப் பெண்களும் விடியற்காலையிலேயே எழுந்து தயிர் கடைகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் போது அவர்கள் அணிந்துள்ள அச்சுத்தாலி, ஆமைத் தாலி போன்ற நகைகளும் கலகல என ஒலி எழுப்புகின்றன. அவர்கள் கூந்தல் அவிழ்ந்து நறுமணம் எங்கும் கமழ்கிறது. இப்படி அந்த ஒலியையும் நறுமணத்தையும் அனுபவித்த வண்ணம், எங்களது தலைவியாகிய நீ உறங்குவது நியாயமா?
நாராயணனே கண்ணனாக அவதரித்து “கேசி’ என்ற அசுரனைக் கொன்ற கதையை நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது , நீயும் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளாமல் உறங்குவது நியாயமா? உன்னைக் காணாமல் இருண்டு கிடக்கும் எங்கள் நெஞ்சில் இருளைப்போக்க, கதவைத் திறவாயாக!”
** **
அடியவர்களுடன் சேர்ந்து தான் எம்பெருமானை அனுபவிக்க வேண்டும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பது இப்பாடலின் உட்கருத்து..
** **
chinnakkannan
23rd December 2014, 09:58 PM
**.
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினாறு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – எட்டு
*.
கிராமப் புறங்களில் இன்னும் புழங்கப்படுமொரு தமிழ்ச் சொல் “வெள்ளென:” “எலேய். வெள்ளென எழுந்திருச்சு இந்த ஆளைப் பார்த்து விட்டு வா” என்பார்கள். அது என்ன “வெள்ளென”
“வெள்ளென” என்றால் விடியற்காலை, அதி அதி காலை எனலாம்.
இரவு முற்றிலும் கலைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வரும் நேரம். அந்தச் சமயத்தில் வானம், உறங்கி எழுந்த இளம்பெண்ணைப் பார்ப்பது போல – ஒரு பயங்கலந்த அழகுடன் காணப்படும். முற்றிலும் இருள் கலைந்தால் என்ன ஆகும்.? கீழ்வானம் வெளுத்து வெளிச்சம் பரவி விடும்.
இந்தப் பாடலில் கண்ணனால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பெண்ணை அனைவரும் அழைக்கிறார்கள்
**
கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறு வீடு
மேய்வான் பிறந்தனகாண் மிக்குன்ன பிள்ளைகாள்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னை
கூறுவான் வந்து நின்றோம் கோலாகலமுடைய
பாவாய் எழுந்திராய்ப் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந்தருளேலோ ரெம்பாவாய்”
** **
கிழக்கு வெளுத்து விட்டது. ஆயர்பாடியில் உள்ள எருமைகள் பனித்துளியை நுனியில் கொண்டிருக்கும் குளுமையான புற்களை மேய்வதற்காகச் சென்று கொண்டிருக்கின்றன.
உன்னைத் தவிர ஆயர் பாடியில் உள்ள பெண் பிள்ளைகள் எழுந்து நீராடி நோன்பு நோற்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள். நீ வரவில்லை என்றதும் அவர்கள் நின்று விட்டார்கள். அவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு உன்னை அழைப்பதற்காக உன் இல்லத்தின் வாசலில் வந்து நிற்கின்றோம்.
நீ கண்ணனிடத்தில் மிகவும் அன்பு உடையவள். ஆகையால் அவனால் மிகவும் விரும்பப்படும் பெண்ணல்லவா நீ! அதனால் தான் உன்னை அழைக்க வந்திருக்கிறோம்!
கண்ணன் குதிரை வடிவம் கொண்டு வந்த “கேசி” என்ற அசுரனையும், கம்ஸனால் ஏவப்பட்ட மல்லர்களையும் அழித்து, தன்னை நமக்குக் கொடுத்தவன். தேவர்களுக்கெல்லாம் தேவனான அவனைச் சென்று நாம் சேவிப்போம். அப்போது அவன் “ஆ, ஆ, அடடா, நாம் இருக்கும் இடம் தேடி இவர்களை வரச் செய்து விட்டோம்” என நம்மீது இரக்கம் கொண்டு நமக்கு அருள் செய்வான். எனவே எழுந்திருப்பாயாக!”
** ** **
gkrishna
26th December 2014, 02:17 PM
சூடி கொடுத்த சுடர் கொடியின் புகழ் பா (சுர) மாலையை சூடி கொடுக்கும் கோதுகலமுடைய 'கண்ணா' நீவிர் வாழ்க .
துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் விளக்கம் ஒன்று நினைவிற்கு வருகிறது
கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.
சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது?
திருநெல்வேலியில் சிறு வீட்டு பொங்கல் என்று ஒரு பண்டிகை கொண்டாடுவார்கள்.சிறு வீடு என்றால் சின்ன வீடு என்று விகல்பமான அர்த்தம் எடுத்து கொள்பவர்களும் (கொல்பவர்களும்) இருக்கிறார்கள் இந்த காலத்தில் :)
தை பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் போன்று தன வீட்டு சிறுவர்கள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் எல்லோரையும் அழைத்து சிறு வீட்டு பொங்கல் கொண்டாடுவார்கள் .
வீட்டின் வாசலில் பெருக்கி சுத்தம் செய்து கோலமிட்டு அதன் நடுவே சாணி பிள்ளையார் வைத்து , சாணி பிள்ளையார் தலை மீது பூசணிபூ செம்பருத்தி பூ போன்ற பூக்களை சொருகி வைத்து அதனை மாலையில் வாரட்டியாக தட்டி பத்திரமாக வைத்து இருப்பார்கள் .அவ்வாறு செய்யும் வீடின் அருகில் குருவ மண்னால் சுற்று சுவர் வைத்து அதன் நடுவில் உள்ள பகுதி வீட்டு சிறுமிகளுக்கான சிறு வீடு அந்த வீட்டு வாசல் முன்னும் சாணி பிள்ளையார் வைத்து கோலமிட்டு பூ வைத்து அந்த வராட்டியும் பத்திரமாக பாதுகாக்க படும் .பொதுவான பெரியோர் பொங்கல் முடிந்த ஒரு சில நாட்களில் அந்த சின்ன வீடு முன்னால் சின்ன பாத்திரத்தில் வீட்டு சிறுமிகளை அழைத்து பெரிய பொங்கலுக்கு எந்த அளவிலும் குறைவில்லாமல் கரும்பு மஞ்சள் போன்றவைகளுடன் சிறுமிகளால் பெரியோர் கவனிப்பில் சிறுவீட்டுபொங்கல் வைக்கப்படும் .சிறுமிகளுக்கு அவ்வாறு பொங்கல் எப்படி வைப்பது என்று விளையாட்டாக கற்று தரப்படும்
இதற்கு இன்னொரு விளக்கமும் சொல்பவர்கள் உண்டு .
புதிதாக மாடுகள் வாங்கியவர்கள் பொங்கல் பண்டிகை மாதிரி வீடுகளின் வாசலில் கோலம் போட்டு மாடுகளை மேய்க்க அனுப்புவார்கள். பொதுவாக மாடுகளை மேய்ப்பவர்கள் சிறுவர்களாக தான் இருப்பார்கள் அந்நாட்களில் .மேய்ச்சல் நன்றாக இருக்க வேண்டும் மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பிய மாடுகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் மாட்டை ஓட்டி சென்ற சிறுவர்களும் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டி கொண்டு இந்த பண்டிகை கொண்டாடுவார்கள்.
பாசுரம் நல்லதொரு மலரும் நினைவுகளாக அமைந்து விட்டது நன்றி சி கே
chinnakkannan
28th December 2014, 09:52 PM
//பாசுரம் நல்லதொரு மலரும் நினைவுகளாக அமைந்து விட்டது// வெகு அழகு கிருஷ்ணா ஜி.. சிறுவீட்டுப் பொங்கல் நான் கேள்விப்பட்டதில்லை.. நன்றி (இப்போது தான் பார்த்தேன்.)
chinnakkannan
28th December 2014, 09:53 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினேழு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஒன்பது
*
விக்கிரமாதித்தன் கதைகளில் கிளைக்கதை ஒன்று உண்டு.
ஒருவனை அவன் மிக மெல்லிய உணர்வுகள் உள்ளவனா என்பதைச் சோதிக்க படுக்கை அறையில் ஒரு சின்ன துரும்பைப் போட்டு, அதன் மீது பத்துப் பதினைந்து பஞ்சணைகள் வைத்து தலையணைகளையும் கொடுத்து உறங்கச் சொன்னார்கள். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. அவனது உடல் களைத்திருந்தது. மனம் விழித்திருந்து அடியில் உள்ள சிறு துரும்பைக் காட்டிக் கொடுத்தது.அது தந்த உறுத்தலால் அவனால் உறங்க இயலவில்லை.
இந்தப்பாடலிலும் அப்படித் தான். கண்ணனை நினைத்து ஏங்கிய வண்ணம் உடல் இளைத்து, அவன் வந்து அழைத்துச் செல்வான் என நினைத்தவாறு கண்கள் மூடினாலும் உறக்கம் வராமல் பொய்த்துயில் கொண்டிருக்கும் ஒரு பேதையை எழுப்புகிறார்கள்.
*
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் தூயவன் மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஓமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்..
*
உனது மாடம் இயற்கையாகவே தூய்மையான ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் விளக்குகள் மங்களகரமாக எரிகின்றன. மேலும் அகிற்புகையின் நறுமணம் எங்கும் கமழ்கிறது. அங்கு இருக்கும் படுக்கையில் படுத்தால் உடனே உறக்கம் வரும், அப்படிப் பட்ட படுக்கையில் படுத்துத் துயிலும் மாமன் மகளே, உன்னுடைய இல்லத்தின் மாணிக்கக் கதவுகளைத் திறப்பாயாக! மாமி, நாங்கள் இப்படி அழைக்கும் போதும் எழுந்திராமல் இருக்கும் மகளை எழுப்புவீராக!
வாசலில் வந்து காத்துக் கிடக்கும் எங்களை நோக்கி பதிலேதும் கூறாத இவள் வாய் பேச முடியாத ஊமையா, அல்லது எங்கள் வார்த்தைகள் காதில் விழாத செவிடா, அல்லது எழுந்திருக்க முடியாத அளவிற்குச் சோம்பேறித் தனம் கொண்டவளா, அல்லது எழுந்திருக்கக் கூடாது என்று யாரும் மந்திரமிட்டு விட்டார்களா.
மயங்கிக் கிடப்பவர்களைத் தண்ணீர் தெளித்து எழுப்புவதைப் போல இவளுக்குப் பிடித்தமான எம்பெருமானின் திரு நாமங்களைப் பாடியவாறு நாங்கள் இருந்தும் இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. மிகவும் ஆச்சர்யமான குணங்களையுடைய மாமாயன் என்றும், ஸ்ரீ மஹாலஷ்மிக்கும் நாயகனான மாதவன் என்றும், பரமபதமாகிய வைகுந்தத்தை உடையவன் என்றும் பல திரு நாமங்கள் நாங்கள் பாடிய போதும் எழுந்திராத மகளை எழுப்புவீராக.
*
எம்பெருமானிடத்தில் உள்ளன்பு கொண்ட அடியவர்களுடன் நமக்குள்ள உறவு நெருக்கமான விரும்பத்தக்க உறவாகும் என்பதை இப்பாடலில் உள்ள ‘மாமன் மகளே’ என்ற சொல் உணர்த்துகிறது.
**
chinnakkannan
28th December 2014, 09:54 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினெட்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பத்து
*
தீய செயல்கள் பல செய்த ஒருவன் உயிர் பிரிந்த பிறகு நேரே நரகத்துக்குச் சென்றான். நரகத்தின் வாயிலில் இருந்து உள்ளே பார்த்தால் ஒரே இருள் மற்றும் அழு குரல்கள்.
பயந்து போய் வாசலில் இருந்த வாயிற்காப்போனிடம் ‘ஐயா, நான் தீய செயல்கள் பல புரிந்திருக்கிறேன். வாஸ்தவம் தான். ஆனால் எனக்கு சொர்க்கம் செல்ல வேண்டும், ஏதாகிலும் ஒரு வழி சொல்லுங்களேன்” எனக் கெஞ்சினான்.
வாயிற்காப்போன் “ நீ ஏதாவது ஒரு சின்ன நல்லது செய்திருந்தால் சொல்” என, தீயவன் யோசித்துப் பார்க்கையில் சின்ன வயதில் ஒரு அழுகிய வாழைப்பழத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு இட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதைக்கேட்டு வாயிற்காப்போன் அந்தப்பழத்தையே சிறு கயிறாக மாற்றி “ இந்தா நீ செய்த சிறு புண்ணியமாகிய இந்தக் கயிறு சொர்க்கத்திற்குச் செல்லும். இதைப் பிடித்துக் கொண்டு நீயும் செல்” என்றான்.
தீயவனும் அந்தக் கயிற்றைப் பிடிக்க கயிறு வேகமாக மேலெழும்பியது. சற்று நேரத்தில் கயிற்றின் வேகம் மட்டுப் பட்டது. எதனால் என கீழே பார்த்தால் அவனது கால்களைப் பற்றியவாறு பலர் நரகத்திலிருந்து தொங்கிய வண்ணம் வந்து கொண்டிருந்தனர்.
இவனுக்கோ கோபம் வந்தது. “ நான் செய்த புண்ணியத்தை வைத்து இவர்கள் எப்படி என்னுடன் சொர்க்கம் வரலாம்?” என நினைத்துக் கால்களை உதறினான்.
அவ்வளவு தான்! கயிறு மறைந்தது. மற்றவருடன் அவனும் நரகத்தில் வீழ்ந்தான்.
எனில் சொர்க்கம் என்பது பகவானை, இறையைப் பிரார்த்தித்து நல்ல செயல்கள் புரிந்தாலே கிடைக்கும். இறையருள் கிட்டி விட்டாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இன்றைய பாடலில் கூறப் படுகிறது. இந்தப் பாடலில் கண்ணனைத் தன் வசத்தில் வைத்திருக்கும் கோபிகை ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
*
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மாவாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனாம் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தோற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்..
*
சகியே, கண்ணனையே பற்றிவிட்ட படியால் நீ நோற்க வேண்டிய நோன்பு எதுவும் இல்லை. எனவே எல்லா நோன்புகளும் நூற்றுக் கண்ணனை அடைந்த சொர்க்கத்தை அனுபவிக்கும் தலைவியே, நீ கதவைத் தான் திறக்கவில்லை. வாயையாவது திறந்து ஒரு வார்த்தை கூறலாகாதா.
வாசலை மூடினால் வாயையும் மூட வேண்டுமோ?
துளசிமாலையையே அணிந்திருந்ததனால் துளசியின் வாசனையை முடியில் கொண்டவன் நாராயணன். அவன் நம் “மால்”. நம் மனத்தை மந்தஹாசம் கொண்ட மதுர வதனத்துடன் மயக்குபவன்.
அவன் நம்மால் போற்றிப் புகழப்படும் பாடல்களைக் கேட்டால் வேண்டியவைகளைத் தருவான்.
அவனைப்பாடுவதை விடுத்து உறங்குகின்றாயே. பெரிய மாளிகை போன்றும், ராஜகோபுரத்தைப் போன்றும் உருண்டு திரண்ட உடலை உடைய கும்ப கர்ணனிடம் வருடத்திற்கு ஆறு மாதங்கள் குடிகொண்டிருந்த நித்திராதேவி – அவன் அமர பதவி அடைந்ததும் உன்னிடம் வந்து விட்டாளா?
கும்பகர்ணனே தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குக் கொடுத்து விட்டானா? மிகுந்த சோம்பலை உடையவளே, கண்ணன் தன் தலையில் தரிக்கும் அணிகலனைப் போன்றவள் அல்லவா நீ! தூக்கக் கலக்கத்தில் தடுமாறாமல் அப்படியே எழுந்து கதவைத்திறவாயாக.!
