PDA

View Full Version : S.VAIYAPURI PILLAI -Introduction.



devapriya
12th September 2007, 03:34 PM
எஸ். வையாபுரிப் பிள்ளை - ஓர் அறிமுகம்-1

பி.கே. சிவகுமார்

எஸ்.வையாபுரிப் பிள்ளை என்ற பெயர் அவரைப் பற்றி அறிந்தவர்களிடையே எழுப்புகிற மனச்சித்திரங்கள் பலவாறாக இருக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிழ்கிற ஒரு சாராருக்கு அந்தப் பெயர்மீது இருக்கிற விமர்சனங்கள் வரலாறு அறிந்ததே. 'எழுக கவி ' என்று மஹாகவி பாரதியாரால் வாழ்த்து பெற்ற பாரதிதாசன் கூட திரிந்துபோய் 'பாதக்குறடெடுத்து உன்னை பன்னூறு முறை அடிப்பேன் ' என்று வையாபுரிப் பிள்ளையை வைதது வரலாறு. ஆனால், காய்தல் உவத்தல் அற்ற பார்வை உடையவர்களுக்கும், அறிவியல் ரீதியாக தமிழாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், தமிழின் தொன்மையும், வரலாறும், மாற்றங்களைத் தமிழ் அரவணைத்து ஏற்றுக் கொண்ட பரிணாமமும் அறிந்தவர்களுக்கும் வையாபுரிப் பிள்ளை ஒரு லட்சினை. இப்படி அவரைப் பற்றிய இருவேறு எதிரெதிரான கருத்துகள் நிலவுகிற போதிலும், 'தமிழாய்வில் ஒரு புதுயுகத்தினை தோற்றுவித்தவர் ' (தமிழின் மறுமலர்ச்சி முகவுரையிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்) அவர் என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு அவர் சாதனைகளும் நூல்களும் நிற்கின்றன.

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியாக 1926லிருந்து 1936வரை சிறப்பாகப் பணியாற்றி, அந்தப் பேரகராதியை வெற்றிகரமாக வெளிக் கொணர்ந்தவர் வையாபுரிப் பிள்ளை. இன்றைக்கும் கூட இணையத்திலும் பிற இடங்களில் இந்த அகராதியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது அதன் பெருமைக்கும் உள்ளடக்கத்துக்கும் சான்று. 1936லிருந்து 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர், திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் என்று பல மொழிகள் அறிந்தவர். மனோன்மணீயம், புறத்திரட்டு, நாமதீப நிகண்டு முதலிய நிகண்டுகள், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். நவீன மற்றும் புதிய இலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த அறிவும் திறமையும் உடையவர்.

1947 செப்டம்பரில் வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகி, பாரதிதாசன் போன்றோரிடமிருந்து வசைகளை பதிலாகப் பெற்றுத் தந்த, அவரின் 'தமிழின் மறுமலர்ச்சி ' என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் கிடைக்காமல் அதன் ஜெராக்ஸ் காப்பி மட்டுமே கிடைத்தது. பேராசிரியரின் நூல்களைப் பதிப்பிப்பதற்கென்றே 1987ல் உருவாக்கப்பட்ட வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம் இந்நூலை 1989ல் மறுமதிப்பு செய்திருக்கிறது. ஆனால் புத்தகங்கள் தீர்ந்துபோய் விட்டன என்று தோன்றுகிறது.

வெறும் உணர்வுகளின் குவியலாகிப் போகிற கண்மூடித்தனமான தமிழ்க் காதல், திராவிட கோட்பாடுகள், அவை தமிழ்ச்சூழலில் கட்டமைத்திருக்கிற பிம்பங்கள் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு, வையாபுரிப் பிள்ளை இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறார். ஒரு விஷயத்தின் எல்லாத் தரப்பையும் அறிய வேண்டும் என்று விரும்புபவர்களும், அறிவியல்ரீதியான, ஆராய்ச்சிபூர்வமான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நிரூபணங்களை விரும்புபவர்களும் வையாபுரிப் பிள்ளையை விரும்பிப் படிப்பார்கள். ஆராய்ச்சிகளில் கால வரையறைகள் செய்யும்போது, 'மறு ஆராய்ச்சி வரும்வரை இம்முடிபுகளை ஏற்றுக் கொள்ளலாம் ' என்று வையாபுரிப் பிள்ளை எழுதுவாராம். அது அவரின் அறிவியல் மற்றும் திறந்த அணுகுமுறைக்கு உதாரணம். தான் சேர்த்து வைத்திருந்த 6000க்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தன் காலத்துக்குப் பின் அவர் நூலகத்துக்கு அளித்து விட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

திண்ணை களஞ்சியத்தில் வையாபுரிப்பிள்ளை பற்றி வெங்கட் சாமிநாதன் ஆற்றிய உரை இருக்கிறது. அதைப் பின்வரும் இடுகைகளில் காணலாம்.

