PDA

View Full Version : லேடி ஷிவ்காமீ’ஸ் லவர்ஸ்



chinnakkannan
16th January 2015, 11:55 PM
***********************

லேடி ஷிவ்காமீஸ் லவ்வர்ஸ்...

**********************

சின்னக் கண்ணன்

****************************

இந்த நாஸ்டால்ஜியா எனத் தமிழில் அழைக்கப் படும் மலரும் நினைவுகள் இருக்கிறதே...அது ஒருவகையில் மனிதனுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் தான்...

பாருங்கள்.. 39வது வருடப் பாட்டில் இருக்கும் மன எம் பி3 ப்ளேயரை படக்கென்று 20 வருடத்திற்கு முன்னால் கொண்டு சென்றால்...

அட யார் இந்தப் பையன்.. இளமையாய், காதுவரை நீண்ட கிருதாவுடன், தலைகீழ்ப் ப மீசையுடனும்,கொஞ்சம் நல்ல சுமாரான அழகாவே இருக்கிறான்.. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால்..அட அது சுந்தரா என்றும், சுந்து என்றும்
எருமைமாடே என்றும்(அப்பா) அழைக்கப்படும் சுந்தர்ராஜனாகிய அடியேன் தான்..அருகில் இருப்பது எனது அத்யந்த சினேகிதன் ராஜாராமன்..

நாங்கள் இருவரும் அப்போது மதுரை பழங்கானத்தத்தில் ராஜாராமன் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு"குபு குபு குபுகுபு நான் இன் ஜின் அக..டக டகடக டக நீ டிரைவர்" என்ற படியே சிறு தம் அடித்துக் கொண்டிருந்தோம்..

இந்த சமயத்தில் ராஜாராமனைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும்.. ராஜாராமன் நல்ல உயரம்.. திடகாத்திரமான உருவம்..கொஞ்சம் நிறையவே கரிய உடல்..குறு குறு கண்கள்.. எதைச் செய்தாலும் ஒரு வித பெர்பெக்ஷன் இருக்கும் அவனிடம்.. அவனது இந்த குணங்களே கல்லூரி சேர்ந்த மூன்று மாதத்தில் என்னை அவனிடம்
நெருங்க வைத்திருந்தது..

அதுவும் ப்ளஸ்டூ முதல் செட்டாய் இருந்து, ஜம்மென்று காலேஜ் சேர்ந்தவுடன் தலைகால் புரியாமல் இருந்ததெனக்கு.
ராஜாராமன் தான் என்னைத் தடுத்தாட் கொண்டான்.."ஹேய் சுந்தரா..காலேஜ் சேர்ந்துட்டா மட்டும் பத்தாது..கொஞ்சம் நல்லா உழைச்சுப் படிக்கணும்.." எனக் கிருஷ்ணனாக மாறி உபதேசம் செய்தான்.. அதிலிருந்து அவனுடன் தான் எல்லாம்.. கட் அடிப்பதா, தம் அடிப்பதா,கலர் பார்ப்பதா..பாடம் கற்பதா..எல்லாம்
ராஜா தான்..

அன்று கல்லூரியிலிருந்து சீக்கிரமாக வந்துவிட்டோம் என நினைக்கிறேன்.. "வாடா என் வீட்டுக்கு.." என்ற ராஜாராமனைத் தட்ட முடியாமல் அவன் வீட்டிற்கு வந்து மத்தியானச் சாப்பாடு உண்டு-அவன் அம்மா கொல்லைப்புறம் சென்றிருக்கையில் மொ.மா சென்று தி.த அடிக்கையில் அழைப்புமணி எஸ்.ஜானகி குரலில் ( அந்தக் காலம் சார்..)ம்ம்ம் எனச் சிணுங்கியது.. பாதி தம்மை மனசில்லாமல் கொன்று கிடுகிடுவென ஓடிச் சென்று வாசற்கதவைத் திறந்த ராஜாராமன் முகத்தில் எதிர்பாராமல் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய நடிகையைப் போல பலதரப்பட்ட உணர்ச்சிகள்..

பின்னால் வந்த எனது கண்களுக்கு அந்த வனிதை தட்டுப் பட்டாள்.. அழகாய் ஹா•ப் சாரி என்றழைக்கப் படும் தாவணி (சிகப்பு நிறம்..)அணிந்திருந்தாள்..நல்ல சிகப்பு நிறம். கொஞ்சம் குள்ளம் தான். முகத்தில் காம்பஸினால் நடு
மூக்கில் குத்தினால் வட்டம் வரைந்து விடலாம்.. வட்ட முகம்.. கண்கள்- கோல்கேட் பற்பசை உபயோகப் படுத்திய பற்களைப் போல மின்னின.

