PDA

View Full Version : Lyricist Viveka



R.Latha
30th January 2009, 03:02 PM
[tscii:084e7fb1c5]திருவண்ணாமலையிலிருந்து 36 கி.மீ. தூரத்தில் இருக்கும் சாத்தனூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 2 கி.மீ. மண் பாதையில் நடந்து போனால் தென்பெண்ணை ஆற்றங்கரையில் எந்த வம்புக்கும் போகாமல் சிவனே என வீற்றிருக்கும் ஒன்றரைத் தெரு கிராமம் வேடங்குளம். அதுதான் ‘விவேகா' என்ற சிறுவனை கவிஞனாக வளர்த்து எடுத்தது. என்னில் ஏற்பட்ட அனைத்து மாற்றங்களுக்கும் அந்த வேடங்குளம்தான் காரணம். ஊரின் தெற்கில் பசிய மரங்களைக் கரைகளில் கொண்டிருக்கும் அழகிய குளம் உள்ளது. வெகு நாட்களுக்கு முன் வேடர்கள் வனத்தில் வேட்டை முடித்துக் களைப்புற்றுத் திரும்புகையில் நீரருந்தவே அக்குளம் வெட்டப்பட்டதாக வாய்வழி வரலாறு ஒன்று உண்டு.

பெரிய தெருவின் நடுவில் ஒரு பொதுக்கிணறும் மின் கம்பமும் அவ்வூரின் மிக முக்கிய அடையாளங்கள். காலையில் நீரெடுக்க வரும் பெண்கள் பேசுவதை அரைமணி நேரம் உற்றுக் கேட்டால் ஊரின் சமீபத்திய நிகழ்வுகளில் பெரும் பகுதியைக் குறிப்பெடுத்து விடலாம்.

ஊரிலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால் சாத்தனூர் அணையின் நீர் தேக்கம். விளிம்பில் மரங்களடர்ந்த சுடுகாடு மற்றும் இடுகாடு அதன் சமீபத்திய வரவு குசுமன் பெரியப்பா. உடன் படித்த சிவகாமியைப் புதைத்த இடத்தில் முளைத்திருந்த ஆவாரஞ்செடி நான் ஆடு ஓட்டிக் கொண்டோ இலந்தை பழம் பொறுக்கவோ போகும் ஒவ்வொரு முறையும் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்.

நீர்தேக்கம் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அணை வறண்டே காணப்படும். அப்போதெல்லாம் தேக்கத்தின் நடுவில் உள்ள சின்ன நரிக்கல், பெரிய நரிக்கல் இரண்டும் நாங்கள் விளையாடும் இடங்கள்.

நரிக்கல் குகையின் ஒரு பக்கம் புகுந்து மறுபுறம் வருவதே எங்களுக்கு சாகச விளையாட்டு. அவ்வாறு போகும் போது வௌவால்கள் மோதும் அபாயம் உள்ளது.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் எங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளும் நிறைய மாடுகளும் இருந்தன. அவற்றை மேய்த்து வர ஆட்கள் வைத்திருந்தோம். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் அந்நாட்களில் நானும் அவர்களோடு செல்வேன். சில நாட்கள் நானே தனியாக ஆடுகளனைத்தையும் மேய்த்து மாலையில் அவற்றைப் பாதுகாப்பாகக் கிடைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு ஆட்டின் சாயலும் எனக்கு மனப்பாடம். கொம்பு சுருண்டோ கழுத்தில் மச்சமோ ஏதோ ஒன்று தனிப்பட்ட அடையாளமாக இருக்கும்.

ஒருமுறை கிடையில் ஆடுகளைப் பூட்டும்போது இரண்டு ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரிந்தது. அம்மா துவரை மிளாறில் இரண்டு இழு இழுத்துவிட்டு நான் அழ அழ என்னை அழைத்துக்கொண்டு முன்னிரவு நேரம் சிறிய லாந்தர் விளக்கோடு ஆடுதேடிப் போனது இன்னும் நினைவிருக்கிறது.

தேக்கத்தின் வடக்கெல்லையில் கடுவண் கொல்லை. அதைக் கடந்து மல்லவடியான் கொல்லை, சந்தக்கட்டி குளம் போன்ற காட்டின் பிற பகுதிகளைத் தாண்டினால் லம்பாடிப் பறம்பு. அம்மா ஆட்டின் குரலில் சத்தம் எழுப்ப இரு ஆடுகளும் ஓடி வந்து சேர்ந்து கொண்டன. அப்போதுதான் என் வாழ்வில் முதன் முதலாக நான் நரியைப் பார்த்தது.

குளத்தின் தென்கிழக்கே எங்கள் நிலத்தின் ஒரு பகுதி இருந்தது. அதைப் புளிய மரத்துக் கழனி என்று அழைப்போம். ஊரில் பெரும்பாலும் என் தாத்தாவிடமிருந்தோ, அப்பாவிடமிருந்தோ வாங்கிய நிலங்களையே பலரும் வைத்திருந்தார்கள். நிறைய தென்னை மரங்களும் மின் மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு கட்டிடமும் கொண்டது புளிய மரத்துக் கழனி. ஊரின் வடக்குப் பகுதியில் எங்களுக்குப் புஞ்சைக் காடு இருந்தது. துவரையோ, கொள்ளோ எப்போதும் செழித்திருக்கும். அதிலிருந்து இரண்டுக்கல் தொலைவு நடந்தால் பெரியமலை வரும். மஞ்சள் புல் அறுக்க கிராமத்துப் பெண்கள் அருவாளை இடுப்பில் செருகிக் கொண்டு வரிசையாகப் போவார்கள்.

தேக்கத்திற்குப் போகும் வழியில் மேற்கூரையற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. வருடத்திற்கொருமுறை கூழூற்றும் வைபவம் சிறப்பாக நடைபெறும் விவசாயிகள் மட்டுமே நிறைந்துள்ள இக்கிராமத்தில் சம்சாரிகள் இந்நாட்களில்தான் வீட்டில் இருப்பார்கள். எனவே அரியாக்குஞ்சூர் எனும் மலைக் கிராமத்திலிருந்து லம்பாடிப் பெண்கள் கோணிப்பை போல் தடித்த வண்ண உடைகளோடு தானம் பெற வருவார்கள்.

கூழூற்றும் வைபவத்தின் உச்சமாக தெருக்கூத்து நடக்கும். அப்பாவுக்குக் கூத்தில் அதிகம் நாட்டமிருந்தது. பிரம்மாவாக அப்பா ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டினுள் திருடன் நுழைந்து நிலம் விற்று வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு குண்டு சொம்பில் வைத்திருந்த மோரைக் குடித்து விட்டு சென்றான். அன்றிலிருந்து அப்பா கூத்தில் ஆடுவதை விட்டுவிட்டார். பணத்தை எடுத்ததாக நாங்கள் சந்தேகப்படும் அந்த மனிதர் இன்னமும் நான் ஊருக்குச் சென்றால் ஓடி வந்து பாசத்தோடு வாங்க மச்சான் என்று கைகுலுக்குகிறார்.

பின்னாளில் என் சகோதரர் கல்லூரி படிப்பை முடித்து இந்திய விமானப் படையில் பணியில் சேர்ந்தபோது போக்குவரத்து வசதி கருதி திருவண்ணாமலையிலிருந்து சாத்தனூர் அணை செல்லும் பிரதான சாலையில் வீடு வாங்கி பெயர்ந்து விட்டோம்.

கம்மன் கொல்லையில் குருவி பிடித்தது, கவிதை எழுதிய ஊசிக் கல் பாறை, கூட்டாஞ்சோறு ஆக்கிய லம்பாடி பறம்பு, பொன்வண்டு பிடித்த காலா மரம் ஆகியவைதான் என்னை உள்ளிருந்து இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களுக்குப் பிழைக்கச் சென்றவர்கள் குழந்தையின் குரலை தொலைபேசியில் மட்டுமே கேட்டுத் தழுவி கொள்வதற்கும், பிறந்த கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களில் வாழ்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.[/tscii:084e7fb1c5]