பேராசிரியரின் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூலில் இருக்கிற கட்டுரைகளின் உள்ளடக்கத்தையும், அவை குறித்தான என் வாசகப் பார்வையையும் முன்வைக்க இனி முயல்கிறேன்.

பி.கு.: அவரைப் பற்றி மேற்சொன்ன விவரங்களில் பலவற்றை அவரின் நூல்களில் இருந்தே எடுத்து என் மொழியில் கொடுத்திருக்கிறேன்.

http://pksivakumar.blogspot.com
திண்ணையில் பி.கே. சிவகுமார் //
DEVAPRIYA

aanaa
13th September 2007, 01:40 AM
நன்றி; தகவலுக்கு

devapriya
13th September 2007, 10:17 AM
எஸ் வையாபுரிப் பிள்ளையின் 'தமிழின் மறுமலர்ச்சி ' - 2 பி.கே. சிவகுமார்
(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)

முன் குறிப்பு: நூலின் ஆசிரியர் சொல்கிற கருத்துகளை சில இடங்களில் அப்படியேயும் சில இடங்களில் என் மொழியிலும் தந்திருக்கிறேன். ஆங்காங்கே என் கருத்துகளும் உண்டு. என் கருத்துகள் சொல்லப்படும் இடங்கள் எவை என்பது தெளிவாகப் புரியுமாறு அமைத்திருக்கிறேன்.
**** **** ****

ஏறக்குறைய 443 பக்கங்கள் உடைய இந்த நூலின் கட்டுரைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
1. தமிழின் மறுமலர்ச்சி
2. சொற்கலை விருந்து
3. சொற்களின் சரிதம்
4. நிகண்டுகள்
5. அகராதி

தமிழின் மறுமலர்ச்சியில் 17 கட்டுரைகளும், சொற்கலை விருந்தில் 16 கட்டுரைகளும், சொற்களின் சரிதத்தில் 10 கட்டுரைகளும், நிகண்டுகளில் 5 கட்டுரைகளும், அகராதியில் 5 கட்டுரைகளும் உள்ளன.
**** **** ****

தமிழின் மறுமலர்ச்சி:
நூலின் தலைப்பைக் கொண்ட இக்கட்டுரையில் தாய்மொழி மீது இருக்கிற அன்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று சொல்கிற பேராசிரியர் தமிழில் காணப்படுகிற பல்வேறு வகையான மொழிசார்ந்த வாதங்களையும் (இஸங்களையும்), அவற்றின் நன்மை, தீமைகளையும் விளக்குகிறார்.

முழுமுதல்வாதம்:
ஒருவர் தாய்மொழிமீது பேரன்பு கொண்டிருத்தல் இயற்கை. மொழிகள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் வருகிற இயல்புடையன. இவ்வளர்ச்சிக்கு மொழிமீதான அன்பு தடையாக இருந்தால் அது நெறிதவறிய அன்பாகும். தன் குழந்தையைக் கெடுக்கிற நோக்கமுள்ள தாய், குழந்தையின் முன்பாகவே குழந்தையைவிட மிஞ்சிய அழகும் அறிவுமுள்ள இன்னொரு குழந்தை கிடையாது என்று சொல்வது போன்றது தமிழுக்கு முழுமுதல்தன்மை கற்பித்து அதைவிடச் சிறந்த மொழி கிடையாது என்று சொல்வது. குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அதன் அழகைப் புகழ்ந்தால் மட்டும் குழந்தை வளர்ந்து விடாது. அப்படி, தமிழின் வளர்ச்சிக்கு உதவுவனவற்றைச் செய்யாது அதன் தொன்மையையும் பெருமையையும் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்துவிடாது என்கிறார் பேராசிரியர்.