ராஜாராமனுக்கு நா கொஞ்சம் வறண்டு போக - என்னிடம்.."சுந்தரா..இது இது..ஷிவகாமி...என்னோட ப்ளஸ்டூ கிளாஸ்மேட்.. இப்போ தியாகராஜால இஞ்சினியரிங்க் பண்றாள்.. வா..ராணி" என்றான்.. நான்சிவகாமியின் பின்னால் பார்த்தேன்.. யாரும் இல்லை..எனது குழப்பத்தைப் புரிந்து கொண்டவனாக
சிரித்தான்,."ராணிங்கறது அவளது செல்லப் பெயர்ப்பா.."

சிவகாமி சற்றே மெல்லிய புன்சிரித்து "ஸோ யூ ஆர் தெ •பேமஸ்
சுந்தரா..கவிஞர்..இல்லையா.." எனச் சொல்லிக் கை நீட்ட எனக்கு அச்சம்,மடம் நாணம் எல்லாம் வந்தன..

"சே..சே.. கவிஞர் எல்லாம் ஒன்றும் இல்லைங்க.. ஏதோ கிறுக்குவேன்..அவ்ளோ தான்....' எனச் சொல்லிய படியே கைகுலுக்கி ராஜாராமனை முறைத்தேன்..

"ம்ம் எனக்குத் தெரியுமே..அதுவும் எழுதற லெட்டர்ல எல்லாம் உங்களைப் பத்தி இவர் எழுதாம இருக்கறதில்லை..." என சிவகாமி பதிலிறுத்ததும் - என் மனத்தில் யாரோ பெரிய குத்து விளக்கை ஏற்றி ஒளியேற்றினார்கள்.."என்ன இவள் இவர்..என்று இவனைச் சொல்கிறாள்.."

இதற்குள் பேசிய வண்ணம் ரா.ரா வும் ஷிவராணியும்..உள்ளே சென்றிருக்க அவர்களை என் கண்களால் ஒற்றிப் பார்த்ததில்...பளீரென ராஜாராமன் கிரீடமெல்லாம் தரித்து கறுப்பு ராமனாகவும், ஷிவகாமியும் கிரீடம்,
பட்டுச்சேலை எல்லாம் அணிந்து சற்றே குள்ள சீதையாகவும் தென்பட்டாள்..இதில் என் ரோல் என்ன..அனுமனா லஷ்மணனா...என யோசித்துப் பின் பி.எஸ். வீரப்பாவைப் போல 'சபாஷ் சரியான ஜோடி" என மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டேன்..

"என்னடா அங்கேயே நின்னுட்டே" என்றான் ராஜாராமன்..உள்சென்றால் சிவகாமி அவன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்..அவ்வப்போது ராஜாராமனை நோக்கி அழகிய மைவிழிப்பார்வைகள் விட்டுக் கொண்டிருந்தாள்.. ரா.ராவும் தர்மரின் தேர் போல தரையை விட்டு ஓரடி மேலேயே மிதந்து கொண்டிருந்தான்.

ஒருவழியாய் சில நேரம் இருந்து விட்டு (சுமார் இரண்டுமணி நேரம்) மூன்று மணிவாக்கில் ஷிவகாமி கிளம்பிப் போக, நான் ராஜாராமனைக் கொக்கி போட்டுப் பிடித்தேன்..

'என்னடா..லவ்வரா.."

chinnakkannan
16th January 2015, 11:56 PM
ரா.ரா. காற்பெருவிரலால் தரையில் அரைவட்டம் போட்டு நகம் கடித்தான்.. கண்களைச் சற்றே தாழ்த்தி.."ம்ம்ம்.. எப்படிக் கண்டு பிடிச்சே..?"

"அதான் ரெண்டு பேரும் வழியறீங்களே...ம்ம்..சொல்லு...உங்களுக்குள்ள..இ ந்த சோ கால்ட் காதல் எப்படி வந்தது..."