• * * *
கும்பகர்ணன் பற்றி ஒரு செய்தி: அவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்த போது சிவன் பிரத்யட்சமாகி “ உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அவன் மனதுள் நித்தியத்துவம் (சாகா வரம்) வேண்டும் என்று நினைத்தானாம். அவ்வாறு நினைத்தது நாரதருக்குத் தெரிந்து விட்டது. ஆகவே கும்ப கர்ணன் சிவனிடம் கேட்ட போது அவனது நாக்கு விஷமத்தால் குளறி “ நித்திரைத்துவம் வேண்டும்” என்பதாக ஆக, அவ்வண்ணமே சிவன் வரம் கொடுத்ததாகச் சொல்வார்கள்.
*
gkrishna
29th December 2014, 02:02 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பதினேழு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – ஒன்பது
*
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் தூயவன் மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஓமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்..
*
எம்பெருமானிடத்தில் உள்ளன்பு கொண்ட அடியவர்களுடன் நமக்குள்ள உறவு நெருக்கமான விரும்பத்தக்க உறவாகும் என்பதை இப்பாடலில் உள்ள ‘மாமன் மகளே’ என்ற சொல் உணர்த்துகிறது.
**
அருமையாக சொன்னீர்கள் . நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் பந்துகள்(உறவினர்கள்) தான் .அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து.
இது போன்ற சூழலை நம்மாழ்வார் திரு தொலைவில்லி மங்கலம் பாசுரத்தில் வெளிப்படுத்தி உள்ளார் . 10 பாசுரங்கள் கொண்டது.அதில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது.எல்லோருமே நம்மை ஆள்பவர்கள் தான் அதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைகபட்டார்கள். இறைவனை ஆழமாக பற்றி கொண்டவர்கள்
"இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?" என்று விளக்கம் படித்து உவகை அடைந்தது நினைவிற்கு வருகிறது சி கே
தேவர் பிரான் மற்றும் அரவிந்தலோசனன் - தொலைவில்லிமங்கலம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02070/7_2070848h.jpg
chinnakkannan
29th December 2014, 10:02 PM
//இது போன்ற சூழலை நம்மாழ்வார் திரு தொலைவில்லி மங்கலம் பாசுரத்தில் வெளிப்படுத்தி உள்ளார் . 10 பாசுரங்கள் கொண்டது.அதில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது.எல்லோருமே நம்மை ஆள்பவர்கள் தான் அதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைகபட்டார்கள். இறைவனை ஆழமாக பற்றி கொண்டவர்கள்
"இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?" என்று விளக்கம் படித்து உவகை அடைந்தது நினைவிற்கு வருகிறது சி கே// மிக்க நன்றி கிருஷ்ணாஜி.. நம்மாழ்வார் மட்டுமல்ல எல்லாப் பாசுரங்களையும் படித்து எழுத வேண்டும் என ஆசை..நாராயணன் தான் கிருபை செய்யவேண்டும்.. திருப்பாவை முடித்து நாச்சியார் திருமொழியைக் கையிலெடுக்காலாம் என நினைத்திருக்கிறேன்..திருமால் விட்ட வழி
இப்போது நான்குபாசுரங்கள் இடப் போகிறேன்.. நாளையிலிருந்து சரியாக வரும் என நினைக்கிறேன்..
chinnakkannan
29th December 2014, 10:03 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
பத்தொன்பது
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினொன்று
*
பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் – இம் மூன்றையும் பொறுத்து அழகு அமைந்திருக்கின்றது என்கிறது கீதை! அதுவும், சிறு குழந்தை, பிறந்த கன்றுக்குட்டி, குஞ்சுப்பறவைகள், குட்டி யானை போன்றவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் அழகுணர்ச்சியும் உற்சாகமும் பீறிடுகிறதே! காரணம், அவற்றின் இளமை. பருவமடைந்த பெண்களின் கண்களில் நாணமும், மடமையும் கலந்து ஒருவித அழகு தென்படும். காரணம், இளமை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
இன்றைய பாடலில் ஆயர் பாடியில் உள்ள பசுக்களெல்லாம் பெரியதாய் ஆனாலும், கண்ணன் கைப்பட்ட காரணத்தால் என்றும் மாறாத இளமையுடன் கன்று போலக் காட்சியளித்தன” என்று ஆண்டாள் கூறுகிறாள். இந்தப்பாடலில் ஊருக்கெல்லாம் செல்லப் பிள்ளையாகக் கண்ணன் இருப்பது போல ஊருக்கெல்லாம் செல்லப் பெண்ணாக இருக்கும் தோழி ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
*
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறவழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனைமயிலே போதராய்
சுற்றத் தோழிமா ரெல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குரங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
*
கண்ணனின் கைபடும் பாக்கியம் பெற்றதாலேயே, கறவைப் பசு என்ற நிலையை அடைந்தும் கன்றினைப் போலத் தோன்றந்தரும் திருவாய்ப்பாடியிலுள்ள பசுக்கள்!
அப்படிப் பட்ட பசுக்களின் கூட்டங்களில் பால் கறப்பவர்கள் ஆயர்கள், அது மட்டுமா, கண்ணனுக்குத் தீங்கு விளைவிக்கும் எதிரிகளின் வலிமையை அழிக்கும் வண்ணம் சென்று போரிடுபவர்கள். அவர்கள் போரில் புற முதுகிட மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்திற்கு அணியாக விளங்கும் பொற்கொடி போன்றவளே,
புற்றிலே இருக்கும் பாம்பு போன்ற சிறிய இடையை உடையவளே, உன் நடையழகை நாங்கள் பார்த்து மகிழ வேண்டும். உனது தோழிகளாகிய நாங்கள் எல்லோரும் உன் முற்றத்தில் வந்து நின்று கருமை நிறக் கண்ணனைப் புகழ்ந்து அவன் திரு நாமங்களைப் பாடும் போதும் பேசாமல் அசையாமல் நீ கிடக்கலாகுமா? கண்ணன் ஊருக்கே செல்லப் பிள்ளையாக இருப்பவன். அவனைப் போல நீ ஊருக்கே செல்லமல்லவா! இப்படி நாங்கள் கூறும் போதும் நீ எதற்காக உறங்குகிறாய்? எழுந்திரு! “
**
chinnakkannan
29th December 2014, 10:04 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபது
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பன்னிரண்டு
*
ஒருவனைச் செல்வந்தன் என்று எப்போது சொல்வோம்?
அவனது வீடு, வாசல், தோட்டம், வங்கிக் கணக்கு அவன் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு, ரகசிய அறைகளில் வைத்திருக்கும் எண்ணற்ற நகைகள் முதலியவற்றை வைத்தும் சொல்லலாம்.
அல்லது இப்படியும் சொல்லலாம். “ அவனுக்கென்ன, பெரும் பணக்காரனாயிற்றே. அதை அவனது வீட்டு வேலைக்காரியைப் பார்த்தாலே போதுமே! அவள் பட்டுப் புடவை சரசரக்க, செண்பக மலரொத்த அவள் மூக்கு வைர மூக்குத்தியால் பிரகாசமாக, காதுகளில் வைரத் தோடுமின்ன, தங்க வளையல்கள் கலகலக்க, அவள் வீட்டைச் சுத்தம் செய்வது அழகோ அழகு! இவளே இப்படி என்றால் இவளை வேலைக்கு வைத்திருப்பவன் எத்துணை செல்வம் வைத்திருப்பான்!
இந்தப் பாடலில் இராமபிரானுக்கு இலக்குவனைப் போல கண்ணனுக்கு இடையறாது தொண்டு செய்யும் மிகப் பெரிய செல்வத்தைப் பெற்ற பெரும் பணக்காரன் ஒருவனுடைய தங்கையை எழுப்புகிறார்கள்.
உள்ளே உறங்கும் தோழி எப்படிப் பட்டவள்? அவள் ராம பக்தையாம், அதாவது கண்ணனில் ராமனைக் காண்பவளாம், அவளது ஒரு சிந்தனை கண்ணன் தனக்கே உரியவனாக இருக்க வேண்டும் என்று ஓடினாலும் மறு சிந்தனை, கண்ணனை மற்றவர்களுடன் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும் என்று ஓடுகிறதாம்.
**
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செலன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோரெம்பாவாய்..
**
சகியே, உனது அண்ணன், கண்ணனை விட்டு ஒரு போதும் பிரியாமல் அவனுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாய் வைத்திருக்கிறான். அதனாலேயே அவனுக்கு வீட்டில் இருக்கும் பசுக்களைக் கறக்க நேரமில்லை. வீட்டில் இருக்கும் பசுக்கெளெல்லாம் தங்கள் மடி கனத்துத் தங்கி, தங்கள் இளங்கன்றுகளை நினைத்துப் பால் சொரிகின்றன.
அப்படி முற்றத்தில் பால் சொரிவதால், அந்த முற்றம் முழுக்க பால் சேறாகி விடுகிறது. இப்படிப் பாலைக் கறக்க நேரமில்லாமல் கண்ணனுக்குத் தொண்டு செய்வதாகிய பெரும் செல்வத்தைப் பெற்றவனுடைய தங்கையே, நாங்கள் உன் வாசலில் மார்கழிப் பனி தலையில் விழ, கோபம் மிகக் கொண்டு இலங்கையின் கோமானான ராவணனை அழித்த ஸ்ரீராமனை, உன் மனத்துக்கினியவனைப் பற்றிப் பாடியவண்ணம் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ இப்படி வாய் திறவாமல் இருக்கலாமா?
இனியாவது எழுந்திரு., எங்களுக்காக எழாவிட்டாலும் உனக்காக எழ வேண்டாமா? எல்லோரும் பகவானை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உனது விருப்பப்படியே அனைவரும் அறிந்து கொண்டனர்.
எனவே எழுந்திருப்பாயாக!
*
ஸ்ரீ ராமானுஜர், தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. எல்லோரும் திரு மந்திரத்தை அறிந்து மோட்சம் பெற வேண்டும் என்றபரந்த திருவுள்ளத்துடன் குருவின் ஆணையை மீறி திருமந்திரத்தை வெளியிட்டார்! அவரைப் போன்றே எல்லோரும் பகவானை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பரந்த மனத்தை உடையவள் உள்ளே படுத்துக் கொண்டிருக்கும் கோபிகை என்பர்.
**
chinnakkannan
29th December 2014, 10:04 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்தொன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதின் மூன்று
*
கடின உழைப்பு மட்டுமே இருந்தால் போதுமா? காரியங்கள் கை கூடி வெற்றிக் கனி பறிக்கும் வரை பொறுமையும் வேண்டும்! எப்படிப் பட்ட பொறுமை?
பொறுமையில் கொக்கினைக் கொண்டு இருக்க வேண்டும்.
கண்விழித்துத் தூங்கியே காத்து நிற்கும் ; வாயினில்
மண்வைத் தடைத்தாற்போல் மூடிநிற்கும் – நன்றாய்
மனதை அடக்கியே மீனுக்காய் ஏங்கும்
குணத்தை உடையது கொக்கு.
இன்றைய திருப்பாவை பாடலில். ‘ அப்படிப்பட்ட பொறுமையுடைய கொக்கின் வடிவம் தாங்கி வந்த பகாசுரன் என்ற அரக்கனை மேல் அலகையும், கீழ் அலகையும் பற்றி விளையாட்டாக க் கிள்ளி எறிந்து கொன்ற கண்ணனைப் பற்றிப் பாடலாம் வா” என தோழியை கோபியர்கள் அழைக்கிறார்கள்! ‘திங்கள்’ என்பதும் “வியாழன்” என்பதும் சந்திரனைக் குறிக்கும். “வெள்ளி”யும் “ஞாயிறு”ம் சூரியனைக் குறிக்கும். ஏன் ”சனி” “புதன்” “செவ்வாய்” போன்றவற்றை விட்டார்கள் எனத் தெரியவில்லை!
**
புள்ளின் வாய் தீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கான்
வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாள்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
*
கொக்கைப் போல் உருவம் தரித்த பகாசுரனை விளையாட்டாகக் கொன்றவன் கண்ணன். பொல்லாத அரக்கனான ராவணனை நிர்மூலம் செய்தவன் ஸ்ரீராமன். இவர்கள் இருவர் புகழையும் பாடிக்கொண்டு ஆயர் பெண்கள் அனைவரும் பாவை நோன்பு நூற்கும் இடத்திற்குச் சென்று விட்டனர். சுக்கிரன் உதித்து சந்திரன் அஸ்தமித்து விட்டது, ஐந்தறிவு படைத்த பறவைகளும் கண் விழித்து எழுந்து இனிய ஒலியை எழுப்புகின்றன. நீ இன்னும் உறங்கிக் கிடக்கலாமா?
மலரில் உறங்கும் வண்டுகளைப் போன்ற கருவிழிப் பாவைஉடைய பாவையே! நீ வாதம் செய்யலாகுமா? உன் கண்ணழகைக் கொண்டுகண்ணனை வசப்படுத்தி எங்களுக்குத் தரவேண்டாமா!
விடியற்காலையில் ஆற்று நீர் குளிர்ந்திருக்கும். அப்பொழுதே நாம் நீராடி விட வேண்டும்.. சூரியன் உதித்து உச்சிக்கு வந்தால் நீர் கொதித்துவிடும். எனில், குளிரும் போதே நீராடாமல் நீ உறங்கிக் கிடக்கலாமா.
நம்மையும் கண்ணனையும் நேற்றுவரை பிரித்து வைத்திருந்த பெரியவர்கள் நாம் நோன்பு நூற்க சம்மதித்திருக்கும் நல்ல நாள் அல்லவா இது! இந்த சில நாட்கள் கழிந்து விட்டால் நமக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமோ?
படுக்கையில் சயனித்தவாறே மனதிற்குள் கண்ணனுடைய குணங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பவளே! அந்தக் கள்ளத்தைத் தவிர்த்து எங்களோடு கலந்து அனுபவிப்பாயாக!
**
chinnakkannan
29th December 2014, 10:05 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்திரண்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினான்கு
*
மனித மனத்தைக் குரங்கு என்கிறோம். எதனால்?
எண்ணங்கள் ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பதால்.
காலையில் எழுந்தால் அலுவலகக் கவலை. மாலையில் வீடு,மனைவி, குழந்தை, விலைவாசி, நீள் தொலைக்காட்சித்தொடர் எனப் பலவித கவலைகள் சூழ்ந்து கொள்கின்றன. இறைவனைக் கண்மூடி அரைவினாடி துதிக்கும் போதும் எண்ணங்கள் பலவிதமாய் மாறுகின்றன. சிலசமயம் கவலைகள் கட்டுக்கடங்காமல் போனால் மனச் சோர்வு ஏற்படுகிறது! மனது குமைய ஆரம்பிக்கிறது.
சரி மனம் சோர்வடையும் போது என்ன செய்ய வேண்டும்?
மேல் நாடுகளில் மனச்சோர்வுக்குச் சிறந்தமருந்து சாக்லேட் என்று சொல்வார்கள். நாம் என்ன செய்யலாம்? பச்சைப் பசேலென்ற செடிகள், புதிதாகப் பூத்த மலர்களைத் தோட்டத்தில் ரசிக்கலாம். தோட்டம் இல்லை எனில், அழகிய பூக்களின் படங்களையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம்.
பூக்களுக்கெல்லாம் மனச்சோர்வா ஏற்படுகிறது? அவை பாட்டுக்குக் காலையிலும் மாலையிலும் மலர்ந்து கொண்டிருக்கின்றன! காலையில் தாமரை, மாலையில் அல்லி மலரும்!
கல்கி தனது பொன்னியின் செல்வனில்,
சோர்வு கொள்ளாதே மனமே – உன்
ஆர்வமெல்லாம் ஒரு நாள் பூரணமாகும்
காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர்
காலை மலர்தலும் கண்டனை அன்றோ
தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும்
அளிக்குலும் களிக்கும் அருணனும் உதிப்பான்” என
ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
இன்றைய திருப்பாவைப் பாடலில் பொழுது விடிந்ததற்கு அடையாளமாகப் பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன எனச் சொல்லிப் படுத்திருக்கும் தோழியை எழுப்புகிறார்கள் தோழியர்கள்.
உறங்குகின்ற தோழி எப்படிப் பட்டவள்?
