PDA

View Full Version : kadaisiyaaga ore oru tharam



sivank
20th July 2009, 11:42 PM
கடைசியாக ஒரே ஒரு தரம்

நங்கநல்லூர், சென்னை

அடுப்பில் ரயில் கட்டடம் போட்டு கொண்டிருந்த மைதிலியின் காதில், "மாமா போங்கு அடிக்காதீங்க மாமா, ப்ளம் எல்.பி., மிடில் ஸ்டம்ப்" என்று பக்கத்து வீட்டு வாண்டுகள் கத்துவதும் அதற்கு ராகவன் சிரித்து கொண்டே சால்ஜாப்பு சொல்வதும் கேட்டது. எதிரே காப்பி குடித்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பங்கஜம்," நன்னா இருக்குடி உங்க ஆத்துக்காரர் அடிக்கிற கூத்து. சின்ன பசங்களுக்கு சரி சமமா விளையாடிண்டு, ஆமா அடுத்த மாசம் தானே ரிட்டையர் ஆறார்"? என்றாள்.

"ஆமாம் மாமி, அடுத்த மாசத்லேந்து இவர எப்படி சமாளிக்க போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு. குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வருவார். விட்டா சமைக்கறேன் பேர்வழினு கிச்சனை ஒரு வழி ஆக்கிடுவார். சமையல் என்னமோ நன்னாத்தான் இருக்கும், ஆனா அப்புறம் அடுக்களைய ஒழிக்கறத்துக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடும். ஆர்மில பெரிய ஆபிஸர்ன்னு நெனச்சு எங்கப்பா இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சா, அப்புறம் தான் தெரிஞ்சது இவர் ஆர்மில குக்கா இருந்து இருக்கார்ன்னு, இந்த அழகுல இவர 2 வருஷம் லண்டனுக்கு வேற அனுப்பினா, இது அங்க போய் என்ன சமைச்சுதோ தெரில, வந்த உடனே ஆர்மி வேலைய விட்டுட்டு, மெட்ராஸ்லயே ஒரு கவர்ன்மென்ட் வேலைல சேர்ந்துட்டார். பெரிய வேலைல்லாம் ஒன்னும் இல்ல, ஊர் ஊரா போய் ப்ரசார நாடகம் போடனும். அதுவும் தமிழ்ல போட்டா தான் பரவாயில்லயே, டிராமா ஹிந்தில. அப்பபோ பீகார், குஜராத்னு போய்டுவார். எங்க சுந்து பொறந்தபோது கூட அவர் பக்கத்துல இல்ல, காஸியாபாத் போய்ட்டார், போன் பண்ண கூட வசதி இல்லாத ஊராம்,அவர் ஆபிஸ் ப்ரெண்டு ராஜகோபாலன் தான் வந்து கவனிச்சுண்டார். எங்கப்பாவுக்கு ரொம்ப கோவம், அவர் வந்தப்புறம் பெருசா சத்தம் போட்டார். இவரோ வழக்கம் போல சிரிச்சுண்டே சமாளிச்சுட்டார்".

"அப்போ, நாம எல்லாரும் சேர்ந்து ஒரு அறுபடைவீடு டூர் போலாமா, எங்காத்து மாமாவுக்கு தெரிஞ்ச டிராவல்ஸ்ல சொல்லி ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணிடலாம், என்ன சொல்ற?"

"பாக்கலாம் மாமி, அவர் ரிட்டயர் ஆனதுக்கப்றம் சுந்துவ பாக்க போலாம்னு ஒரு ஐடியா வச்சு இருக்கேன், இந்தாங்கோ சூடா ரெண்டு ரயில் கட்டடம் சாப்டுங்கோ," என்ற போது டெலிபோன் மணி அடித்தது.

************************************************** *********

கிண்டி, சென்னை

கத்திப்பாரா ஜங்ஷனுக்கு பக்கத்தில் ஒரு உள்வாங்கிய தெருவில் இருக்கும் ஒரு பழுப்பு நிற கட்டிடத்தை பார்த்தாலே அது அரசாங்கத்தை சேர்ந்தது என சொல்லி விடலாம். அக்கம்பக்கத்தில் இருக்கும் இரைச்சல்களையும், அவசரத்தையும் வாங்கி கொள்ளாமல் அமைதியாக காட்சி அளிக்கும் மத்திய அரசின் தகவல் தொலிபரப்பு நிலையத்தின் முன் ஆட்டோவில் இருந்து இறங்கிய ராகவன் மெயின் ஆபிஸில் நுழையாமல் கட்டிடத்தின் பின்னே இருக்கும் சிறிய கட்டிடங்களை நோக்கி சென்றார். மிகவும் புராதனமாக காட்சியளித்த அந்த கட்டிடம் தான் அவரது ஆபிஸ். ரிசப்ஷனில் அவரை பார்த்த தேசிகன்," உன்னையும் கூப்டுட்டாளா?" என்றபடியே கையை நீட்டினான். கை குலுக்கிய பின் இருவரும் சற்று பின்னால் இருந்த லிஃப்டை நோக்கி சென்றனர்.

லிஃப்ட் அவர்களை 3 அடுக்கு கீழே உள்ள ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஆப்பரேஷன் சென்டருக்கு(special force op. center) முன் கொண்டு நிறுத்தியது. கதவை ரெட்டினா ஸ்கானர்(retina scanner) மூலமாக திறந்து உள்ளே போனவர்களை முறைத்த கௌரி,"என்ன சார், இவ்ளோ லேடா வர்ரீங்க, உள்ள எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க," என்றாள். கிரைஸிஸ் மேனேஜ்மென்ட் சென்டர்(crisis management center) கதவை மெல்ல தட்டி விட்டு நுழைந்த ராகவனை சுட்டெரிப்பது போல பார்த்தார் வைஸ் அட்மிரல் ராஜகோபாலன்.

"ஜென்டில்மேன், மேஜர் ராகவனும் வந்தாச்சு, இனிமே பிரீஃபிங்கை ஆரம்பிக்கலாமா?"

அந்த செவ்வக அறையில் இருந்த எல்லோருமே கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தனர். நேவல் இன்டலிஜென்ஸ்(Naval Intelligence) குல்கர்னி பைப்பை பற்ற வைக்காமல் கடித்து கொண்டிருந்தார். ரா(RAAW) வின் சீதாராமையா, ஐ.பி(Intelligence Buereau) யின் மல்ஹோத்ராவுடன் பேசி கொண்டிருந்தார். டிஃபென்ஸ் அண்டர் செக்ரடரி நாராயணன் எம்.ஸி.எஃப் (Marine Commando Force)வாசுதேவனுடன் ரகசியம் பேசி கொண்டு இருந்தார். கையில் ஒரு டிடெக்டரை வைத்து ஒட்டு கேட்கும் கருவிகளை தேடியவர் அறையை விட்டு வெளியேறியதும், பேனாவால் கிளாஸை தட்டிய ராஜகோபாலன்," ஜென்டில்மேன், மிஸ்டர் மல்ஹோத்ரா சொல்றத கேக்கலாம்" என்றார்.