ராஜாராமன் சட்டைப் பையைத் தடவினான்.."ச்சே.. தம் தீர்ந்து போச்சுப்பா..". சரி வா என்று அவனை அழைத்துக் கொண்டு அருகிருந்த டீக்கடையில் ஒரு ஸ்பெஷல் சாதா சாயையும் இரண்டு கோல்ட் ப்ளேக் ப்ளெய்னும்
வாங்கிக் கொடுத்து முடுக்கி விட்டதில் கிடைத்த விவரங்களாவன..

"ஆக்சுவலா பார்த்தா சுந்தரா.. நான் அவளை விட படிப்பில் ரொம்ப சுமார் தான்..அவ நல்லா படிக்கற பொண்ணு.. ப்ளஸ்டூல 1048 மார்க்குன்னா பார்த்துக்கயேன்.. நானும் அவளும் இந்த செவன்த் டே ஸ்கூல் ல தான்
படிச்சோம்..ஷிவகாமியோட அப்பா ரெயில்வேல்ல பெரிய உத்யோகம்.. ஸ்கூல் முடிஞ்சதும் அவ வீட்டுக்குப் போய்விட்டு வருவேன்..ப்ளஸ்டூ எக்ஸாமப்போ க்ரூப் ஸ்டடி போட்டோம்..அப்ப என்ன ஆச்சுன்னா..."

"ச்ச்..சஸ்பென்ஸ் வைக்காம மேல சொல்லுடா.."

"எங்க கிளாஸ்ல ஆனந்த்னு ஒரு பையன் இருந்தான்... நல்ல ஸ்மார்ட் •பெல்லோ.. ஆனா ஒல்லியா இருப்பான்.. பணக்காரன் வேற.. அவனும் எங்களோட வந்து படிக்க வருவான்..ராத்திரில அவங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டு மேல
ரூம்ல எல்லாரும் படிப்போம்..நான், ஷிவகாமி,ஆனந்த்¢, கெளரி..அவங்க வீட்ல ரொம்ப சோஷியல் டைப்..ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..அவங்க அம்மாவிற்கு எல்லார் மேலயும் நம்பிக்கை ஜாஸ்தி..இப்படி இருக்கறச்சே தான் ஒரு நாள்
ஆனந்த்¢ அவகிட்ட ப்ரபோஸ் பண்ணியிருக்கான்.."

"அப்புறம்.."

"ஷிவகாமி யோசிக்கணும்னு சொல்லியிருக்கா..உடனேஆனந்த்¢ "இல்ல உனக்கு ராஜா மேல தான் ப்ரியம்னு நினைக்கறேன்..அவன் தான் என்னை விட நல்லா பாடி பில்டராட்டம் இருக்கான்..நல்லாவும் பழகறான்.. என்ன லவ் தானே"ன்னு கேட்டிருக்கான்..அப்போதான் அவளுக்கும் என்னை வித்யாசமாப் பார்க்கத்
தோணித்தாம்.."

"யார் ப்ரபோஸ் பண்ணீங்க.."

"ம்ம்.. நான் தான்.. ஒரு நாள் தனிமைல இருக்கறச்சே..."

"ஆமா .. இதுக்கெல்லாம் பொதுக்கூட்டமா வெப்பாங்க..வளவளன்னு சொல்லாம சுருக்குன்னு சொல்லேன்.."

"என்ன நீ" என ராஜா கோபித்துக் கொள்ள கோல்ட் ப்ளேக் ப்ளெய்னைப் பற்றவைத்து அவனிடம் நீட்டினேன்.. குளிர்ந்து வாங்கிக் கொண்டு தொடர்ந்தான்..

அவன் தொடர்ந்ததைச் சொல்லவேண்டுமென்றால் இது ராஜாராமாயணம் ஆகிவிடும்..எனில் கடைசியில் அவனிடம்"அவள் என்ன ஜாதி?"

"அய்யர்.."

"அவளோ அய்யர்..நீயோ நாயுடு..இதெல்லாம் நடக்கிற காரியமா.." என அந்தக் காலத்திலேயே - இந்தக் காலத்தில் நடிகை பத்மினி சிவாஜி பற்றி மனம் திறந்து சொன்னதை - கேட்டேன் நான்.

"அதெல்லாம் நடக்கும் காட்ஸ் கிரேஸ்' என்றான்..

நான் விடவில்லை.."இந்தபார்.. நான் உன்னை விட சின்னவன் தான் ( ஒரு வருடம்) இருந்தாலும் சொல்றேன்..அவ இப்ப இஞ்சினியரிங் சேர்ந்துருக்கா.. நீயோ சாதாரண பி.எஸ்ஸி மேத்ஸ்..இதெல்லாம் சரி வராது..விட்டுரு.."

