PDA

View Full Version : குமரி இளஞ்சிரிப்பு... (சிறுகதை)



audi2021Paido
20th May 2015, 10:35 PM
‘ராசாத்தி என் உசுரு என்னுதில்ல...' என்றுப் பாடத்தோன்றியது அவளைக் பார்த்தவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை. மொட்டை மாடிக்குத் துணிக் காயப்போட வந்தவள், “கண்ணழகா...” பாடலை மார்க்கமான குரலில் பாடிக்கொண்டே கொடியில் இருந்த க்ளிப்ஸ்களை கழட்டிக்கொண்டிருந்தாள். அவள் என் சிறுவயது தோழி. இன்றும் தோழிதான். ஆனால் அந்தக்காலத்தில் எங்களுக்குள் இருந்த நெருக்கம் அந்த குறிப்பிட்ட சம்பவம் நடந்ததிலிருந்து கடுகளவேனும் இல்லை. நெருக்கத்தை அவளும் விரும்பவில்லை. அந்த சம்பவத்திலிருந்து அவள் என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். எனக்கு, அந்த சம்பவத்தில் இருந்து தான் அவளை பிடிக்க ஆரம்பித்தது. அவளோடு நெருக்கமாக பழக வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வம் அவளிடம் கொஞ்சம் கூட இல்லை. அது எனக்குள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

அன்று, சிறுவயதுகளில், அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இருவரும் சேர்ந்து தான் எங்கேயும் போவோம், வருவோம். உப்புமூட்டை விளையாடுவோம். டயர் உருட்டுவோம். ஸ்கூலில் இருந்து திரும்பும் போது யாருமில்லா கடற்கரையில் வெறுமேளுடன் குளிப்போம். குளித்துமுடித்துவிட்டு வெறுமேளுடனேயே மணலில் கட்டிப்புரண்டுக் கபடி விளையாடுவோம். கட்டிப்பிடித்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு முத்தங்கள் இடுவேன், அன்றெல்லாம் அவளுக்கும் என்னுடன் இருப்பது பிடித்தது, பதிலுக்கு அவளும் எனக்கு முத்தங்கள் இடுவாள். என்னைவிட நிறைய முத்தங்கள் அவள் தான் தருவாள். விளையாட்டில் ஏமாற்றிவிட்டேன் என்றால் அவ்வளவுதான். ஒருநாள் நான் அழுச்சாட்டியம் செய்ததற்காக என்னை பளார் பளார் என்று அறைந்து கன்னம் சிவக்க வைத்தாள். அதுவும் ரெண்டு பளார்களோடு நிற்கமாட்டாள். டயர்டாகும் வரை அறைவாள்.

அடித்தாலும் கட்டிப்பிடித்தாலும் உருண்டாலும் புரண்டாலும் அவள் என் மைனா. ஆனால், இன்று அப்படியில்லை. சம்பவம் நடந்த போது அவளுக்கு 13 எனக்கு 11. அந்த சம்பவத்திலிருந்து அவள் என்னை மூன்றாம் நபராகத் தான் பார்க்கிராள். அந்த சம்பவம்… அவள் குமரியான சம்பவம். அவள் வயதுக்கு வந்ததிலிருந்து என்னுடன் ஊர் சுற்றுவதை அவளின் பெற்றோர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ரெண்டு வருடத்தில் எங்களுக்குள் இவ்வளவு இடைவெளியை நான் நினைத்துக்கூட... நாங்கள் சாகும் வரை ஒன்றாகத் தான் இருப்போம் என்றெல்லாம் எண்ணியிருந்தேன்.

இன்று, எனக்கு 13 அவளுக்கு 15, ஆனால் யதார்த்தம், அவளுடன் சேர்ந்து ரெண்டு வருடங்களைக் கூட வாழ்ந்துத்தாண்ட முடியவில்லை என்னால். நான் இவ்விரு வருடங்களாக சைக்கிளில் ஊர் சுற்றியப்படியே தான் இருந்தேன். ஆனால் அவள் இல்லாமல் சுற்றியது மனதுக்கு திருப்தியை தரவேயில்லை. அவள் எனக்கு கடைசியாக முத்தம் கொடுத்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு வருடப்பசி. எனக்கு அவளைத் தவிர வேறு எந்த பெண்களையும் பிடிக்கவில்லை.