பக்கத்தில் வைத்திருந்த ஃபைல்களை எல்லோரிடமும் பிரித்து கொடுத்த மல்ஹோத்ரா,"ஜென்டில்மென், ஐ.பி.க்கு இரு ரகசிய தகவல் வந்து இருக்கு. கடந்த சில நாட்களாகவே ச்ந்தேகத்துக்குரிய மீன் பிடி படகுகள் கராச்சியில் இருந்தும், ஏமனில் இருந்தும் மாலத்தீவிற்கு வந்து போய் கொண்டு இருக்கிறது. தீவிரவாதிகள் மாலதீவில் உள்ள ஆளற்ற தீவுகளில் மறைந்து இருப்பதாக எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கிறது. சுனாமி வந்த பிறகு இரவோடு இரவாக இரண்டு பாக். போர்கப்பல்கள் வந்து தண்ணீரில் எதையோ அள்ளி கொண்டு வேகமாக சென்றதை சாட்டிலைட் மூலமாக பார்த்த பிறகு அந்த சந்தேகம் வலுத்தது. நேற்று, பிற்பகல் 3 மணி அளவில் ஒரு செல் போன் பேச்சை இன்டெர்செப்ட் செய்து பரிசோதித்ததில், அந்த குரல் பிரபல தீவிரவாதி இப்ராஹீம் தாவூத் குரல் எஅன் உறுதி படுத்த பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பேச்சு நடந்த இடம் மாலத்தீவின் வட கோடியில் உள்ள அலிஃபுஷி(Alifushi) தீவில்.

"ஆர் யூ ஷ்யூர், அது இப்ராஹீம் தாவூத் குரல் தானா," என்றார் டிபென்ஸ் நாராயணன்.

"கண்டிப்பா சார், உடனே சீதாராமையாவ கன்ஸல்ட் பண்ணி வாய்ஸ் மேட்ச் பார்த்தோம், ரிசல்ட் 100% பாஸிட்டிவா இருக்கு".

"சரி, அவன் யார் கூட பேசிட்டு இருந்தான்,அதை ட்ரேஸ் பண்ண முடிந்ததா?"

"சொன்னா நம்ப மாட்டிங்க, அவன் பேசிட்டு இருந்தது ஹோஷியார் கான் கிட்ட. சாட்டிலைட் போன்ல தான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு புது அல்கோரிதம் மூலமா எல் இன்ட்(ELINT- Electronic Intelligence) அத இன்டர்செப்ட் பண்ணி டிகோடும் பண்ணிட்டாங்க".

"வெரி குட், இவ்ளோ நாளா ஒளிஞ்சுட்டு இருந்த நரி மெதுவா வளைய விட்டு வெளிய வந்திருக்கு, அதுவும் லாஸ்ட் இயர் டெல்லி இன்ஸிடென்டுக்கு அப்புறம் இப்ப தான் முதல் தடவையா இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்னு ப்ரூவ் ஆகி இருக்கு."

"பட், ஒய் மால்டிவ்ஸ்? அவங்க கவர்ன்மென்ட்டும் இவங்கள சப்போர்ட் பண்ணுதா?"

இதுவரை பேசாதிருந்த சீதாராமையா யோசனையுடன்," அப்படி ஒரு சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியல. இப்போ இருக்கிற பிரெஸிடென்ட் ரொம்ப நல்லவரா தெரியறார். மக்களுக்கு நிறைய பண்ணனும், நாட்டை முன்னேத்தணும்னு குறியா இருக்கார். ஆனா, பழம்பெருச்சாளிகள் சிலபேர் அவருக்கு எதிரா நிறைய உள்வேலைகள் செய்யறாங்க. இது அவருக்கு தெரியாம நடக்கற வேலைனு தான் நாங்க நம்பறோம்".

சேரை விட்டு எழுந்த நேவல் இன்டலிஜென்ஸ் குல்கர்னி பீமரில்(Beamer) உலக வரைபடத்தை போட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிதாக்கினார். "இங்க பாத்தீங்கனா உங்களுக்கே நல்லா புரியும். இது தான் பெர்ஷியன் கல்ஃப், அராபியன் ஸீ, நம்ம வெஸ்ட்கோஸ்ட். இந்த முக்கோணத்துக்கு நடுவுல இருக்கறது மாலத்தீவுகள். இங்க இருந்து ஸ்ரீலங்காவுக்க்கோ, அரபு நாடுகளுக்கோ சுலபமா போகலாம். கொஞ்சம் தொலைவா இருந்தாலும் ஒரு நல்ல பெரிய வேகமான போட் கராச்சிலேந்து வந்துட்டு போகலாம். இதனாலதான் இந்த வடகிழக்கு ஏரியாவ நாம பலமா காவல் காக்க வேண்டி இருக்கு. நம்ம லட்ச தீவ சேர்ந்த மினிக்காய்(Minicoy) தீவுக்கும் அவங்க திலந்துமதி(Thilandhumathi) தீவுக்கும் 58 கி.மீ தூரம் தான். இப்போ நாம கேட்ட அலிஃபுஷி தீவு இன்னும் ஒரு 100 கி.மீ தள்ளி உள்ள இருக்கு. அக்கம் பக்கதுல வேற எந்த தீவும் கிடையாது. ஆனா, அந்த தீவ அடையறது ரொம்ப கஷ்டம். தீவ சுத்தி ரொம்ப தூரத்துக்கு கத்தி மாதிரி கூரான பவழ பாறைகள் இருக்கு. அலைகளோட வேகமும் ஜாஸ்தி, ஆழமும் ஜாஸ்தி. சின்ன படகுகள் தான் போகமுடியும் அதுவும் ரொம்ப ஜாக்கிரதையா மெதுவா அலைவேகம் கம்மியா இருக்கும் போதுதான். அதனாலதான் அது ஆள் நடமாட்டம் இல்லாத தீவா இருக்கு. இப்போ இவங்க வந்து தங்க அது வசதியா போச்சு."

"அதெல்லாம் சரி, இந்த இன்ஃபர்மேஷன வச்சு நாம் என்ன பண்ண போறோம். நாம வருஷகணக்கா தேடிட்டு இருந்த ஒரு ஆள், இத்தனை நாளா ஒளிஞ்சிட்டு இருந்த ஆள இப்போ முதல் தடவையா ட்ரேஸ் பண்ணி இருக்கோம். வாட் ஆர் அவர் ஆப்ஷன்ஸ்?" என்றார் வாசுதேவன்.