உதாரணமாக,
எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று திருக்குறளுக்கு ஒருவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தைக் காட்டுகிறார். இத்தகைய பாடல்கள் இக்காலத்தில் சிரிப்பை வரவழைக்கக் கூடியன. இது திருக்குறளின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகாது. இத்ககைய மனப்பாங்கு தமிழர்களுக்கு இருத்தலாகாது என்கிறார் பேராசிரியர்.

தமிழ் செம்மொழி, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்கிற மொழி அரசியல் இன்னும் நடந்து கொண்டிருக்கிற இச்சூழலில் பேராசிரியரின் இக்கருத்துகள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியவை.

உதாரணமாக, இணையத்தை எடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் நான் பார்த்த அனைவருக்கும் அபரிதமான தமிழ்ப்பற்று இருக்கிறது. நல்ல விஷயம். ஆனால் அந்தப் பற்று பெரும்பாலும் உணர்வு சார்ந்த ஒன்றாக நின்றுபோய் ஒரு மட்டத்துக்கு மேல் தானும் வளராமல் மொழியையும் வளரவிடாமல் செய்துவிடுகிறது என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ் உயிருக்கு நேர், தமிழ் உலகைவிட மேல் என்கிற வெற்றுக் கோஷங்கள் எதற்கு உதவும் ? தமிழின் மீது உண்மையான அக்கறை ஊறுகிற பலரும்கூட இத்தகைய கோஷங்களை முழங்குவதும், தமிழின் பெருயையைப் பறைசாற்றுவதும் மட்டுமே தமிழுக்கு ஆற்றுகிற தொண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை என்பது உண்மை.

தூயதமிழ்வாதம்:

முழுமுதல்தன்மை வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது தூயதமிழ்வாதம். பேச்சிலும் எழுத்திலும் தூய தமிழ்ச் சொற்களையே புழங்குதல் வேண்டும் என்பது இவ்வாதம். பேசும்போதும் எழுதும்போதும் சொல்லப்படும் கருத்துக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ற சொற்களைப் பயன்படுத்துவதே முறையாகும். இவை தமிழ்ச் சொற்களா, பிற மொழிச் சொற்களா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது எழுத்தாளரின் வேலை அல்ல. அது மொழிநூற் புலவரின் (Philologist) வேலை. தூய தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. பிறமொழிச் சொற்களை உபயோகிக்க வேண்டிய இடமும் உண்டு. தகுதியறிந்து சொற்களை ஆளுவதுதான் சிறந்த முறையாகும்.

தூயதமிழ்வாதம் பெரும்பாலும் வடமொழியை (சம்ஸ்கிருதம்) நோக்கி எழுந்தது. தூயதமிழ்வாதிகள் வடமொழிச் சொற்களைத் தவிர ஏனைய சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சி பயின்றவர்கள் அங்ஙனம் சொல்ல மாட்டார்கள். தமிழ் மக்கள் வடநாட்டாரோடு பிற நாட்டாரோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள். பிறநாட்டுச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

உதாரணமாக, பின்வரும் தொல்காப்பிய சூத்திரத்தைப் பாருங்கள்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை

இதிலே 'ஓரை ' என்பது கிரேக்கச் சொல். இப்படிப்பட்ட பல பிறநாட்டுச் சொற்கள் பண்டைத் தமிழில் இருத்தல் வேண்டும். அவற்றை இப்போது இனம்காணவோ, வரையறுக்கவோ இயலாது. ஆராய்ச்சிகள் அதிகமாக, அதிகமாக காலப்போக்கில் அவற்றை வரையறுக்க இயலக்கூடும்.

இத்தகைய பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கியபின் எஞ்சிய சொற்களைத்தான் தூயதமிழ்ச் சொற்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் பேராசிரியர். அத்தகைய தூய தமிழ்ச் சொற்கள் அளவில் குறைவானவையாகவே இருக்கும். அவற்றைக் கொண்டு எவ்வகையானக் கருத்துகளை வெளியிட முடியும் என்றும் கேட்கிறார் பேராசிரியர். தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது, நாகரிகம் அடைந்த ஒருவன் மிருகப் பிராயமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்கு ஒப்பானது என்கிறார்.

தூயதமிழ்வாதிகள் சிலநேரங்களில் ஆவேசம் கொண்டு வடமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்கள் என்பர். இதற்கு உதாரணமாக, காப்பியம், நாடகம் ஆகிய சொற்களைப் பேராசிரியர் காட்டி விளக்குகிறார்.

