PDA

View Full Version : EngaL Thaayaham eththanai azhahu



KARTHIGAIPOO
18th December 2005, 09:11 AM
~ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை~

எங்கள் தாயகம் எத்தனை அழகு

தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்....
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,
அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித் தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல் வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப் பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின் தலையைப்போல்
உன்னத அழகோடு ஓடிவருகின்றனவே
ஏன்?
தொட்டளைந்த பூமியின் சுகமும், மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின் மாமரங்கள்போல....
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக் கன்றுகள் போல....
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல....
எங்கள் தாயகம் எத்தனை அழகு.

தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
"தால் ஏரி" காலெடுத்து நடக்கும் "காஷ்மீரை"
காணக்கண்கோடி வேண்டுமாமே.
"ஹாவாய்" தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?
தென்தமிழீழத்தைத் தெரியாத ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும் மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே பாருங்கள்@
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும் பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.
காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும் நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும் பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
"வெருகல்|" வேலன் திருவிழாக் காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கைநீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!
தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.

வெள்ளிநிலா விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே மீனுருவம் கொண்ட
"நீரரமகளிர்"
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!
மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும் பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும் வெள்ளமாகும்@
கன்றை நினைத்து கால்களை நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில் காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள் உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக் கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில் மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும் பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல....
ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப் போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் "கறுத்தக் கொழும்பான்" அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில் விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது@
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது@
செழிப்பானதே தவிர செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.
போராட்டத்தீயால் பொசுங்கி எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும் நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப் பூட்டுவோம்

KARTHIGAIPOO
18th December 2005, 09:25 AM
குந்த ஒரு குடிநிலம்

வெறும் சடப்பொருளான மண்ணுக்காக
எத்தனை சாவுகள்?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு
ஊடகமான மொழிக்காகவா
இத்தனை மரணங்கள்?
இப்படி அங்கலாய்ப்போர் இருக்கின்றனர்.
இந்தப்போரினால் இறந்து போனவர்களுக்குள்ளே
எத்தனை பாரதிகள்
எத்தனை மக்சிம் கார்க்கிகள்
எத்தனை டால்ஸ்டாய்கள்
எத்தனை மார்கோனிகள்
இன்னும் ஐசாக் நியூட்டன்கள்
மேரிகியூரி அம்மைகள்
எத்தனைபேர் இருந்தார்களே?
அத்தனைபேரும் அழிந்துவிட்டார்களே!
இப்படி மூக்குநீர் சிந்தி
முட்டைக் கண்ணீர் வடிப்போருண்டு
விரிந்த இந்த உலகமே
மனிதன் வாழ்வதற்காககத்தானே
இதில் தமிழனுக்குத் தனிநாடு வேண்டுமா?

இப்படிக் கேட்போர் இன்றும் இருக்கின்றனர்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு
முன்தோன்றியது தமிழென்றால்,
அந்த முதற் தமிழன்
காலெடுத்து நடந்த நிலம் எது?
அவன் மலம் கழித்துவிட்டு கழுவியது எதனால்?
இப்படி அங்கதம் கமழ ஆரவாரிப்போர் உண்டு.
எல்லாவற்றையும் சோத்துக் கோர்த்தால்....
இவர்கள் எழுப்புவதும்
எதிரொலிப்பதும் என்ன?
சரியாக நிலம் வெளிக்காத ~இளம்காலைப் பொழுதுகள்
பகலாகாது@ இரவானது கொடுமையாம்.
சரி,
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால்....
உயிர்ப்புடன் பிறந்தலையெல்லாம் போராடுகின்றன
இந்தத் தத்துவம்
இவர்களுக்கு மட்டும்
புதைந்துபோன செப்பேடுகள் ஆனது ஏன்?
போராட்டம் பூப்பறிக்கும் வேலையென்று
இவர்களுக்கு பாடம் கற்பித்த பரமபிதா எவன்?