கண்ணாடியை கழட்டி வேகமாக கர்சீப்பால் துடைத்த நாராயணன்," நம்ம புது கவர்ன்மென்ட் இத காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிட பார்க்குது. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போ கிடைக்கும்னு தெரியாததனால இதை சீக்கிரம் நடத்தியாகனும். அதே சமயம் இது நம்ம வேலைன்னும் தெரிய கூடாது. ஆப்பரேஷன் காக்டஸ்(Operation Cactus) மாதிரி இதை பகிரங்கமா செய்ய முடியாது. நாம நேவியையோ, மரைன்ஸையே அனுப்ப முடியாது. அனுப்பினா இன்டர்னேஷனல் ப்ராப்ளம் ஆயிடும். அட்மிரல் ராஜகோபாலனோட ஸ்பெஷல் ஃபோர்ஸ் தான் இதுக்கு சரியான யூனிட்".

தொண்டையை லேசாக செருமிக்கொண்ட ராஜகோபாலன்,"ராகவன், கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுப்பா", என்றார். ராகவன் வெளியே சென்றவுடன் மற்றவர்களை நோக்கி," ஜென்டில்மென், என்னை பொறுத்தவரை இந்த ஆப்பரேஷனுக்கு தகுந்த ஆள் மேஜர் ராகவன் தான். இவர் இந்த மாதிரி எத்தனையோ ஆப்பரேஷன்ஸ வெற்றிகரமா முடிச்சு இருக்காரு. இன்ஃபாக்ட், 1988 ஆப்பரேஷன் காக்டஸ் சமயத்துல மாலத்தீவுலேயே பல மாசம் தங்கி அவங்கள மாதிரியே திவேஹி(Dhivehi) பேசக்கூடியவர். ஆனா, இவர் இன்னும் 3 வாரத்துல ரிட்டயர் ஆகப்போறார். இந்த சமயத்துல இவர இந்த ப்ராஜக்ட்ல அனுப்ப எனக்கு மனசு வரல்ல. ஒரு புது டீம் தயார் பண்ண எனக்கு கொஞ்சம் டயம் வேணும்" என்றார்.

வைஸ் அட்மிரல் ராஜகோபாலன் அறை, கிண்டி, சென்னை

"ராகவா, நான் எவ்ளோவோ சொல்லி பார்த்துட்டேன், புது டீம் தயார் பண்ண டயம் இல்லைனு சொல்றா. எனக்கும் அது சரின்னுதான் தோன்றது. நீ தான் அந்த காரியத்துக்கு சரியான ஆள். கௌரி இப்போ உன்னோட பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணின்டு இருக்கா. உனக்கு என் மேலே கோவம் இல்லயே".

லேசாக சிரித்த ராகவன், " எனக்கு என்னவோ நீங்க எல்லோரும் கொஞ்சம் அவசரபடற மாதிரி தோண்றது. அட்மிரல், உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி காரியத்துல அவசரபட்டோம்னா என்ன ஆகும்ன்னு. நான் ஃபீல்டு ஒர்க் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. என்ன போய் இந்த சென்ஸிபிள் ஒர்க்ல அதுவும் இவ்ளோ அவசர அவசரமா இன்வால்வ் பண்றது தான் புரியல. நான் இன்னும் 3 வாரத்துல ரிட்டயர் ஆகப்போறேன், இப்போ இந்த அஸைன்மென்ட். யாரோ இதை பத்தி நல்லா யோசிச்சு இருக்காங்கன்னு தெரியுது."

"அப்படி இல்ல ராகவன், இந்த அஸைன்மென்ட்ல நிறையா பேருக்கு இடம் இல்ல. இதை நீ மட்டும் தனியா பண்ண போற. மொதல்ல, நீ இன்னிலேந்து ரிட்டயர் ஆற. உனக்கும் நம்ம கவர்ன்மென்டுக்கும் இன்னிலேந்து எந்த சம்மந்தமும் இல்ல. இதனால, நீ நம்ம வழக்கமான கான்டாக்ட்ஸ் யாரயும் யூஸ் பண்ண முடியாது. இல்ல இல்ல அப்படி பாக்காதே, அஃபீஷியலா யாரையும் யூஸ் பண்ண முடியாதுனு தான் சொன்னேன். உனக்கு உதவி செய்ய ஒரு சரியான ஆள் இருக்கு. இது யாருக்குமே தெரியாம நான் வச்சு இருக்குற ஏஜென்ட். பேரு நாராயணி, அப்பாவோட சொந்த ஊரு மன்னார்குடி, அம்மா சேலம். பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னைல. என்.ஸி.ஸி ல இருக்கும் போது ஒரு ஷூட்டிங் போட்டில என் கவனதுக்கு வந்தா. இந்தியன் ஒலிம்பிக் ஷூட்டிங் டீம்ல சேர்ந்து சிட்னி போய் சில்வர் மெடல் வாங்கினவ. இவ தான் உனக்கு இந்த ஆப்பரேஷன்ல கான்டாக்டா இருக்க போறது. உனக்கு என்ன வெப்பன்ஸ் தேவையோ அதை எனகு சொல்லு, அவ உனக்கு அஹ்டை ஏற்பாடு பண்ணி கொடுப்பா. இந்த ஃபைல்ல எல்லா இன்ஃபர்மேஷனும் இருக்கு, நல்லா ஸ்டடி பண்ணி ஒரு பிளான் இன்னிக்கு ஈவினிங்குள்ளே சொல்லு. மீதி எல்லாம் நான் ஏற்பாடு செய்யறேன்."

sivank
20th July 2009, 11:44 PM
அனந்த பத்மநாபஸ்வாமி கோவிலின் வெளி பிரகாரம், திருவனந்தபுரம்)

சுவாமியை தரிசித்துவிட்டு வெளி பிரகாரத்தில் அமர்ந்த ராகவன் கடந்த நாள் நிகழ்ச்சிகளை மறுபடியும் நினைத்து கொண்டார். அட்மிரலை சந்தித்ததோ, மீட்டிங்கில் அவரை பலிகிடா போல் எந்தவித முன் முயற்சியும் இல்லாமல் அவரை இப்படி ஒரு மிஷனுக்கு அனுப்பியதோ, அவர் மறுபடியும் சில நாள் வெளியூர் போகிறார் என்பதனால் மைதிலி பேசிய கேலி பேச்சோ, அவசரமாக நாராயணியிடமிருந்து தன்னை இங்கு பார்க்கும்படி சொன்ன செய்தியோ அவர் மனதில் படம் போல ஓடியது. அதே சமயம் ஏதோ ஒரு எண்ணம் அவர் மனதை நெருடியது.

டாண் டாண் என்று அடித்த கோவில் மணி அவரை மீண்டும் நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்தது. தரிசனம் முடித்து நிறைய பேர் கோவில் விட்டு போக மனமில்லாமல் வெளி பிரகாரத்தில் மண்டபங்களில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒரு குழந்தை தன் பெற்றோரிடம்," ஏம்மா, உம்மாச்சி தாச்சிண்டே இருக்கார், எழுந்துக்கவே மாடாரா. மம் மம் லாம் கூட தாச்சிண்டு தான் சாப்டுவாரா. நானும் இனிமே தாச்சிண்டு தான் சாப்டுவேன்," என்றது அவருக்கு சிறு வயது சுந்துவை ஞயாபகபடித்தியது. அவனும் இப்படி தான் எதாவது கேட்டு கொண்டே இருப்பான். அவரும் சளைக்காமல் பதில் சொல்லி கொண்டே இருப்பார். பக்கத்தில் சில சேர தேசத்து பெண்கள் புடவை பட படக்க சந்நிதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராகவன் மீண்டும் கை கடியாரத்தில் மணியை பார்த்தார். ஆறு மணிக்கு வருவதாக சொன்ன நாரயணி இப்போதே அரை மணி நேரம் லேட். இவர்களை நம்பி காரியத்தில் எப்படி இறங்குவது என்று ஒரு சிறிய விஷ விதை மனதில் முளைத்தது.