கடைசியாக, தூயதமிழ்க் கட்சியோடும் போர் புரிந்து எப்பொழுதும் வளர்ச்சியே குறித்து நிற்கும் தமிழின் பெருநலத்தைப் பேணுமாறு தமிழ் மக்கள் முயலுதல் வேண்டும் என்றும் வேண்டுகிறார்.

மேற்கண்ட கருத்து மட்டுமல்லாமல், நூல் முழுக்கவே பேராசிரியரின் கருத்துகளின் தெளிவும் தர்க்கமும் சான்றுகளும் துணிவும் என்னை வியக்க வைக்கின்றன. 1947ல் மொழி சார்ந்த உணர்வுவாதங்களும் திராவிட வாதமும் வளரத் தொடங்கிய காலத்திலேயே பேராசிரியர் வைத்திருக்கிற் அறிவியல்பூர்வமான வாதங்களைத் தமிழர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்ட பழியே தமிழ் நாட்டில் மொழி சார்ந்த அரசியலை திராவிட இயக்கங்கள் வளர்க்கவும் அதன்மூலம் அரசாளும் வாய்ப்பு பெறவும் காரணமாயிற்று. தமிழும் தமிழ்நாடும் அதனால் நலிவுற்றன என்பது என் கருத்து.

பழந்தமிழ்வாதம்:

'தூயதமிழ் என்பது தேவையில்லை. ஆனால் பிற்காலத்தில் சேர்ந்துள்ள வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழின் அழகைக் கெடுத்துவிட்டன. தமிழும் அதனால் எளிமையாகிப் போனது. எனவே, பழந்தமிழ் நடையில் பழந்தமிழ் சொற்களைப் புழங்கி, தமிழின் பெருமை, செறிவு ஆகியவற்றைக் காட்டுதல் வேண்டும் ' என்று சிலர் கூறுவர். இதைப் பழந்தமிழ்வாதம் என்று சொல்லலாம்.

இதை ஏற்றுக் கொள்வதென்றால், முதலில் பழந்தமிழ் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பழந்தமிழ் என்பது சங்க நூல்களும் அவற்றின் தமிழும் மட்டுமா ? நாயன்மார்கள், ஆழ்வார்கள் அருளியது பழந்தமிழில் சேருமா ? பின்னர்த் தோன்றிய காவியங்கள், பிரபந்தங்கள் ஆகியவையும் பழந்தமிழ் ஆகுமா ? இப்படித் தோன்றுகிற பல கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம்.

உதாரணமாக, தற்காலத்துக்கு உரிய பொருளை இறையனார் களவியல் உரையின் நடையில் எழுதுவது அருமையாய் இருக்கும். விநோதமாகவும் இருக்கும். சிறு குழந்தையாக இருக்கும்போது தைத்த உடை ஒன்றை வளர்ந்து பெரிய ஆளானபின் அணிந்தால் அது அளிக்கிற நகைச்சுவைக்கு ஒப்பது இது.

(இணையத்தில் வெண்பா எழுதி மகிழ்கிற காட்சி இந்த இடத்தில் ஏனோ என் நினைவுக்கு வருகிறது. இந்த வரி யாரையும் தனிப்பட்டுக் குறிப்பிடாமல் நிலவுகிற ஒரு போக்கைச் சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. எந்த வாசிப்பிலும் வாசிப்பவர்க்கு அவர் அறிவு அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒத்த காட்சிகள் வாசிப்பினூடே தோன்றுவது இயற்கை. அத்தகைய ஒத்த காட்சிகள் சரியா தவறா என்ற விவாதம் எப்போதும் இருக்கும். என் வாசிப்பின்போது எனக்குத் தோன்றிய ஒரு காட்சியை இங்கே சொல்லியுள்ளேன். தனிப்பட்ட விமர்சனமென்று யாரேனும் தவறாக எடுத்துக் கொண்டால், என்னை மன்னிக்கவும்.)

ஒரு மொழியின் சொற்கள் அம்மொழி பேசும் மக்களின் அனுபவத்துக்கு அறிகுறி. பழந்தமிழை மட்டுமே பயன்படுத்தி, அதன் பின்னர் நிகழ்ந்த அனுபவங்களை உணர்த்தும் சொற்களைப் புறக்கணித்துவிடுதல் கூடாது. பழந்தமிழ் கட்சியினரின் கொள்கை பரவுமானால், தமிழ் மொழியும் வடமொழி போல வழக்கொழிந்து போவதற்கு இடமுண்டு என்கிறார் பேராசிரியர்.