அந்த சம்பவம் நடந்ததிலிருந்து அவளின் என்சார்பான நடவடிக்கைகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் பிடித்தது... அவளின் சிரிப்பு. அவள் குமரியாக மாறியவுடன் அவள் சிரிப்பும் மாறியது. இன்னும் உடல்ரீதியாக நிறைய மாற்றங்கள் இருந்தது. உயரமானாள். அவளின் வளவளப் பேச்சு குறைந்தது. எல்லாவற்றுடன் சேர்ந்து அவள் சிரிப்பும் மாறியது. ஆனால் அந்த சிரிப்பு மற்றவைகளைப்போல் முதிர்ச்சியடையவில்லை. ஆறு வயதில் அவள் என்னுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையை அது நினைவுப்படுத்தியது. அது என்னை மயக்கம் கொள்ள வைக்கும் வஸ்து. இளஞ்சிரிப்பு... என் குமரியின் இளஞ்சிரிப்பு. அது மட்டும் தான் இந்த இரண்டு வருடங்களாக எனக்கும் அவளுக்கும் இருக்கும் கரெக்ட்டான கம்யூனிக்கேஷன். ஒரு நாள் அவளை செக்போஸ்ட் ஐ.ஐ.டி. காட்டுவழியே நடுக்காட்டுக்கு கூட்டிக்கொண்டுபோய், “நாம் இருவரும் தாலிக்கட்டிக்கொள்ளலாமா?” என்று கேட்டதற்கு, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. அப்படி நீ எனக்கு தாலிக்கட்டுவதோ, நான் உனக்குக் கட்டுவதோ தப்பு.” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் இதழ்களில் முத்தம் கொடுக்க முயற்சித்தேன். “இனிமேல் என்னோடு பழகாதே!” என்று சொல்லி சென்றுவிட்டால். அவள் என்னை நெருங்காத இந்த இரண்டு வருட வாழ்க்கை, நரகம். என்னவோப்போல் இருந்தது. வண்ணம் இல்லாத வானவில் போல அவளின் சொந்தக்கிளி நான் வந்துநின்னேன்… பட்… என்னுடைய சோடிக்கிளியெங்கே?

அவள் பெற்றோர் இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்கிறார்கள். படிப்பறிவு இல்லை. கிராமத்து வாசிகள். அவர்களின் சொந்த வீட்டில் தான் நாங்கள் வாடகைக்கு குடியிருக்கிறோம். ஒரு ஃப்ளோர் மட்டும் இருக்கும் வீட்டில் நாங்கள் குடியிருந்தது டாப் ஃப்ளோரில். அவர்கள் க்ரௌண்ட் ஃப்ளோர். என் அம்மா, அப்பா இருவரும் ரெஜிஸ்டர் கல்யாணம். எங்கள் பூர்வீகம் பொள்ளாச்சி. இந்த வேளச்சேரி வாடகை வீடு வந்து பத்து வருடங்கள். அம்மா ஃபாஸியா, அப்பா கார்த்திக். ஐ.டி. ப்ரஃபஷனல்ஸ். அப்பா மார்னிங் ஷிஃட், அம்மா நைட் ஷிஃட்.

எனக்கு நிறைய திறமைகள் இருப்பதாய் என் சைன்ஸ் மற்றும் கணக்கு டீச்சர் சொல்கிறார்கள். ஆனால் என் அம்மாவோ, மற்ற டீச்சர்களோ எனக்கு பேய் பிடித்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள். என் உடம்பில் ஆவி புகுந்துவிட்டதாய் பேசுகிறார்கள். என் பேச்சும் நடவடிக்கைகளும் 13 வயது குழந்தையைப் போல இல்லையென்று பேசிக்கொள்கிறார்கள். சமீபத்தில், என் ஸ்கூலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விரக்தியில் மாடியில் இருந்து குதித்து விழுந்த டென்த்தில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கிய பதினோராம் வகுப்பு மாணவியின் ஆவி என்னுள் புகுந்ததாக வெளிப்படையாக என் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள். அவள் நான்காம் மாடியில் இருந்து விழுந்து தரையில் மோதும் போது அருகில் நின்ற என் மேல் ரத்தமெல்லாம் தெளித்து, என் உடம்பு முழுவதும் பட்டு, நான் ரத்தத்தில் குளித்தது போல் ஆகிவிட்டது. இந்தக் காரணத்தால் அவளின் பேய் என்னை பிடித்துவிட்டது என்கிறார்கள். எனக்கு என் உடம்பில் ஊறிய அந்தப்பெண்னுடைய குருதியின் வாடைதான் பிடித்தது.