ஒரு பூத்தட்டை தன் முன் வைத்து இருந்த அந்த பெண் மெதுவாக எழுந்து ராகவன் அருகில் வந்து அமர்ந்தாள். "இந்தாங்கோ ப்ரசாதம், பாவம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணறீங்க. நேரா ஏர்போர்ட்லேந்து இங்க வந்தா போல தெரியறது," என்றவளை ராகவன் ஆழ்ந்து கவனித்தார்.

" அயம் நாராயணி, அட்மிரல் உங்களை மீட் பண்ண சொன்னார். நீங்க ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி தெரியுது. உங்களுக்கு இங்கேயே பக்கத்துல லூஸியா பேலஸ் ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்கேன். டாக்டர் செரியன்ங்க்ற பேர்ல புக் பண்ணி உங்க ரூம் சாவியையும் கொண்டு வந்து இருக்கேன். நீங்க போய் கொஞ்சம் ஃப்ரெஷ் பண்ணின்டு வாங்க. ஒருத்தர் உங்கள பாக்க ரொம்ப ஆவலா இருக்கார்," என்று மூச்சு விடாமல் பேசியவளை அதிசயத்தோடு பார்த்தார் ராகவன்.

"நானே இப்பத்தான் வந்தேன் அதுக்குள்ள யார் என்ன பாக்க விரும்பறா," என்ற ராகவனை இடையில் வெட்டிய நாராயணி," இந்த லாஸ்ட் 15 மணி நேரத்துல நிறைய விஷயம் நடந்து போச்சு. நீங்க தனியா இல்ல அது மட்டும் தெரிஞ்சுகோங்க" என்றாள்.

(அஷோக் பீச் ரிஸார்ட், கோவளம், திருவனந்தபுரம்)

சற்று தூரத்தில் அலைகள் கரை மீது மோதும் சப்தம் கேட்டு கொண்டிருந்தது. குளித்து உடை மாற்றி நாராயணியோடு கோவளம் வந்த ராகவன் சாப்பிட்டு கொண்டே அவள் சொல்வதை கேட்டு கொண்டிருந்தார். காபி ஷாப்பின் கடிகாரம் நேரம் பத்தரை ஆனதை அழகான மணி சப்தங்களோடு அறிவித்தது. பின்னால் லிஃப்ட் கதவு திறந்து காபி ஷாப்பில் நுழைந்த மனிதரை பார்த்ததும் ராகவனின் கண்கள் வியப்பினால் விரிந்தன.

"என்ன ராகவன், நாணி குட்டி உங்ககிட்ட சொல்லலியா யாரை பாக்கபோறீங்கன்னு," என்று சிரித்தார் மாலத்தீவு அதிபரின் பிரதம ஆலோசகர் அலி பே

"இவர உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?," என்று கேட்ட நாராயணியை முறைத்த ராகவன் "அலி பே, உங்கள நான் இங்க எதிர் பார்க்கவே இல்ல, நீங்க வழக்கமா சிங்கப்பூர்ல தான இருப்பீங்க. நீங்க இங்க எனக்கு ஒண்ணுமே புரியலை"என்றார்.

"இங்க எதுவும் பேச வேண்டாம், பக்கத்துல என்னோட மோட்டார் லாஞ்ச் இருக்கு அங்க போய் பேசலாம், எனக்கும் உங்க கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு" என்றபடி தனது செல்போனை எடுத்து யாருடனோ பேசும் அலி பேவை பார்த்தார் ராகவன்.
மாலத்தீவின் மிக பெரிய செல்வந்தரும், ஒரு பெரிய கப்பல் கம்பெனியின் சொந்த காரரும், இருபது பெரிய ஹோட்டல் ரிஸார்ட்களின் உரிமையாளருமான அலி பேவை தெரியாதவர்கள் மாலத்தீவில் யாரும் கிடையாது. கொலொம்போவிலும் சென்னையிலும் படித்த அலி மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அறிய வேண்டியதையும் கற்க வேண்டியதையும் தெரிந்து கொணட பின் மாலத்தீவில் கொஞ்ச நாள் இருந்த அலி பேவிற்கு அப்போதைய அதிபரின் செயல்கள் பிடிக்கவில்லை. பெயரளவிற்கு ஆலோசகராக இருக்க விரும்பாமல் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தனது ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார்.தாய் மொழியான திவேஹியோடு தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், சிங்களம், சீன மொழிகளை சரளமாக பேச தெரிந்த அலி பே ராகவனை 1989 ஆண்டு மாலேவில் கண்டு பேசி நட்பு கொண்டார்.

மாலே வர மாட்டேன் என்று இருந்த அலி பே இப்போது இங்கு இந்த முக்கியமான் நேரத்தில் இருப்பது ராகவனுக்கு ஏதோ புது சந்தேகங்களை உண்டாக்கியது. நாராயணியோ ஏதும் தெரியாதவள் போல நடந்து கொள்வது இன்னும் எரிச்சலை மூட்டியது. அவளை தனியாக இழுத்து என்ன நடக்குது இங்க என்று கேட்பதற்கு முன் செல் போனை அணைத்த அலி பே. "வாங்க நம்ம போட் இப்போ ஜெட்டிக்கு வந்து இருக்கும். அங்க போய் எல்லாத்தையும் பேசலாம்" என்று தனது பருத்த உடலை படகு துறையை நோக்கி நகர்த்தினார்.
இந்துமாகடலின் காற்று அந்த படகின் மேல் தளத்தில் இருந்தோரை வருடி சென்றது. அந்த காற்றின் குளுமையை தாங்க முடியாத நாணிக்குட்டி மெதுவாக எழுந்து காபினுக்குள் நுழைந்தாள். காபினுக்குள் கம்ப்யூட்டரில் மாலத்தீவின் வரைபடத்தை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்த ராகவன் அவளை பார்த்து புன்முறுவல் செய்தார். பக்கத்து அறையில் அலி பே யாருடனோ சாட்டிலைட் போனில் மியாது நத்தே, மாதம அன்னாநமே(இன்னிக்கு இல்ல, நாளைக்கு தான் வருவேன்) என்று பேசுவது லேசாக கேட்டது. அந்த காபினுக்குள் இருந்த கடிகாரம், நேரம் நடுநிசி கடந்து ஒரு மணி நேரம் ஆனதை ஒரு இனிமையான இசையோடு உணர்த்தியது.