அவன் விடவில்லை.. "எல்லாம் நடக்கும்" எனப் பிடிவாதமாக இருந்தான்..

**
தொடர்ந்த இரு வருடங்களில் இது பற்றியே அடிக்கடி நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்..அதுவும் பழங்கானத்த்திலிருந்து மாடக்குளம் செல்லும் வழியில் பாதைகளெல்லாம் பசுமையாக - இருபுறமும் வயல் சூழ்ந்து
ரம்மியமாக இருக்கும்..அந்தப் பாதையில் ராஜாராமனின் காதலைப் பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டே செல்வோம்..

"இதெல்லாம் யெளவனப் பருவத்திற்கே உரித்தான இன்•பாச்சுவேஷன் ராஜா.."

ராஜா மறுப்பான்.. எனக்கும் அவன் படும் காதல் அவஸ்தைகளைப் பார்க்கக் கொஞ்சம் சுவாரஸ்யமாக- உள்ளுக்குள் பொறாமை கலந்த ஏக்கமாக இருந்தது.

தியாகராஜாவில் ஒரு செமஸ்டர் முடித்து விட்டு ஜி.சி.டி என அழைக்கப்படும் கவர்மெண்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி கோவைக்குச் சென்று விட்டாள் சிவ்காமி..காரணம் அவளது தந்தையின் மாற்றல்..ஆனால்
ராஜாராமனுக்குக் கடிதம் எழுதுவது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது..

chinnakkannan
16th January 2015, 11:57 PM
பி.எஸ்ஸி இறுதி வருடத்தில் ஒரு நாள் கோவை சென்று வந்தான் ராஜாராமன். மறு நாள் அவனை மாடக்குளத்தில்பேட்டி கண்டேன்..

"என்னடா.. முகமெல்லாம் வாடி இருக்கு..."

"ராணி..ஷிவகாமி...ஒண்ணு சொல்லிட்டாடா.."

"என்ன.."

அவன் சென்ற போது தங்கியிருந்த இரு நாட்களிலும் அவள் ஸ்ரீராம் எனப்படும் சி.ஏ •பைனல் மாணவனிடம் நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தாளாம்.. இவன் பொறுக்க முடியாமல் கேட்டிருக்கிறான்.."ராணி..டூயூ லவ் ஹிம்.."

"யா.. ஆனால் ஐ லவ் யூ மச் மோர்.." என்றிருக்கிறாள்.. "இதற்கு என்ன அர்த்தம்
சுந்தரா.."

நான் சிரித்தேன்.." சரி விடுடா..அவ ஒரு தொழில் காரி.. ஒரு தொழில் காரனை லவ்
பண்றாள்..தப்பே இல்லை.."

"என்னடா அசிங்கமா பேசறே.."

"ப்ரொபஷனல் ங்கறதைத் தமிழ்ப் படுத்தினேன்.. தப்பா என்ன..ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு.. இது •பைனல் செமஸ்டர்.."

அவன் படிக்கிற வழியைப் பார்க்கவில்லை.. இறுதி வருடப் படிப்பில் அழகாய் மேஜர் சப்ஜெக்டில் எல்லாம் பாஸ் பண்ணிவிட்டு தமிழில் அடி வாங்கியிருந்தான்.

****
இந்தக் கடவுள் இருக்கிறாரே, ஒரு வித்தியாசமான பிரகிருதி.. ஒரு ஆள் மிகவும் மனம் நொந்து வாழ்க்கையே வேண்டாம் என இருந்தானானால்.."இந்தாப்பா வெச்சுக்கோ" என ஒரு சூப்பர் டூப்பர் ஆங்கிலப் படத்துக்கு டிஸ்ட் ரிப்யூஷன் ரைட்ஸ் குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்து- அவனை நிறைய லாபம் பார்க்க வைத்து விடுவார்...அதுவே ' நான் வெற்றி பெற்று விட்டேன்" என எவனாவது கொக்கரித்தானானால், அவனைத் தமிழ் சினிமா எடுக்க வைத்து ஒருவழியாக்கி விடுவார்..

ராஜாராமன் வாழ்விலும் அப்படித் தான் நிகழ்ந்தது..விளையாட்டாக கல்லூரியின் மூன்றாம் வருடத்தில் எழுதிய பிஎஸ் ஆர் பி யில் அவன் தேர்வாகி, இண்டர்வியூ சென்று அங்கும் தேறிவிட்டான்.. தேர்வு முடிந்த இரண்டு மாதங்களில்,
பிஎஸ்ஸி ரிசல்ட் வந்த அடுத்த வாரம் அவனுக்கு அரசுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றில் கேஷியர் போஸ்டிற்கு நியமன உத்தரவு வந்து விட்டது..அதுவும் புதுக்கோட்டையில்.

என்னை என் அப்பா ப்ரொபஷனலாக்க வேண்டும் என்று உறுதியெடுத்து ஒரு ஆடிட்டரிடம் சிஏ - ஆர்டிகிள்ஷிப் சேர்த்து விட்டார்.. நானும் தத்தித் தத்தி படித்துக் கொண்டிருந்தேன்..

புதுக்கோட்டையில் வேலையில் சேர்வதற்கு முன்னால் ரா.ரா. என்னிடம் "சுந்தரா...இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில ஷிவகாமியைக் கல்யாணம் பண்ணிக்கிடுவேன் பாரேன்" என்றான்..

" நீயும் ஆண்டாள் மாதிரி கனவு கண்டுண்டு இரு.. என்ன அவகனவு பலிச்சது..உன்னோட கனவு சந்தேகம் தான்.."

"ஏண்டா இன்னும் பெஸி மிஸ்டாவே இருக்கே.."

" நீ தாண்டா ஆப்டிமிஸ்டா இருக்கே. கொஞ்சம் யோசிச்சுப் பாரு..அடுத்தவருஷம் அவ இஞ்சினியர்.. நீயோ காஷியர்..அவ யதார்த்தவாதி.. நீ இன்னும் கனவுகளைத் தின்னுக்கிட்டு இருக்கே...."

விக்ரமாதித்தனைப் போல மனம் தளராமல், என்னை முறைத்து விட்டு புதுக்கோட்டைக்குப் போனான் ராஜாராமன்...

********


சில பல சமையல் குறிப்புகளைப் படித்து விட்டு அவையெல்லவற்றையும் மறந்து விட்டு அம்மாவிடம் சமர்த்தாய்க் கற்றுக்கொண்டு செய்த மல்லிகைப் பூ இட்லிகளையும், தித்திக்காத தேங்காயையும் நல்ல பச்சை மிளகாய்களையும்
அரைத்துச் செய்யப் பட்ட காரசாரமான சட்னியையும், நன்றாகத் தேங்காயை அரைத்து விட்டு, முழுசு முழுசாக குட்டி வெங்காயத்தைப் போட்டுச் செய்த கமகம்க்கும் சாம்பாரையும் எதிரே வைத்தால் எல்லாம் வயிற்றுக்குள் எப்படி ஷணப் பொழுதில் போகுமோ - அது போலச் சில வருடங்கள் பறந்து மறைந்தன!

அப்போது நிகழ்ந்த சம்பவங்கள்: தடுக்கித் தடுக்கி விழுந்து ஒருவழியாய் நான் சி.ஏ. முடித்தது; ராஜாராமனின் -அயல் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த - தகப்பனார் காலமானது; எனக்குத் துபாயில் வேலை கிடைத்த்து...

துபாய்க்குச் செல்லும் முன் ராஜாராமனுடன் தொலைபேசித்தேன்...

'என்ன.. வாட் ஹேப்பண்ட் டு யுவர் லேடிலவ்..?"

"அவளுக்கு ஒரு அயல் நாட்டுக் கம்பெனில பெரிய போஸ்ட் கிடைச்சுடுத்து....டெல்லில்ல இருக்கா.. நேத்திக்குக் கூட லெட்டர் போட்டிருந்தா..:

"அப்போ ஒண்ணு செய்..ஒரு ரெண்டு ரூபா இருக்கா.."

"எதுக்குடா.."

'எதுத்த கடைல எள்ளும் தண்ணியும் வாங்கி உன் காதலுக்குத் தர்ப்பணம் செய்துடு.."

படீரெனக் கோபத்துடன் போனை வைத்துவிட்டான்..

chinnakkannan
16th January 2015, 11:57 PM
துபாய் சென்று இரு வருடங்கள் கழித்து வந்தால், ரா.ராவிற்குக் கல்யாணம் ஆகியிருந்தது.சொந்த அத்தை பெண்.