குருதி சொரியாது உரிமை பெற்றதுக்கு
ஒரு உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
தமிழீழம்
இவர்களுக்கு கனவாக இருக்கலாம்.
போராடும் எங்கள் மக்களுக்கு
கையள்ளி மகிழும் காலடி மண்தான்
எட்டிப்பிடிக்கக்கூடிய தாயின் மடிதான்.
விரிந்த காலுடைய கும்பிடு பூச்சிகளான
இவர்களுக்கு
ஆபிhக்கா அத்தை வீடாகவும்,
அமெரிக்கா அக்கா வீடாகவும் இருக்கலாம்.
எங்கே, இந்தச் சர்வதேச வாதிகள்
அத்தை வீட்டுக்குள்ளே...
அனுமதியின்றி நுழையட்டும் பார்க்கலாம்?
இவர்களுக்கு
உலகம் ஒரே கூரையின் கீழ் உறங்குகிறதாம்.
ஆனால்....
கூரை ஒன்றானாலும்
குடியிருப்புகள் வேறு வேறு என்பது
இவர்களின் அகராதியில் மட்டும்
அச்சழிந்து போய்விட்டதா?

தமிழீழம் வெறும் மண்ணாகவா
இவர்களின் கண்களுக்குத் தெரிகிறது?
இந்த மண்ணில் தானே
எங்கள் நு}று தலைமுறையே புதைந்து கிடக்கிறது.
மூன்றடி தோண்டினால் போதுமே
நம் முன்னோர்களின் எலும்புக்கூடுகள் தலைநிமிர்த்தும்.
இங்கு வீசும் காற்று வெறும் காற்று மட்டும் தானா?
எங்கள் பரம்பரையின் மூச்சும் அதில் கலந்திருப்பது
இவர்களின் சுவாசத்துக்கு ஏன் தெரியாமல் போனது?
முற்றத்தில் நிற்கும் பலா மரத்தைக் கீறினால்...
வடிவதும் பால் மட்டும் தானா?
எங்கள் முந்தையரின்
குருதியும், வியர்வையும் கொப்பளிப்பது
இவர்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
எங்கள் கோவில் வீதிகள்
வெறிச்சோடிப்போன வெறும் வெளிமட்டும் தானா?
யார் சொன்னது?
எமது பாட்டன் ராமன் வேடம் தரித்து
மேடையில் நின்றபோது
பாட்டி தன்னை சீதையாக உருவகித்து
மனதுக்குள்ளே....
மாயமான் கேட்டு நின்ற மண்ணல்லவா?
எப்படி எங்கள் தாய் நிலமும்
அரபுப் பாலைவனமும் ஒன்றாக முடியும்?
இவர்களுக்கு எல்லைகள் தொல்லைகளாக இருக்கலாம்
ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றனவே.
கடலுக்கு நிலமும்,
நிலத்திற்கு கடலும் எல்லைகள் ஆகும்போது
எங்கள் தாய் நிலத்துக்குமட்டும்
வேலிகள் வேண்டாமா?
வெள்ளிக்கிழமை விரதச் சாப்பாட்டின் பின்னர்,
சாணிமெழுகிய திண்ணையில்
சரிந்து படுக்கின்ற இன்பம் இருக்கிறதே.
இது இங்கன்றி
வேறு எந்த மண்ணில் ஏற்படும்?
தாய் மடிதானே சந்தோசம்.
அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
ஊத்தை உடுப்பென்றாலும்
ஆச்சியுடன் ஒட்டியிருக்கும் சுகமிருக்கிறதே
அதைவிடச் சுகம் எதுவுமே இல்லை.
சப்த சமுத்திரங்களுக்கும் சொந்தம் கொண்டாடும்
சர்வதேச வாதிகளுக்கு
மட்டக்களப்பு வாவியின் மகிமை தெரியாது.
நைல் நதி தீரமும் நமதென்று சொல்பவர்களுக்கு
கீரிமலைக் கேணியின்
ஊற்று நீரின் உன்னதங்கள் புரியாது.
அல்ப்ஸ் மலை அழகுதான்
அதற்காக
கோணமலை கோரமலை ஆகிவிடாது.
எங்களுக்கு....
பாய் விரித்துப் படுத்துறங்கவும்,
அச்சமின்றி ஆடிப்பாடவும்,
குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
எல்லைபோட்ட கொல்லை
இதுதான் எங்கள் குறிக்கோள்!.