பக்கத்து கதவை திறந்து உள்ளே வந்த அலி பே ராகவனிடம், " நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு, இந்த மாதிரி பிரச்சனை எங்க நாட்டுக்கு இப்ப தேவையே இல்லை. நாங்களோ டூரிஸ்ட்களையும், அவங்க கொண்டு வர அந்நிய செலவாணியயும் நம்பி இருக்கறவங்க. இதை வச்சு தான் மத்த தொழிலான மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபரங்களை கவனிக்கனும். இப்ப தீவிரவாதமும், தீவிரவாதிங்களும் இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சா யாரும் வர மாட்டாங்க. எங்க புது ஜனாதிபதி செய்ய நினைக்கிற எந்த நன்மையும் எங்க மக்களுக்கு போய் சேராது. நாங்களோ எதுக்கும் பக்கத்து நாடுகளை நம்பி வாழறவங்க. அதனால இதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்ட உங்க உதவிய நாடி வந்து இருக்கோம்."

"அலி பே, நான் ஒரு சாதாரண மனுஷன். எங்க நாட்டு பாதுகாப்புக்காக சில வெளிய சொல்ல முடியாத வேலைகளை செஞ்சு இப்போ ரிட்டயர் ஆனவன், என்னால என்ன செய்ய முடியும்னு என்கிட்ட இத பத்தி பேசறீங்க. இத பத்தி நான் சத்தமா நினைச்சா கூட எனக்கு பிரச்சனை வரும்."

"ராகவன், உங்களை ஒரு கன்ஸல்டன்டா யூஸ் பண்ணிக்க உங்க அரசாங்கம் எங்களுக்கு ரெக்கமண்ட் பண்ணி இருக்கு. அட்மிரல் ராஜகோபாலன் இப்ப தான் எனக்கு மெஸேஜ் அனுப்பி இருக்கார். இது என்னோட காப்பி. நாளை காலைக்குள்ள உங்களுக்கும் கிடைச்சுடும். நான் தான் டைம் வேஸ்ட் பண்ணா வேண்டாம்னு இப்பவே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீங்க எதை பத்தியும் கவலை பட வேண்டாம், உங்களுக்கு எது தேவையோ நாளை காலைல எனக்கு சொல்லுங்க அப்படியே செய்யலாம், அதுக்குள்ள உங்களுக்கும் மெசேஜ் வந்து இருக்கும்."

sivank
20th July 2009, 11:49 PM
(ஹுலூலே (Hulule) விமானநிலையம், மாலத்தீவு)

பேரிரைச்சலோடு தரையில் குறியிட்ட இடத்திற்க்கு வந்து நின்ற அந்த எமிரேட்ஸ்(Emirates) விமானத்திலிருந்து இறங்கிய ராகவனுக்கு எல்லாமே இன்னும் கனவு போல் இருந்தது. அலி பேயுடன் பேசிய பிறகு தனது ஓட்டல் அறையிலிருந்து இரவு முழுவதும் அட்மிரலுடன் பேசியதன் விளைவு மறு நாள் காலை அவர் டாக்டர் செரியனாக ஷார்ஜாவிற்க்கு சென்றது. அங்கு இருந்து ஒரு வாகனத்தில் துபாய் வந்த அவர் அகமத் காலித் என்ற பெயரில் மாலத்தீவு பாஸ்போர்ட்டில் அன்றிரவே மாலே செல்லும் 658 விமானத்தில் ஏறி விட்டார்.

டெர்மினலில் திவைஹி ராஜ்யாமிஹா (Maldive citizens) என்று போட்டிருந்த வரிசையில் நின்று பாஸ்போர்ட் சோதனையை கடந்து வெளியே வந்த அவர் அந்த டாக்குமென்டுகளை தயார் செய்த தேசிகனை மனதுக்குள் பாராட்டினார். டெர்மினலுக்கு வெளியே வ்ந்து படகுத்துறையில் தலைநகர் மாலே செல்லும் ஒரு தோணியில் ஏறி அமர்ந்தார். இந்த 15 வருடங்களில் மாலே நிறைய மாறிவிட்டது. மாலே நகரை சுற்றி கடலில் ஆழமில்லாத பகுதிகளில் மணலை போட்டு நிரப்பி நிலமாக்கி அவ்விடங்களில் வீடுகளை கட்டி மாலேவின் பரப்பளவையே பெரிதாக்கிவிட்டனர். ஆனால் அதே சமயம் இயற்கை அரண்களை அழிப்பதன் மூலம் கடல் கொந்தளிப்பினால் ஆபத்து நேரிடலாம் என்று எச்சரிக்கும் ஜியாலாஜிஸ்டுகளின் (geologist) வார்த்தைகள் இதுவரை சம்பந்தபட்ட காதுகளை இன்னும் எட்டவில்லை போல் தெரிகிறது.

-----------------------------------------------------------------------------------


(மாலே, மாலத்தீவு)

மரைன்ட்ரைவில் ஸ்டேட்பாங்க் முன் இருக்கும் ஜெட்டியில் இறங்கிய ராகவன் அங்கு நிற்கும் டாக்ஸிகளை புறக்கனித்து சாந்தனி மாகு(சாலை, தெரு) நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாந்தனி மாகுவில் அந்த உள்ளடங்கிய வீட்டின் 3வது மாடியிலுள்ள அந்த ஃப்ளாட்டை அடைந்து கதவை தட்டி உள்ளே நுழைந்தவரை புன்சிரிப்புடன் வரவேற்றார் அலி பே.

"ராகவன், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டேன். உங்களுக்கு இன்னோரு விஷயம் சொல்லனும், அலிஃபுஷிய நாங்க கவனமா கண்கானிச்சுட்டு வரோம். நான் சொன்னா நீங்க கண்டிப்பா நம்ப மாட்டீங்க, ஹோசியார் கான் இப்போ இருக்கறது அலிஃபுஷில. எப்படி வந்தான், எப்போ வந்தான், யார் அவன அழைச்சிட்டு வந்தாங்கனு இன்னும் சரியா தெரியல. கிருஸ்துமஸ் லீவுக்காக இப்போ இங்க நிறையா டூரிஸ்டுங்க வராங்க. அதே மாதிரி எல்லா தீவுங்களுக்கும் சரக்கு ஏத்திட்டு வர தோணிகளும் ஜாஸ்தி. இதுல ஏதொ ஒண்ணுல யாரோ அவன ஏத்தி அலிஃபுஷில கொண்டு விட்டு இருக்கணும். உங்க வேலை இப்போ இவங்க ரெண்டு பேரையும் மூணாம் பேருக்கு தெரியாம நசுக்கணும்."

"அலிபே, நீங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. நான் ஒன்னும் ஜேம்ஸ் பாண்ட் இல்ல. என்னால அப்படி நிறையா பேரோட சண்டை எல்லாம் போட முடியாது. ரகஸ்யமா காதும் காதும் வச்சா மாதிரி காரியம் முடிக்கிறது தான் என்னால முடிஞ்ச விஷயம். இவங்க என்ன தனியா இருப்பாங்கனு நினைச்சீங்களா? இதுக்கு நீங்க உங்க என்.எஸ்.எஸ் (N.S.S.) காரங்களை அனுப்பி அவங்கள பிடிக்கலாம்" என்று சற்று உஷ்ணமாக பேசினார் ராகவன்.