எல்லாரையும் எழுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக் கொண்டிருப்பவள்!
*
“உங்கள் புழக்கடைத்தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
*
“ அம்மா, உன் வீட்டுப் புழக்கடைத் தோட்டத்தில் செங்கழு நீர்ப்பூ மலர்ந்தும், அல்லிப்பூக்கள் குவிந்தும் உள்ளனவே, இது பொழுது விடிந்ததற்கான அடையாளம் அல்லவா?
அறிவற்ற பூக்களும் குறித்த காலத்தில் தத்தம்கடமையைச் செய்கின்றன. அறிவுள்ள நீ இன்னும் எழாமல் இருக்கலாமா?
பகவானிடம்பக்தி கொண்ட முனிவர்கள் விடியலில் எழுந்து தாம் நீராடி உடைகளையும் நனைத்துத் துவைத்து உலர்த்தி, பின் அவனைத் தொழப் புறப்படுவார்கள்! அப்படி அவர்கள் துவைத்ததால் அந்த உடைகள் நீரினால் ஏற்பட்ட வெளிர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும்.. அப்படி நீர்க்காவி ஏறிய உடையை அணிந்த, வெண்மையான சுத்தம் செய்த பற்களை உடையமுனிவர்கள் கையில் கிரிதண்ட்டம் ஏந்திக் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
“ நானே உங்களை முன்னால் வந்து எழுப்புகிறேன்” என வாய் கிழியப் பேசிவிட்டு இப்போது தூங்கிக் கொண்டிருப்பவளே, எழுந்திரு! இப்படி எழுந்திருக்காமல் கிடக்கிறாயே, இவர்கள் இப்படி அழைத்தும் எழாமல் இருக்கின்றோமே என்ற வெட்கமும் உனக்கு இல்லை!
ஆயினும் உன்னுடைய நாவன்மை எங்களை உன்னிடம் இழுக்கின்றது.
அந்த நாவன்மையைக் கொண்டு எம்பெருமானையன்றோ பாட வேண்டும். சங்கு சக்கரங்களை ஏந்தியவனும் தாமரைக் கண்ணனுமாகிய கண்ண பிரானுடைய திரு நாமங்களைப் பாடி நாப் படைத்த பயன் பெற வேண்டுமல்லவா? எழுந்திருப்பாயாக!”
**
chinnakkannan
31st December 2014, 01:34 AM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து மூன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினைந்து
30.12.14
*
நாக்கு எலும்பில்லாதது. சிலசமயம் ஒருவரை ‘ஓஹோ’ என்று புகழும். அதே நபரைப் படுகுழியில் தள்ளி இகழவும் செய்யும். சிலசமயம் நாம் ஒன்று நினைத்து சில வார்த்தைகள் பேசுவோம். அதுவே மற்றவருக்கு வேறு விதமாய்ப் புரியக் கூடும்
சிலப்பதிகாரத்தில் தன் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு , சொல்லும் போது வேறு விதமாய்க் கூறி விடுகிறான் பாண்டிய மன்னன். அதனால் விளைந்தது விபரீதம்.
சினையவர் வேம்பன் தேரானாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என்
தாழ் பூங் கோதை தன்கால் சிலம்பு
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென..
தாழ்ந்த மலர் மாலையுடைய அரசமாதேவியின் சிலம்பு ‘இவன் கூறிய கள்வன் கோவலன் கையில் இருக்குமானால், அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக” எனக் கூற எண்ணியவன் அவ்வாறு கூறாமல் “அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க” எனக் கட்டளையிட்டான் பாண்டியன்.
இன்றைய திருப்பாவைப் பாடல் கோபியர்கள் ஒன்று சொல்லி தோழியை எழுப்ப, தோழி வேறு விதமாய்ப் புரிந்து கொண்டு வாதிடுவது போல் அமைந்திருக்கிறது. வீட்டிற்கு வெளியே இருக்கும் கோபியர்களுக்கும், உள்ளே இருக்கும் தோழிக்கும் நடக்கின்ற உரையாடல் இப்பாடல்.
**
”எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ!
சில்லென் றழையேன்மீர் நங்கைமீர் போதாகின்றேன்!
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயும் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலே ரெம்பாவாய்!
*
கோபியர்கள்:
அடி பெண்ணே, இளமையான கிளியின் குரல் கொண்டவளே, இன்னுமா உறங்குகிறாய்?
தோழி :
(கோபம் கொண்டு) நீங்கள் பனியில் நனைந்து நோன்பு நூற்றுக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதை இவ்வாறு “சோம்பல் மிக்க கிளி” எனச் சொல்லிக் குத்திக் காட்டலாமா, இப்படியெல்லாம் கடுஞ்சொற்கள் கூறாதீர்கள். இதோ வந்து விட்டேன்!
கோபியர்கள்:
அது சரி நாங்களா கடுஞ்சொற்கள் பேசுகிறோம்? நாங்கள் சொன்னதையெல்லாம் வேறு விதமாக மாற்றிப்பேசுகிற நீதான் வல்லவள். அதை நாங்களும் அறிவோம். நீ பெரிய வாய்த் துடுக்குள்ளவள்.
தோழி
சரி நானாகவே இருக்கட்டும், இப்போது என்ன செய்ய வேண்டும்.
கோபியர்:
ஒன்றுமில்லை. நீ உடனடியாக எழுந்து வா. அது தான் வேண்டும்!
தோழி:
நல்லது.. எல்லாரும் வந்து விட்டார்களா?
கோபியர்:
உன்னைத் தவிர எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து அவர்களை உன் விரலால் தொட்டு எண்ணிக் கொள். கம்ஸனால் ஏவப்பட்ட வலியானையைக் கொன்றவனும் விரோதிகளை பூண்டோடு அழிக்க வல்லவனும், ஆச்சர்யமானவனுமான கண்ணனைப் பாடுவோம் வா!
**
chinnakkannan
31st December 2014, 01:34 AM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து நான்கு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினாறு
31.12.14
*
ஒரு நல்ல காவல் காரனின் வேலை என்ன?
தினமும் எந் நேரமும் விழிப்புடன் இருந்து அன்னியர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். யாராவது தீய எண்ணத்துடன் வீட்டினுள் புக முயற்சித்தால் தடுக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உயிரைத் திருணமாக மதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் காக்க வேண்டும்.
சில பணக்கார வீடுகளில் வாசலுக்கு அருகில் வாயிற்காப்பவர்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.; நேர்மையாகச் சொல்லப் போனால் நம்மை, நமது உடமைகளைக் காக்கும் இந்தக் காவல்காரர்களுக்கு ஒரு மேலாளருக்குக் கொடுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதையே என் வீட்டுக் காவல்காரனிடம் ஒரு நாள் சொன்னேன். அவன் “ நிஜமாலுமே பெரிய மனுஷன் துரே நீ. அடுத்த தேர்தலில் நீ நின்றால் என் வாக்கு உனக்குத் தான்” என்றான்.
இன்றைய பாடலில் ஆண்டாள் தன் தோழியரான கோபிகைகளை அழைத்துக் கொண்டு நந்தகோபனின் அரண்மனையை அடைகிறாள். நந்தகோபனின் அரண்மனை எது? ஸ்ரீ வில்லிப் புத்தூரில் உள்ள வடபத்ர சாயிப் பெருமாள் கோவில் தான் அது! அங்குள்ள காவல்காரனிடமும் வாயிற்காப்பவனிடமும் தங்களை உள்ளே விடுமாறு வேண்டுகிறார்கள் கோபியர்கள். எதற்கு?
கண்ணனையும் அவன் குடும்பத்தையும் எழுப்ப!
**
“ நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்போனே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
**
“ கண்ண பிரான் உலகுகெல்லாம் நாயகனாய் இருப்பவன். அவனுக்கே நாயகனாய் – தந்தைப் பாசத்தால் அறிவுரைகளைக் கூறி வழி நடத்துபவன் நந்தகோப.ன். அப்படிப்பட்ட நந்தகோபனுடைய திருமாளிகையைக் காப்பவனே! நீ அடைந்த பாக்கியம் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை! உலகை எல்லாம் காப்பவனான கண்ணபிரானையே காப்பவனாக நீ திகழ்கின்றாய் அல்லவா!
இந்த வாசல் கொடியாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருகிறது. எதற்காக? நாங்கள் இரவில் இடம் தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்காக!
அப்படிப்பட்ட அழகு மிக்க வாசலைக் காப்பவனே, மாணிக்கங்களினால் இழைக்கப்பட்டிருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாயாக. நாங்கள் ஆயர்கள், அதிலும் பெண்கள். அதிலும் சிறுமிகள்! எங்கள் இளைய பருவத்தைக் கண்டாலே நாங்கள் வஞ்சனை அற்றவர்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? எங்களைச் சந்தேகப் படாமல் உள்ளே அனுமதிப்பாயாக!
இன்றைய தினம் இந்த வேளையில் வந்து பாவை நோன்புக்கு வேண்டிய பறை முதலியவைகளைப் பெற்றுக் கொள்ளும் படி கண்ணன் நேற்றே சொல்லியிருக்கிறான். கண்ண பிரானுக்குத் தொண்டு செய்வதைத் தவிர வேறு எண்ணம் எங்களிடம் இல்லை. அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடவே நாங்கள் இந்த வேளையில் இங்கு வந்திருக்கிறோம்! உன்னுடைய வாயால் மறுப்பு ஏதும் சொல்லிவிடாதே, நீயே கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுவாயாக” என்று அவர்கள் வேண்ட, அவனும் கதவைத் திறந்து அவர்கள் உள்ளே செல்ல வழி வகுத்தான்.
*
அடியவர்களுடைய அனுமதியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்பாடலில் சொல்லப் படுகிறது..
*
நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
*
aanaa
31st December 2014, 05:21 AM
**
. இதையே என் வீட்டுக் காவல்காரனிடம் ஒரு நாள் சொன்னேன். அவன் “ நிஜமாலுமே பெரிய மனுஷன் துரே நீ. அடுத்த தேர்தலில் நீ நின்றால் என் வாக்கு உனக்குத் தான்” என்றான்.
*
**
நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
*
அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
gkrishna
31st December 2014, 11:07 AM
கீசு கீசென் றெங்கு மானைச் சாத்தான் கலந்து
http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SU8FVCScU5I/AAAAAAAAF5k/oQS_AnHgF9Y/s400/tpv-07.jpg
ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான்.
6—ஆம் பாசுரத்திலும் பறவைகள் “புள்ளும் சிலம்பின காண்” என்று சொல்லப்பட்டன. இப்பாசுரத்திலும் பறவைகள் ஏன் குறிப்பிடப் படுகின்றன என்றால் ஸ்ரீ வைஷ்ணவத்தில் பறவைகளுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது கதை கதையாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.
ஆனைச் சாத்தன் என்பது வடமொழியில் ‘கஞ்ஜரிக’ என்று அழைக்கப்படும் பறவையாகும். தமிழில் அதற்கு ‘வலியன்’ என்று பெயர். அது பரத்வாஜப் பட்சி என்றழைக்கப்படும். அப்பறவையின் கண் மிக அழகாய் இருக்குமாம். இங்கு பரத்வாஜ மகரிஷியைப்போல் ஞானக்கண் என்பது உள்ளர்த்தமாகும்.
பொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு
http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SU8FWiTuDrI/AAAAAAAAF6E/Dz8oweonfmU/s400/BlackThroatedSparrow.jpg
மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!
இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் .இதற்க்கு முன் அமைந்த புள்ளும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம் என்றும் பெரியவர்கள் விளக்கம் சொல்லி கேட்டு இருக்கிறேன் சி கே
குமுதத்தின் கிசு கிசு 'கீசு கீசு ' என்பதில் இருந்து வந்ததோ ?:)
வாச நறும் குழல் ஆய்ச்சியர் - நக்கீரன் தருமி சிவபெருமான் நினைவிற்கு வருகிறாரே ? சி கே
gkrishna
31st December 2014, 11:08 AM
அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
chinnakkannan
31st December 2014, 03:51 PM
நன்றி ஆவன்னா நானா :) புத்தாண்டிலயாவது நல்ல பெயர் சொல்ல மாட்டீர்களா :)
//பொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு// இது தான் கருங்குருவி.. பழைய பாடலில் வருவதோ..
வாலாட்டிக் கருங்குருவி வலமிருந்து இடம் சென்றால்
கால் நடையாய்ச் சென்றவரும் கடிகையிலே திரும்புவரே..
//இது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் .இதற்க்கு முன் அமைந்த புள்ளும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம் என்றும் பெரியவர்கள் விளக்கம் சொல்லி கேட்டு இருக்கிறேன் சி கே // இது எனக்குத்தெரியாது கிருஷ்ணா ஜி.. நன்றி.. படங்கள் அழகு
//மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று! அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பாவை!// மிகச் சரி
//கீசு கிிசு - கிசு கிசு// கீசு கீசு என்ற் சத்தம் வெளியில் கேட்கும். கிசுகிசு என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் ஒலியெழுப்பாமல் பேசும் ஒலி அவற்றிலிருந்து தான் கிசுகிசு - வதந்தி வந்திருக்கும் என நினைக்கிறேன் :)
நன்றிங்க்ணா.:)
chinnakkannan
31st December 2014, 09:45 PM
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து ஐந்து
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினேழு
01.01.15
*
உறக்கத்திலிருந்து விடியற்காலை எழுந்திருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடிகாலை எழுகின்ற வழக்கம் உள்ளவர்களுக்குக் கவலை ஏதும் இல்லை. (யார்ப்பா அது?), தானாகவே விழிப்பு வந்து விடும். அப்படி வழக்கம் ஏதும் இல்லை எனில் என்ன செய்யலாம்? கடிகாரத்தில் நேரம் வைத்து விடிகாலை மணி அடிக்க வைக்கலாம். தொலைபேசியில் சொல்லி காலை எழுப்பும்படி சொல்லலாம். மனைவியிடமும் சொல்லலாம். “மறக்காம எழுப்புடீ இவளே! காலையில் ஒரு வேலை இருக்கு, கண்டிப்பாகப் போயாக வேண்டும். நான் எழுந்திருக்கவில்லை எனில் தலையில் தண்ணீர் ஊற்றினாலும் பரவாயில்லை” என்று சொன்னால் விடிகாலையில் கண்டிப்பாக அபிஷேகம் நடக்கும்!
பள்ளியில் +2 படித்துக் கொண்டிருந்த சமயம்; மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முதல்வகுப்பு தமிழ். கண்கள் தானாகவே மூடி மூடி விழுந்தன. வகுப்பாசிரியர் வரச் சற்று தாமதமாயிற்று. அருகில் இருந்த பையனிடம், “ஆசிரியர் வந்த உடன் என்னை எழுப்பு” என்று சொல்லிப் பலகையில் சாய்ந்து கொண்டேன். உடனே அவன் அவனுக்கு அருகில் இருந்தவனிடம் “ டேய், ஆசிரியர் வந்த உடன் எழுப்பு. இவனை எழுப்பணும்!” என்று சொல்லி அவன் பலகையில் சாய்ந்து கொண்டான். எனக்கு உறக்கம் போயிற்று!
இன்றைய அம்பரமே என்கிற பாடலில் பள்ளியறையில் சயனித்திருக்கும் நந்த கோபர், யசோதை, கண்ணபிரான், பலராமன் ஆகிய நால்வரையும் கோபிகைகள் எழுப்புகிறார்கள்.
**
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரமூஉத்தோங்கி உலகளந்த
சம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
*
எல்லோருக்கும் ஆடைகளையும் தண்ணீரையும் அன்னத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் நந்த கோபாலா, எழுந்திராய்! மற்றவர்களுக்கெல்லாம் வேண்டுவதெல்லாம் கொடுக்கின்ற நீங்கள் எங்களுக்கு உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாமுமான கண்ணபிரானைத் தரவேண்டாமோ?
வஞ்சிக் கொடியின் கொம்பு போன்ற, பெண்களுக்கெல்லாம் கொழுந்தைப் போன்ற யசோதையே! எங்களுக்கு ஒரு வருத்தம் உண்டானால் முதலில் வருந்துவது நீ தானன்றோ! எங்கள் குலத்திற்கு விளக்குப் போல வழி காட்டுபவளே, நீ உணர வேண்டும்!