சென்று பார்த்தால் கொஞ்சம் தளர்ந்திருந்தான்.. அவன் மனைவி சுமந்திருந்தாள்..

"என்ன ஆச்சுடா.."

"ச்.. நம்ம காதலை மறந்துடுன்னு சொல்லிட்டாடா..."

"அப்பாடி.. நல்லது போ.. நீ என்ன பண்ற புதுவாழ்க்கையை நல்லா எஞ்ஜாய் பண்றயோன்னோ.."

"எங்கடா..கொஞ்சம் கடன் ஜாஸ்தியாகிடுத்து..ஏதோ வாழ்க்கை இழுபறில ஓடுது. நீ ஹெல்ப் பண்றயா...உன்னால முடியுமா.."

நான் அவனுக்கு உதவி செய்தேன்.. துபாய் திரும்பி ஒரு முப்பதினாயிரம் ரூபாய் டிராப்ட் எடுத்து அனுப்பினேன்..ஆனால் அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை..அனுப்பிய சில கடிதங்களுக்கும் பதில் இல்லை..

யாரோ சொல்லியிருந்த பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.. நண்பனுக்குக் கடன் கொடுத்தால், நட்புக்கு நட்பும் போய்விடும், பணத்திற்குப் பணமும் போயிடும் என..சரி, அவனது விலை முப்பது எனத் தீர்மானித்து மறுபடியும்
கடிதம் எதுவும் எழுதவில்லை..வந்த விடுமுறைகளிலும் அவனைச் சந்திக்கவில்லை..

ராஜாராமன் என் வாழ்வில் இருந்து மறைந்தாலும், ஷிவ்காமியைப் பற்றிய தகவல்கள் மட்டும் வந்து கொண்டேயிருந்தன...காரணம் துபாயில் சந்தித்த நண்பன் வெங்கட் ராமன்.. வெ.ரா. கம்ப்யூட்டர் ஆசாமி..அவனுடன்
நட்பாகி..ஒரு நல்ல பொழுதில் பேசிக்கொண்டிருந்த போது ஷிவகாமி அவனது அத்தை பெண் எனத் தெரிந்தது..

அதிலிருந்து ஷிவ்காமியைப் பற்றித் தகவல்கள் வெங்கட் தொடர்ந்து தந்து கொண்டிருந்தான்..

ஷிவ்காமி இப்போது மும்பையில் இருக்கிறாள்..

ஷிவ்காமி அவள் அலுவலகத்திலேயே ஒருவனைக் காதலிக்கிறாள்..

ஷிவ்காமிக்குக் கல்யாணம்..அவள் அலுவலகத்தில் காதலித்தவனையே கடிமணம் புரிந்து...

*********

அது சரீ ஈஈ....எதுக்கு இப்படி பகல் நேரப்பசுமாடு மாதிரி இவ்வளவு நீளமாக அசை போடுகிறேன் என்கிறீர்களா..காரணம் இருக்கிறது..

இப்போது நான் இருப்பது மஸ்கட்டில்.. கூடவே என் அந்தப் புரத்து மகாராணி சுகந்தி, பின் குட்டிப் புறா இளவரசி வைஷாலி.. எட்டு வயதுச் சுட்டி..

வைஷீ.. வாயைத் திறந்தால் மூடவே மாட்டாள்.. ஒன்று பேச்சு, இல்லையேல் திண்பண்டம்..

அதுவும் அச்சச்சோ புன்னகையை அட்சர சுத்தமாகப் பாடிவிட்டு ஒரு வரி - என் வெட்கத்தை உன் முத்தத்தால் கொஞ்சம் சலவை செய்து விடு - வரும்போது நிறுத்தி.. "என்னப்பா போடணும், ஏரியலா, சர்•ப் எக்ஸெல்லா..." என்று கேட்பாள்..

ஒரு வெள்ளிக்கிழமை..வைஷீ என்னிடம் வந்து.."அப்பா...கிருஷ்ணன் கோவில் போலாம்ப்பா.."

"ஏண்டா செல்லம்.."

"ஏதோ சில்ரன்ஸ் ப்ரோக்ராம்ஸ் இருக்காம்ப்ப்பா ப்ளீஸ் போலாம்ப்பா.... "

அதனுடைய ப்ளீஸில் மயங்கிச் சரி என்று சொன்னால்..

தாய் க்ரே வித் ரெட் பார்டர் போட்ட பட்டுச் சேலையில் ஜெகஜ்ஜோதியாக வர பின்னால் சேய் மஞ்சள் வித் ரெட் பார்டர் போட்டப் பட்டுப் பாவாடை சட்டையில் அமர்க்களமாக வந்தது..

"அடப்பாவிகளா.. இந்த டிரஸ்ஸை மத்தவங்க பாக்கணும்கறதுக்காக கோவில் போணுமாக்கும்.." என மனதுக்குள் சொல்லிக் கொண்டு வெளியில் வந்து ஓமானி டாக்ஸி டிரைவரிடம் பேரம் பேசி டாக்ஸி பிடித்து கிருஷ்ணன் ஒம்மாச்சி கோவிலுக்குச் சென்றால்..

கோவில் கொஞ்சம் நடுத்தரப் பெரிதான கோவில்.. உள்ளே டெம்ப்பிள் ஹால் என்றழைக்கப்படும் இடத்தில் ஒரு நூறு பேர் (குஜராத்தி, மலையாளம், கன்னடம்,தமிழ் எனக் கலவையாக) அமர்ந்து "ராதே ராதே
ராதே..ராதே.. ராதே கோவிந்தா..' எனப் பாடிக் கொண்டிருக்க நடு நாயகமாக - சந்திதியில் இருந்த குட்டிக் கிருஷ்ணன் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.. நிறைய கிருஷ்ண விக்ரகங்கள் இருந்தன..

chinnakkannan
16th January 2015, 11:58 PM
உள்ளே சென்று சேவித்து விட்டு, பின் கோவிலுக்குப் பின்னாலிருந்த ஆடிட்டோரியத்துள் நுழைந்தோம்..ஏற்கெனவேப்ரோக்ராம் ஆரம்பித்திருதது.. பாதியில் நாங்கள் நுழைந்த போது.. ராஜராஜ சோழன்,சிவன்,கிழவி என
ஸ்டேஜில் இருந்து கொண்டு சுருதி பிறழாமல் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தார்கள்..

சோழன் சிவனைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் வினவ..அதற்குப் புன்முறுவல் செய்தவண்ணம் சிவன் ஸ்டேஜ் மூலையில் சென்று மறைய..வைஷீ என்னைக் கிள்ளினாள்..

"அப்பா..சோழன் எங்கப்பா இங்க்லீஷ் படிச்சான்..."

"ம்ம்.. அவனும் சர்ச்பாக் கான்வெண்ட்டில தான் படிச்சான்..செத்த சும்மா இரேன்..டிராமா நெக்ஸ்ட் சீன் பாரு.."

அடுத்த சீன் வரவில்லை.. ஏனெனில் டிராமா முடிந்து எல்லாக் குழந்தைகளும் ஸ்டேஜிற்கு வந்து குரூப் போட்டாவிற்குப் போஸ்கொடுக்க..அந்த ராஜ ராஜ சோழனை எங்கே பார்த்திருக்கிறேன்...இவன்ன்..இவள்...ஷிவ்காமி
இல்லை...அச்சு அசலாக ஷிவ்காமியே தான்..

சீ... ஷிவ்விற்கு என் வயது இருக்கும்..அவளும் என்னைப் போலவே டை அடித்துக் கொண்டிருப்பாள்...ஒருவேளை..

அடுத்த நிகழ்ச்சி பாட்டு என அறிவிப்பு வர, வைஷீ என்னைப் பிடித்து இழுத்தாள்..அப்பா..போலாம்ப்பா...

"ஏண்டி.."

"அவ்ளோ தான்.. எனக்கு இண்ட் ரஸ்ட் போச்..." உதட்டைப் பிதுக்கிச் சொல்ல என் சுகந்தியைப் பார்க்க,"இவளோட எப்பவுமே இப்படித் தாங்க.." எனக் கோபப்பட..வைஷாலியின் உதடு கோணி ஒரு அழுகைக்கு ஆயத்தமாக..படக்கென்று சுகந்திக்கு ஜாடை காட்டி வெளியே வந்து விட்டேன்..

வந்தால், கண்ணில் தட்டுப் பட்டாள் அந்தப் பேரிளம் பெண்..முதுகு மட்டும் தெரிய அவளுடன் சோழன் பேசிக் கொண்டிருந்தான்..அவள் திரும்ப.. நான் நினைத்தது சரி..அவள்..ஷிவ்காமியே தான்...