நேற்று மனநல மருத்துவரிடம் நானும் அம்மாவும் சென்று வந்தோம். அம்மா எனக்கு மசூதியில் மந்திரிக்க வேண்டும் என்று சொல்லியபடியே என்னைக் கூட்டிக்கொண்டு ‘ராமானுஜம் சைக்காற்றிஸ்ட்’ என்று போர்ட் போட்டிருக்கும் ரூம் உள்ளே நுழைந்தார். ச்செக் செய்து டெஸ்ட் பண்ணிய சைக்காற்றிஸ்ட், என்னைப் பார்த்து ‘யூ ஆர் எ ச்சைல்ட் ப்ராடிஜி’ என்றார். என் ஐ.க்யூ. லெவல் 200 ல் இருக்கிறதென்று மிகவும் ஆச்சர்யப்பட்டார். அவர், “என்ன படிக்க போற?” என்றதற்கு நான், “சைக்காலஜி” என்று சொன்னதற்கு வியப்பாக கொஞ்ச நேரம் பார்த்து விட்டு நான் கண்ணடித்த பின் சிரித்தே விட்டார். அம்மா சிரிக்கவில்லை. டாக்டர் குடுத்த டைரி மில்க் சாக்லட்டைக் கூட அம்மா முறைத்ததனால் நான் வாங்கவில்லை. அம்மாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனா அவங்க ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க. எப்பவுமே ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க.

“அவ நம்ம வீட்டுக்கு வரல இல்ல, இனிமே நீ அவங்க வீட்டுக்கு போகக் கூடாது!” என்று இரண்டு வருடம் முன்பு அம்மா சொன்னதால் நான் இன்று வரை அவள் வீட்டிற்கு போகவில்லை. எனக்கு வருத்தமில்லை. அவர்களின் மொழியாம் தெலுங்குக்கு தான் கவலை. அவர்களின் மொழியான தெலுங்கு கற்றுக்கொள்ளவும் அங்கு நான் போனதுண்டு. தெலுங்கு என்ன பாவம் செய்தது. அதையும் எழுத படிக்க தெரிந்துவிட்டால் எனக்கு தமிழ், உருது, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு என ஆறு இந்திய மொழிகள் தெரிந்திருக்கும். கீழே விழுந்து தற்கொலை செய்த மாணவி கன்னடத்துப் பெண் என்றும் அதனால் தான் பாதித் தூக்கத்தில் எழுந்து கன்னடம் பேசுகிறேன் என்றும் அம்மா சொல்லி ஆசிரியர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் என் அப்பா இரவு சன் உதயா சேனலில் கன்னடப் படங்களை மட்டுமே பார்ப்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காலேஜ் படிக்கும் போது அவரின் நெருங்கிய தோழியிடம் கன்னடம் கற்றதாக சொல்லியிருக்கிறார்.

நான் ஓவியங்கள் நிறைய வரைவேன். இவளை நினைத்து வரைந்த ஓவியம். ஆசிரியர் என் அம்மாவைக் கூப்பிட்டு நான் வரைந்த ஓவியத்தைக் காட்டி, “உங்கள் 13 வயது குழந்தை வரைந்த ந்யூட் பெயிண்டிங்கை பாருங்க, என்ன குழந்தை வளக்குறீங்க?” என்ற ஆர்ட் டீச்சரின் கேள்விக்கு என் அம்மாவிடம் பதில் இல்லை. “உங்க கணவர் தான் வேலைக்கு போறாரே, நீங்களும் போகணும்னு அவசியமா?” என்றதற்கு அம்மா, “உங்களுக்கு தேவையில்லாத விஷயம் மல்லிகா? எங்கள் கடனையெல்லாம் நீங்களா கட்டுவீர்கள்?”. டீச்சர் நான் வரைந்த படத்தை அம்மா முன் நீட்டி, ”இங்க பாருங்க... இது ஸ்ட்ரைட்டா ப்ரிண்ஸி ரூம் போக வேண்டியது! உங்கக்கிட்ட குடுக்குறேன்னா அதுக்கு காரணம் என்னன்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்க! எல்லா தடவையும் என்னால குழந்தைகளுக்கு டீ.ஸி.ய சேவ் பண்ணி குடுத்துட்டு இருக்க முடியாது!”

வீட்டிற்கு வந்து அம்மா என்னை அடி அடியென்று அடித்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. அம்மாவின் செல் போன் அடித்தது. செல்ஃபோன் ஸ்க்ரீன் காலர் ஐ.டி.யில் ‘கண்ணழகா’ என்ற நேம் விட்டு விட்டு ப்ளிங்க்கானது. நோக்கியா ரிங்க்டோன். எடுத்து காதில் வைத்த என் அம்மாவின் உற்சாக முகம் வாடியது, ”இன்று இரவும் நான் வரமாட்டேன்” என்று அப்பா சொன்னது எனக்கு தெளிவாகக் கேட்டது. அம்மா ஃபோனை ஸ்பீக்கர் மோடில் போட வில்லை என்பதையும் தான் கவனித்தேன். அழுதுக்கொண்டே ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பெரிய பாட்டில்லை எடுத்து தண்ணீர் குடிப்பது போல் மொடக் மொடக்கென்று அந்த மருந்தைக் குடித்தார்கள். என்னைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்கள். அந்த மருந்து தான் அம்மாவை அழ வைக்கிறது. நான் திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் அந்த மருந்தை குடிக்கும் போது எனக்கு அழுகையோ, கண்ணீரோ வந்ததில்லை. ஆனால் அந்த மருந்து ஒரே கசப்பாக இருந்தது. இரவில், ஸ்நாக்ஸ் உடன் சேர்த்து அப்பாவும் அம்மாவும் தரையில் பெட்ஷீட் விரித்து கீழே உட்கார்ந்து இரண்டு மூன்று பெரிய மருந்து பாட்டில்கள், ஒரு குட்டி மருந்து பாட்டில் மற்றும் வாட்டர் பாட்டிலுடன் சேர்த்து தினமும் நாங்கள் டின்னர் சாப்பிடுவது இப்படித்தான். எனக்கு மருந்தை குடிக்கத் தர மாட்டார்கள். பெரிய பாட்டிலும் இல்லை சின்ன பாட்டிலும் இல்லை. “ஃப்ரிட்ஜில் மாங்கோ ஜூஸ் இருக்கும். அத எடுத்துக் குடிடா ஹனி, இந்த மருந்தை நீ குடிக்கக் கூடாது” என்று அப்பா சொல்வார். ”மருந்துனா டோசேஜ் கேல்குலஷன்ஸ்ல தானே டாடி சாப்பிடனும்... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் ஃபுல் பாட்டில்ஸ் குடிக்கிறீங்க. இஸ் இட் அட்வைஸபில்?” என்று கேட்டேன். “ஏய்! உள்ளப்போ!” என்றார் அம்மா அதேப் பழைய வேதனைப் பார்வையுடன். “இன்னிக்கி ஆஃபீஸ் முடிந்து கீழ் வீட்ல இருந்து எதுக்கு வந்தீங்க? அங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று அம்மா அப்பாவிடம் கேள்வி கேட்டு முடிக்கும் போது நான் என் ரூமிற்குள் வந்து கதவை மூடிக்கொண்டேன்.

மூன்று நாட்களுக்கு முன் அப்பாவிடம் இதே கேள்வியை நான் கேட்டதற்கு ‘பொளேர்’ என்று அறை கிடைத்தது. எனக்கு வலிக்கவில்லை. அக்ஷயாவிடம் வாங்கிய அறைகளோடு கம்பேர் செய்து பார்க்கையில் இந்த அறைகள் எல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை. அனால் எக்ஸ்பெரிமென்ட் செய்கிறேன் என்று என் அப்பா என்னை வைத்து செய்யும் எக்ஸ்பெரிமென்ட்ஸ் தான் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கும். மூன்று நாட்களுக்கு வலிக்கும். “அப்பா... இட்ஸ் பெய்னிங் பா...ப்ளீஸ் பா...ப்ளீஸ்...ஆ... அம்மா!” என்று கதறுவேன். “அம்மாவிடம் சொன்னால் அவளுக்குத் தான் அடிவிழும்!” என்று சொன்னதால் நான் எக்ஸ்பெரிமென்ட் பத்தி அம்மாவிடம் எதுவும் பேசுவதில்லை. அடி விழுந்தால் அம்மா சிரிக்கமாட்டாள். இன்னும் அதிகமாக அழுவத்தான் செய்வாள். சும்மாவே அவள் என்னைப்பார்த்து அழுதுக்கொண்டிருப்பாள். அவளுக்கு பொழுதுபோகவில்லை என்றால் என்னைப் பார்த்து அழுவாள். அம்மா சிரிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

மயக்க வைக்கும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க வேளச்சேரியில் இருக்கும் மக்கள் என் வீட்டு மொட்டை மாடிக்குத் தான் வரவேண்டும். அஸ்தமனத்துடன் அவள் கொடியில் துணிக்காயப்போடும் அழகை சொல்ல உவமையும் இல்லை உவமேயமும் இல்லை. அவள் பெயர் அக்ஷயா. நான் அவளிடம், “ஏன் முன்ன மாதிரி நீ டீ.ஷர்ட். போடுவதில்லை?” என்று கேட்டதற்கு அவள், “அம்மா ஒதைப்பாங்க” என்று பதில் சொன்னாள் ஈரத்துணியை உதறிவிட்டு கொடியில் காயப்போட்டவாரு. என்னை அப்படியெல்லாம் ‘டீ.ஷர்ட் போடக்கூடாது என்று இதுவரை யாரும் சொன்னதில்லையே என்று எண்ணினேன். பிறகு, “நீ ஸ்லீவ்லெஸ் எல்லாம் போடக்கூடாதா? உனக்கு கம்ஃபெர்ட்டா இருக்கும்ல?” என்று நான் கேட்டதற்கு அவள், “இங்கப்பாரு எங்கிட்ட இப்படி பேசாத தப்புன்னு எவ்வளவு தடவ சொல்லிருக்கேன்? அறிவில்ல?” என்றவாறு விடுக்கென்று கீழே சென்றுவிட்டாள். படியில் அவள் வேகமாக இறங்க நான் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் துப்பட்டா அணியவில்லை. அவள் கையில் இருந்த செல்ஃபோன், “கண்ணழகா...” என்று பாடியதும் தன் கையிலிருந்த அவள் செல்லை எடுத்துப் பார்த்தாள். அவளின் ஃபோன் ஸ்க்ரீனுக்கும் எனக்கும் பத்தடி தூரம். காலர் ஐ.டி.யில் கார்த்திக்கேயன் என்று இருந்தது. “யார் அவன்?” என்று மனம் துடித்தது. என் அப்பாவின் முழுப்பெயர் அது. “கார்த்தி?” என்றபடியே படியில் இறங்கி சென்றாள். தரைதளத்தில் இருக்கும் யாருமில்லா அவள் வீட்டிற்கு சென்று கதவை வேகமாக அடித்தாள். “சொல்றா?” என்றவளின் குரல் சன்னமாக கேட்டது.