ஆகாயம் அளாவ உயர்ந்த திருவடிகளால் உலகை அளந்து கொண்ட தேவ தேவனே, கண்ணனே, உறங்காமல் எழுந்திருப்பாயாக! வாமன அவதாரத்தில் பிறருக்காக ஒரு யாசகனாய்ச் சென்று உதவி செய்தாயே, நாங்கள் உன்னை யாசிக்கின்ற போதும் அருள் புரியாமல் இருக்கலாமா?
கண்ணன் பிறப்பதற்கு முன்னே பொன்னிறக்கால்கள் மின்னிடப்பிறந்த பலராமனே, நீயும் உன் தம்பி கண்ணனும் சீக்கிரமாக எழுந்திருங்கள்!
**
aanaa
1st January 2015, 03:56 AM
பாசுரம் பாடி வா தென்றலே…
நீயும் உன் தம்பி கண்ணனும் சீக்கிரமாக எழுந்திருங்கள்!
**முட்டாள் தனமான ஒரு சின்ன சந்தேகம்
ஆமா அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது எம்மைக் காப்பாற்றுபவர் யார்?
ஏன் இந்த ஐதீகம்?
chinnakkannan
1st January 2015, 10:17 AM
ஆமா அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது எம்மைக் காப்பாற்றுபவர் யார்?
ஏன் இந்த ஐதீகம்?// aanaa.. நாளைக்குப் பாட்டுல ஆன்ஸர் இருக்கே :)
chinnakkannan
1st January 2015, 08:56 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து ஆறு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினெட்டு
02.01.15
கோகுலத்தில் ஒரு நாள் நல்ல மழை. யமுனை ஆற்றின் இக்கரையில் தம் பரிவாரங்களுடன் வந்திருந்த கோபியர்களினால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முற்றும் நனைந்து விட்டார்கள். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக் கண்ணனைப் பிரார்த்தித்த வண்ணம் நின்றிருந்தார்கள்.
அப்போது வியாச முனிவர் அங்கு வந்தார். கோபியர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்தார்.
“கோபியரே, எனக்குப் பசிக்கிறது. எனக்கு ருசிகரமாய் அன்னம் சமைத்துக் கொடுத்தீர்களானால் உண்டு விட்டு உங்களுக்கு ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்கிறேன்.” என்றார்.
கோபியரும் ஒரு நிழலிடத்தில் நெருப்பு மூட்டி சமையல் செய்து அவருக்குக் கொடுக்க, நன்றாக வாழை இலையில் வயிறு நிரம்ப சாப்பிட்டார் வியாசர். பின் யமுனையாற்றின் கரையில் நின்று “ ஏ யமுனையே, நான் உண்ணாமல் உறங்காமல் இறைவனையே தியானம் செய்வது உண்மை என்றால் எங்களுக்கு வழி விடு!” என்று கேட்டார். யமுனையும் வழி விட்டது!
கோபியர்கள் ஆச்சர்யம் கொண்டு எதுவும் பேசாமல் யமுனை விட்ட வழியில் நடந்து ஆற்றைக் கடந்து அக்கரைக்கு வந்தார்கள். வந்தவுடன் வியாசரிடம்,” ஸ்வாமி. பெரியவர்கள் என்றால் மட்டும் பொய் சொல்லலாம் போலிருக்கிறது” என்றார்கள். வியாஸர்., “ நான் என்ன பொய் சொன்னேன்?”
“இப்பொழுது யமுனையிடம் சொன்னது என்னவாம்? நன்றாக உண்டு விட்டு, நான் உண்ணாமல் இருக்கிறேன் என்று சொன்னீர்களே இது நியாயமா?”
“அடி பெண்களே, நான் எங்கே உண்டேன்? என்னுள் அரூபமாக மறைந்திருக்கின்ற “அந்தர்யாமி” எனப்படும் இறையன்றோ உண்டான்!” என்றாராம் வியாஸர். பகவானைத் தனக்குள்ளே வைத்திருக்கிறாராம் அவர். அவர் செய்வது எல்லாம் அவனுக்கே போய்ச் சேர்கிறது என்பது கருத்து.
இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். நப்பின்னையும் ராதையும் ஒன்று எனச் சொல்பவரும் உண்டு. நப்பின்னை ராதை அம்சம் என்று சொல்பவரும் உண்டு. கோகுலத்தில் ராதை. ஸ்ரீவில்லிப் புத்தூரில் நப்பின்னை. – கண்ணனுடைய மனைவி,
கண்ணனையே நேசித்து அவனையே தன்னுள் கொள்ளும் பாக்கியம் பெற்றவள், பல ராமனை எழுப்பிய பிறகும் கண்ணன் எழுந்திராமல் உறங்குவதால் நப்பின்னையையே புருஷகாரமாகப் பற்றி அவளை எழுப்புகிறார்கள்.
**
உந்து மதகளிறனோடாத் தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி யழைத்தனகாண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
**
“எப்படிப் பற்ற வலிமை பெற்றவன் நந்த கோபன்?
மதங்கொண்டு வருகின்ற யானையை உந்தித் தள்ளும் அளவுக்கு வல்லவன்! பகைவரைப் போரில் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் அளவுக்கு மிக்க தோள் வலிமை பெற்றவன்!
அப்படிப்பட்ட நந்த கோபனின் மருமகளே, நப்பின்னையே, உன் அழகிய கருங்கூந்தலில் எழுகின்ற நறுமணம் நீ இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடுகி’றதே. உள்ளே வெள்ளமெனப் பரவியிருக்கிற அந்த மணத்தை நாங்களும் அனுபவிக்கும் படி கதவைத் திறந்து விடுவோமாக! எங்கும் கோழிகள் எழுந்து எங்களைப் போலவே உன் வாசலில் வந்து நின்று கூவி அழைக்கின்றனவே! உன் காதில் விழவில்லையா? பொழுது விடிந்ததற்கு இந்த அடையாளங்கள் போதாதா? குயிலினங்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதவிக் கொடியின் பந்தல்களின் மேல் படுத்திருந்தும் விடிந்ததற்கு அடையாளமாகக் கூவுகின்றது உன் காதில் விழவில்லையா? இனியும் நீ உறங்கலாமா?
கண்ணனுடன் சுகமாய் நிறைவாய் விளையாடிய பந்து விளையாட்டில் வெற்றி கொண்டு, ஒரு கையில் பந்தையும், மறு கையில் கண்ணனையும் அணைத்துக் கொண்டு படுத்திருப்பவளே! நீ அவனுடன் ஊடல் கொள்ளும் போது உன்னுடைய கணவனான கண்ணனின் தோல்வியைப் பற்றிப் பாடவே நாங்கள் வந்தோம்! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கையால், அழகிய வளைகள் ஒலிக்க வந்து, உன் காரியம் செய்வதாக மகிழ்ந்து நீயே கதவைத் திறக்க வேண்டும்.
**
எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே பற்ற வேண்டும் என்ற முக்கியமான கோட்பாடு இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.
ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சார்யர் பெரிய நம்பிகள், ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் திருப்பாவையைப் பாடிக் கொண்டு அவரது திரு மாளிகை வாயிலில் நின்ற போது பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் கீரார் என்னும் நங்கை தனது கைவளைகள் கலகலக்க வந்து கதவைத் திறக்க ஸ்ரீ ராமானுஜரின் கண்களுக்கு அவள் நப்பின்னைப் பிராட்டியாகவே தென்பட்டாளாம், அவர் அப்படியே விழுந்து அவளை வணங்கினாராம். எனில், ராமானுஜருக்கு மிகவும் உகந்த பாசுரம் இது எனக் கூறப் படுகிறது.
**
chinnakkannan
1st January 2015, 08:57 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து ஆறு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினெட்டு
02.01.15
கோகுலத்தில் ஒரு நாள் நல்ல மழை. யமுனை ஆற்றின் இக்கரையில் தம் பரிவாரங்களுடன் வந்திருந்த கோபியர்களினால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முற்றும் நனைந்து விட்டார்கள். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துக் கண்ணனைப் பிரார்த்தித்த வண்ணம் நின்றிருந்தார்கள்.
அப்போது வியாச முனிவர் அங்கு வந்தார். கோபியர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்தார்.
“கோபியரே, எனக்குப் பசிக்கிறது. எனக்கு ருசிகரமாய் அன்னம் சமைத்துக் கொடுத்தீர்களானால் உண்டு விட்டு உங்களுக்கு ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்கிறேன்.” என்றார்.
கோபியரும் ஒரு நிழலிடத்தில் நெருப்பு மூட்டி சமையல் செய்து அவருக்குக் கொடுக்க, நன்றாக வாழை இலையில் வயிறு நிரம்ப சாப்பிட்டார் வியாசர். பின் யமுனையாற்றின் கரையில் நின்று “ ஏ யமுனையே, நான் உண்ணாமல் உறங்காமல் இறைவனையே தியானம் செய்வது உண்மை என்றால் எங்களுக்கு வழி விடு!” என்று கேட்டார். யமுனையும் வழி விட்டது!
கோபியர்கள் ஆச்சர்யம் கொண்டு எதுவும் பேசாமல் யமுனை விட்ட வழியில் நடந்து ஆற்றைக் கடந்து அக்கரைக்கு வந்தார்கள். வந்தவுடன் வியாசரிடம்,” ஸ்வாமி. பெரியவர்கள் என்றால் மட்டும் பொய் சொல்லலாம் போலிருக்கிறது” என்றார்கள். வியாஸர்., “ நான் என்ன பொய் சொன்னேன்?”
“இப்பொழுது யமுனையிடம் சொன்னது என்னவாம்? நன்றாக உண்டு விட்டு, நான் உண்ணாமல் இருக்கிறேன் என்று சொன்னீர்களே இது நியாயமா?”
“அடி பெண்களே, நான் எங்கே உண்டேன்? என்னுள் அரூபமாக மறைந்திருக்கின்ற “அந்தர்யாமி” எனப்படும் இறையன்றோ உண்டான்!” என்றாராம் வியாஸர். பகவானைத் தனக்குள்ளே வைத்திருக்கிறாராம் அவர். அவர் செய்வது எல்லாம் அவனுக்கே போய்ச் சேர்கிறது என்பது கருத்து.
இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். நப்பின்னையும் ராதையும் ஒன்று எனச் சொல்பவரும் உண்டு. நப்பின்னை ராதை அம்சம் என்று சொல்பவரும் உண்டு. கோகுலத்தில் ராதை. ஸ்ரீவில்லிப் புத்தூரில் நப்பின்னை. – கண்ணனுடைய மனைவி,
கண்ணனையே நேசித்து அவனையே தன்னுள் கொள்ளும் பாக்கியம் பெற்றவள், பல ராமனை எழுப்பிய பிறகும் கண்ணன் எழுந்திராமல் உறங்குவதால் நப்பின்னையையே புருஷகாரமாகப் பற்றி அவளை எழுப்புகிறார்கள்.
**
உந்து மதகளிறனோடாத் தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி யழைத்தனகாண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
**
“எப்படிப் பற்ற வலிமை பெற்றவன் நந்த கோபன்?
மதங்கொண்டு வருகின்ற யானையை உந்தித் தள்ளும் அளவுக்கு வல்லவன்! பகைவரைப் போரில் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் அளவுக்கு மிக்க தோள் வலிமை பெற்றவன்!
அப்படிப்பட்ட நந்த கோபனின் மருமகளே, நப்பின்னையே, உன் அழகிய கருங்கூந்தலில் எழுகின்ற நறுமணம் நீ இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடுகி’றதே. உள்ளே வெள்ளமெனப் பரவியிருக்கிற அந்த மணத்தை நாங்களும் அனுபவிக்கும் படி கதவைத் திறந்து விடுவோமாக! எங்கும் கோழிகள் எழுந்து எங்களைப் போலவே உன் வாசலில் வந்து நின்று கூவி அழைக்கின்றனவே! உன் காதில் விழவில்லையா? பொழுது விடிந்ததற்கு இந்த அடையாளங்கள் போதாதா? குயிலினங்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதவிக் கொடியின் பந்தல்களின் மேல் படுத்திருந்தும் விடிந்ததற்கு அடையாளமாகக் கூவுகின்றது உன் காதில் விழவில்லையா? இனியும் நீ உறங்கலாமா?
கண்ணனுடன் சுகமாய் நிறைவாய் விளையாடிய பந்து விளையாட்டில் வெற்றி கொண்டு, ஒரு கையில் பந்தையும், மறு கையில் கண்ணனையும் அணைத்துக் கொண்டு படுத்திருப்பவளே! நீ அவனுடன் ஊடல் கொள்ளும் போது உன்னுடைய கணவனான கண்ணனின் தோல்வியைப் பற்றிப் பாடவே நாங்கள் வந்தோம்! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கையால், அழகிய வளைகள் ஒலிக்க வந்து, உன் காரியம் செய்வதாக மகிழ்ந்து நீயே கதவைத் திறக்க வேண்டும்.
**
எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே பற்ற வேண்டும் என்ற முக்கியமான கோட்பாடு இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.
ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சார்யர் பெரிய நம்பிகள், ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் திருப்பாவையைப் பாடிக் கொண்டு அவரது திரு மாளிகை வாயிலில் நின்ற போது பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் கீரார் என்னும் நங்கை தனது கைவளைகள் கலகலக்க வந்து கதவைத் திறக்க ஸ்ரீ ராமானுஜரின் கண்களுக்கு அவள் நப்பின்னைப் பிராட்டியாகவே தென்பட்டாளாம், அவர் அப்படியே விழுந்து அவளை வணங்கினாராம். எனில், ராமானுஜருக்கு மிகவும் உகந்த பாசுரம் இது எனக் கூறப் படுகிறது.
**
gkrishna
2nd January 2015, 10:48 AM
கந்தம் கமழும் குழலீ
நண்பர் சி கே
இன்று காலை இந்த வரிக்கு திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ஓர் விளக்கம் கூறினார் . 'பெண்களுக்கு இயற்கையில் மனம் உண்டா ' என்று பாண்டிய நாட்டில் நக்கீரன் தருமி சிவபெருமான் இடையே நடைபெற்ற திருவிளையாடல் பற்றி குறிப்பிட்டு பார்வதி தேவி லக்ஷ்மியிடம் மனம் வருந்தி முறையிட அந்த குறை போக்க லக்ஷ்மி தேவியே ஆண்டாளாக அதே பாண்டிய நாட்டில் (ஸ்ரீ வில்லி புத்தூர்) அவதரித்து நக்கீரனின் கூற்றை மறுக்கவே இந்த வரியை எழுதியிருப்பதாக தோன்றுகிறது. பெண்களுக்கு கூந்தலில் இயற்கையிலே மணம் உண்டு .(It is natural fragrance)
"வாச நறுகுழல் ஆச்சியர்" என்ற வரியின் மூலம் பூலோக பெண்களுக்கும் கூந்தலில் மணம் உண்டு ,"கந்தம் கமழும் குழலி" என்பதன் மூலம் நப்பின்னைக்கும் (அதாவது தேவலோக பெண்களுக்கும் ) கூந்தலில் மணம் உண்டு என்றும் கூறினார். மேலும் நீங்கள் சொன்னது போல் திருப்பாவை ஜீயர் ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரத்தை மனனம் செய்து கொண்டே அவரது குரு பெரியநம்பி இல்லத்தின் கதவை தட்ட அவரது மகள் அத்துழாய் (என்ன ஒரு பெயர்) கதவை திறக்க அதனால் ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை அடைந்ததாகவும் அது கண்டு அத்துழாய் திகைப்புற்று தனது தந்தையிடம் வினவ அதற்கு குரு பெரியநம்பி எனது குரு ஸ்ரீ ஆளவந்தார் அவர்களே மூர்ச்சை அடைந்த போது எனது சிஷ்யர் ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை அடைவதில் என்ன ஆச்சர்யம் ! என்னே எம்பெருமானின் திருவிளையாடல் என்று விளக்கமும் சொன்னார்
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன்
என்பதற்கு . எவ்வளவு பெரிய பொறுப்புகள் வந்தாலும் அதை கண்டு ஆஞ்சாது அதை எதிர்த்து என்று தன தோளிலே அதை தாங்கும் நந்தகோபாலன் என்று management principle ஒன்று இந்த பாசுரத்தின் ஆரம்பத்தில் மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது என்று ஒரு விளக்கம் படித்தேன்
ஆன்மிக அனுபவத்தில் திளைக்க வைத்ததற்கு மிக்க நன்றி
http://www.aaseyathirai.com/wp-content/uploads/2014/01/18-Unthu-Matha-1.gifhttp://www.aaseyathirai.com/wp-content/uploads/2014/01/18-Unthu-Matha-2.jpghttp://www.aaseyathirai.com/wp-content/uploads/2014/01/18-Unthu-Matha-5.jpg
chinnakkannan
3rd January 2015, 10:17 AM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து ஏழு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பத்தொன்பது
03.01.15
படுக்கை அறை என்பது எப்படி இருக்க வேண்டும்?