வயதானதினால் கொஞ்சம் இள நரை இருந்தது..கோல்ட் ப்ரேம் கண்ணாடி அணிந்திருந்தாள்..கொஞ்சம் குண்டாக இருந்தாள்.. நான் எப்படி அவளிடம் பேசுவது என நினைக்கையில் வைஷீ கிடுகிடுவென்று சோழனிடம் போய்,
"மிஸ்டர் ராஜ ராஜ சோழன்...யூ ஆக்டட் வெல்.." எனக் கை குலுக்கி விட்டது..

ஷிவ்காமியும் சிரித்து வைஷீவைக் கொஞ்சி நிமிர்ந்து என்னைப்பார்க்க...அவள் நெற்றியில் ஏகப்பட்டசுருக்கங்கள்..

"இது உங்க டாட்டரா..உங்களை எங்கேயோ..."

நான் தயங்கித் தயங்கி." நீங்க..நீ...ஷிவ்காமி தானே.."

"யா.. நீங்க.."

" நான் சுந்தரா..மதுரை..." பின் என்ன சொல்ல எனத் தடுமாற.. அவள் முகம் மலர்ந்தது..

"சுந்தரா... வ்வாட் எ சர்ப்ரைஸ்.. " எனக் கைகுலுக்கினாள்.....இது உங்க வை•பா.."

சுகந்தியை அறிமுகப் படுத்தினேன்..ஷிவ்காமி 'சாரி ரொம்ப நல்லா இருக்கு" என்றதும் சுகு சந்தோஷமாய்த் "தாங்க்ஸ்..'

ஷிவ்காமி அருகிலிருந்த ராஜராஜ சோழனைப் பார்த்தாள்..அவனை இழுத்து.."இது இது என் ஒன்லி சன்..பெயர்..." எனச் சொல்ல ஆரம்பிக்க..எனக்குப் படித்த சிலபல காதல் கதைகள் ஞாபகம் வந்து அவள் ராஜாராமன் எனச் சொல்வாள் என நினைக்கையில்...

"இது என் ஒன்லி சன் பெயர் பிரதீக்...ஐ லவ் ஹிம் ஸோ மச்" என்றாள்..

**************************************
(ராயர் காப்பி க்ளப்பில் முதல் பரிசு பெற்றது -2004

Russellhni
17th January 2015, 08:56 AM
கதை ரொம்ப அசத்தலாயிருக்கிறது ! பாராட்டுக்கள் !:clap:
.
ராஜாராமன் கிரீடமெல்லாம் தரித்து கறுப்பு ராமனாகவும், ஷிவகாமியும் கிரீடம்,
பட்டுச்சேலை எல்லாம் அணிந்து சற்றே குள்ள சீதையாகவும் தென்பட்டாள்.இதில் என் ரோல் என்ன..அனுமனா லஷ்மணனா.

" நீயும் ஆண்டாள் மாதிரி கனவு கண்டுண்டு இரு.. என்ன அவகனவு பலிச்சது..உன்னோட கனவு சந்தேகம் தான்.."

"அப்போ ஒண்ணு செய்..ஒரு ரெண்டு ரூபா இருக்கா.." "எதுக்குடா.." 'எதுத்த கடைல எள்ளும் தண்ணியும் வாங்கி உன் காதலுக்குத் தர்ப்பணம் செய்துடு.."

சுந்தர் அனுமனா, லக்ஷ்மனனா தெரியவில்லை , சிவகாமி சீதை இல்லை ! :roll:
கதையின் இடையிடையே நல்ல நக்கல்கள் !:thumbsup: நல்ல நகைச்சுவை ! :clap:

chinnakkannan
17th January 2015, 10:39 AM
மிக்க நன்றி முரளிதரன்.வருடங்கள் கழிந்தும் படிக்கும் வண்ணம் இருக்கிறது என்பது மிக மகிழ்வாக இருக்கிறது..அகெய்ன் தாங்க்ஸ்

pavalamani pragasam
19th January 2015, 11:05 AM
சின்னக்கண்ணனின் அக்மார்க் முத்திரை கொண்ட சூப்பர் கதை! வாழ்த்துக்கள்!:clap::clap::clap:

chinnakkannan
22nd January 2015, 08:35 AM
மிக்க நன்றி பவள மணிக்கா.புதுசா எழுதணும்...ஆரம்பிக்கணும்.. தலைப்பு சொல்லுங்க ட்ரை பண்ணலாம் :)