"நீங்க சொன்ன மாதிரி அவங்கள சுத்தி வளைச்சு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த சுத்து வட்டாரத்திலேயே எங்க நாடு தான் சின்ன நாடு. எல்லாத்துக்கும் அண்டை நாடுகளை எதிர் பாக்குற நாடு. நாட்டு வளமே இங்க வர டூரிஸ்ட நம்பித்தான் இருக்கு. அதுவும் இன்னும் 3 நாளுல கிருஸ்துமஸ் வருது. இப்பத்தான் இங்க பீக் சீசன், இப்போ நாங்க எதாவது பண்ணா ஒரு பய இனிமே இங்க வர மாட்டான். அமெரிக்காவ உதவி கேட்டா அவன் ஒரு பெரிய படையவே அனுப்புவான் ஆனா அவ்வளவு சீக்கிரமா திரும்பி போக மாட்டான். ஆஃப்கானிஸ்தான் மாதிரி இங்கேயே இருப்பான். இதனால அண்டை அசல்ல இருக்குற எங்களுக்கு நிறைய உதவி பண்ணற இஸ்லாமிய நாடுகளோட வீண் சண்டை வரும். இதை எல்லாம் யோசிச்சு தான் நான் உங்க அரசாங்கத்தோட உதவிய நாடினேன். ரா க்கு துப்பு கொடுத்தது யார்ன்னு நினைக்கறீங்க".

இதை கேட்டு யோசனையில் ஆழ்ந்த ராகவன்," சரி அலி பே இப்படி செய்யலாம், ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் ஆள் பலம் தேவை. இது தான் என்னோட ப்ளான்" என்றார். அதை கேட்டு அகமும் முகமும் மலர்ந்த அலி பே ராகவனை கட்டிக்கொண்டார்.
(23 டிசம்பர், மாலே, மாலத்தீவு)

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவரை ராகவனுக்கு உடனே அடையாளம் தெரிந்து விட்டது. அன்றைய காப்டன் சலீம் இன்று மேஜர் சலீமாகி விட்டார். 1988 பார்த்த போது இருந்த அந்த இரும்பு உடல் இன்றும் கட்டு குலையாமல் இருந்தது. அந்த ஆபத்தான சூழ்நிலையிலும் அவரை விட்டு அகலாத புன்னகை இன்று இன்னும் பெரிதாக இருந்தது. ராகவனை கண்டு கை குலுக்கிய சலீம் தன்னுடன் வந்த சில பேரை அறிமுக படுத்தினார். துடிப்பான அந்த 4 இளைஞர்களை பார்த்ததுமே ராகவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அனைவரையும் பார்த்த ராகவன்," ப்ரெண்ட்ஸ், உங்க உதவி இல்லாம இந்த காரியம் கண்டிப்பா நடக்காது. மேஜர் சலீம் இந்த மிஷன் பத்தி உங்களுக்கு ப்ரீஃப் பண்ணி இருப்பாரு. இந்த மேப்ப பார்த்தீங்கன்னா, இது தான் அலிஃபுஷி, இதுக்கு பக்கத்துல இருக்குற சின்ன தீவுக்கு பேரு எத்திங்கிலி, இதுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குறது பொடுஃபுஷி. இன்னும் சில நாள்ல ஒரு டூரிஸ்ட் ரிஸார்டா மாற போகுது. அதுக்கான வேலை எல்லாம் மும்முரமா நடந்து கிட்டு இருக்குது. தினசரி தோணிலயும், ஸ்பீட் போட்லயும் சாமான்களும் ஆளுங்களும் வந்து இறங்கிகிட்டே இருக்காங்க. அங்க விழற குப்பைய எடுத்துகிட்டு போற போட் க்ரூ ஆளுங்க மாதிரி நாம அங்க போறோம். ஹெவி வெப்பன்ஸ் எதுவும் வேண்டாம். இது டர்க்கி தயார் பண்ற யாவுஸ் 16 வகை பிஸ்டல். இத செலெக்ட் பண்ண காரணம் என்னன்னா, இந்த டைப் பிஸ்டல் தான் இப்போ சுத்து வட்டார நாடுகள்ல அதிகமா உபயோகத்துல இருக்கு. ட்ரேஸ் பண்றது ரொம்ப கஷ்டம். வெயிட்டும் கம்மி தான், அதனால 14 புல்லட் கொண்ட க்ளிப் போடறது ரொம்ப சுலபம். இந்த பிஸ்டல தவிர நாம எடுத்துட்டு போக போற இன்னோரு வெப்பன் ஒரு புது விதமானது. பொதுவா இத தண்ணிக்குள்ள அண்டர் வாட்டர் வெப்பனா யூஸ் பண்ணுவாங்க. இத கொஞ்சம் மாத்தி நாம வெளிய யூஸ் பண்ண போறோம். இதுக்கு புல்லட்ஸ் கிடையாது. சின்ன சின்ன டார்ட்ஸ்(அம்புகள்)தான். இந்த டார்ட்ஸ்ல விஷம் தடவி இருக்கும். ஆள கொல்ற அளவு இருக்காது ஆன கண்டிப்பா அடுத்த 1 மணி நேரத்துக்கு அவங்களால எதுவும் செய்ய முடியாது. இதுல இருக்குற விஷம் உடனே நரம்பு மண்டலத்தை தாக்கி அவங்களை செயலிழக்க செஞ்சுடும். டோஸேஜ் கம்மியா இருக்கறதால உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்ற ராகவனை புரியாமல் பார்த்தார் சலீம்.

"சலீம், உங்க கேள்வி எனக்கு புரியுது. என்னோட ஆசை என்னன்னா, ஆபத்தா இருந்தாலும் எப்படியாவது அவங்கள உயிரோடு புடிச்சா, நிறையா விஷயங்கள் வெளிய வரக்கூடிய வாய்ப்புகள் ஜாஸ்தி. எனக்கு இப்போ தெரிய வேண்டியது, அவங்கள பத்தின கரென்ட் இன்ஃபோர்மேஷன். அவங்க எத்தன பேர், அவங்க யூஸ் பண்ற வெப்பன்ஸ், அவங்களுக்கு எங்க இருந்து சாப்பாடு போகுது, அவங்க என்ன மாதிரி போட் வச்சு இருக்காங்க, அவங்க கான்டாக்ட் யாரு இத்தனையும் ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சாகனும்".

sivank
20th July 2009, 11:50 PM
24 டிசம்பர், 15.00 மணி, அம்பரி தோணி)