காலை முதல் மாலை வரை ஒரு மனிதன் வேலை செய்து உடல் களைத்து வீட்டிற்கு வந்தால் இரவு உணவை முடித்துக் கொண்டதுமே கண்கள் செருக ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் அழகான கட்டில், பஞ்சணையில் படுத்து ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் எனப் படுத்துக் கொண்டு மெல்லிய விளக்கின் ஒளிபடர்ந்திருக்க உறங்குவது சிற்றின்பத்திலேயே பெரிய சுகம் என்பர்.
பாரதி தாசன் தனது குடும்ப விளக்கில்,
“சரக்கொன்றை தொங்கவிட்ட பந்தலின் கீழ்த்
தனிச்சிங்கக் கால் நான்கு தாங்கும் கட்டில்
இருக்கின்ற மெத்தை தலையணைகள் தட்டி
இருவீதி மணமடிக்கும் சந்தனத்தைக்
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்… “
என்று தொடர்கிறார்.
சரி, உடல் களைத்திருக்கும் போது படுக்கையறையில் உறங்கலாம். மனது களைத்தால் என்ன செய்ய?
அதற்காகத் தான் எப்போதும் கோவிலுக்குப் போக வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.
எதற்காக க் கோவிலுக்குச் செல்ல வேண்டும்? ஒவ்வொரு மனத்துள்ளும் இறைவன் இருக்கின்றானே! பின் ஏன் குளித்து நெற்றியில் அடையாளமிட்டு பயபக்தியுடன் செல்ல வேண்டும்? எனக் கேட்கலாம்.
நமக்கு நல்லது கொடு என்று கேட்பதற்குத் தினம் சென்று தொழுது வந்தால், அந்த நல்லது நமக்கு நடக்கும் போது அது நம்மால்கிடைத்தது என்ற கர்வம் இல்லாமல் இருக்கும். கெட்டது நடந்தால், தினம் கோவில் செல்லும் பழக்கத்தில் அன்றும் சென்று “ இறையே ஏன் சோதிக்கிறாய்? எப்படி இதிலிருந்து மீள்வேன்?” என அழுகை வரும். அவ்வாறு மனம் விட்டு நாம் துக்கப் படுவதால் மனதில் அமைதி வந்து எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்வோம். இதுவும் கடவுள் கொடுத்தது என்று தெம்பு வரும். அப்படி மனது களைத்துப் படுக்கிற இடம் கோவில்! (பாலகுமாரன் ஒரு நாவலில் சொன்னதைச் சற்று மாற்றியிருக்கிறேன்)
இன்றைய பாடலில் சயன அறை வரை செல்லும் கோபிகா ரத்தினங்கள் – கண்ணனும் நப்பின்னையும் படுக்கை அறையில் சயனித்து இருக்கிறார்கள். ஒரு மெல்லிய திரை சுற்றிலும் மூடியிருக்க அவர்கள் துயில்வது நிழற்படமாகத் தெரிகிறது கோபியருக்கு – இருவரையும் எழுப்புகிறார்கள்.
**
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வத்துக் கிடத மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேனும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமென்று தகவேலோ ரெம்பாவாய்.
**
உயரமான குத்து விளக்கில் தீபங்கள் மெல்லிய ஒளியைத் தந்து கொண்டிருக்கின்றன. அங்கே யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் கொத்துக் கொத்தான பூக்களைச் சூடிய நப்பின்னையின் அழகிய கூந்தல் கலைந்து, பூக்கள் சிதறிக் கிடக்க அவளது மார்பகங்களில் நெஞ்சம் பதியுமாறு அணைத்துப் படுத்திருக்கும் கண்ணனே! வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?
அழகாகக் கண்களில் மை தீட்டியிருப்பவளே! நப்பின்னைப் பிராட்டியே, நீ உனது கண்ணனை எழுந்திருக்கவே விட மாட்டாயா? எங்களுடன் நீ கண்ணனை அனுப்பினாலும் ஒன்றும் ஆபத்து வந்து விடாது! எள் கூட நுழையா வண்ணம் அவனை இறுக அணைத்தவாறு படுத்திருக்கின்றாயே, அவனது பிரிவை உன்னால் பொறுக்க முடியாதோ?
ஆனால் நீ அப்படிப் பட்டவள் அல்லவே, உனக்குச் சுய நலம் என்பது எதுவுமே கிடையாதே, இது உன்னுடைய தத்துவம் தானே? எனில் அவனைத் தழுவுவதை விட்டு எழுந்திரு, அவனையும் எழுப்பு!”
**
chinnakkannan
3rd January 2015, 10:18 AM
கிருஷ்ணாஜி.. நன்றி உங்களதுபின்னூட்டத்திற்கு+ அழகிய படங்களுக்கும். நேற்று தமிழ் ஃபாண்ட் கோவித்துக் கொண்டதால் உடன் இட முடியவில்லை..!
chinnakkannan
3rd January 2015, 10:36 AM
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து எட்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபது
04.01.15
கருணை என்பது என்ன?
தெருவில் பசியால் சோர்ந்து போயிருக்கும் ஒரு நாயைப் பார்க்கிறோம். பாவமாய் இருக்கிறது. வீட்டினுள் சென்று ரொட்டி எடுத்து வந்து அதற்குப் போடுகிறோம். அதற்கு ப் பெயர் கருணை! அது அதைச் சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டினால், அதற்குப் பெயர் பாசம்! மறு நாளும் நம் வீட்டின் வாசலில் வந்து நிற்கும். ரொட்டி போடவில்லை எனில் பற்களைக் காட்டி “வள்” என்று குலைக்கும். அதற்குப் பெயர் கோபம். ஒரு பிச்சைக்காரனைப் பார்க்கிறோம். அவன் மீது பரிதாபப் பட்டு பத்து பைசா போட்டுவிட்டு அவன் திட்டுவதற்குள் ஓடி வந்து விடுகிறோம்! இதற்குப் பெயர் பயம் கலந்த கருணை!
கிழங்கில் கூட கருணை இருக்கிறது. ( மசியல் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்!) மனிதனிடமும் அவ்வப்போது கருணை தென்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.- பூகம்ப நிதி, வெள்ள நிவாரண நிதிக்காகக் குவியும் செல்வங்களைப்பார்க்கும் போது.
இன்றைய பாடலிலும் மீண்டும்கருணைக் கடலான கண்ணனையும் நப்பின்னையையும் சேர்த்து எழுப்புகிறார்கள்.
**
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிக்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறனுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்கும்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீ ராட்டேலோ ரெம்பாவாய்
*
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வருவதற்கு முன்னமேயே சென்று அவர்களது நடுக்கத்தைப் போக்கும் அருளும், பலமும் பெற்றவனே, கண்ணா! உனது பலமே எங்கள் பலம்! அது இருப்பது எங்களைக் காப்பதற்குத் தானே!
அடியவர்கள் விஷயத்தில் நேர்மை உடையவன் என உனைச் சொல்வார்கள். உனது நேர்மை மிக நன்றாக இருக்கிறது. எங்களை வரும்படிச் சொல்லிவிட்டுப் பேசாமல் படுத்துக் கிடப்பது தான் உனது நேர்மையோ?
உன்னுடைய பலத்தை உன்னையே எண்ணி நிற்கும் அபலைகளான எங்களிடமா காட்டுவது? எதிரிகளை பயம் என்னும் நெருப்பால் கொளுத்துபவனே. இப்போது எங்களுக்காக விரோதிகல் மீது அம்பு மற்றும் ஆயுதங்கள் எறிந்து எதுவும் செய்ய வேண்டாம், நீ துயில் எழுகின்ற காட்சியைக் காட்டினாலே எங்களுக்குப் போதும்!
ஸ்வர்ண கலசங்கள் போன்ற மார்புகளையும், சிவந்த வாயையும் நுண்ணிய இடையையும் கொண்ட நப்பின்னைப் பிராட்டியே, கண்ணனுடைய கோபத்தை அகற்றி எங்களை அவனது திருவடிகளிலே சேர்ப்பதற்கு அன்றோ உனது அழகுக்கே இலக்கணம் வைத்த அழகு பயன்பட வேண்டும்? இந்தக் கிருஷ்ணாவதாரத்தில் திருமகளின் இடத்தில் இருந்து எங்களைக் கண்ணனிடம் சேர்க்க வேண்டியது உனது பொறுப்பு அல்லவா? பெண்ணாய்ப் பிறந்தவள் நீ! நீ எங்களது வருத்தத்தை உணர்ந்து எழுந்து எங்களை உயிர் தரிக்கச் செய்வாயாக!
உனக்குத் தெரியுமா, கண்ணனுக்கு எங்களிடம் கண்ணாடி காண்பிப்பது மிகப் பிடிக்கும். அதைப்பார்த்து நாங்கள் தலை வாரிக் கொள்வோம். அவ்வப்போது பனை விசிறியால் விசிறி மென்காற்றை எங்களது உடலில் வருட வைத்துச் சிலிர்க்க வைப்பான்! எனில், நோன்புக்குத் தேவையான இந்தப் பொருட்களையும்கொடுத்து, உனக்கு வசப்பட்டிருக்கும் கண்ணனையும் தந்து உங்கள் இருவருடைய கருணை வெள்ளத்தால் எங்களை நீராட்டுவாயாக”
**
உட்கருத்து: ஒருகுழந்தை எப்படித் தாய் மூலமாகவே தகப்பனை அணுகுகிறதோ – அது போலப்பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்பது இந்தப்பாடலில் உணர்த்தப் படுகிறது..
**
chinnakkannan
5th January 2015, 12:13 AM
**
பாசுரம் பாடி வா தென்றலே
இருபத்து ஒன்பது
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்தொன்று
05.01.15
*
குழந்தை தத்தித் தத்தித் தவழ்ந்து போய் அம்மாவைப் பிடித்து நின்று மழலையில் “ம்மா, எனக்குப் பசிக்கிறது “ என்று சொன்னால் தாய் என்ன செய்வாள்?
வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தால் அதை அப்படியே நிறுத்தி விடுவாள். சலவை இயந்திரத்தில் துணிகள் போட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடுவாள். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடனே கை கழுவி விடுவாள், எழுந்து கிண்ணத்தில் “ரசம் மம்மு’ பிசைந்து குழந்தைக்கு ஊட்டுவாள்! (இந்தக்காலத்தில் எந்தக் குழந்தை “பசிக்கிறது” எனச் சொல்கிறது? அவ்வப்போது இனிப்புப் பசி, குளிர்பானப்பசி, இத்தாலிய தோசைப் பசி என்று தான் அதற்கு வருகின்றன!)
குழந்தை கண்ணனுக்கும் ஒரு நாள் பசித்தது. அம்மா யசோதையிடம் கேட்டான். பொறுப்பாளா அவள்? பானையில் தயிர் கடைவதை நிறுத்தி விட்டு சமையலறைக்குச் சென்றாள். அதற்குள் பொறுமையில்லாமல் கண்ணனுக்கோ மேலும் பசி. சின்னதாய்க் கோபம் கொண்டு தயிர்ப்பானையை உடைத்து விட்டான்.
தயிர் தரையில் ஓடுவதைப் பார்த்தவுடன் பசி போய் பயம் வந்துவிட்டது. யசோதை வெளியில் வந்து பார்த்துக் கோபம் கொண்டாள். “ வா வா உன்னை என்ன செய்கிறேன் பார்!” எனச் சொல்லி கையில் கோலெடுத்து அடிக்க வர கண்ணன் ஓடினான். ஓடினான்., தெரு முனைக்கே ஓடினான். ஓடி அங்கிருந்த ததிபாண்டன் என்னும் ஆயன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கிருந்த ததிபாண்டனிடம், “ஐயா. என்னை அடிக்க என் தாய் வருகிறாள்., என்னை ஒளித்து வையுங்கள்” எனக்கேட்க ததி பாண்டனும் குட்டிக் கண்ணனை உட்கார வைத்து அவன் மீது ஒரு பானையைப் போட்டு அதன் மீது தான் உட்கார்ந்து கொண்டான்.
யசோதை வந்துகேட்டதும் கண்ணன் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டான்.
“ஹை அம்மா போயாச்சு, ஜாலி” என்ற கண்ணன், “ததி பாண்டா. என்னை வெளியில் விடு” என்றான். ததிபாண்டனுக்கா தெரியாது? அவன் ஞானியாயிற்றே, உள்ளே இருப்பவன் எம்பெருமான் ஆயிற்றே! “ம்ஹூம், முடியாது, எனக்கு நீ வரம் தரவேண்டும் கண்ணா, அப்போது தான் உன்னை விடுவேன் “ என்றான்.
“என்ன வரம் வேண்டும் உனக்கு?”
“எனக்கு மோட்சம் வேண்டும்”
“தந்தேன்” என்றான் கண்ணன். யோசித்தான் ததிபாண்டன். “எனக்கு மட்டுமல்ல. நீ ஒளிந்திருந்தாயே இந்தப் பானைக்கும் மோட்சம் வேண்டும்!” எனக் கேட்க, கண்ணன் சரியென்று சொல்ல, ததிபாண்டனும் அந்த உயிரில்லாத பானையும் அங்கேயே மோட்சம் பெற்றார்கள்!
ததிபாண்டன் செய்த புண்ணியம் தான் என்னே! உலகத்தையே அடக்குகின்ற கண்ண பரமாத்மாவை ஒரு நாழிகைப் போது தனது பானைக்குள் அடக்கி வைத்தானே. மிகுந்த ஞானவான், பரமாத்மா தன் இல்லம் தேடி வந்ததை அறிந்து அவர் கால்களைப் பிடித்துக் கொண்டவன். அவனுக்கு அருள் செய்த கண்ணன் எப்படிப் பட்டவன்?
”சிந்திக்க நெஞ்சில்லை வாயில்லை
நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய்யில்லை வந்து
இருபோதும் மொய்ம்மாமலர்பூம்
பந்தித்தடம் பொழில் சூழ் அரங்கா!
ததிபாண்டவன் உன்னைச்
சந்தித்த நாள் முத்தி பெற்றதென்னோ
தயிர்த் தாழியுமே..
என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தாம் எழுதிய பாசுரத்தில் குறிப்பிடுகிறார். கண்ணனைச் சந்தித்ததால் ததிபாண்டவன் மட்டுமின்றி அவனது தயிர்ப்பானையுமன்றோ மோட்சம் பெற்றது!
இன்றையபாடலில் நப்பின்னைப் பிராட்டியும் ஆயப் பெண்களுமாகச் சேர்ந்து கண்ணனை எழுப்புகிறார்கள்.
**
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய்ப் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்”
**
ஆயர் பாடியில் உள்ள பசுக்கள் எல்லாம் கறப்பார் யாரும் இல்லாமையால் தானாகவே பால் பொழிவதால் ஏந்துவதற்கு இட்ட பாத்திரங்கள் பொங்கி வழிகின்றன. பிடிப்பதற்குப் பாத்திரங்கள் இல்லை என்ற குறை ஏற்படுமே அன்றி, பால் இல்லை என்ற குறை ஏற்படாது! இப்படிப் பால் சொரியும் பசுக்கள் நிறைவாய்ப் பெற்றவன் நந்தகோபன், அவன் மகனல்லவா நீ! கண்ணா எழுந்திருப்பாயாக!