பழஞ் சொற்களில் வழக்கொழிந்து போனவற்றை நீக்கிவிட்டு, உயிருள்ள சொற்களோடு காலத்துக்கேற்ற புதுச் சொற்களும் கலந்து தமிழ் வளம் பெற வேண்டும் என்பது முன்னோர்களின் கருத்து. 'கடிசொல் இல்லை காலத்துப் படினே ' என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதனையே சொல்கிறது. சொற்களைப் போன்று மொழி நடையும் காலத்துக்கு காலம் மாறுபடும். அதை அறிந்து தற்காலத்துக்கு உரிய நடையைக் கையாளுதலே சிறப்பு. ஆகவே, பழந்தமிழ்க் கட்சியோடு போர்புரிந்து தமிழ்மொழி என்றும் புதுநலத்தோடு விளங்குமாறூ தமிழ்மக்கள் பணிபுரிய வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

இலக்கணவாதம்:

பழந்தமிழ் வாதத்துடன் சேர்ந்து ஒன்றாகக் கவனிக்கத்தக்கது இலக்கணவாதம். இவ்வாதிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த இலக்கண வரம்பை இன்றும் நாம் கைவிடக் கூடாது என்பர்.

உதாரணமாக, சொல்லின் புணர்ச்சி இலக்கணம்.

'கடல்தாவு படலம் ' என்பது 'கடறாவு படலம் ' என்று புணர்ந்து வரும். இதிலுள்ள சந்தி, இலக்கணத்துக்கும் பொருளுணர்ச்சிக்கும் அவசியம் என்று முற்காலத்தில் கருதப்பட்டது. அதேபோல, 'சொல்லுதல் தவறு ' என்பது 'சொல்லுதறவறு ' என்று சிலரால் எழுதப்படுகிறது. இது தேவை இல்லாத சந்தியாகும். ஆனால், இத்தகைய சந்திகளைக் கைவிடுவது தவறு என்று இலக்கணவாதம் கூறும்.

அதேபோல், ஒவ்வொரு வாக்கியமும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற வாக்கியத்தின் உறுப்புகள் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இலக்கண வாதம் சொல்லும்.

தொல்காப்பியரது பேரிலக்கணம் தோன்றி ஏறத்தாழ 1500 ஆண்டுகள் ஆகிவிட்டன. நன்னூல் தோன்றி ஏறத்தாழ 700 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு புகுந்த வழக்குகளில் பல நன்னூலில் இடம்பெறவில்லை. அப்படியே நன்னூலுக்குப் பின் வந்த வழக்குகளும் பலவாக இருக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து தெளிந்து எழுதிய இலக்கண நூலே இல்லை. நாம் நன்னூலைத்தான் இப்போதும் கற்று வருகிறோம். 'உரையிற் கோடல் ', 'மிகை ' ஆகிய வழக்குகளைக் கடந்து எத்தனையோ புதிய வழக்குகள் உள்ளன.

இடத்துக்கு இடம் மாறுபடுகிற வழக்குகளும் உண்டு. யாழ்ப்பாண வழக்குகள் தமிழ் நாட்டவர்க்கு விளங்காமல் இருக்கும். தஞ்சாவூர் வழக்கு தென்தமிழ் நாட்டவர்க்கு விளங்காது. முன்னோர்கள் ஆண்ட வழக்குகள்தாம் வழக்குகள். பின்னர்த் தோன்றியன வழக்குகள் ஆகா என்று சொல்வது சரியில்லை. இங்கே ஊன்றி கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். அது, எவ்வளவு சிறந்த இலக்கண நூல் என்றாலும், பிற்காலம் முழுமைக்கும் பொருந்துமாறு அவ்விலக்கணம் அமைந்துள்ளது என்று சிறிதும் கூற இயலாது. இதைப் புரிந்து கொண்டால் இலக்கணவாதம் வலிமையற்றது என்று காணலாம்.

முற்கால இலக்கணப்படி எழுதுவது திருப்தியாக இருக்கும். ஆனால், எழுத்தில் உயிர்த் தத்துவம் தெரிய வேண்டுமென்றால், அது உலக வழக்கையும் பேச்சு வழக்கையும் ஒட்டி அமைவதாக இருக்க வேண்டும். இலக்கணத் தத்துவம் வேறு. உயிர்த் தத்துவம் வேறு. இலக்கணம் ஓர் எலும்புச் சட்டகம். உயிரிருந்தால் அன்றி அதற்கு இயக்கமில்லை. இவ்வாறு சொல்வதால், இலக்கண நியதியின்றி எழுதுவது சரி என்கிற அர்த்தமில்லை. இலக்கணமும் வேண்டும், உயிர்த் தத்துவமும் வேண்டும். இலக்கண நியதியின் எல்லை அக்கால வழக்கினைப் பொறுத்தது. ஆனால், வழக்குச் சொற்களும் பேச்சு நடையும் தமிழ் மொழிக்கு முக்கியமானது. தமிழ் ஓர் உயிருடைய மொழியாக நின்று நிலவுவது இவ்விரண்டினால்தான். இலக்கணக் கட்சியோடு போராடி, அதனையும் தனக்கு அனுகூலமக்க மாற்றிக் கொள்ள தமிழ் முயல வேண்டும்.

தமிழ்ப் பேராசிரியராக இருந்து இத்தகைய நவீன மனப்பான்மையை அந்தக் காலத்திலேயே வையாபுரிப் பிளளை கொண்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சூழலில் (ஏன் கணிசமான அளவுக்கு இன்றைய சூழலில் கூட) இது ஒரு புரட்சிகரமான மனப்பான்மையாகும். தமிழ் மரபின் செழுமைகளை முன்னெடுத்துச் செல்கிற அதே நேரத்தில் பழையன கழித்த நவீனத்தின் தேவையை பாரதிக்குப் பின் பாரதி அளவுக்கு உணர்ந்தவராக அவர் எனக்குத் தெரிகிறார்.

முழுமுதல்வாதம், தூயதமிழ்வாதம், பழந்தமிழ்வாதம், இலக்கணவாதம் ஆகியன தமிழைப் பற்றிக் கொண்டு தோன்றிய வாதங்கள் என்கிற பேராசிரியர், அடுத்தத&

devapriya
13th September 2007, 10:21 AM
முழுமுதல்வாதம், தூயதமிழ்வாதம், பழந்தமிழ்வாதம், இலக்கணவாதம் ஆகியன தமிழைப் பற்றிக் கொண்டு தோன்றிய வாதங்கள் என்கிற பேராசிரியர், அடுத்ததாக பிறமொழிகளின் சார்புபற்றித் தோன்றிய வாதங்களையும் அலசுகிறார்.

எஸ் வையாபுரிப் பிள்ளையின் 'தமிழின் மறுமலர்ச்சி ' - 3 பி.கே.சிவகுமார்

வடமொழிவாதம்:

பிறமொழிகளின் சார்பு பற்றித் தோன்றியுள்ள வாதங்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது இவ்வாதம். தமிழர்கள் இருபிரிவாக உள்ளார்கள். ஒரு பிரிவு, வடமொழிச் சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் அல்லது மிகச் சுருங்கிய அளவில் வேறுவழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்கிறது. அடுத்த பிரிவு, வடமொழிச் சொற்களைப் புழங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் கூடாது என்கிறது. இரு பிரிவுகளும் தத்தம் சார்பாகக் கூறுவதை வடமொழிவாதம் எனலாம்.

இவ்வாதம் இரண்டு காரணங்களால் தோன்றியுள்ளது: 1. வகுப்புத் துவேஷம், 2. அரசியல்கட்சித் துவேஷம்.

ஆனால், துவேஷங்களை ஒதுக்கி, தமிழின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாதத்தை ஆராய வேண்டும். வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவது பிரிவும் உண்டு. அது, தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியது. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கெளரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது.

ஆங்கில வாதம்:

புராதன சரித்திரத்தின் விளைவு வடமொழிவாதம். நவீன சரித்திரத்தின் விளைவு ஆங்கிலவாதம். இவ்வாதம், தாய்மொழியைப் பேணாமல், ஆங்கிலத்தில் பயின்று அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்கிறது. ஆங்கில மோகம் ஒரு சாராரிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் இப்படியில்லை. பெரும்பாலோர் தாய்மொழியின் வளர்ச்சி அதன்மூலம் கல்வி கற்பதிலேயே நிகழும் என்று நம்புகிறவர்கள். ஆனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் உதாசீனமாக இருக்கக் கூடும். தாய்மொழியில் கற்பதில் தடைகள் இருக்கக் கூடும். இவ்வாதத்தை எதிர்க்க தமிழ் தற்கால அறிவியல் அறிவு அனைத்தையும் உட்கொள்ள வேண்டும். பழமையும் புதுமையும் தாங்கி வலிமையுற வேண்டும்.

ஹிந்தி வாதம்:

ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு தேசாபிமானிகள் எழுப்பிய புதிய வாதம் ஹிந்திவாதம். அந்நிய தேச மொழியான ஆங்கிலத்தைவிட, இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாகப் பெரும்பாலோர் புழங்குகிற ஹிந்திக்குத் தகுதியும் உரிமையும் உள்ளதென்று இவர்கள் கூறுகிறார்கள். தமிழுக்கு இதனால் கெடுதி சிறிதும் வருமென்று தோன்றவில்லை. உண்மையிலேயே கெடுதி விளைவிக்குமானால், இவ்வாதத்தைத் தமிழ் எதிர்க்க வேண்டும். ஹிந்தியினாலும் தமிழ் உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அனுபவத்தைப் பெருக்கிக் கொண்டால், அவ்வனுபவம் மூலமாகத் தமிழும் சிறப்பெய்தும். கல்வித் திட்டம் சீரமைக்கப்படும்போது இவ்வாதம் தக்கவர்களால் நன்கு ஆராயப்படலாம்.

சமயவாதம்:

சமயங்களும் புராணங்களும் பொய்கள் நிரம்பின, மக்களுக்குக் கேடு விளைவிப்பன. ஆகையால் இவற்றை ஒழிப்பது அவசியமென்று இவ்வாதிகள் கூறுவர். முதலாவதாகத் தமிழில் உள்ள இதிகாசங்களை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்கிறார்கள். சமயம் பற்றிய வாதத்தை இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புராணம் முதலிய இலக்கியங்களை நோக்குவோம். இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையைப் பொறுத்தன. அவற்றை ஒழிப்பதால் மொழிபற்றிய சரித்திரமும் மக்களின் சரித்திரமும் காணாமல் போய்விடும். இலக்கியங்களில் பழங்கதைகள், பழமைவாத கருத்துகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடக் கூடாது. கிரேக்க கதைகள் இருக்கின்றன. அவை கிரேக்க மொழியில் மட்டுமின்றி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்துள்ளன. இக்கதைகளின் பொருட்டு அவ்விலக்கியங்களை ஐரோப்பியர்கள் ஒதுக்கிவிடவில்லை. மூன்றாவதாக, இக்கதைகள் நம் கவிதைச் செல்வத்தை வளப்படுத்தி, அதன் நயத்தை வளர்த்துள்ளன. பெரும்பாலோர் காவிய நயம் கருதியே இராமாயணம் போன்றவற்றைக் கற்கின்றனர். இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற கட்சியோடு போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.

முடிவுரை:

தமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாக இருப்பன சிலவற்றைப் பார்த்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. எனவே, தமிழுக்கும் தமிழைத் தாய்மொழியாகப் பயில்வோருக்குமுள்ள நெருங்கிய தொடர்பை உணர வேண்டும். தமிழின் குறைகள் நம் குறைகள். அதன் சிறப்பு நம் சிறப்பு. நம் தாய்மொழி மாறாத இளமையோடும் குறையாத வலிமையோடும் என்றும் நிலவுவதற்கு நாம் உழைக்க இறைவன் அருள் புரிக.
(இத்துடன் தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரை நிறைவுறுகிறது.)

விடுதலை வேண்டும்!

இந்தத் தலைப்பிலான கட்டுரை - தமிழுக்கு விடுதலை வேண்டும் என்கிற கூக்குரலும் உழைப்பும் மிகவும் அவசியமாகும் என்கிறது. சிலர் இந்த அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கையாள்கிற முறைகள் சரியில்லை. இலக்கண விதிகளிலிருந்து தமிழ் விடுதலை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இலக்கணம் கற்றவர்கள் கடினமானத் தமிழ் எழுதுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், கடுமையான தமிழ் வேறு. வழக்கொழிந்த தமிழ் வேறு. இந்த இடத்தில் பேராசிரியர் கடுமையான தமிழுக்கும் வழக்கொழிந்த தமிழுக்கும் உதாரணங்கள் தருகிறார். வழக்கொழிந்த தமிழில் புழங்குவது தமிழைச் சிறையிலிடுவதாகும். இதிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இதைப் போலவே, சொற்களின் உண்மை வடிவம் தெரியாமல் மனம் தோன்றியபடி எழுதுவதும் தவறாகும். உதாரணம், ஒற்றுழையாமை என்ற சொல். இது போலி இலக்கணம். இதிலிருந்தும் தமிழுக்கு விடுதலை வேண்டும்.

இன்னும் சிலர், தமிழுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று நினைத்து எதுகை மோனைகளை மிகவும் பயன்படுத்தி, தமிழன்னையை சேற்றில் அழுந்தக் கிடத்தி விடுகிறார்கள். உதாரணம் - சீற்றத்தினால் ஊற்றமுற்றுக் கூற்றமுட்க ஏற்றெழுந்து ஆர்ப்பரித்தான். அருவருக்கத்தக்க இப்படுகுழிச் சேற்றிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்தக் கிளர்ச்சி தோன்றினாலும் அது தமிழ் மொழியில் வந்து பாய்ந்துவிடுகிறது. ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்தணரல்லாதவர்களும் பெளத்த ஜைன சமயத்தவரும் அம்மொழியை வளர்த்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அந்தணர்களுள் ஒருசிலர் அதற்கு இடம் கொடுக்கவும் செய்கிறார்கள். தமிழ் தங்கள் தாய்மொழியல்ல என்பதுபோல் ஒதுங்கி விடுகிறார்கள். தங்களை ஆரியரென்றும் மற்றவரைத் திராவிடரென்றும் சொல்கிறார்கள். ஆரிய திராவிட வாதம் அர்த்தமற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் தனிப்பட்ட தூய திராவிடரும் இல்லை என்பது வரலாற்று உண்மை.

இவையல்லாமல் தூய தமிழ்வாதம், புராண இதிகாச இலக்கிய எதிர்ப்பு வாதம் என்கிற வாதங்களும் தலைதூக்கியுள்ளன. இப்படிப்பட்ட எல்லா வகுப்புவாதக் கொள்கைகளிலிருந்தும் தமிழ் விடுதலை பெற வேண்டும். அதற்கு வள்ளுவர், இளங்கோ, கம்பன், இராமலிங்க சுவாமி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். படித்து வந்தால் தமிழ் மொழிக்கு மாணவர்களே விடுதலை வாங்கித் தந்து விடுவார்கள்.
(இத்துடன் விடுதலை வேண்டும் என்கிற கட்டுரை நிறைவுறுகிறது.)

தமிழும் சுதந்திரமும்

திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டிலும் சமீப காலமாகத் தமிழ் இணையத்திலும் கட்டமைக்கப்படுகிற பிம்பம் - தமிழுக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை. சமயமும் மதமும் பிறர் நம்மீது திணித்தவை என்கிற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்கிறார்களே அல்லாமல், தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிற வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகளை முன்வைப்பதில்லை. கிரேக்க மற்றும் ரோம நாகரிகத்திலிருந்து எல்லா நாகரிகங்களிலும் மதமும் கடவுள் வழிபாடும் இருந்து வந்துள்ளன. இதைச் சொல்வதால் ஒருவர் மதவாதி ஆகிவிட மாட்டார். மதவாதத்தை எதிர்க்கிறவர்கள் கூட வரலாற்றை உள்ளது உள்ளபடிதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மதத்தை அரசியலாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு உதவாத வெறுப்பை வளர்க்கிற ஸ்தாபனமாகவும், அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொண்டிருப்பதை முழுமூச்சுடன் எதிர்க்கிற அதே நேரத்தில், மதத்தை இவர்களிடமிருந்து மீட்பதுடன் மதம் குறித்த செழுமையான மற்றும் முன்னெடுத்துச் செல்லத்தக்க விஷயங்களைச் சொல்வதும் ஒருவரின் கடமையாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் இடதுசாரிகள் மதம் பற்றிப் பேசுவதே பிற்போக்கு என்கிற முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளே மதவாதத்துக்கு எதிரான அயராத போராட்டத்தையும் நடத்தி வருபவர்கள் என்பதும் உண்மை. புராதன தமிழ்ச் சமூகத்தில் சமயத்துக்கும் வேதத்துக்கும் இருந்த இடம் பற்றி தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.