பொடுஃபுஷிக்கு சாமன்களை ஏற்றி செல்லும் படகின் காப்டனான ஹசனுக்கு வயது 120 என்றாலும் சுலபமாக நம்பி விடலாம். காலை 4 மணிக்கு மாலேவில் இருந்து இது நேரம் வரை படகை ஓட்டி வரும் ஹசனுக்கு வாழ்க்கையே அந்த கடலும் அவனது படகு அம்பரியும் தான். மாலத்தீவின் தென் கோடியிலுள்ள ஃபுவமுலக்கூவில் இருந்து வரும் ஹசனுக்கு மாலே பாஷை அவ்வளவாக பிடிக்காது. பாஷை என்ன மாலே காரர்களையும் அவ்வளவாக பிடிக்காது. என்னவோ அவர்களுக்கு மட்டும் தான் நாகரீகம் தெரியும் மற்றவர்கள் எல்லாம் காட்டுவாசிகள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்று மற்றவகள் நினைப்பதால் பொதுவாக மாலேகாரர்களை மற்ற தீவுவாசிகள் நம்ப மாட்டார்கள். இதனால் ஹசனும் தேவை பட்டால் ஒழிய மற்ற நேரங்களில் தனது தீவு பாஷையே பேசுவான்.

மூட்டை முடிசுகளோடு அதிகாலையில் படகில் ஏறிய அறுவரும் சுருண்டு படுத்து இருந்தனர். அவர்களையும், அவர்களின் உடைகளையும் பார்த்தால் யாரும் அவர்களை இரண்டாம் முறை திரும்பி பார்க்க மாட்டார்கள். படகில் ஏறியதிலிருந்து திவேஹி மட்டும் பேசிய அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் கூடி கூடி சன்ன குரலில் பேசி கொண்டார்கள். சலீம் சேகரித்த விஷயத்தில் இருந்து குறைந்த பட்சம் 20 முதல் 30 பேர் வரை அலிஃபுஷியில் இருக்க வேண்டும் என தெரிந்தது. அவர்களுக்கு உணவு சற்று தொலைவில் இருக்கும் பெரிய தீவான மாஃபுஷியிலிருந்து போவதும் அவர்கள் 2 பெரிய சக்தி வாய்ந்த ஸ்பீட் போட்களை வைத்து இருப்பதும் தெரிந்தது. மணி நேரத்துக்கு 40 கி.மீ வேகத்தில் நீரை கிழித்து செல்லும் படகுகள் அவை எனவும் தெரிய வந்தது. படகுகள் ஒரு காலத்தில் மாலத்தீவின் அதிபராகவும், பிறகு ஊழல், கடத்தல் பிரச்சனையில் மாட்டியதால் பதவி இறக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு துரத்த பட்ட ரன்னாகே அப்துல் சத்தார் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்தது. 1988 ஆண்டில் நடந்த ஆயுத புரட்சிக்கு வித்திட்டது இவர் தான் என்று கைகளும் இவரை நோக்கி காட்டியது. அன்றைய மாலத்தீவின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அன்றைய இந்திய பிரதமர் உடனடியாக இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார். அந்த ஆப்பரேஷன் காக்டஸ் சம்பந்தமாகத்தான் ராகவனும் முதன் முதலில் மாலத்தீவு வந்தது. அன்று ஓடிய சத்தார் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் பதவிக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்த வண்ணம் இருந்தார். இப்போது அவர் இந்த தீவிரவாதி கும்பலோடு கை கோர்த்து இருப்பது, மாலத்தீவினிற்க்கு இதனால் வரப்போகும் ஆபத்தினை தெளிவாக காட்டியது.

படகின் பின்புறம் ஹசனிடம் ஏதோ கேட்டுவிட்டு திரும்பி வந்த சலீம் ராகவனிடம், "பொடுஃபுஷிக்கு இன்னும் 3 மணிநேரம் இருக்கு, இன்னி ராத்திரி நாம கொஞ்சம் குப்பைய எதுதுகிட்டு அலிஃபுஷி பக்கமா போய் பார்ப்போம் ராத்திரில எப்படி அவங்க செக்யூரிட்டி இருக்குன்னு. ஹசனுக்கு இந்த ஏரியா ராத்திரில கூட நல்லா தெரியுமாம்".

-----------------------------------------------------------

(25 டிசம்பர், 22.00 மணி, எத்திங்கிலி தீவு)

குப்பை படகை வேகு கவனமாக பவழ பாறைகளின் நடுவே ஓட்டி வந்த ஹசன் ஒரு வாகான இடம் பார்த்து படகை நிறுத்தினான். பக்கத்தில் அலிஃபுஷி தீவில் பாட்டும் கும்மாளமும் நடப்பது இங்கே கேட்டது. முதல் நாளிரவு அலிஃபுஷி போக பார்த்த ராகவன் அலைகளின் வேகத்தாலும், கடலின் சீற்றத்தாலும் தனது முயற்ச்சியை கை விட நேர்ந்தது. அதற்கு பதில் எத்திங்கிலி வந்தவர்கள் அந்த தீவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்கள். அலிஃபுஷியின் நேர் பின்னால் இருப்பதால் இய்ற்கையின் சீற்றம் இங்கு அதிகமாக இல்லை. மேலும் அவர்கள் கவனித்த ஒரு விஷயம் இரவில் அலிஃபுஷியில் நடக்கும் கூத்தும் கும்மாளமும். கிருஸ்துமஸுக்காக அவர்கள் சில பெண்களை வரவழைத்து பெரிய பார்ட்டியாக கொண்டாடி கொண்டி இருந்தனர். குடிப்பதற்க்கும் கும்மாளம் போடுவதற்க்கும் கிருஸ்துமஸ் ஒரு சாக்காக போயிற்று.

குளிருக்கு அடக்கமாக ஒரு போர்வையை போர்த்தி கொண்டிருந்த ராகவனும் சலீமும் பக்கத்து தீவில் நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். மெதுவாக ஆட்டமும் பாட்டமும் குறைய ஆரம்பித்து கடைசியில் மௌனம் நிலவும் போது சரியாக மணி 4.00.

------------------------------------------------------------


(26 டிசம்பர், 07.45 மணி, அலிஃபுஷி தீவு)

கைகளில் பிஸ்டலுடன் மெதுவாக அடி மேல் அடி எடுத்து முன்னேறி வந்த ராகவன் கண்களில் தெரிந்தது 1 பெரிய கூடாரமும் 3 நடுத்தரமான ஆனால் மிகுந்த வசதியுடன் கூடிய கூடாரங்களும் தெரிந்தன. காவலுக்கு கூட ஒருவரையும் வைக்காமல் அவர்கள் உறங்கி கொண்டிருந்தனர். சைகையாலேயே பெரிய கூடாரத்துக்கு மூவரை அனுப்பி, மீதியுள்ள கூடாரத்தை நோக்கி மெதுவாக நகரும் போது, ஹசன் ஏதோ கத்துவது காதில் கேட்டது. மற்றவர்களை மறைந்து கொள்ள சொல்லி, ராகவன் வேகமாக ஹசன் இருக்கும் இடத்தை நோக்கி சென்ற போது பொடு மஸ்ஸல, பொடு மஸ்ஸல(Big problem) என்று கத்தியவாறே ஹசன் படகை நோக்கி ஓடுவது தெரிந்தது. அதிர்ச்சியுடன் பார்த்த ராகவனின் கண்களில் கடல் பின் வாங்குவது தெரிந்தது. பவழ பாறைகளின் நடுவில் ஆயிரக்கணக்கான மீன்கள் நீரின்றி உயிருக்கு ஊசலாடுவது தெரிந்தது.