என்றும் அடியாரைக் காப்பதில் ஆர்வமுடையவனே, வேதங்களும் கூட எல்லை காண முடியாதபடி பெரியவனாக இருப்பவனே, இப்படிப் பெரியவனாக இருந்த போதும் உலகில் அனைவரும் காணும்படியாக அவதரித்த பரஞ்சுடரே, இப்போது எழுந்து எங்களுக்கு நீ அருள் புரியாவிடில் உனது பெருமை குன்றி விடாதோ?
உன் எதிரிகள் உனது வலிமையால் பலமிழந்து கதியற்று உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்திருக்கிறோம்! அவர்கள் உன் வீரத்திற்குத் தோற்று உன் திருவடி பணிந்தனர், நாங்கள் உங்கள் குணங்களுக்குத் தோற்று வந்தோம்!
நீ எய்யும் அம்பானது உடனே கொன்று விடுகிறது, ஆனால் உனது அன்போஉன்னை விடவும் முடியாமல், அடையவும் முடியாமல் சித்திரவதைக்குள்ளாகுகிறது! அப்படிப் பட்ட உன்னை நாங்கள் புகழ்ந்து வந்தோம், நாங்கள் சொல்வதெல்லாம் செய்து விட்டோம், இனி உன் பொறுப்பு!
**
எல்லா அகங்காரங்களையும் விட்டு எம்பெருமானைத் தஞ்சம் அடைய வேண்டும் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப் படுகிறது.
**
chinnakkannan
5th January 2015, 10:00 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பது
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்திரண்டு
06.01.15
*
சிலேடை என்பது என்ன?
இரு பொருட்கள், ஆனால் அவற்றுக்கு ஒரே குணம் எனச் சொல்வது சிலேடை!
கண்ணை யதுமறைக்கும் கண்ணிலே நீரழைக்கும்
தன்னை மறந்தே தரமில்லா வார்த்தையைத்
தாபமாய்ப் பேசிவிடும் தன்னுணர்வைத் தூண்டிவிடும்
பாபமாய்ச் சிந்தனையைப் பற்றி எரியவிடுங்
கோபமும் காரமும் ஒன்று
பாருங்கள். கோபத்துக்கும் காரத்துக்கும் ஒரே குணங்கள். மாயக்கண்ணனை எடுத்துக் கொண்டால் அவனது விஷயம் வேறு. அவனது ஒரு செயலில் இரு குண விசேஷங்கள் புலப்படும்.
குட்டிக் கண்ணன் செய்த விஷமங்கள், விளையாட்டுக்கள் சொல்லி மாளாது. ஒரு நாள் பலராமனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது விளையாட்டாக வாயில் மண்ணைப் போட்டுக் கொண்டு விட்டான். பலராமன் யசோதையிடம், “அம்மா, கண்ணன் மண் சாப்பிட்டு விட்டான்” எனச் சொல்லிவிட, யசோதை அதிர்ந்தாள், “மண்ணைச் சாப்பிட்டாயாடா நீ?”, கண்ணன் பயந்தவன் போல “இல்லையம்மா”, “பொய் சொல்லாதே, வாயைத் திற” எனக் கண்ணனின் வாயைத் திறக்கச் சொன்னவள் இன்னும் திகைத்தாள்., அவன் வாயிலே அகில உலகத்தையும் கண்டு திகைத்தாள் யசோதை.
பிரமனைக் கண்டாள் அண்ட கோளத்தின் பெருமை கண்டாள்
இரவியைக் கண்டாள் வானின் இந்துவைக் கண்டாள்
வரையினைக் கண்டாள் எழும கோததி தன்னைக் கண்டாள்
கரியிரு நான்கும் கண்டாள் கனகமாங் கிரியைக் கண்டாள் (பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்)
எண் திக்கு பாலகர்களைக் கண்டாள்; வானில் உள்ள நட்சத்திரங்களைக் கண்டாள். என்ன அதிசயம்! ஆயர்பாடியையும் அதில் கையில் கோலுடன் தன்னையும், குழந்தைக் கண்ணனையும் கண்டாள். திகைத்து, மயங்கி கண்ணை மூடிக் கொண்டாள் யசோதை. “ ஆதியாய் எல்லாவற்றையும் வயிற்றடக்கி உள்ள் இவனை என் மகன் என நினைப்பது என்ன பேதைமை!” என்று பீதியுற்றாள் ஆய்ச்சி.
கண்ணன் அவையனைத்தையும் உடனே மாயையால் மறைத்து விட்டுத் தேம்பி அழ ஆரம்பித்தான், ‘சரி சரி அழாதே கண்ணா. உன்னை அடிக்க மாட்டேன் ‘ என்றாள் யசோதை.
வாயில் மண் போட்டுக் கொண்டதுஒருசெயல். அதன் மூலம் தனதுகுழந்தைக் குணத்தையும், வாயில் ஈரேழு உலகங்களைக் காட்டியதன் மூலம் பரப்பிரும்மத்தின் குணத்தையும் காட்டினான் கண்ணன்!
இன்றைய பாடலிலும் கண்ணனை எழுப்புகிறார்கள்.
**
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாயு வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிடுப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூப்போல
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியோ
எங்கள் மேற்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
*
அழகிய விசாலமான பூமியில் உள்ள அரசர்கள் இந்த பூமிக்கு நாமே அதிபதி என நினைத்து அகங்காரம் கொண்டவர்களாய் இருப்பார்கள். பின்பு ராஜ்யம் முதலியவற்றை இழந்து அகங்காரம் அடியோடு அழிந்து எம்பெருமானின் பள்ளியறையில் படுக்கையின் கீழ் கூட்டமாக அவனைப் பணிவார்கள்.
அது போல நாங்களும் உனதுதிருவடிகளை வந்தடைந்தோம்! கிண்கிணியைப் போல பாதி மலர்ந்தும், பாதி மூடியும் இருக்கும் தாமரை போன்ற திருக்கண்களால் நீ எங்களை க் கடாட்சிக்க வேண்டும். கண்ணா! அப்படி அருள் புரியும் போது உன் பார்வையானது சிறிது சிறிதாக எங்கள் மேல் விழ வேண்டும்!
உனது அழகிய திருக்கண்கள் விரோதிகளுக்குச் சூரியன் போல வெப்பத்தையும், அடியவர்களுக்குச் சந்திரன் போல குளிர்ச்சியையும் தருவன. சூரியனும் சந்திரனும் ஒரே சமயத்தில் உதிப்பது போலே, எங்கள் அஞ்ஞானமான இருளை அகற்றி, எங்களுடைய விரக தாபத்தையும் போக்கும் உன் திருக்கண்களால் எங்களைக் கடாட்சித்து, நாங்கள் உன்னைப்பிரிந்து படும் துயரமெல்லாம் நீக்க வேண்டும் கண்ணா!
**
எம்பெருமானது திருக்கண் பார்வையானது நாம் செய்துள்ள பாவங்கள் அனைத்தையும் போக்கி விடும் என்பது இப்பாடலில் சொல்லப் படுகிறது.
**
chinnakkannan
6th January 2015, 09:49 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்தொன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து மூன்று
07.01.15
**
நடையில் பல விதங்கள் இருக்கிறதா என்ன?
எழுத்தில் – கவிஞர்களுக்கு மென்மையான நடை. கதாசிரியர்களுக்கு உயிரோட்டமான நடை. உடலால் நடக்கும் நடையில் – படையில் இருக்கும் வீரர்களுக்கு ராஜ நடை, இளம்பெண்களுக்கு அன்ன நடை, முட்டாள்களுக்கு வாத்து நடை – அட இருக்கின்றதே!
அதுவும் ஒரு குழந்தை முதன் முதல் தானாய் நடக்க ஆரம்பிக்கும் போது என்ன செய்யும்? மெல்ல சுவற்றை பிடித்து எழுந்திருக்கும். மெல்ல கைகளை விட்டு விட்டு “ததக்கா பிதக்கா” எனக் கொஞ்ச தூரம் நடந்து ‘தொப்’ எனக் கீழே விழும். அம்மா அல்லது யாரும் பார்த்தால் போச்சு. வாய் முகம் கோணி ‘யே’ என வீறிட்டு அழும்! யாரும் பார்க்கவில்லை எனில் மறுபடி மெல்ல எழுந்து, பின்னால் தானே தடவிக்கொண்டு மறுபடி ‘ததக்கா பிதக்கா’! அந்த நடை இருக்கிறதே, மகா அழகு.
குறுகுறுத்தபடி பளிச்சிடும் கண்களிலே கனவு மின்னிட, சிவப்பும் வெண்மையும் சரியான கலவையில் கலந்த நிறத்தில் இதழ்கள் இருக்க, அவற்றின் மேல் தாமரை இலை நீர் போல மெலிதான ஈரம் படர்ந்திருக்க – மெல்லிய புன்சிரிப்பு – முகமெங்கும் படர்ந்திருக்க , அதனால் கன்னத்தில் விழுந்த சிறு குழியானது முகத்துக்கு மேலும் அழகூட்ட, அந்தப் பெண் சிற்றிடை ஒசித்து ஒசித்து – இனிமையான ஒலி எழுப்பும் அழகான வாத்தியம் எழுந்து நடக்கிறார்போல – நடக்கும் நடையின் அழகே அழகு’ என்பார்கள் ஒரு பெண்ணைப் பற்றிக் கல்லூரி மாணவர்கள்!
ஆண்டாளோ சிறுமி, அவள் எப்படிக் காட்டுக்குள் சென்று சிங்கத்தைப் பார்த்திருக்க முடியும்? அவள் நினைக்கும் இடமெல்லாம் கண்ணன் நிறைந்திருக்கிறான். எங்கும் கண்ணன், எதிலும் கண்ணன். அப்படி இருக்கையில் அவள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? கண்ணனின் நடையைப் போலத்தான் சிங்க நடையும் இருக்கும் என நினைத்துக் கற்பனை செய்கிறாள் இன்றையபாடலில்.
இன்றைய பாடலில் ஆண்டாளும் கோபியர்களும் கண்ணனுடைய நடையழகைக் காண வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். மேலும், அவன் படுக்கையிலிருந்து எழுந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து அவர்களது குறைகளைக் கேட்டு அருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறார்கள்.
**
மாரி மழை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோவில்நின் றிங்கணே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரிய மாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
**
“மழைக்காலத்தில் பெய்த பெரு மழையினால் வழிகள் எல்லாம் சேறாகிப் பாதை சரியில்லாமல் இருப்பதால் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் ஒரு மலைக்குகையின் உள்ளே – இதுவும் ஒரு பாறையோ என்று எண்ணும்வண்ணம் உறங்கும் சிறிய சிங்கமானது, மழைக்காலம் முடிந்ததும், தானே விழித்தெழுந்து, தன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்து, சிங்கங்களுக்கே உரிய மணம் கொண்ட பிடரி மயிர்களைச் சிலும்பி, எல்லா ப் பக்கங்களிலும் அசைந்து, உறக்கத்தில் முடங்கிக் கிடந்த உறுப்புகளை உதறி, சோம்பல் தீர உடலை நிமிர்த்தி, பெரிய கர்ஜனை செய்து வருவது போல – கண்ணபிரானே நீயும் வரவேண்டும்.
இயற்கையாய் இருக்கும் கம்பீரத்திற்கும் வீரத்திற்கும் தான் நாங்கள் சிங்கத்தை உனக்கு ஒப்பிடுவோம். அன்றி உன் வடிவழகைப் பார்க்கும்போது – பூவைப் பூ போன்ற – அப்போது தான் மலர்ந்த பூவைப் போல – காயாம்பூவைப் போல (காய்க்காத பூவைப் போல) – மென்மையும் குளிர்ச்சியும் உடையவனல்லவா நீ!
நீ படுக்கையில் கிடந்த அழகை அனுபவித்தோம். இனி உன்னுடைய நடையழகை அனுபவிக்க வேண்டும், எனவே எழுந்து சிங்கம் போல் நடந்து இங்கே வருவாயாக., நீ கிடக்கும் அழகையும் நடக்கும் அழகையும் காட்டினால் மட்டும் போதாது. நீ ஆசனத்தில் வீற்றிருக்கும் அழகையும் காட்ட வேண்டும்! பெருமை பொருந்திய சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாங்கள் வந்த காரியம் என்ன? என்பதைக் கருணையோடு ஆராய்ந்து அருள வேண்டும்.”
**
எம்பெருமானுடைய நடையழகைச் சேவிப்பதே கண்படைத்த பயன் என்கிறார்கள்.
**
chinnakkannan
7th January 2015, 09:41 PM
**
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்திரண்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து நான்கு
08.01.15
**
நண்பர் கோபால் கிருஷ்ணன் ஒரு குட்டிக் கவிதை எழுதியிருந்தார்.
கவிதையின்
வாமன அவதாரம்
ஹைக்கூ
இதேபோல கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் குட்டியாய் எழுதி பார்க்கலாமா? எப்படி எழுதலாம்?
கிருஷ்ணாவதாரம்
மஹாவிஷ்ணுவின்
அவதாரங்களில்
”ஹைக்கூ”
என்ன இது? கிருஷ்ணன் செய்த செயல்களெல்லாம் பெரிதாயிற்றே. அவனது விளையாட்டுக்கள், வேடிக்கைகள், உபதேசங்கள் எல்லாம் நிறைய உள்ளனவே. அப்படி இருக்கையில் கிருஷ்ணாவதாரத்தை எப்படி ஹைக்கூ எனச் சொல்லலாம்?
இப்படி அர்த்தம் கொள்ளக் கூடாது! மஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களின் தாத்பர்யம் கிருஷ்ணாவதாரத்தில் அடங்கி உள்ளது என அர்த்தம்.
“ஹை, சும்மா கதை விடக்கூடாது. மற்ற அவதாரங்களை விடுத்து ராமாவதாரத்தை எடுத்துக் கொண்டால் ராமனுக்கு ஏக பத்தினி. கிருஷ்ணனோ ஏகப் பட்ட கோபிகைகளுடன் இருந்ததாக வருகிறது. எப்படி? எனக் கேள்வி வரும்.
இராமாவதாரம் ஆதர்ச புருஷாவதாரம். இராமர் தன் சக்தியை வெளியிடாமல் சாதாரண மனிதன் போலவே நடந்து கொள்கிறார். உலகிற்கு உதாரண புருஷனாக விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்ற நினைவு அவருக்கு எப்போதும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரமோ, பூர்ணாவதாரம். தாம் பரம்பொருள் என்பதை அவ்வப்போது காட்டிக் கொண்டார். தமது சக்தியை உணர்த்தியும் பேசியும் புரிய வைக்கிறார்.
“தங்கள் கணவன் மார்கள், மக்கள் ஆகியோரை மறந்து கண்ணனிடம் ஈடுபட்டிருந்தனர் கோபியர்” என பாகவதத்தில் வருகிறது. ‘அடடா, கண்ணன் இப்படியா ‘ என நினைக்கக் கூடாது.
நெருப்பு அழுக்கை எரித்துத் தூய்மைப் படுத்துகிறது. ஆனால் அழுக்கின் சேர்க்கையால் தீ அழுக்குப் படுவதில்லை. பரம்பொருள் என்ற நிலையில் சகல ஜீவராசிகளையும் மயக்கி நின்றான் கண்ணன். தெய்வீக நாதனைப் பழித்து அவன் செய்த காரியங்களைப் பிறர் மனதாலும் கருதக் கூடாது. சகல உயிர்களிடத்தும் ஊடுருவி நிற்கும் சக்தியான பரம்பொருளுக்கு ஆண், பெண், கணவன்,மனைவி என்ற பாகுபாடு ஏது? செயல்களைப் பாதிக்கும் சுகதுக்கங்கள் கடவுளைப் பற்றுமோ?
( மனசாட்சி: ரொம்ப ஆழமா ஆன்மிகம் பேசறா மாதிரி இருக்கு?
நான்: சில விஷயங்களை இப்படித் தாம்ப்பா சொல்ல முடியும்!)
கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு கோபியர்கள் இருந்தார்கள் என்றால், கணவர்கள் ஏன் கோபங்கொள்ளவில்லை? கண்ணன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் அவன் மனைவி இருந்தாள், இந்தமாயை அடிக்கடி வற்புறுத்தப் படுகிறது. கண்ணன் விளையாடியது, விந்தை காட்டியது, வாதம் தொடுத்தது, வெண்ணெய் திருடியது, வழி மடக்கியது, கண்கலங்கச் செய்தது, குழல் ஊதி எழுப்பியது, ஜலக்ரீடை புரிந்தது, ஆடைகளைக் கவர்ந்து கொண்டது அனைத்தும் பெண்களிடத்தில் தான், உலகம் மாயை, ஆணும் பெண்ணும் மாயத்தோற்றங்கள். உண்மையில் உள்ளது ஒன்றே- அது அவன் தான்! அனைத்தையும் மறந்து அவனைச் சரணடைந்தால் காக்கும் பொறுப்பு அவனுடையது. அவன் எங்கும் இருப்பவனாகையால் எப்போதும் வந்து காப்பான்! இந்த உண்மையைத் தான் கிருஷ்ண லீலைகள் நிரூபிக்கின்றன.
இன்றைய பாடலில் ஆயப் பெண்கள் விரும்பின படியே கண்ணன் சிங்காசனத்திலிருந்து நடையிடத் தொடங்கினான். அதைக்கண்ட ஆயப் பெண்கள் அவனது நடையழகில் தங்களை மறந்து அவனது திருவடிகளுக்கும் குணங்களுக்கும் பல்லாண்டு பாடுகிறார்கள்.
**
“அன்றிவ் வுலகம் அளந்தா யடி போற்றி
சென்றவருத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய்குணம் போற்றி
வென்று பகை கொடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே யேந்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்..
**
மென்மையான – தொட்டாலே கன்றிச் சிவந்துவிடும் மெல்லடிகளைக் கொண்டு முன்னொரு காலத்தில் காடும் மேடுமான இந்த உலகத்தை அளந்தாயே. அத்திருவடிகளுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்!
கல்லும் முள்ளும் நிறைந்த காட்டில் பல நூறுகாதங்கள் சென்று குகையில் புலியைப் பார்ப்பது போல, இராவணனை அவனுடைய இருப்பிடமான இலங்கையிலேயே வென்ற உன்னுடைய திறமைக்குப் பல்லாண்டு!
ஒரு வண்டியில் ஆவேசித்திருந்து உனக்குத் தீமை செய்ய முயன்ற சகடாசுரன் அழியும் படியாகத் திருவடிகள் உதைத்தவனே, தாயும் உதவிக்கு வராத அந்த நேரத்தில் உன்னைக் காத்துக் கொண்ட புகழுக்குப் பல்லாண்டு!
உன்னைக் கொல்ல இரு அசுரர்கள் கன்றாகவும், விளாங்கனியாகவ்வும் நிற்க, கன்றை விளாங்கனி மீது எறிந்து இருவரையும் அழித்தவனே, அப்படி எறிந்த போது மடங்கி நின்ற உன் திருவடிகளுக்குப் பல்லாண்டு!
தனக்கு விழா எடுக்காததால் கோபம்கொண்டு இந்திரன் கல்மழை பொழிந்த போது கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் பசுக்களையும் காத்தவனே, இப்படித் தீங்கு புரிந்த இந்திரனையும் மன்னித்து அருள் புரிந்த உன்னுடைய குணத்துக்குப் பல்லாண்டு!
பகைவர்களை வென்று அழியச் செய்யும் உன் கையிலுள்ள வேலுக்கும் பல்லாண்டு! இவ்வாறு உன் வீரச் செயல்களையும் புகழ்ந்து பாடுவதையே பயனாகக் கொண்டு நாங்கள் வந்தோம், எங்களுக்கு நீ இறங்கி அருள் புரிய வேண்டும்!
**
உட்கருத்து:
இப்பாடலில் பகவானது விரோதிகளைச் சொல்வது போல மனிதனுடைய விரோதிகளை ஆண்டாள் நமக்குச் சொல்கிறாள்:
• மஹாபலி – அகங்காரம்
• இராவணன் – காமம்
• சகடன் – மோகம்
• வத்ஸன் – லோபம்;
• கபித்தன் (விளாமரம்) – ஆச்சர்யம்
• இந்திரன் – குரோதம்
இந்த ஆறு விரோதிகள் அழிந்தால் இறைவன் தென்படுகிறான்!
**
chinnakkannan
8th January 2015, 09:53 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து மூன்று
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஐந்து
09.01.15
**
திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்ததை
நினைத்துப் பார்க்கையில்
நேற்றுப் பார்த்தது
நிழற்கனவாகி
நாளை வந்திட..,
மறுபடி நேற்று!
என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி
மனம் மகிழ்ந்திட
மனம் மகிழ்ந்திட
கண்ட மகிழ்ச்சியில்
மனம் மடிந்திட,
அந்தரத்தில் நிற்பதென்னவோ
உடல்!
என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!
மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?
துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.
கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.
குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.
‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?
ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.
தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.
இன்றைய திருப்பாவைப் பாடலில் கண்ணபிரானையே வேண்டி வந்ததாகக் கூறுகிறார்கள் கோபியர்கள்.
**
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
*
கம்ஸனின் தங்கை தேவகி, அவளது வயிற்றிலேபிறந்தாய். அன்று இரவே வசுதேவர் உன்னை யசோதையிடம் சேர்ப்பிக்க, நீ யசோதையினிடத்தே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வளர்ந்தாய். அது பொறுக்காமல் பல தீங்குகள் இழைத்தான் கம்சன். அவை எல்லாவற்றையும் விளையாட்டாய் அப்புறப் படுத்தினாய். கம்சனின் வயிற்றிலேபயம் எனப்படும் நெருப்பை வளர்த்தவனே கண்ணா!
நாங்கள் என்ன உன்னிடம் வேறொன்று கேட்கவா வந்தோம்? உன்னையே வேண்டி வந்தோம், எங்களுக்கு நீயே வேண்டும் என்றாலும் இப்படி நோன்பு நூற்கச் செய்ததற்காகப் பயனையும் வேண்டுகிறோம்!
திருமகளும் ஆசைப்படும் செல்வத்தையும், உனது வீரத்தையும் நாங்கள் பாடிக்கொண்டு வந்தபடியால் உன்னைப்பிரிந்து நாங்கள் பட்ட துன்பமெல்லாம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தோம்.”
**
எம்பெருமானிடம் சென்று வேறுபயனேதும் விரும்பாமல் அவனையே விரும்புவது சாலச் சிறந்தது என இந்தப்பாடலில் கூறப் படுகிறது.
**
chinnakkannan
9th January 2015, 06:36 PM
**
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து நான்கு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஆறு
10.01.15
**
இப்பொழுது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகளில் பொதுவான ஒரு விஷயம் உண்டு. கேள்வி – பதில் பகுதி!
‘ஆட்டின் மூக்கையும், கழுதையின் மூக்கையும் ஒப்பிடுக!” எனக் கேட்டு சில பத்திரிகைகளுக்கு அனுப்பினால் என்ன ஆகும்?
முதல்பத்திரிகையின் பதில் “ ஆட்டின் மூக்கு அது எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த நிறத்தில் இருக்கும். கழுதையின் மூக்கு எப்போதும் வெள்ளை! ஆடு ‘ம்ம்மே’ என்று தும்மும், கழுதை “ஹெஹஹ்ஹீ” எனத் தும்மும்!
இரண்டாவது பத்திரிகை : (கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ச்சியில் இறங்கி) ஆட்டுப்பால் நல்லது என்றுபாபர் காலத்திலேயே கிபி 16… (ஒரு அரைப்பக்கத்துக்கு விளக்கம்), கழுதையைப் பற்றி இதிகாசங்களிலேயே காணப்படுகிறது (மறுபடியும் அரைப்பக்க விளக்கம். – கண்டிப்பாய் பதிலின் எதிர்ப்பக்கத்தில் – குதிரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டிருப்பார்கள்!)
மூன்றாவது பத்திரிகை: நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது! பொது ஜனத்தையும், அரசியல் வாதியையும் தானே ஒப்பிடச் சொல்கிறீர்கள்? இருவருமே ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான். பொது ஜனத்தின் மூக்கு – விலைவாசி ஒவ்வொரு முறையும் குறையும்குறையும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உடையும். அரசியல் வாதியின் மூக்கு தோழமை, எதிர்க் கட்சிகளால் – சிலசமயம் தன் கட்சி ஆட்களாலேயே உடையும்!
ஆக கேள்வி ஒன்று எழுந்தால் அதற்குப் பதில் கிடைக்கத்தான் செய்யும். சிலசமயங்களில் பல பதில்களும் கிடைக்கலாம். அதற்காக கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது. சிலசமயம் வேண்டுகோள்களையே கேள்விகளாகக் கேட்கலாம்..
இன்றைய திருப்பாவைப் பாடலில் தங்கள் நோன்பிற்கு வேண்டியவைகளைக் கோபியர்கள் வேண்டுகிறார்கள்.
**
,மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையர் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்
**
அன்பே வடிவெடுத்தவனே. நீலமணி போன்றவனே, மார்கழி நீராட்டம் என்ற இந்த நோன்பினை நோற்பதற்காக நாங்கள் வந்தோம், முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றி நாங்கள் நோற்கும் இந்த நோன்பிற்கு வேண்டியவைகளைக் கேட்பாயாக.
உலகமெல்லாம் அதிரும்படியாக முழங்கக் கூடிய பால் போன்ற, வெளுத்த உன்னுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும், எங்களது வரவை அறிவிக்க பெரிய பறைகள் வேண்டும், சங்கங்களும் , பறைகளும் முழங்க நாங்கள் செல்லும் போது, ‘உங்களுக்கு மங்களமே உண்டாகட்டும்’ என மனதார வாழ்த்துச் சொல்பவர்கள் வேண்டும்.
நாங்கள் ஒருவரைஒருவர் கண்டு மகிழ அழகிய விளக்குகள் வேண்டும், நாங்கள் வருவதை வெகுதூரத்தில் இருப்பவர்களும் அறிந்து கொள்வதற்காக, முன்னே பிடித்துச் செல்லத் தக்க கொடிகள் வேண்டும், எங்கள் மீது பனி விழாதிருக்க மேற்பந்தல் வேண்டும், பிரளய காலத்தில் உலகனைத்தையும் உண்டு ஆலிலையில் சயனித்திருந்த உனக்கு, இப்பொருள்களைத் தருவது அரிதோ!
எனவே எல்லாவற்றையும் நீயே அருள வேண்டும்!
**
எம்பெருமானுடைய அருளினாலேயே நாம் அனைத்தும் பெற முடியும் என்று இப்பாடலில் கூறப் படுகிறது.
**
chinnakkannan
10th January 2015, 11:42 AM
**
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து ஐந்து
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஏழு
11.01.15
வைணவப் பெரியவர் ஒருவர் இருந்தார். மஹா விஷ்ணுவிடம் தீவிர பக்தி உடையவர். அவருக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான்.
பெரியவர் இறைவனைத் துதித்து “பெருமாளே, நீ தான் காப்பாத்தணும்” என்று வாய்விட்டுச் சொல்லும் போதெல்லாம் இவன் போய் நிற்பானாம், “கூப்பிட்டீங்களா சாமி!” ஏனெனில் அவன் பெயர் பெருமாள்!
“அடப்பாவி., நான் உன்னைக் கூப்பிடவில்லையடா! கடவுளைத் தான் கூப்பிட்டேன்” என்பார் பெரியவர்.
இப்படியே சில காலம் சென்றது. பெரியவரால் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை. வேலைக்காரனைக் கூப்பிட்டார். “இந்த பார் பெருமாள். நான் ஒவ்வொரு தடவையும் கடவுளை ‘பெருமாளே’ன்னு கூப்பிடறச்சே நீ வந்து நிக்கறே, ஒண்ணு செய்யலாம். பேசாம நீ பேர் மாத்திண்டுடு”
“சரிங்க சாமி. அப்படிப் பேர் மாத்தினா எனக்கு என்ன தருவீங்க?”
“பத்து ரூபா தர்றேன்” என்றார் பெரியவர்.
மறு நாள் “ சாமி, நீங்க சொன்ன படியே பேரை மாத்திட்டேன்”
“என்ன பெயர்ப்பா”
“ஹை. முதல்ல பரிசுகொடுங்க”
“எதுப்பா?”
“அதான் பத்து ரூபாய்!”
“சரி சரி இந்தா, பத்து ரூபாய்! என்ன பேர் வெச்சுண்டிருக்க?”
“பெரிய பெருமாள் சாமி” என்றானாம் வேலைக்காரன். ( பெரிய பெருமாள் என்பது அரங்க நாதனைக் குறிக்கும்)
ஆக, பரிசு கொடுத்தாலும் சில காரியங்கள் ஒழுங்காய் நடப்பதில்லை.
இந்தப் பாடலில் கோபியர்கள் நோன்பு நூற்பதற்குப் பரிசாகக் கேட்கிறார்கள். எதை?
வையத்துள் வந்துவிட்டோம் வாழ்வினைக் கண்டுவிட்டோம்
பையில் துயின்றது போதுமே நீயெழுந்து
பொய்யான இவ்வுடம்பைப் போக்கியே மோட்சமெனும்
நெய்யொழுகு வெண்பொங்கல் தா
இன்றைய பாடலில் நோன்புப்பரிசை விரிவாகக் கேட்கிறார்கள்.
*
கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்னனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
*
“ உன்னை அலட்சியம் செய்பவர்களையும் அருகில் தேடிச் சென்று அருள் பாலிப்பவன் நீ. அருகில் வந்து நின்றது நீ என்று தெரிந்தபின் உன் திருவடிகளைத் தொழுது” மன்னித்துவிடு” என்று அரற்றுபவர்களை மன்னித்து புன்முறுவல் செய்த வண்ணம் மறைந்து விடுவாயன்றோ!
உன்னை நாங்கள் பாடிப் பாடி மகிழ்கிறோமே. இதுவே எங்களுக்குப்போதும். இருப்பினும், உன் கையால் ஏதும் பரிசு தர விரும்புகிறாயா? கொடு! அள்ளிக் கொடு! எங்கள் நோன்புக்குப் பரிசாக அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.!
நாட்டில் உள்ளவர்கள் புகழ்வதற்கு அருகதையாக உள்ள ‘சூடகம்’ எனும் கைவளையைத் தருவாயாக. தோளில் அணிந்து கொள்ளும் வங்கியைத்தருவாயாக. அவற்றுடன் பார்க்கும் போது காதில் பூதான் முளைத்து விட்டதோ என எண்ணும் வண்ணம் பளிச்சிடும் தங்க மாட்டல்களைத் தருவாயாக. காலில் அணிந்து நடந்தால் கால்கள் பேசுவதோ என எண்ணும் படி இருக்கும் ‘பாடகம்’ என்ற ஆபரணத்தைக் கொடுப்பாயாக. இப்படிப் பலவகையான ஆபரணங்களை நீ கொடுத்தால் நாங்கள் பூட்டிக் கொள்வோம், புதிய பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து கொள்வோம், அதன் பின் முழுதும் ஊற்றி விடப்பட்ட நெய்யும், பாலும்கலந்து செய்த அன்னத்தை – கையில் எடுக்கும்போதே முழங்கை வரை வழிந்தோடி விழும் அளவுக்கு நெய் சேர்த்த பொங்கலை – எல்லோருமாகச் சேர்ந்து உன்னுடன் கூடி உண்டு மனம் குளிர்வோம். இதைவிட வேறென்ன வேண்டும்?
*
‘கடவுளுடன் கூடியிருந்து கலந்திருப்பதை விட உன்னதமான் பதவி கிடையாது’ என்பது பொருள்!
கூடியிருந்து குளிர்வது – மற்ற அடியவர்களுடன் சேர்ந்து எம்பெருமானை நினைந்து உருகி, அவனது அருட்குணமாகிய பிரசாதத்தை மனதினால் உண்டு அந்த மகிழ்ச்சியிலே திளைத்திருத்தல்.
**
chinnakkannan
11th January 2015, 09:03 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து ஆறு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து எட்டு
12.01.15
மரியாதை என்பது என்ன?
ஒருவன் தான் செய்த செயல்கள் மூலம் நான்கு பேருக்கு நல்லது செய்தானென்றால் அவனுக்கு அனைவரும் மரியாதை காட்டுவார்கள் – அது அவனது குணத்திற்கு. மேற்பதவியில் இருப்பவர்க்கு கீழே உள்ளவர்கள் மரியாதை காட்டுவார்கள் – அது அவர்களின் பதவிக்கு.
சரி மரியாதையை எப்படிக் காட்ட வேண்டும்?
குழந்தை தந்தையிடம், ‘அப்பா ,நீ எங்க போயிட்டு வந்தே?” என ஒருமையில் கேட்கிறது. குழந்தைக்கு மரியாதை தெரியவில்லை என அர்த்தமில்லை. அன்பின் மிகுதியால் ஒருமையில் அழைக்கிறது. வளர்ந்தவுடன் அதே குழந்தை மரியாதையாகத் தந்தையிடம், ‘ அப்பா, நீங்கள் எனக்காக என்ன செய்து கிழித்தீர்கள்?” என்று கேட்கும்!
எனது சகோதரி நாய் ஒன்று வளர்த்தார்கள். அது அழகாய் வேளாவேளைக்கு தயிர்சாதம், தொட்டுக் கொள்ள எலுமிச்சங்காய் ஊறுகாய், இட்லி, தோசை எல்லாம் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடும். சகோதரி உணவருந்தும் போது வாயில் உமிழ் நீர் பெருக, அவர் சாப்பிடும் சாம்பார் சாதத்தையே பார்க்கும். சகோதரிக்குக் கோபம் வரும்., “ச்சீ, அந்தப் பக்கம் போ எருமை மாடே!” என்பார்கள். அது பரிதாபமாய் வைப்புத் தொகை இழந்த வேட்பாளர் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒதுங்கிவிடும். அவர் உண்டு முடித்ததும் எதிரே பாவமாய்ப்போய் நிற்கும். சகோதரிக்குச் சிரிப்பு வரும், “என் கன்னுக்குட்டியைத் திட்டிட்டேனாடா?” என்று அதைக் கொஞ்சுவார். நாய் எருமை மாடானதும் கன்றுக்குட்டியானதும் அன்பின் மிகுதியால் தான்!
*இருபது வருடங்களுக்கு முன்னால் பெயர் பெற்ற அம்மையார் ஒருவர் தலை நகரிலிருந்து மதுரை வந்திருந்தார்கள். சாலையில் இருபக்கமும் ஒரே கூட்டம். ஒருவரிடம் விசாரித்தேன், “யாருங்க வராங்க?” அவர், “உஷ், அந்த அம்மா வருது!” என்றார். இங்கு மரியாதை காரணமாக உயர் திணை அஃறிணையாகி விட்டது!
இன்றையபாடலில் கோபியர்கள் கண்ணனை, தவறிப் போய் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருந்தாலும் கோபங்கொள்ளாதே – எனச் சொல்கிறார்கள்.
*
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னை
பிறவிப்பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறையொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினா லுன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
*
கண்ணா, மனம் கவர்ந்தவனே, நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று காடுகளை அடைவோம், அங்கே அவற்றை மேய விடுவோம். பின் காட்டிலேயே நினைத்த இடத்தில் அமர்ந்து உணவு உண்போம். சிறிதும் புத்தி இல்லாத மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவர்கள் நாங்கள். நீ எங்கள் குலத்தில் பிறந்ததற்கு நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம்!
எந்தவிதமான குறையும் இல்லாத கோவிந்தா, உன்னோடு எங்களுக்குச் சம்பந்தம இல்லாமற் போனால் எங்களால் இங்கு உயிர் தரித்திருக்க முடியாது. அறிவற்ற சிறிய பிள்ளைகள் நாங்கள். அன்பின் மிகுதியால் உன்னை ஏக வசனத்தில் அழைத்திருக்கிறோம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே கண்ணா, எங்களுக்கு வேண்டிய பறைகளை நீ தான் செய்ய வேண்டும்!
**
பகவத் அனுபவத்திற்கு 2 விஷயங்கள் இன்றியமையாதவை. கானம் சேர்தல் : இறையிடத்தில் அணுகுதல்; உண்பது – சிறந்தஞானத்தைப் பெறுதல். அவன் சரணாகத வத்ஸலன். குற்றத்தை மன்னிப்பவன். ஆகவே பாவத்தைப் போக்க அவனையே சரணடைய வேண்டும் என்பது உட்பொருள்.
**
**2002இல் எழுதியது
chinnakkannan
12th January 2015, 07:48 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து ஏழு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஒன்பது
13.01.15
கஷ்டம் என்பது என்ன?
நீள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர்களிடம் சென்று அவர்களிடம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்லிப் பாருங்கள். உடனே அழுவார்கள்! ஏனெனில், அவர்களுக்கு அழுவது சுலபம், சிரிப்பது கஷ்டம்.
எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. இந்த ஆண்டாள் திருப்பாவையில் நிறையபாடல்கள் எழுதியிருக்கலாமே. அதைப் படித்து இன்புற்று இருக்கலாமே. இப்படி ,30 பாடல்களில் முடித்து விட்டாளே..
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த 30 பாடல்களிலும் எல்லாவற்றையும் அழகாக அடக்கியிருக்கிறாளே, சரி தான் என்ன ஒரு தெளிவு என்று தோன்றுகிறது!
முன்னுரையில் அம்பாளைப் பார்க்கும் போது அவள் கட்டியிருக்கும் புடவையின் நிறத்தைப் பற்றித் தான் எழுத வருகிறது என எழுதியிருந்தேன். திருப்பாவைப் பாடல்களைப் படித்த பின்னர்,
‘ நெருப்பில்
விரல் பட்டால்
சுட்டு
வலியினால்
கண்ணில் நீர் வரும்..
அம்பாளின் தேஜஸால்
மனம் பிரகாசமாக
விழியில்
நீர் வருவது ஏன்?’
என எழுத வருகிறது. கொஞ்சமாவது பக்குவ நிலையைச் சுற்றிச் செல்கிறதா என்ன?
இதுவரை படித்த பாடல்களில்: ஆண்டாள் தன்னையும், தன் தோழிகளையும் ஆயச் சிறுமிகளாகக் கருதி , அவர்களை எழுப்பி நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் இவர்களையும் எழுப்பி நோன்பு நூற்று, கண்ணனை அல்லது மோட்சத்தைக் (இரண்டும் ஒன்று தானே!) கேட்கிறாள் என்று எண்ணியிருந்தேன். முந்தைய தினம் அதைப்பற்றி ஒரு பாடல் இட்டிருந்தேன்.
இன்றைய பாடல் வேறு விதமாக இருக்கிறது. அவளுக்கு மோட்சமெல்லாம் வேண்டாமாம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கண்ணனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டுமாம்!
அடடா, என்ன ஒரு மனது! அதுவும் ஒரு சிறுமிக்கு. எவ்வளவு பக்குவம் அடைந்திருந்தால் இப்படி ‘என்றென்றும் உன்னைத் தொழுது உனது அடியவர்களாக இருக்கும் வரம் வேண்டும்’ எனக் கேட்க முடியும்.
நாம் என்ன செய்கிறோம். அன்றாட அலுவல்களில் சில நிமிடங்கள் மட்டும் இறையைத்துதிக்கிறோம். கடுஞ்சொற்களைப் பலரிடம் பேசுகிறோம். ஆண்டாளை நினைத்து, நம்மையும் நினைத்துக் கொண்டால் கண்ணில் நீர் வருகிறது…
**
சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொல்லாமற் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உமக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
**
கண்ணா,பரம்பொருளே, விடியற்காலையிலேயே எழுந்து குள்ளக் குளிர நீராடி, நோன்பு நூற்று உனது தாமரைத் திருவடியை வந்து வணங்குகின்றோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறாயா?
கறவைப் பசுக்களை மேய்த்து, பால் விற்பதால் வரும் செல்வத்தால் உணவுண்ணும் ஆயர் குலத்தில் பிறந்து நீ என்னென்ன லீலைகள் செய்தாய்! எவ்வளவு பெரியவன் நீ! எனில் எங்களுக்கு எளியவனாகவே காட்சி தந்து, எளிமையுடன் எங்களுடன் பழகி உறவாடினாயே கண்ணா, நீ எங்களை உன் கைங்கர்யத்துக்கு ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது!
இந்த நோன்பிற்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்கிறாயா கோவிந்தா? என்றென்றும், இந்த ஜென்மம் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் நாங்கள் உனக்கே உறவாய் இருக்க வேண்டும். உனக்கே – உன்னை நினைந்தே நாங்கள் நோன்பு நூற்று உனக்கான கைங்கர்யங்கள் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு அருள் புரி. மற்ற எண்ணங்கள் எங்களுள் எழுந்து எங்களை மாற்றி விடாமல் உன்னைப்பற்றியே நினைக்குமாறு வைத்திரு!
“மற்றை நம் காமங்கள்” என்பதுஇந்திரியங்களால் தூண்டப் படும் ஆசைகள்..அவற்றை அறுக்க அவனே ஒரு வழி சொல்வான். அவை அறுந்தபின் தென்படுவதும் அவனே ஆவான்!
**
aanaa
12th January 2015, 08:43 PM
**
நீள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர்களிடம் சென்று அவர்களிடம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்லிப் பாருங்கள். உடனே அழுவார்கள்! ஏனெனில், அவர்களுக்கு அழுவது சுலபம், சிரிப்பது கஷ்டம்.
**:clap:
**
இந்த ஜென்மம் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் நாங்கள் உனக்கே உறவாய் இருக்க வேண்டும். உனக்கே – உன்னை நினைந்தே நாங்கள் நோன்பு நூற்று உனக்கான கைங்கர்யங்கள் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு அருள் புரி. மற்ற எண்ணங்கள் எங்களுள் எழுந்து எங்களை மாற்றி விடாமல் உன்னைப்பற்றியே நினைக்குமாறு வைத்திரு!
**
chinnakkannan
12th January 2015, 10:52 PM
மிக்க நன்றி ஆனா.. தங்களது லைக்ஸிற்கும் பாராட்டுதலுக்கும்..
chinnakkannan
13th January 2015, 10:56 PM
**
பாசுரம் பாடி வா தென்றலே
முப்பத்து எட்டு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – முப்பது
14.01.15
*
மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
…மாதவன் அழகிலே மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
…காலினைப் பற்றியே நெஞ்சுளே வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
…கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
.. வாழிய கோதையே வாழியுன் பாடலே
ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனதில் எப்போது திருப்தி வரும்?
ஓவியக்கலையில் திறமை பெற்ற ஒருவன் ஒரு அழகிய ஓவியம் வரைந்தானாம். இயற்கைக் காட்சி! “சோ”வென்று கொட்டும் அருவி சற்றுத்தொலைவில் தெரிய, அது ஒரு ஆற்றில் கலக்கிறது. கரையில் பசும்புற்கள் வளர்ந்திருக்கின்றன., அழகிய வண்ண மலர்கள் பூத்திருக்கின்றன, ஒரு ஆண்மான் கம்பீரமாக நின்றிருக்கிறது, பெண் மான் ஒன்று அதன் அருகில் அமர்ந்திருக்கிறது, பெண்மானின் முகத்துக்கு நேரே உரசிக் கொண்டு முன்னங்கால்களை மடக்கியவாறு ஏதோ ரகசியம் பேசுவது போல் இருக்கிறது அதன் குட்டி. பக்கத்திலேயே ஒரு பெரிய மரம். மரத்தின் கிளைகள் விரிந்திருக்க அதில் சில பட்சிகள் அமர்ந்திருக்கின்றன.
பார்த்தவர்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது., இது வெறும் சித்திரமல்ல, உயிர்ச் சித்திரம் எனப் பாராட்டுகிறார்கள்.
ஓவியனுக்கோ அதில் திருப்தி ஏற்படவில்லை, அவனுக்கு மனதுள் ஒரு வருத்தம் – அந்த மரத்தின் கிளையில் பசுமையை இன்னும் கூட்டியிருக்கலாமே என்று. உடன் மற்றொரு படம் வரைய ஆரம்பிக்கிறான்.
ஆக கலைஞனுக்கும் சரி, சாதாரண மனிதனுக்கும் சரி, எப்பொழுதும் முழுமையான திருப்தி ஏற்படுவதில்லை.
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையின் சொல்லழகு, பொருளழகு, கவி நயம், பக்தி மணம், நடையழகு – போன்றவற்றை என் சிற்றறிவுக்கு எட்டியவரை கொஞ்சம் தான் முகர்ந்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் என்னையும் அறியாமல் விட்டிருக்கலாம் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
என்னை எழுதத் தூண்டியவர்கள் ஆண்டாளும் அரங்கனும் தான், ஏதாகிலும் குற்றங்குறை இருப்பின் மன்னித்து இன்னும் அழகாய் எழுதுவதற்கு அருள் புரிவார்கள்!
கோபியர்கள் விடியற்காலையில் எழுந்து குளிர நீராடி, அனைவரும் எல்லோரையும் அழைத்துக் கொண்டு கண்ணனை நினைந்துச் செய்த பாவை நோன்பைப் பற்றிய பாடல்களை மனிதப் பிறவிகளாகிய – சஞ்சலத்தில் சதா மூழ்கியிருக்கும் நாம் படித்தால் என்ன ஆகும்?
அட, நம் மனதிற்குத் திருப்தி ஏற்படும் வகையில் ஒரு பதிலை இன்றைய கடைசித் திருப்பாவைப் பாடலில் சொல்கிறாள் ஆண்டாள்.
*
வங்கக் கடல்கடந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்..
**
தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்காக கூர்ம அவதாரம் எடுத்துத் திருப்பாற்கடலைக் கடைந்தவன் ஸ்ரீமந் நாராயணன். அவன் யார்?
மாதவன் - மஹாலஷ்மி என்னும் அமிர்தத்திலேயே தலை சிறந்த அமிர்தத்தின் மணவாளன் அழகிய, கரிய, சுருள்சுருளான கேசங்களை உடையதால் கேசவன் எனப் பெயர் பெற்றவன். அப்படிப்பட்ட நாராயணனை – பூர்ண சந்திரன் உதயமானாற் போல பிரகாசம் கொண்ட முகத்தை உடைய கோபியர்கள் சென்று யாசித்து, பாவை நோன்புக்குரிய பறை முதலிய சாதனங்களைப் பெற்றார்கள்
இந்த வரலாற்றை அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்தவளும், குளிர்ந்த தாமரைப் புஷ்பங்களாலான மாலையைச் சூடிக் கொண்டவளும், பெரியாழ்வார் மகளுமான ஸ்ரீ ஆண்டாள், அடியவர்கள் கூட்டமாகக் கூடி அனுபவிக்கும் தமிழ்ப் பிரபந்தமான திருப்பாவையில் சொன்னாள். அந்த முப்பதுபாடல்களையும் தினமும் பாராயணம் புரிபவருக்கு – நான்கு பெரிய மாலைகளைப் போன்ற தோள்களையும், கோபியர்கள் கூடித் தனக்குக் கைங்கர்யம் செய்ததால் பெருமிதம் அடைந்து செவ்வரியோடிய கண்களையும், அழகியமுகத்தையும் கொண்ட மஹாலஷ்மியுடன் எழுந்தருளியிருக்கின்ற பகவானால் எங்கும் எப்பொழுதும் இணையற்ற அருள் பெற்று இன்பத்தை அடைவார்கள்.
*
வங்கக் கடல் என்பது பிறவிக்கடல். அதில் நீந்திக் கரையேற இஷ்டப் படுபவர்கள் ஆண்டவனின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதனை அளிக்கும் எளிமையான திருப்பாவைப் பாராயணம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
**
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.