“அறிவில்ல?”, அவள் பேசிய சொற்களிலேயே என்னை மிகவும் தாக்கிய சொல். ஏன் என்று தெரியவில்லை. மொட்டைமாடியில் சூரிய அஸ்தமனம் முடிந்து முழு பவுர்ணமி நிலவு ஏறியிருந்தது. என் மனஅழுத்தம் வெறிப்பிடித்தாற்போல் ஜாஸ்தியாகிக் கொண்டே போனது. உலகில் உள்ள எல்லா ஆண்களையும் வெட்டி என் காலடியில் போட்டு குருதி வழிய வழிய உயிரைக் கொல்ல வேண்டும் என்னும் வெறியேறி தலைவலித்தது. எனக்குள் யாரோ என்னையறியாமல் என்னிடமே பேசுவது போல உணர்ந்தேன். அது நான் இல்லை. ஆனால் என்னை விட வயதில் அது பெரியது போல் உணர்தேன். புயல் போல் அடித்த அந்த தென்றல் காற்றில் அது என்னைவிட்டு வெளியே வர முயற்சி செய்வதுபோல் உணர்ந்தேன். மனஅழுத்தமும் அதனுடன் சேர்ந்து எரிமலைக்குழம்பாக என்னைவிட்டு வெளியே வர ஆயத்தமாகி கொண்டிருந்தது. என் வயிறு திடீரென்று வலித்தது. என் காலடியில், ஆண்களை எங்கே போட்டு குருதி வழிய வழிய கொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அதே இடத்தில் இப்போது குருதி மட்டும் சிவப்பாக இருந்தது. மயக்க நிலையை உணர்ந்தேன். இந்தக் குருதி என்னவென்று எனக்குத் தெரியும், இதன் பெயர் ‘மெனார்க்கீ’. அக்ஷயாவின் சம்பவம் நடந்து முடிந்து கடந்த இரண்டு வருடங்களாக இதனைப்பற்றி தான் ரிசர்ச் செய்துக்கொண்டிருக்கிறேன். எப்போது நான் இந்தப் புனிதத்தை அனுபவிப்பேன் என்று என் மனம் அடித்துக்கொள்ளும். இன்று என் ப்யூபெர்ட்டியை அடைந்து விட்டேன். இந்த உணர்வே இப்படியென்றால் என் தாய்மையுணர்வு எவ்வாறு இருக்கும். என் முன்னால் கற்பனைகளில் விரிந்த சொற்கத்தின் ஸ்பரிஸத்தை உணர்ந்தபோது என் இதழ்கள் அந்த தருணத்தை ப்ரசவித்தன. இந்தக் குமரியின் இளஞ்சிரிப்பு பிறந்த மகோன்னதத் தருணம். அழுத்தங்கள் நுண்ணியதாகின. பின்னோக்கிப் பறக்கும் ஞிமிர்சிட்டுப் பறவையை போல உணர்ந்தேன். மனம் கொண்டாட்டமாய் இருந்தது.
இன்றைக்கு வயிற்று வலியினால் என் அம்மாவும் ஆஃபீஸ் லீவ் போட்டிருந்தார்கள். “முதலில் இதை அம்மாவிடம் சொல்லவேண்டும். மேலே இழுத்து வந்து அவரிடம் இந்த இடத்தைக் காட்ட வேண்டும். அதன்பின் இடத்தை சுத்தம் செய்யவேண்டும். மெனார்க்கீ விஷயத்துடன் சேர்த்து இன்னொரு சப்ரைஸ் நியூஸான எனக்குக் கிடைத்திருக்கும் ஃப்ரீ ஸ்காலர்ஷிப் பற்றியும் சொல்லவேண்டும். அம்மா மகிழ்ச்சியில் திளைத்து சிரிக்க வேண்டும். அவ்வளவுதான்.”
இதற்கு அப்பாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? இந்த விஷயத்தால் அப்பா தினமும் என்னுடன் செய்யும் எக்ஸ்பெரிமென்ட்டுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? அம்மாவிடம் சொல்லலாமா? அம்மாவிடம் சொன்னால் அவர்களுக்கு அடி விழும். மிஸ்ஸிடம் சொல்லலாமா? எனக்கு பிடிக்காத அந்த ஆர்ட் டீச்சருக்கு அடி விழட்டும். என்னால் முடியாததை அப்பாவின் முலமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.!” என்று நான் பவுர்ணமி நிலவை பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கையில்... பின்னாலிருந்து, “ஷக்தி!” என்ற என் அம்மாவின் குரல்.

என் அருகில் வந்தார்கள். பார்த்தார்கள். உணர்ந்தார்கள். சிரித்தபடி என்னை இழுத்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தார்கள். எதிர்பார்க்காத ஸ்வீட் சப்ரைஸ். இதழ்கள் மறுபடியும் குமரி இளஞ்சிரிப்பை ப்ரசவித்தன...

- எழுதியவர் - https://www.facebook.com/Krishnaprasath24