(ஜனவரி 29, 2005, நங்கநல்லூர், சென்னை)

மாடியில் தனது அறையில் படுத்து இருந்த ராகவனுக்கு கீழே மைதிலி யாரிடமோ பேசுவது லேசாக கேட்டது.

"வாங்கோ மாமி, இன்னிக்கு எங்க சுந்து வரான். இன்னும் கொஞ்ச நேரத்துல சென்ட்ட்ரல் போய் அவன அழைச்சிண்டு வரணும். இவரானா இன்னும் எழுந்துக்கவே இல்ல. எப்போ எழுந்து எப்போ கிளம்பி எப்போ போறதுன்னு ஒண்ணும் புரியல. வேண்டாம், வேண்டாம்ன்னு தலைல அடிச்சிண்டேன், போயே ஆவேன்னு இந்த பாழா போற ட்ராமா போட டெல்லி போனார். போன இடத்துல என்ன சாப்டாரோ என்ன குடிச்சாரோ உடம்பு வந்து 3 வாரம் ஆஸ்பத்திரில இருந்தாராம். சொல்ல கூட இல்ல. சொன்னா அநாவசியம்மா கவலபடுவேன்னு சொல்லலியாம். ஆத்துக்கு வந்து 10 நாள் ஆச்சு, சுருண்டு சுருண்டு படுத்துக்கறாரே தவிர வேற ஒண்ணும் செய்யறதில்ல. எனக்கு என்னவோ பயம்மா இருக்கு மாமி".

இதை கேட்டபடியே படுத்திருந்த ராகவனின் கண்களில் சூனாமியின் சீற்றமும், சலீமின் உதவியோடு அங்கிருந்த பெரிய படகில் ஏறி பதுங்கியதையும். பின்னர் குற்றுயிரும் குலை உயிருமாகி இருந்த இப்ராஹீம் தாவூத்தை ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து சென்றதும், பாறைகளில் நசுங்கி உருகுலைந்து போய் இருந்த ஹோஷியார் கானும்,அவருடன் வந்து இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியாத 3 வீரர்களும், கால் உடைந்த போதிலும் அவரை காப்பாற்றிய சலீமும், படகை நோக்கி ஓடி பின் என்ன ஆனான் என்று தெரியாத ஹசனும் அவர் கண் முன் திரும்ப திரும்ப வந்து போனார்கள். படகிலுருந்து இறங்கி அதன் பின் நடந்ததை எழுதினால் அதுவே ஒரு தனி கதையாகி விடும்.

pavalamani pragasam
21st July 2009, 09:53 AM
:clap: :clap: :clap: அற்புதம்! மிகவும் அற்புதம்! உண்மையும், கற்பனையும் கலந்து வழங்கப்பட்ட அருமையான விருந்து! சாகசம் புரியும் மஹா வீரர்கள் மைதிலியின் அசட்டு புருஷனாக காட்டப்படுவது பழைய, ருசியான பாணி! வாழ்த்துக்கள்! நன்றி! :D

Shakthiprabha
21st July 2009, 01:01 PM
sivan,

ஆங்கிலச் சொற்கள் ஆங்காங்கே ஊடே இருப்பது படிப்பதை சற்றே கடினமாக்கிவிடுகிறது. பெரிய நாவலுக்கு உரிய தோரணையுடன் தொடங்கி, படீரென போட்டு உடைத்து முடித்துவிட்டது போல் overwhelming incomplete feeling. (yeah the dates do make sense) குறு நாவலுக்குறிய நடையுடன் தொடர்ந்து சிறுகதைக்கு படீர் திருப்பம்....மனதுக்கு சற்றே ஒப்பவில்லை.

கதையின் லாவகம், சொல்வளம் பற்றி நான் சொன்னால் "வசிஷ்டருக்கே பிரம்மரிஷி" பட்டம் கொடுத்தது போலாகிவிடும். :bow:

தொடர்கதையை எதிர்பார்த்து ஏமார்ந்தாலும் சிறுகதையின் தாக்கம் அருமை.

Madhu Sree
21st July 2009, 08:52 PM
:clap: :clap: :clap: anna... :bow:
apdiye en kan munaala, ella characters-um paatha maadhiri irundhudhu... Gr8 na... :thumbsup:

sivank
22nd July 2009, 01:14 PM
:clap: :clap: :clap: அற்புதம்! மிகவும் அற்புதம்! உண்மையும், கற்பனையும் கலந்து வழங்கப்பட்ட அருமையான விருந்து! சாகசம் புரியும் மஹா வீரர்கள் மைதிலியின் அசட்டு புருஷனாக காட்டப்படுவது பழைய, ருசியான பாணி! வாழ்த்துக்கள்! நன்றி! :D

thanks madam, unga observation romba vazhakkam pola nallaa sharp aa irukku :D

sivank
22nd July 2009, 01:18 PM
sivan,

ஆங்கிலச் சொற்கள் ஆங்காங்கே ஊடே இருப்பது படிப்பதை சற்றே கடினமாக்கிவிடுகிறது. பெரிய நாவலுக்கு உரிய தோரணையுடன் தொடங்கி, படீரென போட்டு உடைத்து முடித்துவிட்டது போல் overwhelming incomplete feeling. (yeah the dates do make sense) குறு நாவலுக்குறிய நடையுடன் தொடர்ந்து சிறுகதைக்கு படீர் திருப்பம்....மனதுக்கு சற்றே ஒப்பவில்லை.

கதையின் லாவகம், சொல்வளம் பற்றி நான் சொன்னால் "வசிஷ்டருக்கே பிரம்மரிஷி" பட்டம் கொடுத்தது போலாகிவிடும். :bow:

தொடர்கதையை எதிர்பார்த்து ஏமார்ந்தாலும் சிறுகதையின் தாக்கம் அருமை.

thank sp,

neenga solradhula konjam unmai irukku. naan ninaicha maadhiri ezhudha mudiyala. ezhudhina oru 4 chapter a naan erase panni marupadiyum ezhudha vendiyadhaa pochu. ninaichadha ezhudhinaa problems varum nu sila per advice pannaanga. enakkum thayakkamaa irundhudhu adhaan konjam surukki maathi ezhudhinen :D

sivank
22nd July 2009, 01:19 PM
:clap: :clap: :clap: anna... :bow:
apdiye en kan munaala, ella characters-um paatha maadhiri irundhudhu... Gr8 na... :thumbsup:

thanks madhu. kadhayaa aarambichadhu thirai kadhaiyaa mudinju pochu :lol: